சிகந்தர்வாசி

கண்ணுக்குள் காட்சி- சிகந்தர்வாசி

 சிகந்தர்வாசி

இந்த அறை சிறியதாக இருக்கிறது

நான் ஓடி ஆடிய காலத்தில் இவ்வளவு சிறியதாகவா இருந்தது?
சுவர்கள் இவ்வளவு அழுக்காகவா இருந்தன?

என் நினைவில் மின்னும் சுவர்கள் இங்கு இல்லை
விவரிக்க முடியாத ஒளியும் இல்லை
நினைத்துப் பார்த்தபொழுது கிடைத்த சுகம்
அறைக்குள் நிற்கும்பொழுது ஏன் இல்லை?

ஜன்னல் வழியே பார்த்தால் ஒரே புகை
வீதியில் பல வாகனங்கள்
இன்னும் இங்கு கிரிக்கெட் விளையாடுகிறார்கள்
இங்கா நாங்கள் விளையாடினோம்?

மறைந்த காலத்தை உயிர்ப்பிக்க
தொலைந்த இடத்தைத் தேடி வருவது போல்
கொடுமை வேறொன்றில்லை.

கண்ணாடி

 சிகந்தர்வாசி

கண்ணாடியில் எல்லாம் பளிச்சென்று தெரிகின்றன-
வயல்வெளி, ஓடை, மாடுகள்
உண்மையுலகை விட்டு நம்மை விலக்கி வைக்கிறது கண்ணாடி

தூரத்தில் கால் தடுக்கி விழும் குழந்தை
அதன் அழுகையை காண முடிகிறது
ஆனால் குரல் என்னை வந்தடைவதில்லை

குரல் இல்லா நினைவுகளைக் காண்கிறேன்
பல வருடக் காட்சிகள் வந்து மறைய
ஒளி பட்டு புண் ஆறிவிட்டிருக்கிறது

மறைந்த காலத்தை கண்ணாடியில்தான் பார்க்க முடியும்

என் விருப்பத்துக்குக் காலமும் வெளியும் விரிகின்றன
கண்ணாடியில்

இரவு நெருங்க
என் முன்னுள்ள உலகம் மெல்ல மறைகிறது

௦௦௦

ஒளிப்பட உதவி – devorahsperber.com 

பிக்னிக் புகைப்படம்

 சிகந்தர்வாசி

பெல் பாட்டமும் சிவப்பு கலரில் கருப்பு
கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்த
இளைஞன் ஒரு கையால் ஆலமரத்தின்
விழுதைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறான்

இன்னொரு கை வானத்தை நோக்கி உயர்ந்திருக்க
டார்ஜான் போல் கத்த வாய் பிளந்திருக்கிறது

கீழே நின்றிருக்கும் எல்லா பெண்களும் அவனைப்
பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
எல்லோர் கண்களின் ஒளியும் அவன் மீது
பட்டுச் சிதறுகிறது

சிவப்பு கலர் பாண்ட்டும் வெள்ளை கலர் அரைக்கை
ஷர்ட்டும் அணிந்த அம்மாவின் பார்வையும்
அவன் மேல்தான் படிந்திருக்கிறது

ஆனால்

சுற்றியிருக்கும் பெண்கள் போல் அல்லாமல்
அவள் கண்களில் ஒரு பெருமிதம் தெரிகிறது
மற்றவர்கள் போல் அவள் உரக்கச் சிரிக்கவில்லை
ஆனால் அந்த கண்கள் அவனையே….

நான் புகைப்படத்தை உற்றுப் பார்க்க பார்க்க
அம்மா மனுஷியாக மாறிக்கொண்டிருக்கிறாள்

– சிகந்தர்வாசி

குடும்ப ஃபோட்டோ

சிக்கந்தர்வாசி

அப்பாவுக்கு அப்பொழுது இளவயதாக இருந்தாலும்
கசங்கிய புகைப்படத்தினால் நெற்றியில் சுருக்கங்கள்
எதிர்காலத்தை பிரதிபலிப்பதுபோல்

பாவாடை தாவணியில் இருக்கும் அக்கா
எதிரியைப் பார்ப்பது போல் காமெராவை முறைக்கிறாள்
இரட்டை ஜடையில் ஒன்று முன்னும் ஒன்று பின்னுமாக இருக்கிறது

நாற்காலியில் சாய்ந்தபடி அரை நிஜாரில்
படியப்படிய வாரிய தலையுடன் நான்
கடைக்கண்ணால் காமெராவைப் பார்க்கிறேன்

எங்களுக்கு பின்னால் ஆணி அடித்து மாட்டிய
டெய்லி காலண்டரில் இருக்கும் கடவுள் யார் என்று
சரியாகத் தெரியவில்லை
(முருகராக இருக்கலாம்)

சீராக ஓடிக்கொண்டிருக்கும் காலத்தை
உறைய வைக்கப் பார்க்கும் காமெராவைப் பார்த்து
நாங்கள் எல்லோரும் உறைந்து நிற்கிறோம்

ஒளிரும் அம்மாவின் கண்கள் மட்டும்
இந்தக் கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு
வண்ணம் சேர்க்கின்றன

..

ஒளிப்பட உதவி- imgkid.com

இரவின் எதிரொலிகள்

சிகந்தர்வாசி 

 

 

என்னை வெறுமை சூழ்ந்திருக்கிறது

காலை மாலை என்று அவருக்காகவே வாழ்ந்துவிட்டு
இப்பொழுது எனக்காக வாழவேண்டும் என்றால்
எப்படி வாழ்வதென்று புரியவில்லை

ஆனால் வாழ்க்கை நம்மை வாழவைத்துவிடும்

கடைசி இரண்டு வருடங்களுக்கு மேல்
நான் யார் என்பது அவருக்கு தெரியவில்லை
அவர் கூவியதெல்லாம் பால்யத்தில்
தன்னுடன் விளையாடிய லக்ஷ்மியின் பெயரையும்
தன் உதவியாளராக இருந்த கோவிந்தின் பெயரும்தான்

எங்களை பார்க்கும்போழுது அவர் கண்ணில் எப்பொழுதாவது
ஒளி தோன்றும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தோம்
ஆனால் யாரும் அறிய முடியாத வெறுமை மட்டுமே
அவர் கண்ணில் குடியிருந்தது

நினைவுகளை தோண்டி தோண்டி அவர் மேல் வீசினேன்
அவர் செவிவழி அவை சென்று, மனதைத் தொட்டு
அதில் எழும் ஒலி ஒளியாக மாறி அவர் கண் வழி
வெளிவரும் என்று நம்பினேன்

படகே இல்லா நடுக்கடலில்
எதை பிடித்துக்கொண்டு கரையேறுவது?

ஒளிப்பட உதவி – Matthews Gallery