நடுநிசி நேரத்தில் நான் அங்கு வந்து சேர்ந்தேன்.
காரிருளில் மூழ்கி இருந்த அந்த பங்களாவுக்குள்
பணியாள் காட்டிய மெல்லிய டார்ச் ஒளியில்
தட்டுத் தடுமாறி பயத்துடன் சென்று கொண்டிருந்தவனுக்கு
பரவசம் அளித்தது பக்கத்து அறையில் இருந்த
சுந்தரியின் ஒற்றை புன்னகை
வெளிச்சத்தில் அடுத்த நாள் காலை பார்த்தபோதுதான்
தெரிந்தது அது ஒரு சிரிக்கும் கருங்குரங்கு பொம்மை.
– எஸ். சுரேஷ்
வழக்கமாய் உணவு மேஜையில்
மாறா புன்னகையுடன் நின்றிருக்கும்
அவனுடைய முகத்தில் அன்று தோன்றிய
ஒற்றை புன்னகை வெளிச்சம்
இல்லை, இல்லை. ஒளி வெள்ளம் –
புதிதாய் முளைவிட்டிருந்த
ஒரு தங்கப் பல் மின்ன,
“லீவுக்கு போறேன் சார்”
– நரோபா
சுவர்கள், படிகள்
சாலைகள்.
திறந்த வெளி என்று
எதுவும் இல்லையா?
எங்கோ போக வேண்டும்.
எதற்காகவோ காக்க வேண்டும்.
இருட்டும் வெளிச்சமும்
மனிதர்களும்.
அடைந்த வீட்டின்
ஒரு மூலை ஜன்னலில்
தெரிகிறது,
இல்லாதவற்றின் வெளி,
கருப்புக் கடலின் ஆழத்திலிருந்து
ஒற்றைப் புன்னகை வெளிச்சம்.
– அனுகிரஹா
நட்ட நடு சாமத்தில் பிறழ்ந்த தூக்கத்தில்
பயங்கள் ஒவ்வொன்றாய் அசை போடுகிறேன்
எட்டி உதைக்கும் போலீஸ்
பணம் இல்லாத பிரயாணி
தொலைந்து போன பயணச் சீட்டு
முடக்கு வாதம்
மூர்ச்சை
இடையே வந்து போன
ஒற்றைப் புன்னகை வெளிச்சம்
சிறிய ஸ்டைரோஃபோம் கோப்பையில்
அடைத்து வைக்கப்பட்ட
எருசேர்த்த ஈர தோட்டமணலில்
பதியன் போட்ட சிறிய செடி
வீடு தேடி வந்தது
கைப்பிடி நீரை தெளித்து
துவண்ட தண்டை நீவிவிட்டபடிக்கு
“இதென்ன பூ பூக்கும் தெரியலயே”
என்ற சிறுவனை
இழுத்துப்பிடித்து பேசத்துவங்குகிறது
ஒற்றைப் புன்னகை வெளிச்சம்
பூவாய் விரிகிறது அவனிடம்.
காரிருள் வானில் முளைத்த நெருப்பு
இயற்கையின் தீற்றல்
சூலுற்ற சூரியனின் செந்நிழல்
இவையொன்றும் சிதறும் சித்தத்தை
ஒருமுகப்படுத்தவில்லை.
வைகறை கண்விழித்து
பூநிறை தடாகத்தில்
உதயமுனை உதித்தது
காற்றடித்ததில்
ஒற்றைப் புன்னைகை வெளிச்சம்.
Image Credit: Willem de Kooning, Abstract Expressionism, macaulay.cuny.edu