சிகந்தர்வாசி

புலரி

சிகந்தர்வாசி

கடற்கரையோரம் உட்கார்ந்துக்கொண்டு
அவன் கால் தடங்களை பார்க்கிறான்

சம்ஸார சாகரத்தில் ஒரு துளி ரத்தம் போல்
நீர் மேல் காலைச் சூரியன்

கண்ணுக்கு தெரியாத இலக்கை
நோக்கிப் பறக்கும் ஒற்றைப் பறவை

அவன் எழுந்து நடக்கிறான்

காலதேவன் மெல்லிய காற்றாய்
கால் தடங்களை அழிக்கத் துவங்குகிறான்

கிழக்கு வெளுக்கிறது

கடற்கரை ஓரம்

சிகந்தர்வாசி

முடிவில்லா கடல்

சிறு பகுதியில் சிவப்பு நிறம்

தங்கக் கரங்கள் கொண்டழைக்கும் கடல் நுரை

ஓயாத உரையாடல்

எல்லையற்ற கடலையும் வானையும்
அளக்கப் பறக்கும் சிறு பறவை

என் அருகே யாரோ
விட்டுச் சென்ற கால் தடங்கள்

யானை இல்லா மன்றம்

சிகந்தர்வாசி

என்னை மறந்துவிட்டிருந்த கணவரை தினமும்
– குளிப்பாட்டி
– சோறூட்டி
– தேநீர் கொடுத்து
– நடைப்பழகவைத்து
– தூங்கவைத்த
எனக்கு அவர் மறைவு சற்று நிம்மதியை
கொடுத்திருக்கவேண்டும்

மனம்

சிகந்தர்வாசி

சிக்னலில் கார் நின்றபொழுது
இடைவிடாமல் ஒலிகள் கேட்கின்றன
இங்கொன்று அங்கொன்று என்று புகைமண்டலம்
பஸ்ஸுக்காக ஓடும் ஜீன்ஸ் அணிந்த யுவதிகள்
தலையை கலைத்துவிட்டுக்கொண்ட யுவன்கள்
வேண்டா வெறுப்பாக நின்றுக்கொண்டிருக்கும் டிராபிக் போலீஸ்
தெருவின் மறுபக்கத்தில்
சேலை அணிந்து தலை நிறைய மல்லிப்பூவையும்
தோளில் லாப்டாப்பும் சுமந்து ஒரு பெண்
வேகமாக ஆட்டோவை நோக்கி நடக்கிறாள்
சிக்னல் கிடைத்தவுடன் அவள் மறைந்துவிடுகிறாள்

மதியம் லஞ்ச அவரில் யாரும் இல்லா என் அறையில்
மல்லிப்பூ மணம் வீசுகிறது

வாழ்விலே வெம்மை

சிகந்தர்வாசி

சதாப்தி ரயில் விட்டு இறங்கியவுடன்
வெம்மை தாக்குகிறது

தலை மேல் இரண்டு பெட்டிகளையும்
தோளில் ஒரு பையும் சுமந்து கொண்டு
கூலி நடக்கிறான்

பிதுங்கி வழியும் கூட்டத்தைச் சுமந்து கொண்டு
உச்சி வெயிலில் ஊர்ந்து செல்கிறது
ஒரு பஸ்

நடுரோட்டில் இரண்டு வயோதிக பெண்மணிகள்
சுவாரஸ்யமாய் எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்

தவற விட்ட பஸ்ஸைப் பிடிக்க
வேகமாக ஓடுகிறான் ஒருவன்

ஒற்றை வியர்வைத் துளி காதோரத்தில் வழிய
ரயில் நிலைய முகப்புக் கூரையின் கீழ்
காருக்காக காத்திருக்கிறேன் நான்.