பிரார்த்தனை – 2

 எஸ். சுரேஷ் –

கிரெடிட் கார்டுக்காகவோ இல்லை பெர்சனல் லோனுக்காகவோதான் யாரோ அழைக்கிறார்கள் என்று அந்த நம்பரைப் பார்த்ததும் நினைத்தேன். நாலு வார்த்தை நன்றாக திட்டலாம் என்று மொபைலை எடுத்தேன்.

“என் மனைவி உங்களுடன் இரண்டாம் வகுப்பு வரை ஃபிலோமினா ஸ்கூலில் படித்தார்” என்று அந்த ஆண்குரல் ஆரம்பிக்க, நான் குழம்பிப் போனேன்.

“என் பெயர் அசோக். தெரியாதவர்களுக்குப் போன் செய்தால் அவர்கள் நான் ஏதோ பர்சனல் லோன் கொடுக்கும் ஆள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

இறுக்கமாக இருந்த என் முகம் தளர்ந்தது. நானும் வாய்விட்டுச் சிரித்தேன்.

“அந்த மாதிரி பண்ணி வச்சிட்டாங்க சார் இவங்கெல்லாம்”.

“ஆமாம்,” என்றேன் நான்.

“அத விடுங்க சார். பேச ஆரம்பிச்சா அத பத்தி நாள் பூரா பேசலாம்” என்றார் அவர். “நான் உங்கள கூப்பிட்டது வேற ஒரு விஷயமா”.

‘சொல்லுங்க” என்றேன்.

“என் மனைவி பெயர் தனுஜா. நாங்கள் தனு என்று கூப்பிடுவோம். அவர் உங்களுடன் இரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்”

“தனுஜா?” தலையைச் சொறிந்தேன்.

“ஹ ஹ… நான் இதைதான் அவளிடம் சொன்னேன். இரண்டாம் வகுபபில் கூடப்படித்தவர்களை எல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க முடியுமா என்று. ஆனால் அவளுக்கு உங்களையும் முக்கியமாக உங்கள் குடும்பப் பெயரான ‘அம்மவாரு’வையும் மறக்கமுடியவில்லை. அதை வைத்துதான் உங்களை கண்டுபிடித்தேன்”.

“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தனுஜா என்ற பெயர் கேட்டதுபோல் கூட இல்லை. அந்தப் பெயரில் ஒரு நடிகை இருக்கிறார். கஜோலின் அம்மா. அதனால் தனுஜா என்று ஒருவர் என் வகுப்பில் இருந்தால் ஞாபகம் இருந்திருக்கும்.” என்றேன்

“ஹா. இப்பொழுது தான் நினைவுக்கு வருகிறது. அவள் ஸ்கூல் பெயர் வேறே என்று. அவளை சந்த்யா என்று ஸ்கூலில் அழைப்பார்கள். வீட்டில் தனு”.

சந்த்யா எங்கோ கேட்ட மாதிரி இருந்தது.

“ஃபிலோமினா ஸ்கூல் இரண்டாம் வகுப்பு வரை கோ-எஜூகேஷன். மூன்றாம் வகுப்பிலிருந்து பெண்கள் பள்ளியாக மாறிவிடும். நான் அதற்கு பிறகு பாய்ஸ் ஸ்கூலில் படித்தேன். என்னுடன் படித்த எந்த ஒரு பெண்ணும் ஞாபகத்தில் இல்லை. சொல்லப் போனால் அந்தப் பள்ளியில் என்னுடன் கூடப்படித்த யாரையும் எனக்கு ஞாபகம் இல்லை. பத்ரி, ரமணி என்ற இரட்டையர்கள் தவிர” என்றேன்

“நானும் அதைதான் யூகித்திருந்தேன். ஆனால் என் மனைவிதான் உங்களுடன் மறுபடியும் தொடர்பு கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். அவள் பால்யகால நண்பர்கள் எல்லோருடனும் மறுபடியும் பேச வேண்டும், சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதனால்தான் உங்களை தொடர்பு கொண்டேன்”

“ஏன்? எதாவது ரீ-யூனியன் ப்ளான் செய்கிறாரா?” என்று கேட்டேன்.

“ஹ்ம்ம். ஆஆ.. ம்ம்… இது சற்று சீரியஸான விஷயம். சில மாதங்களுக்கு முன்பு தனுவுக்கு ப்ரெஸ்ட் கான்சர் இருப்பது தெரிய வந்தது. நாங்கள் இருவரும் ஆடிப் போய்விட்டோம். எங்களுக்கு ஒரு பெண் இருக்கிறாள். பதினான்கு வயது. ஒன்பதாவது படிக்கிறாள். என்ன செய்வது என்று புரியவில்லை. புற்றுநோய் என்று டாக்டர் சொன்னாலும் நம் காதில் மரணம் என்றுதான் விழுகிறது. சினிமாகாரங்க அப்படி செஞ்சி வச்சிருக்காங்க” என்று சொல்லிவிட்டு சிரித்தார். “டாக்டர் நல்லவர், பாவம், “நீங்க பயப்பட வேண்டாம். சினிமாவுல பாக்கற மாதிரி ரத்தம்லாம் கக்க மாட்டாங்க. இதை குணபடுத்திடலாம். வடு இருக்கதான் செய்யும், ஆனா உயிரும் இருக்கும். நல்ல வாழ்க்கையும் இருக்கும்” என்று சொன்னார்”

அதற்கு பிறகு அவர் பல டெக்னிகல் சொற்களை சொன்னார். எனக்கு புரிந்ததெல்லாம் ஆபரேஷன் செய்து மார்பின் ஒரு பகுதியை எடுத்து விடுவார்கள். கீமோ செய்வார்கள். அதற்கு பக்க விளைவுகள் உண்டு என்பதுதான்.

“இது வந்த பிறகுதான் தனு தன்னோட நண்பர்கள தேட ஆரம்பித்தாள். நீங்கள் அவள் நோட்டில் ஒரு பக்கத்தில் ஒரு பூவும் இன்னொரு பக்கத்தில் சூரிய அஸ்தமனத்தையும் வரைந்திருக்கிறீர்கள். அதைப் பார்த்தவுடன் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றாள். அந்தத் தேடல் இப்பொழுது முடிந்தது” என்றார்.

“எப்படி என் நம்பரை கண்டுபிடித்தீர்கள்”

சற்று நேரம் மெளனமாக இருந்தார். பிறகு, “சில நாட்களுக்கு முன் உங்கள் பெயர் பத்திரிகையில் வந்ததல்லவா? அப்பொழுதுதான் உங்கள் சர்-நேம் பார்த்துவிட்டு ‘இவன்தான் என் கிளாஸ்மேட் ‘ என்று என் மனைவி சொன்னார். அதற்கு பிறகு லிங்க்ட்-இன் சென்று உங்கள் நண்பர்கள் யார் என்று அறிந்து அவர்கள் மூலம் உங்கள் நம்பரை பெற்றேன்” என்றார்.

பத்திரிகையில் என் பெயர் வந்தது என்று அவர் சொன்னவுடன் எனக்கு ஏதோ மாதிரி ஆகிவிட்டது. ஆனால் அவர் அதைப் பற்றி ஒன்றும் கேட்காமல் மேலே சென்றது எனக்கு நிம்மதியாக இருந்தது.

“எப்படியோ உங்கள கண்டுபிடிச்சாச்சு. இனிக்கி தனுவுக்கு உடம்பு அவ்வளவாக சரியில்லை. கீமோவுக்கு காலையில் சென்றோம். அவள் இப்போது தூங்கிவிட்டாள். நாளை உங்களுடன் பேசச் சொல்கிறேன்,” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. யார் இந்த தனு அல்லது சந்த்யா? எவ்வளவு மூளையை கசக்கினாலும் அவள் ஞாபகம் வரவில்லை. இது ஒருபுறம் இருக்க அவள் கணவன் என் விஷயத்தை பத்தரிகையில் படித்தேன் என்கிறான். இது எனக்கு சங்கடமாக இருந்தது.

நான் ஒரு கம்பெனி ஆரம்பித்து அதை வேறு ஒரு பெரிய கம்பெனிக்கு விற்றேன். எனக்கு பணமும் கிடைத்தது, அப்போது என் பெயர் பத்தரிகையில் வந்தது. அப்பொழுது எனக்கு ஒரு சங்கடமும் இல்லை. சில மாதங்களுக்கு முன் என் இரண்டாவது கல்யாணமும் முறிந்தது. முதல் மனைவிக்கு ஹிஸ்டீரியா. எவ்வளவோ பொறுத்துப் பார்த்தும் ஒன்றும் சரியாகவில்லை. கடைசியில் அவள் பெற்றோரும் என் பெற்றோரும் சம்மதிக்க விவாகரத்து ஆனது. அதன்பிறகு ஒரு வருடம் கழித்து நான் காதலில் விழுந்தேன். அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டேன். முதல் இரண்டு வருடங்கள் நன்றாக ஓடின. என் கம்பெனியும் செழித்தது. அவளும் ஒரு ‘ரைசிங் ஸ்டார்’ என்று ஐடி வளாகங்களில் அறியப்பட்டாள். குழந்தை பற்றி பிறகு யோசிக்கலாம் என்று முடிவு செய்தோம்.

வேலைப் பளு, இருவருக்கும் இருந்த ஈகோ, வேறு வேறு வாழ்க்கைப் பார்வை என்று பல காரணங்களால் காதல் இறந்து போனது. இருவரும் இனி சேர்ந்திருப்பது முட்டாள்தனம் என்று முடிவு செய்தோம். விவாகரத்து கிடைத்தது. இருவரும் ஓரளவுக்கு பிரபலமாக இருந்ததால் ஏதோ ஒரு பத்திரிகை எங்கள் விவகாரத்தை ஒரு செய்தியாக வெளியிட்டது. “மறுபடியும் திருமணம் செய்து கொள்வீர்களா?” என்ற கேள்விக்கு, “எனக்கு காதல் மீதும் திருமணம் மீதும் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. எதிர்க்காலத்தில் அவை மறுபடி நிகழலாம்” என்று என் மனைவி கூறியதாகவும், ” நான் பெண்களை வெறுக்கிறேன். எனக்கு அவர்கள் சகவாசமே இனி வேண்டாம். இரு முறை தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறு நடக்கவே நடக்காது” என்று நான் சொன்னதாகவும் வெளியிட்டிருந்தார்கள். ஆனால் நானோ “இப்பொழுது நான் இன்னொரு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு ஒரு பிரேக் வேண்டும். அதற்கு பிறகு என்ன நடக்கிறது பார்ப்போம்” என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனால் இது போல் போட்டால் அவனுக்கு பத்திரிகை விற்காது.

அடுத்த நாள் மாலை தனு அழைத்தாள். முதலில் அவள் கணவன் பேசிவிட்டு அவளிடம் கொடுத்தார்.

“ஹெலோ” என்றாள். குரல் தீனமாக இருந்தது. வலியைப் பொறுத்துக்கொண்டு பேசுவது போல் இருந்தது. குரலைக் கேட்டவுடனே இவருக்கு உடம்பு சரியில்லை என்று காட்டிக் கொடுத்துவிட்டது அந்த ‘ஹெலோ’.

“ஹலோ” என்றேன் நான்.

“ஸாரி டு டிஸ்டர்ப் யூ. எனக்கு பழைய நண்பர்களோட மீண்டும் டச் வச்சிக்கணும்னு ஆசை வந்தது. அதனாலதான் உங்கள தேடிப் பிடிக்கச் சொன்னேன். உங்களுக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே?” என்று கேட்டாள்.

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு இதில் அவ்வளவாக இஷ்டம் இல்லைதான். விவாகரத்துக்குப் பின் பலர் என்னுடன் அடிக்கடி பேசினார்கள். அம்மா தினமும் அழைத்து என் இரண்டாம் மனைவியை திட்டினாள். என்னிடம் இருந்து பணம் கறக்கதான் அவள் என்னைத் திருமணம் செய்து கொண்டாள் என்றுகூட கூறினாள்.

அக்கா அமெரிக்காவிலிருந்து அழைப்பாள். அவளும் இதே பாட்டு பாடினாள். பேஸ்புக் சென்றாலும் இதே தொல்லை. எல்லோரும் எனக்கு மானாவாரியாக அட்வைஸ் செய்தார்கள். முடிந்த அளவு யாருடனும் எதுவும் பேசுவதைத் தவிர்த்து வந்தேன். எனவே இப்பொழுது தனுவுடம் பேசியே தீரவேண்டுமா என்று எனக்குள் ஒரு கேள்வி இருக்கத்தான் செய்தது.

“எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை. தாராளமாகப் பேசலாம்,” என்றேன்.

“என்னை உனக்கு ஞாபகம் இல்லை என்று என் கணவர் சொன்னார். எனக்கு உன்னை நன்றாக ஞாபகம் இருக்கிறது. நாம் பலமுறை சேர்ந்து லஞ்ச் சாப்பிட்டிருக்கிறோம்” என்றாள் தனு.

“ஓ, அப்படியா? எனக்கு உண்மையிலேயே ஞாபகம் இல்லை” என்றேன் நான்.

“அது சகஜம்தான். எனக்கே பல பேர் ஞாபகம் இல்லை. நீ என் புத்தகத்தில் வரைந்தாய். அதுவும் போக உன் சர்-நேம் நன்றாக மனதில் பதிந்திருக்கிறது. அதனால்தான் உன்னை இன்னும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறேன்”.

நான் பதில் ஏதும் கூறவில்லை. சில வினாடிகள் மெளனமாக இருந்தோம். பிறகு சம்பிரதாயத்திற்காக அவள் உடல்நிலை பற்றி விசாரித்தேன். என்னால் ஆறுதலாகவும் கடமைக்காகவும் எதுவும் வார்த்தைகள் சொல்ல முடியவில்லை. அவள் சொல்வதை ‘ஹ்ம் ஹ்ம்’ என்று உம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நிறைய பேசியதால் அவளுக்கு மூச்சிரைக்க ஆரம்பித்தது. “சரி, இன்னொரு நாள் பேசலாம்” என்று சொல்லிவிட்டு உரையாடலை முடித்துக் கொண்டாள்.

வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை கூப்பிட்டு பேசுவாள். சில நேரங்களில் அவள் கணவனும் பேசுவான். சிகிச்சை எப்படி போகிறது என்று சொல்லுவாள். அவள் எப்படி இருக்கிறாள், முன்னேற்றம் இருக்கிறதா, இன்னும் எவ்வளவு நாள் சிகிச்சை என்ற தகவல் எல்லாம் கிடைக்கும். ஆனாலும் என்னுடைய மனோநிலை வேறு மாதிரி இருந்தது. இரண்டாவது விவாகரத்து என்னை பாதித்திருந்தது. எங்கு தவறு செய்தேன் என்று புரியவில்லை. என் நண்பர்கள், என் உறவினர்கள் என்று பலரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாகதான் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்கள். எனக்கு மட்டும் என் இப்படி ஆனது?

இந்த மனநிலையில் தனுவின் பேச்சு எனக்கு அயர்ச்சி கொடுப்பதாகவே இருந்தது. அவள் படும் கஷ்டங்களைக் கேட்டுக்கொண்டேனே தவிர அது என்னை பாதிக்கவில்லை. ஏதோ தொலைகாட்சியில் வரும் சோகக் காட்சியை பார்ப்பதுபோல்தான் இதையும் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் இப்படிச் சொல்வது பலருக்கு தவறாக படலாம், ஆனால் இதுதான் உண்மை. என்னால் அவள் கஷ்டத்தில் பங்கேற்க முடியவில்லை.

எப்பொழுது அவள் போன் வந்தாலும், ‘எடுக்க வேண்டுமா? பேச வேண்டுமா?’ என்றுதான் தோன்றியது. ஆனாலும் பேசிக் கொண்டிருந்தேன்.

இப்படி போய்க் கொண்டிருந்தபோது ஒரு நாள் தனுவின் கணவன் “முப்பத்தெட்டு வயசுல இந்த வியாதி வருவது கொடுமை சார்” என்று சொன்னதுதான் எனக்கு குழப்பத்தை உண்டாக்கியது. அவளுக்கு முப்பத்தெட்டு வயதென்றால் அவள் என்னைவிட நான்கு வயது சிறியவள். அன்றிரவு பழைய நண்பன் பத்ரிக்கு மெயில் அனுப்பினேன். அவனுக்கு எங்களுடன் படித்த பலருடனும் தொடர்பு இருந்ததால் அவனிடம் தனுவைப் பற்றி கேட்டேன். அவள் ஸ்கூல் பெயர் சந்த்யா என்று சொன்னேன். அவன் எங்கள் வகுப்பில் படித்த சில பெண்களிடம் கேட்டதாகவும், அவர்கள் அந்தப் பேரில் யாரும் வகுப்பில் இருந்ததில்லை என்று சொன்னதாகவும் அடுத்த நாள் பதில் போட்டிருந்தான்.

இப்பொழுது என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை. ‘தனுவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை அவளிடம் இப்பொழுதே சொல்லிவிடுவதா? இல்லை இன்னும் சில நாட்கள் கழித்து சொல்வதா? நமக்குத் தெரியாத எவ்வளவோ பேருக்கு குணப்படுத்த முடியாத வியாதிகள் இருக்கின்றன. எல்லோருக்கும் நம்மால் ஆறுதல் கூற முடியுமா? சம்பந்தமே இல்லாத இந்த உறவை வளர்க்க வேண்டுமா? இன்னொரு உணர்ச்சி வலையில் சிக்கி தவிக்க எனக்கு தெம்பு இல்லை. உடனே சொல்லிவிடுவதே மேல்.’ இப்படி பல உரையாடல்கள் என்னுள் நிகழ்ந்தன. எனக்கு சோர்வாக இருந்தது. டிவி ஆன் செய்துவிட்டு பழைய ஹிந்திப் பாடல்கள் பார்க்க ஆரம்பித்தேன்.

அப்பொழுதுதான் அந்த அழைப்பு வந்தது. நம்பரைப் பார்த்தேன். அவள்தான். எடுக்காமல் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரம் தொடர்ந்து ஒலித்து நின்றது கைபேசி. பத்து நிமிடம் கழித்து மறுபடியும் அலறியது. நீண்ட நேரம் அதை அலற விட்டேன். அது ஒலித்து நின்ற பிறகு எஸ்.எம்.எஸ். வந்த சப்தம் வந்தது. எடுத்துப் பார்த்தேன்.

தனுவிடமிருந்துதான். “உன்னுடன் பேச வேண்டும் என்று இரு முறை அழைத்தேன். முடிந்தால் கூப்பிடு,” என்று எழுதியிருந்தாள். இதுவரை நான் அவளை என்றும் அழைத்ததில்லை. அவள்தான் என்னை அழைத்திருக்கிறாள்.

நான் அழைக்கவேண்டாம் என்று டிவி பார்த்துக் கொண்டே இருந்தேன். இரண்டு நல்ல கிஷோர் குமார் பாடல்கள் ஓடின. ஆனால் மனம் ஏனோ அதில் லயிக்கவில்லை. அவளை அழைக்கலாம் என்று கைபேசியை எடுத்தேன். ஆனால் அழைக்கவில்லை. அடுத்த பாடல் தொடங்கியது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்தான்.

கூடவே பாடினேன். பல்லவி முடியும் வரைதான் கூடப் பாட முடிந்தது. கைபேசி எடுத்து அவளை அழைத்தேன்.

“ரொம்ப பிஸியா?” என்று கேட்டாள்

“ஆம், எனக்கு வேலை நிறைய இருக்கிறது,” என்று சொல்ல நினைத்தேன். “இல்லை. மொபைல் சைலண்ட் மோட்ல இருந்தது. அதுனாலதான் கேக்கல” என்றேன்.

“இன்னிக்கி வலி ரொம்ப ஜாஸ்தி. அதுக்கு மேல வாந்தி வேற. தலவலி வேற. நடக்கறதே கஷ்டமா இருக்கு. இன்னும் வலி போகல. யாரோடையாவது பேசணும் போல இருந்தது. பெண்ணும் ஹஸ்பண்டும் வீட்ல இல்ல. அதுனாலதான் உன்ன கூப்பிட்டேன். எவ்வளவு நாள் இந்த வலிய தாங்கிக்கணுமோ, ஆண்டவா… எப்போதான் விடிவு காலம் வருமோ தெரியல. சில சமயம் போயிட்டா நல்லா இருக்கும்ன்னு தோன்றுகிறது. வலி தாங்க முடியல” என்றாள்.

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் எனக்கு ஏன் என்று புரியவில்லை, ஆனால் அன்றைக்கு அவள் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு பச்சாதாபத்திற்கு பதிலாக கோபம்தான் வந்தது. “வியாதின்னு வந்துட்டா வலி வரத்தான் செய்யும். அதிலயும் இது கான்சர். வலி அதிகமாதான் இருக்கும். ‘வலி வலி’ன்னு அழுதா ஒரு லாபமும் இல்லை. பொறுத்துக்க வேண்டியது தான். வேற வழி இல்லை,” என்றேன். சொன்னவுடன்தான் என்னையே நான் நொந்து கொண்டேன். என் கருணையற்ற சொற்களைக் நினைக்க எனக்கே கஷ்டமாக இருந்தது.

அவள் மௌனமானாள். நானும் எதுவும் பேசவில்லை. சில வினாடிகள் கழித்து அவள் பேச்சை மாற்றினாள், “அது என்ன பாட்டு? பழைய கிஷோர் பாட்டா?” என்று கேட்டாள்.

அவளை என் வார்த்தைகள் புண்படுத்தியிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது. மன்னிப்பு கேட்க வேண்டும். இதை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று மனசாட்சி கூறியது.

“ஆமாம். கிஷோர் பாடல்தான்” என்றேன்.

“என்ன பாட்டு?”

“கடி பதங் படத்துல வர “யெஹ் ஜோ மகோபத் ஹை” பாட்டு”

“கடி பதங் எல்லா பாட்டுமே எனக்கு பிடிக்கும். முகேஷ் பாட்டுதான் ஒட்டாம இருக்கும், ஆனா அது ரொம்ப நல்ல பாட்டு” என்றாள்.

“ஆமாம்”

இன்னும் கொஞ்சம் நேரம் பாடல்கள் பற்றி பேசினாள். அவள் உடனே வைத்துவிட்டால் மரியாதை இல்லை என்பதற்காக ஏதோ பேசுகிறாள் என்பது நன்றாகத் தெரிந்தது. நானும் உரையாடல் சீக்கிரம் முடிந்தால் நன்றாக இருக்கும் என்ற தொனியில் பேசினேன். ஓரிரண்டு பாடல்களைப் பற்றி பேசியபிறகு, “சரி. இப்போ பெண்ணும் ஹஸ்பண்டும் வந்து விடுவார்கள். பிறகு பேசுகிறேன்” என்றாள்.

கைபேசியை கோபமாக சோபா மேல் எறிந்தேன். எனக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. நான் பேசியது எனக்கே பிடிக்கவில்லை. அதே சமயம் யாரோ தெரியாத ஒருவருக்கு நாம் ஏன் ஆறுதல் சொல்ல வேண்டும்? நமக்கே எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. அதற்கு மேல் இதெல்லாம் இழுத்து போட்டுக்கொள்ள வேண்டுமா? இவள் எதற்கு என்னைக் கண்டுபிடித்தாள்? அதவும் தவறான ஒருவனை? இரண்டாம் வகுப்பில் படித்தவனை முப்பது வருடன் கழித்து கண்டுபிடிக்கவில்லை என்று யார் அழுதார்கள்? சற்று நிம்மதியாக இருக்கலாம் என்றால் விதி என்னுடன் ஏன் இப்படி விளையாடுகிறது?

அந்த வாரம் அவள் அழைக்கவில்லை. அடுத்த வாரமும் அவள் அழைப்பு வரவில்லை. எனக்கோ ஒரு புறம் குற்ற உணர்வு. இன்னொரு புறம் ஒரு வித நிம்மதி. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ‘சரி. அவளுக்கு போன் செய்து நான் அவள் நண்பன் நானில்லை இல்லை என்று சொல்லிவிடலாம். போன முறை பேசியதற்கு மன்னிப்பு கேட்கலாம். அவள் ரொம்ப இங்கிதமாக என் குடும்பம் பற்றி கேட்காமல் இருந்தாள். எனக்கு ஏன் அந்த இங்கிதம் இல்லாமல் போயிற்று? மன்னிப்பு கேட்க வேண்டியதுதான்’ என்று நினைத்துக்கொண்டேன்.

அப்பொழுதுதான் நான் அவள் நம்பரை சேவ் செய்து வைக்கவில்லை என்பதை உணர்ந்தேன். போன முறை அவள் மிஸ்ட் கால் பார்த்து அழைத்திருந்தேன். ‘விதி வலியது’ என்று நினைத்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டேன்.

ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. நான் மெதுவாக இந்த சம்பவத்தை மறந்து கொண்டிருந்தேன். இரண்டு கம்பெனிகளில் போர்டு மெம்பராக நியமிக்கப்பட்டேன். வேலை பளு அதிகமாக இருந்ததால் இதைப்பற்றி சிந்திக்க நேரம் இல்லாமல் இருந்தது.

ஒரு இரவு நான் எப்பொழுதும் போல் பழைய ஹிந்தி பாடல்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது கைபேசி ஒலித்தது. சென்னை நம்பரை பார்த்தவுடன் தனுதான் கூப்பிடுகிறாள் என்பது தெரிந்தது. என் மனம் இதைப் பார்த்தவுடன் சந்தோஷப்பட்டதைக் கண்டு எனக்கே ஆச்சரியமாக இருந்தது. டக்கென்று கைபேசியை எடுத்து பட்டனை அழுத்தி, “ஹல்லோ” என்றேன்.

“கிஷோர் பாட்டுதான் இன்னும் போய்க் கொண்டிருக்கிறதா?” என்று எடுத்தவுடன் கேட்டாள்.

“ஹ ஹ ஹ. ஆமாம்” என்றேன்.

“எந்தப் பாட்டு?”

“அனாமிகா படப் பாடல்”

“மேரி பீகி பீகிஸி?”

“அதேதான்”

“அருமையான பாடல். ஹிந்தி பாடல்களுக்கு நம் இளமைக் காலம்தான் அற்புதமான காலம்”

“சந்தேகம் என்ன? ராஜேஷ் கன்னா பட பாடல்கள் எல்லாம் மறக்க முடியுமா?”

“ராஜேஷ் கன்னா என்றால் பெண்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும்”

“ஹ ஹ ஹ ஆமாம். எங்களுக்கெல்லாம் டிம்பிள்” என்றேன்

அவள் சிரித்தாள். “இளம் வயதில் டிம்பிள் ரொம்ப அழகாக இருப்பாள்”

உரையாடல் கொஞ்ச நேரம் சினிமா பற்றியே இருந்தது. இதற்கு முன் அவளுடன் பேசும்போது நான் அவள் உடல்நிலையைப் பற்றி என்றுமே கேட்டதில்லை. அவள்தான் அது பற்றி கூறுவாள். இந்த முறை நான் கேட்டேன், “நீ எப்படி இருக்கிறாய்?”

“நல்ல இம்ப்ரூமெண்ட் இருக்கிறது. ‘வர்ஸ்ட் இஸ் ஓவர்’ என்று டாக்டர் சொன்னார். வலியெல்லாம் குறைந்திருக்கிறது. இப்பொழுதெல்லாம் நான் அடிக்கடி சிரிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

நானும் சிரித்தேன். “வெரி குட்” என்று சொன்னேன்.

இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு முடிந்தபின்னும் நான் சிரித்துக் கொண்டிருப்பதை அப்புறம்தான் கவனித்தேன்.

வாரம் ஒரு முறை தவறாமல் பேசினேன். ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அவள் சொன்னாள், “இப்பொழுது எனக்கு கான்சர் துளிகூட இல்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார். கீமொவின் சைட் எபக்ட்ஸ் முழுவதும் மறைந்து விட்டது. இப்பொழுது நான் பழைய தனுவாக இருக்கிறேன். பழைய தெம்பு வந்துவிட்டது”

“சந்தோஷமாக இருக்கிறது” என்றேன் நான்.

“ஒரு நிமிடம். என் கணவர் உன்னுடன் பேசவேண்டும் என்கிறார்”

“ஹலோ சார். எப்படி இருக்கீங்க. உங்கள எங்க வீட்டுக்கு கூப்பிடணும்னு தான் இன்னிக்கி போன்” என்றார்.

“நீங்க சென்னைல இருக்கீங்க. நானோ இங்க ஹைதராபாத்ல”

“நீங்க இப்படி தப்பிபீங்கன்னு தெரியும். ஒரு கம்பெனி போர்டு மீட்டிங் சென்னைல இருக்கு. அதுக்கு நீங்க சென்னைக்கு வங்கன்னு எனக்கு தெரியும். எங்க வீட்டுக்கு டின்னருக்கு வாங்களேன்?’ என்றார்.
“ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்காது ஆனா சாப்பிடற மாதிரி இருக்கும்” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தார். நான் வருவதாக உறுதியளித்தேன்.

அது பெரிய வீடாக இருந்தது. வாசலில் பெரிய தோட்டம். இரண்டு மாடி வீடு. குடும்பமாக என்னை வரவேற்றார்கள். எல்லோரும் சாப்பிட்ட பிறகு, “எனக்கு நாளை காலை ப்ளைட் பிடிக்க வேண்டும். நீங்கள் தனுவுடன் பேசிக் கொண்டிருங்கள்” என்று சொல்லிவிட்டு அவளது கணவர் படுக்கச் சென்றார். கொஞ்ச நேரத்திலேயே தனக்குத் தூக்கம் வருகிறது என்று அவளது மகளும் எழுந்து போய்விட்டாள்.

டைனிங் டேபிள் இரு பக்கமும் எதிரெதிராக நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தபிறகு தனு சொன்னாள், “இவ்வளவு நாள் சப்போர்ட்டாக இருந்ததற்கு ரொம்ப தாங்க்ஸ். நான் எப்போ கூப்பிட்டாலும் நீங்க என்னோட பேசினீங்க. ஒரு காலத்துல ரெண்டு க்ளாஸ் ஒன்றாக படித்தோம் என்ற ஒரு காரணத்துக்காக நீங்க என்னோட டார்ச்சர் தாங்கிக்க வேண்டி இருந்தது” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

அவள் வீட்டிற்கு வரும்போது இருந்த குற்ற உணர்வு இப்போது பலமடங்கு அதிகமானது. இதற்கு மேலும் மறைக்க கூடாது என்று எண்ணி, “ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். நான் உன்னுடைய கிளாஸ்மேட் இல்லை. நமக்குள் நான்கு வயது வித்தியாசம் இருக்கிறது. நான் என் நண்பனைக் கேட்டு உறுதி செய்துக்கொண்டேன். உனக்கு இதைச் சொல்ல வேண்டும் என்று பல முறை நினைத்தேன். ஆனால் சொல்ல முடியவில்லை. ஐ யாம் சாரி” என்று முடித்தேன்.

அவள் எதுவும் பேசவில்லை. நான் இதுவரை சொல்லாமல் இருந்ததற்கு காரணம் விரிவாக சொல்ல வேண்டுமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஆனால் அவள் மௌனத்தைப் பார்த்து நான் எதுவும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் இருவரும் பேசாமல் இருந்தோம்.

இந்த குற்ற உணர்வு எப்பொழுதும் மனதை விட்டு நீங்காது என்று நினைத்துக்கொண்டு, ‘சரி, இனி கிளம்ப வேண்டியதுதான்’ என்று நான் எழுந்திருக்கும்போழுது அவள் மெதுவாகச் சொன்னாள், “எனக்கும் தெரியும் நீ என் கிளாஸ்மேட் இல்லை என்பது”.

எனக்கு குழப்பமாய் இருந்தது, “ஆனால் நீதான் …”

“ஆமாம். முதலில் நீ என்னுடன் படித்தவன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் நீ, ‘வலி இருந்தால் பொறுத்துக் கொள்ளதான் வேண்டும்’ என்ற தொனியில் பேசினாய். அப்பொழுதுதான் எனக்கு சந்தேகம் வந்தது. விசாரித்து பார்த்ததில் என்னுடன் படித்த ‘அம்மவாரு’ இப்போது அமெரிக்காவில் இருப்பதாக தெரிந்தது. இது தெரிய இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனது. சரி உன்னிடம் இந்த உண்மையைச் சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்கலாம் என்றுதான் போன் செய்தேன். ஆனால் அன்றுதான் உன் குரலில் கருணை இருந்தது போல் உணர்ந்தேன். அதற்கு முன் நீ பட்டும் படாமலும் பேசிக் கொண்டிருந்தாய். அன்று உன் குரல் மாறியிருந்தது. எனக்கு உண்மையைச் சொல்ல மனம் வரவில்லை” என்றாள்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் ஏதோ அவளுக்கு உதவி செய்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டது. நான் ஒரு அந்நியன் என்று தெரிந்தே என்னுடன் பழகியிருக்கிறாள். அவளுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிந்தும் நான் இந்த நட்பை வளர்த்திருக்கிறேன். நான் மறுபடியும் ஒரு பெண்ணிடம் ஏமாந்துவிட்டேனா? என் கோபத்துடன் சுயபச்சாதாபம் சேர்ந்து கொண்டது.

அவள் தொடர்ந்தாள், “அன்று நீ சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகுந்த வேதனையை அளித்தன. ‘வலியை தாங்கிக்கொள்’ என்று நீ சொல்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கேட்டவுடன் எனக்கு அழுகை வந்தது. உன் மேல் கோபம் வந்தது. ஆத்திரம் வந்தது. அன்று எல்லோர் மேலும் எரிந்து விழுந்தேன். அழ ஆரம்பித்தேன். கோபம் அடங்க கிட்டத்தட்ட ரெண்டு வாரம் ஆயிற்று. எல்லோரும் என்னை தடவிக் கொண்டிருந்த சமயம் ஒருவன் ‘நீ இருந்தால் என்ன செத்தால் என்ன,’ என்பது போல் சொல்லிவிட்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,” இப்போது அவள் படபடவென்று பேசினாள். முகத்தில் டென்ஷன் இருந்தது. பல நாட்களாக இதை எனக்கு எப்படியாவது சொல்லிவிடவேண்டும் என்று இருந்திருக்கிறாள் என்று எனக்கு பட்டது.

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, அவள் தொடர்ந்தாள், “கொஞ்சம் நாட்களுக்கு பிறகுதான் நீ என் கிளாஸ்மேட் இல்லை என்ற விஷயம் தெரிந்தது. இந்த தகவல் எல்லாவற்றையும் தலைகீழ் ஆக்கியது. தவறு உன்னுடையது அல்ல என்னுடையது என்று எனக்கு புரிந்தது. தெரியாத ஒருவர் மீது நிறைய பாரத்தைப் போட்டுவிட்டோம் என்று வருந்தினேன். சரி, உன்னுடன் பேசி மன்னிப்பு கோரி விடலாம் என்றுதான் உன்னை அழைத்தேன். ஆனால் எனக்கு தைரியம் வரவில்லை. நீனும் அன்றைக்கு சகஜமாக பேசினாய். ஒவ்வொரு முறையும் உன்னுடன் பேசும்போதும் சொல்லிவிடவேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால் ஏனோ முடியவில்லை.” என்று சொல்லி நிறுத்தினாள். நான் எதுவும் பேசவில்லை.

அவள் தயங்கிக்கொண்டே, “உனக்கு நான் செய்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றால், ஐ யாம் ஸாரி” என்றாள்.

சிறிது நேரம் அங்கே மௌனம் நிலவியது. நான் தலை குனிந்து கொண்டிருந்தேன். என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. வாசல் கதவு திறந்திருந்தது. மெல்லிய குளிர் காற்று வீசியது. நிலவொளி தோட்டத்தின் மேல் வெளிர்போர்வை போர்த்திருந்தது. மெதுவாக தலையை உயர்த்தி அவளைப் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். அந்த ஒற்றை புன்னகை வெளிச்சம் என் இருளைக் கரைத்தது. நானும் புன்னகைத்தேன். “தாங்க் யூ” என்று சொல்லி கையை நீட்டினேன். சிநேகமாகச் சிரித்துக் கொண்டே என் கையை குலுக்கினாள். அதற்கு மேல் பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை. விடைபெற்றுக்கொண்டு அவள் வீட்டை தாண்டி கொஞ்சம் தூரம் வந்த பிறகுதான் கவனித்தேன், நான் இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை.

image credit : elaparemekardiamou.blogspot.in

பிரார்த்தனை – 1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.