முடிவில் ஒரு தொடக்கம்

– ஸ்ரீதர் நாராயணன் –

neolithic_stone

 

“நியோலிதிக் காலம்… கி.மு. 5000-6000 அஹ்… என்ன ஒரு அற்புதமான வடிவமைப்பு பார்த்தாயா பையா?” நமச்சிவாயம் வியப்போடு கூவினார்.  நன்றாக மழமழவென தேய்க்கப்பட்டிருந்த முக்கோணக் கல்லை கண்ணுக்கு கிட்டே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சென்ற வாரம் கட்டிய எலெக்ட்ரிசிட்டி பில் எவ்வளவு ஆகியிருந்தது தெரியுமா என்று கேட்டால் பதில் சொல்லமாட்டார். நூற்றுபத்து ரூபாய் குறைகிறது என்று நான்தான் கைக்காசு போட்டு கட்டியிருந்தேன் என்று முப்பத்தேழுதரம் சொல்லியிருக்கிறேன். கவனிக்கவேயில்லை மனிதர். ஐயாயிரம், ஆறாயிரம், அறுபதினாயிரம் என்று வருடக் கணக்குகளைப் போட்டு உழப்பிட்டிருக்கிறார் பாருங்கள்.

எனக்கு இப்பொழுதே கால்கள் லேசாக கடுக்கத் தொடங்கியிருந்தன.

‘இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும் புரஃபசர்?’ என்றேன். இந்த பரினாம வளர்ச்சி போர்டல் (Portal) பயணமெல்லாம் பார்க்க கொஞ்சம் பயமாகவே இருந்தது. இவரைப்போன்ற எச்சென்ட்ரிக் ஆட்களுக்கு என்று அகப்படுகிறது பாருங்கள். அதுவும் பின்புறமாக இரும்புக் காலம், வெங்கலக் காலம், காப்பர் காலம் என்று…. ட்ரெய்னில் பின்னாலேயே போவது போன்று எவ்வளவு அசௌகரியமான உணர்வு.

“அதற்குள் போரடித்துவிட்டதா? இனிதான் சுவாரசியங்கள் அதிகம் பையா. போன ஸ்டேஜான வெங்கல காலத்தில் பார்த்தாயே ‘சிக்கில்’ (Sickle) கொம்புகள்… எப்பேர்ப்பட்ட இஞ்சினியரிங் டிசைன் அது. அதற்கு சற்றும் குறைவில்லாதது இந்த கல் ஆயுதங்கள். இதைப்பார்.” பக்கத்தில் இருந்த பல்லுபல்லாக தீட்டப்பட்டிருந்த கல்லை கையில் எடுத்து கூர் பகுதியை நெருடிப் பார்த்தார்.

கையால் தடவிப் பார்த்து, லேசாக முகர்ந்துவிட்டு நான் எதிர்பாராத தருணத்தில் நாவால் சற்று நக்கி வேறு பார்த்தார். ஈரம் பட்ட இடத்தை அழுத்தி துடைத்துவிட்டு மீண்டும் கண்களுக்கு அருகே வைத்து உற்றுப் பார்க்க ஆரம்பித்தார். சட்டென என் பார்வையின் உறுத்தலை உணர்ந்தது போல நிமிர்ந்து பார்த்து சிரித்தார்

‘இத வச்சுதான் நம்ம முப்பாட்டனுக்கு முப்பாடனெல்லாம் விவசாயம் செஞ்சு பொழச்சிருக்கானுங்க’

இதுவரை பயணப்பட்ட பாதையின் முடிந்த பகுதிகளான இரும்புக் காலம், வெங்கலக் காலம் போன்றவற்றில் இருந்த அளவுக்கு நியோலித்திக் காலத்தில் அதிக உபகரணங்கள் காணப்படவில்லை.

“இதற்கு அப்புறம் இந்த போர்டலில் என்ன இருக்கப் போகிறது புரஃபசர்.. சொரசொரப்பான, வடிவமைப்பில்லாத கற்கள், அப்புறம் வேட்டை ஆயுதங்கள்…. போதும். திரும்பிவிடலாமே’ என்றேன்.

‘அட, இவையெல்லாம்தான் மனித நாகரிகத்தின் தோற்றுவாய் பையா. இங்கிருந்துதான் மிருகக் கூட்டங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள மனிதன் செய்த யத்தனங்கள் தொடங்குகின்றன. வேட்டையாடி, மிச்சம் மீதியை தின்று வாழ்ந்து கொண்டிருந்த நாடோடிகள் தங்களுக்கான உணவை தாங்களே அறுவடை செய்து கொள்ள உருவாக்கிய உபகரணங்கள். நம்மைப் போன்ற ட்ராபிகல் பிரதேசத்தவர்தான் இவர்களுக்கு முன்னோடிகள்… தெரியுமா? இன்னும் கற்காலத்தின் முந்தைய பருவங்களைப் பார்க்க வேண்டும். ‘

இவையெல்லாம் நானும் படித்திருக்கிறேன். ஆனால் நமச்சிவாயத்தின் கலகலப்பான பேச்சில் கேட்கும் போது தனி சுவாரசியம்தான்.

‘அப்போ கற்காலத்தோடு இந்த பயணம் முடிந்துவிடுமா?’

‘முடியனும். அப்புறம் ice-age வந்துவிடும். அதற்கு முன்னால் நாமெல்லாம் நடக்கும் விலங்குகளாக இருந்திருப்போம். குகைகளில் வாழ்ந்துகொண்டு, கூட்டமாக வேட்டையாடிக் கொண்டு, நெருப்பில் வாட்டி தின்றுகொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டு, நாகரிக புரட்சியெல்லாம் அப்புறம்தான்’ சற்றே நிறுத்திவிட்டு புன்னகைத்தார். ‘நியாண்டர்தல்கள் அழிவும் நம்முடைய உலகப் பயணமும் ice-age ஒட்டித்தான் நிகழ்ந்தது. இந்தக் கல்லைக் கையாளும் நுட்பம் மட்டும் அவர்கள் கைவரப் பெற்றிருந்தால் என்னவாகியிருக்கும் யோசித்துப் பார். அவனல்லவா நம்மை அழித்திருப்பான்’

‘ஹ… புரஃபசர்… இந்த போர்டல் செட்டப் எல்லாம் சும்மா பொழுதுபோக்கு ஃபன்தானே. நீங்கள் ஏன் பயமுறுத்துகிறீர்கள்’

பாலியோலித்திக் (paleolithic) பகுதியில் நுழையும்போதுதான் கவனித்தேன் எல்லா ஸ்டேஜ்களுக்கும் ஒரே ஒரு வாயில்தான் இருந்தது. கதவைத்திறந்து கொண்டு அதன் வழியே சென்றால் அடுத்த ஸ்டேஜ் வந்துவிடுகிறது. அதற்கு பிறகும் ஒரே ஒரு வாயில்தான். வந்த வழியென்று எதையுமே காணோம்.

‘இந்த போர்டலின் அமைப்பே ஒரு தினுசா இருக்கு புரஃபசர். காலகிரமத்தில் பின்னோக்கி போய்க்கொண்டே இருக்கும்போது அந்த சூழலின் உண்மைத்தனம் கூடிக்கொண்டே வருவது போலிருக்கிறதே’ ‘

‘ஹ! கண்ணாடிக் கூண்டுக்குள்ளேயோ, பிரம்புத்தடுப்புக்கு பின்னாடியோ இருக்கறதப் பாத்து, போர்டில் எழுதியிருக்கறப் படிச்சா என்னப் புரியும் உனக்கு? சொல்லு… இந்தக் கல் ஏன் இப்படி முக்கோண வடிவில் இருக்குன்னு சொல்லு பாப்பம்… நமக்கு இப்ப எல்லாமே சூப்பர் மார்கெட்ல டப்பால்ல அடச்சு கொடுக்கிறத நம்ம பாட்டன் பூட்டன் எப்படி தானா உருவாக்கியிருப்பான்னு புரியுதா… இந்த மாதிரி Portal வடிவமைப்பு ரொம்ப புதுசுதான். மெய்நிகர் உலகின் உருவகம். ஆனால், அப்படியே ரிவர்ஸ் எவல்யூஷன்ல அமைத்திருக்கிறார்கள் பார்த்தாயா” சொல்லிவிட்டு என்னைப் பார்த்து சிரித்தார்

“லேசா தலை சுற்றுகிற ஃபீலிங் வருகிறதா புரஃபசர். பேசாமல் திரும்பிவிடலாமா”

விநோதமாகப் என்னைப் பார்த்தவர், ‘போர்டல் பயணங்கள் எப்போதும் ஒருவழிப் பாதைதான் பையா. பரிணாம வளர்ச்சி போல. முழுசும் ஒரு ரவுண்டு பாத்துவிடலாம் வா’ என்றார்.

‘ஒன்று கவனித்தாயா… இந்த போர்டலின் தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய தொழில்புரட்சி பற்றிய விவரங்கள்தான். தற்கால மனித நாகரிகத்தின் சுவடுகளை ஆவணபடுத்த வேண்டுமென்றால் இந்த ஒட்டுமொத்த மியூசியம் போல இரண்டு பங்கு கூட செய்ய வேண்டும். ஜெனிடிக் இஞ்சினியரிங் சாத்தியபட்டதற்கு அப்புறம் நாமெல்லாம் ராட்சதர்கள் ஆகிவிட்டோம்’

எத்தனை வகுப்புகளில் இவற்றைப் பற்றி பேசியிருக்கிறார். எத்தனை பிரசன்டேஷன்கள், பேப்பர்கள்.. இன்னமும் அலுக்காமல் பேசிக் கொண்டிருக்கிறாரே என்று நினைத்து புன்னைகத்தேன்.

“மனித நாகரிகத்தின் முழு பயணத்தையும் பார்த்துவிட்டோம்.. ‘ நமச்சிவாயத்தின் குரலில் அளப்பரிய சந்தோஷமிருந்தது. ‘வா! அடுத்து என்ன இருக்கிறது எனப் பார்த்துவிடலாம்’

‘அடுத்து என்ன இருக்கப் போகிறது புரஃபசர்? எக்சிட்தானே’ என்றேன்.

சந்தேகமாக என்னைப் பார்த்துவிட்டு ‘அப்படி இருந்தால் இது மொத்தமும் முட்டாள்தனம். fake செட்டப். நேர விரயம் எனக்கு’ என்றார் வெறுப்போடு.

‘ஹ! நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’

அடுத்த ஸ்டேஜ் சுத்தமாக துடைத்து வைத்தாற்ப்போல இருந்தது. அதன் முடிவில் இருந்த கதவைப் பார்த்தபடிக்கு இரண்டு பேரும் நின்றுகொண்டிருந்தோம்.

‘இதென்ன காலி ரூம் போலிருக்கு? போர்ட்டல் பயணம் முடிஞ்சிடுச்சா? கதவைத் திறந்து வெளியில் போக வேண்டியதுதானே புரஃபசர்?’

மெதுவாக புன்னகைத்த புரஃபசர்.

‘இதற்கு மேல் போனால் உறை-பனிக் காலத்தில் போய் சாகவேண்டியதுதான். இயற்கை பேரிடரிலிருந்து மீண்டு வந்த மூதாதையர் இங்குதான் தங்கள் நாகரித்தை தொடங்கியிருக்கிறார்கள்’

‘அப்போ?’

”பொறு! அந்தக் பக்கமிருந்து யாரேனும் வருவார்கள். அப்போது அவர்கள் பயணத்தில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான்’

திரும்பி என்னை புன்னகையோடு பார்த்து

‘உண்மையான வடிவமைப்பு. இப்படித்தானே பரிணாம வளர்ச்சிக்கான பின்னோக்கிய பயணம் இருக்க முடியும்… இல்லையா…. இங்கேயே உக்காந்து ஒரு கல்லை எடுத்து செதுக்கிப் பாக்கனும்னு தோணுது எனக்கு. ஒருவேளை நமது மூதாதையருக்கு நாம் அளிக்கும் தொடக்கமாக இருக்கலாம் அது’

தரையில் கிடந்த கற்களை எடுத்து மாதிரி பார்க்க ஆரம்பித்தார்.

கல்நாகம் – இரு கவிதைகள்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.