பின்-காலனிய இலக்கியத்தை, “குடியேற்ற நாடுகளை அல்லது அதன் மக்களை முக்கிய பேசுபொருளாகக் கொண்டு குடியேற்ற நாடொன்றின் குடிமகனால் எழுதப்படும் இலக்கியங்கள்“ என இலக்கியக் கோட்பாட்டாளர்கள் வரையறுக்கின்றனர்.
காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த நாடாக இந்தியா இருந்தபோதும் பின்-காலனிய இலக்கியங்கள் இங்கிருந்து ஆங்கிலத்தில் வெளிவந்தளவுக்கு தமிழில் வெளிவரவில்லை. இதற்கு முக்கிய காரணம் தமிழின் புனைவெழுத்துகளை சராசரியான மனித வாழ்வும் அதன் உணர்ச்சிகரமான பக்கங்களுமே தீர்மானித்து வந்தன. தமிழ்ச்சிறுகதைகளுக்குள்ளும், நாவல்களுக்குள்ளும் கொட்டிக்கிடக்கின்றன மனித வாழ்வு பற்றிய நூற்றுக்கணக்கான பார்வைகள். இந்த வட்டத்தை தமிழ்ப் புனைவுலகம் மிக அபூர்வமாகவே மீறியுள்ளது. ஜெயமோகனின் “ஊமைச்செந்நாய்“ தமிழ்ச் சிறுகதை வெளியில் அத்தகையதொரு அபூர்வமான மீறலே.
காலனித்துவ ஆட்சி பல பரிமாணங்களை உடையது. கீழைத்தேய நாடுகளை ஆங்கிலேயர் தங்களது காலனித்துவத்தின் கீழ் கொண்டு வந்து அங்குள்ள பொருளியல் வளங்களைச் சூறையாடியமை காலனித்துவ ஆட்சியின் ஒரு பரிமாணம் என்றால் அங்குள்ள மக்களின், தனிமனிதர்களின் கனவுகளை, சுயமரியாதையை, வாழ்க்கையை சூறையாடியமை அதன் இன்னொரு பரிமாணமாகும். இவை தவிர வேறு பல பரிமாணங்களும் அதற்குண்டு.
ஜெயமோகனின் ஊமைச்செந்நாய் காலனித்துவத்தின் பல பரிமாணங்களைப் பேசும் கதை. மேற்கில் அதிக மதிப்புமிக்கதாக விளங்கிய யானைத்தந்தம் எனும் பொருள் வளத்தை சூறையாடுவதற்காக வில்சன் எனும் வெள்ளைக்கார துரை ‘ஊமைச்செந்நாய்’ என அந்த துரையால் அழைக்கப்படும் (அழைக்கப்படும் என்பதைவிட வசைபாடப்படும் என்பதே பொருத்தமானது) சுதேசியான வேட்டையாள் ஒருவனை உதவிக்கு வைத்துக்கொண்டு இந்தியாவின் அடர்வனமொன்றுக்குள் காட்டு யானை ஒன்றை வேட்டையாடும் ஒரு நிகழ்வுதான் இந்தக்கதையின் மையச் சம்பவமாக வடிவங்கொள்கிறது. அதேநேரம் மனிதர்களது கனவுகள் சுய மரியாதை என்பன இன்னொரு விதத்தில் எப்படி மோசமாக சூறையாடப்பட்டன என்பது கதையின் உபபரிமாணமாக வெளிப்படுகிறது. இந்த இரு பரிமாணங்களும் ஒற்றை வடிவங்கொண்டு ஒரு விசையுடன் கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறது.
வளச்சூறையாடல் என்ற பெருந்தளத்திலிருந்து சுழலும் இக்கதையில் நுண்மையான மனித உணர்ச்சிகள்கூட புறக்கணிக்கப்படாமல் அதற்கே உரிய தீவிரத்துடன் சித்தரிக்கப்படுவது, காடு பற்றிய விபரணங்களின்போது காட்டின் மௌனத்தையும், அதன் ஓலத்தையும் கதையின் சொற்களுக்குள் உள்ளடக்கி இருப்பது, வாசகனைச் சோர்வடையச் செய்யாத கதைமொழி மற்றும் உணர்ச்சிச் சித்தரிப்பு போன்ற காரணங்களால் இந்தக் கதை ஜெயமோகனின் ஒரு மாஸ்டர்பீஸாகவும், தமிழின் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகவும் மாறுகிறது.
ஊமைச்செந்நாயிலிருந்து ஒரு வாசகன் உணர்ந்து கொள்ளக்கூடிய உண்மை காலனித்துவ சுரண்டல் என்பது வளங்களைச் சூறையாடுவதுடனோ, பண்பாட்டுத் திணிப்புடனோ நின்று விடாது ஒரு இனத்தின் மற்றும் தனிமனிதனின் சுய மரியாதையைக்கூட சூறையாடும் வரைக்கும் அதன் எல்லை விரிவுபட்டது என்பதுதான். ஊமைச்செந்நாயின் மையக் கதையாக இந்த உண்மைதான் வரிக்கு வரி அழுத்தமாக சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு பிரச்சாரத்தன்மையாகத் தோற்றங்கொள்ளாமல் ஒரு புனைவுத் தன்மையாகவே வெளிப்படுகிறது. புனைவை கலைத்துவச் செறிவுமிக்கதாய் ஆக்கும் ஜெயமோகனின் வழமையான புனைவு மொழியிலிருந்தும், எடுத்துரைப்பிலிருந்தும் ஒரு நூலளவு வித்தியாசம் இக்கதைக்குள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
வில்சன் எனும் பெயரையுடைய வெள்ளைக்கார துரை மேற்கின் குறியீடென்றால் ஊமைச்செந்நாயை இந்தியாவின் குறியீடாக கொள்ள முடியாது. ஏனெனில், காலனித்துவ சக்திகளை மூர்க்கமாகவும், சாத்வீகமாகவும் எதிர்த்து நின்றதே காலனித்துவ இந்தியாவின் வரலாறாகும். ஆனால் ‘ஊமைச்செந்நாய்‘ கதையின் இறுதியில் அடையும் தீவிரத்தை வேறெங்கும் அடைவதில்லை.
கதையில் வில்சன் பற்றிய விபரணம் காலனியப் பேரரசு பற்றிய விபரணமாக வாசகனின் மனதில் படிகிறது. வில்சன் பிரித்தானியா எனும் காலனியப் பேரரசினதும் வெள்ளை இன மையவாதத்தினதும் (Ethnocentrism) அகமும் புறமுமாக இருக்கிறான். ஆனால் ஊமைச்செந்நாயோ அக்கால இந்தியாவின் அகமும் புறமுமாக இருக்கிறானா என்பதை திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது.
ஆங்கிலேய வெள்ளைத் திமிர் வில்சன் வழியே கதையில் ஆரம்பம் முதல் முடிவு வரை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
“துரை கண்களைச் சிமிட்டினான். பதிலுக்கு நாம் சிமிட்ட முடியாது” என்று கதையின் தொடக்கத்திலேயே கதைசொல்லி சொல்லும்போது அது வெள்ளையனுக்கும்-இந்தியனுக்குமிடையிலான ஒரு சமநிலையின்மையை காட்டுகிறது. அச்சமநிலையின்மையே கதையின் மையப்புள்ளியும் கூட.
துரையின் பாலியல் தேவைக்காக கிராமத்திலிருந்து அழைத்துவரப்படும் பெண்ணோடு துரை வாய்வழிப்புணர்ச்சியில் ஈடுபடுகிறான். அவனுடன் சமமாகப் படுப்பதற்கு, யோனி வழி புணர்வதற்குக்கூட இந்தப்பெண்கள் கீழானவர்கள் என்ற வெள்ளைத்திமிர் இது போன்று இன்னும் பல இடங்களிலும் வெளிப்படுகிறது.
வில்சன் துரை ஊமைச்செந்நாயிடம் “நீ வெள்ளைக்காரப் பெண்ணோடு எப்போதாவது புணர்ந்தாயா?” எனக்கேட்கிறான். ஊமைச்செந்நாய் வழமை போன்று மௌனமாக இருக்கிறான்.
”உன் கண்களைப்பார்த்தால் அவர்கள் கூப்பிடுவார்கள். நீ எப்போதாவது வெள்ளைப்பெண்ணுடன் படுத்தாய் என்று தெரிந்தால் நான் உன்னை தேடிவந்து கொல்வேன்…”
என்கிறான் வில்சன் துரை. ஒரு இந்தியப் பெண்ணுக்கும் வெள்ளையனுக்கும் பிறந்தவன்தான் ஊமைச்செந்நாய். அதனால் ஓரளவு வெள்ளையனின் சாயலை ஊமைச்செந்நாய் பெற்றிருந்தது வில்சன் துரையால் சகித்துக்கொள்ள முடியாமல் போகிறது. ஒரு வெள்ளையன் ஒரு போதும் அடிமையாக இருப்பதில்லை, என செந்நாயை நோக்கி கத்துகிறான் துரை.
இப்படி கதையின் பல இடங்களிலும் வெள்ளைத் திமிர், காலனிய அகம்பாவம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கு எந்த விதத்திலும் குறைவுபடாமல் ஊமைச்செந்நாயின் தாழ்வுணர்ச்சியும், அடிமை மனப்பான்மையும் சமாந்தரமாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
கதையின் மையக் கதாபாத்திரமான ஊமைச்செந்நாய் எனும் கதைசொல்லிக்கு வெள்ளையன் பற்றிய பிம்பம் உயர்வானதாகவே இருக்கிறது. தாழ்வுணர்ச்சியுள்ள கதாபாத்திரமாகவே பல இடங்களில் வாசகனுக்குத் தென்படுகிறான். அவனது தாழ்வுணர்ச்சி என்பது ஒருவிதத்தில் அன்றைய இந்தியாவின் தாழ்வுணர்ச்சியாக ஒரு வாசகன் கருதவும் இடமுண்டு. ஊமைச்செந்நாய் என அவனுக்கு வழங்கப்பட்ட அடையாளத்தைக்கூட அவன் எதிர்த்து நிற்பதில்லை. புறத்திலிருந்து அவன் மீது திணிக்கப்பட்ட அடையாளம் அது. தனது அடையாளத்தை தன் புறத்திலிருந்து, தனது சுயத்திலிருந்து அவன் சூடிக்கொள்வதில்லை. காலனித்துவவாதியால் தன் மீது திணிக்கப்பட்ட அந்த அடையாளத்தை ஒருவாசகன் இந்திய தேசத்தின் மீதான, அதன் குடிமக்களின் மீதான அவமானத்தின் அடையாளமாகவே காண்கிறான். கதை நெடுகிலும் ஊமைச்செந்நாய் மௌனமாகவே அதைக் கடந்து சென்று விடுகிறான். ஆனால் ஒரு கீழைத்தேய வாசகன் பெரும் அதிர்ச்சியுடன் அவனது மௌனத்தை எதிர்கொள்கிறான். ஊமைச்செந்நாயின் மௌனத்தை அவனால் இலகுவில் கடந்துசெல்ல முடிவதில்லை.
கதைசொல்லியான ஊமைச்செந்நாய் வில்சன் துரையைப் பற்றிச் சொல்லும் போது-
”அவனுக்கு நாற்பது வயதுதான் இருக்கும். ஆனால் நம்மூரில் நாற்பது வயதில் இருபது வயதான மகன் வந்து அவனுக்கும் பிள்ளை பிறந்து தாத்தா ஆகி மிச்சமிருக்கும் நாட்களை எண்ண ஆரம்பித்திருப்பார்கள். தொப்பை சரிந்து தாடைக்கு கீழே சதை தொங்கி கண்ணுக்கு கீழே கறை விழுந்து தெரிவார்கள். துரை இறுக்கமாக பனைநாரால் பின்னிச் செய்தவன்போல இருந்தான். ”
காலனித்துவ பேரரசின் மீதும் வெள்ளையினத்தின் மீதும் ஒரு எல்லையற்ற மயக்கம் குடியேற்றநாட்டு மக்களின் மனங்களில் மறைமுகமாக ஏற்றப்பட்டிருந்ததைத்தான் இந்தவரிகள் வெளிப்படுத்துகின்றன. காலனித்துவத்தின் ஒரு உளவியல் பரிமாணம் அது. அது நம்மை அறியாமல் நமக்குள் வந்துவிடுவது. ஜெயமோகனால் கூட அதனை தவிர்க்கமுடியாமல் போய்விட்டது.
காலனிய ஆட்சியாளர்களுக்கும், வெள்ளைத்திமிருக்குமெதிரான இந்திய மிடுக்கு கதையின் எந்தவொரு புள்ளியிலும் வெளிப்படுவதாக இல்லை. கதைமுடிவில் ஊமைச்செந்நாய் எடுக்கும் முடிவு இந்தியாவின் மிடுக்கைப் பறைசாற்றப் போதுமானதாக இல்லை. ஊமைச்செந்நாயையும் அவன் தேசத்தையும் கன்னா பின்னா என்று கடுமையாக அவமரியாதை செய்யும் வில்சனை ஒரு சந்தர்ப்பத்தில் ஊமைச்செந்நாய்தான் சாவின் விளிம்பிலிருந்து மீட்டுக்கொண்டு வருகிறான். எதிர்ப்புக் குணமற்ற முழுமையாக சரணாகதியடைந்த பாத்திரம் அவன்.
கதையின் முடிவில் செந்நாய் உயரத்திலிருந்து சறுக்கி கீழே விழ நிகழும்போது பதிலுக்கு துரையும் அவனைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறான். ஆனால் செந்நாயோ அவன் தயவால் உயிர் பிழைப்பதைவிட சாவை அல்லது சுயமாகத் தப்பித்தலைத் தெரிவு செய்து, கடைசியில் துரையை சபித்துவிட்டு மரணப் பள்ளத்தாக்கை நோக்கி விசையுடன் இறங்குகிறான்.
ஊமைச்செந்நாய் வில்சனை சாவிலிருந்து மீட்டெடுத்ததற்கும் வில்சனால் காப்பாற்றப்படுவதை தவிர்த்துக்கொண்டமைக்கும் வேறு பண்பாட்டுக்காரணிகள் இருக்கக்கூடும். ஆனால் வாசகனுக்கு அவை பூடகமானவை. ஊமைச்செந்நாயின் அந்த முடிவு துரையினதும் அவன் தேசத்தினதும் ஆணவம், ஒரு எளிய மனிதனின் முன்னால் எதுவுமே இல்லை என்பதைச் சொல்வதோடு அவனை (ஊமைச்செந்நாயை) ஒரு சரித்திரச் சித்திரமாகவும் மாற்றிவிடுகிறது.
எனினும் கதையில் இந்தக்கட்டம் காலனித்துவ அடக்குமுறைக்கெதிரான இந்தியாவின் சுதந்திர உணர்வை இப்படியான அடிமை உணர்வுள்ள மனிதர்களைக்கொண்டு மாற்றீடு செய்வது ஒரு வரலாற்று அபத்தம் என இன்னொரு கோணத்திலும் வாசிக்கப்பட முடியும். கதைக்குள் அதற்கான சாத்தியங்கள் திறந்தே கிடக்கின்றன.
கதையின் ஒட்டுமொத்தத்தையும் ஒரு அறிவுத் தளமன்றி உணர்வுத்தளமே தீர்மானித்திருக்கிறது. கதைக்குள் ஒரு பின்காலனிய அரசியல் பரிமாணம் அதன் எல்லாப் பண்புகளோடும் இல்லாமல் இருக்கிறது. காலனிய முதலாளித்துவ அரசியல் மீதான விமர்சனமாக கதை அமைந்துவிடாமல் வேறொரு தளத்துக்கு ஜெயமோகன் கதையை நுட்பமாக நகர்த்திக்கொண்டு செல்கிறார். ஊமைச்செந்நாய் என வில்சன் துரையால் கிண்டலாக அழைக்கப்படும் சுதேசி ஊழியமற்ற ஒரு வேட்டை உதவியாளனாகவே வருகிறான். அவன் தனது தன்னுணர்வு சார்ந்தும், உழைப்பு சார்ந்தும், இருப்பு சார்ந்தும் பல பரிமாணங்களில் சுரண்டப்படுகிறான். சுருக்கமாகச் சொல்வதானால் வில்சன் துரை எனும் ஆங்கிலேயப் பேரரசின் காலனித்துவப் பசிக்கு முழுமையாக அவன் இரையாகிறான். இந்த அரசியல் கதைக்குள் ஊடுபாவி இருக்கிறது. ஆனால் அதுவே கதையாக இருப்பதில்லை. மனித உணர்ச்சிசார்ந்த சித்தரிப்புத்தான் கதையை நகர்த்தும் மைய விசையாகவுள்ளது.
இக்கதை முடிவடைவதில்லை. ஊமைச்செந்நாயின் கதை மட்டுமே முடிகிறது. கதையின் தலைப்பாக ஊமைச்செந்நாயை வைத்து கதையை முடித்திருக்கிறார் ஜெயமோகன். மற்றப்படி கதை மேலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஊமைச்செந்நாயின் கதையை முடிப்பதன் மூலம் கதைக்கு ஒரு நிறுத்தம் மட்டுமே ஏற்படுகிறது.
கதை காலனித்துவச் சில்லுகளாலேயே உருண்டு செல்கிறது. கதாபாத்திரங்கள் காலனிய சுரண்டலை ஏதோ ஒருவிதத்தில் அனுபவிப்பவர்கள். அந்தவகையில் பின் காலனிய புனைவுகளின் தன்மைகளைப் பெற்றதாகவுள்ளது. ஒரு புனைவாக அது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.
2 comments