அவர் கைத்தடி ஊன்றியபடி
மெல்ல நடக்கிறார்
கடை வாசலின் விரிசல் விழுந்த கண்ணாடியில்
அவர் பிம்பத்தைப் பார்க்கிறேன்
எனக்காக உழைத்த மனிதர்
என்னை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும்
என்று துடித்தமனிதர்
முதல் முறை நான் திரும்பியபொழுது
என்னைப் பெருமிதத்துடன் பார்த்த மனிதர்
இப்பொழுது தளர்நடை, வெள்ளை மயிர்
இளைத்துப் போன தேகம், தடித்த மூக்\குக் கண்ணாடி
வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து விட்ட மனிதன்
சுகதுக்கங்களைத் தாண்டி, வெறுப்பைக் கடந்து,
சுயநலத்தை என்றோ விலக்கி
உலகை அமைதியான கண்களுடன் நோக்குபவர்
என்று நினைத்துக் கொள்கிறேன்.
நானும் ஒரு நாள் இந்தச் சமநிலையை அடைவேனா?
“பக்கத்து வீட்டு நரசிம்ஹன் சட்டுன்னு ஹார்ட் அட்டாக்ல போயிட்டான்.
இன்னும் கொஞ்சம் தவிச்சு செத்திருக்கலாம் அந்த தேவடியா மகன்”
என்று சொல்லிவிட்டு கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை
பார்த்துக் கொள்கிறார் பெரியவர்..