பனி விழும் இரவு – மு. முத்துக்குமார் சிறுகதை

மு. முத்துக்குமார்

வானிலிருந்த மேகங்களை அத்தெரு முழுவதும் பரப்பிப் போட்டிருந்தது போலிருந்தது அந்த பனிப்பொழிவு. நீண்ட அகலமான தெரு. இருபக்கமும் பழங்காலத்து வீடுகள் மற்றும் சில உணவு விடுதிகள் அக்குளிரிலும் நடுங்காமல் கம்பீரமாக தன் கூரையின் உச்சியிலுள்ள புகைபோக்கி வழியாக சுவாசித்துக் கொண்டிருந்தன. அக்கூரைக்கடியில் இருந்தவர்கள் காய்ந்த மரக்கட்டைகளை அதற்கென உரிய அடுப்பில் எரித்து குளிர் காய்கிறார்கள் போலும்.

அங்குள்ள மிகப் பழக்கப்பட்ட உணவு விடுதியொன்றில் கிடைக்கும் சங்கு வடிவ பிரெட்டுக்காகவும், பாலில்லா தேநீருக்காகவும், மாலை நேரத்து தனிமையை விரட்டுவதற்காகவும் 2 கிமீ தள்ளியுள்ள என்னுடைய அறையிலிருந்து அடிக்கடி இத்தெருவிற்கு வருவதுண்டு.

மிகப் பழக்கப்பட்ட கட்டிடங்கள். தஸ்தவேய்ஸ்கியின் ‘வெண்ணிற இரவின்’ கதாநாயகன் போல் இக்கட்டிடங்கள் ஜன்னல் வழியே நம்மை உற்றுநோக்கி, மூடப்பட்டிருந்த கதவு வழியே நம்மிடம் ஏதாவது பேசுமா என்று நானும் உற்று நோக்கினேன். ம்ஹீம்… அப்படி எந்த விதமான பிரக்ஞையும் எனக்கில்லை. நான் இன்னும் அவ்வளவு தனியனாக ஆகவில்லை என்ற ஒரு திருப்தியோடு அவ்வுணவு விடுதியை நோக்கி விரைந்தேன், கைகள் விறைக்க. ஜெர்டாவின் கணவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து அவளுக்கு ஒத்தாசையாக அங்கு இருக்கக் கூடும்.

தூரத்தில் மேலெழும்பிச் செல்லும் அப்புகையை நோக்கியவாறு பொழிந்திருந்த பனியில் கால்புதைய நடந்தது, அணிந்திருந்த மூன்றடுக்கு உடை தக்க வைத்திருந்த வெப்பம் போதவில்லை என உணர்த்தியது. கொஞ்சம் வெப்பம் வேண்டி ஊரிலிருந்து எடுத்து வைத்திருந்த தங்க வடிப்பான் ஒன்றை கட்டில் இருந்து உருவி பற்ற வைத்துக் கொண்டேன். அவர்கள் மரக் கட்டைகளை எரித்து கனன்று கொண்டிருந்தார்கள். நான் என்னை எரித்து…

இரண்டு வார விடுமுறைக்கு இந்தியா சென்று விட்டு அப்போதுதான் எனிங்கன் திரும்பி இருந்ததால், இன்னும் ஒரு வாரத்திற்கு வரும். அதற்கப்புறம் மார்ல்ப்ரோவுக்கோ அல்லது இசைக்குயிலுக்கோ மாற வேண்டும்.

மாலை 6 மணி என்றது தெருமுனையில் வானைத் தொட்டுக் கொண்டிருந்த கூம்பு வடிவ மணிக்கூண்டு. ஒருவேளை இக்கூம்பு தான் அம்மேகங்களைக் கிழித்து பனிபொழியச் செய்ததோ என கவிஞனை போல எண்ணிக்கொண்டே ஜெர்டாவின் உணவு விடுதிக்குள் நுழைந்தேன்.

திடீரென இருளுக்குள் நுழைந்ததை உணர்ந்து உணவு விடுதியின் ஜன்னல் கண்ணாடியினூடாக இரவு கவிழ ஆரம்பித்து விட்டதா என தெருவை நோக்கினேன். ஆம். இரவுதான். பனியால் கொஞ்சம் வெண்மையாயிருந்தது. வெண்ணிற இரவு.

எதிர்பார்த்தது போல் உல்ரிக்தான் விடுதியை கவனித்துக் கொண்டிருந்தார். ஜெர்டா மேல்தளத்திலுள்ள அவர்களின் வீட்டிற்கு சற்று ஓய்விற்காக சென்றிருக்கக்கூடும். மிகச் சிறிய விடுதிதான். மரத்தால் செய்யப்பட்ட அங்கிருந்த சிறிய மேசைகளும் சாய்வு நாற்காலிகளும், குறைவானதே நிறைவு, அழகு என உணர்த்தியது. வழக்கமாய் பார்க்கும் அதே மனிதர்கள்தான். 20 பேர் இருக்கலாம்.

அங்கிருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள்தான். இந்த இரண்டு வருடத்தில் நானும் அவர்களில் ஒருவனாகியிருந்தேன். அவரவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துண்ட பின்பு உல்ரிக் அல்லது ஜெர்டாவிடம் அதற்குரிய பணத்தை அவர்களே கணக்கிட்டு கொடுத்துச் செல்வார்கள். கிட்டத்தட்ட இவ்விடுதியொரு சமுதாய சமையலறைக் கூடம்தான்.

எனக்கான சங்கு வடிவ பிரெட்டையும் தேநீரையும் எடுத்துக் கொண்டு ஒலிவர் அங்கிருக்கிறாரா என்று தேடினேன். ஜெர்டாவின் முன்னாள் கணவர் ஒலிவர். கடும் உழைப்பாளி. பெரும் குடிகாரரும்கூட. இரயில் தடங்களைப் பராமரிக்கும் அரசுத்துறையில் கண்காணிப்பாளர் வேலை. உல்ரிக்கிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம் கையசைத்துவிட்டு ஜன்னலோரத்திலிருந்த மேசையில் அமர்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் புன்னகைத்துக் கொண்டே ஒலிவர் எதிரில் வந்தமர்ந்தார். அவர் தட்டில் சூடான சாஸேஜுகளும் அதற்கு தேவையான வெண்ணெய் மட்டும் வேகவைக்கப்பட்டிருந்த ப்ரோக்கோலி வகையறா காய்கறிகளும் ஒரு குட்டி மலை முகடென குவித்து வைக்கப்பட்டிருந்தன. மெலிதான சங்கு வடிவ பிரெட் என் வாயில் கடிபட்ட அதிர்ச்சியில் தன்னுடைய மறுமுனையிலிருந்த மேற்புற அடுக்குகளை இழந்து என் மேல் சிந்தியிருந்தது.

“என்ன குலோ, க்ரோய்சண்ட்ச இன்னமும் எப்படி சிந்தாம சாப்பிடறதுன்னு தெரியலயா?” என புன்னகை மாறாமல் கேட்டார் ஒலிவர். பற்களிலிருந்த கறையும், விழிகளின் வெளியோரங்களிலிருந்து காது நோக்கி நீண்ட சுருக்கங்களும் அவர் ஐம்பதுகளின் மத்தியில் இருப்பதை உணர்த்தின.

பருகிய தேநீர், மென்று விழுங்கிக் கொண்டிருந்த க்ரோய்சண்ட்ஸை நனைத்து நாவையும் தொண்டையையும் இதப்படுத்தியது.

புன்னகைத்துக் கொண்டே “கடைசிவரை சிந்தாமல் சாப்பிட கத்துக்க மாட்டேன்னு நினைக்கிறேன் ஒலிவர்” என்றேன்.

“புது வேலை கிடைச்சுடுச்சா குலோ?”

“இல்ல ஒலிவர். பழைய கம்பெனியே ஒரு புது ஒப்பந்தம் போட்டுருக்காங்க. ஒரு வருஷத்துக்கு”

ஒலிவருக்கு நடந்ததுதான் என் அப்பாவுக்கும் நடந்தது. அம்மா எங்கள் இருவரையும் விட்டுவிட்டு தனது முன்னாள் காதலனுடன் போய் விட்டார். என்னை சட்டச்சிக்கல்களால்தான் அப்பாவிடம் விட்டுவிட்டுப் போனார். ஐந்து வயதிருக்கலாம் எனக்கு. இரண்டாவது அம்மா சொல்லித்தான் எனக்கிது தெரியும். வழக்கம் போல் சுற்றம் வலியுறுத்த அந்த அப்பாவியை அப்பாவிற்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

ஆனால் தன் முதல் மனைவி ஓடிப்போன ஆதங்கத்திலே வடிப்பான் இல்லாத கத்தரியையும், சார்மினாரையும் புகைத்துப் புகைத்து நுரையீரல் புற்றை வேண்டிப் பெற்றுக் கொண்டு, கிடைத்த இரண்டாவது அம்மாவையும் ஆஸ்துமா நோயாளியாக்கி மேலேயனுப்பினார் அப்பா. கொஞ்ச நாட்களிலேயே அவருமில்லை. பதினைந்து வயதிலிருந்து தனியனாய், செயின்ட் லூயிஸ் ஆதரவற்ற சிறுவர்களுக்கான உறைவிடப் பள்ளியால்தான் வளர்க்கப்பட்டேன்.

ஒலிவர் எப்பவுமே எனக்கொரு ஆச்சரியம்தான். அவர் ஜெர்டாவின் இழப்பையேற்று முன் நகர்ந்த அளவுக்கு அப்பாவினால் ஏன் நகரமுடியவில்லை என்பதற்கு வெறும் கலாசாரம் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பேயில்லை. அதையும் தாண்டிய ஏதோ ஒன்றுதான் அப்பா தன்னுள் சிதைந்து மடியவும், ஒலிவர் அச்சிதைவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் காரணமாயிருக்கக் கூடும்.

“என்ன புது வேலை எப்படி இருக்கும்கிற சிந்தனையா?” என்றென்னை கலைத்தார் ஒலிவர்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை ஒலிவர். வழக்கம் போல ஒரு ரோபாடிக் ஆட்டோமேஷன்தான். உல்ரிக் வேலை பார்க்கிற அலுவலகத்தில்தான் வேலை. கிட்டத்தட்ட திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான வேலைகளைச் செய்பவர்களுக்கு ஓய்வளிக்கப் போகும் ஒரு வேலை” என்றேன்.

“உல்ரிக் வேலை பார்க்குற நிறுவனத்துக்கு எப்பவுமே இதே வேலைதான். ம்ம்ம்…கார்ல் மார்க்ஸ் வேண்டியபடி தொழிலாளிகள் புத்திசாலியா மாறி முதலியத்த இல்லாம பண்ணிடுவாங்கங்றதெல்லாம் வறட்டு இலட்சியவாத கனவுதான். புத்திசாலியா மாறி முதலியத்தில் தங்களோட இருப்பைத்தான் உறுதி செஞ்சுக்குறாங்க.” என்றார்.

கொஞ்சம் புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது.

“என்ன மார்க்ஸியம் பேச ஆரம்பிச்சுட்டானா?” என்று உல்ரிக்கும் சேர்ந்து கொண்டார். அதற்குப்பின் அவர்கள் பேசியவை, அவை மார்க்ஸிய சித்தாந்தங்கள் என்பதைத் தாண்டி எனக்கொன்றும் புரியவில்லை.

அவர் அலுவலகத்திலேயே வேலை கிடைத்ததற்காக என்னை வாழ்த்தினார் உல்ரிக். அதுவரை சமையலறையிலிருந்த சாராவும் சேர்ந்து கொண்டாள். ஜெர்டாவின் மகள். பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு; செயற்கை நுண்ணறிவியல் பட்டப்படிப்பு படிக்கிறாள். அவளுடன் என் துறை சார்ந்து அடிக்கடி நிறைய பேசுவதுண்டு.

சாராவின் தீர்க்கமான கண்களும், மிஸ்டர் பீன் மூக்கும், தோளிலிருந்து மார்பு வரை புரளும் கேசமும், முகத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அந்த உடலமைப்பும் எப்போதும் மனதை குறுகுறுக்க வைப்பவை. நான் இங்கு அடிக்கடி வருவதற்கு இந்த குறுகுறுப்பும் ஒரு காரணம்.

ஜெர்டாவிடம் சொல்லிவிட்டு விடைபெறலாம் என மேல் தளத்திற்குச் செல்லும் சுழல்வடிவ மரப்படிக்கட்டுகளில் ஏறிச் சென்றேன். அணைத்து தோளில் தட்டி உல்ரிக் அலுவலகத்திலேயே வேலை கிடைத்ததற்குப் பாராட்டினார். எப்போதும் அந்த அணைப்பின் கதகதப்பு என் இரு அன்னையரையும் ஞாபகப்படுத்தும். நான் இங்கு அடிக்கடி வருவதற்கு இதுதான் முக்கிய காரணம். மற்றபடி இந்த சங்கு பிரெட், பாலில்லா தேநீர் எல்லாம் அடிக்கடி இங்கு வருவதனால் பழகியவை. இரண்டு மூன்று சந்திப்புகளிலேயே அவ்வணைப்பின் கதகதப்பில் நெகிழ்ந்து உருகி கண்ணீர் மல்க ஜெர்டாவிடம் என் அன்னையர் இருவரையும் பற்றி நினைவு கூர்ந்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக ஜெர்டாவின் இந்த கதகதப்பு சாராவின் அருகாமையை நினைவுறுத்தி மனதை மேலும் எளிதாக்குகிறது; சாரா தன்னுள் என்னை இழுத்துக் கொள்வதுபோலொரு பரவசம் தருகிறது.

கழற்றியிருந்த மூன்றாவதடுக்கு உடையை மேலிட்டுக் கொண்டு தெருவில் இறங்கியபோது அவ்விரவு மேலும் வெண்மையாக இருந்தது. ஓரிருவர் மட்டுமே சோம்பி நடந்து கொண்டிருந்தார்கள். வெப்பம் வேண்டி மீண்டுமொரு தங்க வடிப்பானை கட்டிலிருந்து உருவி பற்ற வைத்தேன்.

அறை நோக்கி மீண்டும் கைகள் விறைக்க நடந்தபோது, விடுமுறைக்கு இந்தியா செல்வதற்கு முன்பு சாராவை அவளுடைய ஆண் நண்பனுடன் மிக நெருக்கமாகப் பார்த்த காட்சி நிழலாடியது. ஒரே இழுப்பிலேயே கால்வாசி சிகரெட்டை சாம்பலாக்கிய நெருப்பு என்னை நோக்கி விரைந்தது. என்னுள்ளிருந்து வெளியேறிய புகையில் அப்பாவும் ஒலிவரும் கலந்தே இருந்தார்கள்.

2 comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.