ஸ்ரீதர் நாராயணன்

சண்டமாருதம்

ஸ்ரீதர் நாராயணன்

koothu1

பூசிய சந்தனமும்
வீசிய அரிவாளுமாக
வெறிகொண்டு எழுகிறது
துடியான முனி.

துள்ளி ஆடுகிறது
எகிறிக் குதிக்கிறது
இரத்தம் கேட்கிறது
துடியான முனி.

சன்னதம் கொண்ட
சண்டமாருதமென
புறப்படுகிறது வேட்டைக்கு
துடியான முனி

வழியில் குறுக்கிடும்
ஆடு அகப்பட்டால்
ஒரே போட்டில் போட்டுவிடும்
துடியான முனி

எதிரில் வந்து நின்ற
அடுத்த ஊர் சாமியை
நாக்கை துருத்தி
நின்று பார்த்துவிட்டு
எல்லையைச் சுற்றிக் கொண்டு
திரும்பி ஓடுகிறது.

Image courtesy சொல்வனம்

நயாகரா

ஸ்ரீதர் நாராயணன்

Niagara

Niagara

தீரா விடாயுடன்
வாய்பிளந்து நிற்கும்
மலையிடுக்கில்
பொங்கி பிரவகிக்கிறது.

புளியேப்பக்காரர்கள்
துளிக்குறிப்புகளால்
நொடிக்கு எவ்வளவு நீர்
இடம்மாறுகிறதென
அளக்க முயல்கிறார்கள்

கிளிப்பிள்ளைகளின்
வாய்ச்சொற்களில்
அது எப்போதும்
மலைமகளின்
முகம் மறைக்கும் மணச்சீலை.

வெண்பனி நீர்த்துவாலை என்கிறார்,
வைரச் சொரிதல் என்கிறார்,
வானவில் வந்திறங்கும் நீர்மேடை என்கிறார்,
வண்ண ஒளிக்கற்றைகள் நடமிடும்
குதிரைக்குளம்பு என்கிறார்,

சொல் இல்லாதவன் என்னிடம்
புறங்கையில் உருண்டோடும்
சிறு திவலை,
அதன் பேரழகை
காட்டிச் செல்கிறது.

அதீனாவின் தலை

ஸ்ரீதர் நாராயணன்

pallasathena

 

கொண்டு வருகிறேன் பலாஸை
இந்த மைதானத்திற்கு நடுவே.
உங்கள் பாசாங்குகளை
முற்றொழிக்க.

எந்தையின் சுடரை
அவர் பெண்மைத் தலையிலிருந்து
பிடுங்கி எடுத்து,
கொண்டு வருகிறேன்
இந்த உடலற்ற நெருப்பை.

எரி-கண்கள் கொண்ட பெண்ணவள்
இந்த நகரை
போலித்தனங்களிலிருந்து
பொலிவுற செய்யட்டும்.

கனன்று கொண்டிருக்கும் இத் தலை
கொடுக்கட்டும் எல்லா கதகதப்பும்
வேறெதுவும் மறைக்கப்பட வேண்டியதில்லை

கொண்டு வருகிறேன்,
பலாஸ் அதினாவை
இந்த மைதானத்திற்கு.

I bring the Pallas
to the middle of this Stadium,
to extinct the pretense

The fire of our father,
sprung out of his
effeminate scalp,
I bring you-
fire without a frame

She, the fiery-eyed lady
shall light this city
out of its sham

This smoldering head
bestows all the warmth,
there is no call for shields.

I bring,
Pallas of Athena
to this Stadium!

மூங்கில் கூத்து மேதாவி

ஸ்ரீதர் நாராயணன் 

bamboo-genius

முச்சந்தியில் நட்டு வைத்த
மூங்கில்கள் இடையே
கயிற்றில் நடந்து
வித்தைக் காட்டுகிறா(ள்)(ன்).

மூளையை கூராக்கி
கொம்பெனக் கொண்ட
அறிவுச்சிகரம் மேதாவி.

கயிற்றின் மேலே
கரணம் அடிக்கிறா(ள்)(ன்).
கைதட்டுபவரை குஷிப்படுத்தும்
சரணம் பாடுகிறா(ள்)(ன்).

அவையோர் முகம் கோணினால்
சுற்றி சுற்றி வந்து
சலாம் போடுகிறா(ள்)(ன்)..
வசமாக யாரும் சிக்கினால்
வாகாக ஏறி மிதிக்கிறா(ள்)(ன்).
காணிக்கை தாராளமாக கிடைக்குமென்றால்
கேளிக்கையை குறைப்பானேன்.

நிமிர்ந்து நிற்கும் மூளையை கண்டு
நெருங்கி வர அருவெறுக்கும்
கோமாளிக் கூட்டத்திற்கென
தலைகுப்புற நின்று கொண்டு
வாலாக ஆக்கிய மூளையை
காலால் ஆட்டிக் காண்பிக்கிறா(ள்)(ன்).

இதுதான் ஒரிஜினல் கூத்தென
அள்ளிக் கொண்டு போகிறது
அப்ளாஸ் ஆடியன்ஸிடம்.

இன்னும் கொஞ்சம்
மூளை நீண்டாலும்
வாலாட்டுவது சிரமமென
விசனப்படுகிறா(ள்)(ன்).
அறிவுச்சிகரம் மேதாவி.

பழக்கம்

ஸ்ரீதர் நாராயணன்

தோளை தட்டி, திரும்பியதும்
விரியப் புன்னைகைத்து
நலம் விசாரித்தபடி
பேச்சைத் தொடங்கலாம்தான்.

நரைக்கு பூசும் சாயம்
பெண்ணுக்கு பிடித்த பிங்க் உடை,
வேனலுக்கான வாசஸ்தலங்கள்,
தளிர்த்திருக்கும் கறிவேப்பிலைக் கன்றுகள்,

இயந்திரத்தில் போட்டு
மாடுகளை வெட்டும்
வாட்சப்பில் வந்த அசைபடம்,

மணிகோர்த்த மயிற்கற்றைகள் ஊசலாட
அங்கங்களை அழகாக குலுக்கும்
நாரீமணியின் நடனம்,

‘அவன் கை குட்டை’
என்னும் அரசியல் விமர்சனத்தின்
இடக்கரடக்கல் பொருள்,

என தளும்பிக் கொண்டிருக்கும்
பேசுபொருட்களுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அவசரமாக வாயோரங்களை
அரைகுறையாக துடைத்த
பேப்பர் நாப்கினை
உள்ளங்கைக்குள் வைத்து உருட்டியபடி

ஜாக்கிரதையான விறைப்புடன்
விலகிச் செல்லும் அவருக்கும்
இது போன்று பேசுவதற்கு
நிறைய இருந்திருக்கும்