அபிநந்தன்

பஞ்ச காலத்தில்: வங்காளம் – சி ஹெச் சிசொன்

சி ஹெச் சிசொன் (அபிநந்தன்)

இந்தக் குழந்தை என்று நான் சொல்வதில்லை
தன் பெருத்த உடலில்
சாம்பல் சேறு பூசிய இந்தக் குழந்தை
இந்தக் குழந்தை என்று நான் சொல்வதில்லை
இவள் தடுமாறாமல், மகிழ்ச்சியாய் நடக்கிறாள்
ஆனால் இது சொல்வேன்
என் வாகன சன்னலில் பார்க்கிறாளே
இவளது கண்கள் பெரியவை
மிகப் பெரியவை
இவள் மயிர் கலைந்திருக்கிறது, இதழ்களில் சந்தேகம்
இதையும் சொல்வேன்
திறந்த கண்களுடன் நடைபாதையில் கிடக்கிறாளே
இவளை உன்னால் காயப்படுத்த முடியுமா?
அஞ்சும் அக்கண்களில் பாதம் பதிக்க முடியுமா
சாவதற்கு இவள் ஏன் பயப்பட வேண்டும்?
இது ஒரு தவறு
இது ஒரு தவறு இதில் எனக்கொரு பங்குண்டு

(This is an unauthorised translation of the poem, “In Times of Famine: Bengal”, originally written in English by C.H. Sisson. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

தேசாந்தரியின் இரவுப்பாடல் – கதே

கதே (அபிநந்தன்)

 

மலைகளைக் கடந்து
கவிகிறது மௌனம்.
மரங்களை அசைத்து
வீசுவதில்லை காற்று.
சப்தம் ஏதுமில்லை: காட்டில்
சிறு பறவைகளும் மௌனம் காக்கின்றன.
பொறுத்திரு: விரைவில்
நீயும் அமைதி காண்பாய்.

(This is an unauthorised translation of the poem, “Goethe’s Nightsong”, originally written in German by Johann Wolfgang von Goethe, and translated into English by David Lehman. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

ஆப்த வாக்கியம் – பெர்டோல்ட் ப்ரெஷ்ட்

பெர்டோல்ட் ப்ரெஷ்ட் (அபிநந்தன்)


இருண்ட காலங்களில்
பாடுதலும் இருக்குமா?
ஆம், பாடுதலும் இருக்கும்,
இருண்ட காலங்களைப் பற்றி.

(This is an unauthorised translation of the poem, ‘Motto’ to Svendborg Poems, originally written in German by Bertolt Brecht, and translated into English by John Willett. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only)

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

ஆங்க்ஸ்ட்

அபிநந்தன்

பூரிப்பாக இருப்பதாகச் சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் திடீரென்று வெயிட் ஏறுவதை அவனுடைய பாண்ட்டின் தொடைப்பகுதியின் பக்கவாட்டில் தையல்விட ஆரம்பித்தபோதுதான் புரிந்து கொண்டான்.

வழக்கம் போல் ஒரு முறை யூ-டர்ன் எடுத்து துரைசாமி சப்வேக்குள் இறங்க ஆரம்பித்தபோது அவனுக்கு வலப்பக்கம் இருந்த பைக்கோட்டி, “ஸார், பாண்ட் கிழிஞ்சிருக்கு,” என்று சுட்டிக்க்காட்டியபோதுதான் இந்த விஷயம் முதல் முறையாக தெரிய வந்தது- வலப்பக்கம், தொடைப்பகுதியின் பக்கவாட்டில் துணி வாய் பிளந்து கொண்டு நின்றது, திரைச்சீலையின் விலகலில் வானம் வெளிப்படுவதுபோல் அவனது தொடைப்பகுதி கொஞ்சம் தாராளமாகவே தெரிந்தது. அவசர அவசரமாக சட்டையை இழுத்து விட்டு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டான்.

“சோம்பேறியா நாள் முழுக்க டிவி முன்னால உக்காந்து கிடந்தா உடம்பு பெருக்காம என்ன பண்ணும்?” என்று கேட்டுக்கொண்டே அவன் மனைவி அவன் தைத்துக் கொடுக்கச் சொன்ன பேண்ட்டை விசிறியடித்தாள். அவன் தன் தொப்பையைத் தடவிப் பார்த்து, “இடுப்பு சைஸ் எல்லாம் சரியாதானே இருக்கு, அங்கே பட்டன் கிட்டன் உடையலையே,” என்று லாஜிக்காக கேட்டான்.

“இப்படி வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு நிக்கறதுக்கு ஒரு மணி நேரம் நடந்துட்டு வாங்க”.

அவனுக்கு நடக்கும் உத்தேசம் இல்லை.

அப்புறம் அவனது ஒவ்வொரு பேண்ட்டாக தொடைப்ப்குதியின் பக்கவாட்டில் கிழியக் கிழியத்தான் பிரச்சினையின் தீவிரம் புரிந்தது. செல்போனை பேண்ட் பாக்கெட்டில் போடுவதால்தான் கிழிகிறது என்று அதைச் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டான். மாடியேறும்போது ஒவ்வொரு காலாக மடக்கி நீட்டும்போது தொடைப் பகுதியில் உள்ள துணி சுருங்கி விரிவதில்லை என்பதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாடி ஏறுவதைக் குறைத்துக் கொண்டு லிப்ட் பயன்படுத்தினான். எப்போதும் சட்டையை இழுத்து இழுத்து விட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது பெரிய பிரச்சினையாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக புது பேண்ட் வாங்கினால் அது எத்தனை நாளோ என்ற கேள்வியை எதிர்கொண்டு, கிழிசல்விடும் இடங்களை உடனுக்குடன் அவனே தைத்துப் பயன்படுத்திக் கொண்டான்.

அப்புறம் ஒரு நாள் காலையில் அவன் சாப்பிடும்போது குமட்டிக் கொண்டு வந்தது, ஒவ்வொரு கவளம் சாப்பிடும்போதும் நெஞ்கில் எரிச்சல். கவனமாக உருளைக்கிழங்கு காரக்கறியைத தவிர்த்து கொஞ்சம் போல சாதம் சாப்பிட்டுவிட்டு எல்லாவற்றையும் குப்பையில் கொட்டினான். மதியம் சாப்பிடும்போதும் அதே பிரச்சினை. நாலு வாய் சாப்பிட்டுவிட்டு, போதும் என்று எழுந்து விட்டான். அப்புறம் அவனும் அவன் நண்பனும் வழக்கம் போல காலாற ஒரு ரவுண்ட் நடந்து செல்லும்போது எப்போதும் அருந்தும் மோர் வழக்கத்தைவிட வயிற்றை நிறைத்தது திருப்தியாக இருந்தது. “இனி நீராகாரம்தான் நமக்குச் சரிப்படும் போலிருக்கிறது,” என்று சொல்லிக் கொண்டே சட்டையைக் கீழே இழுத்து விட்டுக் கொண்டான்.

அப்புறம் வீடு திரும்பும்போது மறக்காமல் மாம்பலம் கிரேஸ் ஸ்டோர்ஸ் போய், “ப்ரியா லைம் பிக்கிள்” ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டான். அவனுக்கு எலுமிச்சை ஊறுகாய் பிடிக்கும் என்பது மட்டுமல்ல, சாதத்தைக் கரைத்துச் சாப்பிடும்போது தொட்டுக்கொள்ள நல்ல காம்பினேஷனாகவும் இருக்கும்.

“எங்க க்ரோம்பேட் சித்தி மோருஞ்சாதம் மட்டும் போட்டு சித்தப்பாவைக் கொல்றான்னு திட்டிட்டிருந்தோம். இப்பதான் தெரியுது சித்தப்பா எவ்வளவு நெஞ்சழுத்தக்காரர்ன்னு, ஏதும் பேசாத போட்டதை மரியாதையா சாப்பிட்டுட்டு போங்க,” என்று கறாராகச் சொல்லி இன்னும் ஒரு கரண்டி பீன்ஸ் உசிலியைத் தட்டில் வைத்தாள் மனைவி. “வத்தக்கொழம்புச் சாத்துக்குத் தொட்டுக்கிட்டு சாப்பிடக் கசக்குதா என்ன?”

“ஆமாம், எனக்கு நெஞ்செல்லாம் விஷம்,” என்று சொல்லவில்லை, நினைத்துக் கொண்டு, போட்டதைச் சாப்பிடும்போது முதல் கவளம் உள்ளே போகும்போதே காரமாய் ஏதோ ஒன்று நெஞ்சிலிருந்து தொண்டைப் பகுதி வரை எழுந்து வந்து அவன் கண்களை நீரால் நிறைத்தது.

குளிர்காலப் பனி இரவில்.- நிமா யூஷிஜ்

.- நிமா யூஷிஜ் – 

இந்தக் குளிர்காலப் பனியிரவில் ..

சூரியனின் மையத்திலும்

என் விளக்கின் தகிப்பில்லை

 

அனைத்தைக் காட்டிலும் பிரகாசிக்கும் என் விளக்கொளியில்

நிலவின் உறைபனி விளக்கு சோபையிழக்கிறது

 

அனைத்தும் உறைந்த ஓர் இரவுப் பொழுதில்

என் அண்டை வீட்டுக்காரனுக்கு நான் விளக்கேந்தி நிற்கின்றேன்

 

பைன் மரங்களிடையே காற்று சூறையாடியபோது

ஊமை மலைகளில் அவன் தொலைந்து போனான்.

 

குறுகிய பாதையை விட்டு விலகிப் போனான்,

எனினும் என் உதடுகளில் அவன் சொல்லிச் சென்ற

கதையை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்:

 

விளக்கேற்றுவது யார்? தகிப்பில்ல் வாடுவது யார்?

தன் இதயத்தில் என் கதையைப் பொதித்திருப்பது யார்?”

 

இந்தக் குளிர்காலப் பனியிரவில் ..

சூரியனின் மையத்திலும்

என் விளக்கின் தகிப்பில்லை

 

நன்றி MPT Magazine