ராயர்

தி. வேல்முருகன்

காலை மணி பத்து இருக்கும். வெள்ளாத்து ஓரம் கரையில் தீ மூட்டி கொண்டு இருந்தனர் குமாரும் ராயரும். அகரம் அங்காளம்மன் கோயிலுக்கு கொடி ஏத்திய மறுநாள் அன்று பூச்சட்டி எடுக்க ஒவ்வொருவராக பெண்களும் ஆண்களும் சிறுவரும் கையில் பானையோடு வந்து சேர்ந்த வண்ணம் இருந்தனர், மானம்பாடி ஆத்தம்கரையில்.

“ஏ குமாரு, நல்லா வேர அடி வேருக்கட்டை கிடந்தா பாரப்பா இந்த நெருப்பு பத்தாம போயிடும்”

“எல்லாம் 20 பானைக்கும் மேல இருக்குது”

“பிறகு யார்ரா நெருப்பு போட்டதுன்னு நம்மள குறை சொல்லுவானுவ! கட்டைவோ கிடக்கும் கிழக்காலே, ஆத்தோரம் போய்ப் பாரு,” என்று சொல்லிவிட்டு ராயர் ஒரு பீடியை எடுத்து தலைப்பில் இருந்து ஒரே சீராக அரக்கி விட்டு வாயில் வைத்தார்.

தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மணி ராயரிடம், “ஏன் மாமா அந்த காச கொடுக்கக் கூடாதா நீ,” என்று கேட்டதும் அதுவரை இருந்த நாட்டாமைத்தனம் மறைந்து ராயருக்கு முகம் வாடி விட்டது. கூட்டத்தில் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா எனப் பார்த்தார். பம்பைக்காரரும் ஒத்துக்காரரும் தட்டிக் கொண்டு இருந்தனர். கூட்டத்தில் கொஞ்சம் பேர் வேப்பிலை ஒடிக்க கலைந்து கொண்டிருந்தனர். ஒத்தும் பம்பையும் இருவரும் கழுத்தில் இருந்து வாரைக் கழட்டி விட்டு வேலிக் கருவை நிழலில் ஒதுங்கிக் கொண்டிருந்தனர். கூட்டத்தோடு வந்த சிறுவர்கள் அருகில் இருந்த ரயில்வே பாலத்தை பார்க்க மேலே ஏறிக் கொண்டிருந்தனர். யாரும் அவர்களை கவனிக்கவில்லை

“மாப்பிள்ளை, அப்படி போவும் வாயேன்,” என்று மணியை அழைத்துக் கொண்டு சற்று பெரிய வேலிக்கருவை ஆற்று ஓரம் நின்ற இடத்திற்கு வழி முள்ளை ஒதுக்கிக் கொண்டு ராயர் சென்றார்.

வாயில் இருந்த பீடி அணைந்து விட்டது. அதைத் தூக்கி எறிந்து விட்டு புதிதாக ஒரு பீடியை உருட்டிப் பத்த வைத்தார்.

மணி ராயரை விட்டு பார்வை விலக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான். “மாப்பிள்ளை,” என்று ராயர் ஆரம்பித்தார்.

“சொல்லு மாமா,” என்றான் மணி.

“நான் இந்த ஊருல எப்படி சத்தியகீர்த்தியா இருந்தேன் தெரியும் இல்ல உனக்கு?”

“அதான் மாமா காசக் கொடுத்துட்டு இரண்டு வருசமா உன் பின்னாடி நிக்கிறேன்”

“அது இல்லை மாப்பிள்ளை, என் தம்பி சடையன தெரியுமில்ல உனக்கு?”

“அதுக்கென்ன மாமா இப்ப?”

“இருக்குப்பா! நீல்லாம் சின்ன புள்ள அப்ப. ஒரு நாளு மணி இந்நேரம் இருக்கும். நம்ம கிருஷ்ணன் கோயில் மானியம் இராக்குட்டைக்கு கொடுத்தாங்கல்ல, நெய்வேலியானுவல்ட்ட, தெரியுமா?”

“தெரியாது மாமா”

“நீ எல்லாம் அப்ப சின்னப்பிள்ளைப்பா. இருந்தாலும் சில விசயம் தெரிஞ்சிக்கணும். அந்தக் குட்டைலதான் நான் மாச சம்பளத்துக்கு ராக்காவலுக்கும் பகல்ல ஆளு வேலைக்குமா நிக்கிறேன். மோட்டுத் தெரு பசங்க இரண்டு பேர் சைக்கிள்ல ஓடியாந்து, “அண்ண அண்ண, ஒரு ஆளு கிடக்கு பேச்சு மூச்சு இல்லாம, நீ கொஞ்சம் வா உன் தம்பியான்னு பார்த்து சொல்லு,” அப்படின்னு சொன்னதும் எனக்கு ஈரக்குலைல இருந்து ஒரு படபடப்பு வந்து நெஞ்சு எல்லாம் அடைக்குதுபா.

“நான் கைல இருந்தத போட்டுட்டு அப்படியே குறுக்கே கொடக்கல்லு செட்டியாரு நெலத்துல இறங்கி கண்ணு மூஞ்சி வாய்க்கா வரப்பு தெரியாம ஒரே ஓட்டமா ஓடறேன்….”

“ஏய் கம்னாட்டிவோல எங்கடா போனிங்க? தீ உக்காந்துட்டுதுடா. ஏலேய் ஏய். யார்ரா அங்க? ராயரு ஏன்டா அங்க போயி நிக்கிற? தீய கலைச்சு இரண்டு கட்டைய எடுத்துப் போடுரா,” என்று ராமு படையாச்சியின் குரல் கேட்டது.

ராயரும் மணியும் திகைச்சு நிற்பதை கவனித்து, “என்னடா காலையிலே ஊத்திட்டிங்களா?”

“இல்ல மாமா தே கட்டை எடுக்கதான் வந்தோம்”

ராயரோடு மணியும் சேர்ந்து வந்து விறகு போட்டதும் தீ குறைந்சு திரும்ப நன்றாக பிடித்து எரிய ஆரம்பித்தது. கரகம் ஜோடித்து தயாராகி விட்டது. பூசாரி இன்னும் வரவில்லை. பூச்சட்டி எடுக்க வந்தவர்கள் வேப்பிலையை ஒடித்து வந்து சும்மாடு பிடிக்க தயார் செய்து கொண்டு இருந்தனர்.

“வாணம் வச்சிருக்க தம்பி, இரண்டு வாணத்த வுடுப்பா, வர வேண்டியவங்க எல்லாம் வரட்டும்,” என்றார் பம்பைக்காரர்.

‘உயிங்’ என்று ஒரு வாணம் ஆற்று மேலும் மற்றொன்று தெருவு பக்கமும் சென்று வெடித்தது.

“போதும்பா, கரவம் கெளம்பும்போது விடலாம். எல்லாம் ஆவ வேண்டிய வேலையைப் பாருங்க,” என்றார் ராமு படையாச்சி.

“மாப்பிள்ளை நீ வா,” என்று ராயர் மணியை அழைத்துக் கொண்டு ஒதுங்கி மறைவாக நின்று கொண்டு பீடி பத்த வைத்தார்.

மணிக்கு ராயரை நேரடியாக கேட்க முடியாமல், தானே சடையனைப் பற்றி தனக்கு தெரிந்ததைச் சொல்ல ஆரம்பித்தார்.

“மாமா எனக்கு சடையன நல்லா தெரியும். பொம்பளை மாதிரி தண்ணி கொடத்த இடுப்புல எடுத்துட்டு வருவாப்பல. எந்நேரமும் வாயில வெத்தலை பாக்கும் பொயலையும் போட்டு மென்னுக்கிட்டு பொம்பளைவகூட அவுங்களுக்கு புடிச்ச மாதிரி பேசி சிரிச்சுட்டு இருப்பாப்பல. நாங்க எல்லாம் அப்ப விபரம் தெரியாத வயசு. சடையன் யாருகூட பேசுனாலும் நாங்க அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து தப்பாதான் பேசுவோம் மாமா. அப்புறம் அவரு அகரத்து வாய்க்கா ஓரம் இருக்கற மூணு பனை மரத்துலதான் இருக்காரு, ராத்திரியானா பாதி சாமத்துல நாலாவதா ஒரு பனை ஒசந்து நெடுமரமா தெரியும், அது சடையன்னு சொல்லுவாங்க. அதப் பார்த்தா அவன் ஜோலி முடிஞ்சுது அப்படின்னு பயமுறுத்துவாங்க. ஆனா அவருக்கு பொம்பளைய மாதிரி நடையும் சாடையும் இருந்ததால நாங்க பயந்துகிட்டுதான் அந்தப் பக்கம் போவோம்”

“ஆமாண்டா மாப்பிள்ளை, அந்தப் பயல என் அம்மாதான் அப்படியாக்கிப் போச்சு. அக்காவோ கட்டிக்கிட்டு போனதும் கடைக்குட்டி இவனுக்கு பொம்பளை வேசம் போட்டுப் பாத்திச்சு, இவன் அதைய புடுச்சுகிட்டு நடக்க ஆரம்பிச்சுட்டான். வளந்த பிறகு கொஞ்சம் திருந்தி சட்டை கைலி கால் சட்டைவோன்னு போட்டாலும் சுருக்குப் பையும் வெத்தலை பாக்கையும் விடல.

“இருபது இருபத்தைந்து வருசத்து முன்ன என்ன இருந்தது? ரொம்ப கஷ்டம் மாப்பிள்ள, அப்ப இவன் சித்தாள் வேலைக்கும் நான் கூலிக்கு வண்டி ஓட்டவும் போவோம். அம்மா பாலு கறந்து செட்டித் தெருல குடுக்கும். அப்பா முடியாதவரு. அப்படி குடும்பம் போயிக்ட்டு இருந்தது. இவன் மாத்திரம் கொஞ்சம் காசு செருவாடு புடிச்சு வட்டிக்கு குடுக்க வாங்கன்னு இருந்தான்.

“கெட்ட சகவாசம் வந்துபோச்சி மாப்பிள்ளை. பொம்பளைவோ சினிமாவுக்கு, ஊட்டுல துணைக்குன்னு இட்டுப் போயி சின்ன வயசுலேயே சொல்லி கொடுத்துட்டாளுவ. வெளிய தெருவ போவ பொம்பளைவோ தொணைக்குப் போவ ஆரம்பிச்சவன், பிறகு ராத்தங்க ஆரம்பிச்சு சமயத்துல ரெண்டு மூணு நாலு வராம இருப்பான் அப்ப.

“நான்கூட, பொட்டப்பயலே ஊட்டுப் பக்கம் வராதன்னு அடிச்சுருக்கேன். ஆனா என்ன இருந்தாலும் கடைக்குட்டிப் பய இல்லியா, நாங்க தேடுவோம். ராத்திரில எங்களக் கண்டா, தே வரேன் போன்னு சொல்லுவான், ஆனா வர மாட்டான், சந்துல எங்கயாவது மறைஞ்சு நிப்பான்.

“இப்படி இருக்கும்போது எனக்கு கல்யாணம் ஆச்சுதா, இவன் ஊட்டுக்கே சுத்தமா வரது நின்னு போச்சு. சரி, கல்யாணம் பண்ணி வச்சா சரியா வந்துடுவான்னு அம்மா என் அக்கா பொண்ணய பேசி வச்சிருக்கு. அப்ப இவன் என்ன பண்ணான் தெரியுமா?

“சீட்டு புடிச்சு 25000 ரூவாய பாதிக்குப் பாதி தள்ளி எடுத்து வசூல் பண்ணிக்கிட்டு இருந்தான். அப்பதான் ஒரு நாளு விடியக்காலையில 4 மணி இருக்கும், மொத கோழி கூவிப் போச்சு. அரவம் கேக்குது, யாருன்னு பார்க்கறேன், சடையன் உள்ள பூனை மாதிரி வரான். கெட்ட வீச்சம் அடிக்குது.

“இதை எல்லாம் சொல்லக் கூடாது, நீ யாரு வெத்து மனுசாளா? மாமன் மவந்தான கேட்டுக்க- எல்லா பெரிய பிரச்சினைக்கு ஆரம்பம் உப்பு பொறாத சின்ன பிரச்சினைதான் காரணமா இருக்கும் அந்த மாதிரி சின்ன பிரச்சினைதான் ஆரம்பம்.

“எனக்கு கல்யாணம் நடந்து கொஞ்ச நாள்தான ஆவுது, அப்ப அன்னைக்கு நல்ல நிறைஞ்ச வெள்ளிக்கிழமை. வீட்டுல இருந்த பால உரிலேருந்து பூனை தள்ளப் போவ, அதப் பாத்து அம்மா என் ஊட்டுக்காரிய சத்தம் போட, ஒன்னு மேல ஒன்னு குறை சொல்ல எனக்கு இடையில கோவம் வந்து ஊட்டுக்காரிய ஒரு அடி அடிச்சிட்டேன். அதான் என் ஊட்டுக்காரி அதுக்கு ஒத்துக்கல. அன்னைக்கு ராத்திரி நான் கடுப்புல வெளிய நார்க் கட்டிலைப் போட்டு படுத்து இருக்கேன், நல்ல மாசி மாசத்து நிலா வெளிச்சம் வாசல்ல விழுது. காஞ்ச புளி உடைக்காம வாசல்ல கிடக்கு. .தூக்கம் இல்லை, சரியா பெரண்டு பெரண்டு கிடக்கேன். அப்பதான் சடையன் வாரான். முட்டை ஓடு ஒடையற மாதிரி சத்தம். புளியம்பழத்தை மெரிச்சிட்டான் போல இருக்கு. இவன் மேலதான் வீச்சம் அடிச்சது. புரிஞ்சு போச்சு. வந்த கோவத்துல வச்சி விரிச்சு கண்ணு மூஞ்சி தெரியாம அடிச்சிட்டேன்”

“ஏன் மாமா?”

“உனக்குப் புரியலையா? என்னப்பா, அக்கா பொண்ண பேசி வெச்சிருக்கு, இந்தப்பய திருந்தாம பொம்பளகூட படுத்துக் கிடந்து வந்து இருக்கான்பா”

“அப்புறம் மாமா?”

“அன்னைக்கு போனவன்தான்…”

“எல்லாம் தனித்தனியா நிற்காம வாங்கடா, நேரம் ஆவுது, சாமி அழைக்கணும்… ஏங்க பம்பைக்காரரே கொஞ்சம் தட்டுங்க… ஏய் வாணத்தை உடுங்கப்பா,” என்று எல்லோரையும் விரட்டிக்கொண்டு வந்தார் ராமு படையாச்சி.

ராயரும் மணியும் தொடர்ந்து பேச முடியாமல் தீ எரியற இடத்துக்கு வந்து தீயைக் கலைத்து நெருப்பை ஆற்றினார்கள்.

பூச்சட்டி எல்லாம் வேப்பிலை மாலை கட்டி வரிசையாக இருந்தது. பூசாரி கொண்டு வந்து இருந்த வடை வாரியால் நெருப்பை பூச்சட்டியில் அள்ளிப்போட ஆரம்பித்தார். சாம்பிராணி பொடியை எல்லாரும் போட ஆரம்பித்ததும் அந்த இடம் பார்க்க வேறு மாதிரி ஆகிப் போனது.

பம்பைக்காரர் ராகமாக பாட ஆரம்பித்தார். செண்டையும் பம்பையும் உக்கிரமாக அடிக்க ஆரம்பிக்கவும் பூசாரி வந்து பூக்கரகம் பக்கத்தில் நின்னதுதான் தெரியும், “ஆடி வாரா என் அங்காளம்மா…” என்று பம்பைக்காரர் ஒரு பக்கம் பாட, “என் அங்காளம்மா…” என்று ஒத்துப்பாடி பின்தொடர்ந்தார்.

பம்பை அடியை கூட்டி, டாய் என்று கத்திக் கொண்டு,

“ஓடி வரா என் அங்காளம்மா
அவ பாடி வாரா என் அங்காளம்மா”

என்று பம்பை அடி வேகம் கூடியதும் பெண்கள் இருவர் இறங்கி சாமியாட பூசாரி உடல் நடுங்க ஆரம்பித்து கத்திக் கொண்டு துள்ள ஆரம்பித்தார். அவரருகில் நின்ற அக்னிபுத்திரனும் சாமியாட ஆரம்பித்தார். இருவருக்கும் விபூதியிட்டு கரகமும் பூச்சட்டியும் கையளித்து தூக்கிவிட்டதும் வரிசையாக மற்றவர்களும் பின்தொடர்ந்தனர். பம்பையும் மேளமும் வாண வேடிக்கையோடு முன் சென்றது.

“மாமா…” என்று ராயர் கையை மணி பிடித்துக் கொண்டு கூட்டம் போகட்டும் என்பது போல் கை காட்டினான்.

“அப்புறம் என்னாச்சு மாமா?”

“அத ஏன் கேக்கற மாப்பிள்ளை… தானா வந்துடுவான்னு இரண்டு நாளு பாத்துட்டு தேட ஆரம்பிச்சா ஆள கண்ணுல காணும். தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க ஊடுவோன்னு ஒரு இடம் பாக்கி இல்லாம தேடறோம் ஆளு அம்புடலை. ஒரு வாரம் ஆயிப் போச்சி, ஒரு தகவலும் கிடைக்கல. எத்தனை நாளைக்கு சும்மா இருக்க முடியும்?

“அன்னைக்குதான் இறால் குட்டைக்கு திரும்ப வேலைக்குப் போனேன், அப்பதான் இந்த மாதிரி கத்திக்கிட்டு ஓடியாந்தானுங்க”

“பிறகு என்ன ஆச்சு மாமா?”

“உன் தம்பியா பாருன்னு சொன்னானுவல, பயம், நடுக்கம் மாப்பிள்ளை, அப்படியே சொரசொரப்பு. ஒண்ணுமே புரியல. எங்க எங்கன்னு கேட்டுப் போறேன். கொய்யாத்தோப்பு போ போன்னு சொல்றாங்க. புள்ளத் தோப்பு வழியாத்தான போவணும், ஒரே ஆனை நெருஞ்சி காலெல்லாம் குத்துது, வேலிக் கருவை மேலயெல்லாம் கிழிக்க ஓடுறேன். தூரத்துலேயே தெரியுது, ஆளுவ கூட்டமா நிக்கிறது. அதப் பார்த்து ஓடறேன். ஓடிப் பார்த்தா ஒரு கீத்துல குப்புறக் கிடக்குறது தெரியுது. பார்த்ததும் தெரிஞ்சு போச்சு ,அவந்தான்னு. புள்ள எவ்வளவு நேரம் கிடந்தானோ…

“ரேகம் எல்லாம் துடிக்கிது. கிட்ட நெருங்க முடியல, வாட… யாருமே போவ மாட்றாங்க. உருக் குலைஞ்சு கிடக்கு. எனக்கு தம்பிய நாமதான் கொன்னுட்டோம்ன்னு மனசு ஆறலை மாப்பிள்ளை.

“நான் அன்னைக்கு கோவப்பட்டு அடிச்சது அதர்மம். பொம்பளை சுகம் ஒரு நாள் கிடைக்கல. இவன் மாத்திரம் போயி வரான அப்படிங்கற ஆத்திரம் பொறாம பாதகத்தை செஞ்சிட்டேன். ஒரு நாளும் அந்த மாதிரி அடிச்சது இல்லை…”

“அழுவாத மாமா… விதி, நீ என்ன செய்ய முடியும்?”

“நான் அடிக்கலனா அவன் போவப் போறது இல்ல. ஊட்டுல புது பொம்மனாட்டி இருந்ததால அவன் மான ரோசப்பட்டு வரல. அப்ப போனவன்தான் கீழ கிடக்கான்.

“சனம் எல்லாம் கூடிப் போச்சு, என் காசுக்கு வழி சொல்லுன்னு.

“எந்தக் காசுனு கேட்டா, எல்லாம் சீட்டுப் பணம். எனக்கு ஆயிரம் ரெண்டாயிரமுன்னு எல்லாம் ஒரு இருபது ஆயிரம் கணக்கு வருது.

“அப்ப நாட்டாமை கெழவர்தான் எல்லாரையும், நேரம் கெட்ட நேரத்துல என்னடா பேசுறீங்கனு சத்தம் போட்டு, “அதெல்லாம் பிறகு பார்க்கலாம் முதல்ல ஈச்சம் பாயும் கட்டிலும் கொண்டு வந்து பாயில சுருட்டிக் கட்டுங்கடா. கட்டிலோட தூக்கி கொண்டு போயி சுடலைல வச்சி எரிச்சுட்டு வந்து சேதிய சொல்லுங்கடா,” அப்படின்னு சொன்னாரு.

“அதே போல செஞ்சாச்சு. விடிஞ்சு பால் தெளிக்க கிளம்பறோம். பணம் தரணுமுன்னு சொல்லி கடன்காரன் வழிய மறைக்கவும் பஞ்சாயத்த ஓடும் பிள்ளை விட்டு உடனே ஊரக் கூட்டியாச்சு. ஆள் ஆளுக்கு வாய்க்கு வந்த மாதிரி பேச ஆரம்பிச்சதும் நான் சொன்னேன், ‘நாட்டாமை பணம் காசுக்காக அண்ணன் தம்பி இல்லாம புடாது. என் தம்பி போய்ட்டான். அவன் எவ்வளவு காசு வச்சி இருந்தான் வாங்குனான்னு எனக்குத் தெரியாது. .குடியிருக்கிற மனக்கட்டு இருக்கு. அத ஒரு விலை போட்டு நீங்க எடுத்துக்குங்க. செத்துப் போன எந்தம்பிய கடன்காரன்னு யாரும் சொல்லாதீங்க. நான் என் குடும்பத்தை காலி பண்ணிட்டு வேலை செய்யப் போற இடத்துல இரந்து என் பாட்டப் பாத்துக்கிறேன்,” அப்படினு சொன்னதும் நாட்டாமை செத்துப்புட்டாரு. நல்ல மனுஷன்.

“அவரு எழுந்து, “ஏய் தலைமுறையா இருந்த குடும்பம், நீ எங்கடா போவ? முட்டுக்கட்டை இருடா,” அப்படினு சொல்லி, “ஏம்ப்பா உங்களுக்கு எல்லாருக்கும் சொல்றேன். செத்துப் போன தம்பி வாங்குன கடனுக்காக அண்ணன்காரன் இல்லன்னு சொல்லாம தன் பங்கையும் உட்டுக் குடுக்குறான். நீதி, நாயமுன்னு ஒன்னு இருக்குல்லையா? அண்ணன் தம்பின்னா பாகம் இரண்டு. ஒரு பாகத்துல ராயர் இருந்துக்கட்டும். ஒரு பாகத்தை விலையப் போடு. அத எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்துடு. மேற்கொண்டு பாக்கி நின்னுச்சினா இருக்கப்பட்டவன் அவனுக்கு ஒரு வருஷம் கெடு கொடுங்க, ராயர் பைசல் பண்ணிடட்டும். கடன் கொடுத்தவன் எல்லாம் கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க,” அப்படினு சொல்லிப்புட்டாரு.

“உடனே பொம்பளைவோ எல்லாம் குசுகுசுன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க, கூட்டத்துல. சடையன் ராத்திரி வந்து ரோட்ல நின்னான், பார்த்தேன். அவன் பேயா நிற்கிறான், நிலை இல்லாம. யாராவது அடாவடியா ராயர வீட்டை விட்டு தொரத்துனீங்க, அவங்க குடும்பம் அவ்வளவுதான், சடையனத் தெரியுமுல்ல ஒருத்தரும் தப்பிக்க முடியாது. பாவம், கோரமா அகாலமா போயிட்டான் வாழற வயசு, அப்படினு பேசுதுங்க ஒவ்வொரு பொம்பளையா.

“உண்மையோ பொய்யோ யாரு கண்டா? அதிகமா சொன்னவங்க எல்லாம் பயந்து போயி உள்ள தொகைய சொன்னதும், நாட்டாமை, “என்னடா சொல்ற ராயர்?” அப்படின்னு கேட்டார்.

“”அதுக்கென்னங்க பால் தெளிய முடிச்சிட்டு செட்டியார்ட்ட ஊடு பத்திரம்தான் இருக்கு அத வச்சித் தரேன், நீங்களே கொடுத்துடுங்க நாட்டாமை,”ன்னு சொல்லிட்டு அப்படீயே செஞ்சேன் மாப்பிள்ளை. அப்படியாப்பட்ட சத்யகீர்த்தி நானு. சரியா மூணு வருசம் ஆச்சு மனக்கட்ட திருப்ப. அப்பா அம்மா ரெண்டு பேரும் மறு வருசமே ஒன்னு பின்ன ஒன்னா போயி சேர்த்துட்டாங்க. நான்லாம் தப்பு பண்ணிட்டு என்னும் இருக்கேன். அப்பையே போயி இருக்கணும், மாப்பிள இப்படி நெஞ்சில வச்சி குமைஞ்சு அல்லாடாம…”

“அப்புறம் உம் பிள்ளைவோள யாரு பார்ப்பா மாமா?”

“அத நினைச்சுதான் கிடக்குறேன்”

“அது சரி மாமா, சடையன் எப்படி செத்தாப்லன்னு தெரிஞ்சுதா?”

“கெட்ட சகவாசம்தான். பொம்பிளை தொடர்பு, காசு பணம் குடுக்க வாங்கன்னு இருந்தான்ல, இதுல ஏதோ ஒன்னுதான் காரணம். அவன் செத்ததும் ஒரே புரளி. இங்க நிக்கிறான் அங்க நிக்கிறானு… பொம்பளைவொளுக்கு சொல்லவா வேணும்?”

“அவன் பூட்டான், ஆனா இன்னைக்கும் என் மனசு தவிக்குது மாப்பிள பொறாமையில நான் அடிச்சது உண்மை. எனக்கு மன்னிப்பு கிடையாது.

“நீ நல்லா இருப்ப. யாருகிட்டயும் இப்படி மனச நான் தொறந்தது இல்லய்யா. உன் காசு எங்கேயும் போயிடாது தரேன் மாப்பிள”.

பூக்கரகமும் அக்னிச் சட்டியும் கோயில் வாசல் வந்து விட்டது. கோயில் உள்ளிருந்து எட்டிப் பார்த்த ராமு படையாச்சி, “என்னடா ராயர் இன்னும் போத தெளியலையா உனக்கு? நல்ல குடும்பத்துல பொறந்துட்டு ஏன்டா இப்படி பண்ற?” என்று கேட்டுக்கொண்டு அருகில் வந்தவர், “ராயரு, ரெண்டு நாளைல தரன்னு சொன்னியேடா, வித உடப் போறன்னு சொல்லி வாங்கின அந்தக் காசக் குடுக்கக் கூடாதாடா?” என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.