பூரிப்பாக இருப்பதாகச் சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் திடீரென்று வெயிட் ஏறுவதை அவனுடைய பாண்ட்டின் தொடைப்பகுதியின் பக்கவாட்டில் தையல்விட ஆரம்பித்தபோதுதான் புரிந்து கொண்டான்.
வழக்கம் போல் ஒரு முறை யூ-டர்ன் எடுத்து துரைசாமி சப்வேக்குள் இறங்க ஆரம்பித்தபோது அவனுக்கு வலப்பக்கம் இருந்த பைக்கோட்டி, “ஸார், பாண்ட் கிழிஞ்சிருக்கு,” என்று சுட்டிக்க்காட்டியபோதுதான் இந்த விஷயம் முதல் முறையாக தெரிய வந்தது- வலப்பக்கம், தொடைப்பகுதியின் பக்கவாட்டில் துணி வாய் பிளந்து கொண்டு நின்றது, திரைச்சீலையின் விலகலில் வானம் வெளிப்படுவதுபோல் அவனது தொடைப்பகுதி கொஞ்சம் தாராளமாகவே தெரிந்தது. அவசர அவசரமாக சட்டையை இழுத்து விட்டு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டான்.
“சோம்பேறியா நாள் முழுக்க டிவி முன்னால உக்காந்து கிடந்தா உடம்பு பெருக்காம என்ன பண்ணும்?” என்று கேட்டுக்கொண்டே அவன் மனைவி அவன் தைத்துக் கொடுக்கச் சொன்ன பேண்ட்டை விசிறியடித்தாள். அவன் தன் தொப்பையைத் தடவிப் பார்த்து, “இடுப்பு சைஸ் எல்லாம் சரியாதானே இருக்கு, அங்கே பட்டன் கிட்டன் உடையலையே,” என்று லாஜிக்காக கேட்டான்.
“இப்படி வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு நிக்கறதுக்கு ஒரு மணி நேரம் நடந்துட்டு வாங்க”.
அவனுக்கு நடக்கும் உத்தேசம் இல்லை.
அப்புறம் அவனது ஒவ்வொரு பேண்ட்டாக தொடைப்ப்குதியின் பக்கவாட்டில் கிழியக் கிழியத்தான் பிரச்சினையின் தீவிரம் புரிந்தது. செல்போனை பேண்ட் பாக்கெட்டில் போடுவதால்தான் கிழிகிறது என்று அதைச் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டான். மாடியேறும்போது ஒவ்வொரு காலாக மடக்கி நீட்டும்போது தொடைப் பகுதியில் உள்ள துணி சுருங்கி விரிவதில்லை என்பதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாடி ஏறுவதைக் குறைத்துக் கொண்டு லிப்ட் பயன்படுத்தினான். எப்போதும் சட்டையை இழுத்து இழுத்து விட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது பெரிய பிரச்சினையாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக புது பேண்ட் வாங்கினால் அது எத்தனை நாளோ என்ற கேள்வியை எதிர்கொண்டு, கிழிசல்விடும் இடங்களை உடனுக்குடன் அவனே தைத்துப் பயன்படுத்திக் கொண்டான்.
அப்புறம் ஒரு நாள் காலையில் அவன் சாப்பிடும்போது குமட்டிக் கொண்டு வந்தது, ஒவ்வொரு கவளம் சாப்பிடும்போதும் நெஞ்கில் எரிச்சல். கவனமாக உருளைக்கிழங்கு காரக்கறியைத தவிர்த்து கொஞ்சம் போல சாதம் சாப்பிட்டுவிட்டு எல்லாவற்றையும் குப்பையில் கொட்டினான். மதியம் சாப்பிடும்போதும் அதே பிரச்சினை. நாலு வாய் சாப்பிட்டுவிட்டு, போதும் என்று எழுந்து விட்டான். அப்புறம் அவனும் அவன் நண்பனும் வழக்கம் போல காலாற ஒரு ரவுண்ட் நடந்து செல்லும்போது எப்போதும் அருந்தும் மோர் வழக்கத்தைவிட வயிற்றை நிறைத்தது திருப்தியாக இருந்தது. “இனி நீராகாரம்தான் நமக்குச் சரிப்படும் போலிருக்கிறது,” என்று சொல்லிக் கொண்டே சட்டையைக் கீழே இழுத்து விட்டுக் கொண்டான்.
அப்புறம் வீடு திரும்பும்போது மறக்காமல் மாம்பலம் கிரேஸ் ஸ்டோர்ஸ் போய், “ப்ரியா லைம் பிக்கிள்” ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டான். அவனுக்கு எலுமிச்சை ஊறுகாய் பிடிக்கும் என்பது மட்டுமல்ல, சாதத்தைக் கரைத்துச் சாப்பிடும்போது தொட்டுக்கொள்ள நல்ல காம்பினேஷனாகவும் இருக்கும்.
“எங்க க்ரோம்பேட் சித்தி மோருஞ்சாதம் மட்டும் போட்டு சித்தப்பாவைக் கொல்றான்னு திட்டிட்டிருந்தோம். இப்பதான் தெரியுது சித்தப்பா எவ்வளவு நெஞ்சழுத்தக்காரர்ன்னு, ஏதும் பேசாத போட்டதை மரியாதையா சாப்பிட்டுட்டு போங்க,” என்று கறாராகச் சொல்லி இன்னும் ஒரு கரண்டி பீன்ஸ் உசிலியைத் தட்டில் வைத்தாள் மனைவி. “வத்தக்கொழம்புச் சாத்துக்குத் தொட்டுக்கிட்டு சாப்பிடக் கசக்குதா என்ன?”
“ஆமாம், எனக்கு நெஞ்செல்லாம் விஷம்,” என்று சொல்லவில்லை, நினைத்துக் கொண்டு, போட்டதைச் சாப்பிடும்போது முதல் கவளம் உள்ளே போகும்போதே காரமாய் ஏதோ ஒன்று நெஞ்சிலிருந்து தொண்டைப் பகுதி வரை எழுந்து வந்து அவன் கண்களை நீரால் நிறைத்தது.