ஊரும் சேரியும், கவர்ன்மென்ட் பிராமணன் ஆகிய மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக பாவண்ணனின் ‘குழந்தையைப் பின்தொடரும் காலம்’ கவிதைத்தொகுதி வெளிவந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அப்போதுதான் நான் கவிதைகள் வழியாக இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்திருந்தேன். அந்தச் சமயத்தில்தான் நிலையானதொரு பணியில் நான் அமர்ந்திருந்தேன். பாவண்ணனின் முதல் சிறுகதைத் தொகுதி 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஆனால் அவருடைய முதல் கவிதைத் தொகுதி வெளிவருவதற்கு மேலும் பத்தாண்டுகள் 1997 வரைக்கும் காத்திருக்க வேண்டியிருந்தது.
‘குழந்தையைப் பின்தொடரும் காலம்’ தொகுதியில் பல கவிதைகள் இன்னும் என் நினைவில் பதிந்திருக்கின்றன. அத்தொகுதியின் முதல் கவிதை பாவண்ணன் தன் அம்மாவைப்பற்றி எழுதியிருக்கும் கவிதை. கிட்டத்தட்ட சுயசரிதையின் சாயல் உள்ள கவிதை. ‘அன்புதான் முதல்படிப்பு, அதுக்கப்புறம்தான் பட்டப்படிப்பு’ என முடிவடையும் அக்கவிதையை பல முறை திரும்பத்திரும்ப படித்திருக்கிறேன். அந்த வரிகள் ஒரு ஆப்த வாக்கியம்போல மனத்தில் அப்படியே பதிந்துவிட்டது.
இன்னொரு கவிதையும் நினைவில் இருக்கிறது. ஒரு பெட்டிக்கடையில் கடைக்காரர் ஒலிபெருக்கியெல்லாம் வைத்து நல்ல நல்ல பாட்டுகளை வைத்து ஒலிக்க வைத்தபடி இருப்பார். வாடிக்கையாளர்கள் வருவார்கள், போவார்கள். அந்தக் கடைக்கு அருகில்தான் பேருந்து நிலையம் இருக்கும். பல பேருந்துகள் வந்து பயணிகளை இறக்கிவிட்டுச் செல்லும். நிறைய மனிதர்களின் நடமாட்டம். இரைச்சல். வேறொரு பக்கம் உணவு விடுதிகளில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் மக்களின் பேச்சுச்சத்தம். பழவண்டிக்கடைகள். மிதிவண்டியில் இளநீர்க்குலைகளைச் சாய்த்துவைத்துக் கொண்டு வியாபாரம் செய்யும் இளைஞன். அங்குமிங்கும் நடக்கும் பெண்கள். கையேந்தித் திரியும் பிச்சைக்காரர்கள். ஏராளமானவர்கள் நடமாடுகிறார்கள். அவர்களில் யாருக்கும் அந்தப் பாட்டை காதுகொடுத்துக் கேட்கும் பொறுமையோ, விருப்பமோ, நேரமோ இல்லை. கடந்து சென்றுகொண்டே இருப்பார்கள். கடைக்காரர் அதைப் பற்றியெல்லாம் நினைத்துச் சோர்வடைவதே இல்லை. பாடல்களை மாற்றிமாற்றி வைத்தபடியே இருப்பார்.
முதல் வாசிப்பிலேயே எனக்கு அந்தச் சித்திரம் பிடிபட்டுவிட்டது. அச்சுஅசலாக எங்கள் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தின் சித்திரம் அது. அந்த நிறுத்தத்தில் நானும் நின்றிருக்கிறேன். அந்தப் பாட்டை நானும் கேட்டிருக்கிறேன். அதை நினைத்துநினைத்து மகிழ்ந்தேன். சில நாட்களுக்குப் பிறகு, அத்தொகுதியை மறுபடியும் வாசித்தபோதுதான், அது வெறும் கிராமத்துச்சித்திரம் மட்டுமல்ல என்பது புரிந்தது. தன் பாட்டை ஒருவரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றபோதும் தன் கடன் பணிசெய்து கிடப்பதே என்பதுபோல, அவன் தன் போக்கில் பாடல்களை பாடவைத்தபடி இருக்கிறான் என வேறொரு கோணத்தில் புரிந்துகொண்டேன். அந்த வெளிச்சம் கிடைத்த பிறகு எனக்கு அந்தக் கவிதை மனசுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது. முதல் கவிதையில் தன் அம்மாவின் சித்திரத்தைத் தீட்டிய பாவண்ணன், அடுத்தடுத்த கவிதைகளில் தன் சித்திரத்தை தானே தீட்டிவைத்திருக்கிறாரோ என நினைக்கத் தோன்றியது. மூன்று கவிதைத்தொகுதிகள், கிட்டத்தட்ட நூறு கவிதைகளின் பிரசுரத்துக்குப் பிறகும்கூட பெட்டிக்கடைப் பாடல்கள்போல பாவண்ணனின் கவிதைகள் கவனம் பெறாமலேயே போயிருப்பதைப் பார்க்க வருத்தமாகத்தான் இருக்கிறது.
பல கவிதைகளில் தன் கண்களால் காண நேர்ந்த காட்சிகளையே பாவண்ணன் கவிதையாக்குகிறார். காட்சியை முதற்பொருளாகவும் திரைக்குப் பின்னால் வேறொரு அம்சத்தை மறைபொருளாகவும் இணைத்து அவர் நெய்திருக்கும் விதம் வசீகரமாக இருக்கிறது. அடைமழையில் ஒதுங்க இடம் கிடைக்காமல், நனையும் தன் குழந்தையின் தலையை முந்தானையால் மறைக்கும் பிச்சைக்காரி, கடலில் அகப்பட்ட மீன்களை வலையிலிருந்து உதறும் மீனவர்கள், பிழைப்பதற்காக புதிய ஊருக்கு திருட்டு ரயில் ஏறிவரும் புதியவனை சந்தேக வழக்கில் அள்ளிப் போட்டுக்கொண்டு செல்லும் காவல் வாகனம், மனப்பாடச் செய்யுளை ஒப்பிக்காத மாணவிக்கு முட்டிப் போடும் தண்டனையைக் கொடுக்கும் ஆசிரியை, அந்த ஆசிரியை அடுத்த பிறவியில் கழுதையாகவோ நாயாகவோ பிறந்து தெருத்தெருவாக அலைந்து திரிய வேண்டும் என மனத்துக்குள் சாபமிடும் மாணவி, கோபம் கொண்ட அந்த மாணவியை அமைதிப்படுத்தியபடி மதில்மேல் ஓடும் அணில், ஆலமர விழுதில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் இளம்பெண், கூடு கட்டுவதற்காக கவ்விச்சென்ற குச்சியை தவறவிடும் காகம், ஆறுநாட்கள் தொடர்மழையால் அலங்கோலமாகும் நகரம், உயர்ந்த மரத்தின் உலர்ந்த கிளையில் உட்கார்ந்து குதிரையோட்டும் சுள்ளி பொறுக்கும் சிறுமி, ஒற்றைக்கால் பந்தலென நிற்கும் வேப்பமரம், விண்ணையும் மண்ணையும் தொட்டபடி விஸ்வரூபமெடுக்கும் குற்றாலத்துத் தேனருவி, நகரத்தெருக்களில் இரவு வேளைகளில் நாய்கள் உறங்கும் அழகு, ஐயனாரின் வாளிலிருந்து மரத்துக்கும் மரத்திலிருந்து வாளுக்கும் மாறிமாறிப் பயணித்து நிலைகொள்ளாமல் தவிக்கும் சுடுகாட்டுக் குருவி, நடைப்பயிற்சியில் நாயைத் தொலைக்கும் முதியவர், காக்கைக்கு வைத்த படையல் சோறென காட்சியளிக்கும் அருவியில் மாண்டவனின் உடல் என பாவண்ணன் கவிதையுலகில் ஏராளமான காட்சிகள். அவற்றை மீண்டும் மீண்டும் மனத்துக்குள் மீட்டிமீட்டி மறைபொருளைக் கண்டறிந்து சுவைக்கும்போது கவிதைகளை மிகவும் நெருக்கமாக உணரமுடிகிறது.
கண்முன் விரியும் காட்சிகளை கவிஞரின் மனம் புகைப்படங்களாகச் சேமித்துக்கொள்கிறது. மனத்துக்குள் அவற்றை அசைபோடுகிறது. துல்லியமான அவதானிப்பும், காட்சிகள் உள்ளத்தில் ஏற்படுத்தும் சலனங்களும் தங்குதடையற்ற மொழியின் ஆற்றொழுக்கும் சொல்லாமல் சொன்னபடி விலகியோடும் மறைபொருளும் கவிதை ஓவியங்களாக விரிகின்றன என பாவண்ணனின் கவிதைகளின் சூத்திரமாக பொதுவாகச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் இந்த எளிய சூத்திரத்தில் அவருடைய எல்லாக் கவிதைகளையும் அடக்கிவிடமுடியாது என்பதையும் உணரமுடிகிறது. எடுத்துக்காட்டாக ‘அணில்’ கவிதை. அதன் மையப்பொருள் மரணம். மரணம் அதிர்ச்சியடைகிறது. காரணம், வாழ்க்கை தன்னை கைவிட்ட அதிர்ச்சி.
வாழ்க்கையின் முகத்தில் துளிர்த்திருக்கிறது
மரணம் தூவிய விதை
உறக்கத்தில் ஏதாவது
ஒரு வாசல் வழியே நுழைந்து
ஏதாவது ஒரு வாசல் வழியே
வெளியேறுகிறது மரணம்
நடந்துசெல்லும் மானுடக்கூட்டத்தின்
பாதங்களுக்குக் கீழே
நிழல்போல ஒட்டிக்கிடக்கிறது மரணம்
கவித்துவம் வாய்ந்த இறுதி வரிகள் மிகமுக்கியமானவை: மரணம் விளையாடிக்கொண்டே இருக்கிறது / பழங்கள் தொங்கும் / கிளைக்குக் கிளை நகரும் அணில்போல. அணில் மரணத்திற்கான மிக இயல்பான படிமமாக வந்துள்ளது. பாவண்ணனின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றாக ‘அணில்’ கவிதையைச் சொல்லமுடியும்.
பாவண்ணனின் கவிதைகளில் சிறுமிகளும் பெண்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள். ‘பூ’ கவிதையில் வரும் சிறுமி தன் கனவில் பூ விழுகிறது என்று சொல்கிறாள். ஆனால், அடுத்தவர் கனவிலும் பூ விழுகிறது என்று சொன்னால் அது கனவாகவே இருக்காது, ஏதேனும் கதையின் நினைவாக இருக்கலாம் என கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஓடி விடுகிறாள். ’புன்னகையின் வெளிச்சம்’ கவிதையில் ஒரு சிறுமி இடம்பெற்றிருக்கிறாள். அவளுக்கு இறவாணத்து மூலையில் கையுடைந்த மரப்பாச்சிப் பொம்மையொன்று கிடைக்கிறது. அதைக் கழுவித் துடைக்கிறாள். ஆனந்தச் சிரிப்போடும் அளவற்ற ஆசைகளோடும் பாட்டுத்துணுக்குகளோடும் பரிகாசப் பேச்சுகளோடும் ஓர் ஊஞ்சல் அசைகிறது. சூரியனைப் பற்றும் விருப்போடு விண்ணைத் தொட ஊஞ்சல் காற்றில் பறக்கிறது. குழலாட, குழையாட, குட்டைப்பாவாடை சரசரக்க, இன்னொரு சிறுமி ஊஞ்சலாடுகிறாள். அவளிலிருந்து ஆயிரக்கணக்கான சிறுமிகள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து நிற்பவளிடம் ஒரு புன்னகையைப் பரிசாக அளிக்கிறார்கள். இருண்ட சமையலறையின் மூலையில் தன் வெளிச்சத்தைப் படரவிட்டது அந்தப் புன்னகை. கையொடிந்த மரப்பாச்சிப் பொம்மை நிறைவேறாத கனவுகளைக் கொண்ட சிறுமிகளுக்குப் படிமமாவது மிகச்சிறப்பானது. சமையலறை மூலையை அவர்களுடைய புன்னகை வெளிச்சமூட்டுவது குறியீட்டுத் தன்மை வாய்ந்தது. இன்னொரு பெண்குழந்தை ‘வழிபாடு’ கவிதையில் வருகிறாள். குழந்தையும் தெய்வமும் இணையும் புள்ளியை சாதாரண வரிகளின்மூலம் அசாதாரண கவித்துவத்தை பாவண்ணன் வெளிப்படுத்துகிறார். கருவறைக்கு பொற்பாதம் காட்டி/ சட்டென்று விழுந்து சிரிக்கிறது குழந்தை.
சிறுமிகள் அடிக்கடி வருவதுபோல கவிதைகளில் அருவிகளும் அடிக்கடி இடம்பெறுகின்றன. மழை மீண்டும் மீண்டும் வருகிறது. (குறைந்தபட்சமாக பதினைந்து கவிதைகள்) பல கவிதைகளில் பட்டங்கள் பறக்கின்றன. மலர்கள் மலர்கின்றன. நாய்கள் உலவுகின்றன. காக்கைகள் கரைகின்றன. கனவுகள் மீண்டும் மீண்டும் விரிகின்றன. இப்படி திரும்பத் திரும்ப வந்தாலும்கூட அவை ஒற்றைப்பொருளை உணர்த்துவதில்லை. வெவ்வேறு வகைகளில் படிமமாகவோ, உருவகமாகவோ, குறியீடாகவோ மாறிமாறி வரிகளுக்கு வலிமையூட்டுகின்றன.
‘பயணம்’ கவிதை நல்லதொரு சிறுகதைபோல உள்ளது. ‘இளமை’ கவிதையின் இறுதிப்பகுதியில் உள்ள ஆறேழு வரிகள் அதிகப்படியாக நீட்டப்பட்டவையாக உள்ளன. கவிதை, அவ்வரிகளுக்கு முன்பேயே முடிவடைந்துவிட்டதுபோல இருக்கிறது. பொதுவாக பாவண்ணனின் கவிதைகள் அளவில் சிறியவை. ஆனால், ‘ஆதிக்காதலியின் அழுகுரல்’ (நான்கு பக்கங்கள்) ‘உயிரின் இசை’(பத்து பக்கங்கள்) இரண்டும் மிக நீண்டவையாக உள்ளன. எனினும் சற்றும் நெருடாமல் இயல்பாக ஒரு நதியோட்டம்போல விரிந்து செல்கின்றன.
எளிய சொற்கள், நேரடியான வருணனைகள், ஒரு தளத்திலிருந்து சட்டென்று அடுத்த தளத்துக்கு தாவும் தன்மை, சாதாரண உருவில் இடம்பெறும் அசாதாரணமான படிமங்கள், முத்தாய்ப்பான உச்சம், காட்சிகளை படிப்பவர் மனத்தில் ஆணியாக அறையும் சித்தரிப்பு என பாவண்ணனின் கவிதைகளில் தனித்துவம் மிளிர்கிறது. ஒருவகையில் அவருடைய சிறுகதை மற்றும் புனைவு எழுத்துகளின் நீட்சியே அவருடைய கவிதைகள் என்று சொல்லலாம். கவிதைகள் நவீன வடிவில் இருந்தாலும் இரண்டாயிரமாண்டு தமிழ்க்கவிதைகளின் தொடர்ச்சியாக அவற்றைக் கருதத் தோன்றுகிறது. விழுமியங்களும் கருப்பொருட்களும் எடுத்துரைக்கும் விதமும் ஒருவேளை காரணங்களாக இருக்கக்கூடும். நவீன இலக்கியச்சூழலில் பாவண்ணன் ஒரு கவிஞராக மிகுதியும் அடையாளம் காணப்படாதது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக கடந்த சில நாட்களாக நான் படித்த பாவண்ணனின் ஒட்டுமொத்தக் கவிதைகளையும் நினைத்துக்கொள்ளும் இத்தருணத்தில் (அவர் கவிதைகளில் அடிக்கடி இடம்பெறும்) அருவிகளும் இசையும் என் நெஞ்சில் எழுகின்றன. அவர் மொழியிலேயே சொன்னால் ஆனந்த அருவி மற்றும் இனிய இசை. ஒருவகையில் , இவை இரண்டுமே பாவண்ணனின் கவிதைகளுக்கு உருவகங்களாக கொள்ளத்தக்க இரு பாடுபொருட்கள். ‘இருள்’ என்றொரு கவிதை. நடைபாதையில் தன் ஐந்து குழந்தைகளோடு உறங்கும் பிச்சைக்காரியின் தூக்கத்தைக்கூட கலைக்காமல் இருள் பயணிக்கிறது. இருள் எத்தனை கருணையோடு இருக்கிறது! ஆதரவற்றவர்களுக்குக்கூட அது ஆதரவளிக்கிறது. ஏனெனில் அது பாவண்ணன் படைக்கும் இருள். கருணையோடுதான் இருக்கும். இனிமையைத்தான் கொடுக்கும்.
‘நிறைதல்’ என்னும் பாவண்ணனின் கவிதையோடு இந்தக் கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.
மொழி புரியாத கடற்கரை ஊரில்
தென்னந்தோப்போரம் நடந்து செல்கிறேன்
கொட்டாங்குச்சி மேளத்தை
குச்சியால் தட்டியபடி
காற்றில் திளைத்திருக்கிறாள் ஒரே ஒரு சிறுமி
அவள் தலைக்கூந்தல் அழகாக நெளிகிறது
ஆனந்தம் கொப்பளிக்கிறது அவள் கண்களில்
அருகில் நிற்பதை உணராமல்
அவளது விரல் குச்சியை இயக்குகிறது
அவள் தாளத்துக்குக் கட்டுப்பட்டு
குரங்குக்குட்டிகள் போல
உருண்டும் புரண்டும்
எம்பியும் தவழ்ந்தும்
நாடகமாடுகின்றன அலைகள்
கீற்றுகளின் கைத்தட்டல் ஓசை
கிறுகிறுக்க வைக்கின்றன அவற்றை
உச்சத்தை நோக்கித் தாவுகிறது ஆட்டம்
தற்செயலாக திரும்புகிறது சிறுமியின் பார்வை
தெத்துப்பல் காட்டிச் சிரிக்கிறாள்
தொடரும்படி அவளிடம் சைகை காட்டுகிறேன்
கரையெங்கும் பரவி
நிறைகிறது மேள இசை
**
நாகராசன் பாவண்ணனின் கவிதைகளின் மன ஆழத்தை உணர்ந்து எழுதி உள்ளார். அதுவும் கடைசியில் கொட்டாங்கச்சியைத் தட்டி மேளம் அடிக்கும் சிறுமி பற்றிய கவிதை அருமை. இன்னும் கூட கட்டுரை நீண்டிருக்கலாம்