ஜைமினியின் சொற்கள் எனக்கு மிகவும் தேவையாயிருந்த நம்பிக்கை அளித்தாலும், நாங்கள் ஏன் அங்கு வந்திறங்கினோம் என்பதைக் கண்டறிய விரும்பினேன். இந்த உண்மையை அறிவதற்கான தடயம் ஏதேனும் கிட்டுமா? வானூர்திகளில் தேடத் துவங்கினேன், ஒரு வாரகால தீவிர தேடலில் வெற்றியும் பெற்றேன். ஜான் க்ரிப்பித் என்ற ஒரு அமெரிக்கனின் குறிப்பேட்டைக் கண்டெடுத்தேன். அதில் அவன் நாங்கள் எவ்வாறு இங்கு வந்திறங்கினோம் என்பதன் முழு விபரங்களையும் பதிவு செய்து வைத்திருந்தான்.
oOo
Wow. Just wow! Space Xplorations தலைவர் இன்று என்னை அழைத்தார். என்னோடு லஞ்ச் சாப்பிட வேண்டுமாம்.
இவர்கள் புதிதாய் ஏதோ செய்யப்போகிறார்கள். ராட்சஸன் மாதிரி இருந்தான் அந்த கம்பெனியின் முதலாளி. செவ்வாய் கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்று மனிதன் வாழத்தக்கதாய் இருக்கிறதாம், மனிதர்கள் சிலரை அங்கே அனுப்பத் திட்டமிட்டிருக்கிறார்களாம். புதிதாய் சாதிக்கும் துடிப்பு இவர்களுக்கு இருக்கிறது.
இந்த துணைக்கோளுக்கு அழைத்துப் போய் சில நாட்கள் அதைச் சுற்றிக் காட்டிவிட்டு திரும்பி வந்து விடுவார்கள். இதைச் செய்யும்போதே இந்த இடத்தை ஒரு புது காலனியாகவும் உருவாக்குவதாக இருக்கிறார்கள். என்ன ஒரு துணிச்சல்! இவர்கள்தான் அமெரிக்காவை அமெரிக்காவாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
நானும் இவர்களைப் போன்ற ஒருவனாய் இருப்பதால்தான் என்னை அழைத்து என்னோடு இது குறித்து விவாதித்திருக்கிறார் இந்தத் திட்டக்குழுவின் தலைவர். எதையுமே தலைமை தாங்கிச் செய்து முடிப்பது என் வழக்கம், இதை நான் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன் – இந்த ஒரு வாய்ப்பைத் தவற விடுவேனா? யாரும் தொடாத கன்னிக் கோளில் நம் சுவடுகளை விட்டுச் செல்லும் முதல் சிலரில் ஒருவனாக இருப்பது என்பது என்ன ஒரு சாதனை! இதற்கு சில பில்லியன்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது உண்மைதான், ஆனால் அவர்களுக்கு கொடுத்த பிறகும் என் கையில் பல பில்லியன்கள் இருக்குமே.. ஹஹாஹா… தவிர என்னைப் போன்ற பல பெரும்பணக்காரர்களோடு எந்தக் குறுக்கீடும் இல்லாமல் சில நாட்கள் தனிமையில் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைக்கிறது.
நான் இந்தப் புது கோளுக்குப் பயணம் செல்கிறேன் என்பதை அறிந்து என் நண்பர்கள் பொறாமைப்படுவதைப் பார்க்க வேண்டும். நாளை வரட்டும்.
oOo
மருத்துவச் சோதனைக்கு அழைத்திருக்கிறார்கள், பயிற்சி துவங்கிவிட்டது. என் உடல் தக்க ஆரோக்கிய நிலையில் இருக்க வேண்டுமாம். ஆனால் இதற்கென்று தனி பயிற்சியே தேவையில்லை. தினமும் பத்து கிலோமீட்டர்கள் ஓடுகிறேன், தொடர்ந்து மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கிறேன். பணம் இருந்தால் சும்மா இருந்து உடம்பை என்னவும் செய்யலாம் என்று நினைக்கும் பெருந்தீனிக்காரர்களில் ஒருவனல்ல நான். இப்படிதான் டக்லாஸ் ஹோகன் தொப்பையைத் தூக்கிக் கொண்டு லிமோவில் வந்தான், ஏதோ உலகமே தன் சொத்து என்பதுபோல். ஆனால் அவனுக்கு இடமில்லை என்று சொல்லி விட்டார்கள், “ஸாரி ஸார், நீங்கள் போக முடியாது. உடல் ஆரோக்கியச் சோதனையில் உங்களால் தேர்ச்சி பெற முடியாது,” என்று. “நீ ஒரு குண்டன், உன் அப்பனும் ஒரு குண்டன்,” என்று சொல்லிவிட்டு, அவன் போகிறதைப் பார்த்துச் சிரித்திருக்க வேண்டும்.
oOo
இன்று கிளம்புகிறோம். இறுதி மருத்துவச் சோதனைக்குப்பின் விண்பயண உடுப்புகளை அணிந்துகொண்டு கிளம்ப வேண்டியதுதான்.
இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டார்கள். “உலகின் உச்சியில் இருப்பது போலிருக்கிறது,” என்று பதில் சொன்னேன், ஹஹா!
எல்லாரும் சொல்வதுதான் அது, ஆனால் பத்திரிக்கையாளர்கள் அதை மிகவும் ரசித்தார்கள். உனக்கு குப்பை வேண்டுமா, இதோ குப்பை தருகிறேன், இதுதான் என் கொள்கை. நான் எப்படி பணம் சேர்த்தேன் என்று நினைக்கிறாய்? யாருக்கு எது தேவையோ, அதைக் கொடுக்க வேண்டும். இதுதான் வெற்றியின் ரகசியம்.
oOo
கருப்பர்கள், மெக்சிகர்கள், சீனர்கள்… இவர்களுக்கு இங்கே என்ன வேலை? யாருக்காகக் காத்திருக்கின்றனர்? இவர்களுக்கு இங்கே இடம் கொடுக்கக்கூடாது என்று சொல்கிறேன், வானூர்திப் பணிப்பெண் பதிலளிக்கிறாள், “ஐயா, நாங்கள் அந்தத் துணைக்கோளில ஒரு காலனியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் கட்டிடத் தொழிலாளிகள்”
“இவர்களுடன் பயணம் செய்யவா நான் உங்களுக்கு ஒரு பில்லியன் டாலர்கள் காசு கொடுத்தேன்?” என்று கேட்கிறேன்.
“இல்லை ஐயா அவர்கள் வேறொரு விண்களத்தில் வருவார்கள். உங்கள் விண்கலம் புறப்பட்டுச் சென்றதும் இவர்கள் வருவார்கள்”.
நல்லது.
ஜிம பார்சன்ஸ், அலெக்ஸ் டொனால்ட், ஸர் ஜேம்ஸ் ரைட்- பில்லியனர்ஸ் கிளப் அங்கத்தினர்கள் இன்னும் சிலர் விண்கலத்தில் என்னோடு பயணிக்கிறார்கள். நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம், ஹஹா!
இது போன்ற சகாக்கள்தான் எனக்குத் தேவை. ஆகாயத்தில்கூட நாங்கள் தொழில்முறை விவாதங்கள் செய்து கொண்டிருந்தோம், பூமிக்குத் திரும்பியதும் சில செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அலெக்ஸ் என்னோடு இணைந்து பணிபுரியக்கூடும், புதிதாய் ஒரு தொழில் துவங்கும் எண்ணம் இருக்கிறது.
அதெல்லாம் அப்புறம். இப்போதைக்கு பாதி வழி கடந்து விட்டோம், பரபரப்பாக இருக்கிறது.
oOo
என்ன இது? எச்சரிக்கை விளக்கு ஒளிரத் துவங்கிவிட்டது, அலாரம் வேறு சத்தம் போடுகிறது. வானூர்தி பணிப்பெண் மிதந்து வருகிறாள்- யாரும் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.
சிவப்பு விளக்கு எரிகிறது தாயே, இதற்கு அர்த்தம் என்ன? அதைக் கண்டு கொள்ளாமலா இருக்க முடியும்?
இன்னும் சிலர் வந்து ஒரு பிரச்சினையும் இல்லை, பயணிகள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பெரிதாக ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கிறது.
காப்டன் என்னவோ சொல்கிறான். விண்கலத்தில் ஆக்சிஜன் இல்லையாம், ஆனால் எல்லாரும் பத்திரமாகப் போய் சேர்ந்து விடுவோமாம். இங்கிருந்து செவ்வாயைப் பார்க்க முடிகிறது, ஆனால் விரைவிலேயே இருக்கும் ஆக்சிஜன் அத்தனையும் காணாமல் போய் விடும் என்ற செய்தியில் எல்லாரும் உறைந்து போயிருக்கிறோம்.
oOo
உறைந்து போயிருக்கிறோம் என்றா சொன்னேன்? ஆக்சிஜன் இல்லாமல் ஒவ்வொருத்தராய் செத்து விழுகிறார்கள். நான் மட்டும் எப்படியாவது பத்திரமாக தரை இறங்கிவிட்டால் போதும். கடவுளே கடவுளே.. தேவனே, தேவதேவனே, தேவாதி தேவனே, தேவமகனே, தேவனே!
சிவப்பு விளக்கு வேகமாக ஒளிர்கிறது. ஆக்சிஜன் அளவு…
oOo
அதன்பின் எதுவும் எழுதப்படாத குறிப்பேட்டைப் பத்திரப்படுத்திக் கொள்கிறேன்.
image credit : likely.pl
One comment