எங்கோ எப்போதோ கேட்டது இது – எழுதும்தோறும் எழுத்தாளன் கனிந்துவிடுகிறான்; படிக்கும்தோறும் வாசகன் அந்த எழுத்தாளராகவே மாறிவிடுகிறான். எழுத்து அப்படியேதான் இருக்கிறது போலும். காற்றில் கலந்திருக்கும் மின்காந்த அலைகள் போல ஏதோ ஒரு விதத்தில் கலைஞனும் அவனது கலையும் இணைந்துவிடும் வித்தை நடந்தபடி தான் உள்ளது. அது ஒரு இறுமாப்பு தருணம். அதே சமயம், தான் ஒரு கருவி மட்டுமே எனும் பாதுகாப்பற்ற உணர்வு தொற்றிக்கொள்ளும் நேரம். சிறந்த கலைஞர்களை என்றும் துரத்தும் நிழல்கள் இவை. அவர்களது படைப்பு வாசிக்கப்படுகிறது எனும் எண்ணமே இச்சிறு சலனங்களிலிருந்து விடுபட முதல் வழியாகும். ஊக்கத்துக்கு உதவும் ஒவ்வொரு வழியும் கலைச் செயல்பாடுகளின் முதுகெலும்பாகும்.
எழுத்தாளர் பாவண்ணனுக்கு சிறப்பிதழ் செய்யலாம் எனும் யோசனையை தெரிவித்தபோது மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு செயல்புரியத் தூண்டிய பதாகை ஆசிரியர் குழுவுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி. அச்சிதழில் தகுந்த தளம் அடையப்பெறாதவர்கள் இணையத்தில் தமிழ் புழங்கத்தொடங்கியபோது பேருவகை அடைந்தனர். ஆனால் அவர்களது மகிழ்ச்சியில் மண் விழுந்ததுபோல தமிழ் இணையம் அடையாளமிலிகளின் கூடாரமாக ஆகிப்போனது. தமிழ் தத்துவ மரபின் ஆதி சூத்திரம் போல இருந்தும் இல்லாத நிலை. அதனால் இலக்கியத்தில் தொடர்ந்து தன் பங்களிப்பை அளித்துவரும் எழுத்தாளருக்காக ஒரு தரமான இணைய இதழ் பல பக்கங்களை ஒதுக்குவது என்பதும் சிறப்பிதழ் வெளியிட தயாராக இருக்கிறது என்பதும் பாறைப் பிளவில் பூவைப்போல அபூர்வ தருணம். இதை சாத்தியமாக்கிய பதாகை இணைய நண்பர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.
எங்கள் கோரிக்கை ஏற்று வெளிவரவிருக்கும் பாவண்ணன் எழுதிய புத்தகத்தின் முன்னுரையை எங்களுக்கு அனுப்பிய காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும் வெளியிட அனுமதியளித்த எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி.
சிறப்பிதழுக்குத் தேவையானவற்றை நண்பர் சுனில் கிருஷ்ணன் முன்னரே தெரிவித்திருந்தார். சு.வேணுகோபால் சிறப்பிதழின் முன் குறிப்பில் அவர் விரிவாகவே இதைப் பற்றி எழுதியுள்ளார். சிறப்பிதழ் எழுத்தாளருடனான விரிவான நேர்காணல் (இந்த இதழில் அது மடல்காணல்), எழுத்தாளரின் ஆக்கங்கள் பற்றி விரிவான கட்டுரைகள் ஆகிய இரண்டும் கட்டாயம் இருக்க வேண்டும் என்றார். முதலில் எழுத்தாளர் பாவண்ணனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது எவ்விதமான தயக்கமும் இல்லாமல் உடனடியாக தனது சம்மதத்தைத் தெரிவித்ததோடு இன்று வரை நாங்கள் கேட்ட எல்லாவிதமான தகவல்களையும் தந்து ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார். அவருக்கு பதாகை இணைய இதழ் சார்பில் ஆகப்பெரிய நன்றி.
பதாகை இணைய இதழுக்குத் தொடர்ந்து படைப்புகள் அனுப்பியும் விமர்சனங்கள் சொல்லியும் ஊக்கப்படுத்தும் எழுத்தாளர்களைத் தொடர்பு கொண்டு பாவண்ணன் சிறப்பிதழ் பற்றி சொன்னபோது பலரும் தங்கள் படைப்புகளை உடனடியாக அனுப்பினர். நண்பர்களின் உதவியால் பெரிய அளவு நாங்கள் கோராமலேயே கட்டுரைகள் உடனடியாகக் கிட்டின. எழுத்தாளர் பாவண்ணனின் எழுத்து மீது பிரியம் கொண்ட வாசகர்கள் தாங்களாகவே முன்வந்து நண்பர்களிடம் வாங்கிய கட்டுரைகள் பலதும் இங்கு உள்ளன. அவர்களுக்கு எங்கள் உள்ளம் நெகிழ்ந்த நன்றிகள் பல.
மூத்த எழுத்தாளர் விட்டல் ராவ் அவர்கள் இந்த சிறப்பிதழ் பற்றி கேள்விப்பட்ட எழுத்தாளர் பாவண்ணன் மீதிருக்கும் அன்பால் உடனடியாகக் கட்டுரை அனுப்பிவிட்டார். அவரது அன்பிற்கும் ஆசிகளுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அதே போல திருஞானசம்பந்தம் அவரது தனிச் சேகரிப்பில் இருந்த அற்புதமானப் புகைப்படங்களை நாங்கள் கேட்காமலேயே எங்களோடு பகிர்ந்துகொண்டதும் நெகிழ்ச்சியான தருணம். இத்தனை நண்பர்கள் ஊர்கூடி இந்த சிறப்பிதழை நடத்தியுள்ளதை எண்ணி மனம் பூரிப்படையாமல் இருக்க முடியவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகியிருக்க வேண்டிய இந்த சிறப்பிதழ் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்கள் மழையிலும், ஏரிகள் உடைந்து வீட்டுக்குள் புகுந்த நீரின் சேதங்களினாலும் திண்டாடிப்போன சென்னை, கடலூர் பகுதிகளின் பாதிப்பிலிருந்து மீட்பதற்காக தங்கள் நலனையும் பாராது உழைத்த இதயங்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளையும் பதாகை இணைய இதழ் சார்பாகத் தெரிவிக்கிறோம்.
முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுத்திலும் வாசிப்பிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாது எப்போதும் புது எழுத்தாளர்களின் அறிமுக எழுத்தையும் படித்து ஊக்குவிப்பதில் முதன்மையாகச் செயலாற்றும் எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு வாசக நன்றியாக இந்த இதழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செய்நேர்த்தியில் பங்கு கொண்ட அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.