அ.முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்கக்காரி‘, அமெரிக்காவில் குடியேறத் துடிக்கும் ஒரு இலங்கைப் பெண்ணின் கதை.
புலம்பெயர்தலை இரண்டு வகையாகப் பார்க்கலாம். முதல் வகை பணி நிமித்தமாக அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு. இரண்டாம் வகை உயிர் பிழைக்க வழி தேடி எந்த சுகங்களையும் கண்டிராது, உயிர் வாழ வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு. இந்தக் கதையை என்னால் அந்த இரண்டு கோணங்களிலும் பார்க்க முடிகிறது.
முதல் வகையின் புரிதல் முதலிலும் இரண்டாம் வகையின் புரிதல் இரண்டாவதுமாக.
“ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.”
முதல் காதலன் ஒரு நாள் இரவு தன்னுடன் வந்து தங்கும்படி சொல்ல, அவள் மறுக்கிறாள். விலகிச் செல்கிறான். இரண்டாம் காதலனுக்கும் அதே காரணம் தேவைப்படுகிறது அவளைப் பிரிய. மூன்றாமானவனுக்கும் அதே நிலைதான். அதற்கான காரணத்தை ஆசிரியரே சொல்லிவிடுகிறார்.
“இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள்”
ஆனால் அவளுக்கோ தான் எப்படியாவது ஒரு அமெரிக்கக்காரியாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஆழ் மனதில் பதிந்து கிடக்கிறது. சிறுவயது முதல். தன் தாய் எத்தனை விளக்கம் கூறியும் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏமாற்றம் அடைகிறாள்.
இடையே தான் ஒரு அமெரிக்கக்காரி இல்லை இலங்கைக்காரி என்று விரக்தியோடு சொன்னாலும் (நான் அங்கேதான் அமெரிக்கக்காரி, இங்கே வெறும் இலங்கைக்காரிதான்), இறுதியில் உண்மையான அமெரிக்கக்காரி யார் என்பதை தன் வயிற்றிலிருக்கும் குழந்தை மூலம் அறிகிறாள், அது வியட்நாமிய ஆணும், இலங்கைப் பெண்ணும், ஆப்ரிக்க உயிரணுவுமாக இருந்தாலும்கூட. அந்த மகிழ்ச்சியில் தன் தாய்க்கு ஒரு கடிதமும் எழுதுகிறாள். “எனக்கு ஒரு அமெரிக்க குழந்தை பிறந்திருக்கிறது” என்று ஒற்றை வரியில், அது ஆணா பெண்ணா என்பதைக்கூடச் சொல்லாமல். அவளைப் பொறுத்தமட்டில் அது ஒரு அமெரிக்கக்காரி. அவ்வளவுதான். அதுதான் அவள் விரும்பியதும்.
“பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள். ‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல் இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.”
கதை இறுதியில் ஆசிரியர் சொல்வது போலவே அந்தக் குழந்தை இருக்கும். ஏனென்றால் அது “அமெரிக்கக்காரி“. அதுதானே அவளுக்கும் வேண்டும்.
கலாச்சாரம் என்பது “jet lag” ஐ போல் சில நாட்களில் சரியாவதும், கைகடிகாரத்திலுள்ள முள்ளை மாற்றி வைப்பது போலவும், செல்லும் இடத்திலுள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடையை மாற்றிக் கொள்வது போலவும் அல்ல. அது நம் உடன் பிறந்தது. சாகும்வரை நம் அடையாளமாய் நம் உடன் வந்து கொண்டேதான் இருக்கும், sweet ஐ candy என்றாலும், lift ஐ elevator ஆக்கினாலும். அவள் பிறப்பால் ஒரு இலங்கைக்காரி. இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் அவள் அவ்வாறே அறியப் படுவாள். அதை அவளால் அழிக்க முடியாது. அதுதான் சரியும் கூட.
ஊரில் நான் வெள்ளைக்காரத் துரையாக இருக்கலாம். ஆனால் இந்த பெல்ஜிய நாட்டில் நான் ஒரு இந்தியன். தமிழன். அது போலத்தான் அமெரிக்காவில் இருந்தாலும் அவள் இலங்கைக்காரிதான். நான் இங்கு வந்து ஜலதோசத்தின்போது மூக்கை உறிஞ்சுவதற்குப் பதில் சிந்தினாலும், தோழிகளைப் பார்க்கையில் கன்னத்தில் மூன்று முத்தங்கள் கொடுத்து வரவேற்றாலும், நண்பன் தோளில் கை போட்டு நடப்பதைத் தவிர்த்தாலும், பிறந்து ஒரு வயது கூட நிரம்பாத கைக்குழந்தையைத் தனி அறையில் படுக்க வைத்துவிட்டு மனைவியுடன் மற்றொரு அறையில் படுத்துறங்கினாலும், பள்ளி செல்லும் சிறுமி தன் உடன் பயிலும் சிறுவனிடம் நடு விரலை உயர்த்திக் காண்பிப்பதைக் கண்டும் காணாமல் சென்றாலும் நான் இந்தியன்தான். ஒருபோதும் பெல்ஜியன் ஆக முடியாது. அதுதானே எதார்த்தமும் கூட?
மதி மேற்கத்திய கலாச்சாரத்திற்குத் தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள். மாற்றிக்கொள்ள முடிந்தும் ஏதோ ஒன்று அவளைத் தடுக்கிறது. அது அவள் வளர்ந்த விதம், வளர்ந்த சூழல் ஆக இருக்கலாம். ஆனால் தன்னுள் கனலாக எரிந்து கொண்டிருக்கும் “அமெரிக்கக்காரி” ஆசை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மாறச் செய்கிறது. என்னதான் மாறினாலும் அவளால் “அந்த” மாற்றத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கலாச்சார மாற்றத்தை முதல் முறையாகக் கடந்து செல்லும் பெண் (தலைமுறை) என்பதால்.
அதற்காக அவளுக்குக் கிடைக்கும் பரிசு, முதல் மூன்று காதலர்களை இழக்கிறாள். இறுதியாக அவள் தேர்ந்தெடுப்பது ஒரு “வியட்நாமிய” ஆண். ஏன்? அவளே சொல்கிறாள். “ஏய் இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணம் முடித்தாய்?” என்று அவன் கேட்பதற்கு அவள் அளிக்கும் பதில் “பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.” ‘துரத்தப்பட்டவள் துரத்தப்பட்டவனை முடிப்பாள்’ என்றும் முடித்திருக்கலாம். அவளின் எண்ணம் சரியாகத்தான் இருக்கிறது. லான் ஹாங்குக்கும் அதே எண்ணம் இருந்திருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.
மூன்று வயது சிறுவனை கட்டி வைத்தாலே சிசுவதை என்று கைது செய்யும் நாடு அமெரிக்கா. ஆனால் எப்போதும் போர், உயிருக்கு உத்திரவாதமில்லை, உடன் பிறந்த சகோதரர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள், மிஞ்சி இருக்கும் அம்மாவின் உயிரும் ஒவ்வொரு முறை கடிதம் எழுதும் போதும் “செத்து விடாதே” என்று சொல்லும் அளவுக்குத்தான். இப்பேற்பட்ட சூழலில் அவள் மனமுடைந்து போகாமல் அமைதியான சூழலில் வாழ நினைக்கிறாள். தன் அம்மாவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள். அமெரிக்கக்காரியாக முயற்சி செய்கிறாள்.
இந்த “அமெரிக்கக்காரி” மோகம் மதிக்குத் தானாக வந்ததாகத் தோன்றவில்லை. அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே தோன்றியதாக இருக்க வேண்டும், அம்மாவின் எண்ணமாக. தான் என்ன துன்பங்களை அனுபவித்தாலும் தன் மகளும் அவள் சந்ததியினரும் எங்காவது நல்ல சூழலில் அமைதியாக ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் மூலமாக.
இறுதியாக மதி பெண் குழந்தை பிறந்ததும் மிகுந்த சந்தோசத்தில் அம்மாவிடம் இவ்வாறு சொல்கிறாள், இவள் முழு அமெரிக்கக்காரி. உன்னையும் என்னையும் போல் குறுகிய வட்டத்திற்குள் போர் சூழலில் சிக்கித் தவிக்காமல், அமைதியான வாழ்க்கையை, உலக அறிவுடன், எதை எப்படி கையாள வேண்டும் என்ற அறிவோடு சுதந்திரமாக வாழ்வாள், என்று. இந்த “அமெரிக்கக்காரி” ஆசை என்பது மதியின் அம்மாவிடம் தோன்ற, மதி பாதி அமெரிக்கக்காரி ஆகிறாள். பின் இறுதியாக தன் மகளை முழு அமெரிக்கக்காரி ஆக்கி மகிழ்ச்சி கொள்கிறாள்.
oOO
அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்
அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைபயிலும் வேர்கள்- ஸ்ரீதர் நாராயணன்
அருமையான விமரிசனம் .கதையை உடனே படிக்கத் தூண்டியதால் உடனே
தேடிப் படித்துவிட்டேன். அருமையான கதை. இவரது பிற ஆக்கங்களையும் படிக்கவேண்டும் மிக்க நன்றி
அ முத்துலிங்கத்தின் கதை முத்து போல் பிரகாசிக்கிறது