மானுடம் குடியமர்ந்த கோள் : திரிகளைத் தொடர்தல்-2

-சிகந்தர்வாசி-

mail-exchanges

முதல்நிலை தகவலறிக்கைகள்
முதல்நிலை தகவலறிக்கைகள் – 2
மானுடம் குடியமர்ந்த கோள் – விபரீத துவக்கங்கள்
திரிகளைத் தொடர்தல்

திரிகளைத் தொடர்தல்-2

இந்த உரையாடலுடன் சில கடிதங்களின் மங்கிய பிரிண்ட் அவுட்களும் எனக்குக் கிடைத்தன. இவை வரலாற்றின் கதவுகளைச் சற்றே திறப்பதாக இருந்தன. மெல்ல மெல்ல என் மக்களின் சரித்திரம் என்னை தன்னுள் இழுத்துக் கொள்கிறது.

To: All Employees of SpaceXploration Corp
From: Mark Podolski, CEO

டீம்,

நாம் சரித்திரம் படைப்போம் என்று உறுதியளித்தேன். நாம் செய்யப்போவது மனித வரலாற்றில் ஈடு இணையற்ற சாதனையாகக் கொண்டாடப்படும். அதகான முதல் அடியை எடுத்து வைக்கப் போகிறோம்.

செவ்வாய் கோள் நோக்கி நாம் சென்ற இரு முறை திட்டமிட்ட பயணங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அவற்றுக்கான காரணங்கள், அவற்றின் நோக்கங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த பயணங்களின் பலன்களை வெளிப்படுத்தும் வேளை வந்துவிட்டது.

செவ்வாயின் ஒரு பகுதி மனிதன் வாழத்தக்கது என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். அங்கு நதிகள் இருக்கின்றன. அதன் வாயு மண்டலம், புவி ஈர்ப்பு வெளி முதலானவற்றை நமக்குத் தக்க வகையில் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது எதிர்பாராத செய்தி. நம்புங்கள், நாங்கள் இத்தகைய முடிவை நோக்கி எங்கள் ஆய்வுகளைத் துவக்கவில்லை. எனக்கே நம் அறிவியலாளர்கள் அளித்த அறிக்கை வியப்பளிப்பதாக இருந்தது. சென்ற இரு செவ்வாய் பயணங்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளன, இப்போது நம் கனவுகள் மகத்தானவையாக உருவாக்கி வருகின்றன. ஆம், நாம் செவ்வாயை வெற்றிக் கொள்ளப் போகிறோம்.

நம் கனவுகள் சாதாரணமானவை அல்ல. செவ்வாயில் ஒரு குடியிருப்பு உருவாக்கப் போகிறோம். நம் மக்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ வேண்டும். பாஸ்டனில் இருந்து ஷாங்காய் பயணம் செய்வது போல் நம் மக்கள் பூமியிலிருந்து செவ்வாய் சென்று வர வேண்டும். நாம் பூமிக்கு அப்பால் சிந்திக்கிறோம். நம் கற்பனையின் எல்லை இந்த அண்டத்தின் மூலைகளைத் துழாவுகிறது.

இனி பரப்பரப்பான நாட்கள் வரவிருக்கின்றன. காத்திருங்கள்.

அன்புடன்,
மார்க்

To: Direct Reports of Mark Podolski
From: Mark Podolski, CEO

டீம்,

என் அலுவலக அறிக்கையை வாசித்திருப்பீர்கள். நாம் மகொன்னததின் விளிம்பில் நிற்கிறோம். உங்கள் ஒவ்வொருவர் பெயரும் வரலாற்று ஏடுகளில் இடம் பெறப் போகின்றன. நாம் இப்போதே செயல்பட்டாக வேண்டும். விரைவில் செயல்படுவோம், விவேகத்துடன் செயல்படுவோம்.

செவ்வாயில் குடியிருப்புகளை உருவாக்குவது என்ற நம் செயல்திட்டத்துக்கு ஒரு முக்கியமான இடுபொருள் தேவைப்படுகிறது: இதுவே நம் கனவுகளை மெய்ப்பிக்கும் – பணம். இதுவரை நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையம் நமக்கு நிதியுதவி அளித்து வந்திருக்கிறது. ஆனால் செவ்வாயை வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தும்போது அரசு அமைப்புகளின் உதவி நமக்குக் கிடைக்காது. இது குறித்து நாசாவின் பாலா மிகத் தீர்மானமாக தங்களிடம் எந்த பண உதவியும் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டார். நாசாவில் ஒரு குழுவினர் செவ்வாயில் குடியிருப்புகளை ஏற்படுத்துவது சாத்தியமல்ல என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது போன்ற எந்த ஒரு முயற்சியும் எதிர்ப்புகளைக் கடந்தே வெற்றி பெற முடியும். கோழைகள் வரலாற்றில் இடம் பெறுவதில்லை. ஸ்டார் ட்ரெக்கை மேற்கொள காட்டுவதானால், மனிதன் செல்லாத இடத்துக்கு செலபவனே வரலாற்றில் புகுகிறான்.

இது தொடர்பாக நான் ஒரு திட்டம் வடிவமைத்துள்ளேன். இனி வரும் சில ஆண்டுகள் இத்திட்டம் நம் நிதித் தேவைகளை நிறைவு செய்வதாக இருக்கும். உலகெங்கும் உள்ள பில்லியனர்கள் பலருடன் உரையாடி வருகிறேன். அவர்கள் செவ்வாய் செல்வதில் ஆரவம் காட்டத் துவங்கியுள்ளனர். போதுமான அளவு பயணிகளை நாம் கொண்டு செல்வதானால்,அவர்களின் பயணத் தொகையைக் கொண்டு நாம் நம் நிதி நிலைமையைச் சரி செய்ய முடியும் என்று ந்மபுகிறேன்.

மேலும் சில நிதி அமைப்புகளுடன் செவ்வாய் கோளில் உள்ள கனிம வளத்தை வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது பற்றி விவாதிக்கத் துவங்கியுள்ளேன். விரைவில் இந்த முயற்சியும் பலனளிக்கும் என்று நம்புகிறேன்.

புதிய சிந்தனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் நீங்கள் அனைவரும் உங்களைத் தயாராக்கிக் கொள்ள இடைப்பட்ட காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
மார்க்

To: Direct Reports of Mark Podolski
From: Mark Podolski, CEO

டீம்,

பில்லியனர்ஸ் கிளப் நம் திட்டங்களை ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டுவிட்டது. நம் விண்வெளி பயணங்களுக்கான நிதித் தொகை கிட்டிவிட்டது.

இதை உங்கள் மொழியில் சொல்வதானால், லிப்ட்ஆப் நேரம் இது. வெற்றி காண வாழ்த்துகள்.

அன்புடன்,
மார்க்

oOo

அப்படியானால் நாங்கள் செவ்வாயில் இருந்தோமா? அது எங்கிருக்கிறது? பூமியிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது? இது எங்கள் தாத்தாக்களுக்குத் தெரிந்திருக்கும். நாங்கள் அவர்களைப் போருட்படுத்தவில்லை.

லிண்டா லூவிடம் கேட்டால் இது குறித்து மேலும் சில தகவல்கள் கிடைக்கலாம். அவளுக்கு அறிவியல் ஆர்வம் உண்டு, அவள் அறிந்திருப்பாள்.

ஏன், இந்த பிரிண்ட் அவுட் மேலும் பல விஷயங்களை அவளுக்குத் தெரியப்படுத்தக்கூடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.