ஹனீஃப் குரேஷி எழுதிய The Buddha of Suburbia நாவலின் தொடக்கம் இது:
“My name is Karim Amir, and I am an Englishman born and bred, almost. I am often considered to be a funny kind of Englishman, a new breed as it were, having emerged from two old histories”
இரு கலாச்சார அடையாளங்கள் இணையும்போது ஒன்றை மற்றொன்று ஆதிக்கம் செய்யத் தொடங்கும் என்றாலும் முற்றிலும் புதுவிதமான அடையாளம் உருவாவதே அதன் இயல்பாக அமையும். மிகக் கச்சிதமாக அக்கருவைத் தொட்டுத் தொடங்கும் ஹனீஃப் குரேஷியின் நாவல் பிறந்த ஊரைக் கைவிட்டு புது நிலத்தில் வேரூன்ற நினைப்பவர்களைப் பற்றிய நல்லதொரு நாவலாக அமைந்திருந்தது.
அ.முத்துலிங்கம் எழுதிய ‘அமெரிக்கக்காரி‘ எனும் சிறுகதை இதே போன்ற – ஒரு ‘கிட்டத்தட்ட’ தனமையைப் பற்றிய கச்சிதமானத் தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது.
“ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.”
ஆம், முழுக்க முழுக்க இந்த அமெரிக்கக்காரியின் பார்வையில் சொல்லப்படும் இந்தக் கதையில் வரும் இலங்கைப் பெண்ணும் ‘கிட்டத்தட்ட’ அமெரிக்கக்காரிதான் என்றாலும் அவள் தன்னை ஒரு புது இனம் என்பதைக் கண்டுகொள்ள நெடுகாலம் ஆகிறது. ஆங்கில புத்தகங்கள் படிக்கத் தொடங்கியதால், அதில் வரும் அமெரிக்க சாகச கதைகளை பள்ளியில் சொல்லிக் கொண்டிருப்பதால், பிறந்த நாடான இலங்கையில் சிறுவயது முதலே அமெரிக்கக்காரி என அழைக்கப்பட்டவள் அமெரிக்கா எனும் நாட்டைப் பற்றிய யதார்த்தத்தை சற்று வயதான பின்னரே தெரிந்துகொள்கிறாள். அவளைப் பொருத்தவரை நினைவு தெரியாத நாள் முதலே அமெரிக்கக்காரி எனும் அடையாளத்தை அவள் பெற்றுவிட்டாள். அது ஒரு அழியா மச்சமாக அவளோடே வளர்ந்தது. தான் ஒரு அமெரிக்கக்காரி என நம்பத் தொடங்கும் பத்து வயதில் அவளது தாய் அமெரிக்காவே போனாலும் அவள் இலங்கைக்காரி தான் எனப்போட்டு உடைத்ததில் மனம் நொந்துப்போகிறாள்.
அமெரிக்கக்காரி ஆவதற்கான அவளது முயற்சிகள் அவள் அமேரிக்கா வந்தபின்னும் தொடரத்தான் செய்கின்றன. வலிய வந்து பழகும் நண்பர்களிடமிருந்து அவள் இலங்கைக்காரி போல தலைகுனிந்து விலகுவதில்லை. பேசுகிறாள். காப்பி குடிக்கிறாள். வெளியே செல்கிறாள். அவர்கள் அவளை அடைய எடுக்கும் பிரயத்தனங்களுக்கு ஓர் எல்லை வரை வளைந்துகொடுக்கிறாள். இரவு வீட்டுக்கு அழைக்கும்போது அந்த உறவு ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. அமெரிக்கக்காரி என்பதை மானசீகமான எல்லையாக்கி சோதித்துப்பார்ப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. பயமிருப்பதாகவும் தெரியவதில்லை. ஹனீஷ் குரேஷி எழுதுவது போல அவள் கிட்டத்தட்ட அமெரிக்கக்காரி மட்டுமல்ல, கிட்டத்தட்ட இலங்கைக்காரியும்தான்.
கல்லூரி நிகழ்ச்சியில் நாட்டியம் ஆடிக்காட்டும்போது கூடவே தந்திக்கருவி வாசித்த வியட்நாமிய மாணவன் நண்பனாகிறான். என்னை ஆச்சர்யப்படுத்து, எனும் கேள்வி மூலம் ஒரு இதமான நண்பனாகும் அவன் மதிக்கும் எல்லைக்கோடுகள் அவளுக்குப் பிடிக்கிறது. அவன் கண்ணியமாகக் கைபிடிக்கும் வேளையில் அவள் எல்லை மீறி முத்தமிடுகிறாள். செளஜன்யமான உறவு மலர்கிறது.
மாணவர் விடுதியை விடுத்து தனியறை எடுத்து இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகின்றனர். அவன் வேலைக்குப் போகத் தொடங்கியபோதும் அவள் முனைவர் பட்டத்துக்குத் தயார் செய்கிறாள். கடுமையான வேலை. வேலைக்கு இடையே ஒரு குழந்தை வேண்டுமென இருவரும் முயல்கின்றனர். மிக இயல்பாக ஆசிய நாட்டு மக்களின் மன இயல்பை கதாசிரியர் தொடர்கிறார். இனம் புரியாத இடத்தை நோக்கி அவர்களது உறவு செல்லவில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத்தொடங்கிய சில காலத்தில் அவர்களிடையே ஏற்படும் இடைவெளி குறைந்து அவர்கள் மேலும் நெருங்க ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு வழிமுறையைக் கைக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஆசியர்கள் குடும்ப வாழ்வின் அடுத்தகட்டத்தை தங்கள் பிள்ளைகள் மூலம் தொடங்குகின்றனர். தனிமனித வெளி என்பது பல்கிப் பெருகும் குடும்பச்சங்கிலி எனும் அமைப்பின் ஒரு அங்கம் மட்டுமே என்பதை உணர்கின்றனர். மேற்கத்திய சமூகம் குடும்ப அமைப்பை தனிமனித வெளியினுள் ஊடுருவலாகவும் இடையூறாகவும் பார்க்கிறது. சேர்ந்து வாழும் இருவருக்கு குறுக்கே வரும் ஒரு இடைவெட்டாக மதிப்பதினால் தனிமனித வெளிக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை மீறியது எதுவும் இல்லை என்றாகிறது. கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.
வியட்நாமிய காதலனின் விந்து குறைபாடு பெரு வெடிப்பாக அவர்களது உறவைப் பிரிக்கவில்லை. அவர்களை மேலும் நெருங்கச் செய்கிறது. குழந்தைத் தரமுடியாதத் தன்னைவிட்டு விலகும் அவன் அளிக்கும் உரிமையை அன்பால் மறுக்கிறாள். வீடு கட்டச் சேர்த்திருக்கும் பணத்தைக்கொண்டு மகப்பேறு சிகிச்சை செய்யச் செல்கிறாள். இதைச் சொல்லும்போது அமெரிக்காவில் கிளிண்டன் – மோனிகா விவகாரத்தை அ. முத்துலிங்கம் சொல்கிறார். காலக்குறிப்பு போலத் தெரிந்தாலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கத்தை இலங்கைக்காரி-வியட்நாமிய காதலனின் தியாகத்தை ஒப்பிடும் தராசாகவே வாசகருக்குத் தோன்றும்படி எழுதியிருக்கிறார். சம்பந்தமில்லாத தகவல்களை எழுதி கதையை ரொப்புகிறார் எனும் குற்றச்சாட்டு பொய்க்கும் கணம் இது. ஒரு சிறுகதையாசிரியர் சகலவிதமான தகவல்களையும் விட்டுவிட்டு இந்த குறிப்பிட்ட நிகழ்வை ஏன் இந்த இடத்தில் குறிப்பிடுகிறார் என்பதை சேர்த்துப் பார்த்தால் கதை அடிநாதமாகப் பேசும் விஷயத்தை நாம் சென்றடையலாம்.
கருவைச் சுமக்கும் காலம் முழுவதும் அவளது அம்மாவுக்குக் கடிதம் எழுதுகிறாள். குழந்தை வளருகிறது, நீ செத்துப்போய்விடாதே என்பதுதான் ஒவ்வொரு கடிதத்தின் சாரமும். அதுவும் சாதாரணக் குழந்தையல்ல. அமெரிக்கக் குழந்தை என்பது கடிதத்தின் அடிநாதம். யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான்.
ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.
3 comments