– எஸ். சுரேஷ் –
கண்ணாடி ஜன்னலில் இருந்த சிறு ஓட்டை வழியாக
கருப்பு ஆந்தை ஒன்று தினமும் நள்ளிரவில் உள்ளே வந்து
தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு
இரத்தத்திற்கு பதிலாக அவர் நினைவுகளைக் குடிக்கிறது.
“அவன் வந்தானாடா இன்னிக்கி?”
“யாருப்பா?”
“அதான்டா. அவன் பேர் மறந்துட்டேன். இன்னக்கி வரேன்னானே அவன்”
சரளமாகக் குடித்துக் கொண்டிருந்த ஆந்தை
இப்பொழுதெல்லாம் தேடித் தேடிக் குடிக்க வேண்டியிருக்கிறது.
“இவங்க யாரு?”
“இவதான் உங்க பொண்ணு”
“ஓஹோ, அந்த நர்சிங் இன்னும் வரலையா?”
ஆழத்தில் அழுத்தமாக பதிந்திருக்கும் நினைவுகளைக்
குடிக்க முயன்று தோற்றாலும் கருப்பு ஆந்தை
தினமும் மேலோட்டமாகச் சேரும் நினைவுகளைக் குடித்துவிடுகிறது.
“நாளைக்கு பாரு காங்கிரஸ் தோக்கறத.
மொரார்ஜி தேசாய் எப்படியும் ஜெயிப்பார்.
நர்சிங் இன்னுமா வரல?”
கருப்பு ஆந்தைக்கு இனி இங்கு தீனி இல்லாததால்
உடைந்த வேறொரு கண்ணாடி ஜன்னலையும்
நிறைந்த நினைவுகளையும் தேடிச் செல்கிறது.
“இவங்கல்லாம் யாரு?”
image credit : Artlble, Landscape with Grave Coffin and Owl , Caspar David Friedrich