யெவ்கெனி யெவ்டுஷென்கோ
குழந்தைகளிடம் பொய் சொல்வது தவறு.
பொய்களை உண்மை என்று சாதிப்பது தவறு.
கடவுள் சுவர்க்கத்தில் இருக்கிறார், உலகில் எல்லாம் நலம்,
என்று அவர்களிடம் சொல்வது தவறு.
அவர்களுக்கு நீங்கள் சொல்வதன் பொருள் புரியும்.
குழந்தைகளும் மனிதர்கள்.
எண்ணற்ற இடர்கள் இருப்பதைச் சொல்லுங்கள்,
வரப்போவதை அவர்கள் பார்க்கட்டும், அது மட்டுமல்ல,
இன்றுள்ளவற்றை தெளிவாய்க் காணட்டும்.
எதிர்கொள்ள வேண்டிய தடைகள் இருப்பதைச் சொல்லுங்கள்,
துயரம் நிகழ்கிறது, கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.
எக்கேடோ கெட்டு ஒழியட்டும்.
மகிழ்ச்சிக்குத் தர வேண்டிய விலை அறியாதவன்
மகிழ்ச்சியாய் இருக்க மாட்டான்.
மனமறிந்து பிழை எதையும் மன்னிக்க வேண்டாம்,
அது மீண்டும் நிகழும், வளரும்,
அதன்பின் நம் கண்களின் பாவைகள்
நம்முள் மன்னிக்க மாட்டா, நாம் மன்னித்ததை.
(This is an unauthorised translation of the poem, Lies, originally written in Russian by Yevgeny Yevtushenko and translated into English by Robin Milner-Gulland and Peter Levi. The Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only)
ஒளிப்பட உதவி – The Guardian