பிரார்த்தனை – 1

ஸ்ரீதர் நாராயணன்

‘மாதவ்’ என்று உற்சாகமாக கூப்பிட்டுக் கொண்டே வந்தவரைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. நெடுநாள் நட்பினை மீண்டும் கண்ட மகிழ்வும் ஏக்கமும் கலந்த குரல். தயக்கத்தின் சுவடே இல்லாமல் வெடித்து கிளம்பிய நீரூற்றுப் போல வாரியணைத்துக் கொண்டார். ஃபோட்டோவில் பார்த்ததற்கு சற்று வயதானார்ப் போல இருந்தது. முதுகு வளைந்து, நரைகூடி, ஆயாசத்தின் அடையாளங்களாக சுருக்கங்கள் அதிகரித்து, தளர்ந்திருந்தார்.

‘ஹ… அசோக்!’ என்று கைகளைப் பற்றிக் கொண்டேன்.

‘உள்ள வாங்க வாங்க… தனு… தனு…’ என்று சுற்றுமுற்றும் தேடினார்.

‘ஓஹ்ஹ்… டக்குன்னு அடையாளம் கண்டுபிடிச்சிட்டீங்களே… நான் கொஞ்சம் டவுட்டாத்தான் உங்கள பாத்திட்டு நின்னேன். உங்க லெட்டர் கிடைச்சப்போ, சரி ஏதோ ஃபார்மாலிட்டிக்கு சொல்றீங்கன்னுதான்…’

முடிக்குமுன்னர் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார்.

‘ஃபார்மாலிட்டிக்கா? என்ன இப்படி சொல்லிட்டீங்க… எங்க கனவெல்லாம் நனவாக்கினது நீங்கள்லாம்தானே. உங்க ஒவ்வொருத்தர் பிரார்த்தனையும் சேர்ந்துதானே அவன்….’

மேல கையக்காட்டினார். தழுதழுத்த குரலில் ‘எல்லாம் அவன் கருணை’ என்று கண்களை இறுக மூடிக் கொண்டார். பிறகு என் தோளை சுற்றி வலதுகையைப் போட்டு இறுக்கமாக அணைத்துக் கொண்டு சுற்றிலும் திரும்பி பார்த்தபடிக்கு ‘நீங்க எல்லாம்தான் அந்தக் கருணை மழையை எங்க வீட்டுக்கு கொண்டு வந்து சேத்தீங்க. அதுக்காகத்தான் உங்க எல்லோரையும் இங்க ஒண்ணா கூப்பிட்டேன்’

சுற்றிலும் பார்த்தால் நிறைய அறிமுகமில்லாத முகங்கள். யார் யாரோ புன்னகைத்துக் கொண்டும் கைகுலுக்கிக் கொண்டும் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள்.

‘இவங்க விஜி சௌந்தர். தனுவிற்கு உறுதுணையா நின்ன எலலாரையும் ஒண்ணா மீட் பண்ணனும்கிறது இவங்க பிளான்தான்’

தலைக்குமேல் கண்ணாடியை ஏற்றிக் கொண்டு தொளதொள சட்டையணிந்திருந்த ஒரு பெண்மணி ‘ஓ… இவர்தான் நீ சொன்ன மாதவ். கிளாட் தட் யூ மேட் இட் மாதவ். அசோக்கும் தனுஜாவும் உங்களப்பத்தி நிறய சொல்லியிருக்காங்க. தனுஜாவோட போராட்டம் எங்களுக்கு மகத்தானது. ஒரு ஃபேண்டஸி கதை மாதிரி இருக்கு. ஆனா அதுக்கு அவங்க பட்டபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. நீங்கள்லாம்தான் அவங்களுக்கு பெரிய பலம்னு விடாம சொல்லிட்டே இருப்பாங்க. அதிலும் யூ ஆர் வெரி ஸ்பெஷல்’ என்றார். எல்லோரும் சந்தோஷ மனநிலையில் இருந்ததை உணர முடிந்தது.

நான் அந்தக் கூட்டத்தில் தனுஜாவைத் தேடினேன். தலையை சாய்த்துக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்த பெண், கனிந்த உதடுகளை விரித்து புன்னைகத்துக் கொண்டிருந்த அம்மாள், மாம்பழ நிற பட்டுபுடவையில் குள்ளமாக குடுகுடுவென்ற ஓடிக் கொண்டிருந்தவர் என்று நிறைய புதிய முகங்கள். தனுஜா… தனு.. தனு… கடந்த நான்கு வருடங்களாக புகைப்படங்களில்தான் பெரும்பாலும் அவளைப் பார்த்திருந்தேன். அதுவும் முதலில் அசோக் அனுப்பிய கடிதத்தோடு அவர் இணைத்திருந்த படத்தில்தான் அவளைப் பார்த்தேன். மறக்க முடியாத படம் அது.

___ooOO00OOoo____

‘அன்புள்ள மாதவ் மங்கர்,

என் பெயர் சா. அசோக். தமிழ்நாடு செகரட்டேரியட்டில், நிதித்துறையில், செக்‌ஷன் ஆபிஸராக இருக்கிறேன். அறிமுகமில்லாது உங்களுக்கு மடலிடுவதற்கு மன்னிக்கவும். ஆனால், என் மனைவி தனுஜாவிற்கு உங்கள் அறிமுகம் நன்றாகவே உண்டு. இத்துடன் இணைத்திருக்கும் க்ரீட்டிங்க்ஸ் கார்டை அவள் பலமுறை என்னிடம் காட்டியிருக்கிறாள். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவளுக்கு நீங்கள் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்தட்டையாம். தனு இதுநாள்வரை தன்னுடைய எல்லா நண்பர்களிடமிருந்து வந்த கடிதங்கள், வாழ்த்துகள் எல்லாவற்றையும் கவனமாக சேகரித்து வைத்திருக்கிறாள். அது ஒரு பொக்கிஷம் அவளுக்கு. அவ்வப்பொழுது அவற்றையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு, வேணுகோபால், சூர்யகலா, மூக்குத்தி ப்ரியா, வைரவன், ராக்கின்னு என்ற அவளது நீண்ட பட்டியலில் ஒவ்வொருவர் பற்றியும் சொல்வதற்கு அவளுக்கென்று ஏதாவது புதிய விஷயங்கள் அகப்பட்டுக் கொண்ட்டே இருக்கும். மாங்கா ஊறுகாய்னா மாதவ்வுக்கு அவ்வளவு உசிர். நாங்க அவன மாங்கா மாதவ்னுதான் கூப்பிடுவோம் என்று உங்களைப்பற்றி சொல்லி சிரிப்பாள். எத்தனை சம்பவங்கள், எத்தனை நினைவுகள்.

உங்களுக்கு தனுவைப் பற்றியும், மதுரை செயின்ட் தாமஸ் பள்ளி பற்றியும் நினைவில்லாமல் இருக்கலாம். ஆனால் அவள் நினைப்பில் நீங்கள் எல்லோரும் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியபடுத்தவே இந்தக் கடிதம். அவளது உலகம் மிகவும் அற்புதமானது. அதில் நானும் ஒரு அங்கம் என்பதில் எனக்கு மட்டற்ற சந்தோஷம் எப்போதும் உண்டு. அந்த அற்புத உலகில் நான் இடம்பெறும் முன்னரே நீங்கள் எல்லோரும் இருந்திருக்கிறீர்கள். இப்போதும் இருந்து கொண்டிருக்கிறீர்கள். கைகளை கோர்த்துக் கொண்டு தெருவில் நடந்து போகும்போது ‘இப்படித்தான், ஜோயல் ஒருதடவை ஜாமெட்ரி பாக்ஸ்ல ஸ்டிக்கர் ஒட்டி வச்சிருந்தான்’ என்று அவள் ஏதாவது சொல்லத் துவங்கும்போது என்னால் அந்த ஜோயலை உடனே உணரமுடிந்திருக்கிறது. சமயத்தில் அவளே நானாக மாறிவிடுகிறேனோ என்றும் தோன்றும்.

சமீபகாலமாக அவள் நினைவில் பல தடுமாற்றங்கள் குழப்பங்கள் அதிகம் ஏற்படுகின்றன. அவள் ஆத்மார்த்தமாக நினைக்கும் நினைவுகள், அனுபவங்கள் எல்லாம் அவளை விட்டு விலகி விலகிப் போய்க்கொண்டிருக்கிறதோ என்று எனக்கு பதைப்பாக இருக்கிறது. எதுவுமற்ற சூண்யத்தில் அவள் ஆழ்ந்துபோயவிடும் ஆபத்து தெரிகிறது. இந்தக் கொடூர சூன்யவெளியிலிருந்து அவளை மீட்டெடுக்கத்தான் நான் அவளுடைய எல்லா நண்பர்களையும் தேடிப் பிடித்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். கிருஷ்ணன் கோவிலில் உங்கள் குடும்ப கட்டளை நடக்கவிருப்பதாக அறிவிப்பு போட்டிருந்தார்கள். தனுதான் ‘மங்கர் குடும்பம்’ என்று பெயர் பார்த்து உங்கள் புனே விலாசத்தை கோரிப் பெற்றாள்.

உங்கள் நினைவுகள் எல்லாம் அவளை விட்டு என்றென்றும் அகலாமல் இருக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். உங்களுக்கு உங்கள் பள்ளித் தோழியின் நினைப்பே வராமல் போகலாம். ஆனால் அவளுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் எல்லோரும் தனுவோடு எப்போதும் துணை நிற்க வேண்டும்.

இத்துடன் அவளுடைய புகைக்ப்படங்கள் சிலதும் இணைத்திருக்கிறேன். நீங்கள் அனுப்பிய வாழ்த்து அட்டையும் இத்துடன் இருக்கிறது. நீங்கள் அனுப்பும் பதில் அதை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

வாழ்க வளமுடன்
சா. அசோக்’

இப்படித்தான் முடிந்தது கடிதம். முதலில் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை எனக்கு. யார் இந்த தனுஜா? கடிதத்துடன் வந்திருந்த வெளிறிப்போயிருந்த போஸ்ட்கார்டில் ‘டியர் தனு, விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர், மாதவ்’ என்ற சிறுபையன் கையெழுத்தைப் பார்த்ததும் திக்குமுக்காடிப் போனேன். உடனே அம்மாவிடம் கொண்டு காட்டவேண்டும் என்று பரபரப்பாக இருந்தது. இதை எந்தக் கடையில் வாங்கியது, எப்போது போஸ்ட் செய்தது என்றெல்லாம் கூட அவருக்கு நினைவில் இருக்கும். அந்த நினைவுகளில்தான் அவர் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்த்தட்டைகள் பரிமாறிக் கொள்வது போன்ற சிறுவயது சந்தோஷங்கள் எப்படியெல்லாம் நம்மை உயிர்ப்போடு வைத்துக் கொள்கின்றன.

அசோக் அனுப்பிய புகைப்படங்களில் இரட்டைப் பின்னலோடு ‘பம்’மென முகத்தோடு பினோஃபார்ம் அணிந்திருந்த சிறுமி இருந்தாள். ஸ்டூடியோ வெளிச்சத்தில் கோட் அணிந்திருந்த முன்வழுக்கைகாரரோடு, பட்டுப்புடவையில் சங்கோஜமாக ஒரு பெண் சிரித்துக் கொண்டிருந்தாள். அசோக்கும் தனுஜாவும் திருமண சமயத்தில் எடுத்துக் கொண்ட படமாக இருக்க வேண்டும். பிறகு சில படங்களில் வைகை டாம் செயற்கை நீரூற்றுகள், கொடைக்கானலின் பனிப்புகை என்று எல்லாவற்றுடனும் அதே பெண் இருந்தாள். கடைசி படத்தில் மொட்டைத்தலையோடு ‘பளீர்’ என சிரித்துக் கொண்டிருந்ததும் அதே பெண்தானா?

உடனே அசோக்கிற்கு பதில் கடிதம் எழுதினேன். தொடர்ந்து ஃபோனில் பேசியபோதுதான் தனுஜா மார்பக புற்றுநோயை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறாள் என்றுத் தெரிந்தது. ஒரு லும்பெக்டோமி முடித்து மூன்று சுற்றுகள் கீமோதெரபி போய் வந்திருக்கிறாள். லும்பெக்டோமி என்பது புற்றுநோய் பாதிக்கப்பட்ட மார்கபகத்தில் ஒருபகுதியை அறுவைசிகிச்சை மூலமாக அகற்றிவிடுவது. அதுவும் தனுஜாவிற்கு வந்திருப்பது ட்ரிபிள் நெகட்டிவ் மார்பக புற்றுநோய் என்றார்கள். கொடூரத்தில்தான் எத்தனை வகை. முதல் மாமோகிராம் எடுக்கும்போதே ஸ்டேஜ் டூ என்பதால் சிகிச்சையும் தீவிரமாக போய்க்கொண்டிருந்தது. ட்ரிபிள் நெகடிவ் என்றால் குணமாகிவிட்டது போல் பாவ்லா காட்டிவிட்டு மீண்டும் முளைத்து எழுவதற்கு சாத்தியம் அதிகம். மிகுந்த மனோதிடமும், நெருங்கியவர்களின் ஆதரவும் நிறைய தேவைப்படும்.

‘ஹேய்… எனக்கு நினைவு தெரிஞ்சு உன் கிரீட்டிங்க்ஸ்தாண்டா ஃபர்ஸ்ட் என் பெயருக்கு வந்ததுன்னு நினைக்கிறேன். தேர்டு ஸ்டேண்டர்ட் வெகேஷன் இல்லையா… அப்புறம் நிறைய கார்டு, கிஃப்ட் வந்தாலும் உன்னோடதுதான் ஸ்பெஷல். காலேஜ் படிக்கும்போதுதான் எல்லாத்தையும் கலெக்‌ஷனா சேர்க்க ஆரம்பிச்சேன். அப்பதான் உன்னப் பத்தி எல்லாம் நினைவுக்கு வந்தது. இன்னும் மாங்கால்லாம் சாப்பிடறியாடா’

‘மாங்காயா? ரொம்பல்லாம் இஷ்டம்னு இல்ல. ஊறுகாய்னா சாப்பிடுவேன். புளிப்பு அவ்ளோ ஆகாது எனக்கு…’

‘அப்ப யாரு அது முத்தச்சி ஆயாகிட்ட கடனுக்கு சொல்லி மாங்கா வாங்கித் தின்னது? நெல்சன்னு ஒரு குண்டன் இருந்தானே… அவனா?’

ஆனால் எப்போது ஃபோனில் பேசினாலும் மாங்கா மாதவ் என்று கூப்பிடுவதை நிறுத்தவில்லை. ‘அதாண்டா சார்மிங்ஙா இருக்கு’

வரலாற்று புத்தகத்தை புரட்டுவது போல் பக்கம் பக்கமாக அவள் நினைவுகள் பொங்கி என்னை நிறைத்துக் கொண்டே இருந்தது. ஐஸ் விற்கும் ரவி, மார்ச் பாஸ்ட், கடன் வாங்கி கழிக்கும் கணக்கு, பேச்சுப் போட்டிகள், ஹெலன் டீச்சரின் பன் கொண்டை…

‘நான் இனிமே கொண்டை போடனும்னா விக்-தான்டா வச்சுகிடனும். வெளில வாசல்ல போறதுன்னாலே அலர்ஜியா இருக்கு. புவனிகிட்ட பேசினேன். செம க்யூட் அவ பையன் தெரியுமா…’

‘இல்ல தனு… ஃப்ரெஷ்ஷா இருக்கனும் மனசும் உடம்பும். கோவிலுக்குனாவது போயிட்டு வா’

‘கீமோ, ரேடியேஷன்னு போய் போய் நானே இப்ப எலுமிச்சம்பழம் மாதிரி கலர்லதான் இருக்கேன். அப்படியே விட்டா அஷோக் ஊறுகாய் போட்டு சாப்பிட்டுடலாம்’

‘லின்னட் கேப்ரியேல்னு ஒரு லேடி டிவிடி எல்லாம் போட்டிருக்காங்க. நான் வாங்கி அனுப்பறேன். குட்டி குட்டியா நிறைய விஷயங்கள் சொல்லியிருப்பாங்க. எல்லாம் அவங்களோட சொந்த அனுபவம்’

‘ஆமாம்டா… அதே வீடு, அதே கிச்சன், அதே ஊரு, அதே அசோக், அதே கிருஷ்ணன்னு இருந்தாலும் இப்ப எனக்கு நிறய விஷயம் புதுசு புதுசா தெரியுது. நேத்து பூரா எல்லா ஃபோட்டோ ஆல்பத்தையும் முழுசா பாத்தேன். எத்தன பேர் தெரியுமா இருக்காங்க. இவங்கள எல்லாம் பாத்து பேசறதுக்கு தனி ஆயுசு வேணும்டா. நம்ம ஸ்கூல் க்ரூப் ஃபோட்டோ பாத்தேண்டா… ஏம்ப்பா அது நெகடிவ் இல்லயே எப்படி மாங்காக்கு காப்பி அனுப்பறது… என்னது? ஸ்கேன் பண்ணி அனுப்பலாம்னு சொல்லிருக்கு அசோக். மிஸ் பண்ணாமப் பாருடா. எவ்ளோ பேரை கெஸ் பண்றேன்னு பாக்கலாம்’

விடாமல் பேசிக் கொண்டே இருந்தாள். அப்புறம் சற்று நாக்கு குழறி மழலையாக வரத் தொடங்கியது.

‘முதல்ல உலகமே இருண்டு போயிட்ட மாதிரிதான் இருந்திச்சு. கீமோன்னாலே என்னல்லாமோ பயங்கர கற்பனையா இருந்ததுடா. போயிட்டு வந்தப்புறம் ரொம்பவும் குழப்பமாவே இருந்திட்டிருக்கு. இந்தா இது ஏதாவது பார்ட்டிக்கு போயி குடிச்சிட்டு மறுநா ஹாங்கோவர்னு தலயப்பிடிச்சிகிட்டு உக்காந்திருக்குமே அந்த மாதிரிதான் இருந்திச்சு எனக்கு. போனதடவதான் ரொம்பவும் படுத்தி எடுத்திடுச்சு. பதிலுக்கு நானும் இதப் போட்டு படுத்தி எடுத்தேன்’

சுத்தமாக நினைப்பேயில்லாமல் வெந்நீர் ஷவரில் நின்றுகொண்டே இருந்திருக்கிறாள் என்று அசோக் அப்புறம் சொன்னார். ‘நல்லவேளை. பத்து நிமிசத்துல கண்டுபிடிச்சு கூட்டி வந்திட்டேன். நெருப்பு காயமெதுவும் ஆகல. ஒரு கைக்கொழந்த கணக்காத்தான் பாத்துக்க வேண்டியிருக்கு மாதவ். நைட்டெல்லாம் தூங்கவே மாட்டேங்கிறா. ஆப்பரேஷன் ஆன மாரை மாரை தொட்டுப் பாத்துகிட்டு…’ குரல் கம்மிவிட்டது. மீண்டும் தொண்டையை செருமிக் கொண்டு ‘ஒரே அனத்தல். என்னல்லாமோ பேச்சு. புலம்பல். கொஞ்சம் ப்ரோசாக் கொடுத்தப்புறம்தான் தூங்கினா. நீங்கள்லாம் அடிக்கடி அவகிட்ட பேசிட்டே இருங்க மாதவ். நாமதான் அவள இழுத்துப்பிடிக்கனும்’

நிறைய பழைய நண்பர்கள் வந்து பார்த்துவிட்டு போனார்களாம். எல்லா படங்களையும் முடிந்தவரை அனுப்பிக் கொண்டிருந்தாள்.

‘ரொம்ப ப்ரோசாக் வேண்டாம் அசோக். ஹார்மோன் தெரபி எப்ப ஆரம்பிக்கிறாங்களாம்? ஒருதடவக்கு ரெண்டு தடவ கவுன்சிலிங் பண்ணிக்குங்க. அப்பதான் எல்லாம் தெளிவா இருக்கும்’

அப்பப்ப என் குடும்பத்தை பற்றியும் கேட்பாள். சத்யாவைப் பற்றி பொதுவாக சொல்லியிருந்தேன். ‘எவ்ளோ குழந்தைங்கடா?’ ‘ஒரு பொண்ணும்மா. ஹம்சான்னு ஆறு வயசாகுது. வைசாக்ல அவ அத்தை வீட்டுக்கு போயிருக்கா’

திருமணமாகி பத்து வருடங்களாக அசோக் தனுஜா தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. ஒருமுறை எக்டோபிக் ஆகிவிட்டது என்று ஆறுவாரத்திலேயே கலைத்துவிட்டார்களாம்.

‘நானும் ஏதாவது சினிமால நடிக்க போயிருந்திருக்கலாம்டா. ஒரே நைட்ல ‘ட்க்’னு ப்ரெக்னென்ட்டா ஆயிருப்பேன். இரத்தமா எடுத்து எடுத்து டெஸ்ட் பண்ணிட்டே இருக்காங்க. நாளக்கி குழந்த பிறந்தா பால் கொடுக்க ரத்தமே இருக்காது பாத்துக்கோ’

அவர்களின் காத்திருப்பு ஒரு முடிவில்லாத இருண்ட குகை போல் போய்க்கொண்டே இருந்தது. கருமுட்டைகளை அகற்றிவிடுவது பற்றி மருத்துவர்கள் அறிவுறுத்தியபோது முற்றிலும் உடைந்து போய்விட்டார்கள். ரேடியேஷன் சிலசமயம் மெனோபாஸில் கொண்டுவிட்டுவிடும். தனுஜாவிற்கு ஒரு குழந்தையென்றில்லாமல் இரண்டு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கனவு இருந்தது.

‘இவளுக்கு வந்த ம்யூடேஷன் டைப்னால கர்ப்ப புற்றுநோயும் சாத்தியமாம். அதான் கருமுட்டைகள்ல எடுத்து சேஃபா வச்சிட்டு பின்னாடி டெஸ்ட்ட்யூப் பேபி மாதிரி டிரை பண்ணலாம்னு சொல்றாங்க. ப்ரெக்னென்ட் ஆவறச்சே ஹார்மோன் தாக்கம் அதிகமாயிட்டு, ரிலேப்ஸ் ஆயிரும்னு… அடாப்ஷன் பத்திக் கூட யோசிச்சிட்டு இருக்கோம்’

‘அய்யே… அதும் பேச்சு கேக்காத. என்ன கல்யாணம் செய்துகிட்டதுக்கு அதுக்கு ஒரு குழந்தையாவது பெத்துக் கொடுத்திட்டு நிம்மதியா போய் சேந்திடறேன்’

‘ச்சீய்… இரண்டு குழந்தை மூணு குழந்தைன்னு பிளான் போட்டுட்டு ஒண்ணோட நிறுத்திட்டு எங்கப் போயிடப்போற? மெள்ள மெள்ள பெத்துககுங்க. அம்பது வயசில திருச்சூர்ல ஒரு ஆண்ட்டி புள்ள பெத்துகிட்டாங்களாம். உனக்கென்ன போச்சு?’

கீமோ முடிந்தபிறகு இரண்டு வருடங்கள்தான் அவளை பொறுமையாக இருக்க முடிந்தது. டாமோக்ஸிஃபென்னை நிறுத்திவிடுவேன் என்று ஒரே அடம்.

‘அத்த முதல்ல நிறுத்தினாத்தான் என் உடம்புலேர்ந்து கெமிக்கல் எஃபெக்ட்லாம் போகும்டா. எப்ப பாத்ரூம் போனாலும் இங்க தொட்டுபாத்து அங்க தொட்டுபாத்துகிட்டு… பயந்திட்டே இருந்தா போறுமா? அசோக்ட ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன். இதுக்குமேல தாமதமே கிடையாது. வயசு நின்னுகிட்டேவா இருக்கு?’

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சித்தி விநாயகர் கோவில் பிரசாதம் அனுப்பிக் கொண்டே இருந்தேன். அவள் நான்கு வயதில் பார்த்த குட்டி அணிலிலிருந்து, பக்கத்து மளிகைக் கடையில் பார்த்த ரோஜாப் பொதி போன்ற குழந்தைவரை விதவிதமாக பேசி தீர்த்தாள். ‘எங்க அத்தாச்சி கை இம்மாம் பெருசா இருக்கும். அப்படியே ஒத்தக்கையில கைக்குழந்தையை தூக்கிருவாங்க. வூட்ல இருக்கற அத்தன குழந்தையையும் ஒரே கைல தூக்கிரும். அதும் மனசு அப்படிடா. எனக்குந்தான் ரெண்டு கை வெட்டிக்குன்னு படைச்சிருக்கான் பாரு’

சென்ற வருடம் மே மாதம் ஆறாம் தேதி என நினைக்கிறேன். ஃபோனில் தனு வந்தவுடன் மிக சந்தோஷமாக வீறிட்டாள்.

‘பாஸிடிவ்டா. இப்பதான் யூரின் செக் பண்ணேன். அசோக் ஃபோன் எடுக்கவே மாட்டேங்குது. யார்கிட்டயாவது உடனே சொல்லிடனும்னு பரபரன்னு இருந்தது. உன்னைத்தான் உடனே நினச்சுகிட்டேன். நீயும் மாட்டிட்ட’

எனக்கு கண்கள் நிறைந்து தளும்ப உடனே சித்தி விநாயகருக்கு நேர்ந்து கொண்டேன். அடுத்த வந்த மாதங்களில் எவ்வளவு நாட்கள் எத்தனை கோவில்கள் சுற்றினேன் என்று கணக்கே இல்லை. தனுவிடம் உற்சாகமாக உரையாடிவிட்டு பின்னர் அசோக்கிடம் என் கவலைகள் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தேன்.

‘ஏன் அசோக் அவசரப்பட்டீங்க? அஞ்சு வருசமாச்சும் ஆக வேணாமா?’

‘இந்த இரண்டு வருசமும் இந்த குழந்தை நினப்புலதான் அவ உலகமே சுத்திட்டிருந்தது மாதவ். நான் என்ன செய்யட்டும்’

குழந்தை பிறந்த இரண்டு மணிநேரத்தில் ஃபோன் செய்துவிட்டாள். ‘நல்லா வாள் வாள்ன்னு கத்த விட்டாங்க பாவம். இப்பதான் அசந்து தூங்குது. எனக்கு நானே பிரசவமாகி வெளில வந்தமாதிரி இருக்குடா. அதும் எம்புட்டு வேதனைப் பட்டுச்சோ… ரொம்ப க்யூட்டா இவனுக்கு டிம்பிள் எல்லாம் விழுது பாரேன். அம்மா இருந்தா எங்க ஃபேமிலில யார்யாருக்கு கன்னத்துல குழி விழும்னு பெரிய லிஸ்ட்டே போட்டிருப்பாஙக்’

___ooOO00OOoo____

‘மாங்கா மாமா வந்திட்டான் பாரு’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தால் தனுஜாவேதான். தலைமுடியெல்லாம் நன்றாக வளர்ந்து கருநீல புடவையில் கையில் ஒருமாத குழந்தையோடு நின்றுகொண்டிருந்தாள்.

‘அப்பாடி. இப்பவாவது வரனும்னு உனக்கு தோணிச்சே. பிரசவமப்பக் கூட உன்னய பாக்காமலே போயிருவேன்னுதான் நினச்சேன். ஸ்கூல் படிக்கும்போது நீ இவ்ளோ ஹைட் இருந்தியா… நேர்ல எக்கசக்கமா இருக்கியேடா’ அருகில் வந்து கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

‘உன்னப் பாக்க பெருமையா இருக்கு தனு. பாத்தா உன்ன இப்படிதான் நேர்ல பாக்கனும்னு ஒரு விரதம் மாதிரி வச்சிருந்தேன். சித்தி விநாயகர் அருள்தான் எல்லாம். மனசெல்லாம் ரொம்பி வழியுதும்மா. அசோக் அடிக்கடி சொல்ற மாதிரி இது சொப்பனமோன்னு இருக்கு’

தனுவிற்கு குழந்தை பிறந்ததற்கான சிறு கொண்டாட்டம்தான் அது. ஆனால் குடும்பவிழாவாக இல்லாமல் கேன்சர் போராளிகளால் நிறைந்திருந்தது. அங்கிருக்கும் பெரும்பாலோருக்கு தனுவின் உபயத்தால் என் பெயர் தெரிந்திருந்தது. எல்லோரிடமும் கேன்சர் பற்றி ஒரு கதை இருந்தது. மெலோனாமா, ப்ரோஸ்டேட், தைராய்ட், கோலன் என்று விதவிதமான கதைகள். தனுவின் உற்சாகம் பார்க்க பார்க்க பெருமிதமாக இருந்தது.

‘எனக்கு இதுவரை இரண்டு மாஸ்டெக்டோமி ஆயாச்சு’ என்று இயல்பாக சொல்லியவாறே விஜி அருகில் வந்து சோபாவில் அமர்ந்தார் ‘கோக்?’

‘நோ தேங்க்ஸ். ஆக்சுவலி, எனக்கு கேன்சர் பத்தியே தனுஜாதான் ஃபர்ஸ்ட் அறிமுகம். அதுக்கு முன்னாடி இந்த உலகம் மிகவும் அழகான, அமைதியான மீன்தொட்டி மாதிரிதான் நினச்சுகிட்டிருந்தேன்’

‘ஓ… எங்களயெல்லாம் பாத்தபிறகு குரூரமா தெரியுதா?’

நான் சிரித்தேன்.

‘நிச்சயமா இல்ல. இன்னும் அழகா தெரியுது உலகம். வாழ்க்கை எவ்ளோ முக்கியமானதுங்கிறது புரியுது’

‘ரியலி? யூ நோ வாட்… உங்களப் பத்தி ஒண்ணுமே தெரியாது எனக்கு. ஆனா தனுஜாவின் விவரிப்பில் உங்களை அவ்வளவு நெருக்கமா தெரிஞ்சுகிட்டிருக்கேன்’ புன்னகைத்தபடி என் கையை எடுத்து இறுக்கமாக பற்றிக் கொண்டார்.

‘சொல்லப்போனா எனக்கு வந்த இந்த டிசீஸ், இதனோடு நடத்திய போராட்டம், இதிலிருந்து மீண்டது, இவை எல்லாம் ஒரு ப்ளெஸ்ஸிங் மாதிரிதான் இருக்கு. இப்ப நான் முழுவதும் லிபரேடேட்டா லேசாக உணர்கிறேன்’

தலையை பின்னுக்கு தள்ளி காற்றில் அந்த சுதந்திர வாசனையை நுகர்வது போல மூச்சை இழுத்தார். ‘ஐ நீட் எ ஃபேவர் மாதவ். தனு மாதிரி நிறைய பேரோட போராட்டங்களை டாக்குமெண்ட்ரி செய்யறோம். உங்க பைட் ஒண்ணு கொடுக்கனும். உன்னளவுக்கு அவளுக்கு உறுதுணையா இருந்தவர் யாருமில்லங்கிறது அவளோட தீர்மானம். நீ கண்டிப்பா அதில் இருக்கனும்கிறது என் ஆசை. அதிகம் நேரம் ஆகாது. இன்னிக்கே முடிச்சிடலாம். வாட் சே?’

சட்டென கவிந்த கூச்சத்தோடு என்னை உள்ளிழுத்தபடிக்கு ‘இல்லை விஜி. நான் இன்னிக்கே ஏர் – இந்தியால புனே திரும்பறேன். நாலே முக்காலுக்கு ஃப்ளைட்.’ என்னுடைய விலகல்தொனி அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது நன்றாகவே தெரிந்தது.

‘அஞ்சுநிமிஷத்தில் முடிச்சிடலாம். மாதவ் இல்லாம எப்படி தனுவோட போராட்டம் முழுமையாகும்… நீயே சொல்லு’

அவருடைய இறுக்கமான பிடியினுள் நான் என்னை எங்கோ இழந்து கொண்டிருந்தேன்.

‘உண்மைதான். தனுவின் போராட்டத்தில் மாதவ் முக்கிய அங்கம்தான். அவன் திரும்பி வந்ததும், தனு கூடவே இருந்ததும், அந்த புதைசேற்றிலிருந்து அவளை மீட்டெடுத்ததும் எவ்வளவு முக்கியம் என்பதை நன்றாக உணர்கிறேன்’ மூச்சை மெதுவாக இழுத்துவிட்டுக் கொண்டேன். என்னை மீறியபடிக்கு அந்த சொற்கள் வெளியேறியது. விஜியின் கையை இன்னமும் இறுக்கமாக பிடித்தவாறு “ஆனால் அது நான் இல்லை விஜி” என்றேன்.

___ooOO00OOoo____

“தனுவின் கேன்சர் போராட்டக் கதையில் இப்படியொரு சுவாரசிய திருப்பம் நிகழும் என்பதை நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் இல்லையா விஜி? ஒருவேளை இது போன்ற திருப்பங்கள் உங்கள் ஆவணப்படுத்தும் முயற்சிக்கு இன்னமும் சுவாரசியம் சேர்க்கும் என்று கூட நீங்கள் நினைக்கலாம். இல்லையா?’

விஜி மறுதளிப்பாக தலையாட்டுவதை பொருட்படுத்தாமல் தொடர்ந்தேன்

தனு தன்னுடைய சின்னஞ்சிறு குழந்தையுடன் என் முன்னால் தோன்றிய அந்தத் தருணம் எனக்குள் அவ்வளவு நிறைவாக இருந்தது. முழுமையான நிலையில் நான் முற்றிலும் இல்லாமல் ஆகியிருந்தது போல் உணர்ந்தேன். நிறைந்து தளும்பிய உணர்வின் மிகுதிதான் விஜியிடம் நான் பேசிக்கொண்டிருந்தது.

“விஜி. பிரார்த்தனை என்பது ஓரிரு நிமிட இறைஞ்சல் மட்டும்தானா என்ன… அதொரு வலிமிகுந்த பயணம் இல்லையா. தனுவுக்கு, அசோக்கிற்கு எப்படியான ஒரு பிரயாசையான பயணம். அதன் நிறைவாக ஒரு உயிர் தோன்றியிருக்கிறது என்றால் எவ்வளவு பெரிய விஷயம் இது…

எனது குரல் தழுதழுக்கவும் ஆசுவாசப்படுத்த என் கரத்தின் மேல் இன்னோரு கரத்தை வைத்து அழுத்தினார். அவருடைய கண்களும் கலங்கிவிட்டிருந்தது.

‘முதல்முதலாக அசோக் அனுப்பினாரே மாதவ்வோட க்ரீட்டிங்க்ஸ் கார்டு…. அதுவும் அப்படியான ஒரு பிரார்த்தனையின் முழுமைதான் விஜி. இருபத்தைந்து வருடமாக மாதவ்வை பார்க்க மாட்டோமா என்று காத்திருந்த அம்மாவின் மனதை நிறைவடைய செய்த நாள் அது. நீங்கள் நம்பமாட்டீர்கள் விஜி. மாதவ்வின் ஒரு புகைப்படம் கூட எங்கள் வீட்டில் இல்லை. முதலில் புனேயிலிருந்து மதுரைக்கு குடிபோயிருந்ததில் நிறைய குளறுபடிகள், கஷ்டங்கள். பெரிய குடும்பம் சிறிய வருமானம் குறைந்த சாத்தியங்கள் என்று தடுமாறிக்கொண்டிருந்த காலம். ஒருவருடம்தான் அந்த ஊரில் இருக்க முடிந்தது. உச்சக்கட்டமாக தேர்த்திருவிழா கூட்டத்தில் மாதவ் தொலைந்து போனதும் அப்பா வெறுத்துப்போய் மீண்டும் புனேவிற்கே திரும்பிவிட்டார். வடக்காவணி மூலவீதி நவநீத கிருஷ்ணன் மட்டும் கோவில் கட்டளையாக கூடவே வந்தார் ‘

நினைவுகளின் தாக்கத்தில் முழுவதும் நழுவிவிடாமலிருக்க விஜியின் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டு தொடர்ந்தேன்.

‘பாருங்கள் விஜி…. நாங்கள் அஞ்சு பேர் குஞ்சும் குளுவானுமாய் எப்போதும் வீட்டில் நிறைந்து இருந்தாலும் அம்மாவிற்கு மாதவ்வின் ஒவ்வொரு கணமும் மனதிலிருந்து மாறாமல் இருந்தது. இருபத்தைந்து வருடங்களாய் அவனை எதிர்நோக்கி எத்தனை பிரார்த்தனைகள் நிகழ்த்தியிருந்திருப்பார். ஒரு மரத்தடி பிள்ளையார், ஒரு தர்க்கா, ஒரு சர்ச் என்று எந்தக் கோவிலையும் விட்டுவைத்ததில்லை. அவர் உயிரைப் பிடித்து வைத்திருந்ததே மாதவ்வின் வருகைக்காகத்தான். கடைசியில் கிருஷ்ணர் மனமிரங்கி அவனை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்தார் பாருங்கள்…. அந்த தினம்…’

அந்த தினத்தின் கோலாகலத்தை எப்படி விளக்குவது… அது மகிழ்ச்சிக்கான தருணமா, அழுகைக்கான நேரமா என்று புரியாமல் நாங்கள் எல்லோரும் புல்லரித்துப் போய் ஒருவரோடு ஒருவர் தழுதழுத்துக் கொண்டிருந்த நாள் அது. அம்மா மட்டும் எப்போதும் போல குலையாத தீர்க்கத்தோடு பூஜையில் இருந்தார். அந்த வெளிறிப்போன வாழ்த்தட்டையை பார்த்ததும் அவர் முகத்தில் உறைந்துவிட்டிருந்த ஒற்றைப் புன்னகை வெளிச்சம் மட்டும் குறையவேயில்லை.

‘இன்னமும் எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது விஜி. அம்மாவின் மகிழ்ச்சியை மீட்டுக் கொடுத்த பிரார்த்தனை, தனுவின் வாழ்க்கைக்கு அர்த்தத்தை புதுப்பித்துக் கொடுத்த பிரார்த்தனை, மாதவ்வையும் மீட்டு கொடுத்துவிடும். இதோ இந்த குழந்தை கூட மாதவ்வின் பிரதிதான். காத்திருத்தல்தானே பிரார்த்தனையின் பெரும் வலிமை. இல்லையா விஜி’

தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டார் விஜி. பிரார்த்தனைகள் தொடர்ந்து பலன்களை கொடுத்துக் கொண்டேயிருக்கின்றன.

பிரார்த்தனை – 2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.