மேல்நோக்கிப் பொழிந்தவை
கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாகத் தமிழிலக்கியத்தில் தொடர்ந்து உயிரோட்டத்தோடு இயங்கி ஒவ்வொரு தளத்திலும் தனது முத்திரையைப் படைத்து வருவதில் எழுத்தாளர் பாவண்ணனுக்கு நிகரானவர்களது எண்ணிக்கை கைக்குள் அடங்கிவிடும். கவிதை தொடங்கி சிறுகதை, நாவல், கட்டுரை, மொழியாக்கம், சிறார் இலக்கியம் என எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து ஒளி குன்றாது எழுதி வருபவர். வெங்கட் சாமிநாதன் முதற்கொண்டு பல விமர்சகர்களும் பாவண்ணன் எழுத்துகளை அடையாளம் கண்டுள்ளனர். கன்னட இலக்கியத்திலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்து அறிமுகப்படுத்தியவர். தனது வேலைக்காக மொழி தெரியாத கர்நாடக மாநிலத்துக்குச் சென்றவர் முறையாக கன்னடத்தைப் படித்ததோடு மட்டுமல்லாது அன்றாடப் பேச்சு வழக்கிலும் கையாண்டு தமிழுக்கு இணை மொழியாக அதனை தரித்துக்கொண்டவர். எண்பதுகளில் கன்னட தலித் இயக்க எழுச்சியோடு எழுந்த கன்னட இலக்கியத்தை உடனுக்குடன் அறிமுகம் செய்ததோடு மட்டுமல்லாது கர்னாடக மாநிலத்தின் மூத்த மற்றும் சமகால கலைஞர்களோடு தொடர்பு வெளியை ஏற்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்தவர். ஆனாலும் பாவண்ணனின் இந்த பங்களிப்பு விமர்சகர்களிடையே இன்றுவரை பெரிய கவனத்தைக் கவரவில்லை. 2005இல் பைரப்பாவின் மகாபாரத மறு ஆக்கமான ‘பருவம்‘ நாவலுக்கு மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய அகாதெமி பரிசு வெல்லும் போது ஏற்பட்ட சலனத்தோடு அவரது பிற மொழியாக்கங்களும் உடனடியாகக் கவனத்தில் வந்திருக்கவேண்டும். தொன்னூறுகளின் மத்தியிலும் இறுதியிலும் தலித் இலக்கியம் தமிழில் உச்சகட்டத்தை அடைந்த சமயத்திலேனும் அவரது கன்னட மொழியாக்கங்கள் கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் கன்னடத்தில் வெளியான தலித் முன்னோடி எழுத்துகளை அவர் தொடர்ந்து தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்திருந்தார். அப்பிரக்ஞை வளர்ந்திருந்தால் கன்னட மொழியின் வளமையும் புது கருத்துக் களமும் தமிழுக்கு வந்து சேர்த்திருக்கும்.
பாவண்ணன் உருவாக்கிய ஏராளமான ஆக்கங்கள் இன்றும் விமர்சகர்களின் முழுமையான ஆய்வுக்காகக் காத்திருக்கின்றன. நீண்ட காலம் எழுதுபவர்கள் ஓரிரு படைப்புகளின் வெற்றி உருவாக்கும் கூண்டுக்குள் அவர்களாகவே சிக்கிக் கொள்பவர்களாக ஆகிறார்கள். வாசகர்களும் விமர்சகர்களும் சட்டெனத் தொகுத்துக் கூறும்படியாக அவர்கள் படைப்புத் தொகுதிகள் இருப்பதில்லை. அதனால் மேலேழுந்தவாரியான ஒற்றை வரி விமர்சனங்கள் இவ்வகை எழுத்தாளர்களின் படைப்புகளை சரியாக வகுத்துக் கூறுவதில்லை. கூர்ந்த இலக்கிய அளவுகோளும் அவதானிப்பும் கொண்ட விமர்சகர் அவரது பெரும் படைப்புத் தொகுப்பிலிருந்து கவனம் கொள்ளவேண்டிய ஆக்கங்களை அடையாளம் காண வேண்டியது அவசியமாகிறது. தி.ஜானகிராமன், வண்ணதாசன், பூமணி போன்ற படைப்பாளிகளைப் போல அழகியலும் இயல்புவாதமும் முயங்கி நிற்கும் பல படைப்புகளைத் தந்தவர் என அறியப்பட்ட இடத்திலிருந்து எழும்பி இந்திய தொன்மங்களின் மறு ஆக்கம், வரலாற்றுக்கதைகள் (“நிகழ்காலக் காட்சிகள் அளித்த மன எழுச்சியால் இறந்தகாலத்தைத் தேடிப்போன கதைகள்” – பொம்மைக்காரி, சிறுகதைத் தொகுப்பு), நாட்டாரியக் கதைகள் போன்றவற்றை எழுதியவர் எனும் இடத்துக்கு சென்று அவரது புனைவுலகை அலச வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் கீழத்தியத் தத்துவத்தேடல் அவரை மரபுக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது, தொன்மங்களை மீளச்சொல்லச் செய்திருக்கிறது. இருள் பிரிந்ததும் அரும்பிய சுடரொளியும் அதன் வெளிச்சத்தை சக மனிதர் மீது போட்டுப்பார்க்கும் பார்வையும் கொண்ட கதைகள் எனும் நோக்கில் மட்டுமே பார்க்காமல் புனைவின் சாத்தியங்களை பலதிசைகளிலும் நெருங்கிப்பார்த்த கலைஞராக பாவண்ணனை அணுக வேண்டிய அவசியம் உள்ளது.
பாவண்ணனின் படைப்புப் பார்வை
பாவண்ணன் எழுதத்தொடங்கிய எண்பதுகளின் காலகட்டத்தை தமிழ் நவீனத்துவத்தின் அந்திமக்காலம் எனப் பொதுவாக வகுக்க முடியும். நவீனத்துவ விமரிசனத்தின் நேரடியானத் தாக்கத்தை அவரது ஆரம்பகாலக் கதைகளில் காண முடிகிறது. சொல்லப்போனால் 1987 இல் வெளியான அவரது முதல் நாவலான “வாழ்க்கை ஒரு விசாரணை” கூறுமுறை அளவில் மிகக் கறாரான யதார்த்தத் தளத்தை மீறாத கதையாகவே தெரியும். தம்முன் தெரிந்த அனுபவ தர்க்கத்தை எள்ளளவும் மீறாத போக்குடைய நிகழ்வுகளின் தொகுப்பு. நம் கையை மீறிய விசையினால் மனித வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் அலையும் சித்திரம் அதில் கிடைக்கும். மிகத் துல்லியமான நவீனத்துவப் படைப்பு. “வேர்கள் தொலைவில் இருக்கின்றன” எனும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பின் கதைகளும் பெயரைப்போலவே திசையறியா விதியின் கைகளால் கைவிடப்பட்டோரின் கதைகளாகவே தெரியும். அங்கிருந்து 2003இல் அவர் எழுதி விமர்சகர்களால் சிலாகிக்கப்பட்ட “கடலோர வீடு” சிறுகதையின் பயணம் அவரது படைப்பு மனதின் வளர்ச்சியைக் காட்டுகிறது.
அனுபவ தர்க்க உண்மையை மட்டுமே பதிவு செய்வதும் மனித வாழ்வே அவலத்தின் அல்லது இயலாமையின் உறைவிடமாகத் தொனிக்கும் பார்வையிலிருந்து உள்ளுணர்வு சார்ந்த அழகியல் நேர்த்தி கொண்ட பார்வைக்கு சிறுகதைப்பயணம் அவரை செலுத்தியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தின் நவீனத்துவம் மறைந்து பின்நவீனத்துவமும், ஒடுக்கப்பட்ட இனக்குழுக்களின் கதைகள், பாலினங்களைப் பற்றிய அடையாள இலக்கிய காலகட்டமும் வந்து படர்ந்தன.
“கடலின் முன்னிலையில் நிற்கும் போதெல்லாம் என் மனம் தயக்கமும் தடுமாற்றமும் கொள்ளும். பார்வையால் அளக்கமுடியாத அகலமும் நீளமும் கொண்ட கடலை வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. கண்கள் தத்தளிக்கத் தொடங்கிவிடும். பார்வை வழியே அக்கடல் உடலுக்குள் இறங்கி படீரென ஒரு அலையாக மோதும். ரத்தம் துள்ளியடங்கும். கடலுக்குள் இறங்கி அலையோடு அலையாக மாறிவிடத் துடிக்கும். ஆழ்மனத்திலிருந்து ஒரு கட்டளை பிறந்து எக்கணமும் என்னைத் தூண்டிவிடக்கூடும் என்று தோன்றும். அந்தத் தடுமாற்றம் மிகவும் பழகிய ஒன்று.” (கடலோர வீடு)
பாவண்ணனின் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள் அவரது படைப்புகள் நிகழும் களம் நம் முன்னே கிடக்கும் யதார்த்த உலகம் என்பதை உணர முடியும். சொல்லப் போனால் மிகவும் அடிப்படையான யதார்த்த ஒழுங்குகளை அடைய விரும்பும் பாத்திரங்களை அவர் அதிகம் படைத்துள்ளார். புற உலகின் சமநிலையின்மையால் யதார்த்த வாழ்வோடு பொருந்தி வாழ முடியாதவர்கள். ஆழ்மனதில் தீவிரமான கனவைக் கட்டிச் சுமப்பவர்கள். அந்தக் கனவுக்குள் சுழன்று தங்களைத் தொலைத்தவர்கள். அவர்களுடனேயே வாழும் பிற மனிதர்களை விட வேறொரு உலகில் வாழ்பவர்களாகவே அறியப்படுபவர்கள். இந்த கனவு நிலையில் வெளிப்படும் ஆழ்மனக் குழப்பங்களையும், தங்கள் முரணை விட்டும் வெளியேற முடியாது தவிப்பவர்கள்.
“வெளிச்சம் மண்ணைத் தொடும் நேரத்தில் மரக்கிளைகளில் வந்து அமர்ந்த காகங்கள், தரைநெடுக அம்மா பிய்த்துப்போடும் இட்லித் துண்டுகளைக் காணாமல் குழந்தைகள் கதறுவதுபோல இடைவிடாமல் அலறின. பிறகு கோழிகள் வந்தன. நாய்கள் வந்து வளைய வளைய சுற்றிவிட்டு சென்றன. வாடிக்கையாளர்கள் வந்து வெறும் வாசலை நிமிர்ந்து பார்த்துவிட்டுப் போனார்கள். பள்ளிக்கூடத்தில் சாப்பாட்டு மணியடித்ததும் சிறுவர்கள் கூட்டமாக வந்து முற்றத்தில் நின்று பார்த்துவிட்டு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு சென்றார்கள். வழிப்போக்கர்களும் பிச்சைக்காரர்களும் “இட்லிக்காரம்மா இட்லிக்காரம்மா” என்று அழைத்துப்பார்த்துவிட்டு ஏமாந்து போனார்கள்” – [“அம்மா” சிறுகதை]
மனிதர்கள் மீது அளவிடமுடியாத பிரியமும் அவர்களது வாழ்க்கை மீதூறும் கரிசனமும் பாவண்ணனின் படைப்புலகில் இயங்கின்றன. அவரது நட்பு வட்டத்தை கவனிக்கும்போது ஒரு படைப்பாளியாக அவரை இயக்குவதும் இந்த காதல் தான் எனத் தோன்றுகிறது. எதையும் உடனடியாக அடையாளப்படுத்தி அரவணைக்கும் அன்பு அல்ல. மாறாக ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அதனதன் இயல்பில் படைப்பு அழகியல் சந்திக்கும் புள்ளிகள் சுட்டிக்காட்டும் இடமாக அவரது புனைவு இயங்குகிறது. “வாழ்க்கை ஒரு விசாரணை” நாவலில் காளியும், ப்ளாஸ்டிக் ஃபேக்டரி எரிந்ததில் தன் சுயநிலை இழக்கும் அத்தையும் (“பொம்மை“) , “ஒற்றை மரம்” பெண்ணின் சாவில் மனித மனதின் கீழ்மையையும் உன்னதத்தையும் கண்டுகொள்ளும் தாயும் காட்டும் தரிசனம் மெய்ஞான உலகின் இயல்பைத் தக்கவைத்திருக்கும். இந்த இயல்பே கூட அவரது படைப்புகளை ஒளிரும் சுடரின் வழிகாட்டலை ஏந்தி நிற்கும் தருணங்களாக அமைத்திருக்கின்றன. வாழ்வின் கரிய பக்கத்தையும், அவலத்தையும் சுட்டும் இடத்திலும் அவரது மனம் ஏதோ ஒரு மேன்மையைத் தொட்டுக்காட்டுகிறது. “கரைக்கக் கரைக்க நிரம்பிக்கொண்டே இருக்கிற நெஞ்சின் பாரத்தைத் தொடர்ந்து கரைப்பதற்காக பாடுவது மட்டுமே அவன் வாழ்வாகிவிட்டது. மிச்சமிருக்கும் உயிரின் சுடர் அணையும்வரை அவன் பாடிக்கொண்டே இருப்பான்” (தளும்பும் மனம் முன்னுரை).
உச்சகட்டமான வெறுப்புணர்வை சொல்லிச்செல்லும் கதைகளில் கூட அவரது பிற பாத்திரங்களின் இயல்பால் ஒரு சமநிலை கூடிவிடுகிறது. ஒரு வாசகராக கதையின் முழுமையை நம்மால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தால் விமர்சகரின் அளவுகோலின்படி குறிப்பிட்ட சுவைக்கு ஒரு மாற்று குறைவோ என எண்ண வைப்பதும் இதனால் தான். வாழ்வின் கரிப்புச் சுவையும் அங்கதமும் வெளிப்படும் அவரது சில கதைகள் முழுமையாக அமையாததும் இந்த ஒரு அம்சத்தினால் தானோ என்றும் நினைக்க வைக்கிறது.
என்னை மிகவும் பாதித்த “வைராக்கியம்” சிறுகதையில் இந்த முரண் நிகழ்வதை வாசகர்கள் உணர் முடியும்.
“மழ நிக்கவே இல்ல. வெறி தணிஞ்சதும் அவன் வேற பக்கமா போய் படுத்துகிட்டான். அந்த மழ சத்தத்தையே வெகுநேரம் கேட்டுகினு படுத்துருந்தேன். கொஞ்ச நேரம் இந்த உலகத்துலயே நான் இல்ல. சட்டுனு பித்து புடிச்சாப்புல ஒரு வேகம் நரம்புங்கள ஒரு முறுக்கு முறுக்கிச்சி. எழுந்து உக்காந்து குடிசைக்குள்ள பாத்தன். கோழிக் குஞ்சுங்களாட்டம் புள்ளங்க ஒரு பக்கம். கெடாவாட்டம் இவன் இன்னொரு பக்கம். திடீர்னு ஒரு யோசன. அப்படியே துள்ளி எழுந்து பொடவய சரியா கட்டனேன். தலமுடியா கொண்டயா சுருட்டி கட்டிகினு பக்கத்துல இருந்த கல்ல பார்த்தேன் கூட வேலிருந்து உழுந்த கல்லு. அத தூக்கி ஓங்கி ஒரே போடா அவன் தலயில போட்டன். ஆன்னு ஒரு சத்தம். மழயில அது பெரிசா கேக்கல. ஏதோ சொல்ல வந்து அப்படியே அடங்கிட்டான். கண்ணுங்க அப்படியே நட்டுகிச்சி. பஸ்ல அடிப்பட்டு உழுந்து நாய் மாதிரி..”
வைராக்கியம் கதை முழுவதும் மிகத் தீவிரமான வெறுப்புணர்வு நம்மைத் தூண்டிவிட்டபடி இருக்கும். கொலை செய்பவளின் மாமனாரின் மேன்மை உணர்வால் அந்த வெறுப்பு சமன்பட்டுவிடும். அதுவே அக்கதையின் உச்சமுடிச்சாகவும் அமைந்திருக்கும்.
பாவண்ணனின் சிறுகதை உலகம்
பாவண்ணன் சிறுகதைகளைப் பற்றி நினைக்கும்தோறும் செடிகளின் பற்றிப்படரும் இயல்பு ஒரு காட்சியாக என் கண்முன்னே நிற்கும். என் தோட்டத்தில் வைத்திருந்த மல்லிகைச் செடி தொட்டியிலிருந்து தழைத்து கனம் தாங்காது கிளைகளை தரையில் சாய்த்திருந்தது. கவனிக்காது விட்ட நாட்களில் கிளையின் அடிப்பாகம் பூமிக்குள் புதைந்திருந்தது. சில நாட்களில் தொட்டியிலிருந்து ரெண்டடி தள்ளியிருக்கும் மண்ணிலிருந்து மல்லிகை செடி துளிர் விடக்கண்டேன். மண்ணுக்கடியில் புதைந்த கிளை படர்ந்திருந்ததைப் பார்த்ததும் வியப்பாயிருந்தது. பற்றிப்படர்வதிலும் தனதென நினைத்து அழுக்கும் சருகும் குவிந்த இடத்திலிருந்து முளைப்பதுமாய் செடிகளுக்கு இருக்கும் ஜீவத்துடிப்பு பரவசம் கொடுக்கும் அனுபவம். பாவண்ணன் உலகில் தெரியும் கதாபாத்திரங்களுக்கும் இந்த குணாதிசயம் உண்டு. நிராயுதபாணியாக சகல கொடுமைகளையும் அனுபவிப்பவர்கள் கூட மனித மனதின் ஈரத்தை ஒரு நொடி அனுபவித்ததுமே புத்துயிர் ஊட்டப்பட்டது போல துளிர்க்கிறார்கள்.
பாவண்ணனின் சிறுகதைகளைப் படித்தவர்கள் மனதில் முதலில் படிவது அவரது அப்பட்டமான எழுத்து முறை தான். வாழ்க்கை பற்றிய நேர்ப்பதிவுகளாக அவை நமக்குக் காட்சியளிக்கும். அவரது பெரும்பாலானக் கதைகள் யதார்த்தத் தளத்தில் எழுதப்பட்டவை. கதை சொல்லி வழியாக அல்லாமல் கதை நம்முன் நிகழும். உடனடியாக நமக்குத் தோன்றுவது கு.அழகிரிசாமியின் புனைவுலகு. கு.அழகிரிசாமி எழுதிய கதைகளின் நேரடியானத்தன்மை ஒரு யதார்த்தத் தளத்தை உருவாக்கினாலும் இடர் மிகுந்த மனித வாழ்வின் மீது நேரடியாகப் பற்று வைத்தவர். ராஜா வந்திருக்கிறார் கதை போல பல கதைகளில் துயர் மிகு சித்திரத்திலிருந்து ஒரு ஒளி பொருந்திய வாழ்க்கைக்கான கனவை அவரால் விதைக்க முடிந்தது. பல கதைகள் தனிமனித அனுபவங்களிலிருந்து விடுபட்டு மானுட மொத்தத்துக்குமான தரிசனமாக மாறியிருந்ததை பல விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அழகியல் ரீதியைப் பொருத்தவரை கு.அழகிரிசாமியின் நேரடியான பாதிப்பு பாவண்ணன் புனைவில் தென்படுகிறது.
வர்ணனைகளிலும் விவரிப்புகளிலும் புத்திசாலித்தமான காய் நகர்த்தல்கள் இல்லாததால் சில சமயம் நேரடியாக கதையை விவரிக்கும் போக்கு காணப்படும். இதனாலேயே சில வரிகளில் முழுமை நோக்கிய தாவல்களோ, தத்துவ தரிசனங்களோ உடனடியாகத் தென்படுவதில்லை. பாவண்ணன் காட்டும் உலகம் ஒரு தனிமனிதனின் அன்றாடப் பிரச்சனை வழியாக வாசகர்களுக்குக் கடத்தப்படுகிறது. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் சிறுவன் ஒவ்வொரு அறையாகச் சென்று தனது அக்காவைத் தேடுவது போல கதாசிரியரும் சிக்கிக்கொண்ட நூல்கண்டு வாழ்க்கையை அறிமுகப்படுத்துகிறார். இங்கு அறிமுகப்படுத்துகிறார் எனும் வார்த்தை முக்கியமானது. அவர் எந்நிலையிலும் வாழ்க்கையை ஆராய்வதில்லை. தத்துவம், வரலாறு, சமூகவியல், கடவுள் என எந்த சிந்தனைக்குப் பின்னாலும் ஒளிந்துகொண்டு அவர் கதாபாத்திரங்களின் வாழ்வை அலசுவதில்லை. அதில் பெரும்பாலும் பாவண்ணன் விருப்பமில்லாதவராகவே தென்படுகிறார் (மரபை மறு ஆக்கம் செய்யும் கதைகளைத் தவிர்த்து). இப்படி வாழ்வின் அர்த்தத்தை ஆவேசமாகத் திணிக்க முற்படாததால் கதாபாத்திரங்களின் போக்குப்படி கதையின் தரிசனம் யதார்த்தமாக விரிகிறது. இது பாவண்ணன் புனைவின் மிகப்பெரிய பலம். இதுவே நாடகீய தருணங்களைக் குறைத்து அவரது கதைகளை பலவீனமாக ஆகும் தருணங்களும் உண்டு.
சொல்லப்படும் கதைகளின் வழியாக ஒரு வாழ்க்கை தருணம் வெளிப்படுவதால், பாவண்ணன் கதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக மிகையாக எதையும் சொல்வதில்லை. கதாபாத்திரங்களின் அகச் சிக்கல்கள் எவ்விதமான முடிவையும் எட்டாது சுவரில் முட்டி நிற்கும் தருணங்களையும் அவர் சிறுகதைகளாக ஆக்குகிறார். வாழ்க்கையின் ஆட்டத்துக்குத் தகுந்தபடி ஆடும் பாவைகளாக மனிதர்களை சித்தரிக்கும் தருணங்களில் மானுட விழுமியங்கள் கதாபாத்திரங்களுக்கு மீட்சி அளிக்கின்றன.
உதாரணத்துக்கு , மருத்துவமனையில் கற்பழிக்கப்பட்ட மகளுக்காக ரத்தம் சேகரிக்க வந்திருந்த கிராமத்துத் தாயின் கதையைச் சொல்லலாம் (‘ஒற்றை மரம்‘ – பொம்மைக்காரி தொகுப்பு). பாவண்ணன் எழுதிய மிகச் சிறப்பான கதைகளில் இதுவும் ஒன்று. சொன்னதையே அரற்றும் தாய்க்கு சீர்குலைந்த பெண்ணைக் காப்பாற்றும் வழி தெரியவில்லை. கற்பழித்ததில் ரத்தப்போக்குக் கூடிப்போனது மட்டுமல்லாது நினைவும் இழந்துவிட்டாள் மகள். நகர்ப்புற மருத்துவமனை ஆழ்கவனச் சிகிச்சைப் பிரிவில் ரத்தம் கொண்டு வராமல் சிகிச்சை தொடங்க மாட்டோம் எனச்சொல்லும்போது கிராமத்துக் கிழவிக்கு மனம் அவர்கள் சொல்வதில் லயிக்கவில்லை. ரத்தம் வேணும் என்பது மட்டுமே அவளது புலம்பல். அங்கு உதவிக்கு வரும் சிவாவுக்கு இது குற்ற உணர்வைத் தூண்ட அவர் ரத்தம் வாங்குவதற்குக் கிளம்புகிறார். காலை வருவதற்குள் பெண் இறந்துவிடுகிறாள். அம்மா கடைசியில் கும்பிடும் காட்சியில் எழுப்பப்படும் மானுட அவலம் கதையை மிகச் சிறந்ததாக ஆக்குகிறது. ஓரிரவு நம்பிக்கை கொடுத்து கூடவே நின்றிருந்த முன்பின் அறிமுகமில்லாதவரை பார்வையிலிருந்து மறையும்வரை அவளால் கும்பிட்டபடியே இருக்க மட்டுமே முடிகிறது. நெகிழ்வின் உச்சகட்டத்தை பாவண்ணன் இக்கதையில் அடைகிறார்.
கையறுநிலையின் பல படிநிலைகளை தனது கதைகளில் காட்டியுள்ளார் பாவண்ணன். ஒற்றை மரம் போல ‘பொம்மைக்காரி‘ கடந்த பத்தாண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் வெளியான மிகச் சிறப்பான சிறுகதை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் இயல்புவாதக் கதையில் பல ரகங்களை எழுதிப்பார்த்ததோடு மட்டுமல்லாது மரபுக்கதைகளின் மறு ஆக்கங்களிலும், பல செவ்வியல் பாணிக்கதைகளும் எழுதியதில் தனக்கென ஒரு அழகியலை பாவண்ணன் கைகொண்டிருக்கிறார். அதற்கு மிகச் சிறப்பான உதாரணம் ‘பொம்மைக்காரி‘. சிறுகதையின் உச்சத்தை மிகக்கச்சிதமாக சென்றடைந்த ஒரு ஆக்கம். வள்ளியும் மாரியும் பொம்மை செய்து ஊர் சந்தைகளில் விற்பவர்கள். கணவன் எது கேட்டாலும் வாய் திறவாதிருக்கும் வள்ளி மீது மாரிக்கு மிகுந்த எரிச்சல் உண்டு. வாய் திறந்து பதில் சொன்னாலும் “வாய வளக்காதபடி தேவடியா முண்ட” என கைநீட்டவும் செய்வான். அவனுடன் தொழிலுக்குப் போகும்தோறும் அவள் பயத்துடனேயே இருப்பாள். தன் மீதிருக்கும் கோபத்தை அவளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதுவும் அவன் கள் குடித்திருந்தால் வசவுடன் அடியும் விழும். சிங்கத்துடன் வாழும் மான் போல அவள் பயத்துடனேயே வாழ்கிறாள். அவனது நிலையும் ஒன்றும் மதிக்கத்தக்கதாக இல்லை எனும்போது வெளியே கீழ்த்தரமாக அவமதிக்கப்படும் அவனது கோபத்தின் மீது ஒரு இயலாமை கூடுகிறது. பக்கத்து ஊருக்கு தொழில் நிமித்தம் செல்பவர்கள் அங்கிருக்கும் ஊர்க்கார இளைஞர்களால் வம்பிழுக்கப்படுகிறார்கள். காட்டைத் தாண்டி ஓடிவரும் அவர்களைத் துரத்தி மாரியை அடித்துப்போடுகிறார்கள். ஒருவன் மட்டும் வள்ளியைத் தேடி கண்டுபிடித்து உடலுறவு கொள்கிறான். போகும்போது முகத்தில் ஒரு முத்தமிட்டுச் செல்கிறான்.மாரியைத் தூக்கி வந்தபின்னும் அவனிடம் இதைப் பற்றிச் சொல்லாது இருக்கிறாள். குற்ற உணர்வு தாங்காது தற்கொலை செய்துகொள்ளப்போகும் ஆற்றில் கழுத்தளவு நீர் இருக்கும்போது ஒரு நொடி சிலிர்ப்பில் அந்த முத்தம் அவளது நினைவுக்கு வருகிறது. தனது எல்லா கஷ்டத்தையும் அந்த முத்தம் துடைத்துவிடுவதாக எண்ணிக்கொள்கிறாள். இந்த இடத்தில் வாசகனுக்கு மிக இயல்பான பரிவு கூடுகிறது. பிற பாணி எழுத்தாளரின் கையில் இந்த இடம் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக மிகக் கொச்சையாக வெளிப்பட்டிருக்கும். ஆனால், இந்த முடிவைக் கடக்கும் வாசகன் வள்ளி மற்றும் மாரி இருவரின் மீதும் அளவுகடந்த பரிவு ஏற்பட்டுவிடும் என்பதே கதாசிரியனின் வெற்றி.
முன்னர் சொன்னதுபோல ஒரு கதையினூடாக மனம் கொள்ளும் சமாதானங்களின் பல படிநிலைகளை பாவண்ணனால் மிக இயல்பாகக் காட்டமுடிகிறது. இது ஒருவித அக விடுதலைக்கானப் போராட்டம். மனிதனைச் சூழ்ந்துள்ள சமூகப்படிநிலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என மனிதர்களை இணைப்பதற்காக ஏற்படுத்திய ஒவ்வொரு அமைப்பும் முதலியத்தின் பிடியில் சிக்கி அவனைக் கீழ்மையில் தள்ளுவதற்காகப் பயன்படுகிறது என்பதைக் காட்டும் பல கதைகளை உருவாக்கியுள்ளார். எவ்விதமான முயற்சிகளும் அல்லாது கதையின் போக்கில் மிக இயல்பான படிமங்கள் உருவாவதால் அவை மேலதிக விளக்கத்தை கோரி நிற்பதில்லை. உதாரணமாக, பொம்மைக்காரி கதையில் வரும் மாரியின் புற வாழ்வில் எப்படிப்பட்ட அவமானங்களை சந்தித்து வீடு திரும்புகிறான் எனும் சித்திரம் நமக்குக் காட்டப்படுதில்லை (ஒரு முறை அவர்கள் இருவருமாகத் தொழிலுக்குச் செல்கிறார்கள் – அவள் கற்பழிக்கப்படுகிறாள்). ஆனால் அவனது ஆழ்மனம் வெறுப்பால் ஆனதை நம்மால் உணர முடிகிறது. அந்த வெறுப்பே அவள் மீதான அதிகாரமும் வன்முறையுமாக மாறுகிறது. அவனால் முடிந்தது அது மட்டும் தான். கோபமாகத் துரத்தும் இளைஞர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளத் தெரிவதில்லை. அடிபட்டு வீழ்கிறான்; கற்பழிக்கப்பட்ட வள்ளி அவனைத் தூக்கி வீட்டுக்கு வருகிறாள். வாழ்க்கை மீதான வெறுப்பு மட்டுமே அவனிடம் தெரிகிறது. அவன் ஆட்டுவிப்பதுக்கு ஏற்றார்போல வள்ளியும் ஆடும் ஒரு பொம்மைக்காரி தான். அந்த பொம்மைக்கென ஒரு தனி உணர்வும் உள்ளது என்றோ பரிவும் காட்டவேண்டிய தேவை இருக்கிறது என்றோ மாரி உணர்வதில்லை. கள்ளு குடித்தபின் மிருகத்தனமாக உடலுறவு கொண்டுவிட்டு பீடி பிடிக்கச் செல்கிறான் (கள்ளும் பீடியும் அவன் விரும்பிப் பெற்ற பழக்கங்கள் அல்ல, வெளியூரில் தொழில் நிமித்தம் செல்லும் நேரத்தில் பிற வியாபாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்டது என்கிறார் ஆசிரியர் – இதிலும் ஒரு சமூகத் திணிப்பு உள்ளது. சமூக எதிர்ப்புக்கான ஒரு செயல்). இதே போன்ற இயலாமை கூடியதில் உணர்வு பீறிடும் ‘பூனைக்குட்டி‘ கதையில் இது சரியாக எடுபடவில்லை என்பதையும் வாசகர்கள் உணரலாம்.
சிறுகதைகளில் செவ்வியல் பாணியிலும், மரபை மறு ஆக்கம் செய்யும் கதைகள் பலவற்றை அவர் எழுதியிருப்பதை வாசகர்கள் அறியாமலேயே இருக்கக்கூடும். புது வாசகர்களுக்கு சமூக யதார்த்தக் கதைகள் வழியாகவே பாவண்ணன் படைப்புகளுக்கு அறிமுகம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அதற்கு ஏற்றார்போல இணையத்தில் தமிழ் படிப்போர் பலருக்குக் கிடைக்கும் அவரது கதைகள் யதார்த்த பாணிக் கதைகளே. இதில் பாவண்ணன் தனி முத்திரை பதித்துள்ளார் என்றாலும் செவ்வியல் பாணியிலும், வரலாற்றை மறு ஆக்கம் செய்யும் கதைகளிலும் தனித்தடம் பதித்துள்ளார் என்றே சொல்லமுடியும்.
சமீபத்தில் வந்த கதைகளில் ‘வெள்ளம்‘, ‘தங்கமாலை‘, ‘பிரயாணம்‘, ‘கனவு‘, ‘இன்னும் ஒரு கணம்‘ போன்றவை மரபை மறு ஆக்கம் செய்யும் கதைகள் என்று சொல்வதை விட காலத்தின் பின்னோக்கிச் சென்று மனிதனின் அடிப்படை விழுமியங்களை அலசிப்பார்ப்பவை எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும். மரபு பற்றிய செவ்வியல் பாணிக்கதைகள் எனும்போது அவை ஒரு காலகட்டத்தின் தத்துவங்களை மானுட தரிசனமாக அடையாளம் காட்டிப் பழக்கப்பட்டவை எனலாம். பாவண்ணன் செய்வது நாட்டார் காவியங்களில் செய்வது போன்று கதாபாத்திரங்களின் அக புற அலைச்சல்களை பதிவிடும் வாழ்க்கை குறிப்புகளாகும். செழுமையான கதாபாத்திரங்களின் அக ஊசலாட்டத்தைப் பற்றிப் பேசும்போது (‘சூரபுத்திரன்’ – வெள்ளம் கதையில், ‘முசே’ – பிரயாணம்) அவை மிக இயல்பாகவே மானுட அடிப்படை விழுமியங்களை நோக்கிச் செல்கிறது. இன்னொரு வழியில் சொல்வதானால், கதாபாத்திரங்களின் வாழ்க்கை சார்ந்த தத்துவங்கள் எவ்விதமான சிந்தனை மரபையும் ஒட்டி இருப்பதில்லை. அவை மனிதர்களுக்கு இடையே நடக்கும் உரசல்களையும், இணைப்புகளையும் சார்ந்த சித்தரிப்புகளாக அமைந்திருக்கின்றன. கருத்துகளை விட கதாபாத்திரங்களை வாசகர்களுக்கு துல்லியமாகக் காட்ட இது வழிவகுத்திருந்தாலும் ஒவ்வொரு காலகட்டமும் அதில் புழங்கும் கருத்து சார்ந்த விழுமியங்களின் பதாகை எனும் சாத்தியத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுகிறது. இதனால் சில வரலாற்றுக் கதைகள் உயிரோட்டமானப் பார்வையைத் தராமல் விலகிவிடுகின்றன.
உதாரணமாக, ‘வெள்ளம்‘ சிறுகதை, தாரணி எனும் அப்சரஸ் அழகில் மயங்கும் பிக்கு மாணவன் சூரபுத்திரனின் குழப்பத்தைக் காட்டுகிறது. ஜென் கவிதைகளிலும், புத்தமதக் கதைகளிலும் பலவாறு புழங்கிய தத்துவ தரிசனமான ‘ஆசையைத் துறத்தல்’ எனும் நிலைக்கு எதிரானக் கதை. மிக எளிமையானக் கதையும் கூட. வெள்ளத்தில் நீரின் நிலை உயர்வது போல தாரணியின் உடல் அசைவுகளுக்குத் தன் மனதைப் பறிகொடுக்கும் சூரபுத்திரன் வழியாகச் சொல்லப்படும் தரிசனம் எது எனும் குழப்பம் வாசகனுக்குத் தோன்றாமல் இருக்காது. சூரபுத்திரன் தன் மனதை முழுவதுமாக இழக்கும் சித்திரம் ஒரு அனுபவம். ஆனால் அங்கிருந்து கதை அந்தளவிலேயே நின்றுவிடுகிறது. ஜென் படிமமாக மாறாமல், கதையை ஒரு வாழ்க்கை சித்தரிப்பாக மாற்றியதால் வரும் எளிமைப்படுத்தலின் சிக்கல். ஆனால், இதே ‘பிரயாணம்‘ கதையின் முடிவில் வீரப்பனுக்குக் கேட்கும் முசேவின் குரல் இறக்கும் மனிதரின் குரல் மட்டுமல்ல, அது ஒருவிதத்தில் மானுட இனத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனை மனிதன் ஏதோ ஒரு காரணத்தால் அடிமைப்படுத்தியிருக்கும் அதிகாரத்தையும் எதிர்த்து உடைக்கும் குரல். முசே-வீரப்பாவைப் பொருத்தவரை அது ஒரு முடிவு. ஆனால் உண்மையில் சாதாரணனான வீரப்பாவின் வாழ்வின் ஒரு பிரெஞ்சு குவர்னர் காட்டிய பரிவு பல தலைமுறைகள் நினைவு வைத்திருக்கும் கதை. காலப்போக்கில் அது கட்டுக்கதையாக மாறும் சாத்தியம் வரலாற்றில் உண்டு என்றாலும் அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் மட்டுமே பெயர் போன பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிரான குரலாக முசேவைப் பார்க்க முடியும்.
பாவண்ணனின் புனைவு நடை
பாவண்ணனின் புனைவு நடை பற்றிப் பேசும்போது நாம் அவரது சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எனத் தனித்தனியாகப் பேசவேண்டியுள்ளது. நவீனத் தமிழ் சிறுகதை களங்ளில் மிக நுட்பமான இடங்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களுக்கும் மேலாக வரும் அவரது முன்னூறு சிறுகதைகளில் பல பரவலான வாசக கவனத்தை ஈர்த்திருந்தாலும், ஒரு கலைஞனாக அவரை முன்னிறுத்தும் கதைகள் இன்னும் கண்டடையப்படாமல் இருக்கின்றன என்றே நினைக்கிறேன். முப்பது வருடங்களாகத் தொடர்ந்து சிறுகதை சூழலில் ஈடுபடுபவரது கதைகளை விமர்சகர்கள் இன்னும் விரிவாக ஆராயவில்லையோ எனத் தோன்றும்படியாகப் பலவித பாணிகளில் எழுதிய கதைகள் வாசக கவனத்துக்கு அதிகம் வரவில்லை. இயல்புவாத எழுத்தில் ஆழமாகத் தன் முத்திரையைப் பதிப்பவராக அறியப்பட்டவர் பல வரலாற்றுப்புனைவுகளும், நாட்டாரிய மறுவாக்கங்களும் எழுதியுள்ளார்.
“திடீர்னு ஒரு நாளு ராத்திரில பேயறஞ்சாப்புல வந்து நின்னா. துணிங்க ஒரு நெலையில இல்ல. கிழிஞ்சி கந்தலா தொங்குது. ஒடம்புல ஒரே புழுதி. ரத்தம். கேவி கேவி அழுவறாளே தவுத்து பேச்சே வரல. என்னாடி பூரணி என்னாடி பூரணின்னு உலுக்கறன். ஒரு வார்த்த அவளால பேச முடியலை. நாம கேக்கறதே அவ நெஞ்சுக்குள்ள போவலை. பூவாட்டம் என் பொண்ண வச்சிருந்தேன். எந்த முண்டச்சி பெத்த தறுதலைங்களோ நான் பெத்த அல்லித்தண்ட ஆழும் பாழும் அவ்வாறும் சிவ்வாறுமா ஆக்கிட்டானுங்க. ஆதரவு இல்லாத சிறுக்கி நானு. யாருகிட்ட போய் நாயம் கேக்கறது சொல்லு. அந்த ஐயனாரப்பந்தான் எல்லாத்துக்கும் கூலி குடுக்கணும்”, எச்சிலைக் கூட்டி விழுங்கும் போது அந்த அம்மாவின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது – (ஒற்றை மரம், பொம்மைக்காரி தொகுப்பு)
“ஆசையும் அதிர்ச்சியும் கலந்து மின்னும் அவன் கண்களில் குனிந்து முத்தமிட்டாள் அவள். உதறித் தள்ளிவிட்டு தன்வழியே செல்லப் பரபரபத்த அவன் கைகளோடு தன் கைகளைக் கோர்த்து இழுத்துத் தழுவினாள்.தழுவிய நிலையிலேயே புதர்களின் உட்பகுதியை நோக்கி நடந்தார்கள். கால்கள் அசைய மறுப்பதுபோல கனத்த கணத்தில் தரையில் சாய்ந்தார்கள்.காலகாலமாக அவனை அறிந்தவள்போல இடைவிடாமல் பலவிதமான உணர்ச்சிகளைக் காட்டிப் பேசினாள் அவள். குழைந்தாள். கொஞ்சிகொஞ்சிச் சிரித்தாள். மாறிமாறி முத்தமிட்டாள். இறுதியில் தன் உடலை அறியும்படி செய்தாள். தசைகளும் நரம்புகளும் பின்னிப்பிணைந்த இந்த உடனுக்குள் காணக்கிடைக்காத மாபெரும் புதையலைக் கண்ட ஆனந்தமும் பரவசமும் அவன் கண்களில் அலைமோதின” (வெள்ளம் சிறுகதை)
மேலே உள்ளது அவரது கதைகளின் இருவேறு புனைவு நடை. கூறுமுறையில் கதையின் இயல்பை ஒட்டி நிற்பவை. ஒன்று உச்சகட்ட உணர்ச்சி நிலையில் நாடக தருணத்தைக் காட்டும் சித்தரிப்பு. மற்றொன்று, மிக நிதானமாகத் தன்னை மறந்து கூடும் இரு உயிர்களின் காட்சியமைப்பு. நிகழ்ச்சிகளை மிக விரிவாக விவரித்து பலவிதமான உணர்ச்சிகளை கதையின் போக்கில் காட்டிச் செல்வது பாவண்ணனின் பாணி. ஒரு கடைத்தெருவோ, இயற்கைக்காட்சியோ புற இடத்தை ஸ்தாபிப்பதற்காக அவர் அவற்றை இணைப்பதில்லை. மாறாக, கதையின் தீவிரத்தைக் கூட்டவும், கதாபாத்திரங்களின் அக உணர்வுகளை பிரதிபலிக்கும் நோக்கத்துடனுமான புற உலக சித்தரிப்பு இயல்பாக அமைந்துவிடுகிறது. இதனாலே இயல்பை மீறிய தத்துவத்திணிப்பு அல்லது ஆன்மிக சித்தரிப்பை அங்கு நாம் காண்பதில்லை. இதனாலேயே பல கதைகளில் உச்சகட்ட முடிச்சு மிகப்பெரிய திருப்பங்களாகவோ வாசகர்கள் தங்கள் மனதில் உருவாக்கிய முடிவை முழுவதுமாகப் பூர்த்தி செய்வதுவாகவோ இருப்பதில்லை. கதாபாத்திரங்களின் இயல்பான வழக்கப்படி நடப்பதே கதையின் முடிவாகவும் இருந்துவிடுகிறது. இது பாவண்ணன் உலகம் உருவாக்கும் இயல்போடு ஒத்துப்போவதால் சிறுகதையின் நடையை பல இடங்களில் சுவாரஸ்யம் கூட்டாமல் நகர்வது போலத் தோன்றும்.
பாவண்ணன் சிறுகதை நடை அவரது உடனடி முன்னோடிகளான சுஜாதா, ஆதவன் போன்ற நவீன எழுத்தாளர்களின் சாயலை சாராத ஒன்று. நவீன புனைவு நடை எனும்போது நாம் அதில் உடனடித்தன்மையையும், நிகழ்வுகளைத் தாவுவதில் இருக்கும் துரிதத்தையும், சுருங்கச் சொல்லும் மொழியையும் பிரதானமாகக் கூறுகளாகக் கொள்ளலாம்.பாவண்ணனின் உலகில் இப்படிப்பட்ட நவீன புனைவு நடை விரவியிருந்தாலும் அவரை ஒரு ஸ்டைலிஸ்டாக வாசகர்கள் பார்ப்பதில்லை. வேடிக்கைகளை அவர் செயற்கையாகப் புகுத்துவதில்லை. மனித வாழ்விலிருந்து சந்தோஷம், துயரம், நிலையாமை அம்சங்களை இயல்பாகக் காட்டுவதில் கதைக்களனோடு சேர்ந்த நவீன நடை உருவாகிவிடுகிறது. சிறிய வாக்கியங்களில் சுருங்கச் சொல்லாமல் ஒரு முழுமையான சித்திரத்தைக் காட்ட முயல்கிறார். ‘ஒற்றை மரம்‘ கதையில் வரும் தாய் கதை நெடுக புலம்பித் தீர்க்கிறார். திரும்பத் திரும்ப ஒரே போன்றதொரு ஒப்பாரி. ஆனாலும் அதை சுருங்கச் சொல்லி பாவண்ணன் கடப்பதில்லை. இயல்பில் நம்மை சுற்றியிருப்போரது உள்ளார்ந்த உணர்ச்சியை ஒவ்வொரு முறையும் வார்த்தைகளில் காட்டுகிறார். நவீன பாணியில் வெட்டிச் செல்லும் யுத்திகளில் மனம் தோய்ந்தவர்களுக்கு பாவண்ணனின் இந்த கதை கூறும் பாணி வாசிப்பைத் தடை செய்யலாம். கதை காட்டும் உலகுக்குள் வாசகன் ஓரளவு பயணம் செய்தபின்னரே அவனால் அதோடு ஒன்றமுடிகிறது. இதை எதிர்மறை அம்சமாகப் பார்க்கும் விமர்சகர்கள் இருக்கிறார்கள். வாசகர்களும் இவ்விதம் கூறப்படும் கதையில் வாசிப்பின்பம் இல்லை எனக்கூறக்கூடும். திட்டவட்டமான முடிச்சுகளையும், காய்நகர்த்தல்களையும் கொண்டிராது வாழ்வை அதன் போக்கில் பதியும் பாணியால் நம் கற்பனையில் இருக்கும் உச்சகட்டத் திருப்பங்கள் கதையில் இருக்காது. இதனால் வேகமாகப் பக்கங்கள் திரும்பும்படியாக இல்லாத கதைகள் சில இருக்கலாம், ஆனால் நிச்சயமாக சரிவராமல் போன கதைகள் மிகக் குறைவே.
பாவண்ணன் படைப்பின் அழகியல்
பாவண்ணன் வாழ்க்கையிலிருந்து கதைகளை எடுக்கும் கலைஞர். அவரது கதாபாத்திரங்களில் கதைசொல்லிகள் மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள் கதாபாத்திரங்களாக வாழ்பவர்கள். அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி பெரிய கனவுகளும், அதீத பேராசையும் இல்லாதவர்கள். பெரும்பான்மையானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட வாழ்க்கையை அதிக அலட்டல் இல்லாமல் கழிப்பவர்கள். இதனாலேயே இக்கதைகள் காட்டும் தத்துவ தரிசனங்கள் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை. மிகவும் உணர்ச்சிகரமான மனிதர்களாக வருபவர்கள்கூட தங்கள் விதி இதுதான் என்றோ, அல்லது தங்களுக்கு நிறைவு தரும் வாழ்வை எட்டிப்பிடிக்க எண்ணியபடியோ காலத்தைக் கழிப்பவர்கள். இதனால் கதை படிக்கும்தோறும் கதாபாத்திரங்கள் அனைவரும் தன்னிச்சையாக உருவாகி வருகிறார்கள்.
புராண மறு உருவாக்கங்களிலும், பிரெஞ்சு காலனிய காலக் கதைகளிலும் பாவண்ணன் ஒரு இறுக்கமான கூறுமுறையைக் கைகொள்கிறார். மொழியிலும் அவர் தனது இயல்பான நெகிழ்வுத்தன்மையை கைவிடுகிறார். உண்மையான கதாபாத்திரங்களைப் பற்றிய கதைகளில் அவர் எல்லை மீறாது புனைவு சாத்தியத்தைக் கையாளவேண்டும் எனும் ஜாக்கிரத்தன்மையோடு செயல்படுவதாக தோன்றுகிறது. பாத்திரங்களின் குணவார்ப்பில் அதீத கவனமும், பண்டைய கால புற சித்தரிப்புகளை வாசகர்களிடம் கடப்பதற்காக மொழியில் கொண்ட நேர்த்தியும் பல நல்ல வகைமாதிரிகளை உருவாக்கிவிடுகிறது. உண்மை கதாபாத்திரங்களைப் பற்றி அச்சுபிசகாமல் எழுதுவது சவாலான காரியம் மட்டுமல்ல. ஆசிரியனின் புனைவு சாத்தியங்களைக் குறுக்கிவிடும் அபாயமும் அதில் உண்டு. பிரபஞ்சனின் வரலாற்று நாவல்கள் ஒரு குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வராததற்கு இந்த காரணமும் முக்கியமானது. அவரது ஆனந்தரங்கப் பிள்ளை, சுப்பையா போன்றவர்களைப் பற்றிய வரலாற்று நாவல்களை இப்போது வாசிப்பவர்கள் இதைக் கண்டறியலாம். இந்த எல்லைகளை பாவண்ணன் உடைத்திருக்கிறார். அதற்கு அவரது கற்பனையும், புனைவு மொழியும், இலக்கிய அறிவும் அதி உபயோகமாக இருந்திருக்கிறது.
எந்தொரு கருத்தியலையும் சாராது எழுதுவதால் பாவண்ணனின் கதைகளில் ஆழ்மனதைத் தொடும் அம்சங்கள் நிரம்பியுள்ளன. வாழ்க்கையைச் சார்ந்த அடிப்படையான கேள்விகளை எழுப்பிக்கொள்வதை இவரது கதைகளில் அதிகம் பார்க்க முடியாது. வாழ்வோடு போராடும் கதாபாத்திரங்களின் அலைச்சல்கள் இருப்பதால் எவ்வொரு கருத்தியலும் இக்கேள்விகளுக்கு பதிலாக அமையாது என்பது அவரது ஆரம்பகட்ட படைப்புகளிலிருந்து காண்கிறோம். ‘வாழ்க்கை ஒரு விசாரணை‘ நாவலில் வரும் காளியின் அலைக்கழிவுகளுக்கும் அதீத கழிவிரக்கத்துக்குமுண்டான அவனது வாழ்க்கைக்கும் பதில் தேடி எந்தொரு கருத்தியலையும் ஆசிரியர் சென்றடையவில்லை. கடவுள் சார்ந்தும் சாராதுமான எவ்விதமான அமைப்புகளையும் ஆசிரியரோ கதாபாத்திரங்களோ சென்று சேர்வதில்லை. அவை வாழ்க்கை எனும் சர்வவல்லமையின் விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் போராட்டங்கள் மட்டுமே. இதனாலேயே படிமங்களும் அக ஓட்டங்களும் மிகக் குறைவாகவே பயன்பட்டிருக்கின்றன. மொழி சார்ந்த நுட்பங்கள் தேடும் வாசகர்களுக்கு பாவண்ணன் சிறுகதை அழகியலில் பெறக்கூடியது அதிகமில்லை.
பாவண்ணனின் செவ்வியல் கதை பாணி
அன்றாட உலகு சார்ந்த விழுமியங்களையும், நவீன மனது அடையும் சிக்கல்களையும் தாண்டிய பெரு வினாக்களையும், மானுட பண்பாடு கடந்த இடர்களையும் சொல்லமுயன்ற கதைகள் எழுதியவராக பாவண்ணன் பொதுவாக அறியப்படுவதில்லை. அவர் எழுதிய “ஏழு லட்சம் வரிகள்” நமது புராணத்தையும் பண்பாட்டையும் மறு ஆக்கம் செய்கிறது. “இன்னும் ஒரு கணம்” , “வெள்ளம்” போன்ற கதைகள் நமது புராண தத்துவ விழுமியங்களின் மீது ஒரு தேடலாக, பாவண்ணன் சொல்வது போல நவீன கேள்விகளுக்கான பதிலை மரபில் துழாவித் தேடும் கைகளாக செயல்படும் கதைகள். நவீனத்துவக் கதைகள் தனிமனிதனின் தேடல்களை சமூகத்தின் அச்சாணியாகக் கருதும் பண்புடையது என்றால் செவ்வியல் கதைகள் வாழ்வை ஒரு ஒட்டுமொத்தத் தொகுப்பாகக் காண்கிறது. துரியோதனன் கிருஷ்ணை சுயம்வரத்தில் படும் வேதனையை மாறும் கணத்தை ஒரு ஒட்டுமொத்த இதிகாசத்தின் மீது கவிழும் குடையாகக் காட்டும் புனைவுக்கதை.
“கிருஷ்ணையின் மூச்சுக்காற்றும் வியர்வை மணமும் நுகரக்கூடிய நெருக்கத்தில் இருப்பவைபோலத் தோன்றின. காந்தமாக ஈர்த்த்ன அவண் கண்கள். காதோரத்தில் அலைந்தது குழல்கற்றை..எல்லாமே எதிரிலேயே காண்பதைப்போல தோற்றம் தந்து மறைந்தன….அடுத்த கணமே ஒரு யானை தும்பிக்கையால் வளைத்தெடுத்துப் பூமியில் வீசியதைப் போலத் தரை மீது விழுந்தான் துரியோதனன்” [ இன்னும் ஒரு கணம்]
நமக்குத் தெரிந்த கதை என்றாலும் படிமங்கள் மூலம் ஒரு இதிகாச தருணத்தை ஆழத்துக்குச் செலுத்துகிறார். இக்கதையைப் படிக்கும் வாசகர்கள், துரியோதனன் கிருஷ்ணையை மணந்திருந்தால் மகாபாரதம் நமக்குக் கிடைத்திருக்காதோ என எண்ணத் தோன்றும். ஆனால் வரலாறும், புராணமும் அத்தனை எளிமையான முடிச்சில் இயங்கும் வலையல்ல என்பதை பாவண்ணன் தனது கதையின் மூலம் புனைவாக்குகிறார். இப்படியான எண்ணற்ற தருணங்களால் நெய்யப்பட்ட சிலந்திவலை போன்றது அது. அதன் பாரம் ஒவ்வொரு புள்ளியிலும் அமைந்திருக்கிறது. மகாபாரதக் கதைகளை முன்வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் இணைப்பண்பாட்டு தொகுப்பு என்றால் பாவண்ணன் அவரது செவ்வியல் கதைகள் மூலம் பண்பாட்டு சித்திரிப்பின் பல வகை மாதிரிகளை உருவாக்கியுள்ளார். புத்த பள்ளிகளில் தத்துவம் பயிலும் ஒரு பிக்குவின் அகச்சஞ்சலங்கள் “வெள்ளம்” கதையாகிறது. இப்படியாக ஏழு லட்சம் வரிகள் தொகுப்பு பல தொன்ம தரிசனங்களை மறு ஆக்கமாக்குகியுள்ளது.
இந்த நேரத்தில் சமீபத்தில் எழுதப்பட்டு வரும் வெண்முரசு நாவல் வரிசையுடன் ஒரு ஒப்பீடு செய்வது இருவித பாணிகளை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவும். பாவண்ணன் தொன்மங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நம்முன் மீண்டும் நிகழ்த்திக் காட்டுகிறார். ஆனால் அவற்றை கலைத்து மீண்டும் அடுக்குவதில்லை. அதிலுள்ள தேடல்களையும், சமூக விழுமியங்களையும் மறு பரிசீலனை செய்வதில்லை. வெண்முரசு போன்ற பண்பாட்டுப் புனைவு நூல்களில் கையாளப்படும் ஒட்டுமொத்த தொகுக்கும் தன்மை பாவண்ணனின் இக்கதைகளில் கிடைப்பதில்லை. அவை நாமறிந்த கதைகளை ஒரு குவிமையத்தை நோக்கி கச்சிதமாக எடுத்துச் செல்லப்படும் கதைகள். உதாரணத்துக்கு, துரியோதனனும் கர்ணனும் கிருஷ்ணை சுயம்வரத்தில் பங்கெடுக்கும் சமயத்தில் இயல்பாக எழும் சில பண்பாட்டுச் சூழல்களுக்குள் கதை செல்வதில்லை. சிறுகதையாகச் சொல்லப்படுவதால் அது ஒரு மையத்தை நோக்கி கச்சிதமாகச் சென்று முடிகிறது. அதாவது புராணமும் தொன்மும் நம்முன் மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன. அக்கதையின் தேடல் விரிவான சமூகம் மற்றும் பண்பாட்டு சூழலின் பின்புலத்தில் நடப்பதில்லை.
பாவண்ணன் பிரெஞ்சு ஆண்டுவந்த புதுச்சேரி பகுதிகளை மையமாகக் கொண்டு பல வரலாற்றுப் புனைகதைகளை எழுதியுள்ளார். இக்கதைகளும் விரிவான சமூகத்தளத்தில் வைத்துப்பேசப்படாமல் இருந்தாலும் வரலாற்றுப்புனைவுக்காக கச்சிதமான பாணியை உருவாக்கிவைத்திருப்பதாகத் தோன்றுகிறது. மிகச் சிறந்த உதாரணக்கதைகள் – “கண்கள்“, “தங்கமாலை“, “பிரயாணம்“.
வரலாற்று நாயகர்களுக்கு காலம் தாண்டியிருக்கும் புகழுக்கான காரணங்கள் அவர்களது செயல்களின் தன்மை பொருத்து அமைவது. வரலாற்றில் பதியப்படும் அக்கதைகள் நாயகர்களின் செயலுக்கு ஏற்றார்போல பல வடிவங்கள் எடுத்துத் தொன்மங்களாக மாறிவிடும். வரலாற்றை புனைவாக்கும்போது இத்தொன்மங்களிலிருந்து கதைகளைப் பிரிக்கும் கலை மிகமுக்கியமான அம்சம். அத்தொன்மங்களையும்,கதைகளையும் அப்படியே நிகழ்த்திக்காட்டுவது செய்நேர்த்தியுள்ள கதையாகலாம் ஆனால் அதில் வாசகன் செல்லக்கூடிய ஆழம் குறைவாகவே இருக்கும். ஒரு படைப்பை வாசிக்கும்தோறும் வாசகன் தன்னைத் தொகுத்துக்கொள்கிறான், தனது அற உணர்வை மறுபரிசீலனை செய்கிறான். வரலாற்றுக்கதையில் வாசகன் அவனுக்குத் தெரிந்த புராணத்தோடு அக்கதையை அணுகுகிறான் எனும்போது தொகுத்துக்கொள்ளும் இடைவெளியை அளிக்கும் கதைகள் அவனை ஆழமாக பாதிக்கின்றன.
“கண்கள்” கதை கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாற்று சம்பவத்திலிருந்து எழுதப்பட்டது. ஆனால் மிக ஜாக்கிரதையாக தொன்மத்தின் மாயவலைக்குள் வீழாமல் பாவண்ணன் அக்கதையை வாழ்வின் விசாரணையாக மாற்றியுள்ளார். புதுச்சேரி ஆயி மண்டபத்தின் சரித்திரம் அறிந்தவர்களுக்கு அக்கதை ஒரு ராஜாவின் அற உணர்வைப்பற்றிய நாடகீய தருணமாகக் காட்சியளிக்கும். ஆனால் ஆயியின் குளத்தை பாவமன்னிப்புத் தேடி அலையும் நிம்மதியற்ற மனமாக உருவகப்படுத்தியதில் அக்கதை பல பரிமாணங்களை அடைகிறது. கண்டாமணியின் ஓசையைக் கேட்கும்தோறும் மனநிம்மதியை இழக்கும் தி.ஜானகிராமனின் கதையைப் போல இக்கதையில் பலாப்பழ வாசனையையும், குளத்தையும் நாம் காண்கிறோம். காலந்தோறும் மாறிவரும் அற உணர்வுகளைத் தனது கண்களால் சதா அலசுவதாக அக்குளம் ராயருக்குக் காட்சி அளிக்கிறது. இந்த குளத்தைக் கண்களாக மாற்றி நாம் புதுச்சேரியின் பிரெஞ்சு காலனியாதிக்கத்தையும் அலசமுடியும், பெஞ்சமின் முசே [“பிரயாணம்“] மனசாட்சியாக ஐரோப்பாவரை துரத்தும் விசையாகவும் கொள்ள முடியும்.
“சத்திரத்தில் ஏதோ ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழங்களின் மணம் மூக்கைத் துளைத்தது. தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த ரகுராயரின் மனதில் உடனடியாக பாவங்களையும் பலாவையும் மறைக்கமுடியாது என்ற எண்ணம் எழுந்தது” [கண்கள்]
ஹம்பி நகரிலிருந்து வெளியேறும் கவிராயர் விஜயநகர் சாம்ராஜ்ஜியத்தின் அழிவுக்கான காரணத்தை புதுச்சேரியின் ஆயி மண்டபத்தின் அறப்பிழைவில் கண்டுகொள்கிறார். சாபத்தின் நிழல் நீளும் தூரத்தை யாராலும் கணிக்கமுடியாது. கண்கள் கதையில் தொடங்கும் இந்த நிழல் பிரயாணம் கதையில் பெஞ்சமின் முசேயின் மூச்சில் அடங்குகிறது. பெஞ்சமின் முசே பாரீஸிலிருந்து குவர்னராக எல்லைப்பிள்ளைச்சாவடி வருகிறார். அதிகாரத்தின் வன்முறைக்குப் பழக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டுகொள்ள அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் கொடுமைகளைச் இந்த சிறுமண்ணில் களைய அவர் எடுத்துக்கொள்ளும் பயணம் இது.
இந்த இரு கதைகளிலும் தொன்மங்களிலிருந்து எடுத்தாளப்படும் புனைவு தருணங்கள் இல்லை. சொல்லப்போனால் அரசு அதிகாரத்தின் கச்சிதமான இழையை இருவித ஆட்சியாளர்களின் வரலாற்றிலிருந்து உருவாக்கியுள்ளார். இப்படிப்பட்ட ஆக்கங்களைப் படிக்கும்போது பிரபஞ்சன் எழுதிய வரலாற்றுப்புனைவுகளிலிருந்து வரலாற்று எழுத்து எந்தளவு மாறியுள்ளது என்பதை வாசகன் அறிந்துகொள்ளமுடிகிறது. கம்யூனிஸ்ட் சுப்பையா, பாரதியார், குவர்னர் தூப்ளே, துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை போன்ற பல வரலாற்றுப் பாத்திரங்களைக் கொண்டு வரலாற்றுப்புனைவுகளை உருவாக்கிய பிரபஞ்சன் கற்பனையில் செய்யாத பாய்ச்சல்களை இக்கதைகளில் நாம் காண்கிறோம். அதுமட்டுமல்லாது விரிவான சமூக/ வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ளதால் வரலாற்றில் இல்லாத சாத்தியங்களை பாவண்ணன் தனது கற்பனையினால் நிரப்பியுள்ளதைப் பார்க்கிறோம். ஒரு வரலாற்றுப் பாத்திரத்தின் மீது படிந்து போயிருக்கும் தொன்மங்களையும் வீரக்கதைகளையும் தாண்டி மனித வாழ்வின் விழுமியங்களையும், அடிப்படை உணர்வு நிலைகளையும் ஆராய்கிறார் பாவண்ணன். பிரபஞ்சனின் வரலாற்றுப்புதினங்கள் இத்தொன்மங்களை வேண்டிய மட்டும் பிடித்துக் கொள்வதால் கதாபாத்திரங்களின் அக உணர்வுகளுக்குள் செல்வதற்குப் பெரும் தடையாக அமைந்துள்ளது. “கண்ணீரால் காப்போம்” – பிரபஞ்சனின் வரலாற்று நாவலில் வரும் வ.வே.சு ஐயர், சுத்தானந்தபாரதி,திரு.வி.க போன்றோரின் சித்திரத்தை படிக்கும் வாசகன் தமிழ் இலக்கியத்தில் வரலாற்றெழுத்தின் இந்த நகர்வைக் கண்டுகொள்வான்.
பாவண்ணன் உலகில் மண்ணும் மரபும்
பாவண்ணனின் கதைகளை ஒருசேரப் படிப்பவர்களுக்கு அவர் மனிதனின் இயல்பான நன்னடத்தை மீது அளவுக்கதிகமான அபிமானம் கொண்டிருக்கிறாரோ எனத் தோன்றும். அது ஓரளவுக்கு உண்மையும் கூட. பாவண்ணனின் மண்ணான வட ஆற்காட்டுப்பகுதி மக்களின் ஓரளவு செழிப்பான விவசாய நிலமும், நகர்ப்புறத்தின் அண்டையில் இருப்பதால் விளையும் வர்த்தக கொடுக்கல்வாங்கல்களும் அவர்களது வாழ்வோடு பிணைந்திருக்கும் ஒன்று. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செஞ்சி, புதுவை இடங்களின் வளமான நிலப்பகுதி இருந்தாலும் நிலக்கடலை, மிளகாய், சம்பா போன்ற விளைச்சல்களால் வருடம் முழுவதும் தொடர்ந்த மகசூல் உள்ள நிலம். அதிக மழைநீரையும் எதிர்பாராததால் வறட்சி குறைவாகக் காணப்படும். கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளாக தெலுங்கு நாயக்கர்களும், தஞ்சை மராத்தியர்களும், சுல்தான்களும் ஆண்ட நிலம் என்பதால் நில உடைமையாளர்களில் பலர் வேற்றுமொழிக்காரர்களாகவும், அருகிலிருக்கும் புதுவை, சென்னை போன்ற இடங்களோடு வர்த்தகத் தொடர்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பாவண்ணன் கதைகளில் வரும் பெரும்பான்மையானவர்கள் சிறு நிலக்காரர்கள் அல்லது நிலச்சுவாந்தார்களுக்கு மாட்டு லாடம் அடிப்பது, தோட்டவேலை செய்வது போன்ற சிறுவேலை செய்பவர்கள். ஓரளவு நகரப்புற ஞானம் உள்ளவர்கள் ஆனால் அச்சுகங்களை எட்டிப்பிடிக்க முடியாதபடி அவர்களது வருமானம் அமைந்திருக்கும். பணச்சேகரிப்பை தலைமுறைகளின் வளர்ச்சிக் குறியீடாகப் பார்ப்பவர்கள்.
வாழ்க்கை ஒரு விசாரணை – நாவலில் வரும் வடிவேலு தாத்தா, வட ஆற்காட்டுப்பகுதி கதைளை சொல்லிச் செல்லும்போது நிலம் கைமாறும் முரணைப் பற்றிப் பேசுகிறார்.முன்னூறு வருடங்களாக தெலுங்கு, மராத்தி பேசும் முதலாளிகளிடமிருந்த நிலம், நில உச்சவரம்பு சட்டத்தின்படி மெல்ல கிராமங்களில் வேலை பார்த்தவர்கள் கைக்கு வருகிறது. அங்கிருந்து புது தலைமுறை ஆட்கள் வர்த்தகத்துக்காக புதுவை, சென்னை, கடலூர் செல்கிறார்கள். நில உரிமையாளர்களுக்கு அதிகாரம் குறையும்போது ஏற்படும் சிக்கல்களைப் பேசும் கதைகள் [அடைக்கலம்], ஜாதியை மீறும் காதல் திருமணங்களின் கருணைக்கொலை [ கனவு ] என மொழி, ஜாதி, பணவசதி என கடந்த நூறு வருடங்களில் கிட்டத்தட்ட தலைகீழாக மாறிய அடையாளங்களை உடைய சமூகத்திலிருந்து வரும் கதாபாத்திரங்கள் நிரம்பிய கதைகள்.
“ஒருதரம் மெட்ராசுக்குப் போய் வந்தவன் எண்ண ஆடற மிஷினைப் பார்த்திட்டு அது மாதிரியே இந்த ஊர்லயும் வாய்க்கணும்னு அலைஞ்சான். மணியக்காரு, கணக்குப்புள்ளயார் யாரயோ பார்த்து எல்லார் வாயயும் பணத்தால அடச்சி மேற்கால பெரிய அளவுக்கு பொரம்போக்குல நெலத்த வளச்சான் கேக்கறவங்களுக்கு ஒண்ணும் சொல்லலை…கடசில மெட்ராஸிலேர்ந்து மிஷின் வந்திச்சு..அன்னிலேர்ந்து செக்குக்காரங்க வாய்ல மண்ணு. ஒரு செக்கு ரண்டு செக்கு வச்சிருந்தவன்லாம் பெரிய மனுஷங்கற காலம் மலையேறிப்பூடுச்சி. ஈ ஓட்ட ஆரம்பிச்சிட்டானுங்க. சொத்து அப்படியே கைமாறிடுச்சு” [வாழ்க்கை ஒரு விசாரணை]
“நடுராத்திரி வரைக்கும் இருந்த தணல் தணிஞ்சதுக்குப்பறமா எடுத்து வெளியில போட்டாங்க. ஒடம்பே இல்ல. கரிஞ்ச கட்ட. உருட்டிகினே வந்து தோப்புலயே ஒரு பள்ளத்தத் தோண்டி பொதச்சிட்டாங்க. சாதுப்பெரும தெரியாத சனியனே சனியனேன்னு அதும்மேல துப்பி செருப்பாலயே மிதிச்சாரு தாத்தா..” [கனவு]
கண்ணுக்கெதிராக வர்த்தகத்திலும், சமூக அடையாளத்திலும் திடுமென மதிப்பைப் பெற்ற ஜாதியைப் பார்த்து ஏற்படும் பொறாமை, நகரமயமாக்கத்தின் வசதிகளைப் பரவலாகப் பெற முடியாததில் இருக்கும் ஏக்கம், வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் குலக்கதைகள் மூலமாக ஒரு பிராந்தியத்தை அடையாளப்படுத்துவதை தொடர்ந்து புனைவில் எழுதிக்காட்டியிருக்கிறார். வட்டாரக் கதைகள் எனும்போது உலர்ந்துபோன வாழ்வில் சிறு கீற்றைக் காட்டுவதோடு நில்லாமல் ஒரு தன்னெழுச்சி மூலம் கதாபாத்திரங்களுக்கு அகவிடுதலை அளிக்கவும் செய்கிறார் – ‘’மீண்டும் மீண்டும் தன்னை முத்தமிட்டபடி இருப்பதுபோன்ற எண்ணம் மனதில் பொங்கியது. அவள் வேதனையெல்லாம் அந்த முத்தம் அழுத்தித் துடைத்துவிடுவதைப்போல இருந்தது” – என தன்னைக் கெடுத்தவனையும் புருஷனின் வன்முறையையும் ஒரு தட்டில் நிறுத்தி பொம்மைக்காரியை தற்கொலையிலிருந்து காக்கிறது. மிகத் தீவிரமாகச் சொல்லப்பட்ட பொம்மைக்காரி கதை பாவண்ணனின் புனைவு அழகியலுக்கு ஒரு உச்சத்தைக் கொடுக்கும் கதை. அவரது அழகியலை திட்டவட்டமாக நிறுவும் கதையாகவும் உள்ளது.
பாவண்ணனின் கதைகளில் இயல்பாகவே படிமங்கள் உருவாகி வருவதை முன்னர் பார்த்தோம். ஜெயமோகன் ஒரு கட்டுரையில் – ஒரு வாசனையில் மனிதரையும் அந்த மனிதரைச் சார்ந்த உறவுகளையும் புனைவுக்குள் கொண்டு வர முடியும், என வண்ணதாசன் புனைவு பற்றி தெரிவித்திருப்பார். பாவண்ணனின் கதைகளில் வரும் மனிதர்களை நல்லவர் கெட்டவர் எனத் தரம் பிரித்துப்பார்க்க நமக்கு அனுமதி இல்லை. கதையில் வரும் மனிதர்களும் அவர்களுடன் ஒட்டும் உறவுமாக இருக்கும் தொடர்புகளும் இந்த வாழ்வை தவமாக, வரமாக, சாபமாகக் கொள்ளும் நிலையிலிருந்து விடுபட எண்ணுபவர்கள். வாழ்க்கை ஒரு விசாரணை நாவலில் வரும் காளி, கனவு கதையில் வரும் விஸ்வநாதன், பிரெஞ்சு துபாஷி வீட்டில் திருடச்செல்லும் பொம்மையார்பாளையும் வீரமுத்து அனைவரும் சந்திக்கும் ஒரு புள்ளியாக இது இருக்கிறது. பாவண்ணனின் வாழ்க்கைப் பார்வையில் அவர்களுக்கான விடுதலை நிலை என்பது கொடுக்கப்பட்ட வாழ்வை போராடாமல் ஏற்றுக்கொள்வதிலேயே அமைந்திருக்கிறது. ”பறவைகள்” கதையில் வரும் முதியோர் இல்லம் போல இம்மனிதர்கள் அடைய நினைக்கும் இடமும் இன்னொரு கூண்டு மட்டுமே என்பதை உணராமல் இருப்பவர்கள். பொம்மைக்காரி போல செல்ல நினைக்கும் இடமும் கூண்டே எனும் தரிசனத்தை அடைந்துவிட்டால் தங்களைச் சுற்றியிருக்கும் அவலத்திலும் ஒளிகீற்றைக் கண்டுகொள்வார்கள்.
பாவண்ணன் பலதரப்பட்ட கதைகளை எழுதிய கலைஞனாக அடையாளம் காணப்படவேண்டியது மிகவும் அவசியம். இக்கட்டுரையில் அவரது தமிழ் புனைவை மட்டுமே பிரதானமாக அலசியுள்ளோம். மொழியாக்கத்தில் அவரது சாதனைகள் இதற்குச் சமானமானவை. கன்னட மொழியாக்கங்களில் அவர் செய்த சாதனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் படைப்பாளிகள் இன்றும் வரவில்லை. முறையாக கல்விமுறையில் பயிலாமல் தன்னிச்சையாகக் கற்றுக்கொண்டே செவ்வியல் ஆக்கங்கள் தொடங்கி வட்டார மொழிகளைக் கையாளும் தலித் இலக்கியம் வரை அவரால் கன்னடத்திலிருந்து மொழியாக்கம் செய்யமுடிகிறது. மொழியாக்கங்களும் தமிழ் புனைவுகளும் அவரை மொழிவெளியின் சாத்தியங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கிறது எனலாம். தொடர்ந்து சிறார் நாவல்கள், கன்னட கவிதை இலக்கியம் எனும் புது திசைகளில் பயணம் செய்யும் பாவண்ணனை நினைக்கும்தோறும் வேலி ஓரங்களில் எதிர்பாராத இடைவெளிகளில் பூக்கும் செடிகள் நினைவுக்கு வருகின்றன. பாவண்ணன் சொல்வது போல, பசவண்ணரின் வசனங்களில் வரும் வரி – எங்கோ மாமரம். எங்கோ குயில். எல்லாவற்றையும் இணைப்பது எதுவோ?