வான்நீலம்

ஆதித்ய ஸ்ரீநிவாஸ்

ராகவ் குண்டக்கல் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தான். இங்கிருந்து பெல்லாரி செல்ல வேண்டும். பெல்லாரியிலிருந்து ஜின்டால் ஸ்டீல் செல்ல வேண்டும். அங்கு வேலைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. முதல் முறை தமிழ்நாடு தாண்டி ஒரு நிலம். புதிய பாஷை. தெலுங்கு கன்னடம் இரண்டும் பேசப்பட்டது குன்டக்கல்லில். பெல்லாரியிலும் அப்படித்தான் என மாமா சொல்லியிருக்கிறார்.

இயல்பாக ஒரு பதற்றம் பரவியிருந்தது. முதுகில் ஒரு பை கையில் ஒரு பெரிய பை. பையை இறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். ப்ளாட்பாரத்தில் விற்றுச் செல்பவர்களிடம் வாங்கி சாப்பிடலாமா அல்லது ஹோட்டலில் சாப்பிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கையில் ரயில் நிலைய அறிவிப்பு ஒலித்தது. எம்மொழி என்று சொல்ல இயலவில்லை. பெல்லாரிக்கான ரயில் இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என டிக்கெட் கவுன்டரில் கேட்டு அறிந்திருந்தான். பையை இறுக்கியது போதுமென மெல்ல தளர்த்திக் கொண்டான். இயல்பாக அமர முயன்றான். அம்மாவின் முகம் அக்காவின் முகம் தங்கையின் முகம் என முகங்களாக வந்தன. அப்பாவின் முகமும். அந்த மெக்கானிக் யூனிபார்ம் – சாம்பல் நிறத்தில் சற்றே அழுக்கு படிந்த உடையுடன் நினைவுக்கு வந்தார். வெற்றிலைச் சிவப்பு வாயுடன்.

பாக்கெட்டில் செல்போன் அதிர்ந்தது. எடுத்து ப்ரௌஸரை திறந்தான். “Africa a land of varied climate from rainforests to deserts. The land of great game” எனும் வரிகளைப் பார்த்தான். மழைக்காடுகளிலிருந்து பாலைவனம் வரை -ஆம் மழையில் செழிக்கும் மண்ணிலிருந்து ஆண்டுகளுக்கு நீர் அறியாத மண். கேலரியைத் திறந்தான். மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருப்பதாகக் காட்டியது எண்ணிக்கை. நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பிக்கள், அம்மா அக்காவுடன் வண்டலூர் சென்றபோது எடுத்துக்கொண்டவை, தங்கை புத்தகத்தின் மீது தலை தாழ்த்தி படிக்கும் நிலையில் தூங்கும் படம், கமலா அத்தை சப்தமாக சிரிப்பது பதிவாகியிருந்தது, அம்மா காலை நேரப் பதற்றத்துடன் மூக்குக்குக் கீழ் வியர்வை அரும்பியிருக்க தோசை வார்க்கும் படம், அக்கா தன் புது நீல நிறச் சுடியில் ஒற்றைக் காலை மடித்து பின்புறமாக சுவரில் ஊன்றிக்கொண்டு கைக்கட்டி எங்கோ பார்த்துக்கொண்டு கொடுத்த போஸ், தன் முகத்தில் அரும்பிய பருக்களை இவன் எடுத்து வைத்திருந்த போட்டோக்கள், செல்வி சித்தியின் கல்யாண படங்கள் கொத்தாக மஞ்சள் நிற விழாவின் குதூகல ஒளியில் வரிசையாக இருந்தன. நண்பர்களுடன் சினிமா தியேட்டரில் எடுத்துக்கொண்ட செல்பிக்கள், அப்பா கொக்கியில் தொங்கும் தன் யூனிபார்மை எடுக்கும் படம், பின் வந்தது அவளின் ஒரு போட்டோ. அவள் நடக்கும் போது யாருமறியாமல் க்ளிக் செய்த போட்டோ. வான்நீல சுடிதார் வெள்ளை நிற ஷால், வெள்ளை மணிக்கட்டில் கருப்பு நிற வாட்ச், டயல் உள்முகமாகக் கட்டப்பட்டிருக்கும். அப்புகைப்படத்தில் பெரம்பூர் ரயில் நிலையம் எனும் வார்த்தைகளும் இருந்தன. ப்ளாட்ஃபாரத்தின் துவக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிற அறிவிப்புப் பலகையல்ல. ப்ளாட்பார்ம் கூரையை தாங்கி நிற்கும் இரும்பு பில்லர்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறு வெள்ளை நிறப் பலகையில் இருக்கும் அடர் நீல நிற எழுத்துக்கள். அவள் பார்வை சற்று தாழ்ந்து தரையைப் பார்த்திருக்கும் படம்.

அன்று காலை உணவை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்தான். அம்முவை பள்ளியில் ட்ராப் செய்யவும் முடியாது என மறுத்துவிட்டிருந்தான். “அக்கா, சும்மதான இருக்க, பொழுதனைக்கும் யு ட்யூப் ஷார்ட்ஸ் பாத்துட்டு இருக்கதுக்கு அவள போய் ட்ராப் பண்ணேன்” என்று விட்டு வேகவேகமாக நடந்தான், புன்னகைத்தபடி. தான் எப்பொழுதுமே புன்னகைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கவும் மேலும் புன்னகை, வெட்கத்துடன். பால ஆஞ்சநேயர் ஆலயம் கடந்து வில்லிவாகம் ரயில் நிலையம். அப்பா கண்டிப்பாகச் சொல்வதுண்டு, “எதுக்கு வேலமெனக்கிட்டி படி கட்டி வெச்சிருக்கான். அதவுட்டு கொரங்கு மாறி தண்டவாளத்த தாண்டினுருக்கது” என்பார். “உடம்புல பெலம் இருக்கணும். ரென்டு படி ஏறலன்னா நீ என்னத்த கீக்க போற லைப்புல.” ஓட்டமாக ஏறினான். படியில் ஏறி ஓடிக்கொண்டிருக்கையில் அவனுக்கு நேர் கீழே ரயிலும் வந்துவிட்டது. ஏறவும்தான் தாமதம். சிறு ஆட்டத்துடன் சீராகக் கிளம்பியது மின்சார ரயில்.

மஞ்சள் நிறச் சுடிதார் மஞ்சள் லெக்கின்ஸ் கழுத்தில் மெல்லிதான மிக மெல்லிதான சற்று மெலிந்தால் சிலந்தி நூலிழை எனும் அளவிற்கு மெல்லிய ஒரு தங்க செயின். கையில் உள்முகமாகக் கட்டிய கருப்பு வாட்ச். அன்று அவனுக்கு வாழ்வில் முதல் முறையாகத் தோன்றியது, “என் மாலை வானம் இவள்” என்று.

எம் ஸி ஸியில் படித்தாள் அவள். தாம்பரத்தில் எம் ஸ் ஸி எதிரில் இருக்கும் பஸ் நிலையத்திலேயே ஒரு நாளைக் கழிக்க முடிந்தது அவள் எதிரில் இருக்கும் கல்லூரியின் எண்ணற்ற பழைய கட்டிடங்களில் ஏதோ ஒன்றில் அமர்ந்திருக்கிறாள் எனும் நினைப்பொன்றுடன். பின் தினமும் பெரம்பூரிலிருந்து சென்ட்ரல் செல்லும் தூரம்தான் அவனை மலர்களை விரும்பச் செய்தது. சிரிக்கும் வெட்கத்துடன், “நான் ஒரு மலர்க்காடா மாறிட்டேன்” என டைரியில் எழுதி வைத்தான். வாழ்வில் இரண்டாவது முறையாக இப்படித் தோன்றியது.

அன்று பெரம்பூரில் சற்று கூட்டம் அதிகம். மழை வேறு, அக்டோபர் பாதி கடந்து கொண்டிருந்தது. ரயில் நிற்கும் முன்னமே அவளைக் கண்டு கொள்ளும் இவன் கண்கள் வெகு நேரம் கூட்டத்தைத் துழாவின. அங்கங்கு ரெயின் கோட்டுகளும் குடைகளும். அவள் இல்லை. ஏறிவிட்டாளா? இல்லை என உறுதியாகத் தோன்றியது. அந்த ரயிலில் அவள் இல்லை என்பதை அவ்வளவு உறுதியாய் உணர்ந்தான். ரயில் கிளம்பும் நேரம் ரயில் விட்டு இறங்கிவிட்டான். மரத்தைச் சுற்றி அமைந்த கல் இருக்கையில் அமர்ந்துகொண்டு அவள் வழக்கமாக வரும் திசையை பார்த்துக் கொண்டிருந்தான். வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு பெண் வந்தாள், ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் ஒரு பெண். ஆனால் அவள் இல்லை. திடீரெனத் தோன்றியது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என.

ஆறு மாதமாக ஒரு பெண்ணை காதலிக்கிறான். ஒரு முறை கூட பேசியது கிடையாது. பார்க்க சக வயதினளாக தெரிகிறாளே ஒழிய மூத்த பெண்ணாகக் கூட இருக்கலாம். ஒருநாள் அவள் தோழி அழைத்ததை வைத்துதான் பெயரை அறிந்துகொண்டான்.வர்ஷா அவள் பெயர். மழை என்று அர்த்தம். அதை அறிந்த நாள், “என் மழை, அவள் என் மழை, வான் அவள், என் மழைக் காடு,” என எழுதி வைத்தான். ஆனால் இப்போது ஒரு கேள்வி எழுந்தது. நான் என்ற ஒருவனின் இருப்பை அவள் அறிவாளா? கண்டிப்பாக அறிவாள் எனத் தோன்றியது. அவளால் என் உலகம் தலை கீழாக திரும்பும் போது ஒரு சிற்றலை கூடவா அவள் ஏரியில் எழுந்திருக்காது. கண்டிப்பாக அவள் என்னை அறிவாள். ஒரு நாளை ஒரு வாரத்தை ஒரு மாதத்தை அவளால் நிரப்பிக்கொண்டிருக்கையில் ஒரு க்ஷணமாவது அவள்…. இல்லை அவள் என்னை நிறைக்கும் அளவிற்கே நானும் அவளை நிறைக்கிறேன். ஆனால் அவள் அதை இன்னும் அறியவில்லை. சிறு மேடுதான், ஏறினால் அப்பக்கம் பெருங்கடலொன்று. வெறும் வார்த்தைகளும் ஸ்தூலமுமான விஷயங்களால் மட்டுமானதல்ல உலகம். “World is not just physical” என எண்ணிக்கொண்டான். அப்பொழுது வந்தாள். நீல நிறச் சுடியில் வெள்ளை நிற ஷாலுடன். பார்த்துக்கொண்டே இருந்தான். அவனைக் கடக்கையில் அவளும் பார்த்தாள். மெல்லிய புன்னகையொன்று.

உடலுக்குள் ஒரு சூடான பெருங்குமிழி வெடித்தது போல் இருந்தது. முகத்திலெல்லாம் ரத்தம் வேகமெடுப்பதை உணர்ந்தான். அசையாமல் அமர்ந்துவிட்டான். கையில் குடையுடன் சற்று தள்ளிதான் நின்றாள். என்ன மணம்? மூக்கை நன்றாக இழுத்தான். “மழைவாசம் அவளுடையது,” எனத் தோன்றியது. சிரித்துவிட்டாள். உண்மையில் சிரித்தாளா என மனம் துழாவிய போது, அவ்வளவு உறுதியாக அவள் ரயிலில் இல்லையென்று அறிவித்த ஒன்று உறுதியாகச் சொன்னது, அவள் அவன் கண்கோத்து புன்னகைத்ததை. வழக்கமாக கடந்த ஆறு மாதமாக அவனுள் ஓயாமல் இருக்கும் ஒரு மகிழ்ச்சி வெடித்துச் சிதறியது. சிரித்தான் வாய்விட்டு. ஓட வேண்டும் போலிருந்தது. flash ஓடுவானே அவனைபோல். க்ஷணத்தில் முழு சென்னையையும் ஏன் பாண்டிச்சேரி வரை ஏன் கன்னியாகுமரி வரை ஓடவேண்டும் போலிருந்தது. மழைத் தூறல் வலுத்தது. எல்லோரும் ப்ளாட்ஃபாரத்தின் கீழ் ஒதுங்கினர். அவள் மரத்தடியில் ஒதுங்கிக்கொண்டாள், அவனருகில்.

அன்று மாலைதான் அப்புகைப்படம் எடுக்கப்பட்டது. அன்று முழுவதும் சென்னையின் மழையில் எம் ஸி ஸி எதிரில் அமர்ந்திருந்தான். பின் அவளுடனேயே திரும்பினான். ஆனால் பேசக்கூடவில்லை. பெரம்பூரில் இறங்கினாள் அவள். மின்சார ரயிலில் வாயிலோரம் நின்றபடி கிளிக் செய்தான். க்ளிக் செய்யவும் லோ பாட்டரியில் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகவும் சரியாக இருந்தது. பெரம்பூரில் வானத்தில் ஏறி மழைமேகங்களூடே பயணித்து வில்லிவாக்கத்தில் தரை இறங்கியது ரயில். மழை பொருட்டின்றி வீடு நோக்கி நடந்தான். மீண்டும் அந்த பால ஆஞ்சநேயர் ஆலயம். வீட்டிற்கு போனதும் சார்ஜ் போட்டு அந்த போட்டோவைப் பார்க்க வேண்டும். “என் வாழ்வின் மழைக்காலம் பெரம்பூர் ரயில் நிலையத்தில் வீழ்ந்த சிறு துளிகளாலானது,” என எழுதவேண்டும்.

வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் கமலா அத்தையிடம் கேட்டான். அவள் அழுதபடி விஷயத்தைச் சொன்னாள். “அப்பா வேல பாக்குற எடத்துலேந்து போன் வந்ததுப்பா.. நெஞ்சு வலியாம்… உனக்கு யாரும் ஃபோன் பண்ணலயா,” என்றாள். போனைக் கொஞ்சம் போல சார்ஜ் செய்து அவன் அக்காவிற்கு அடித்தான். மழையோடு மழையாக எக்மோரில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தான். அப்பா இறந்து விட்ட செய்திதான் அவனுக்குக் காத்திருந்தது. எதுவும் புரியாத நிலை. அம்மா கொஞ்சம் நகையைக் கொடுத்து பேங்கில் வைத்து பணம் வாங்கி வரும்படிச் சொன்னாள். மாமா இன்னும் வரவில்லை. வந்திருந்தால் அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். மீண்டும் மழையோடு மழையாக பாங்கிற்கு விரைந்தான். “கோல்ட் மேல லோன் வேணும் ஸார்” என்றான், கவுன்ட்டரில் இருப்பவரிடம். அவர் மற்றோரு கவுன்ட்டரைக் காட்டினார். அங்கு யாருமில்லை. வருவார் என்றார்கள். எப்போது என சொல்லப்படவில்லை. இருபது நிமிடம் கழித்து வந்தார். பாஸ்புக் கேட்டார். தன்னிடம் பாஸ்புக் இல்லை என்றான். அக்கவுண்ட் நம்பர்?. அதுவும் இல்லை. சிரித்தபடி எப்படி லோன் கொடுப்பது என்றார். ‘கோல்ட் வெச்சுகிட்டு தர முடியாதா?’ என்றான். “ஸேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கணும், ஒண்ணு ஓப்பன் பண்ணிக்கப்பா’ என்றார். ‘ஆதார் கார்ட் பான் கார்ட் ரெண்டு போட்டோ’ என்றார். எல்லாம் வீட்டிலிருந்தது. தொடர்ந்து ‘அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆக ஒரு நாள் வேணும். க்ளொஸிங் டைம் நெருங்கிருச்சு. அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டுப் போங்க நாளைக்கு காலையிலேயே லோன் எடுத்துக்கலாம், என்றார். ‘இல்ல இப்பவே வேணும் ஸார் ப்ளீஸ்’ என்றான். அவர் கோபமாவது தெரிந்தது. ‘அப்போ பேமிலில யாருக்காவது இங்க ஸேவிங்ஸ் அக்கவுன்ட் இருக்கா?’ என்றார். அக்காவிற்கு போன் அடித்தான். எந்த கிளையில் இருக்கிறாய் எனக் கேட்டு அங்கு வந்தாள். அவளுக்கு அக்கவுண்ட் இருந்தது. நகைக் கடன் தாமதமானது. அன்றைய மழை மேலும் தாமதமாக்கியது விஷயங்களை. மற்றதெல்லாம் படு வேகமாக நடந்தேறியது. ராகவை ஜின்டால் ஸ்டீல்ஸுக்கு வேலைக்கு அனுப்புவது வரை.

அவனுக்கு மழைநிலத்திலிருந்து தன் வாழ்வு எவ்வளவு வேகமாக பாலைக்கு பயணித்தது என்பதை நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. அக்காவிற்கு கருணை அடிப்படையில் அப்பாவின் பணி கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். அக்கா டிகிரி முடித்திருந்தாள். இவன் டிப்ளமோ முடித்து மூன்றாண்டுகள் பணியிலிருந்துவிட்டு அப்போதுதான் பொறியியல் சேர்ந்திருந்தான். அக்காவின் வரன் பார்க்கும் படலம் காலவரையறையற்று ஒத்திப்போடப்பட்டது. நல்ல சம்பளம் எனச் சொல்லப்பட்டு மாமாவின் வழி ஒரு சிபாரிசின் பேரில் அவனுக்கும் ஜின்டால் வேலை உறுதியானது.

குன்டக்கல் ரயில் நிலையம் அமைதியாய் கிடந்தது. பகல் பதினொன்று மணி. சஞ்சாரமில்லாமல் கிடந்த நிலையத்தில் நாயொன்று ஒவ்வொரு இருக்கையாக முகர்ந்தபடி ஓடிக்கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது. பின் சத்தம். எந்த அறிவுப்பும் இல்லையே? என யோசித்துக்கொண்டிருக்கையில் அந்த சரக்கு ரயில் சூர வேகத்தில் வருவதை உணர்ந்தான். ரயில் நிலையத்தின் மோனத்தை கத்தியால் கிழிப்பதுபோல் அலறியபடி கடந்தது. அதன் வேகத்தில் புழுதி கிளம்பிப் பறந்தது. தடக் தட்க் அதிர்வுக்கு கூரை இடியக்கூடும் எனும் வேகம். இவன் அமர்ந்திருந்த கல் இருக்கை அதிர்ந்தகொண்டிருந்தது. நாய் ஆனால் எதையும் சட்டை செய்யாமல் சற்று தள்ளி ஓடிக்கொண்டிருந்தது. கரி ஏற்றிச் செல்லும் ரயில் – ஒரு ஆம்புலன்ஸ் இவ்வளவு வேகமெடுப்பதில் சற்று நியாயம் இருப்பதாகத் தோன்றியது. ஒரு கரியேற்றிச் செல்லும் சரக்கு ரயிலுக்கு அசுர வேகம் ஏன்? சரக்கு ரயில் நீங்கிய பின்னும் வெகு நேரம் அது அங்கேயே இருப்பது போலிருந்தது.

பெல்லாரிக்கான ரயில் சரியாக பதினொன்று நாற்பதுக்கு வந்தது. எந்த அறிவுப்புமில்லை. எப்படியோ விசாரித்து அன்ரிஸர்வ்டில் ஏறி அமர்ந்துகொண்டான். குறைந்தது ஒரு மணி நேரத்தில் பெல்லாரி. ஒரு நிமிடம் கூட ஆகியிராது, கிளம்பியது ரயில். இருபக்கமும் பசுமை அருகிய காட்சிகள். பாறைகள். பாறைகளால் ஆன சிறு குன்றுகள். ஒரு குன்றின் மீது சிறு புள்ளிகளாக ஆடுகள் மேய்வது தெரிந்தது. அனல் ஏறிக் கொண்டே வந்தது. ஒரு பெருமூச்சுடன் போனை எடுத்தான். கேலரியை எடுத்து இரண்டு மூன்று ஸ்வைப்பில் வான் நீல சுடிதாரும் மேக வண்ண ஷாலுமிருக்கும் போட்டோவை எடுத்தான். குப்பைத்தொட்டி படமிட்டிருக்கும் டெலீட் ஆப்ஷனை ஒத்தினான். “Are you sure you want to delete this image?”

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.