சிகந்தர்வாசி

வாழ்வின் வெயிற்காலம்

  சிகந்தர்வாசி

அறையை விட்டு வெளியேற மறுக்கிறது வெம்மை
நினைவுகள் சுவரில் மோதி மோதி
தீச்சுவாலைகளாய் என்னைத் தாக்குகின்றன

வெப்பத்தைத் தணிய வைக்க
இல்லாத ஒருவர் வரவேண்டும்
சொல்லாத சொல் ஒன்றைச்
சொல்ல வேண்டும்

செய்யாத செயல் நம்மைத் தாக்கும்போது
செய்த நற்செயல்கள்  சாமரம் ஆகி
வெப்பம் தணிக்க வழியேதுமில்லை

மழைச் சாரல் போல் சில்லிடும் நினைவுகள்
எனினும் ஏனோ
வெயில் என் வாழ்வில்

காட்சிகள் – சிகந்தர்வாசி

எதையோ பார்த்து சிரிக்கும்
சுருக்கங்களே  முகமான கிழவி

தூரத்தில் 
கதவு மூடும் ஓசை

பச்சை புல்வெளியில் சூரிய கதிர்கள் பட்டு
சிதறும் கனவுகள்

வட்டமான சூரியனை 
சதுரமாக மாற்றும் கண்ணாடி

யாரும் திறக்கத கதவு ஒன்று

'அருகே வா' என்று இடைவிடாது 
அழைக்கும் நதி

இல்லாத ஒருவனை நினைத்து
ஏங்கும் பெண்ணொருத்தி

கிணற்று தண்ணீரை நோக்கில் 
வேகமாக விரையும் கல்

பழைய நினைவுகளில் 
உறைந்த புன்னைகை

ஆசைகள் மேல் தூசு படிந்த
புகைப்படம்

கதை எழுதிய கதை: பெல்லந்தூர் ப்ளைஓவர் சம்பவம்

பெல்லந்தூர் ஃபளை ஓவர் சம்பவம்- கதை எழுதிய கதையைச் சொல்கிறார் சிகந்தர்வாசி

சமீபத்தில் திருப்பதி சென்றிருந்தேன். அங்கு  ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஒருவன் நாங்கள் போய்க் கொண்டிருந்த ஆட்டோ முன்பு வந்து ஏதோ கத்தினான். ஆட்டோ டிரைவர் சற்று முன் சென்று நிறுத்திவிட்டு அவன் வருவான் என்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவன் வரவில்லை. நாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றோம்.

இரண்டு நாட்களில் அந்தச் சம்பவம் கதையாகி வர வேண்டிய இடத்துக்கு வந்து விட்டது.

பெல்லந்தூர் ஃப்ளைஓவர் சம்பவம் – சிகந்தர்வாசி

பெல்லந்தூர் ஃப்ளைஓவர் சம்பவம்

  சிகந்தர்வாசி

 

கோரமங்களாவில் ஆட்டோ பிடித்தேன். ‘இகோ ஸ்பேஸ்’ என்றேன்.

ஆட்டோ கிளம்பிய முதல் ஆட்டோ டிரைவர் கன்னடத்தில் பேசிக்கொண்டு வந்தார். எனக்குத் தெரிந்த கன்னடத்தில் பதில் சொல்லிக்கொண்டு வந்தேன். முக்கால்வாசி நேரம் இருவரும் டிராபிக் பற்றி புலம்பிக்கொண்டு வந்தோம்.

எப்பொழுதும் போல் அகரா பஸ் ஸ்டாண்ட் தாண்டியவுடன் டிராபிக் அதிகமாக இருந்தது. சர்ஜாபூர் ஜங்ஷன் வந்தவுடன் சற்று மூச்சு விட முடிந்தது. ஆட்டோ சற்று வேகமாகச் செல்ல ஆரம்பித்தது.

‘இகோ ஸ்பேஸ்’ஸுக்கு முன்னால் உள்ள பாலம் ஏறும் நேரம் இடது பக்கத்திலிருந்து யாரோ ஒருவன் முகத்தில் பீதியுடன் ‘நிறுத்து நிறுத்து’ என்று ஆட்டோவை நோக்கி ஓடி வரப் பார்த்தான். ஆட்டோ அவனைக் கடந்த பின்புதான் டிரைவர் அவனை கவனித்தான். “டேய்” என்று அவனைப் பார்த்து கத்தினான். அதற்குள் ஆட்டோ ப்ளைஓவர் மேல் ஏறி விட்டிருந்தது. எல்லா பக்கமும் விரைந்து வரும் வாகனங்கள். டிரைவர் இடது பக்கம் சென்று நிறுத்தப் பார்த்தான், ஆனால் அவனால் முடியவில்லை. நாங்கள் ப்ளைஓவர் உச்சிக்கு வந்தபொழுது எல்லா வண்டிகளும் டிராபிக் ஜாமில் சிக்கியிருந்தன.

டிரைவர் தன் மொபைல் எடுத்து ஏதோ நம்பருக்கு டயல் செய்தான். “யாரு அவனு?’ என்று நான் கேட்டேன். “என் மச்சான் சார்” என்றான் தமிழில். பதட்டம். “அவனுக்கு என்ன?” என்று கேட்டேன். “தெர்ல சார். எங்க வூடு இங்க தான். என்ன பிரச்னையோ?” என்று சொல்லிவிட்டு மறுபடியும் மொபைலை அமுக்கினான். மறுமுனையில் யாரும் எடுக்கவில்லை போலும். “இதுங்களுக்கு வாங்கி குடுத்து என்ன லாபம் சார்? எங்கயாவது வச்சிட்டு போயிடும். நமக்கு எதனா எமெர்ஜென்சி இருந்தா இவளுக்கு போன் பண்ணுவோம் ஆனா அது எங்கயாவது சுத்திகினிக்கும்”

வண்டிகள் நகருவதாக இல்லை. டிரைவர் என்னிடம், “ஒரு நிமிஷம் சார்” என்று கூறிவிட்டு, ஆட்டோவை விட்டு இறங்கி, இடது பக்கமாக ப்ளைஓவர் ரோட்டிற்குச் சென்று கீழே பின்னால் திரும்பி பார்த்தான். எம்பி எம்பி பல முறை பார்த்தான். மறுபடியும் மொபைலை அமுக்கினான். பதில் எதுவும் இல்லை. அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.  கீழே இறங்க ஒரு இரண்டடி எடுத்து வைத்தான். அப்பொழுது வண்டிகள் நகர ஆரம்பித்தன. ஓடி வந்து ஆட்டோவை கிளப்பினான்.

“உங்க மச்சான் கண்ல படலையா?”.

“இல்ல சார். அவனும் போன எடுக்க மாட்றான். என் பொஞ்சாதியும் போன் எடுக்க மாட்றா. என்ன ஆயிடுச்சோ?”

மறுபடியும் ஆட்டோ நின்றது. மறுபடியும் அவன் போன் செய்தான். “உன்ன கீள எறக்கிவிட்டு நான் யு டர்ன் பண்ணிக்கினு போறன் சார்”.

“வீடு கிட்ட தானா?”

“ஆமாம் சார்.”

ஒரு வழியாக கீழே இறங்கிவிட்டோம். நான் ஆட்டோ விட்டு இறங்கினேன். நான் இறங்கும் போழுதே அவன் மறுபடியும் மொபைலில் மச்சானையோ மனைவியையோ கூப்பிட்டுக் கொண்டிருந்தான். நான் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்க்காமலே பைக்குள் வைத்தான்.

டிராபிக் வார்டன் வண்டிகளை நிறுத்திக் கொண்டிருந்தான். எங்களை சாலையைக் கடக்கச் சொன்னான். நான் கடக்கும்பொழுது ஆடோ டிரைவர், ‘ஹலோ. இன்னாசி?” என்று கேட்பது காதில் விழுந்தது. அவனுக்கு என்ன பதில் வந்தது என்று தெரியவில்லை.

சாலையை கடந்த பின் திரும்பி பார்த்தேன். ஆட்டோவை ஒரு பஸ் மறைத்திருந்தது. தூரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் சப்தம் கேட்டது.

oOo

ஒளிப்பட உதவி- Onigiri and Arancini

 

 

நான்காண்டுகளுக்குப்பின் – சிகந்தர்வாசி

  சிகந்தர்வாசி

அவர் கைத்தடி ஊன்றியபடி
மெல்ல நடக்கிறார்

கடை வாசலின் விரிசல் விழுந்த கண்ணாடியில்
அவர் பிம்பத்தைப் பார்க்கிறேன்

எனக்காக உழைத்த மனிதர்
என்னை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும்
என்று துடித்தமனிதர்
முதல் முறை நான் திரும்பியபொழுது
என்னைப் பெருமிதத்துடன் பார்த்த மனிதர்

இப்பொழுது தளர்நடை, வெள்ளை மயிர்
இளைத்துப் போன தேகம், தடித்த மூக்\குக் கண்ணாடி
வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து விட்ட மனிதன்
சுகதுக்கங்களைத் தாண்டி, வெறுப்பைக் கடந்து,
சுயநலத்தை என்றோ விலக்கி
உலகை அமைதியான கண்களுடன் நோக்குபவர்
என்று நினைத்துக் கொள்கிறேன்.
நானும் ஒரு நாள் இந்தச் சமநிலையை அடைவேனா?

“பக்கத்து வீட்டு நரசிம்ஹன் சட்டுன்னு ஹார்ட் அட்டாக்ல போயிட்டான்.
இன்னும் கொஞ்சம் தவிச்சு செத்திருக்கலாம் அந்த தேவடியா மகன்”

என்று சொல்லிவிட்டு கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை
பார்த்துக் கொள்கிறார் பெரியவர்..