அமிழ்தல்

காலத்துகள்

இருப்பதிலேயே தனக்கு பொருத்தமாக உள்ளதாக நினைத்திருந்த சட்டையை அணிந்து கொண்டு பேண்ட்டின் ப்ளீட்டை நீவி விட்டான். தலை வாரிக்கொள்ளும்போது ‘பங்க்’ கட் தனக்கு சரி வராதது குறித்த விசனமும், நேர்க்கோடு, பக்கவகிடில் எது தனக்கு எடுப்பாக உள்ளது என்ற வழக்கமான சந்தேகமும்.

வீட்டிலிருந்து வெளியே வந்து சந்துருவுக்காகக் காத்திருந்தான். இன்று தசரா சந்தையில் அவள் எதிர்பட நிறைய வாய்ப்புள்ளது என்ற எண்ணமே உற்சாகம் தந்தது. ‘என்னடா மூணு நாளா தினோம் தினோம் வேற வேற டிரஸ்ஸு’ என்றபடி சந்துரு சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தினான். இரண்டு வீடுகள் தள்ளி வசிக்கும் பேங்க் ஆபிசரின் மூன்று பெண்கள் கிளம்பத் தயாராகி அடுத்தடுத்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவன், ‘பார் சார்ட் மாதிரி நிக்கறாங்கடா,” என்றான். சேலை அணிந்திருந்த மூத்த பெண் ஜாக்கெட்டின் கைப்பிடிப்பையும் கொசுவத்தையும் நீவியபடி இருந்தாள், முகத்தில் வெட்கப் பூரிப்பு, கண்கள் தெருவைச் சுற்றி சுழன்று கொண்டிருந்தன.

தெரு முனையை அடையும்போது இறுதி வீட்டின் வாசலில் ‘தலைவர்’ வந்து நின்றார். செங்கல்பட்டிற்கு குடிவந்த இந்த பத்து வருடங்களாக அவரைப் பார்த்து வருபவனுக்கு அந்த மிகப் புகழ்பெற்ற தொப்பி, கறுப்புக் கண்ணாடி மற்றும் வேட்டி சட்டை எப்போதும் அணிந்திருக்கும் ஆசாமியை முதன்முதலில் பார்த்தபோது ஏற்பட்ட வியப்பு இப்போது இல்லாது போனாலும் அவரைக் காணும் முதல் கணம் ஏற்படும் துணுக்குறுதல் மட்டும் நீங்கவே இல்லை. தலைவர் காலமாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கடந்த பின்பும் இந்த ஆசாமி தலைவராக செங்கல்பட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவர் வீட்டின் கதவில் நிஜத் தலைவர் கையில் பேனாவுடன் சிந்தித்தபடி இருக்கும் பிரபலமான வண்ணப் புகைப்படம் இருந்தது. அதில் மிக வசீகரமாகத் தோற்றமளிப்பார். இந்த ஆசாமி உடைகளை மாற்றியெல்லாம்கூட தலைவரின் வசீகரத்தைப் பெறா முடியாவிட்டாலும், அவர் நடப்பது, சைக்கிளில் செல்வது எல்லாம் மிதப்பது போலவே இருக்கும். இத்தனை நாசூக்குடன் எந்த வேலைக்குச் செல்ல முடியும்? அவரின் உடைக்கு விழுந்தடித்து ஓடுவதெல்லாம் சாத்தியமும் இல்லை. வீட்டில் இருந்தபடி புறா வளர்த்தல், விற்றல் தவிர என்ன வருமானம் உள்ளது, எப்படி குடும்பம் நடத்துகிறார் என்பதெல்லாம் புதிர்தான்.

அவரைத் தாண்டிச் சென்றபின், ‘என்னடா இன்னும் இந்த ஆள் இப்படியே ட்ரெஸ் பண்ணிக்கறார், நைட்டாவது டிரெஸ்ஸ மாத்துவாரோ என்னமோ’ என்று இவன் சிரித்தபடிச் சொல்ல, ‘அப்பகூட கெடயாதுடா, முக்கியமா அப்பத்தான்’ என்று சொல்லி நிறுத்தினான் சந்துரு. இவன் சந்துருவைப் பார்க்க, ‘அவர் மட்டும்ல, அவர் வைப்பும் ரொம்ப பெரிய பேன்டா’ என்று சொல்லி கண்ணடித்தான். ‘அதுக்கு?’ என்று கேட்டவனைப் பார்த்து சந்துரு நமட்டுச் சிரிப்பு சிரித்தவுடன் இவனுக்கு விளங்கியது.

‘சும்மா ஒளராதடா’

‘சத்தியமாடா’

‘ஆமா நீ பாத்த’

‘இல்லடா முரளிண்ணண் சொன்னார்டா’

‘அவர் மட்டும் பாத்தாறாக்கும்’

பேசியபடி சின்ன மேட்டின் மீதேறி ராமர் கோவில் குளத்தினருகே வந்தார்கள். மறுமுனையில் இருந்த மேட்டுத் தெருவில் தசரா சந்தை களைகட்டத் தொடங்கி இருந்தது அங்கு ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த தற்காலிக ட்யூப் லைட்களின் வெளிச்சத்தில் தெரிந்தது. பொதுவாக மாலை நேரங்களில் அமானுஷ்ய உணர்வைத் தரும் குளமருகே இருந்த பெரிய ஆலமரமும் கூட அவ்வெளிச்சத்தில் அச்சுறுத்துவதாக இல்லை. மரமருகே அருகில் இருந்த மாவு அரைப்பு கிடங்கு மூடப்பட்டிருக்க அதன் திண்ணையில் சேட் அமர்ந்திருப்பதைப் பார்த்த சந்துரு
‘இவனப் பாத்தா சேட் மாதிரியே இல்லையேடா’ என்று சொல்ல, ‘டேய் சேட்னா சேட் மட்டும்தானாடா, முஸ்லிம் கூட வெச்சுப்பாங்க’ என்றான் இவன்.

‘என்னடா சொல்ற, நெஜமாவா’

‘ஆமாண்டா இவன் முஸ்லிம்டா பெரிய பணக்கார குடும்பம் போல, சின்ன வயசுல அப்பா, அம்மா செத்துட்டாங்க, அப்பறம் சொந்தக்காரங்க இவன வெரட்டிட்டாங்க’

‘யார்ரா சொன்னா?’

‘தெருல அப்படித்தான் பேசிக்கறாங்க’

சேட்டையும் கிட்டத்தட்ட தலைவரைப் போல் இவன் இங்கு குடி வந்ததிலிருந்தே பார்க்கிறான். உடலமைப்பிலோ, முகத்திலோ இத்தனை வருடங்களில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்று தோன்றியது. அதே கனிவான, முதிரா இளமை கொண்ட – எப்போது பார்த்தாலும் இருபதுகளைத் தாண்டாதது போல் தோற்றமளிக்கும் – முகம்,இவனை ஏமாற்றுவது ஒன்றும் கடினமல்ல என்று நினைக்கத் தோன்றும். சேட் பேசியோ, யாசகம் கேட்டோ இவன் பார்த்ததில்லை, ஆனாலும் எப்படியோ உணவு கிடைத்து விடுகிறது. மிக மெதுவாக இலையிலிருந்து கவளம் கவளமாக எடுத்து சேட் உண்வதை இவன் பார்த்திருக்கிறான். தொய்ந்து போன சட்டை லுங்கிதான் ஆடை,எப்போதும் மொட்டைத் தலைதான். யார் ஆடைகளை அளிக்கிறார்கள், முடி வெட்டுகிறார்கள் என்பதும் தெரியாது. அழுகையோ, சிரிப்போ, தனக்குத் தானே பேசிக்கொள்வதோ எதுவும் இல்லாமல் மிதமான நடையில் தெருக்களில் வலம் வருபவன், எங்கு வேண்டுமானாலும் உறங்கி விடுவான்.

மேட்டுத் தெருவை அடைந்தவுடன் ‘இந்த சைட்ல கம்மியாத்தான் கடங்க இருக்கும்டா’, என்று சொன்னவனை, ‘பரவால்ல, மொதல்ல இப்படி ஆரம்பிக்கலாம் வா, எல்லாம் தெரியும்’, என்று இடது புறம் திருப்பினான் சந்துரு. இவன் வீட்டிலிருந்து ஏழெட்டு நிமிடத்திற்குள் வரக்கூடிய மேட்டுத் தெருவின் இந்தப் பகுதிக்கு இவன் பெரும்பாலும் வருவதில்லை.. சிறிது தூரம் நடந்தவுடன் அம்பாஸிடர் கார் நிறுத்தப்பட்டிருக்க, அருகே நந்தியாவட்டை மலர்கள் பூத்திருந்த இரண்டு அடுக்குகள் கொண்ட அந்த வீட்டைக் கடக்கும்போது எப்போதும் போல் அசௌகர்ய உணர்வு. வகுப்பறை சூழலில் அவனுள் இருக்கும் தன்மதிப்பு இத்தகைய நேரங்களில் அனிச்சையாக ஆட்டம் கண்டு விடுகிறது. சில மாதங்களுக்கு முன் பொதுக் குழாயில் இருந்து குடத்தில் தண்ணீர் நிரப்பி தோளில் சுமந்து வந்துகொண்டிருந்தபோது அவள் எதிரே வந்தது நினைவுக்கு வந்தது.

‘போறும்டா அந்தப் பக்கம் போலாம்’, என்று திரும்ப, ‘அப்பறம் என்னத்துக்கு மூணு நாளா வர’ என்றான் சந்துரு. பிளாஸ்டிக் வளையத்தை வீசி அதனுள் சிக்கும் பொருட்களை பெறக்கூடிய கடையின் அருகே நின்றார்கள். வளையங்களை வீசுபவர்களில் பெரும்பாலானோருக்கு மூன்றில் ஒன்றுகூட சிக்கவில்லை. இவர்களைவிட ரெண்டு மூன்று வயது சிறிய பெண்கள் வந்து நின்று அவ்விளையாட்டில் பங்கேற்க தேவையான ஐந்து ரூபாயை செலவு செய்வதின் தேவை குறித்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். ‘எதுக்குடா வீண் செலவு’ என்று சந்துரு சொன்னதைக் கேட்காமல், ஐந்து ரூபாய் செலுத்தி மூன்று வளையங்களை பெற்றுக்கொண்டான். க்ளிப் ஒன்றும், சீப்பு ஒன்றும் சிக்க, அந்தப் பெண்கள் இவன் அவற்றைப் பெற்றுக்கொள்வதை கவனிப்பதைக் கண்டு மீண்டும் உற்சாகமாக உணர்ந்தான். ‘எல்லாம் கர்ல்ஸ் ஐட்டம்ல, நீ வெச்சு என்ன பண்ணப் போற?’ என்று கேட்ட சந்துரு, இவன் பார்வையையின் திசையை கவனித்து, ‘டேய் த்ரோகம் பண்ணாதடா’ என்று சிரித்தபடி சொன்னான்.

பெண்களுக்கான கடைகளில் விசேஷ கவனம் செலுத்தியபடி வந்து கொண்டிருந்தவன் சற்று தள்ளி இருந்த மாயஜால அரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தவர்களை பார்த்து சந்துருவை இழுத்துக்கொண்டு அங்கே விரைந்தான். அரங்குக்கு வெளியே இருந்த நாக, கடல் கன்னிகளின் ஓவியங்கள் இப்போதெல்லாம் வியப்பையோ எதிர்பார்ப்பையோ ஏற்படுத்துவதில்லை. இரண்டு ருபாய் கட்டணம் செலுத்தி நுழைந்து உள்ளே அமர்ந்திருந்தவர்களை நோட்டம் விட, அது வேறு யாரோ. தடிமனான துணியால் நெய்யப்பட்ட கூடாரம் கதகதப்பாக இருக்க, துணியின் மணமும், மணலின் மணமும் கலந்த ஈரம் தோய்ந்த வாடை அடித்தது. ட்யூப்லைட்டை பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன. சீட்டுக்கட்டை வைத்தும் காகித மலர்களைக் கொண்டும் சில வழக்கமான தந்திரங்களை மாயாஜால நிபுணர் நிகழ்த்திக் காட்டியப் பின் சிறுவனொருவனை மேடைக்கு அழைத்து தண்ணீர் குடிக்கச் செய்து, பின் அவன் கால்களுக்கிடையில் டம்ளரை வைக்க அது நிரம்பியதைக் கண்டு அரங்கில் ஆரவாரம்.இவர்களின் வயதே இருக்கக்கூடிய உதவியாள பெண்ணை தற்காலிக மேடையின் ஒரு செயற்கை தூணின் மீது கட்டி வைத்து திரையை மூடி சில நொடிகள் கழித்து திறக்க அவள் இப்போது வேறொரு தூணில் கட்டப்பட்டிருந்தாள். இதே போல் நான்கு முறை நடக்க, இப்போது மீண்டும் ஆரம்பித்த தூணில் கட்டப்பட்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் திரை விலக்கப்படும்போது அப்பெண்ணின் முகம் எந்த அயர்ச்சியும் இல்லாமல் இயல்பாகவே இருந்தது.

இவன் தவறாக அடையாளம் கண்டிருந்த பெண் மெல்லிய கழுத்துச் சங்கிலியை கவ்வியபடி கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் உதட்டிற்கு மேல் ஈர மினுமினுப்பையும், கன்னத்தில் உருவாகியிருந்த ஒற்றைக்கோட்டு வியர்வை பாதையையும் பார்த்தவன் நாவால் உதட்டை வருடினான். கண்களை மூடினால் அவள் மணத்தை நுகர முடியும் என்று நினைத்தவனுக்கு, சில நிமிடங்கள் கால் மேல் கால் போட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. பின் தன்னை மீட்டு கவனத்தை மீண்டும் நிகழ்ச்சியில் செலுத்தினான்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வர, வெளியே அடுத்த ஷோவிற்கு மனைவி, குழந்தையுடன் காத்திருந்த நாடார், ‘என்ன மேன், ஷோ எப்டி’ என்றார். ‘பரவால்ல நாடார்,பாக்கலாம்’. ‘சனிக் கெழம மத்தியானம் மட்டும்தாண்டா மனுஷன் கொஞ்சம் ப்ரீயா இருக்கார்’ என்றான் சந்துரு. ஞாயிறு முதற்கொண்டு தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் கடை திறந்து இரவு பத்து மணிக்கு முன்பாக மூடாதவரை, சனிக்கிழமை மாலை மட்டும் செங்கல்பட்டின் ஏதேனும் திரையரங்கில் கண்டிப்பாக பார்க்க முடியும். சனி அன்று ஐந்தரை மணி அளவில் அவர் தனியாளாக சைக்கிளில் மிக விரைவாக சென்று கொண்டிருப்பதில் இருந்து, திருமணமாகி மனைவியுடன் டி.வி.எஸ் பிப்டியில் செல்ல ஆரம்பித்து, பின் இப்போது மகனுடன் ‘ட்ரிபிள்ஸ்’ அடித்தபடி செல்வதை இவன் பார்த்து வருகிறான். இன்று ஒரு மாற்றாக தசரா.

‘நாடார் வீட்ல டிவி இருக்குமாடா, வெச்சிருந்தாலும் வேஸ்ட்ல ‘

அதிகரித்தபடி இருந்த கூட்டத்தினூடே நடந்து கொண்டிருந்தவர்கள் ராமையா டிபன் கடையிலிருந்து வந்த எண்ணை வாடையினால் ஈர்க்கபப்ட்டு அங்கே சென்றார்கள்.முட்டிக்கு மேல் மடித்து கட்டப்பட்ட லுங்கி, வியர்வையில் உடலுடன் ஒட்டியிருந்த வெள்ளை பனியனுக்கு ஈடுகொடுக்கும் வெள்ளை மீசை தலைமுடியுடன் ராமையா அலுமினிய பாத்திரத்தில் இருந்த மாவில் கையை விட்டு எடுத்து எண்ணைச் சட்டியில் போட்டு பொரித்துக் கொண்டிருந்தார். மலம் கழித்தபின் கோவில் குளத்தில் கால் கழுவி விட்டு அவர் நேராக கடைக்குச் செல்வதை பார்த்த நினைவுகளை அகற்ற முயன்றான். ஆளுக்கு சில வடைகள் வாங்கி வெளியே பெஞ்ச்சில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சாம்பல் நிற பேண்ட்டும் வெள்ளை நிற சட்டையும் அணிந்த ஒருவர் கடைக்கு வருவதை பார்த்தவன், ‘டேய் இவர நான் பாத்ருக்கேண்டா ‘ என்று ஆச்சரிய குரலெழுப்பினான்.

தலைமுடி அங்கங்கே கொத்து கொத்தாக தலையெங்கும் சின்னஞ் சிறு கொம்புகள் முளைத்தது போல் விறைத்திருந்தது. சட்டையும், பேண்ட்டும் கசங்கி அழுக்கு படிந்திருந்தன. வெண் புள்ளிகள் போல் முகத்தில் தாடியின் ஆரம்பம். உள்ளே சென்று கடைக்காரரிடம் ஏதோ கேட்டவர் பின்பு அவரிடம் கெஞ்சுவது தெரிந்தது.

‘இவர நான் நெறய மொற சின்ன மணியக்கார தெருல பாத்ருக்கேன். இதே கலர் பாண்ட் சட்டதான் போட்ருப்பார், ஆனா பக்கா க்ளீனா இருக்கும்டா. நான் சைக்கிள்ள அவர க்ராஸ் பண்ணும்போதே டக்குனு தெரியும். தலைமுடி அழுத்தி படிஞ்சு வாரி இருக்கும். ‘

ராமையா என்ன நினைத்தாரோ, அவர் கேட்டதற்கு ஒப்புக்கொண்டு பொட்டலம் கட்ட ஆரம்பித்தார். சட்டைப் பையில் இருந்த பணத்தை எண்ணாமல் அப்படியே கொடுத்து பொட்டலத்தை வாங்கியவர் நாலைந்து அடி தள்ளிச் சென்று சாக்கடையருகே இருந்த காலி இடத்தில் வடைகளை அள்ளி வைத்தார். அங்கு நின்றிருந்த நாய்கள் அவருடன் வந்தவை என புரிந்தது.

‘என்னமா சாப்டுது பாரு’.

அந்த ஆசாமி செய்வதைப் பார்த்தபடி கூட்டம் நகர்ந்து கொண்டிருக்க, சிலர் அங்கே நிற்க ஆரம்பித்தார்கள். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ராமையா எழுந்து வந்து, ‘ஸார், நீங்க பாட்டுக்கு கொடுத்துட்டு போய்டுவீங்க, அப்பறம் இதுங்க இங்கயே சுத்திகிட்டு இருக்கும், கொஞ்சம் அசந்தா புடிங்கிட்டு பூடும், எனக்குதான் ப்ரச்சன. தள்ளிப் போய் எதுவானாலும் குடுங்க, இதுக்கு தான் காச கொறக்க கேட்டீங்களா, ஒங்களுக்கு கேக்கரீங்கன்னுல நெனச்சேன்’ என்றார். அம்மனிதர் எதுவும் பேசாமல் பொட்டலத்துடன் நகர நாய்கள் அவர் பின்னே சென்றன. அவர் பின்னால் போகப் போனவனை பிடித்த சந்துரு ‘எங்கடா போற’, என்றான்.

‘இல்ல அவர் எங்க போறார்னு’ என்று ஆரம்பித்தவனை இடைமறித்து ‘ஒனக்கு அவர தெரியாதுல்ல’ என்றான் சந்துரு.

‘இல்லடா ரோட்ல போம்போது பாத்திருக்கேன் அவ்ளோதான்’

‘அப்பறம் என்ன’

‘அப்டி இல்லடா அவர பாக்கறப்ப காலேஜ் ப்ரொபசர் லுக் இருக்கும். எப்பவுமே புல் ஹேண்ட் சட்டதான், அத கரெக்டா எல்போ வரிக்கும் மடிச்சு விட்றுப்பார். இப்போ பாரு ஒரு சைட்ல சட்ட நீட்டிக்கிட்டு, தலைமுடி கலஞ்சு பாக்கவே பிசாசு புடிச்சவன் மாதிரி இருக்கார்’

‘இந்த மாதிரிலாம் திடீர்னு ஆச்சுனா பேமிலில எதாவது பெரிய ப்ரச்சனையா இருக்கும், நீ ரொம்ப திங்க் பண்ணாத, இவர் பின்னாடி போனா மிஸ் பண்ணிடுவ.’ என்று சொல்லியபடி சந்துரு இவனை இழுத்துச் சென்றான்.

தலைவரின் மனைவி வளையல் செட்டொன்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க தலைவர் ‘என்னய்யா அஞ்சு ரூபா சொல்ற, மூணு ரூபா தரேன்’ என்று அதற்கு பேரம் பேசிக் கொண்டிருந்தார். கடையில் நின்றிருந்தவர்கள் அவரை தாங்கள் கவனிப்பது தெரியாமல் இருக்க முயன்று கொண்டிருந்தார்கள். பேரம் பேசும்போது இருக்கும் எச்சரிக்கை உணர்வு, கறார்த்தன்மை எதுவும் கடைக்கரரிடமும் இல்லை, அவர் முகத்தில் வியர்வையை மீறிய மலர்ச்சி தெரிந்தது. தலைவர் கேட்ட விலைக்கு கொடுத்தும் விட்டார்.

அவர் மனைவியுடன் செல்வதை பார்த்தவாறே ‘பாத்தியாடா, ட்ரெஸ்தான் தலைவர் மாதிரி, பிசினாறிப் பய’ என்று ஆரம்பித்த சந்துரு, ‘நாலஞ்சு மாசம் முன்ன சித்தப்பா புறா வாங்க இவர் ஊட்டுக்குப் போனாரு, பத்து ரூபா கொறஞ்சு போச்சு, கோவில் பக்கத்துல தான் வீடு, புறாவ தாங்க, வீட்ல வுட்டுட்டு எடுத்துட்டு வரேன்னு சொன்னாரு,ஆளு கேக்கலையே, என்னடா நம்ம தெருலேந்து அஞ்சு நிமிஷம்கூட ஆகாது திரும்பி வர, சித்தப்பாவ வேற அங்கிங்க பாத்திருக்காரு அவரு, தெரிஞ்ச மொகம்தான்,அப்படியும் தரலையே’ என்று பொருமி முடித்தான்.

‘அதனாலத்தான் சாயங்காலம் அப்படி சொன்னியாடா’

‘டேய் அது வேறடா, சத்தியமா உண்மைடா அது, நீ வேணா நைட் வந்து செக் பண்ணு, வளையல்லாம் வாங்கி தந்துருக்கார், நைட் ஷோ கண்டிப்பா உண்டு இன்னிக்கி’

‘ஏண்டா, அதை ஏண்டா நான் போய் பாக்கணும், வேணா நீ போ’

‘முரளியண்ணன் சொன்னது கரெக்டான்னு செக் பண்ணலாம்ல ‘

‘எதுவும் இன்ட்ரஸ்ட் இல்லாம தான் சாங்கலத்துலேந்து அலஞ்சுட்டிருக்கியாக்கும்”

அவர் அந்தக் கூட்டத்திலும் நாசூக்குடன் நடந்து செல்வதையும், அவரைப் பார்ப்பவர்களுக்கு தன்னிச்சையாக ஒரு கணமேனும் குழப்பமும், அவர்களை மீறிய பவ்யமும் ஏற்படுவதையும், பின் ஓரக்கண்ணால் பார்த்தபடி அவரைக் கடந்து செல்வதையும் கவனித்தார்கள்.. அவர் மக்களைப் பார்த்து கும்பிடு போடாததுதான் பாக்கி, மற்றபடி அரசனொருவன் நகர்வலம் செல்லும் பாவனைதான் அவர் நடையில் தெரிந்தது. ‘இதுக்குத்தான் இந்த மாதிரி ட்ரெஸ் போடறார்டா’ என்றான் சந்துரு. ‘அப்போ அவரு வைப் மேட்டர்’ என்று இவன் கேட்க ‘ஒருவேளை அவர் பொண்டாட்டி சொல்லித்தான் இப்படி பண்றாரோ’ என சந்துரு சொன்னான். அவர் மனைவியும் கணவனின் கைகளைப் பற்றியபடி ஏதோ பேசியபடியே செல்வதைப் பார்த்தால் அவரும் மகிழ்ச்சியாக உள்ளார் என்பது தெரிந்தது. ‘இன்னிக்கு நாலஞ்சு நைட் ஷோ இருக்கும்டா’ என்றான் இவன். ‘ஐயோ செத்தார்டா’ என சந்துரு சொல்ல மீண்டும் சிரிப்பு.

இரண்டாம் முறை சுற்றி வரும்போது ராமையா கடையின் முன் இரண்டு நாய்கள். ‘நீ சொன்ன ஆள உட்ருச்சு’ என்றான் சந்துரு. நாடார் பேசிச் சிரித்தபடி குடும்பத்துடன் முன்னே சென்று கொண்டிருந்தார். வழியில் அரசமரத்தின் கீழ் வெண் களிமண்ணில் செய்யப்பட்ட அம்மனின் தலை மற்றும் வேறு சில கடவுள் ஓவியங்களைக் கொண்ட, பூசாரி யாரும் இல்லாத, தகரக் கூரை மட்டுமே உடைய வழிபாட்டு இடம். பக்தர்கள் தங்கள் குறைகளை நேரடியாக அம்மனிடம் சொல்லிக் கொள்ளலாம். கடை விளக்குகளின் வெளிச்சத்தில் அம்மன் தலை அருகே வயதான பெண் உட்கார்ந்து கொண்டிருக்க, அவர் வாய் அசைந்து கொண்டிருப்பதும், தன் கைகளை அம்மனின் முகத்தின் முன் நீட்டியபடி அசைத்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. மரத்தைக் கடக்கும்போது அவர் முகத்தில் நீர் வழிந்து கொண்டிருப்பதை கவனித்தான். வீட்டிற்குத் திரும்பலாம் என்று இவன் சொல்ல, மீண்டும் அவள் வீட்டிற்கு சற்று முன் நின்றிருந்த ராட்டினத்திற்கு அருகே அழைத்துச் சென்ற சந்துரு, ‘இன்னும் கொஞ்சம் தள்ளி இத நிறுத்திருக்கலாம்’ என்றான். கேட் மூடி இருந்த வீட்டில் இருந்து பார்வையை அகற்றி ராட்டினத்தை சுற்றி இருந்தவர்களை கவனித்தான்.

சிறுவனொருவன் ராட்டினம் சுழற்றுபவரிடம், ‘ண்ணா, எட்டணாதான் இருக்குண்ணா’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவரிடம் இறைஞ்சிக் கொண்டிருக்கிறான் போலிருந்தது. எரிச்சலான தொனியில் ‘எட்ணாக்கு பாதி சூத்தைதான் வெக்க முடியும்’ என்று மூஞ்சியில் அடித்தார் போல் சொல்லி விட்டார். சுற்றி நின்றவர்கள் சிரிக்க, யார் பார்வையையும் சந்திக்காமல் அங்கிருந்து விரைந்து சென்ற அந்தப் பையனைக் கூப்பிட்டு காசு கொடுக்கலாமா என்று இவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவன் கூட்டத்தினுள் மறைந்துவிட்டான்.

திடீரென மூக்கையடைக்கும் துர்நாற்றம். அருகில் சேட். சந்துருவுடன் கொஞ்சம் விலகி நின்றான். சேட் ராட்டினம் சுற்றுவதையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த அதன் உரிமையாளர் ‘என்னப்பா ஒனக்கும் இந்த வயசுல ஏறணுமா’ என்றார். சேட் எதுவும் சொல்லாமல் நிற்க, அவனைக் கூர்ந்து பார்த்தபடி சுழற்றிக் கொண்டிருந்தார்.அந்தச் சுற்று முடிந்து ராட்டினம் நிற்க, குழந்தைகள் இறங்கினார்கள். சேட்டின் மேலுடம்பு மட்டும் தன்னிச்சையாக செயல்படுவதைப் போல, கால் நகராமல், கொஞ்சமே கொஞ்சம் முன்சென்று மீண்டும் நிமிர்வதை பார்த்தான்.

‘சேட் வாங்கி கட்டிக்கப் போறான்டா’ என்றான் சந்துரு. புதிதாக குழந்தைகள் ஏற ஆரம்பிக்க, சுழற்றுபவர் ‘நீயும் ஏறிக்க’ என்றார் சேட்டிடம். ஒன்றும் சொல்லாமல் இருந்த சேட்டிடம் மீண்டும் அதையே சொல்லியபின் அவன் பெரும் எடையை சுமப்பவன் போல் தயங்கித் தயங்கி ராட்டினத்தின் அருகில் சென்றான். ஏறாமல் நின்றுகொண்டிருண்டவனின் தோளைப் பற்றி முன்னெத்தி அவர் ஏற்றிவிட, அவன் அந்த சிறிய இடத்திற்குள் தன்னை பொருத்திக் கொண்டான். ராட்டினம் சுழன்று மேலே செல்லும்போது சேட்டின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சி கீழே வரும்போது இல்லை.

சற்று நேரம் முன்பு அவமானப்பட்டுச் சென்ற சிறுவன் திரும்பி வந்து கொண்டிருந்தான், முகம் மலர்ந்திருந்தது. ராட்டினத்தின் பக்கம் திரும்பக்கூடச் செய்யாமல் கடந்து சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வையில் அவள் வீடும் இருந்தது. நுரை குமிழிகளை உமிழும் வஸ்துவினுள் ஊதி குமிழிகளை உற்பத்தி செய்து, பின் அவற்றை அவன் விரலால் தொட அவை உடைந்து சிதறிக் கொண்டிருந்தன. நுரைக்குமிழிகள் உருவாதல், உடனேயே சிதைதல், மீண்டும் உருவாதல் என அதே சுழற்சி தொடர்ந்து கொண்டிருந்தது. உடல் எடை அனைத்தையும் இழந்தது போல் மிகவும் தளர்ச்சியாக உணர்ந்தான். வெறுமையாக இருந்தது.

‘இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுடா, இவ்ளோ நேரம் இருந்துட்டு கடசில வேஸ்ட் பண்ணி ஓடாத’, என்று சந்துரு கேட்டதற்கு பதில் சொல்லாமல் நடந்தவன், குளத்தைத்தாண்டும்போது க்ளிப்பையும், சீப்பையும் அதனுள் தூக்கி எறிந்து, நீரில் வட்ட சிற்றலைகள் தோன்றி அமிழ்வதை பார்த்தபடி நின்றிருந்தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.