அந்த சிறப்பு ரயில் மதியம் இரண்டு மணிக்கு அமிர்தசரஸில் இருந்து கிளம்பி எட்டு மணி நேரம் கழித்து முகல்புரா வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்; சிலர் தொலைந்து போயினர்.
காலை பத்து மணி. கிழட்டு சிராஜுதின் கண்ணைத் திறந்து முகாமின் சில்லிட்ட தரையைப் பார்த்தார்; அலை அலையாய்க் குவியும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளைப் பார்த்ததும் அவருக்குக் குழப்பம் அதிகரித்தது. இருண்ட வானத்தை வெறுமையுடன் பார்த்தார். அவரைச் சுற்றி ஒரே களேபரம், ஆனால் காதுகள் அடைத்திருந்தது போல் அவருக்கு ஒன்றும் கேட்கவில்லை. அவரை யாராவது பார்த்தால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல: அவர் நரம்புகள் தளர்ந்து போய் இருந்தன; அவர் எடையில்லாமல் ஏதோ ஒரு பாழ்வெளியில் மிதப்பது போல் உணர்ந்தார்.
சூரிய ஒளி சுளீரென கண்ணை உறுத்தியதும் அவர் திடுக்கிட்டு நிகழ்காலத்துக்கு வந்தார். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் நினைவுகள் அவரைத் தாக்கின. கொள்ளை. தீ. தள்ளுமுள்ளு. ரயில் நிலையம். தோட்டாக்கள். இரவு. அப்புறம் சகீனா. சிராஜுதின் உடனே எழுந்து பைத்தியக்காரர் போல சுற்றியிருந்த மக்கள் கூட்டத்தில் தேட ஆரம்பித்தார்.
மூன்று மணி நேரத்துக்கு முகாமின் இண்டு இடுக்கெல்லாம் “சகீனா, சகீனா” என்று கதறியபடியே தேடினார். ஆனால் அவரது ஒரே மகளைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவரைச் சுற்றி, ஒரே கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது. யாரோ ஒருவர் தன் மகனைத் தேடினார், இன்னொருவர் தன் தாயை; ஒருத்தர் தன் மனைவியை, மற்றொருத்தர் தன் மகளை. சிராஜுதின் களைத்துச் சோர்ந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்து சகீனாவிடம் இருந்து எப்படி, எப்போது பிரிந்தோம் என்று நினைவுக்குக் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் எவ்வளவு தான் மூளையைக் கசக்கினாலும், குடல் சரிய கீழே விழுந்த சகீனாவின் அம்மாவிடத்திலேயே அவர் மனம் வந்து நின்றது, அதற்கு மேல் அவரால் யோசிக்க முடியவில்லை.
சகீனாவின் அம்மா செத்து விட்டாள். அவர் கண் முன் தான் அவள் உயிர் பிரிந்தது. ஆனால் சகீனா எங்கே? “என்ன விட்டுடுங்க. சகீனாவ கூட்டிகிட்டு ஓடுங்க” என்று சொன்ன படியே தான் சகீனாவின் அம்மா செத்துப் போனாள்.
சகீனா அப்போது அவர் பக்கத்தில் தான் இருந்தாள். இரண்டு பேரும் வெற்றுக் கால்களுடன் ஓடினார்கள். சகீனாவின் துப்பட்டா கீழே விழுந்தது. அவர் அதை எடுப்பதற்காக நின்றார். ”அத விடுங்க அப்பா” என்று சகீனா கத்தினாள். ஆனாலும் அவர் அதை எடுத்துக் கொண்டார். இதை நினைக்கையில் அவர் கண்கள் அவரது ’கோட்’டைப் பார்த்தன. உப்பியிருந்த அதன் பாக்கெட்டில் கை விட்டு ஒரு துணியை எடுத்தார்: சகீனாவின் துப்பட்டா! ஆனால் சகீனா எங்கே?
சிராஜுதின் மிகவும் கஷ்டப்பட்டு யோசித்தார், ஆனால் ஒன்றும் உபயோகமில்லை. சகீனாவை ரயில் நிலையம் வரைக் கூட்டி வந்தாரா? அவரோடு அவள் ரயிலில் ஏறினாளா? ரயிலை நிறுத்தி கலகக்காரர்கள் ஏறியபோது அவர் நினைவிழந்தாரா? அப்படித்தான் அவர்கள் சகீனாவைக் கடத்திக் கொண்டு போனார்களா?
சிராஜுதினிடம் ஏகப்பட்ட கேள்விகள் இருந்தன, பதில் ஒன்று கூட இல்லை. அவருக்கு ஆறுதல் தேவைப்பட்டது. சுற்றியிருந்த அனைவருக்கும் தான். சிராஜுதின் அழ விரும்பினார், ஆனால் அவரது கண்கள் ஒத்துழைக்கவில்லை. கண்ணீரெல்லாம் எங்கே போயிற்று என்று யாருக்குத் தெரியும்?
ஆறு நாட்கள் கழித்து, அவரது உணர்ச்சிகள் ஒரு கட்டுக்கு வந்த பின, சிராஜுதின் எட்டு இளைஞர்களை சந்தித்தார். அவர்களிடல் துப்பாக்கிகளும் ஒரு லாரியும் இருந்தன. அவர்கள் அவருக்கு உதவுவதாய்ச் சொன்னார்கள். சிராஜுதின் அவர்களைப் பல முறை வாழ்த்திவிட்டு சகீனாவின் அடையாளங்களைச் சொன்னார். “அவ வெள்ள வெளேர்னு அழகா இருப்பா; அவ அவளோட அம்மா மாதிரி, என்ன மாதிரி இல்ல. பெரிய கண்ணு, கருகருன்னு முடி, வலது கன்னத்துல ஒரு பெரிய மச்சம் இருக்கும். அவ என்னோட ஒரே பொண்ணு. எப்படியாவது அவளக் கண்டுபிடிச்சுடுங்க. உங்க கடவுள் உங்களுக்கு வேண்டியதெல்லாம் தருவாரு”
அந்த இளைஞர்கள் மிகுந்த உத்வேகத்துடன், அவள் உயிரோடு இருந்தால் இன்னும் சில நாட்களில் அவர் அருகில் இருப்பாள் என்று கிழட்டு சிராஜுதினுக்கு உறுதியளித்தார்கள்.
அவர்கள் உயிரைப் பணயம் வைத்து முயற்சி செய்தனர். அமிர்தசரஸுக்குச் சென்று ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் காப்பாற்றிப் பாதுகாப்பான இடத்துக்குக் கூட்டி வந்தார்கள். பத்து நாட்கள் கழிந்தன, ஆனால் சகீனாவைக் காணவில்லை.
ஒரு நாள் அவர்கள் தங்கள் வேலைக்காக அமிர்தசரஸுக்கு லாரியில் சென்று கொண்டிருந்தபோது, சேரத் அருகே சாலைக்கு அந்தப் பக்கம் ஒரு இளம்பெண்ணைப் பார்த்ததார்கள். லாரி சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு அவள் ஓட ஆரம்பித்தாள். அவர்கள் இஞ்சினை நிறுத்திவிட்டு அவள் பின்னால் ஓடிப்போய் ஒரு திடலில் அவளைப் பிடித்துவிட்டார்கள். அவள் மிக அழகாய் இருந்தாள்; வலது கன்னத்தில் ஒரு பெரிய மச்சம் இருந்தது. அவர்களில் ஒருவன் ”நீ சகீனாவா?” என்று அவளிடம் கேட்டான்.
அவள் முகம் வெளுத்தது. அவள் பதில் சொல்லவில்லை. அவர்கள் அவளுக்கு உறுதியளித்தவுடன் தான் அவளது பயம் நீங்கியது. தான் சிராஜுதினின் மகள் சகீனா தான் என்று ஒத்துக்கொண்டாள்.
எட்டு இளைஞர்களும் அவளுக்கு ஆறுதல் கூறி லாரியில் உட்காரவைத்து உணவும் பாலும் கொடுத்தனர். அவள் துப்பட்டா போடாமல் இருந்ததால் கூச்சப்பட்டு கைகளால் மார்பை மறைக்க வீண் முயற்சி செய்தாள். அதைப் பார்த்த அவர்களில் ஒருவன் தன் கோட்டைக் கழற்றி அவளிடம் கொடுத்தான்.
பல நாட்கள் கழிந்தன. சிராஜுதினுக்கு இன்னும் சகீனாவைப் பற்றித் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அவர் நாள் முழுக்க வெவ்வேறு முகாம்களுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று வந்தார். ஆனால் சகீனா எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. இரவுகளில் அந்த இளைஞர்கள் வெற்றி பெற வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திதார். சகீனா உயிரோடு இருந்தால், சில நாட்களுக்குள் அவளைக் கண்டுபிடித்துவிடுவதாக அவர்கள் உறுதியளித்திருந்தனர்.
ஒரு நாள் சிராஜுதின் அந்த இளைஞர்களை முகாமில் பார்த்தார். அவர்கள் லாரியில் அமர்ந்திருந்தனர். லாரி வடமேற்கு எல்லை மாகாணத்தில் ஒரு ஊருக்கு செல்வதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்தது. சிராஜுதின் ஓடிப்போய் அவர்களிடம் “பசங்களா, என் சகீனாவப் பத்தி எதுவும் தெரிஞ்சுதா?” என்று கேட்டார்.
அவர்கள் அனைவரும் ஒரே குரலில் “தெரிஞ்சுடும், தெரிஞ்சுடும்” என்று கூறினார்கள். லாரி கிளம்பிப் போனது. சிராஜுதின் திரும்பவும் அவர்கள் வெற்றிக்காக வேண்டிக் கொண்டார். அவர் மனது லேசாகியது.
மாலையில், சிராஜுதின் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகே முகாமில் ஏதோ பரபரப்பு ஏற்பட்டது. நான்கு பேர் எதையோ தூக்கிக் கொண்டு வந்தார்கள். அவர் விசாரித்த போது, ரயில் தண்டவாளத்திற்கு அருகில் ஒரு பெண் மயக்கநிலையில் கண்டுபிடிக்கப்பட்டாள் என்று தெரியவந்தது; அவளைத் தான் இப்போது தூக்கிக் கொண்டு வந்தார்கள். சிராஜுதின் அவர்கள் பின்னே போனார். அவர்கள் அவளை மருத்துவமனையில் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள்.
சிராஜுதின் மருத்துவமனைக்கு வெளியே ஒரு கம்பத்தின் அருகே அசையாமல் நின்றிருந்தார். பிறகு மெல்ல உள்ளே சென்றார். அந்த இருட்டு அறையில் ஒரு ஸ்டிரெட்சரும் அதன் மேல் ஒரு உடலும் இருந்தன. வேறு யாரும் இல்லை. சிராஜுதின் மெல்ல அடி எடுத்துவைத்துப் பக்கத்தில் சென்றார். திடீரென அறையில் வெளிச்சம் பரவியது. சிராஜுதின் அந்தப் உடலின் வெளுத்த முகத்தில் மச்சத்தைப் பார்த்து “சகீனா” என்று கதறினார்.
விளக்கு போட்ட மருத்துவர், சிராஜுதினைப் பார்த்து “என்ன?” என்றார்.
சிராஜுதின் திக்கித் திக்கி, “சார், நான்.. சார், நான்.. அவ அப்பா” என்றார்.
மருத்துவர் ஸ்டிரெட்சரிலிருந்த உடலைப் பார்த்தார். நாடி பிடித்துப் பார்த்துவிட்டு, சிராஜுதினிடம் “அந்த ஜன்னல், அதத் திற” என்று கூறினார்.
அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் சகீனாவின் பிணம் அசைந்தது. செத்துப் போன அவளது கைகள் நாடாவை அவிழ்த்து சல்வாரைக் கீழே இறக்கின. சிராஜுதின், “உயிரோட இருக்கா, எம் பொண்ணு உயிரோட இருக்கா” என்று மகிழ்ச்சியில் கூக்குரலிட்டார்.
மருத்துவருக்கு உடல் முழுக்க வியர்வையில் நனைந்துவிட்டது.