உடல்நலம் குன்றியபின், மனநிலை பாதிக்கப்படும்வரை கோயா பேனிஷ் அரசவையில் ஒரு சாதாரண ஓவியராகதான் இருந்தார். ஆனால், அவரது அல்டாமிரா குடும்ப உருச்சித்திரங்களில் கோயாவை பின்னர் சூழ்ந்த இருளின் நிழல்கள் சாயத் துவங்கிவிட்டனவா என்ற கேள்வியை எழுப்புகிறார் மார்கன் மீஸ், ஸ்மார்ட் செட் என்ற பத்திரிக்கையில்.
அக்கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம்:
1780களிலேயே தான் பின்னர் அளிக்கப்போகும் படைப்புகளைப் பற்றி கோயா கனவு காணத் துவங்கிவிட்டாரா? மிகவும் வழக்கமான முறையில் வரையப்பட்டிருக்கும் இந்த உருச்சித்திரங்களில் பிற்காலத்திய கோயாவின் சாயல்கள் உள்ளனவா? 18ஆம் நூற்றாண்டின் பிற்காலத்துக்குரிய ஸ்பெயினின் அரசவைச் சூழலில் வலம் வந்த இளம் கோயா, முன்னேறத் துடிக்கும் இந்த ஓவியர், அப்போதே வினோத காட்சிகளைக் காணத் துவங்கிவிட்டாரா?
ஆம் என்று நாம் துணிந்து கூற முடியும் என்று நினைக்கிறேன். காரணம், பூனைகள். சிறுவன் மானுவல் அல்டாமிராவின் உருச்சித்திரத்தில் பூனைகள் இருக்கின்றன. இரு பூனைகள் தரையில் அமர்ந்திருக்கின்றன, சிறுவன் மானுவலின் பின், அவனுக்கு மிக அருகில். பூனைகள் மானுவலின் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் மாக்பை பறவையை (magpie) உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. பலரும் கூறியுள்ளபடி இது அந்த உருச்சித்திரத்தில் கூடுதலாக ஒரு அச்சுறுத்தும் தன்மையைச் சேர்க்கிறது. ஒரு குழந்தைக்குரிய களங்கமின்மையுடன் அவன் தன் மாக்பை பறவையை நடத்திச் செல்கிறான். ஆனால் அந்தக் குழந்தைக்குத் தன் பறவை அபாயநிலையில் இருப்பது தெரியவில்லை. வீட்டில் வளர்க்கபப்டும் இந்தப் பூனைகள் நம்ப முடியாத அளவுக்கு வசதியான ஒரு வாய்ப்பைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை அவன் அறியவில்லை.
இந்தக் காட்சியில் சிரிப்பதற்கு எதுவோ ஒன்று இருக்கிறது. மானுவல் ஒரு சிறுபிள்ளை. ஆனால் அவனை ஒரு சிறுபிள்ளை என்று சொல்லிவிடவும் முடியாது. சக்திவாய்ந்த அல்டாமிரா குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருப்பதால், அவன் ஒரு வாரிசும்கூட. அவனது உடுப்பின் அலங்காரத்தைப் பார்த்தாலே போதும். இந்தச் சிறுவன் தன்னை அழுக்காக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை, தன் உடுப்பைக் கொஞ்சம் அலங்கோலமாக்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்படாதவன். இவன் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் விளையாட அனுமதிக்கப்படவுமில்லை. ஒரு பறவையைக் கயிற்றில் கட்டி வீட்டைச் சுற்றி நடத்தி அழைத்துச் செல்வதுதான் அவனது விளையாட்டு. அவனால் புரிந்து கொள்ள முடியாத நாசூக்குகளின் பல அடுக்குகள் அவனைச் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. அவனது விதி நிர்ணயிக்கப்பட்டு விட்டது, இதன் பொருளைப் புரிந்து கொள்ளும் வயதை அவன் இன்னும் எட்டாதபோதே. எனில், பார்வையாளர்களாகிய நமக்கு பூனைகள் தடயங்களாகின்றன – தான் அறியாதிருக்கும் ஒரு நாடகிய தருணத்தில் அவனுக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதற்கு அடையாளமாக. தன் பின்னாலிருக்கும் பூனைகள் தன் செல்லப்பறவையை ஆவலோடு அளவு எடுத்துக் கொண்டிருப்பதை அவன் அறியாதிருப்பதைப் போலவே அவனுக்கு அரசவைச் சதித்திட்டங்களைப் பற்றியும் எதுவும் தெரியாது….
oOo
பூனைகளைப் பற்றிய அச்சம், எப்போதும் நாய்களைப் பற்றிய அச்சத்திலிருந்து வேறுபட்டே இருந்திருக்கிறது. நாய் வெறி பிடித்தது போல் நடந்து கொள்ள முடியும். நாய் மனிதன்மீது பாய்ந்து அவனைக் காயப்படுத்த முடியும். இங்குள்ள அச்சம், உடல்சார்ந்தது. பூனைகள் குறித்த அச்சத்தை இதுபோல் வரையறுக்க முடியாது. பூனைகள் வித்தியாசமானவை. சிலசமயம் அவை வேற்றுலகில் இருப்பது போல் நடந்து கொள்கின்றன. பூனைகளின் இருப்புத் தளம் நமதோடு எப்போதும் நேரடித் தொடர்பில் உள்ளதல்ல என்பதுபோல் பூனைகள் நடந்து கொள்கின்றன. சிலசமயம் பூனைகள் வெறுமையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அல்லது, நம்மால் பார்க்க முடியாத எதையோ பார்த்துக் கொண்டிருக்கின்றனவா?
கோயா கொடும்பிணியுற்றபோது, அவரது அடிப்படையே ஆட்டங்கண்டது. நோய் அவரை மாற்றிவிட்டது – அவர் இந்த உலகை வேறு வகையில் பார்க்கச் செய்தது. இந்த உலகில் மான்ஸ்டர்கள் (பூதங்கள்) இருக்கும் சாத்தியம் உள்ளது என்பதை கோயா கருதத் துவங்கினார். அவர் பிணியுற்றிருந்தபோது இந்த மான்ஸ்டர்களை அவர் கண்டும் கேட்டுமிருந்தார். ஆனால் அவரது நோய் குணமான பின்னும் இவை அவருடன் தங்கிவிட்டன.
நிழல்களில் பேய்களும் பூதங்களும் பிணந்தின்னிகளும் மறைந்திருக்கின்றன என்ற நினைப்போடு Caprichos ஓவிங்களில் கோயா விளையாடிப் பார்த்தார். சில ஆண்டுகளிலேயே, தன் தலைக்குள் உள்ள மான்ஸ்டர்களுக்கு உருவம் கொடுக்க குழந்தைகளுக்கான கதைகளில் வரும் பூதங்கள் போன்ற பாத்திரங்களை வரையும் தேவை கோயாவுக்கு இல்லாது போனது. நெப்போலியனின் படைகள் ஸ்பெயினமீது போர் தொடுத்தன. தேசமெங்கும் கொரில்லா யுத்தம் வெடித்தது. இந்தப் போரின் கொடூரங்களை கோயா கண்டார். அவரது Caprichos இப்போது உருமாற்றம் கொண்டு The Disasters of War என்ற அச்சோவியங்கள் ஆயின (prints). இவற்றில் பலவற்றைக் கண்கொண்டும் பார்க்க முடிவதில்லை.
அவற்றைப் பார்ப்பது கஷ்டமாக இருப்பதற்குக் காரணம் நாம் காண விரும்பாததைப் பார்க்கச் சொல்லி நம்மை அவை கட்டாயப்படுத்துகின்றன. 44ஆம் ப்ளேட்டில் “இதைக் கண்டேன்” என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. கூட்டமாய் மக்கள் தப்பியோடுவதை அது சித்தரிக்கிறது. ஒருவன் இன்னொரு மனிதனைப் பற்றியிழுத்துக் கொண்டு முன்னோக்கி ஓடுகிறான். ஒரு பெண் தன் கரங்களில் ஒரு குழந்தையை ஏந்தியிருக்கிறாள், அந்தக் குழந்தை திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைவருமே பயங்கரமான எதையோ பார்த்திருக்கின்றனர், அவர்கள் தப்பித்தாக வேண்டும் என்று அறிந்திருந்தாலும் அவர்களால் தாங்கள் கண்ட காட்சியிலிருந்து பார்வையைத் திருப்பிக் கொள்ள முடியல்லை. பிரிண்ட்டில் இருப்பவர்கள் எதைப் பார்த்தார்கள் என்பது தெளிவாக இல்லை, “இதைக் கண்டேன்” என்று எழுதும்போது கோயா எதைக் கண்டார் எண்பது தெளிவாக இல்லை. ஆனால் அதெல்லாம் பரவாயில்லை – ப்ளேட் 44 கொடூரத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
மான்ஸ்டர் என்ற சொல்லின் மூலம், ‘monstrare’ என்ற லத்தின் வினைச்சொல் Monstrare என்பதன் பொருள், ‘சுட்டு’ அல்லது ‘காட்டு’ என்பதாகும். இதிலிருந்துதான், ‘நிகழ்த்திக் காட்டு’ (demonstrate) என்ற பொருளும் ‘கல்வி புகட்டு’ என்ற பொருளும் வருகின்றன. மான்ஸ்டர்களைக் காட்டும் விஷயத்தில் கோயாவுக்கு எப்போதுமே தனித்திறமை இருந்திருக்கிறது. காரணம், அவரால் அவற்றை மெய்யாகவே பார்க்க முடியும்.
தங்களிடம் உள்ள தனிப்பார்வையின் சிறப்பாற்றல்களால் தாமறிந்த புறத்தோற்றத்தின் மெய்யியல்பைக் காட்டவோ, அழகுக்கும் அப்பால் உள்ள ஆழமான ஏதோ ஒன்றைக் காட்டவோ சில ஓவியர்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் கோயா அப்படியல்ல. மான்ஸ்டர்களை அடையாளம் கண்டுகொள்ளும் திறமை தனக்கு இருப்பதை அவர் உணர்ந்து கொண்டார். பலரைக் காட்டிலும் கோயா அதிகம் காண்கிறார் என்பதை ரெட் பாய் என்ற ஓவியத்திலேயே நம்மால் சொல்ல முடிகிறது, மான்ஸ்டர்கள் இப்போதே அவரிடம் வந்து விட்டனர். “உன் கண்கள் திறந்திருக்கின்றனவா? இதையும் உன்னால் பார்க்க முடிகிறதா?” என்று கேட்பதுபோல் அவரது மூன்றாம் பூனை இருட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
image credit :
முழு கட்டுரையை வாசிக்க – Smart Set