கார்டியன் தளத்தில் ஜான் ஹென்லி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்
ஸ்டீபன் க்ரோஸ் எழுதுவதில் நிறைய இலக்கியத்தன்மை இருக்கிறது. ஈசாப் கதைகள், கிப்ளிங் கதைகளுக்குரிய வழக்கமான படிப்பினைகள் இவற்றுக்கு உள்ளதை புத்தகத்தின் அத்தியாய தலைப்புக்களைப் பார்த்தே நாம் சொல்லிவிட முடியும்: ‘நாம் எப்படி காதலுக்கான ஏக்கத்தால் காதலை அறியாதிருக்கிறோம்’, ‘நாம் எப்படி கோபத்தைக் கொண்டு சோகத்தைத் தவிர்க்கிறோம்’. தெளிவான, தேவையற்றவை கத்தரிக்கப்பட்ட இந்த ஃபேபிள்கள் பலவும் ஒரு நளினமான, கூர்மையான அவதானிப்புடன் முடிவுக்கு வருகின்றன – இவற்றை படிப்பினைகளாக மட்டுமே வாசிக்க முடியும்: ஒருவரால் மறக்கப்பட்ட ஒன்றாக இருப்பதைவிட ஒன்றை இழந்தவனாக இருப்பதே நல்லது; முற்றுப்புள்ளி வைப்பதென்பது துயரின் உயிர்ப்பை உணர்வற்றுப் போகச் செய்ய முடியும் என்ற பொய்யான நம்பிக்கையின் செயல்.
இது ஒரு விபத்தல்ல. கதையே க்ரோஸ் கடந்த 25 ஆண்டுகளாக மிகச் சிறப்பாகப் பயின்றுள்ள தொழிலான உளப்பகுப்பாய்வின் இதயமாக இருக்கிறது. சிக்மண்ட் பிராய்ட் இதை அறிந்திருந்தார். பலமுறை தனது சிகிச்சைக் குறிப்புகள் “அறிவியலின் சீரியஸ் முத்திரை” இல்லாமல் குறுநாவல்கள் போலிருக்கின்றன என்று அதிசயித்திருக்கிறார் அவர்.
“எல்லா துக்கங்களையும் தாள முடியும்,” என்றார் டேனிஷ் மொழியின் மாபெரும் எழுத்தாளர் கரேன் ப்ளிக்சென் ஒரு முறை. அந்த வாக்கியத்தை க்ரோஸ் தன் புத்தகத்தில் மேற்கோள் காட்டுகிறார். இதுவே இப்புத்தகத்தின் முடிவுக் குறிப்பாகவும் இருக்க முடியும், “எல்லா துக்கங்களையும் தாள முடியும், அவற்றை ஒரு கதையுள் புகுத்த முடிந்தால், அல்லது அவற்றைப்பற்றி ஒரு கதை சொல்ல முடிந்தால்”. க்ரோஸின் தொழில், தங்கள் துக்கங்களைப் பற்றிய கதைகளைச் சொல்ல முடியாதவர்களோடு உரையாடுவதுதான்- அந்தக் கதைகள் அவர்களை உட்கொண்டு விடுகின்றன என்று சொல்லலாம். அவர்களைக் கொண்டு கதைகள் தம்மைச் சொல்லிக் கொள்கின்றன, மகிழ்ச்சியளிக்காத விளைவுகளுடன். துயரர்கள் தங்கள் வாழ்க்கைக் கதைகளைச் சொல்ல அவர்களுக்கு உதவுவதுதான் இவரது வேலை.
“மிக முக்கியமான கதைகளைச் சில சமயம் நேரடியாகப் பேச முடியாது,” என்கிறார் அவர். “அதற்கான சொற்கள் அவர்களிடம் இல்லை. தங்கள் அனுபவங்களைப் பற்றி பேசுவதற்கு யாரும் அவர்களுக்கு இதுவரை உதவவில்லை என்பதாக இருக்கலாம். அவர்களுக்கு தங்கள் உணர்வுகளுடன் தொடர்பு இல்லை. ஏதோ ஒரு வருத்தம் அல்லது அச்சத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்: பீதியில், கலக்கத்தில், வலியில் உறைந்திருக்கின்றனர். ஆனால் எல்லாம் நன்றாக இருக்கிறது என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்வார்கள். அவர்களது வாழ்க்கை – அவர்களுடைய பாஸ், மனைவி, குழந்தைகள் – இவர்களுக்காக, அவர்கள் ந்யூரோட்டிக்காக, அல்லது மன அழுத்தத்தில் அல்லது வேறு எதோ ஒரு மனச்சிக்கலில் இருக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், ஆனால் ஒரு துயரர் என்னிடம் முன்னொரு முறை என்னிடம் கூறியது போல், ‘மாறியாக வேண்டுமென்றால் அது வேண்டாம்”.
உளப்பகுப்பாய்வைப் பற்றி க்ரோஸ் கூறுகிறார், “அது பார்வைக்கு அப்பால் இருப்பதைப் பற்றியது. பகற்கனவு, கொடுங்கனவு. இதற்கு அர்த்தம் உண்டு, இது எங்கிருந்தோ வருவதல்ல: உண்மையில் இந்த விஷயத்தைச் சொல்வதாகதான் பலமுறை அது இருக்கிறது.” இதை விளக்க அவர் ஒரு கதை சொல்கிறார் (‘பாரனோயா எப்படி துயரைத் தணித்து பேரழிவைத் தவிர்க்கிறது’): தனியாய் வாழும் ஒரு பெண். இரவில் வீடு திரும்பும்போது, சாவியைக் கொண்டு கதவைத் திறந்ததும் தன் அபார்ட்மெண்ட் வெடித்துவிடும் என்று நம்புகிறாள். தீவிரவாதிகள் அவளைக் கொலை செய்ய வெடி வைத்திருக்கிறார்கள். அவரது ஆலோசனை அறையில் அவள் க்ரோஸிடம் சொல்கிறாள், தனது அபார்ட்மெண்ட் வெறுமையாக, சில்லிட்டிருகிறது என்று. அவள் குழந்தையாய் இருந்தபோது வீடு திரும்புகையில் அம்மாவும் பாட்டியும் அவளுக்காக டீ போட்டு வைத்துக் கொண்டு காத்திருப்பார்கள். அதற்கு நேரெதிர் நிலை இது.
“வெடி வைப்பார்கள் என்ற பான்டசி அவளை அச்சுறுத்தியது,” என்கிறார் க்ரோஸ். “ஆனால் அவளது தனிமையை அது போக்கிற்று. யாருக்கும் உங்களைப் பற்றி அக்கறை இல்லை என்று நினைப்பதைவிட யாரோ உங்களுக்குக் கெடுதல் செய்யப் போகிறார்கள் என்று நினைப்பதே மேலாக இருக்கிறது. கண்டுகொள்ளப்படாமை ஒரு பெருந்துயரம். அவளது பீதி அதிலிருந்து அவளைப் பாதுகாத்தது”.
தன் வேலையில் பெரும்பகுதி, “தங்களால் சொல்ல முடியாத கதைகளுடன் பலர் என்னிடம் வருகிறார்கள் என்பதும் அதை எப்படிச் சொல்வது என்ற தீர்வை நாங்கள் அடைகிறோம் என்பதும்தான். அவர்கள் அறிவாளிகளாக இருக்கலாம், நன்றாகப் பேசத் தெரிந்தவர்களாக இருக்கலாம் – ஆனால் அவர்களிடம் வார்த்தைகள் இல்லை. ஏதோ ஒரு தளத்தில் அவர்களை அவர்களது வாழ்க்கைக் கதை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்தப் புத்தகம் தீர்வு காணப்பட்டு வெளிப்பட்ட கதைகளின் தொகுப்பு,” என்கிறார் க்ரோஸ்.
“பரிசீலிக்கப்பட்ட வாழ்வு” க்ரோஸ்ஸின் முதல் புத்தகம். அது பரப்பரப்பான இலக்கியப் படைப்பாகவே ஆகிவிட்டது. அதை ஏலம் விட்டு, அது அச்சிடப்பட்டுவதற்கு முன்னரே 12க்கும் மேற்பட்ட பெரும்பிரதேசங்களில் விற்பனையானது. பிபிஸி ரேடியோ 4 அதை ‘இந்த வாரப் புத்தகம்’ என்று தேர்ந்தெடுத்தது. காலம் கனிந்துவிட்டது என்று நினைத்ததால்தான் அதை அவர் எழுதினார், “எனக்கு இப்போது 60 வயதாகிறது. நான் கொஞ்சம் வயது முதிர்ந்த அப்பாவாகவும் இருக்கிறேன் – என் மகன்களுக்கு வயது பத்து, ஏழு என்று ஆகிவிட்டது. என் அம்மா அறுபத்து நான்கு வயதில் மறைந்தார். நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான படிப்பினைகளை எவ்வளவு எளிமையாக, தெளிவாகப் பதிவு செய்ய முடியுமோ அவ்வாறு எழுத விரும்பினேன். பகுப்பாய்வுச் சிகிச்சை பெற இயலாதவர்களுக்காக இதைச் செய்தேன்”.
பெரும்பான்மை மக்களுக்கு அதற்கான வாய்ப்பில்லை… பிரிட்டனின் உளப்பகுப்பாய்வு என்பது ஒரு ஆடம்பரமாகவே இருக்கிறது, ஆனால் அதனால் ஆளில்லாமல் போவதில்லை. க்ரோஸ் தினமும் எட்டு முதல் பத்து துயரர்களைச் சந்திக்கிறார். இதுவரை ஐம்பதாயிரம் மணி நேரத்துக்கும் மேற்பட்ட உரையாடல்கள். கதைப் பஞ்சம் அவருக்கு வர வாய்ப்பில்லை.
க்ரோஸின் முப்பதுக்கும் மேற்பட்ட கதைகள் – ஏமாற்றப்பட்ட மனைவிகள், தறிகெட்டுப் போன பிள்ளைகள், தனிமையில் வாழும் தந்தைகள், அச்சத்தில் வாழும் மகள்கள், வேடதாரி கணவன்கள், பிறவிப் பொய்யர்கள், காதலுக்கு ஏங்கும் பிரமச்சாரிகள், எப்போதும் எதையாவது தொலைத்துக் கொண்டிருக்கும் வெற்றிகரமான தொழில்முனைவர்கள் – இவர்கள் சொல்லும் கதைகள்தான் என்ன? சலிப்பை ஒரு ஆயுதமாக நாம் பயன்படுத்துகிறோம் என்பதை இந்தக் கதைகள் சொல்லுகின்றன; அளவுக்கு அதிகமாக பாராட்டப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் சோம்பேறிகள் ஆகலாம் என்று சொல்கின்றன; நிகழ்காலம் மட்டுமே உண்மை என்று சொல்கின்றன – “கடந்த காலம் நிகழ்காலத்தில் உயிரோடு இருக்கிறது… எதிர்காலம் என்பது இப்போது நம் மனதில் உள்ள எண்ணம்தான்”- ஒரு உண்மையை எதிர்கொள்ளாமல் இருக்க நாம் எப்படிப்பட்ட பொய்களையும் சொல்லுவோம் என்கின்றன.
இதில் இரு முக்கியமான கருப்பொருட்கள் வெளிப்படுகின்றன. “மாற்றம் என்றால் இழப்பு இருக்கும். எந்த ஒரு மாற்றமும் தன்னுள் இழப்பைக் கொண்டதே. ஆனால் வாழ்வென்பதே மாற்றம்தான் – நாம் எப்போதும் ஏதோ ஒன்றுக்காக எதையோ விட்டுக் கொடுக்கிறோம். வாழ்வென்றால் இழப்பு உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கும்போது, நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது நம்மை நாம் இழக்கிறோம் என்பதுதான் விஷயம்,” என்கிறார் க்ரோஸ்.
டிக்கன்ஸின் ஸ்க்ரூஜ் கதையை க்ரோஸ் சுட்டிக் காட்டுகிறார். ‘காதலுக்கான ஏக்கம் எப்படி நம்மை காதலிலிருந்து பிரித்து வைக்கிறது’ என்ற அத்தியாயத்தில் ஸ்க்ரூஜ் கதை பற்றி பேசுகிறார். “அது உள மறுமலர்ச்சியைப் பற்றிய ஒரு சிறந்த கதை. அதை ஒரு கிறிஸ்துமஸ் கதையாக நாம் வாசிக்கிறோம். ஆனால் ஸ்க்ரூஜ் செய்வதெல்லாம் தன் இழப்புகளை ஏற்றுக் கொள்ள மறுப்பதுதான்: தன் தாயின் மறைவை, தன் சகோதரியின் மறைவை, தன் வருங்கால மனைவியின் இழப்பை. இதைச் செய்யாமல் அவன் காசை எண்ணிக் கொண்டிருக்கிறான். அவன் லாபத்தை மட்டுமே பார்க்கிறான், நஷ்டங்களை அல்ல. அவனது சந்தோஷமில்லாத கடந்த கால நினைவுகளுக்கு உயிரளித்து அவனைத் துன்புறுத்தும் மூன்று பேய்களும், நீண்ட காலமாக கஷ்டப்படும் க்ராட்சிட்கள் தங்கள் இழப்புகளை ஏற்றுக்கொண்டு பரந்த மனம் கொண்டவர்களாக இருப்பதையும் அவனது எதிர்காலம் இருண்டு போயிருப்பதையும் நிகழ்காலத்தில் காட்டுகின்றன. இழப்புகள் இல்லாத வாழ்வு வாழ முடியும் என்ற ஸ்க்ரூஜின் மனப்பிரமையை மெல்ல மெல்ல நீக்குகின்றன அந்தப் பேய்கள்,” என்கிறார் க்ரோஸ். உண்மையில், ஒரு உளப்பகுப்பாய்வாளனின் வேலையை அவை செய்கின்றன.
அதன்பின் நாம் நம்மை குணப்படுத்திக் கொள்கிறோம், என்று நம்புகிறார் க்ரோஸ். “இழப்புகளோடு நமக்குள்ள உறவைச் சரி செய்து கொள்கிறோம், அவை இழப்புகள்தான் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். நம் வாழ்வைப் பற்றிய உண்மைகளையும் நம் இழப்புகளைப் பற்றிய உண்மைகளையும் எதிர்கொள்வதால், எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அப்படிப் பார்க்காமல் நம் உறவுகளின் தன்மை உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை உணர்வதால், நாம் நம்மை இனம் கண்டுகொள்ள முடியும்.”
… உளவியல் மற்றும் அரசியலைக் கல்லூரியில் படிக்கும்போது அவர் பகுப்பாய்வு முறைகளைக் கொண்டு அரசியலைப் புரிந்து கொள்ள முயன்றார்- இலக்கியத்தைக் கொண்டு உளவியலைப் புரிந்து கொள்ள முயற்சித்தார். இதில் திருப்புமுனை இரு சிறுகதைகளைப் படிக்கும்போதுதான் கிடைத்தது என்கிறார் அவர்: வேலை செய்ய மறுத்த நகலெடுப்பவரைப் பற்றிய மெல்வில்லின் Bartleby the Scrivener என்ற அசாதாரண கதை ஒன்று, திருட்டுத்தனமாகக் கப்பலேறுவதைப் பற்றிய கோன்ராடின் The Secret Sharer என்ற கதை மற்றொன்று: “இவ்விரு கதைகளும் இரட்டித்தல் என்ற உளப்பகுப்பாய்வுக் கருத்தாக்கத்தை துல்லியமாக விவரிப்பதாக நினைத்தேன். அவை எனக்கு உணர்வுச்செறிவு கொண்ட மிகப்பெரும் புரிதலை அளித்தன”
உளப்பகுப்பாய்வு போன்ற விஷயங்களை எழுதுவதில் எது முக்கியம் என்று பார்த்தால், உண்மைக்கான தேடல்தான் அது என்கிறார் அவர்: என் நண்பர், கவிஞர் வெண்டி கோப் சொல்வார், “மேலும் உண்மையானதாகச் செய்” என்று. இதையேதான் துயரர் சொன்னாரா? இவ்வாறேதான் இருந்ததா? மிக ஆழச் சென்று அடைந்தால்தான் அதைச் சரியாகக் கொண்டு வரமுடியும் – ஆனால் ஒரு இலகுத்தன்மையும் வேண்டும். ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றி எழுத வேண்டாம், கதையிலிருந்து கனமானதை எல்லாம் அகற்ற வேண்டும். மாபெரும் எழுத்தாளர்கள் அதைத்தான் சாதித்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்”
ரேமண்ட் கார்வர், ஜான் சீவர், ஆந்த்ரே டூபஸ், செகாவ், காப்கா, தாமஸ் மன் போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள் அவர்மீது தாக்கம் செலுத்தியிருக்கின்றன. ‘காலப்போக்கில் உளப்பகுப்பாய்வு மேலும் மேலும் நீண்டதாகவும் சிடுக்குகள் நிறைந்ததாகவும் மாறிவிட்டிருக்கிறது,” என்கிறார் அவர். ‘ஆனால் துயரர் வரலாறுகளை எழுதுவது எப்படி என்று நான் பாடம் எடுக்கும்போது, நான் எதை உண்மை என்று உணர்ந்தேனோ அதற்கும் நீளத்துக்கும் தொடர்பில்லை என்பதைக் கண்டேன். எழுதியவனுக்கு எப்படிப்பட்ட அனுபவம் இருந்ததோ அதையே வாசிப்பவனும் உணரும் வகையில் நன்றாகக் கதை சொல்வதுதான் முக்கியம் என்று புரிந்தது. தகவல் தரவுகள், பக்க எண்ணிக்கை போன்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. யார் அருகில் இருந்திருக்கிறார்களோ, மிகவும் நெருக்கத்தில் உணர்ந்திருக்கிறார்களோ, உள்ளபடி பார்த்திருக்கிறார்களோ, யார் அது அத்தனையையும் எழுத்தில் கொண்டு வரும் திறமை கொண்டவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் சொல்வதில்தான் நம்பிக்கை வருகிறது”
க்ரோஸ்ஸின் நம்பிக்கை இதுதான். அவரது நுட்பமான, சுவாரசியமான துயரர் குறிப்புப் புத்தகம் இதைதான் செய்ய வேண்டும்- “உலகை நான் இப்படி அணுகுகிறேன் என்ற ஒரு பார்வையை நிகழ்த்திக் காட்ட வேண்டும். விஷயங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைக் காட்டும் ஒரு வழிவகை. தனிக்கதைகள் பொருள் செறிவு கொண்டவையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், ஆனால் புத்தகத்தை முழுமையாகப் படித்தால்… எல்லாவற்றையும் தனித்தன்மை கொண்ட ஒரு வகையில் பார்க்க முடியும் என்ற உணர்வு கிடைக்க வேண்டும். இது ஒரு துவக்கமாக இருக்கலாம். தீர்வுகள் பின்னர் வரட்டும்”.
புகைப்பட உதவி : Stephengrosz.com