பெனடெட்டோ மார்செல்லோவின் சுழற்தகடைச் சுற்றிவிட்டு சில கரகரப்புகள் முடிந்து இசை ஆரம்பிக்கக் காத்திருந்தேன். அட்டையில் அவரைப் பற்றி சிறு குறிப்பு வரைந்திருந்தார்கள். 1710இல் அவரது அண்ணன் அலெச்சாண்டோ மார்செல்லோ எழுதிய இசைக்குறிப்புகள் இவை. இந்த ஓபோ வாந்தியக்குறிப்பை 1717 ஆம் ஆண்டு தந்திக்கருவிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்துள்ளார் பாஹ். இளையராஜா ஏன் மீண்டும் மீண்டும் பாஹ் காலகட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறார் என விளங்கும். நிற்க. இக்கட்டுரை இந்த இசைக்குறிப்புகளைப் பற்றியதல்ல. சுட்டியைத் தட்டிவிட்டு பின்னணி இசையாகக் கேட்டபடி மேற்கொண்டு படியுங்கள்.
நாஜிக்களின் திட்டமிட்ட அழித்தொழிப்பைப் பற்றி பல புத்தகங்களும், எண்ணிலடங்கா திரைப்படங்களும் வெளியாகியுள்ளன என்றாலும் ஒவ்வொரு புது வரவும் நமது மனதை ஏதோ ஒருவிதத்தில் கவர்ந்துவிடுகிறது. 1933இல் நார்மன் ஆங்கெல் War pays என தீர்க்கதரிசி மாதிரி சொன்னது நினைத்துப்பார்க்க முடியாதபடி இன்றுவரை பலனளித்துவருகிறது. The Book Thief வரை இது புத்தக சந்தைக்கும் திரைப்படங்களுக்கும் பொருந்தும்.
எனக்கு யுத்தகால படைப்புகளில் பெரும் ஈடுபாடு உண்டு. நல்ல புத்தகங்கள்/திரைப்படங்கள் எனப் பட்டியல் போட்டால் அதில் ஒரு யுத்தப்படைப்பாவது இருக்கும். இப்போது நினைத்துப் பார்க்கையில், The Pianist, Life is Beautiful, The Great Escape, Life of Others எனப் பல திரைப்படங்களும், Regeneration ,The Book Thief புத்தகங்களும் நினைவுக்கு வருகின்றன. மேடை நாடகங்களுக்கும் குறைவு இல்லை. யுத்த காலத்தில் நமது நியாய உணர்வுகளும், சுய பாதுகாப்பு உணர்வுகளும் உச்சகட்டத்தை அடைகின்றன. வாழ்வின் அர்த்தமென்ன, மனிதர்களின் இயல்பென்ன, கீழ்மையின் எல்லை என்ன, மேன்மையின் தியாகத்துக்கு அர்த்தமென்ன எனப் பல கேள்விகள் ஒவ்வொருவரையும் குடைகின்றது.
சார்லெஸ் பெல்ஃபோர் எழுதிய The Paris Architect மேற்சொன்ன வரிசையில் வருமா எனத் தெரியவில்லை. வெளியாகி ஒருவருடம் கூட ஆகாத நிலையில் புத்தக விற்பனை பெரிதாக இல்லை. விமர்சகர்களும் மென்று விழுங்குகிறார்கள். காரணமில்லாமல் இல்லை. முழுமையான இலக்கிய நாவலும் அல்ல; பாக்கெட் நாவலும் இல்லை. எழுத்தாளர் கென் ஃபோலெட்டுக்கும் இல்லை; டான் ப்ரவுனும் இல்லை. ஆனாலும் எனக்கு இந்த நாவல் ரொம்பப் பிடித்திருந்தது. சாதாரண மனிதனின் அசாதாரண நாட்களைச் சொல்வதாலா? ஜெர்மன் ஆதிக்கத்தில் பாரீஸ் இருந்தா காலத்தைக் காட்டுவதாலா? கோரமான நாஜிக்கொடுமைகளைக் காட்டாமல் விட்டதற்கா? தெரியவில்லை. ஆனால் யூதர்களைக் கண்டால் தூர விலகு என வளர்க்கப்பட்ட ஒருவன் மெதுவாக எப்படி அவர்களைக் காக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்கிறான் என்பது மட்டுமல்ல அதீத ஆர்வம் ஒருவனை எங்கெல்லாம் இட்டுச் செல்லும் எனும் நிகழ்வுத்தொகுப்பாகவும் இருப்பதால் இந்த நாவல் எனக்குப் பிடித்திருந்தது என நினைக்கிறேன். இன்னும் ஓரிரு வருடங்கள் திரைப்படமாகவும் வரலாம்.
லூசியன் எனும் பிரெஞ்சுக்காரன் கட்டிடக்கலையில் வல்லவன். நூல் முறை மீறாது கட்டடங்களைக் கட்டுவது மட்டுமல்லாது புதுவித பர்ரோக் பாணி கட்டிடங்கள் மீது காதல் கொண்டவன். அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நகரங்களில் கட்டப்படும் நவீன கட்டிட பாணிகளை வெறுப்பவன். குறிப்பாக ஜெர்மன் நகரக் கட்டடங்கள். யுத்த காலத்தில் ஒரு புறம் குண்டுகளால் அழிக்கப்படும் பகுதிகள் இருந்தாலும், ஜெர்மன் ரைக்கின் எதிர்கால நகரங்கள் மறுபுறம் கட்டப்பட்டு வந்தன. ஹிம்லர் மற்றும் ஹிட்லரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நவீன பாணிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. கட்டடயியல் படிக்க நினைத்து முடியாமற் போன ஹிட்லருக்கு பெரிய கட்டிடங்களை உருவாக்கிவிட வேண்டும் என கனவு இருந்தது. அதற்காகவே அவரது நேரடி கண்காணிப்பில் கட்டிடவியல் கலைஞர்களும் திட்டவல்லுனர்களும் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலெல்லாம் அடிக்கல் நாட்டிக்கொண்டிருந்தனர்.
இடம் போனாலென்ன, வலம் போனாலென்ன நம்மீது பாயாமல் இருந்தால் போதுமென்ற மனதோடு பாரீஸ் மக்கள் ஜெர்மன் ஆக்கிரமிப்பை அணுகியிருந்தார்கள். ஜெர்மன் படைகளில் இரு வகையினர் உண்டு – நாஜி படையினர், ஜெர்மன் ராணுவத்தினர். எலியைத் தோண்டி எடுப்பது யூத மக்களை அவர்களது மறைவிடங்களிலிருந்து வெளியேற்றுகின்றனர். பிறகு அவர்களது பூர்வ ஜென்ம கர்மாபடி முகாமுக்கோ நரகத்துக்கோ அனுப்புகின்றனர்.
ஆக்கிரமிப்பின் போது பாரீஸ் மக்களுக்கு வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. சாப்பாடு ரேஷன் முறையில் வாரம் ஒரு முறை வழங்கப்படும். எல்லா தொழில்களும் ஜெர்மன் ரைச்சுக்கு லாபகரமானதாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். அடிமாட்டு விலைக்கு வேலை செய்வதற்கு பெரும் முதலீடுகளை தங்களுக்குச் சாதகமாக முடிக்கும்படி திறமையான பாரீஸ் கலைஞர்கள் ஜெர்மன் அதிகாரிகளோடு வேலை செய்தனர்.
பெரிய வேலைகள் கிடைக்காவிட்டால் சின்னச் சின்ன கட்டிட வேலைகளை லூசியன் செய்துவந்தான். மானே எனும் பணக்கார பிரெஞ்சுக்காரர் அலுவலகத்திலிருந்து லூசியனுக்கு அழைப்பு வருகிறது. பாரீஸ் நகரத்தின் பணக்கார தொழிலதிபரான மானேவுக்கு தன்னிடம் என்ன வேலை இருக்க முடியும் என எண்ணியிருந்தாலும் ஏதோ சின்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை எனச் செல்கிறான். அவனது யூத எதிர்ப்பைத் தெரிந்திருந்தும் மிகத் திறமையான கட்டிட நிபுணராக இருப்பதால் மானே முக்கியமான வேலையை லூசியனுக்குத் தருகிறார். அவரது யூத நண்பர்கள் ஒருவர் பதுங்கிக்கொள்ளும்படியான மறைவிடத்தைக் கட்டிக்கொடுப்பதுதான் அந்த வேலை. முதலில் முழுவதுமாக மறுக்கும் லூசியன் இந்த வேலையில் கிடைக்கும் பணத்தைக் கேட்டு மயங்குகிறான். ஒரே ஒரு வேலை தானே? காலியான மானேவுடைய ஃபேக்டரியின் தூண்களில் யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தை வரைபடமாக்கித் தர ஒத்துக்கொள்கிறான். இவர்கள் இருவரின் நடவடிக்கைகளை ஜெர்மனியர்கள் கண்டுபிடிக்காத வண்ணம் ஒரு பெரிய வேலையையும் லூசியனுக்குக் கொடுக்கிறார்.
லூசியனின் மனைவியிடம் இதைப் பற்றி எதுவும் சொல்லாவிட்டாலும் அவனிடம் வந்து சேரும் பணத்தைப் பற்றி அவளுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. யுத்தம் முடிந்து ஜெர்மன் படை ஊரை விட்டுக்கிளம்பியதும் அவர்களது கூட்டாளிகளான பிரெஞ்சு மக்கள் பலரை கொலை செய்துவிடுவார்கள். அதில் நீயும் ஒருத்தனாக இருப்பாய் என எச்சரிக்கிறாள். ஆனால் லூசியனுக்குப் பணம் தேவை அதிகம். அவனது காதலியான பாரீஸ் மாடல் ஒருத்திக்கு நிறைய செலவு செய்தாகவேண்டும். அவள் நாஜிப்படைத்தலைவனோடும் நெருக்கமான உறவில் இருக்கிறாள் எனத் தெரியாமல் தெரிசாவுடன் லூசியன் பழகுகிறான்.
மானேவின் ஆட்கள் லூசியனின் திட்டப்படி மிகத் திறமையாக மறைவிடத்தைக் கட்டிவிடுகிறார்கள். அதில் ஒளிந்துகொண்டிருக்கப் போகும் நபர் பற்றி தனக்கு எதுவும் சொல்லக்கூடாது என லூசியன் சொல்லிவிடுகிறான். ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு முறை மானேவிடமிருந்து அழைப்பு வருகிறது. இந்த முறை ஜெர்மன் மேலதிகாரி ஒருவருடைய ஃபேக்டரியைக் கட்டித் தரும்படி அழைப்பு வருகிறது. கூடவே ஒரு மாளிகையில் யூதருக்கு மறைவிடம் கட்டித்தரும்படி மானே கூறுகிறார். போன முறை அவன் கட்டித்தந்த மறைவிட பங்களாவில் ஜெர்மன் படைகள் சல்லடைப் போட்டுத் தேடியும் மறைவிடத்தைக் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறியதும் லூசியனுக்கு அவனது செயலின் தண்மை புரிகிறது. இது ஒரு பூனை-எலி விளையாட்டு. எப்பேற்பட்ட படைகள் நாட்கணக்கில் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத மறைவிடங்களை தன்னால் உருவாக்க முடியும் என நம்புகிறான். அதில் பெருமிதமும் அவ்விளையாட்டில் ஒரு சவாலும் இருப்பதாக நினைக்கிறான்.
இது ஒரு தொடர் கதையாகத் தொடர்கிறது. அவன் ஜெர்மன் அதிகாரிகளுக்குக் கட்டித்தரும் கட்டடங்கள் நாஜிப்படை வல்லுனர்களிடையே மிகவும் மதிப்புப் பெறுகின்றன. ஹிட்லரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் கட்டிடக்கலை வல்லுனர்களால் வரவேற்பட்டு நண்பராகிறான். மெல்ல அவர்களது விசித்திரமான யூத விசாரணை முறைகளைக் கேள்விப்பட்டு அச்சமும் பரிதாபமும் கொள்கிறான். இவனது ஜெர்மன் அரசுக்கான வேலையால் மனைவி பிரிந்துவிடுகிறார். ஜெர்மன் படைத்தளபதியும் முழு நேர காதலியாக லூசியனின் காதலி அடேல் மாறிவிடுகிறார். அடேலின் அசிஸ்டைண்ட் பெட்டே லூசியனின் நண்பராக அவரது இழப்புக்கு ஈடு கொடுக்கிறார்.
இதற்கிடையே, லூசியனின் நண்பர் பாரீஸ் திருச்சபை பாதிரியார் ஒருவர் பத்து வயதுச் சிறுவனுடன் லூசியனை சந்திக்கிறார். பல யூத சிறுவர்/சிறுமியரை நாட்டிலிருந்து தப்பிக்க வைக்கும் செயலைச் செய்துவரும் பாதிரியார், பியர் எனும் யூதச் சிறுவனை லூசியனின் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்குமாரு கூறுகிறார். சிறிது காலத்துக்கு மட்டுமே எனக் கூறியதால் லூசியன் ஒத்துக்கொள்கிறான். ஒரு ஆர்வமாக ஆரம்பித்த பழக்கம் மெல்ல பலரை ஏமாற்றும் சவாலாக லூசியனிடம் மாறுகிறது. பியரின் எளிய பழக்க வழக்கங்களை ரசிக்கத் தொடங்குகிறான். யூதர்களை முழுவதுமாக நம்பாவிட்டாலும் மனிதர்களின் சுதந்தரத்தை மதிக்கவும், விசாரணை என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளையும் சகிக்க முடியாதவனாக மாறுகிறது. முடிந்தவரை தனது திறமையைக் கொண்டு ஜெர்மன் அரசாங்கத்துக்கு சவால் விட முடியும் என பெருமிதம் அடைகிறான்.
யூதர்களின் பதுங்குகுழிகள் ஒவ்வொன்றாய் கண்டுபிடிக்கப்படுகின்றன. பின்னணியில் கட்டிடக்கலைஞனின் திறமை இருப்பதை அடேலின் காதலன் கெஸ்டாபோ தலைவன் கண்டுகொள்கிறான். லூசியனின் மறைவிடங்களை ஜெர்மன் கெஸ்டபோ கண்டுபிடிக்கும் பகுதிகள் நாவலின் மிக உயிர்ப்பானவை. மிகச் சிறப்பான முறையில் விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும் பகுதிகள். நாவலின் முடிவு நல்லதொரு திருப்பமாக அமைந்திருக்கிறது. Sound of Music போல நாடகத்தனமான முடிவாக இருப்பதால் ஒருவேளை விமர்சகர்களின் அபிமானத்தை பெறாமல் போகலாம்.
ஒரு தவறை எப்படி சரிசெய்ய முடியும்? யுத்த காலத்தில் தீவினைகள் தம்மீது விழாமல் இருந்தால் போதுமென இருக்கும் மக்களிடையே தியாகிகளும், நாட்டுப்பற்றுடையவர்கள் எழுவது மிக சகஜமான ஒன்று. சிலர் வேண்டுமென்றே இக்காரியங்களின் துணிந்து ஈடுபடுகிறார்கள். பலர் நிர்பந்தத்தினால் தள்ளப்படுகின்றனர். பணத்துக்காகச் செய்யத்தொடங்கி தனது திறமையின் விளைவு பல உயிர்களைக் காக்கிறது எனும்போது லூசியன் அடையும் தடுமாற்றங்கள் நல்லமுறையில் எழுதப்பட்டிருக்கின்றன.
எத்தனை அழித்தொழில் வழிமுறைகளில் இருக்கின்றனவோ அத்தனை வழிகளில் மனிதத்துவம் வேர் விடும் பாதைகளும் தோன்றிவிடுவது ஆச்சர்யம். உலகப்போர் முதல் உள்நாட்டு மும்பை கலவரங்கள் வரை இதன் பல்வேறு வகைப்பாடுகளைப் பார்த்துவருகிறோம். இந்த அடிப்படையைக் கொண்டு மனிதர்கள் வேட்டையாடப்படுவதும், சாதாரணர்கள் சவாலை எதிர்கொள்வதும் அற்புதமான புனைவாக இதை மாற்றியுள்ளது. இலக்கியத்தரத்துக்கு ஒரு மாற்றுக்குறைவு என்றாலும் நல்ல வாசிப்பைக் கொடுக்கிறது.
ஆங்கில புத்தகங்களில் அட்டைகளில் எழுதியிருப்பது போல – இந்த கோடையில் ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே படிப்பேன் என்பவர்கள் வாங்க வேண்டிய புத்தகம் இது.
ஒளிப்பட உதவி : Goodreads,
Very interesting!