அருமருந்து – நரோபா குறுங்கதை

நரோபா

பழுவேட்டையர் வங்கி வாசலில் தோளில் உலகைச் சுமக்கும் தகடு பொறித்த தனது பழைய ஹெர்குலஸ் மிதிவண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு கிடாரம் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார். சைக்கிள் ஸ்டாண்ட் தமிழ் எழுத்தாளனைப் போல் லொடுக்கென்று இருப்பதாக அவருக்கு தோன்றியது. லேசாக காற்றடித்தாலோ தாவணி தீண்டினாலோகூட விழுந்துவிடும். எப்போதும் விழத் தயாராக இருக்கும் சைக்கிளுக்கு காவலாக, தாங்கிப் பிடிக்க ஏதுவாக பழுவேட்டையர் அதன் அருகே நின்று  கொண்டிருந்தார்.

கிடாரம் கொண்டான் ‘குறடு’ இணைய இதழிலிருந்து கட்டுரையை அச்செடுத்து வர காத்திருக்க சொல்லியிருந்தான். அண்மையில் புத்தக கண்காட்சியை ஒட்டி பழுவேட்டையர் எழுதிய “சித்த பிரமை” நாவலைப் பற்றி மு. சுந்தரவதனன்  ‘குறடில்’ ஒரு விமர்சனம் எழுதி இருக்கிறாராம். ‘அண்ணே நாமலே ஷை ஆவுற அளவுக்கு எழுதி இருக்காருண்ணே’ என்றான் கிடாரம். ‘டே… நெசமாவா?’ பழுவேட்டையரால் நம்ப முடியவில்லை. ‘அட ஆமாண்ணே… ஏகாத்திபத்திய, பெருமுதலாளித்துவ, முற்றதிகார, பிற்போக்கு, பார்ப்பனிய, இந்துத்துவ,  ஆணாதிக்க, மனுவாத எதிர்ப்புப் பிரதி. எல்லா தீமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் சமூக நோய்மை மீதான சாட்டையடி கதையாடல்,’ன்னு எழுதி இருக்காருண்ணே, அவார்டு வாங்கத் தேவையான அம்புட்டு லட்சணமும் இருக்குண்ணே… இதப் படிச்சு நாப்பது பேரு நாவல வாங்கிட்டு போயிருக்காங்கன்ன பாத்துக்க,’ என்றான். இப்போது பழுவேட்டையருக்கு வேறு மாதிரியான சந்தேகம் வந்தது. உண்மையிலேயே தான் எழுதிய நாவலைத்தான் வாசித்து சுந்தரவதனன் இதை எழுதி இருக்கிறாரா? தன்னை நாடி வரும் பீடிக்கப்பட்டவர்களின் பேய்களை கிராமத்து சாமியாடி ஓட்டும் கதையைத்தானே எழுதி இருந்தோம், என குழம்பினார். கட்டுரையை வாசித்து தெளிந்து கொள்ள வேண்டும் என ஆறுதல் சொல்லிக்கொண்டார்.

அப்போது அதே வரிசையில், சாலையோரத்து புழுதி படிந்து பச்சை இழந்த புங்கை மரத்து குடைநிழலில், அதுவரை பார்த்திராத, அல்லது தனித்து பிரித்தறிய முடியாத, எல்லா குருட்டுக் கிழவர்களை போலவும் இருக்கும் ஒருவர் கால் மடித்து அமர்ந்து கொண்டிருந்ததை கவனித்தார். கருப்பு கண்ணாடியும், காவி தலைப்பாகையும், வெற்று மார்பில் வழியும் வெண்ணிற தாடியும் பித்துக்குளி முருகதாசை நினைவுறுத்தியது, ஆனால் நல்ல அடர் கருப்பு.

அவருக்கு முன் இடை ஒசிந்த வான் நீல மங்குப் புட்டி ஒன்று இருந்தது. செங்குத்தான படிகளில் தடுமாறி இறங்கும் அந்த குருட்டுக் கிழவரைப் போல் அல்லது இரவு அருந்திய மது இன்னமும் குருதியில் ஓடிக்கொண்டிருக்கும்போது சோம்பலுடன் எழுந்து நடப்பவனைப் போல் கரங்களின் மெல்லிய நடுக்கத்தின் ஊடாக தடுமாறித் தயங்கி பேப்பர் கோப்பையுள் மங்கு புட்டியிலிருந்து நிறம்சூடாத திரவம் வழிந்து இறங்கியது. அந்த உச்சி வெயிலில் அவரிடமிருந்து கல்லாப்பெட்டி சிங்காரத்தின் குரல் எழுந்தது.

‘முடி வளரும், மொகர பளபளக்கும், கண்ணு தெரியும், வாய் மணக்கும், மலம் போகும், மனசு விரியும். விந்து பெருகும், வம்சம் கொழிக்கும், வாக்கு பலிக்கும், மழ கொட்டும், நாடு வளமா இருக்கும், தலைவன் நல்லா இருப்பான், அறம் கெலிக்கும்… அத்தனையும் தரும் அருமருந்து… அஞ்சு ரூபாய்க்கு ஒரு கப்பு’

யாருமற்ற அந்தர வெளியில்  சிறிய பேப்பர் கோப்பையை நீட்டிக் கொண்டிருந்தார். இதைக் குடித்தால் நன்றாக எழுத வருமா, விருது கிடைக்குமா, என்றெல்லாம் கிழவரிடம் கேட்கலாமா எனத் தயங்கிக் கொண்டிருந்தார் பழுவேட்டையர். சைக்கிளை விட்டு அகல மனமின்றி மெல்ல எட்டி கோப்பையை நோக்கினார்.

அமுதத்தில் மூழ்கி அப்போது அமரத்துவம் எய்திக் கொண்டிருந்த  ஈ ரெக்கையைப் படபடத்து மிதந்தபடி தனது முதலும் கடைசியுமான வாக்குமூலத்தை பழுவேட்டையரிடம் அளித்தது. “இதெல்லாம் பாவம் இல்லையா? இப்புடி வாய்கூசாம விக்குறீங்களேய்யா!” என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் கண்மூடியபோது ரெக்கையடிப்பு நின்று போனது.

சுதாரித்துப் பிடிப்பதற்குள் பழுவேட்டையரின் சைக்கிள் தடாலென மற்றுமொரு முறை விழுந்தது.

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.