ஸ்ரீதர் நாராயணன்

துளிகள் – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

ஈர விறகுகள் ஊறிப் பெருத்து
வெடித்து எரிகின்றன,
விரிசல்கள் வழியே
இசை ஒன்றை எழுப்பிக் கொண்டு.

உருட்டிக் கொண்டு வரப்பட்ட
உடல் மழுங்கிய கூழாங்கற்கள்
நதியின் மடியில்
புரண்டு எழுகின்றன,
மலை முகட்டுகளை
எதிரொலித்துக் கொண்டு.

பருவ மாற்றத்தை
பழகிக் கொண்ட
தடித்த மரவுச்சியிலிருந்து
பழுத்து உதிரும் இலை,
காட்டின் பரிணாமத்தை
மாற்றி அமைக்கிறது.

வடிந்தது போக ஒதுங்கிய
மழைநீரில் நொதித்த கூரை
சொட்டிக் கொண்டிருக்கிறது
துளித்துளியாக.

சர்ப்பம் – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

ஒளிரும் மேலுடல் மினுக்க
நெருஞ்சி முட்புதர் ஊடே ஊர்கிறது.
சுற்றி அணையும் சுவர்கள்
நெருக்குந்தோறும்
விரிவடைகின்றன அதன் மூலைகள்.
கூட்டின் அமைதி பொழுதெல்லாம்
நச்சுப்பை முடைந்து
விடம் செறிகின்றது.
வால் குலைத்து
போகும் தடமெல்லாம்.
பற்றி எரிகிறது காடு.
கை பற்றி ஏறி வந்து
தோள் சுற்றி
முறுக்கிக் கொள்கிறது.

சுடர் நெருப்பென நாக்கு நீட்டி
தலையென நிலை கொள்கிறது.

வரம்புகளற்ற அகண்ட நிசப்த வெளியில்
தன் வால் கவ்விச் சுருண்டு உறங்கும்
சர்ப்பம்.

பேரமைதி – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

சரவிளக்கொளியால் மெருகேற்றப்பட்ட
அகண்ட அரங்கத்தில்,
நறுவிசாய் உடுத்திய
கனவான்களும் குணவதிகளும்
சீரான வரிசையில்
தூசியற்ற தரைவிரிப்புக்கு நோகாதபடி
ஊர்ந்து செல்கிறார்கள்,
கரம் பற்றியும், மெலிதாக கட்டியணைத்தும்,
ஆறுதல் சொற்களை அளந்து பரிமாறியபடி.

பேரமைதியை குலைத்தபடி
வெடித்து கிளம்புகிறது
ஓர் அழுகைக் குமுறல்,

மலர் ஜோடனையுடனான மரப்பெட்டியினுள்
லினன் விரிப்பின் மேல்
நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுக் கிடந்தவரை
இரத்தமும் சதையுமாக
இழுத்து வெளியில் போட்டது.

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைபயிலும் வேர்கள்

– ஸ்ரீதர் நாராயணன் –
statue_of_liberty

பத்தாண்டுகளுக்கு முன்னர் சில காலம் ஊர் சுற்றும் பிழைப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அப்போது அமெரிக்காவின் தென்கிழக்கு முனையின் கடற்கரை நகரமான மயாமி பீச்சிற்கு (Miami beach) பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருந்தது. இரண்டு வாரப் பணி இழுபட்டு ஒன்றரை மாதங்களாக அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. சுற்றுலா நகரத்திற்கான அத்தனை இயல்புகளையும் கொண்ட, பலதரப்பட்ட மக்கள் சங்கமிக்கும் ஊரில், எனக்கு ஏற்பட்ட முதல் உணர்வு நானொரு அந்நியன் என்பதுதான். அயலகத்தனான எனக்கிருந்த ஒரே அனுகூலம் ஆங்கில மொழி. ஆனால் அங்கே பெரும்பான்மையோரின் மொழி வழக்காக ஸ்பானிஷ்தான் இருந்தது. முகமன் உரைக்கும் முறையிலிருந்து, உணவுப் பழக்கங்கள், மொழிவழக்கு, கலாச்சார மாற்றங்கள் எனப் பலவகையான அலைக்கழிப்புகளைப் பற்றி அலுவலக சகா மெக்ஸிகர் ஒருவரிடம் புலம்பியபோது அவரும் அதைப் போன்ற உணர்வுகளையே வெளிப்படுத்தியது ஆச்சர்யமாக இருந்தது. மூன்றில் இரண்டு பங்கு இஸ்பானியர்களைக் கொண்ட நிலப்பகுதியில், மெக்ஸிகர்களின் கலாச்சார வேறுபாடுகள் பற்றி சிறிது புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு தூரதேசத்தைப் பற்றிய நமது கணிப்புகளும், புரிதல்களும் பெரும்பாலும் தகவல்கள் அடிப்படையில் நிகழ்கின்றன. அத்தூரத்தை நாம் கடந்து செல்லும்போது நமக்குக் கிடைக்கும் காட்சிப் புலன்களும், அனுபவங்களும் முற்றிலும் வேறாக அமைகின்றன. தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவரை, ஓர் அமெரிக்க நகரில் சந்திக்க நேர்ந்தது. தன்னுடைய சில நாட்கள் வாசம், தனக்கு அமெரிக்க நிலப்பரப்பையும் அரசியலையும் பற்றிய புதிய புரிதல்களை, தான் உருவகித்து வைத்திருந்த கருத்துகளுக்கு மாறானதொரு பிம்பத்தை காட்டுகிறது எனச் சொன்னார். புத்தகங்களும், ஊடகங்களும் வழியே நமக்கு வந்து சேரும் தகவல்களுக்கும், நாம் நேரிடையாக சென்றடையும் அனுபவங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. அ முத்துலிங்கம், தன்னுடைய வாழ்வில் பெரும்பாலான காலத்தை பயணங்களிலும், புதிய நிலங்களிலும் கழித்திருப்பதால் ஒரு நிலத்தின் வேர்கள் பிறிதொரு நிலத்திற்கு பழக்கப்படுவதன் நுட்பங்களைப் பற்றி தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்கிறார். க்றிஸ் ஆர்னேட் போன்றோர் தம்முடைய புகைப்பட பயணத்தினூடே காட்டும் நிலம் சார்ந்த கலாச்சார மானுடவியல் போன்றதொரு பார்வை அ. முத்துலிங்கத்தின் படைப்புகளில் நமக்கு கிடைக்கிறது.

முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி‘ சிறுகதை புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வியலை மூன்று காலக்கட்டங்களில் காட்டுகிறது. இலங்கையிலிருந்து அமெரிக்க பல்கலையில் கல்வி கற்க வரும் மதி, தன்னுடைய கல்லூரிப் பருவத்தின் முதல் மூன்றாண்டுகளை அலைமோதும் அனுபவங்களோடு கடந்து செல்கிறாள். நட்புகள் தேடி வருவதும், விட்டு விலகுவதுமாக இருக்கிறது. குறிப்பாக ஆண்கள். நட்புக்காக அவளுக்கு அதிக பரிச்சயமில்லாத கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்கிறாள். பென்சீன் அணு அமைப்பு பற்றி விளக்கிச் சொல்கிறாள். நன்றி நவில்தல் தினத்தன்று நண்பனின் வீட்டிற்கு விருந்துக்கு சென்று அவன் பெற்றோருடன் பழகுகிறாள். உண்மையில் இச்சம்பவங்கள், இத்தகைய கிரமப்படி நடந்து வந்தால், அவர்களிடையேயான உறவு இறுகி அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது எனக் கொள்ளலாம். ஆனால் மதி விஷயத்தில் இச்சம்பவங்கள் எல்லாம் வெவ்வேறு ஆண்களுடன் நடக்கிறது

இலங்கையைப் போன்ற போர்ச்சூழலிலிருந்து மீண்ட வியட்நாமைச் சேர்ந்த லான்ஹங் நண்பனாக வாய்த்ததும், மதியின் புலம்பெயர்ந்த வாழ்க்கை இரண்டாம் கட்டத்திற்கு செல்கிறது. கூடு அமைத்து நிலை கொள்ளும் பருவம். வேர்கள் நிலைகொள்ளும் இளம் பருவ விருட்சம் போல், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வடிவமைத்துக் கொள்கிறார்கள். முதல் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் எதிர்நோக்கும் பெரும் சிக்கல் அது. தங்களுடைய இளமையின் பெரும்பகுதியை, நேரத்தை, உழைப்பை செலுத்தி அவர்கள் புதிய இடங்களில் தங்களை நிலை நிறுத்துகிறார்கள்.

மூன்றாவது பருவமாக கிளை பரப்பி மேலெழுவதில்தான் லான்ஹங்கின் வீர்ய குறைபாடு தெரிய வருகிறது. கூடு என்பது வெறும் வீடு மட்டுமல்ல. குடும்ப அமைப்பாக விரிந்து பெருகுதலும் கூடு கட்டுவது போலத்தான். தங்கள் எதிர்காலத்திற்கான உத்திரவாதமாக வீடு வாங்குவதை விட, செயற்கை கருத்தரிப்பின் வழியே குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். செயற்கை முறையில் கருத்தரிப்பது முழுவதும் உத்திரவாதமான சிகிச்சை முறை இல்லை. ஆனால் மதியின் விஷயத்தில் அது அவளுக்கு சித்திக்கிறது. இலங்கைக்காரருக்கும், வியட்நாமியருக்கும் ஆப்பிரிக்கர் உதவியுடன் குழந்தை வரம் வாய்க்கிறது.

அமெரிக்கக்காரி சிறுகதையில், மதியின் பெண்ணையும் சேர்த்து மூன்று அமெரிக்கக்காரிகள் இருக்கிறார்கள். இலங்கையில் ஒரு கிராமப்பகுதியில் வடிவாக சேலையை வரிந்து உடுத்தி, கொண்டை போட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்கச் செல்லும் மதியின் அம்மாவால்தான் மதியினுள் அமெரிக்கக்காரியாகும் கனவு விதைக்கப்படுகின்றது. தன்னுடைய குழந்தை பிறந்ததும் மதி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதும்போது ‘உன் வயிற்றில் நான் இருக்கும்போதே, என் வயிற்றில் கருமுட்டைகள் இருந்திருக்கின்றன. அப்படியானால் இவளும் உன் வயிற்றினிலிருந்து வந்தவள்தான்‘ என்கிறாள். அம்மாவிடமிருந்த அக்கனவு மதி வழியே அவள் பெண்ணாக பிறந்து வருகிறது.

இக்கதை நிலவும் காலத்தில் அமெரிக்க ஊடகங்களில் ஓரளவுக்கு இலங்கைப் போர் பற்றிய பிரக்ஞை இருந்தது. அப்போதைய சில அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில், இலங்கைப் பின்னணி கொண்ட பாத்திரமாக யாரையாவது காட்டுவார்கள். பெயரளவுக்குத்தான் என்றாலும், அமெரிக்க ஊடகங்கள் அதை சிறிதளவேனும் செய்து வந்தன.

மதி தன்னுடைய தாயாருக்கு எழுதும் கடிதத்தில் தவறாமல், ‘செத்துப் போய்விடாதே’ என்று எழுதுவது, அம்மாவுடனான நெருக்கத்தைக் காட்டும் செய்தி என்பதை விட, இலங்கைப் போரில் அவள் இழந்த சகோதரர்களைப் பற்றிய வலி எனப் புரிகிறது.

மெக்சிகோக்காரியோ, கனேடியக்காரியோ இல்லாமல் அது ஏன் அமெரிக்கக்காரி? அமெரிக்க பெருநிலத்தில் அமெரிக்கர் எனும் இன அடையாளம் என்பது எப்போதும் கலவையானதாகவே இருந்து வருகிறது. பூர்வகுடிகள்கூட தங்களை அமெரிக்கர் எனும் நீரோட்டத்திலிருந்து தனித்துக் காட்டிக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறார்கள்.

இந்தக் கதையில் தமிழ்ப்பெண், வியட்நாமியன், ஆப்பிரிக்கன் என்ற கலவையில் பிறக்கும் பெண் – asian, african, mongoloid என்ற மூன்று ethnic groupகளுக்குப் பிறந்து, caucasians பெரும்பான்மை வாழும் மண்ணில் தானும் ஒருவராய் ஆகிறாள். இது இங்கிலாந்தில், இந்தியாவில், ஸ்வீடனில், எங்கும் சாத்தியம். ஆனால் அவள் அந்த மண்ணின் வரலாற்றுக்கு உரியவளாய் ஏற்றுக் கொள்ளப்படுவாளா? வேறெங்கும் இல்லாத அந்த வாய்ப்பு அமெரிக்காவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சுயநலத்துக்காக, பணத்துக்காக, லாபத்துக்காக என்றே வைத்துக் கொள்ளலாம். ஒரு பெரும்பொய் என்றும், பிரச்சாரம் என்றும்கூட வைத்துக் கொள்ளலாம். உலக வரலாற்றில் எத்தனை தேசங்கள் இனம், மொழி, நிறம், பிறப்பு, சமயம் அடிப்படையில் இல்லாத குடியுரிமையை அளித்து பிறரை அழைத்தன? அந்த ஒரு அழைப்பு – சுதந்திர தேவி சிலைக்கு பணம் திரட்ட எம்மா லாசரஸ் எழுதிய கவிதை இது – இப்போது அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது

“வைத்துக் கொள்ளுங்கள், தொல்நிலங்களை, உங்கள் புரட்டுப் பெருமைகளை!” கூவுகிறாள் அவள்

மௌன இதழ்களில், “என்னிடம் கொடுங்கள், உங்கள் சோர்வுற்றவர்களை , உங்கள் ஏழைகளை,

சுதந்திர மூச்சு விடக்காத்திருக்கும் நெருக்கிய கூட்டத்தை,

உங்கள் நிரம்பிய நிலங்களில் கைவிடப்பட்ட அபலைகளை,

வீடில்லாதவர்களை, புயலால் சூறையாடப்பட்டவர்களை என்னிடம் அனுப்புங்கள்,

அப்பொற்கதவிற்கு அருகே என்னுடைய விளக்கை நான் உயர்த்துகிறேன்!”

சிரியா, ஈராக் போன்ற அரபு தேசங்களில் இருப்பவர்களுக்கு தம் நாட்டை அழித்தது அமெரிக்காதான் என்று தெரியாதா, தம்மை வெறுப்பவர்கள்தான் அமெரிக்காவை ஆள்கிறார்கள் என்று தெரியாதா? இருந்தாலும் அங்கே குடியேற நினைக்கிறார்கள்.  கனவின் வலிமை அது.

மதி தன்னுடைய அமெரிக்கக்காரியாகும் முறைமையில் கடைசியாக தன்னுடைய அம்மா, தான் மற்றும் தன்னுடைய மகளின் சரிவிகிதமான கலவையை கண்டறிகிறாள். ஒருவேளை அவளுடைய பெண் இலங்கைக்கு மீண்டும் சென்று தனது வேர்களை அங்கே நடைபயிலவும் செய்யலாம்.

oOo

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

நயாகரா 2

ஸ்ரீதர் நாராயணன்

மலையத்தனை நீர்த்தாரையை
அருகணைந்து தரிசிக்க
பெரும்படகில் குழுச் சவாரி.

நனையாத நெகிழி ஆடையும்,
தருணங்களைத் தவறவிடாமலிருக்க
பதிவுக்கருவிகளுமாக,
மனிதக்கொத்துகள்.

மலையருவி புரண்டுவிழ
புகைமூட்டமென மேலெழுகிறது
சாரல் நீர்த்திரை.

ஆற்று நீர்ப்பரப்பில்
துடுப்பு நடைபோட்டபடி
கடந்து செல்கின்ற,
இறக்கையில் இருகோடுகள் கொண்ட
வளைய மூக்கு கடற்பறவை ஒன்று,
புகைத்திரையினூடே
மலைமுடியைத் தொட்டு மீள
எழும்பிப் பறக்கின்றது.

*ring billed gull – வளைய மூக்கு கடற்பறவை