தொடர்ந்து ஐந்து கிராண்ட் ஸ்லாம் வென்றிருந்த ஸ்டெப்பி கிராப் அன்று பிரெஞ்சு ஓபன் பைனலில் தோல்வி அடைந்திருந்தார். சென்றாண்டைப் போலவே இந்த வருடமும் நான்கு க்ராண்ட் ஸ்லாம்களையும் வென்று விடுவார் என்று உறுதியாக நம்பியிருந்தேன்.
‘போன வர்ஷம் அவ ஜெயிச்சதெல்லாம் ப்ளூக்குனுதான் அப்போலேந்து சொல்லிட்டேருக்கேன், ஒலிம்பிக்ஸ் வேற’, அப்பா என்னிடம். க்றிஸ் எவர்ட் ரசிகர்.
கருப்பு வெள்ளையில் பரிசளிப்பு விழா. வெற்றி பெற்ற, வாயில் நுழையாத மிக நீளமான பெயர் கொண்ட ஸ்பெயின் நாட்டுப் பெண் அழுது கொண்டிருந்தார். ஸ்டெப்பி அழுவதையும், அவர் பார்வையாளர் பகுதியில் ஏறிக் குதித்து அங்கிருக்கும் அவரது தந்தையைக் கட்டிக்கொள்வதையும் பார்த்ததுதான் அதிகம். இன்று டிவி காமிரா அவர் பக்கம் செல்லும்போதெல்லாம் எங்கோ நிலைகுத்தி இருந்த பார்வை. மூன்றாவது செட்டில் வெற்றியின் விளிம்பைத் தொட்ட பின்னான தோல்வி.
எல்லாம் முடிந்து டி.வியை அணைக்கும் நேரத்தில் வீட்டு உரிமையாளர் தண்டபாணி எங்கள் போர்ஷனுக்கு வந்தார். காலை நேரங்களில் கோமணம் மட்டும் அணிந்து கொண்டு வீட்டு வாசலில் உள்ள சாக்கடை கால்வாயை நோண்டியபின் மூன்று கீழ் போர்ஷன்கள் வழியாக சிறு நடை, பின் தன் மாடி போர்ஷனுக்குச் சென்று விடுவார். அவருடன் வந்தவர் சிறிய கை கொண்ட, முட்டிக்கு கீழே கொஞ்சம் நீளும், கவுன் அணிந்திருந்தார்.
பெரிய, சின்ன மணியக்காரத் தெரு இரண்டிலும் இரவு ஆடை, சுடிதார் அணியும் இருவது முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பத்து பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். தேன் நிறம், விரித்து விடப்பட்ட தலைமுடி, துருத்திக் கொண்டிருக்கும் கன்ன எலும்புகள். கை நரம்புகள் தெரிந்தன. மிசஸ். கோம்ஸ், பள்ளி ஆசிரியை.
‘இவனும் ஒங்க ஸ்கூல்தான்’
‘என்ன க்ளாஸ்?’
‘எய்த்து’
‘ஐ டேக் பார் கே.ஜி’
ரெண்டு தெரு தள்ளிதான் பள்ளி என்பதால் இங்கு குடிவந்திருக்கிறார். இரு பிள்ளைகள்- ராபர்ட், ஐரீன். இருவரும் நல்ல சிவப்பு நிறம்.’நல்ல காலம்டா அவங்க ஹை ஸ்கூலுக்கு எடுக்கல’
‘எப்டியும் மாட்ன நீ, ஸ்கூல்ல சும்மா எதாவது பண்றத பாத்தாக்கூட, வீட்ல சொல்லப் போறாங்க பாரு’.
‘ஆங்க்லோ இண்டியன்தான?’
‘ஆமா’
‘க்ராஸ்ஸு’
‘டேடேய்..’
‘சும்மா சொன்னேன்டா’
‘எங்க வீட்ல தவ்ற மத்த மூணு போர்ஷன்லையும் நான்-வெஜ் உண்ட’
அவர்கள் குடி வந்த இரு நாட்களில் தண்டபாணிக்கும் அவர் மகனுக்கும் வழக்கமான சண்டை. மாடியில் இருந்து வரும் இரு தரப்பு வசவுகள், மாமியாரும் மருமகளும் பக்கபலம். மகனுக்கு நிலையான வேலை கிடையாது. எப்போதும் சிவந்த கண்கள், கலைந்த தலைமுடி. ஓரிரு தடவை தந்தையை அடிக்கச் சென்றதும் உண்டு. பீஸ்ட். இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை. மூன்று போர்ஷன்களில் வரும் வாடகையை
வைத்துதான் குடும்பம் நடக்கிறது.
‘குடி இருக்றவங்க புள்ளிங்க இங்குலீசு மீடியம் படிக்குது, ஏன் புள்ளக்கு என்ன கொறச்சல்?’
‘எளக்காரம்’
‘காச கொடுக்க மாட்டேங்கறான் கம்நேட்டி’
‘வெளில நிக்காத உள்ள வா,’ அம்மா.
‘இங்க ஷிப்ட் பண்ணப்ப எம்பேரன தமிழ் மீடியம்லதான் போட்ருக்கேன், எதுக்கு இங்கிலீஷ்னு கேட்டான்,’ அப்பா.
‘அப்பா குடுக்க மாட்டேங்கறார்னா, ஒழுங்கா வேலைக்காவது போணும்,’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றார்
‘எல்லார்க்கும் வேல செய்ற பொண்டாட்டி கடப்பாங்களா’
ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் மூவரின் உச்சரிப்பிற்கு விரைவில் பிடிபட்டு விட்டது. ‘அன்க்கீகீள்’ என்று ராபர்ட் என் தந்தையை அழைப்பதும், கழிவறைக்குச் செல்லும்போது சிறிய பாட்டிலில் பினாயிலை அவன் எடுத்துச் செல்வதும் சில நாட்களில் புதுமை இழந்தது.
தாம்பரத்தில் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த ஐரீன் காலையில் சீக்கிரமாக கிளம்பி விடுவாள். ராபர்ட் செங்கல்பட்டு கல்லூரியில் இறுதியாண்டு. கல்லூரிக்கு எப்போதும் தடி ஜீன்ஸும் அடர்த்தியான நிறத்தில் காலர் வைத்தடி-ஷர்ட்டும் தான். பள்ளியில் இருந்து நான் திரும்பும் போது ராபர்ட் மட்டும் எதையாவது படித்துக் கொண்டோ, மேற்கத்திய பாடல்களை கேட்டுக் கொண்டோ இரண்டு அறை மட்டுமே கொண்ட அவர்கள் போர்ஷன் வாசலில் அமர்ந்திருப்பான்.
ஆரம்பத்தில் பார்க்கும்போது தலையசைத்தல்கள், ஓரிரு வார்த்தை பரிமாற்றங்கள் மட்டும். அடுத்த மூன்று வாரங்களில் ஸ்டெப்பி விம்பிள்டன் வென்றதை இருவரும் கொண்டாடினோம்.
‘ராபர்ட் ஆர் பாப்’
‘பாப்ப்பா?’
‘பெட் நேம்’
‘செட் ஆகலையே ராபர்ட்டுக்கு’
‘பாப்பி. ஐ லைக் பாப்’
‘லேடிஸ் நேம் இல்ல?’
‘போத்’
‘இந்த பேர்ல இந்தி படம் வந்த்ருக்கு’
‘தெரியும், நைஸ் சாங்க்ஸ், மாம் லைக்ஸ் தி மூவி எ லாட்’
வீடு திரும்பியபின் அவனுடன் கொஞ்ச நேரம் பாட்டு கேட்டுக்கொண்டிருந்து அவனுடன் சேர்ந்து தலையாட்டி வைப்பேன். தமிழ், ஹிந்தி திரைப்படப் பாடல்களிடம் அத்தகைய விலக்கம் இல்லை அவனுக்கு, எங்கள் வீட்டில் உள்ள கேசட்டுக்களை வாங்கி கேட்பான். டப்பா ஸ்கூலுக்கோ, ஸ்ரீனிவாசா க்ரவுண்ட்டுக்கோ கிரிகெட் ஆடப் போகும்போதும் என்னுடன் வந்து சும்மாவேனும் அமர்ந்திருப்பான்.
அவனையோ, ஐரீனையோ தேடி யாரும் வருவதில்லை. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வார நாளொன்றின் மாலையில் ஒருவர் வந்து செல்வார். பெல்டின் மீது பிதுங்கும் பெரிய தொப்பை, நல்ல நிறம், கைகளில் அடர்த்தியாக சுருட்டை சுருட்டையாக கருப்பு முடிகள்.
‘ஆர் அங்க்கீள் டேவிட்’
ஞாயிறு காலை நூலகத்திற்கு போவதை வழக்கமாக வைத்திருந்தேன்.’லெட்ஸ் கோ இன் தி ஆப்டர்நூன்’ என்றான் ராபர்ட்.’அவங் கூட போகாத’ என்றாள் ஐரீன்.
‘தனியா போனா போர் மேன், வெயிட் பார் மீ’
அவனுடனேயே ஒரு மணி வாக்கில் கிளம்பினேன்.
‘பாப் டோன்ட் கெட் ஹிம் இன் ட்ரபுள்’ .
‘வி வில் ஹேவ் பன் டோன்ட் வர்றி’
ஏதோ நூலை படித்துக் கொண்டு அவன் அமர்ந்திருக்க, நான் புத்தகங்களை தேடிக் கொண்டிருந்தேன். கண்காணிப்பாளர் மதிய உணவிற்கு சென்று விட்டார், மீதமிருந்த இரண்டு பேரும் புத்தகங்களை வைத்து விட்டு கிளம்பினார்கள். ராபர்ட் அறையில் மூலையில் இருந்த அடுக்கிற்கு சென்று இடுக்கிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து பேன்ட்டினுள் செருகிக் கொண்டான். நான் பார்ப்பதை கவனித்து அருகில் வந்து கண்ணடித்தான். அவன் வயிறு பிதுங்கி இருப்பது போல் தோன்றியது.
‘புக்ஸ் எடுத்துடியா, ஷால் ஐ வெயிட் அவுட்சைட்?’.
‘இல்ல தோ கெளம்பலாம்’ மூன்று கார்டுகளில் ரெண்டிற்கு மட்டும்தான் புத்தகம் எடுத்தேன்.
என்ட்ரி போட்டுக் கொண்டிருக்கும்போது, ராபர்ட் வெளியே சென்று நின்று கொண்டான். சிறிது தூரம் நடந்த பின் புத்தகத்தை எடுத்து என்னிடம்காட்டி சிரித்தவனிடம், ‘கரெக்ட்டா எப்படி எடுத்த?’
‘வில் கீப் இட் தேர் மேன், தென் சம் டேஸ் லேட்டர் வந்து எடுத்துப்பேன்’
மாதத்தில் ஒரு முறை என்னுடன் நூலகத்திற்கு வருவான். அன்று மட்டும் நான் ஒன்றோ இரண்டோதான் புத்தகங்கள் எடுப்பேன்.
‘கரெக்ட்டா வேணும்னுதானே லஞ்ச் டைம்ல வர’
‘ஆஹ், மை ஷெர்லாக்’
நானும் ஒரு புத்தகத்தை ஒளித்து வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னதற்கு, ‘நோ நோ நீலாம் இத பண்ணக் கூடாது’
‘ஜாலிக்குதான பாப்’
‘தென் ஐ வில் கோ அலோன்’
அந்த ஞாயிறும் ராபர்ட்டும் நானும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். ஒரு முதியவர் முடிச்சை அவிழ்த்துப் பார்த்து மீண்டும் கட்டியபடி முன்னால் சென்று கொண்டிருந்தார்.
‘ஹே, ஆஸ்க் தட் ஓல்ட் மேன் டு ஸ்டாப்’
ஓடிச் சென்று அவரை நிறுத்தினேன்.
‘என்ன தம்பி என்ன வேணும்?’ வயது அறுபதிற்கு மேல் இருக்கும்.
இரண்டு ரூபாய் நாணயத்தை நீட்டி, ‘கீழ் போட்டீங்க’ என்றான் ராபர்ட்.
முடிச்சை அவிழ்த்து மீண்டும் பார்த்து ‘நீங்களே எடுத்துக்காம குடுத்தீங்களே’
செட்டித் தெருவை தாண்டி இருந்தோம்.
‘ஏன் சிரிக்கற’
‘ஒண்ணு..ல ராபர்ட்’
‘யூ இம்ப்’. அவனும் சிரிக்க ஆரம்பித்தான்.
மண்டையைப் பிளக்கும் மதிய வெயிலில் ஆளரவமற்ற தெருவில் நடந்து கொண்டிருந்தோம்.
இரு வீட்டிலும் அங்கமுத்து திரையரங்கில் மாலைக் காட்சி பார்க்க முடிவு. டிக்கெட் வாங்க நாங்களிருவரும் முன்னதாக வெளிவந்து இரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் நல்ல கூட்டம், பிரபலமான பாடல்கள். நுழைவாயில் படிக்கட்டில் நின்றபடி, ‘ஸ்டே ஹியர் கீப் எ பேர்ட்ஸ் ஐ வியு பார் தெம், நா டிக்கெட் வாங்கறேன்,’ என்றதில் ‘பேர்ட்ஸ் ஐ வியுவின்’ அர்த்தம் பிடிபட சில கணங்கள் ஆனது. ஐரீன் அருகே அமர்ந்துதான் படம் பார்த்தேன். படத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் தற்கொலைச் சம்பவங்கள். இரண்டு தடவையும் அவளின் ‘ஊ’, ‘காட்’. திரும்பி வரும்போது படத்தின் இசை பற்றி ராபர்ட் பரவசமாக பேசிக் கொண்டிருந்தான். குறிப்பாக நாயகன்-நாயகி நடனமாடும் வரிகள் இல்லாத இசைக் கோர்வை குறித்து ‘ப்ளட்டி குட்’. ஐரீன் எதுவும் பேசாமல் வந்தாள்.
‘ஹீரோ இஸ் அ லூசர்’
‘பாப், ஹீரோயின் ரெண்டும் கூடத்தான்’
‘ஐரீன் நீ என்ன சொல்ற?’
‘ஷட் அப் பாப்’
‘ஏன் கோவப்பட்ற’
‘வில்லன்ட்ட சண்ட போட்டு செத்தாக்கூட பரவால்ல பாப். வேஸ்ட் இந்தாள், சண்டையே போடத் தெரியாது’ என்று என்னுடைய ஆதர்ச நட்சத்திர நடிகர் அந்தச் சூழலை எப்படி அதிரடியாக சமாளித்திருப்பார் என்று விவரித்தேன்.
‘கரெக்ட்டா சொல்றான் பார்’
‘இன்சென்சிடிவ் பிக்ஸ் போத் ஆப் யு’
வீடு வந்து சேரும் முன் அவளுடன் இயல்பாக பேசத் துவங்கி இருந்தேன்.
மேட்டுத் தெரு ஐஸ் பால் கடைக்கு சென்று சொம்பில் குளிர்ந்த பால் வாங்கி வருவது, சின்ன மணியக்கார தையல் கடை என அவளுடன் விடுமுறை நாட்களில் அலைந்தேன். ‘ஒ யூ ஹவ் ப்ரோக்கன் மை ஹார்ட்,’ என்று ஊளையிடுவான் ராபர்ட்.
வீட்டில் பெரியவர்கள்தான் என் பள்ளிக்கு முன்பாக இருக்கும் காப்பி அரைக்கும் கடைக்கு செல்வார்கள். இந்த முறை தனியாக சென்று வருவதாக கெஞ்சி அனுமதி பெற்று கொண்டு ஐரீனிடம், அவள் வருகிறாளா என்று கேட்க, அவள் தயார்.
பில்டர் காபி மீது அவளுக்கு பிரியம். கடையின் இரண்டாம் படிக்கட்டில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்தாள். கடைக்காரரிடம் அரைக்க வேண்டிய விதம், அளவுகளை சொன்னேன்.
‘எப்பமே நான்தான் வருவேன் இங்க’
‘நைஸ், க்ரேட் ஸ்மெல், இங்கேயே ஒக்காந்திருக்கலாம் போலிருக்கு’
‘யா’
‘அதுதான் மிஸ் எடுக்கற கிளாஸ்’
‘யுவர்ஸ்’
‘அது மேல, தர்ட் வரைக்கும்தான் இங்க, ஹை ஸ்கூல்லாம் பர்ஸ்ட், செகண்ட் ப்ளோர் ‘
சைக்கிளில் வந்து கொண்டிருந்த கஞ்சாவைப் பார்த்ததும் கடைப்பக்கம் திரும்பினேன். சைக்கிள் பெல் ஓசை.
‘ஹி இஸ் காலிங் யு’
அவனருகில் சென்றேன்.
‘என்னடா’
‘சும்மா வெளில ஒரு ரவுண்ட்’
‘இவங்க தான் மிஸ் பொண்ணா?’
‘ம்ம், சைக்கிள் ப்ரேக்கு சரி இல்லையா? லூசா இருக்கு’
‘இல்லடா’
‘கூப்டறாங்கடா’
‘நீ கெளம்பு’
‘யுவர் பிரெண்ட்?’
ஸ்டாண்ட் போட்டான்.
‘மை கிளாஸ்மேட் கஞ்சா’
‘கஞ்சா?’
‘மை நேம் இஸ் ரகுராமன்’
‘பின்ன ஏன் அப்டி கூப்டற?’
‘சொல்லட்டுமாடா’
‘சும்மா ஜோக்கடிக்கறான்’
‘பட் தேர் மஸ்ட் பி சம் ரீசன் நோ’
‘யா’
‘நாளக்கு இஸ்கூல் வருவேல்ல’
‘ஏன் அவன டீஸ் பண்ற, போய்ட்டான் பாரு’
‘பிரெண்ட்தான’
‘வை இஸ் தட் பாய் ஸ்டேரிங் அட் மீ’
‘தெர்ல, சும்மா நிக்கறான்னு நெனக்கறேன்’
‘டேய் என்னடா இங்கேயே நிக்கற, கெளம்பு போ’
இரண்டடி தள்ளிச் சென்று நின்று தெரு முனையை பார்த்தான்.
‘ஐரீன் கார்னர்ல பாரு’
லுங்கி கட்டிக் கொண்டு இரண்டு இளைஞர்கள், இவர்கள் பக்கம் பார்த்தபடி. ஒருவன் எங்கள்பால்காரம்மாவின் கடைசி மகன். போன வருடம், லுங்கி அவிழ்ந்து மேலே முழுக்கை சட்டையுடன் கையில் பெரிய கம்புடன் அடுத்த தெருவுக்கு ஓட முயற்சித்துக் கொண்டிருந்தவனை
பால்காரம்மாவும் மற்றவர்களும் அடக்கிக் கொண்டிருந்தார்கள். சற்று அமைதியான பின்பும் அவர்கள் கொடுத்த லுங்கியை அணியாமல்
தூக்கி வீசிக் கொண்டிருந்தான். குச்சி குச்சியான கால்கள்.
அந்தச் சிறுவனை அருகே வருமாறு ஐரீன் சைகை காட்டினார்.
‘வாடா ஒண்ணும் பண்ண மாட்டாங்க’
‘ஏன் நிக்கற’
‘இல்லக்கா அவங்கதான்’
‘சொல்ரா’
‘அக்கா பேரு என்ன, வயசு என்னனு கேக்கச் சொன்னாங்க’, நாலணா நாணயத்தை எடுத்துக் காட்டினான்.
‘என்ட்ட நேரா கேக்கச் சொல்லு போ’
‘அதெல்லாம் வேணாம், அக்கா பதில் சொல்லலன்னு மட்டும் போய் சொல்லு’
‘ நீ போய் அப்படியே சொல்லு’
‘ப்ரச்சன ஆயிடும்’
‘நத்திங் வில் ஹேபென்’
திரும்பிச் சென்றவன் அவர்கள் அருகில் சென்று ஏதோ சொல்லி விட்டு ஓடினான்.
‘திக் ப்ரவ்ன், லுக்ஸ் யம்மி’. பிளாஸ்டிக் உறைக்குள் பொதிந்து வைக்கப்பட்ட காபிப் பொடியை வாங்கிய போது உள்ளங்கையில் உஷ்ணம். வீடு செல்லும்வரை இருக்கும்.
‘இது என்ன?’
‘சிக்கரி’ மற்றொரு சிறிய உறையில்.
‘வாட்ஸ் இட், ஊஸ்’
‘இதையும் மிக்ஸ் பண்ணுவாங்க’. வீட்டிற்குச் சென்றவுடன் முழுதாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தெரு முனையில் வேறெங்கேயோ பார்த்தபடி பால்காரம்மா பேரனும் அவன் நண்பர்களும்.
‘சைட்ல பாக்காத, லுக் ஸ்ட்ரைட்’
பத்தடி நடப்பதற்குள் சீட்டி ஓசை, உற்சாகச் சிரிப்பு.
‘வேணாம் அவங்க பொறுக்கிங்க’
நான் அங்கேயே நின்று விட்டேன். ஐரீன் ஏதோ கேட்கிறாள். பதில் இல்லை. மீண்டும் கை நீட்டி ஏதோ கேட்க, ஏதோ வாயசைக்கிறார்கள்.
அருகே சென்றேன்.
‘சின்னப் பையன்கிட்ட கேக்க சொன்னீங்கள்ல, ஆஸ்க் நவ்’
‘என்னடா சொல்லுது இது?’
‘அது இதுலாம் பேசாத’
‘நீ என்ன சொல்றேன்னு புர்ல’
‘ஓட்றானுங்க பாரு’
‘புல்லீஸ்’
டிசம்பர் மாத மத்தியில் நாடார் கடையில் சிவப்பு கலர் பேப்பர் வாங்கி வெட்டப்பட்டு அவர்கள் போர்ஷன் முன்பும், இயேசு படத்திற்கும் தோரணம். கிறிஸ்த்மஸ் ஸ்டார். நானும் வீட்டில் உள்ள சாய்பாபா படத்தின் சட்டகத்தின்மீது கலர் பேப்பர் ஒட்ட முயற்சித்து கோந்து சரியாக பதியாமல் அரை மணி நேரத்திற்குள் பாதி ஒட்டியபடி ஊசலாட ஆரம்பித்தது.
‘என் கிளாஸ்மேட்ஸ் ரெண்டு பேர் அவங்க வீட்டுக்கு சான்டா, கரோல்ஸ் பாட்றவங்க வருவாங்கன்னு சொல்வாங்க’
‘இங்க சான்டா வருவாரா’
‘ஹன்ட்ரட்ஸ் ஆப் சான்டா’
‘ரீல் வுடாத’
‘ட்ரூ’
‘இந்தளவுக்கு பீலா விடக்கூடாது, ஐரீன் சான்டா வருவாரா’
‘நெக்ஸ்ட் இயர் பாக்கலாம்’
‘பழைய வீட்ல’
‘நோ. சான்டா ஹேட்ஸ் அஸ்’
‘பாப். சும்மா சொல்றான்’
கிறிஸ்த்மஸ்சுக்கு முந்தைய நாள் முன்னிரவு அவர்கள் வீட்டில் பாடல்களுக்கு ஆட்டம். டேவிட் வந்திருந்தார். அந்த வயதிலும் மிசஸ். கோம்ஸ் டேவிட்டுடன் மெல்லிசை பாடலொன்றுக்கு அசைந்தபடி நன்றாகவே ஆடினார். ராபர்ட்டும் ஐரீனும் துள்ளலான இசைக்கு. ‘பை தி ரிவர்ஸ்’ என தொடங்கும் பாடலைத் தவிர மற்றனைத்தும் மனதில் தங்காதவை. என்னையும் ஆடச் சொன்னார்கள். சில நிமிடங்கள் உடம்பையும் தலையும் உலுக்கியபின் சென்றமரும்போது சம்பிரதாய கைதட்டல்கள்.
‘அனதர் மைகேல் ஜாக்சன் இன் தி மேக்கிங்’.
மாலை ஐரீனுடன் வெளியே சென்றுவிட்டு சந்திற்குள் நுழையும்போது பக்கத்து வீட்டு ராட்சஸி கூப்பிட்டார்.
‘ராத்ரி பெரியவர் ஒலாத்தறாரு வீட்டு வாசல்ல, கல்லுப்பு போட்டு வைங்க’
‘ஹவுஸ் ஓனரா’
‘இல்ல, ஸ்னேக்க சொல்றாங்க. நைட் அந்த பேர சொல்லமாட்டங்க’
‘ஹி இஸ் ஏ ஸ்னேக் டூ’
‘ஏன்?’
‘நத்திங்’
‘உப்பு போட்டா வரமாட்டாரு’
‘நாங்க எந்த பாம்பும் பாக்கலையே, என்ன பாம்பு?’
‘பெரியவர் எல்லார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்”
ராட்சஸிக்கு மாந்த்ரீகம் தெரியும் என்ற தெருப் பேச்சை நம்பச் செய்யும் உருவம். எங்கள் இரு வீட்டிற்கும் பொதுக் கிணறு. ராட்சஸி வீட்டு மா, தென்னை மரங்களுக்கு நிறைய தண்ணீர் செலவாகி விடுகிறது என்று தண்டபாணி கோடைக் காலங்களில் கிணற்றை தூர் வாரும்போது முணுமுணுப்பார். ராட்சஸியிடம் நேரடியாகச் சொன்னதில்லை.
‘அவங்களுக்கு மேஜிக் தெரியும் ‘
‘விச்?’
‘அப்டித்தான் சொல்றாங்க’
உப்பை வாசலில் போடாவிட்டாலும் எந்த பாம்பும் தென்படவில்லை.
‘எப்டி அவங்கள்ட்ட தைரியமா பேசறீங்க’
‘நீதான் பயமுறுத்தற, எனக்கு எந்த டிப்ரன்ஸ்சும் தெரில’
‘குமாஸ்தாக்கு பர்ஸ்ட் வைப் இருந்தாங்களாம், அதப் பத்திலாம்…’ ராட்சஸி கணவர் வக்கீலிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்தார்.
‘ஹு நோஸ், அவங்ளுக்கு எப்டி தெரியும்’
‘…’
‘ஷி இஸ் வெரி லோன்லி அவ்ளோதான்’
மிசஸ். கோம்ஸின் போர்ஷனுக்கு முன் சிறிய கொட்டகை. தண்டபாணி முன்பு மாடு வளர்த்த இடம். வீட்டை விரிவாக்கி கட்டியபின் கொட்டகையை இடிக்க மனமில்லை. இப்போது குடியிருப்பவர் உபயோகத்திற்கு மாவாட்டும் கல்லும் அம்மிக் கல்லும், அவருடைய வேறு பழைய பொருட்களும். அரைக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கோவணத்துடன் கொட்டகையில் இருந்து தண்டபாணி வெளியே வந்து போர்ஷன் வாசலில் நின்று, நெஞ்சை நீவியபடி உள்ளே ஏதோ சொல்லி விட்டுச் சென்றார். வழுக்கை, தொங்கும் மார்பகங்களில் சில வெள்ளை முடிகள், தொந்தி, கருத்த பிருஷ்டங்களில் தேமல்.
‘நாடார் கடக்கு போறேன் எதாவது வாங்கணுமா’
ஐரீன் தோளைக் குலுக்கினாள்.
‘ஹி இஸ் டுயிங் இட் ஆன் பர்பஸ்’
‘மா’
‘இங்க பூச்சி ஜாஸ்தி, போர்த் படிக்கும்போது என்ன நட்டுவாக்கிளி கொட்டிடுச்சு’
‘அப்டின்னா’
‘ஸ்கார்பியன் டைப்’
‘இங்க பாக்க என்ன இருக்கு?’
‘முன்னலாம் அவர் காத்தால மட்டும்தான் இங்கெல்லாம் வருவாரு’
‘ஸீ’
‘நீ கெளம்பு கடேக்கு’
‘டோன்ட் டெல் பாப் மாம்’
டப்பா ஸ்கூலில் விளையாடி விட்டு வீட்டிற்குத் திரும்பும் போது மிசஸ். கோம்ஸ் போர்ஷனுக்கு முன்பு சண்டை.
‘ஓனர் எங்க வேண்ணாலும் போவான், வீட்டுக்குள்ள வரலல்ல’ தண்டபாணிகூட பீஸ்ட். ராபர்ட் தோளில் வைத்து அழுத்தியபடி ஐரீன்.
‘அதுக்கு இப்டியா வரணும்’
‘ஏம்மா இங்க எதாவது குப்ப அடச்சு கெடக்கான்னு பாக்க வராரு, வேறப்படி வர முடியும்?’
‘நாங்க வீட்ல இருக்கும்போதுதான் மெனி டைம்ஸ் வராரு ‘
‘வேணும்னேவா இங்க வராங்க, நீ இல்லாதப்பதான் வர்னுமா, பெர்சா நீட்டி கேள்வி கேக்கற?’
‘கொஞ்சம் மரியாதையா பேசுங்க’
‘தபார்ம்மா இப்டிதான் பேச வரும், இங்க்லீசுலாம் தெர்யாது’
‘வேணும்னே வந்து வீட்டு முன்னாடி நிக்கறீங்க’
‘நிய்யூ இந்த வவுசுல கவுனு போட்டுட்டு நிக்கற, எவன் எவனோ வூட்டுக்கு வரான் நான் கேக்கறேனா’
‘ராபர்ட், நோ…’ தோளில் கை வைத்து அவனை இழுத்தாள் ஐரீன்.
‘ஒங்கள சொன்னா கோவம் வர்தில்ல’
‘ஹி இஸ் அவர் அங்கிள்’
‘நீதான சொல்ற’
இந்த முறை ராபர்ட் தண்டபாணியை நெருங்கி நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டான்.
‘அடிங்கோத்தா எங்கப்பன.. ‘
தெருவாசிகள் பலர் கூடி விட்டார்கள்.
‘நைனாவ அட்சிட்டான் ‘
‘அவரு ஊடு என்னமோ பண்றாரு’
‘இஸ்கூல் வாத்தியாரம்மா இப்டி பண்ணுதே’
‘ஓனரையே அடிப்பாங்களாமா’
‘நானே பாத்திருக்கேன் இந்தாளு இங்க அப்பப்ப வர்த அத கேக்க மாட்டேங்கறீங்க,’ ராட்சஸி.
‘மாய்மாலம் பண்ணி வீட்ல ஒட்டிக்கிட்டவ பேசறா’ தள்ளிச் சென்று தண்டபாணி முணுமுணுத்ததோடு சரி, யாரும் நேரடியாக ராட்சஸியிடம் பேசவில்லை.
அப்பா பேசிப் பார்த்தார்.
‘அவங்களுக்கும் நமக்கு சரிப்பட்டு வராது, காலி பண்ண சொல்லிடுங்க ஸார்’
‘ஏதோ கோவத்துல ரெண்டு சைட்லயும் பேசிட்டீங்க’
‘இல்லங்க ஸார் இதுங்களுக்கெல்லாம் வூட கொட்த்தருக்க கூடாது ஸாரு, ரெண்டுங்கெட்டான்’
மீண்டும் ராபர்ட்டை அடக்கினார்கள்.
‘தோ இதுதான் சொல்றேன், காலி பண்ண சொல்லுங்க’
‘லச்சரஸ் பகர்’ என்று ராபர்ட் கத்திக் கொண்டிருந்தான்.
‘இங்கிலீசு பேசுனா மட்டும் போதுமா?’
‘அவ்ங்க அவங்க ஆளுங்களோட கூத்தடிக்கட்டும்’
அந்த மாத முடிவிலேயே காலி செய்து குடி புக வேறு வீடு டேவிட் ஏற்பாட்டில் கிடைத்து விட்டது. கிளம்ப இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கும்போது
அவர்கள் போர்ஷனுக்கு சென்றேன். இரண்டு சூட்கேஸ்களில் துணிகளை திணித்துக் கொண்டிருந்தார்கள் மிசஸ். கோம்சும் ஐரீன்வும்.
‘என்னடா?’
‘ஹெல்ப் பண்ணட்டுமா?’
‘வேணாம், தேங்க்ஸ்’
சூட்கேஸை மூட அதன் மேல் பகுதியில் வலுவான அடி.
‘பார்பேரியன்ஸ்’
‘மா’
‘இட்ஸ் தி ட்ருத்’
‘நீ கெளம்புடா’
‘இட் வாஸ் அ மிஸ்டேக் டு கம் ஹியர் ‘
‘போயிட்டு அப்பறம் வா’
‘திஸ் இஸ் நாட் அவர் பிளேஸ்’
‘வாட் இஸ், மாம்?’