ஆர் சேவியர் ராஜதுரை
ஆபிஸ் முடிந்து கேபில் வந்துகொண்டிருக்கும் பொழுதுதான் சரவணனை Gossip எனப் பெயரிடப்பட்ட அந்த புது குழுவில் விஷ்ணு இணைத்திருந்தான். விஷ்ணுவிடமிருந்து மெசேஜ் வந்ததே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த யோசனையிலேயே அந்த குழுவை ஓப்பன் செய்தான். ’வெல்கம் சரவணா’ என விஷ்ணு அனுப்பினான். விஷ்ணு இவன் காலேஜ் சீனியர் என்பதைத் தாண்டி அவ்வளவாக பழக்கம் கிடையாது. ரூபனையும் அனன்யாவையும் பார்க்கப் போகும் பொழுது விஷ்ணுவோடு பேசியிருக்கிறான் அவ்வளவுதான். அவன் எதற்கு தன்னை ஒரு குழுவில் சேர்த்திருக்கிறான் என்ற குழப்பத்திலேயே ‘எதுக்கு dude இந்த குரூப்’ என அனுப்பினான்.
‘சொல்றேன் சரவணா. ரூபனுக்கு அடுத்த மாசம் கல்யாணம். எனக்கு தெரியும் கண்டிப்பா உனக்கு சொல்லியிருக்கமாட்டான்னு’
ரூபனுக்கு கல்யாணம் என்பதை அறிந்தவுடன் சரவணனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
**************
ரூபன்…
சரவணன் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர்கள் ரூபன் வீட்டில் தான் வாடகைக்கு குடியிருந்தனர். ரூபன் சரவணனை விட ஒருவயது மூத்தவன். அதனாலே சரவணனை எங்கே சென்றாலும் ரூபனுடனே அனுப்பினார்கள்.
’ரூபன் அண்ணா விளையாட போனா நீயும் போ, தனியா போகக்கூடாது!’
என அவன் நடக்க ஆரம்பித்தது முதல் எல்லாவற்றிலும் ரூபன் செய்வதையே செய்ய வைத்தார்கள்.
ரூபன் படித்த பள்ளியிலே சரவணனையும் சேர்த்தார்கள். ரூபன் கூடவே பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த சரவணன் பள்ளியிலும் ரூபன் பின்னாலே செல்ல ஆரம்பித்தான். அவன் வகுப்பில் அவனுக்கு நண்பர்களே இல்லை. வகுப்பு தொடங்கும் வரை ரூபன் வகுப்பறையில் இருப்பான். சாப்பாடும் ரூபனோடே அமர்ந்து சாப்பிடுவான். வீட்டிற்கு வரும்பொழுதும் ரூபனோடே வருவான். ரூபன் உடல்நிலை சரியில்லாமலோ இல்லை வேறு எதாவது காரணத்திற்காக விடுப்பு எடுத்தால் சரவணனும் பள்ளிக்கு போக மாட்டான்.
ரூபனோடு போ என சொன்னவர்கள் ஒரு கட்டத்தில் ‘ஏன்டா எப்ப பார்த்தாலும் அவன் கூடவே சுத்திட்டு இருக்க!’ என திட்ட ஆரம்பித்தனர்.
ரூபனோடே இருந்ததால் அவனுக்கு அவன் வயதில் நண்பர்களே இல்லை. ரூபனின் நண்பர்கள் தான் அவனுக்கும் நண்பர்கள். அவர்களை மட்டும் அண்ணா என கூப்பிடுவான். ரூபனை டா சொல்லியே அழைப்பான். ’டேய் உன்னவிட ஒரு வயசு பெரியவன்ல அண்ணானு கூப்பிடுறா’ என சரவணன் அப்பா சரவணனை திட்டிய பொழுது ‘பரவால்ல அவன் என்னை அப்படியே கூப்பிடட்டும்.அதான் எனக்கும் பிடிச்சிருக்கு’னு ரூபன் சொல்லிவிட்டான்.
ரூபன் எடுத்த பயாலஜி குரூப்பையே சரவணனும் எடுத்தான். சரவணன் மிகவும் வருத்தப்பட்ட நாட்கள் என்றால் அது அவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த நாட்கள் தான். ரூபன் அப்போது கல்லூரி சென்றுவிட்டதால் சரவணன் அந்த வருடம் முழுவதும் தனியாகவே சென்றுவந்தான்.
கடைசியாக கல்லூரி முடியும் பொழுது வந்திருந்த சண்டைகூட கல்யாணத்திற்கே சொல்லக்கூட முடியாத அளவிற்கான சண்டையில்லை. உண்மையில் அது சண்டையே இல்லை. சின்ன மனஸ்தாபம்தான். அதோடு சரவணன் குடும்பமும் சொந்தவீடு வாங்கி வேறு இடத்திற்கு சென்றது. ரூபனும் கல்லூரி முடித்து மேற்படிப்பிற்காக சென்னை சென்றான். அதற்குப்பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஒருமுறை ஊரில் தியேட்டரில் இடைவேளையின் போது பார்த்தான். இருவரும் சிரித்துக்கொண்டு நன்றாகவே பேசினார்கள். நேருக்கு நேர் பார்க்கும் பொழுது பேசி சிரித்துக்கொள்ளும் அளவில் அவர்களின் உறவு இருந்தது. வாட்ஸப்பில் தொடர்பிலும் இருக்கிறான் தான். அவன் கல்யாண விஷயம் விஷ்ணு மூலமாக தெரிந்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
”நீ மாறிட்ட சரவணா மாறிட்ட சரவணானே சொல்லிட்டு நீ மாறிட்டியே டா” என மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
’மச்சான் பொண்ணு யாருனும் சொல்லுடா!’ என பரணி அனுப்பினான்.
அவனுக்கு குழப்பமாகவே இருந்தது. எதற்காக இப்பொழுது இவர்கள் இதைச் சொல்ல ஒரு குழு ஆரம்பித்திருக்கிறார்கள் என எரிச்சலோடு யோசிக்கும் பொழுதுதான் பரணி இதை அனுப்பியிருந்தான்.
’அனன்யா தாண்டா பொண்ணு’ என விஷ்ணு அனுப்பினான்.
அவனுக்கு தற்பொழுது எல்லாம் புரிந்தது. இந்த குழுவில் அவனை இணைத்ததற்கு காரணம் ரூபன் அல்ல. அனன்யா தான். அனன்யாவும் சரவணனும் இரண்டாடுகள் காதலித்தனர். ரூபனோடு பேச்சுவார்த்தை இல்லாமல் போனதற்கு அனன்யாவும் ஒரு வகையில் காரணம். அனன்யாவுடன் சரவணன் ஒன்றாக சுற்றிய பொழுதுகளில் கூடவே ரூபனுமிருந்தான். பரணி முதலாமாண்டில் ‘அனன்யாவ லவ் பண்றியாடா?’ எனக் கேட்டபொழுது ‘ச்சீ அனன்யா என் ப்ரண்ட் டா, அவகிட்ட அப்படி தோணலடா’ என ரூபன் கூறியதை சொல்லி இப்போ எங்கேயிருந்து வந்திருக்கும் என கிண்டலாக குழுவில் மெசேஜ் போட்டான் பரணி.
‘நம்ம சரவணன் அனன்யாவோட சுத்துனப்ப கூடவே தானடா இருந்தான். அதுவும் நம்ம IV (industrial Visit) போனப்ப அனன்யாவ சரவணனோட தனியா அவன் பைக் குடுத்துலாம் அனுப்பிருக்கானேடா’ என விஷ்ணு சிரித்தான்.
டேய் அதுமட்டுமா, நம்ம சரவணனோட பிரேக் அப் ஆனப்பறம் காலேஜ் முடிஞ்சு நம்ம தருண லவ் பண்ணிட்டிருந்தாடா அவ. அப்பயும் ரூபனோட காண்டாக்ட்ல தான்டா இருந்தா.. என்ன மச்சான் தருணு…
’எனக்கு அப்பவே டவுட் வந்திருச்சு மச்சான். ’என்ன நீ என்னைய தான லவ் பண்ற அவன் கூட எதுக்கு பேசறே’னு கேட்டேன் மச்சான். அவன் என் ப்ரண்ட் தப்பா பேசாத’னு பெரிய பத்தினியாட்டம் பேசுனா மச்சான். என தருண் அனுப்பினான்.
’இப்பயும் ப்ரண்ட்னு தான் சொல்லுவானு நினைக்கிறேன்.’ என விஷ்ணு அனுப்பினான்.
’சரவணன்,தருண் கூட அவ சுத்துனப்பயும் கூடவே தான் இருந்தான் இந்த ரூபனு. எப்படிடா எல்லாம் தெரிஞ்சும் அவள கல்யாணம் பண்ணிக்கறான்!’ என பரணி அனுப்பினான்.
’ஏன் அவ மட்டும் என்னவாம்? அவன் ஆபிஸ்ல ஒரு பொண்ண லவ் பண்ணிட்டிருந்தான். அந்த பொண்ணும் அனன்யாவும் நல்ல க்ளோசா சுத்திட்டிருந்தாங்க. அவங்க ப்ரேக்அப்க்கும் அனன்யா தான் காரணமா இருப்பான்னு நெனைக்கிறேன்.’
’நான் யாருனு உனக்கு தெரியும்; நீ யாருனு எனக்கு தெரியும்; நம்ம ரெண்டு பேர் யாருனு இந்த ஊருக்கே தெரியும்னு அவங்களே ஒரு மியூச்சுவல் அன்டர்ஸ்டேடின்ங்க்கு வந்திருப்பாய்ங்க போல’ என விஷ்ணு கூறினான்.
’அப்பிடி இருக்கவங்க நேர்மையா சொல்லியிருக்கணும்ல…அப்போ நான் கேட்டப்போ என்ன குதி குதிச்சா தெரியுமா இந்த அனன்யா *****’ என கெட்டவார்த்தையில் அனுப்பினான் தருண்.
அதற்கு மேல் அவர்கள் அனன்யாவையும் ரூபனையும் தவறாய்ப் பேசுவதை கேட்க அவனால் முடியவில்லை. குழுவிலிருந்து உடனடியாக வெளியேறினான்.
’என்னடா அவன் வெளிய போயிட்டான்.’ பரணி கேட்டான்.
’டேய் தருண், நீ ஏண்டா கெட்ட வார்த்தையில திட்டுற’ அதான்டா அவன் போயிட்டான்.
’அவன் போனா என்ன வுடறா!’ என தருண் அனுப்பினான்.
அவனுக்கு மனசே சரியில்லை. கேபிலிருந்து இறங்கி ரூமிற்கு வந்து குளித்துவிட்டு சோபாவில் அமர்ந்தான்.
போனை எடுத்து அனன்யா மற்றும் ரூபன் புரொபைல் சென்று பார்த்தான். ’கமிட்டட்’ என இருவரும் பகிர்ந்திருந்தார்கள்.
ரூபனிடம் சரவணனே கேட்டது நினைவுக்கு வந்தது. ‘உனக்கும் அனன்யாக்கும் ஏதாவது…….’
’டேய், நீயுமாடா! உன்ன மாறிதாண்டா அவளும் எனக்கு. ஒருவேளை அவள லவ் பண்ணா உங்கிட்ட சொல்லாம இருப்பேனாடா..’
அன்று ரூபன் சொன்ன வார்த்தைகளை நினைத்து சிரித்தான்.
’அப்போ அனன்யா உன் ப்ரண்ட் தான.. அப்பாடா!’ என நிம்மதியடைந்திருந்தான்.
கல்லூரியில் ரூபன் நெருங்கிப் பழகியது அனன்யாவோடு தான். அதனால் தான் ரூபனிடம் அந்த சந்தேகத்தைக் கேட்டான். அனன்யாவும் சரவணனிடம் நன்றாக பழக ஆரம்பித்தாள். முதலில் ’வாங்க போங்க’ என பேசியவனை ‘ஏய் ச்சீ பேர் சொல்லியே கூப்புடுறா’ என அனன்யாதான் கூறினாள்.
அனன்யாவும் சரவணனை அவள் வட்டத்திற்குள் சேர்த்துக்கொண்டாள். ரூபனின் புத்தகங்கள் அரியருக்கு தேவைப்பட்டதால் அதை அவன் சரவணனுக்கு தரவில்லை. அனன்யாவின் புத்தகங்களையே சரவணன் பயன்படுத்தினான். அனன்யாவின் ரெக்கார்ட் அசைன்மெண்ட் எல்லாமே அடுத்த வருடத்திற்காக வாங்க ஆரம்பித்தான். கடினமான தேர்வுக்கு முந்தைய நாள் சரவணன், அனன்யா வீட்டில்தான் அவளிடம் சந்தேகம் கேட்டு படிப்பான். சில சமயங்களில் அதே தேர்வில் ரூபன் அரியர் வைத்திருந்தால் ரூபனும் அவனோடு படிக்க வருவான்.
அனன்யாவை சரவணனுக்கு பிடித்திருந்தது. அதை சொல்லி அதனால் ரூபனுக்கும் தனக்கும் அனன்யாவுக்கும் பிரச்சனை வந்துவிடுமோ என பயந்தான்.
ஒரு நாள் அனன்யா ரூபன், சரவணன் இருவருக்கும் கான்ப்ரன்ஸ் கால் செய்திருந்தாள். அவள் வீட்டில் அனைவரும் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தனர். நாளுக்கு ஆறுமணிநேரம் டைம் சொல்லி பவர்கட் செய்துகொண்டிருந்த நாட்கள் அது. போர் அடிக்கிறது என இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாள். ரூபன் வீட்டில் வேலை சொல்ல காலை கட் செய்துவிட்டு சென்றுவிட்டான்.
’எங்கடா போயிட்டான் அவன்’
அவங்க வீட்ல UPS போடுறாங்க, ஆளு வந்திருக்கு அதான் கட் பண்ணிட்டு போயிட்டான்.
’எங்க வீட்டுலயும் போடணும். மாடியில வேற இருக்கோமா. ஹீட் அப்பிடியே இறங்குது. முடியல’
’ம்ம்ம்’
’உங்க வீட்ல போடலயாடா’
’அதான் அவங்க வீட்ல போடறாங்கல, கரண்ட் இல்லாட்டி இனி அங்க போயிடுவேன். போன் சார்ஜ்க்கும் இனி பிரச்சனையிருக்காது.அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கு’
’ம்ம்,இங்க சாயங்காலம் வரை எப்பிடி ஓட்ட போறேனு தெரியலடா! எதாவது இண்ட்ரஸ்டிங்கா இருந்தா சொல்லேன்’
’இண்ட்ரஸ்டிங்காவா!’
’ம்ம்ம் ஆமா.. லைக், ரூபனுக்கு தெரியாத ரகசியம் எதாவது இருக்கா?’
‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. என்னைய பத்தி எல்லாம் அவனுக்கு தெரியும் அவனைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியும்.
’டேய் எல்லாத்தையுமா எல்லார்ட்டையும் சொல்லுவாங்க. அது ரொம்ப சின்ன விஷயமா கூட இருக்கும்.’
’ம்ம்ம். எங்க அத்த பொண்ணு அடிக்கடி எங்க வீட்டுக்கு வரும். அதுக்கு புரோபோஸ் பண்ணியிருக்கான் ரூபன். அது எனக்குத் தெரியும். அந்த புள்ளை இவன் மேல இண்ட்ரஸ்ட் இல்லனு சொல்லிருக்கு. அதுக்கப்பறம் ரெண்டு பேரும் பேசிக்கிறதில்ல. ஆனா இன்னைக்கு வர எங்கிட்ட அதப் பத்தி சொன்னதில்லை. நானும் கேட்டுக்கிட்டதில்ல அனன்யா. ஆனா எங்கிட்ட சொன்னா நான் என்ன நினைக்கப்போறேன் சொல்லு’
’காவ்யாதான’
‘ஆமா அனன்யா, பாத்தியா உங்கிட்டலாம் சொல்லியிருக்கான. ஆனா எங்கிட்ட அதப்பத்தி பேசுனதில்லை!’
’டேய் உன் அத்த பொண்ணு அப்பிடியே மாத்தி உங்கிட்ட பொய் சொல்லிருக்காடா. அவன்கிட்ட அவ தான் ப்ரோபோஸ் பண்ணியிருக்கா. ரூபன் புடிக்கலனு சொல்லிட்டான். அப்பதான் இவ சத்தியம் வாங்கியிருக்காடா, என்னைய புடிக்கலனு சொன்னாலும் பரவால்ல எக்காரணம் கொண்டும் இது உனக்கு தெரியக்கூடாதுனு.’ அதான் அவன் உங்கிட்ட சொல்லல.’
’ஓ! ஆனா நான் அவகிட்ட ஏன் இப்ப எங்க வீட்டுக்குலாம் வரமாட்ற, விசேசத்துக்கு வந்தாலும் முன்னமாறி என்கூடலாம் பேசமாட்டேங்கறனு கேட்டதுக்கு, ’போனதடவ ஊருக்கு வந்தப்ப உன் பிரண்ட் ரூபன் எனக்கு ப்ரோப்போஸ் பண்ணிட்டான். அவன்கூட நான் ப்ரண்ட்லியாதான் பழகுனேன். அவன் தப்பா எடுத்துக்கிட்டான். அவன்கிட்ட முடியாதுனு சொல்லிட்டேன். அவன் இது உனக்கு தெரியக்கூடாதுனு சத்தியம்லாம் வாங்குனான். திரும்ப அங்க வந்தா அடிக்கடி அவன் வீட்டுக்கு வருவான்.அவன பாக்கணும். அது ரெண்டு பேருக்குமே கஷ்டம். அதான் வரதில்லை’னு சொன்னா!’
’அடிப்பாவி!’ எப்புடி பொய் சொல்லிருக்கா பாரு. இதப் பத்தி கேக்காம இருந்திருந்தா இதுனால உங்க ரெண்டு பேருக்குள்ளயும் புரிஞ்சுக்காம சண்டை வந்திருந்தாலும் வந்திருக்கும்.’
’இதுனாலலாம் சண்ட வந்துருக்காது அனன்யா. ஏன்னா உண்மையாலுமே அவ சொன்ன மாறி ரூபனே ப்ரோபோஸ் பண்ணியிருந்தாலும் அதுனால என்ன இப்போ?’ அதான் நான் அத பெருசா எடுத்துக்கல.
’இருந்தாலும் எப்பயாவது வார்த்தை வந்துருச்சுனா சரவணா’
’அப்பிடியெல்லாம் நான் பேசமாட்டேன் அனன்யா’
’சரி காவ்யா பொய் சொன்னானு தெரிஞ்சுருச்சுல, அவள என்ன பண்ண போற’
‘அவள என்ன பண்றது! அவளும் பாவம்தான். அவளையும் எங்க வீட்ட தாண்டி எங்கயும் வெளிய விடமாட்டாங்க. அவளை எங்கவீட்டுக்கு விடுறதே அவ என்னைய விட ஒரு வயசு பெரிய பொண்ணுனு தான். அவளும் பாவம்தான். அவன் இதப்பத்தி சொல்லி நான் வீட்டுல சொல்லிடுவேணோனோ இல்ல அவள தப்பா நினைச்சிடுவேணோனு பயந்திருக்கலாம். அவன்கிட்டயும் சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்கிட்டா. எங்கிட்டயும் இத கேக்ககூடாதுனுட்டா. அப்படியே இருந்தா பிரச்சனை வராதுனு நினைச்சிருப்பா..
’பார்ரா…அவ்ளோ நல்லவனாடா நீயி!’
’அப்பிடியெல்லாம் இல்ல’
’நீ உண்மையாலுமே ஜெண்டில்மேன்ரா. இதைப் பத்தி அவன்கிட்ட பேசவேயில்லல.
’ஆனா நீ அப்பிடி இல்ல அனன்யா. உன்ன நம்பி சொன்னத நீ காப்பாத்தலல.’
‘டேய்! என்ன அப்புடியே எம்பக்கம் திரும்பற!’
‘ஆமா, அவன் உன்ன நம்பித்தான சொல்லியிருப்பான். நீ அத காப்பாத்தலல’
‘டேய் லூசு, நீ அவன தப்பா புரிஞ்சிட்டு இருக்கவும்தான் சொன்னேன். இன்னோனு இத பத்தி காவ்யா நேர்மையா சொல்லியிருந்தா நான் இதை உங்கிட்ட சொல்லியிருக்கவேமாட்டேன்.’
‘அதெல்லாம் சரி. ஆனா உன்ன நம்பி ஒன்னு சொன்னா அதக் காப்பாத்தணும்ல’
‘காப்பாத்தணும் தான்.ஆனா இத சொல்றதுக்கு முன்னாடி உனக்கு ரூபன் மேல ஒரு வருத்தமிருந்ததுல.’
’ஆமா’
’இனிமே இருக்காதுல!’
‘இருக்காது.’
’அவ்ளோதாண்டா…!’
’ம்ம்’
’சரி, இப்படி உனக்கு அவன்கிட்ட சொல்லமுடியாத ரகசியம் எதாவது இருக்கா?’
’அதான் இப்போ சொன்னேனே’
’டேய் லூசு, இப்போ அவன் உனக்கு தெரியாம ஒரு பொண்ணுக்கு ப்ரோபோஸ் பண்ணானு சொன்னில. அந்த மாறி நீ அவனுக்கு தெரியாம எதாவது பண்ணிருக்கியா!
’நானா!’
’ஆமா!’
’உன்னயை நம்பி எப்பிடி சொல்றது! சொல்லலாமா!’
’டேய் சொல்லுடா!’
’எனக்கு உன்மேல நம்பிக்கையில்லை.’
’அப்போ ஒன்னு இருக்கு.’
’இருக்கு அனன்யா!’
’அப்போ சொல்லுடா…’
’எனக்கு பயமாயிருக்கு. இத சொல்றனால ப்ரண்ட்ஸிப்பே முடிஞ்சிருமோன்னு.’
’என்னடா சொல்ற, அவ்ளோ பெரிய விஷயமா!’
’ஆமா அனன்யா’
’அப்போ சொல்லுடா ப்ளீஸ்!’
’இப்போ நான் சொல்லப்போறத எக்காரணம் கொண்டும் ரூபன்கிட்ட சொல்லிடக்கூடாது. இப்போ நீ சண்டைய தீர்த்து வைக்க பண்றேனு சொன்னியே இந்த மாறி எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாது. அவனுக்கு மட்டும் தெரிஞ்சா சத்தியமா நான்…… அவனுக்கு தெரியவே கூடாது. (அவன் குரல் ரொம்ப சீரியஸாக இருந்தது.) ப்ராமிஸ் பண்ணிக்குடு.’
’ப்ராமிஸ் டா. என்ன ஆனாலும் சரி இத ரூபன்கிட்ட சொல்லமாட்டேன்.’
’நன்றாக மூச்சை இழுத்து மூச்சு விட்டுவிட்டு கூறினான். ‘நான் உன்னை லவ் பண்றேன் அனன்யா’
’என்ன?’
’எனக்கு உன்னைய பிடிச்சிருக்கு அனன்யா. எனக்கு சொல்லித்தரதுக்காக எக்ஸாம்க்கு முன்னாடி நாள் நைட் முழுக்க நீ என் கூடவே இருப்ப. அதுக்காக வாழ்க்க ஃபுல்லா கஷ்டமான எக்சாம் நாளுக்கு முன்னாடி நாள் நைட்டாவே இருந்தாலும் நல்லாயிருக்கும்னு நான் யோசிச்சிருக்கேன். நீ இப்போவே ஒண்ணும் உன் முடிவ சொல்லவேணாம். பொறுமையா யோசிச்சு நாளைக்கு சொல்லு அனன்யா… ஓகே சொல்லாட்டியும் பிரச்சனையில்லை அனன்யா. ஆனா இத தயவுசெஞ்சு ரூபன்கிட்ட மட்டும் சொல்லாத. அப்பறம் இதுனால என்மேல கோபமிருந்தாலும் ரூபனுக்கு தெரியுற மாறி காட்டிக்க வேணாம். ஹலோ அனன்யா….கேக்குதா……
’ம்ம்ம் கேக்குது. நீ சொன்னதுக்கு நான் இப்பவே பதில்சொல்றேன்.’
’இல்ல அனன்யா பொறுமையா யோசிச்சு பதில் சொல்லு அனன்யா’..
’டேய்,எப்போ சொன்னாலும் இதேதான் கேளு. You Are Like……… ஒரு சின்ன பையன் டியூசன் அக்காட்ட Propose பண்ற மாறி தான் இருக்கு. Infact நீ சொல்றப்ப எனக்கு சிரிப்புதான் வந்தது. எப்புடி எப்புடி Life Fullஆ Toughஆன Exam இருந்தாலும் நல்லாயிருக்கும்னு நின்னைச்சிருக்கியா… சொல்லிவிட்டு சிரித்தாள். உனக்கு இன்னும் மெச்சூரிட்டியே இல்ல.
’அனன்யா, போதும் அனன்யா கலாய்க்காத..’
’இவ்ளோ க்யூட்டான ஒரு Propose எனக்கு வந்ததே இல்லடா. ஒரு தம்பி மாறியிருக்கடா நீ. Cute ரா…’
’அனன்யா நீ புடிக்கலனு சொன்னாக்கூட ஓகே. தயவுசெஞ்சு தம்பி மாறினு சொல்லாத’
‘சாரிடா, எனக்கு அப்பிடிதான்டா Feel ஆகுது’ என சிரித்தாள்.
’இப்படியே பேசுனா நான் போன கட் பண்ணிடுவேன் அனன்யா. உனக்கு Propose பண்ணியிருக்கேன் அனன்யா.வழக்கமா பொண்ணுங்க சொல்ற மாறி அண்ணானு சொன்னாக்கூட பரவால்ல தம்பினு சொல்லாத ப்ளீஸ்’
அனன்யா இன்னும் சத்தமாக சிரித்தாள்.
போன் கட்டானது.
அனன்யாவால் அப்பொழுதும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் போன் கட் ஆனதும் கோவித்துக்கொண்டானோ என பயந்தாள். ரொம்ப வருத்தப்பட்டிருப்பானோ என சோகமாக நினைக்கும்பொழுது திரும்ப அவனிடமிருந்து போன் வந்தது.
போனை எடுத்ததும் சாரி சொல்ல வேண்டுமென நினைத்தாள். ஆனால் அவள் சொல்வதற்கு முன்பு சரவணாவே சாரி சொன்னான். ’சாரி அனன்யா போன் அதுவா கட் ஆயிடுச்சு. நான் கட் பண்ணல. தப்பா நினைச்சுக்காத!’ என்றான்.
’நான்கூட என்மேல கோவப்பட்டு கட் பண்ணிட்டியோனு நினைச்சு Guilty யா Feel பண்ணேன்டா.’
‘என்ன அனன்யா சொல்ற, உன் மேல நான் எப்பிடி கோவப்படுவேன் அனன்யா..’
உண்மையில் அனன்யா பிரேக் அப் பண்ணிக்கலாம் என சொன்னபொழுது கூட அவன் அனன்யா மீது அவன் கோவப்படவில்லை.
அதற்கடுத்த நாள் சரவணன் கல்லூரிக்குச் செல்லவில்லை. அனன்யாவின் பக்கத்து வீட்டுப் பையன் ஒருவன் தன் காதலி காதலுக்கு சம்மதிக்காத சோகத்தில் ஃபினாயிலை குடித்திருந்தான். அவனைப் பார்த்ததும் அவளுக்கு சரவணின் நினைவு வந்தது. சரவணனும் இப்படி ஏதும் செய்துகொள்வானோ என்கிற அச்சத்தில் போன் செய்தாள். போன் எடுக்கவில்லை. காலையிலே அவன் கல்லூரிக்கு வராதது ஒரு சிறு அச்சத்தை அவளுக்கு ஏற்படுத்தியிருந்தாலும் அவன் பாட்டி செத்துட்டாங்க அங்க போயிட்டானென்கிற ரூபனின் தகவல் தான் சற்று நிம்மதியடைய வைத்திருந்தது.
ரூபனுக்கு போன் செய்து சரவணன் வந்துவிட்டானா என்பது பற்றி விசாரித்தாள். ’ம்ம் வந்துட்டான். ஆனா அதுக்கப்பறம் அவன் வெளியே வரல. நான் போன் பண்ணப்பயும் எடுக்கல. ஏன் என்னாச்சுடி’
‘இல்ல ரூபன், நானும் போன் பண்ணேன்.போன் எடுக்கல. திரும்பவும் பண்ணல. அதான் இன்னும் சோகமா இருக்கானோனு நினைச்சேன். சரிடா அவன் பேசுனான்னா சொல்லுடா. பாய்’
’பாய்’.
அனன்யாவிற்கு மனசு கேட்கவில்லை. சரவணனைப் பார்த்தேயாக வேண்டும் போலயிருந்தது. அவள் வீட்டிலிருந்து ஒரு எட்டு கிலோமீட்டர் இருக்கும் அவன் வீடு. தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
போகும்வரை எப்போது போவோம் என பரபரப்பாக போனவள் போனதற்கு பின் தயக்கமாக தெருவிலேயே நின்றுவிட்டாள். எப்படி எட்டுமணி போல அவன் வீட்டிற்கு செல்வது. ரூபனையும் அழைத்து செல்லலாமா! ரூபன் ஏன் கெளம்பறப்ப சொல்லலனு கேட்டா என்ன சொல்றது? என யோசித்துக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது புது எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
’அனன்யா, நான் சரவணா பேசறேன்’
அப்பொழுதுதான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ‘டேய்,ஏன்டா ஃபோன் பண்ண எடுக்கமாட்டியாடா எருமை. நான் பயந்துட்டேன் டா’
’ஃபோன பாட்டி வீட்லே மறந்து வச்சுட்டு வந்துட்டேன். பஸ்ல குடுத்துவுடறேன்னு சொல்லியிருக்காங்க. சாரி’
’அதவிடு. இப்போ வெளிய வரியா, பாக்கலாமா!’
இப்போவா, சரி நான் ரூபன் பைக்க எடுத்துட்டு வரேன். ரூபனயும் கூட்டிட்டு வரவா?’
‘இல்லல.. ரூபன் வீட்டுக்குலாம் போகாத. நீ மட்டும் அப்படியே உங்க தெரு லாஸ்ட்ல இருக்க சூப்பர் மார்க்கெட்கிட்ட வா. அங்கதான் இருக்கேன்’
’எப்போ வந்த அனன்யா?’
’மூடிட்டு வா சொல்றேன்!’
அவன் வந்ததும் இருவரும் அருகிலிருந்த டீக்கடைக்கு சென்று டீ குடித்தார்கள்.
அனன்யா அவனைப் பார்க்க வந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியாக இரண்டு முறை கேட்டான்.
‘சத்தியமா, என்னைய பாக்கதான் வந்தியா, அதுவும் ரூபனுக்கு தெரியாமா!’
’ஆமா, காலையிலருந்து ஃபோன் பண்ணேன் எடுக்கல. காலேஜுக்கும் வரல. அதான் பயந்துட்டேன். இப்போ உன்னைய பாக்கவும் தான் நிம்மதியா இருக்கு.’
‘பாத்தியா இதுக்குதான் நேத்து உடனே சொல்லவேணாம் யோசிச்சு சொல்லுனு சொன்னேன்’.
‘டேய் லூசு நீ நினைக்குற மாறியிலாம் ஒண்ணுமில்ல!’
’அப்புடியா, அப்பறம் எதுக்கு ரூபனுக்கு தெரியாம இந்த நேரத்துல பாக்க வந்தியாம், எல்லாம் எனக்குத் தெரியும் சும்மா வெக்கப்படாம சொல்லு.’
’த்தூ..’ என எச்சில் அவள் கையில் வைத்திருந்த டீக்கிளாசில் கூட படாத வண்ணம் துப்பிவிட்டு சொன்னாள். ‘எங்க பக்கத்து வீட்ல ஒரு பையன் அவன் லவ் பண்ற பொண்ணு ஓகே சொல்லலனு பினாயில குடிச்சுட்டு ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிட்டான். அவன ஆம்புலன்ஸ்ல ஏத்துறத பாத்ததும் எனக்கு உன் நியாபகம் தான் வந்தது. எங்க நீயும் இப்பிடி பண்ணிடுவியோனு பயந்துட்டு தான் போன் பண்ணேன்.போனும் எடுக்கலயா அதான் வந்தேன்’
‘அப்போ நீ எனக்கு ப்ரோபஸ் பண்ண வரலியா’
குடித்துக்கொண்டிருந்த டீ புரையேறி துப்பிவிட்டு இருமிக்கொண்டே கண்களில் கண்ணீர்வர சிரித்தாள். சுற்றி நின்ற அனைவரும் அவர்களையே பார்த்தனர். அவள் தலையில் கைவைத்து தட்டிக்கொண்டே ‘அப்போ நீ வந்து நான் இருக்கேனா செத்துட்டேனானு பாக்கதான் வந்துருக்கல,; ம்ம்ம். இருக்கட்டும் இந்த சுமால் விஷயத்துக்குலாம் நான் சாகமாட்டேன்.’நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு.
‘நானும் பயந்துட்டேதான் வந்தேன். அப்பதான் தோணுச்சு ”ச்சே நம்ம சரவணாலாம் அந்த பையன மாறி ஃபினாயில குடிச்சு சாகமாட்டான்.’
டீயைக் குடித்துக்கொண்டே ஆமா என தலையாட்டினான்.
இவன் ப்ரோபோஸ் பண்ணதுக்கு நம்ம வேணா ஃபினாயில் குடிச்சு சாகலாம்னு’ சொல்லிவிட்டு சிரித்தாள்.
அவளை முறைத்துப் பார்த்துவிட்டு ‘குடிச்சிட்டு சாவுபோ’ என்றான்.
அவள் சொன்னது எவ்வளவு தவறான வார்த்தை என அவளுக்கு புரிந்தது. ‘ஹேய் ஹேய் சாரிடா, சும்மா விளையாட்டுக்கு தான்டா சொன்னேன். இனிமே இப்பிடி சொல்லமாட்டேண்டா’ என கொஞ்சினாள்.
அப்பொழுது அவளைப் பார்த்து ‘செம்ம அழகா இருக்க’ என்றான்.
கெஞ்சலை வேண்டி நின்றிருந்த அவள் கண்கள் கோபமாக மாறின.
அவள் கையிலிருந்த காலி க்ளாசை வாங்கிக்கொண்டு போய் கடையில் கொடுத்துவிட்டு காசு கொடுத்தான். அதுவரை அவள் முகம் அப்படியே தான் இருந்தது.
அவள் எதுவும் பேசாமல் சைட்ஸ்டாண்ட் போட்டிருந்த வண்டியில் அமர்ந்திருந்தாள்.
’நீ ஒண்ணும் பயப்படாத அனன்யா, நான் அந்த மாறி முட்டாள்தனமாலாம் செய்யமாட்டேன்.’ ’சாரி, நேத்தும்கூட உங்கிட்ட சொல்ற ஐடியாவே எனக்கில்ல. நீயா எதாவது இருக்கா சொல்லுனு கேக்கறப்ப அந்த மொமண்ட்ல சொல்லணும்னு தோணுச்சு. அதான் சொல்லிட்டேன். நீ நம்பாட்டியும் சரி சத்தியமா நான் இத உங்கிட்ட எப்பயுமே சொல்லக்கூடாதுனு தான் நினைச்சிருந்தேன். ஏன்னா இதுனால எனக்கும் ரூபனுக்கும் ஏன் உனக்கும் எனக்குமே எந்த பிரச்சனையும் வந்துரக்கூடாதுனு நினைச்சேன். எனக்கு நீ ஓகே சொல்லாம இப்படி கலாய்ச்சாலும் எனக்கு பிரச்சனையில்லை. இந்த மாதிரி கடைசிவரை என்கூட பேசிட்டிருந்தாலே போதும் அனன்யா. இதுக்கு மேல நான் இதப்பத்தி பேசமாட்டேன். நீயும் நான் இந்த மாறியெல்லாம் பண்ணிக்குவேனு பயப்பட வேணாம். வழக்கமா பேசுற மாறி பேசு. எனக்கு அதுவே போதும்.’
அதற்குப் பிறகு வழக்கம்போலவே அவர்கள் மூவரும் ஒன்றாகவே சுற்றிக்கொண்டிருந்தனர். அனன்யாவிற்கு அவன் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டது மிகவும் பிடித்துப்போனது. அவன் சொன்னதுபோலவே அதற்குப் பிறகு ஒரு வார்த்தைக் கூட காதலைப் பற்றி பேசவில்லை. அனன்யாவோ ரூபனோ ஒன்றை சொல்லும் பொழுது அவனுக்கான முடிவுகள் இல்லாமல் செய்வான். அதில் ஏதாவது பிரச்சனை வந்தாலும் அவன் அவர்களை குறை சொல்லமாட்டான். அந்த பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்பது பற்றிதான் கேட்பான். அதற்கு முன்பு நடந்ததைப் பற்றி பேசவேமாட்டான். சில சமயங்களில் வேண்டுமென்றே தவறாக ஒன்றைச் செய்ய சொன்னாலும் செய்வான். அதற்குப் பிறகு அதனை சரி செய்ய என்ன செய்யலாம் என்பதுதான் அவன் கேள்வியாக இருக்கும். ஒருதடவை கூட ’பாரு இது உன்னாலதான்’ என அவன் குறை சொன்னதேயில்லை. இவையெல்லாம் சரவணனிடம் அனன்யாவிற்கு மிகவும் பிடித்துப்போனது.
M3 தேர்வுக்கு முந்தைய நாள் வழக்கம் போல அனன்யாவும் சரவணனும் அவள் வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். தெய்வாதீனமாக அந்த பேப்பரை ரூபன் Current Semester லியே க்ளியர் செய்திருந்ததால் வரவில்லை.
அந்த பேப்பரை அரியர் வைத்தால் க்ளியரே செய்யமுடியாதென சீனியர்ஸ் (அனன்யா உட்பட) கூறியிருந்தனர். அதனால் எப்பாடுபட்டாவது அந்த பேப்பரை Current Semesterலியே க்ளியர் செய்ய வேண்டுமென தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
’ஏதாவது சந்தேகம்னா கேளு’ என சொல்லிவிட்டு அருகிலேயே அவனைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
ஒரு ப்ராப்ளம் பயங்கரமாக குழப்பவே அனன்யாவைக் கேட்டான்.
அனன்யா அந்த problemஐ பார்க்காமல் அவனைப் பார்த்து சிரித்தாள். நீண்ட நேரமாக அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கவும் கோபமடைந்த சரவணன் ‘அனன்யா இப்பொதான் ரெண்டாவது யூனிட் வரேன். இன்னும் மூனு யூனிட் இருக்கு. எல்லாத்தையும் கவர் பண்ணாதான் ஜஸ்ட்பாஸாச்சும் ஆவேன். எனக்கு இப்பவே பக்கு பக்குனு இருக்கு. கொஞ்சம் புரிஞ்சுகிட்டு சீரியஸா சொல்லிக்கொடு ப்ளீஸ்.
அவனைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்போடு ‘இல்ல நான் கூடயிருந்தா Life Fullஆ Toughஆன Exam day க்கு முன்னாடி நாளாவே இருந்தா நல்லாருக்கும்னு வேண்டுனேனு சொன்ன்னியே’ என புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
’தெரியாம சொல்லிட்டேன்’ என வாயெடுத்து சரவணன் சொல்ல வர
‘நல்லாதான் இருக்குமோ’ என அவனைப் பார்த்து சொல்லிவிட்டு வெட்கத்தோடு சிரித்தாள்.
அந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத சரவணன் மகிழ்ச்சியில் ஒருகணம் அப்படியே அசைவின்றி இருந்தான்.
அனன்யா வேறு பக்கம் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
’ஹேய் இப்போ என்ன சொன்ன!’
‘ஒண்ணுமில்ல பக்குபக்குனு இருக்குன்னு சொன்னில. மூடிட்டு படி’
அதற்குப் பிறகு எளிமையான தேர்விற்கு முந்தைய நாளும் அனன்யா வீட்டிலேயே படிக்க ஆரம்பித்தான்.
அன்னைக்கு என்ன சொன்ன ’உன் மேல அப்படி தோணவே தோணாது. நீ என் தம்பி மாறி..’ சொல்லிக்கொண்டே அவளுக்கு முத்தத்தைத் தந்தான்.
‘அப்போ அப்படித்தாண்டா தோணுச்சு’
’இப்போ’
புன்னகையோடு அவள் ஒரு முத்தத்தை பதிலாகத் தந்தாள்.
அவனால் புரிந்துகொள்ள முடியாதா அவனுடைய ரூபனையும் அவனுடைய அனன்யாவையும். தான் எப்படி தம்பியாக இருந்து காதலனாக மாறிப்போனானோ அதேப் போல நண்பர்களாக இருந்த ரூபனும் அனன்யாவும் எதோ ஒரு கணத்தில் தங்கள் காதலை உணர்ந்திருக்கிறார்கள். குரூப்பில் அந்த ஜந்துக்கள் சொன்னதைப் போல அனன்யாவும் ரூபனும் துவக்கம் முதலே காதலர்கள் இல்லை. தருண் அனன்யாவை ரூபனோடு சந்தேகப்பட்டிருந்த தருணத்தில் சத்தியமாக காதலர்களாக இருந்திருக்கமாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அதனால்தான் அவனால் அந்த குழுவில் அதற்குமேல் அவர்கள் பேசுவதை தாங்கமுடியவில்லை.
தனக்கு ஏன் இதை சொல்லவில்லை என நினைத்து வருத்தப்பட்டான்.
அவர்களுடைய கல்யாணத்தேதியை அதற்கடுத்த தினங்களில் பகிர்ந்திருந்தனர். ரூபன் குடும்ப வழக்கப்படி கல்யாணம் சர்ச்சிலே நடக்கவிருக்கிறது. அனன்யா சும்மா பேருக்காக பேரைக் கூட மாற்றாமல் கிறிஸ்டியனாக மாறியிருக்கிறாள். ரூபனே சர்ச்சிற்கு செல்லும் வழக்கமில்லாதவன் தான். அவன் வீட்டை சமாதானம் செய்ய இந்த ஏற்பாடு நடந்திருக்கிறது. வீட்டில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ரூபனின் வீட்டிலிருந்து பத்திரிக்கை வைத்திருக்கின்றனர். அம்மா போன் செய்து அவனது எரிச்சலைக் கெளப்பினாள்.
‘டேய் ரூபனுக்கு கல்யாணமாம் டா. இன்னைக்கு தான் அவங்க வீட்லருந்து வந்து பத்திரிக்கை வச்சாங்க. அனன்யா தாண்டா பொண்ணு.’
’தெரியும்மா’
‘அதான, உனக்கு சொல்லாம இருப்பானா!’
’சொல்லலேயே மா’ என அம்மாவிடம் கத்தி அழவேண்டும் போல இருந்தது. ஆனால் சொல்ல மனம் வரவில்லை. யாரிடமும் சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.
‘எனக்கு அப்பவே சந்தேகம் இருந்துச்சுடா, இந்த பொண்ணு சும்மாசும்மா வராளேனு. அப்போ சொன்னா தப்பாயிடும்னு தான் சொல்லல. எனக்கு அப்பவே தெரியும்டா இது இங்கதான் முடியும்னு’
’சும்மா தெரிஞ்சமாறி பேசாத என்ன, அப்போ அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணவேயில்ல.’
‘இவனுக்கு எல்லாம் தெரியும் போடா!’
‘இங்கபாரு நானே பல பிரச்சனையில இருக்கேன். என்னைய டென்சன் ஏத்தாத. எதுக்கு போன் பண்ணுன அத சொல்லு’
‘அவன பத்தி பேசுனா கோவம் பொத்துட்டு வந்துருமே. கல்யாணம் சர்ச்ல முடிஞ்சு சாயங்காலம் ரிசப்சணாம்டா. அன்னைக்கு காவ்யா குழந்தைக்கு காது குத்துறாங்கடா. அங்க நாங்க போறோம். பாவம் கல்யாணத்துக்கு கூட கோச்சுக்கிட்டு போகாம விட்டாச்சு. அதுனால இதுக்கு நீ போறப்ப மொய் ஒரு ஐநூறு வச்சுடு’
’உனக்குத்தான பத்திரிக்கை வச்சாங்க. நீயே போ. நான் போகல. எனக்கு முக்கியமான வேலை இருக்கு.’
‘அவன் கல்யாணத்துக்கு நீ போகமாட்ட. இத நான் நம்பணுமா போடா.’
‘அம்மா சத்தியமா தான் சொல்றேன். என்னால போமுடியாது. நீயே போ. காவ்யா கல்யாணத்துக்கு எத்தன தடவ கூப்பிட்டேன். பெரிய இது மாறி வராம வீம்பு புடிச்ச. எனக்குமிதுக்கும் சம்மந்தமில்லை. ஒழுங்கா ரூபன் கல்யாணத்துக்கு போ. நம்ம வீட்லருந்து கண்டிப்பா போகணும். நான் சத்தியமா போகமாட்டேன்.’
போனை கட் செய்துவிட்டான். திரும்ப அம்மா போன் செய்ய எடுக்கவில்லை.
ரூபனே இதைப்பற்றி இவனுக்கு சொல்லாத போது எப்படி அவனால் போகமுடியும்.
’அனன்யாவ லவ் பண்ணதுலருந்து அவளுக்கு ப்ரோபோஸ் பண்ணதுலருந்து அவள் திரும்ப அக்சப்ட் பண்ணதுனு ஒன்னாவது சொல்லியிருக்கியாடா! அனன்யா தான் எங்கிட்ட சொன்னா. அனன்யா சொன்னப்பறமாவது அதப்பத்தி எங்கிட்ட மரியாதைக்காவது சொன்னியாடா. நானா பேசுனப்ப தான அந்த டாபிக்க பேச ஆரம்பிச்ச. ம்ம்..
’அப்படி இதுவரை நான் உங்கிட்ட எதாவது சொல்லாம இருந்துருக்கேனா. அனன்யாக்கு சொல்றப்ப நீ கூட இருந்தாலும் உங்கிட்டயும் தனியாதான சொல்வேன். அதேமாறி உங்க வீட்டுக்கு எதாவது சொல்ல வந்தாலும் உனக்கும் தனியா சொல்வேன்!
ரூபன் அன்று ஆஸ்பத்திரியில் பேசினபொழுது அவனால் பதிலே பேசமுடியவில்லை. உண்மையில் அன்றிலிருந்தே ரூபனுக்கும் சரவணனுக்குமான நெருக்கம் குறையத் தொடங்கியிருந்தது.
தானும் அனன்யாவும் ஒருவருக்கொருவர் விரும்புவது ரூபனுக்குத் தெரிந்தால் என்னாகுமோ என சரவணன் பயந்தான். ஆனால் அவன் பயந்த அளவில் ஒன்றுமே நடக்கவில்லை.
’டேய் நம்ம லவ் மேட்டர ரூபன்கிட்ட சொல்லிட்டேன்’
‘என்ன சொன்னான்!’
‘ஷாக்கானான், அப்பறம் எனக்கே கொஞ்சம் டவுட் வந்துச்சுனு சொன்னான்’ ’எத்தன நாளானு கேட்டான்’
‘சொன்னேன்.நீ ப்ரோபோஸ் பண்ணதுலருந்து இன்னைக்கு நடந்த வரைக்கும்’
’என்னைய எதாவது சொன்னானா!’
‘நான் யூபிஎஸ் போடப் போன நேரம் கரண்ட் கொடுத்துருக்கானா அவன். இருக்கட்டும் அவன நான் பேசிக்கிறேனு சொன்னான்.’
’போச்சு, பேசாட்டுக்கு இன்னும் கொஞ்ச நாள் சொல்லாம இருந்துருக்கலாமோ’
’அது தப்பாயிடும் டா. நம்மளே சொன்னா அதுவேற. வேற ஆள் சொல்லியோ இல்லை அவனே கண்டுபிடிச்சாலோ அது வேற.’
‘அதுவும் சரிதான் அனன்யா, சரி நான் பேசிக்கிறேன்’
ஆனால் ரூபனிடம் இதைப் பேசத் தயங்கிய சரவணன், அடுத்த நாள் கல்லூரிக்கு வழக்கமாக செல்வது போல ரூபன் வண்டியில் அவனோடு செல்லாமல் பஸ்ஸில் சென்றுவிட்டான்.
கல்லூரியில் அனன்யாவை ரூபனுக்குத் தெரியாமல் தனியாக தன்னைப் பார்க்க வர சொன்னபொழுது அனன்யா அவனை பயங்கரமாகத் திட்டினாள்.
‘இப்போ எதுக்கு நீ ரூபன அவாய்ட் பண்ற! அவன் என்ன தப்பு பண்ணான்.’
‘இல்ல அனன்யா, அவன பாக்க சங்கட்டமாயிருக்கு அதான். ப்ளீஸ் நீ கொஞ்சம் கேண்டீன் கிட்ட வாயேன்’
‘ச்சீ.. ஒன்னால ஒருத்தர நேருக்கு நேர் பாக்க தெம்பில்லனா தப்பு உன்மேல இருக்குனு அர்த்தம். அது யாராயிருந்தாலும் சரி நம்ம அப்படி நடந்துக்ககூடாது. அதேமாறி மத்தவங்களையும் அப்படி ஃபீல் பண்ணவைக்கக் கூடாது. நீ போய் அவன பாத்து பேசு.! சாரி கேளு. கால்ல கூட விழு. ஆனா அடுத்த தடவ அவங்கள எங்க பாத்தாலும் பயப்படாம பாத்து பேசுறமாறி இருக்கணும். புரியுதா!
’புரியுது.’
’போய்ப் பேசு’
’எங்கிட்ட சொல்றதுக்கு என்னடா பயம் லூசு’
‘இல்ல ரூபன் நம்ம ரெண்டுபேருக்குள்ள சண்டை வந்து பேசாம போயிருவோமோனு நினைச்சுட்டுதான் பர்ஸ்ட் சொல்ல பயந்தேன்.’ என அவன் தோளில் சாய்ந்து அழுதான்.
‘பாரு இப்போ நீதான் பேசாம போன’
’சாரிடா. எனக்கு நீ ரொம்ப முக்கியம். இதுனால நீ என்கிட்ட பேசாம போயிடுவியோனு பயம் வந்துச்சு. அதான் சொல்லல’ என அழுதான்.
’சரிடா, எதாயிருந்தாலும் பேசுனா தான தெரியும்’
‘நீ இப்பிடி எடுத்துக்குவனு தெரிஞ்சிருந்தா பர்ஸ்டே சொல்லியிருப்பேன்டா’
‘அப்போ இத்தன வருசம் என்கூட இருந்து அனன்யா புரிஞ்சுகிட்ட அளவுகூட புரிஞ்சுக்கலல. ‘என்னமோ போடா! நீ சொல்லாமயிருந்தது கஷ்டமாயிருக்குடா’
‘சாரிடா’
‘சரிவுடு அதப்பத்தி பேசவேணாம்.’ இப்போ என்ன கூட பைக்ல வரியா,இல்ல காலையில மாறி பஸ்ல வரியா?’
’பைக்லே வரேன்’
அதற்குப் பிறகு மூவரும் திரும்பவும் ஒன்றாக இருந்தாலும் ரூபனுக்கு சரவணன் மேல் வருத்தமிருந்தது.
அது வடுவாக மாறியது industrial visit போனபொழுதுதான். அதை முதலில் கூறியது அனன்யாதான்.
’நான் IV(industrial visit) போகல. வீட்டுல போற மாதிரி சொல்லிட்டு வந்தறேன். எங்கயாது Long Drive போலாமா’!
அதற்கு சரவணன் மறுப்பு சொல்லியிருந்தால் அவளெதுவும் சொல்லியிருக்கமாட்டாள். அதை சொல்லாதது தான் அவன் செய்த தவறு.
வழக்கம்போல இதைப் பற்றியும் ரூபனிடம் சரவணன் பேச்சை எடுக்கவில்லை. அனன்யாதான் பேசினாள். ரூபன் இந்த விஷயத்தில் உடன்படவில்லை. ஆனால் அனன்யா அவனிடம் கெஞ்சவும் ’உங்க இஷ்டம் எனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை’ என கூறிவிட்டான். உங்க வீட்ட,காலேஜ நீ சமாளிச்சுக்க. நான் இதுக்குள்ளாரலாம் வரமாட்டேன் என உறுதியாக கூறிவிட்டான்.
லாங் ட்ரைவிற்கு பைக் வேறோரு நண்பன் தருவதாய் வாக்களித்திருந்தான். ஆனால் கடைசி நேரத்தில் அவன் சொதப்பிவிடவே ரூபனிடம் அனுமதி கேட்காமல் அவன் பைக்கை எடுத்து சென்றுவிட்டான்.
ரூபன்கிட்ட சொல்லிடுனு அனன்யா சொல்ல ‘இப்போ அவன் ரெண்டு பேர் மேல செம காண்ட்ல இருக்கான். ஒருவேள இத சொன்னா அவ்ளோதான். அங்கருந்து பாதியிலேயே கிளம்பி வந்தாலும் வந்துருவான். மொத்தமா வந்ததுக்கப்பறம் கேஸ் வாங்கிக்குறேன்’ என்றான்.
அவன் சொன்னதுபோல பாதியிலேயே ரூபன் கிளம்பி வரும் நிலைமை வந்தது. வண்டியில் போய்க்கொண்டிருந்தபொழுது எதிரில் ராங்ரூட்டில் வந்த பைக் தட்டிவிட்டு இருவரும் விழுந்து விபத்தானது.
சரவணனுக்கு கால் எலும்பு முறிந்திருந்தது. அனன்யாவிற்கு கை பிசகியிருந்தது. காலில் சிராய்ப்பு இருந்தது. எதிரில் வந்தவன் நிற்காமல் சென்றுவிட்டான்.
அடிபட்டதை ரூபனுக்கு அனன்யா தான் அவனுக்கு அழுதுகொண்டே போன் செய்து கூறினாள். ரூபன் எதுவும் யோசிக்காமல் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே சரவணனுக்கு தெரியவில்லை. இருவரையும் அருகிலிருந்த மருத்துவமனையில் சுற்றியிருந்தவர்கள் அனுமதித்திருந்தார்கள். ரூபன் போனவுடன் அவன் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள். அங்குசென்ற பிறகுதான் அவர்கள் விழுந்தது தன் வண்டியில் என்பதையும் அறிந்து கொண்டான்.
இருவரையும் கார் பிடித்து அவர்கள் ஊரிற்கு அவன்தான் கூட்டிவந்தான். வண்டியை அங்கே சர்வீஸ் செய்து அதை பஸ்ஸில் போட்டுவிட சொல்லிவிட்டு வந்துவிட்டான். இருவரையும் வேறு வேறு மருத்துவமனையில் சேர்த்தது முதல் அனன்யா இண்டஸ்டிரியல் விசிட் வந்த மாதிரியே நம்ப வைத்தது, அனன்யா சரவணன் ரூபன் மூவர் வீட்டிற்கும் இருவருக்கு அடிபட்டது என தெரியாமல் ஒருவருக்கு மட்டுமே அடிபட்டதாய் தெரியும் வண்ணம் பார்த்துக்கொண்டது என அந்த மாதம் முழுக்க அந்த பிரச்சனையிலே மூழ்கிப்போனான். கல்லூரியில் இவன் பைக்கில் போய்தான் விழுந்தார்கள் என்பதால் இவன்தான் அனுப்பினான் என அனைவரும் நினைத்தனர்.
அனன்யாவிற்கு ஒரு மாதத்தில் எல்லாம் சரியாகிவிட்டது. சரவணனுக்கு முழுமையாக குணமாக மூன்று மாதமானது. அவன் அசைன்மெண்ட், லீவ், மெடிக்கல் சர்ட்டிபிகட் என எல்லாவற்றையும் ரூபனே பார்த்துக்கொண்டான்.
கிட்டத்தட்ட அவன் வீட்டிற்கு தெரியாமல் நண்பர்களிடம் மட்டும் வாங்கி ஒரு அறுபதாயிரம் வரை இந்த பிரச்சனையில் செலவு செய்திருந்தான்.
முதல் இரண்டு நாட்கள் அவர்களிடம் இதைப் பற்றி பேசாமல் இருந்தான். பின்பு இருவரையும் திட்டித் தீர்த்தான். அவர்களால் என்ன பதில் கூற முடியும்.
’அறிவிருக்கா அனன்யா உனக்கு! அவன நம்பி போற. இது வேணாம்னு எத்தன தடவ சொன்னேன் கேட்டியா நீ. இப்போ பாரு அவனும் மூனு மாசம் அடிபட்டு படுத்துருக்கான். இதுல எனக்கு கோவமெல்லாம் உன்மேலதான். அவன் குழந்தை மாறி அனன்யா. நீ என்ன சொன்னாலும் செய்வான். நான் படிக்கிறேனு தான் இந்த காலேஜே வந்தான். இந்த குரூப்பெடுத்தான். அவன ஏன் இது படிச்சனு கேட்டா சொல்லத் தெரியாது. அவன் நீ என்ன சொன்னாலும் செய்வான். ஒருவேள சுத்தியிருக்கவங்க ஆஸ்பத்திரி தூக்கிட்டு வந்துருக்காட்டி ஆக்ஸிடெண்ட் ஆன இடத்துல அவன் காலுடைஞ்சு அப்படியே இருந்துருப்பான். அவனுக்கு அடுத்து என்ன பண்ணனும்னு கூட தெரியாது. நீதான் இது எல்லாத்துக்கும் ரெஸ்பான்ஸிளிட்டி. அவன் செத்துருந்தா அவன் வீட்டுக்கு யாரு பதில் சொல்லிருப்பா’
’ரூபன் அப்படி பேசாத ப்ளீஸ்’ அழுகையினூடே பேசினாள்.
’வேற எப்படி பேசனும்னு எதிர்பாக்குற நீ, அவன் எப்படினு தெரியாமலா லவ் பண்ற, ஒரு விஷயத்த பண்ணப்போறனு அதுனால வர கான்ப்ளிக்ட்ஸ ஏத்துக்க ரெடியா இருக்கணும். அவனுக்கு அது துளி கூட கிடையாது. அப்போ உனக்கு அது இருக்கணும்.
’சாரி ரூபன், இப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கல’
‘நினைக்கணும் அனன்யா, எல்லாத்தையும் நினைச்சு பாக்கணும்.
அனன்யாவைத் திட்டிவிட்டு அங்கிருந்து சரவணனைப் பார்க்கப் போனான். சரவணனிடம் இப்படியெல்லாம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது தெரிந்தாலும் அவனைத் திட்டிவிட்டான்.
சரவணன் அவன் அப்பாவிடம் பேசி வண்டிக்கான காசை வாங்கி வைத்திருந்தான். அதை சரவணனிடம் இந்தாடா உன் வண்டிக்கு என பணத்தை நீட்ட அவனுக்கு கோபம் தலைக்கேறி கத்த ஆரம்பித்துவிட்டான்.
’இப்போ என் வண்டிக்கு, இந்த ஆஸ்பத்திரிக்கு காசு குடுத்துட்டு நீங்க ரெண்டுபேரும் சரியாயிட்டா இதெல்லாம் முடிஞ்சிருச்சினு நினைச்சிட்டிருக்கியா! உனக்கு இன்னும் புரியவே இல்லல. காலேஜ் போய் பாரு Staffலருந்து Studentலருந்து எல்லாரும் அசிங்கமா பேசுறாங்க. அனன்யா மானமே போச்சு. எல்லாம் உன்னாலதான். எப்படி அடிபட்டுச்சுனு அனன்யா வீட்டுக்கு தெரியாம, உனக்கு அடிபட்டது அவங்க வீட்டுக்கு தெரியாம, அவளுக்கு அடிபட்டது உங்க வீட்டுக்கும் என் வீட்டுக்கும் தெரியாம, ’ஆஸ்பத்திரி போயிட்டு வந்தியே இப்ப பரவால்லயானு!’ கேட்டா எங்க வீட்டுல யார பத்தி சொல்லணும்னே குழம்பி போய் பைத்தியம் புடிச்ச மாறி சுத்திட்டிருக்கேன். என் பைக்க எனக்கே தெரியாம எடுத்துட்டு போய் ’மாமா’னு பேர் வாங்கி கொடுத்துருக்க. இப்போ இந்த காச கொடுத்துட்டா அதெல்லாம் சரியாயிடும்ல. எனக்கே இப்படினா அங்க அனன்யாவ என்னென்ன சொல்றாங்கனு தெரியுமாடா உனக்கு.. அவ வந்தா இத எப்படி ஹேண்டில் பண்ணுவாளோனு யோசிச்சுட்டிருக்கேன். இங்கருந்து சரியாகி வந்துட்டா எல்லாம் முடிஞ்சிருச்சுனு நீ நினைச்சிட்டு இருக்கில! உனக்கு இதெல்லாம் பிரச்சனையில்ல. ஏன்னா நீ அதப்பத்தி கவலைப்படமாட்ட. ஆனா உன்னால இப்போ ஒரு பொண்ணும் கேவலப்பட்டு நிக்குதே! அதைப்பத்தி உனக்கு கவலையே இல்லல. அங்க அடிபட்டப்ப கூட எனக்கு போன் பண்ணியா நீ! அவதான் பண்ணுனா! அவள லவ் பண்ணதுலருந்து என் பைக்க எடுத்துட்டு போனதுலருந்து ஒண்ணயாவது சொன்னியாடா! எல்லாத்துலயும் அசால்ட்டு. அப்பறம் இன்னொரு விஷயம். என் வண்டி சரிபண்ணி வந்துருச்சு. அதுக்கு காசெல்லாம் ஒன்னும் வேணாம். ஆனா இனிமே என்னைய கேக்காம என் வண்டியதொடாத’ இந்த ஒரு வாரமா நிம்மதியே இல்லடா, என் மூளை உங்களைப் பத்தி மட்டுமே யோசிச்சுட்டு இருக்கு. பைத்தியம் புடிச்சாப்புல இருக்கு. நான் கெள்ம்பறேன் என கெளம்பிவிட்டான்.
அதற்கடுத்த ஒரு வாரத்தில் இருவரும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிலிருந்தே ட்ரீட்மெண்ட் எடுத்தனர். அனன்யா ஒரு மாதத்திற்குள்ளேயே சரியாகிவிட்டாள். சரவணன் முழுமையாக குணமடைய மூன்று மாதமானது. அந்த சம்பவத்திற்கு பிறகு மூவரும் சேர்ந்து இருந்தாலும் முன்னைப் போல் இல்லை. அனன்யாவும் ரூபனும் பழையபடியே இருந்தனர். ரூபன் சரவணனிடம் முன்பைப் போல இல்லை. அனன்யாவும் சரவணனை டார்ச்சர் செய்தாள். எல்லா பொறுப்புகளையும் அவனிடமே தந்தாள். சின்ன சின்ன வேலைகள் கூட அனன்யா அவனையே செய்யச் சொன்னாள். ஆனால் யாராவது இப்படி செய் என்று சொன்னால்தான் அவன் செய்தான். ஒரு சினிமா டிக்கெட் எடுக்கும் பொழுது கூட ஏதாவது சந்தேகம் கேட்பான், அப்படி எதுவும் கேட்காமல் டிக்கெட் எடுத்திருந்தால் அதில் ஏதாவது பிரச்சனை இருக்கும். ’உனக்கு பொறுப்பே இல்லை அதை வளர்த்துக்க’ என முதலில் பொறுமையாக கூறியவள் அவன் மாறாததைக் கண்டு எரிந்து விழ ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது,வீட்டு கணக்கு, கரண்ட் பில் கட்டுவது, ரேசன் கடைக்கு செல்வது என அவன் வீட்டில் எல்லாவற்றையும் அவனேயே செய்யசொல்லி அதை போட்டோ எடுத்து அனுப்ப சொன்னாள். அப்பொழுதுதான் அவன் வீட்டிலேயே அவனை நம்பவில்லை என்பது அவனுக்கு தெரிந்தது. அவன் வீட்டில் ஏதாவது மறந்து வந்துவிட்டால் கூட சரி பராவாயில்லை விடு அடுத்த வாட்டி கரெக்டா இரு என பொறுமையாக சொன்னார்கள். ஆனால் அனன்யா திட்டித்தீர்த்தாள். ஒரு சில சமயங்களில் ’உன்னால இண்டிபெண்டண்டா ஆகவே முடியாது. ஒரு வேலைக்கு போயிட்டு சம்பாரிச்சா மட்டும் இண்டிபெண்டண்ட் கிடையாது. வீட்டுல கரண்ட் இல்லனா மோட்டார் எடுக்கலனா என்ன பண்ணனும்னு தெரியனும். நீ சும்மாவே உக்காந்துருப்ப. எதுக்குமே லாயக்கில்லை’ என திட்டினாள்.
முதலில் சுகமாக இருந்த காதல் அவனுக்கு சுமையாகிப் போனது. எப்பொழுது கால் செய்வாள் எனக் காத்திருந்த தருணங்கள் போய் அவள் கால் செய்கிறாளே என பயப்படும் அளவிற்கு வந்திருந்தது. அப்பொழுது கூட அவன் அவள் மீது கோவப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் இது சரியாக என்ன பண்ணலாம் என கூட யோசிக்கவில்லை. இதுவும் அவளுக்கு கோவத்தை உண்டு பண்ணியது. இதை பத்தி கூட நீ கேக்கலனு சொல்லும்பொழுது ’சரி கேக்கறேன்! நான் என்ன பண்ணனும் அனன்யா’ என கேட்டான். அதற்கு ஒரு சண்டை நடந்தது.
சில சமயங்களில் அழுவாள். ‘நீ இப்படியே இருக்கமுடியாது சரவணா. கொஞ்சமாவது பொறுப்பாயிரு என அழுகையினூடே சொல்வாள்.
அவனும் அவள் சொல்வதை எல்லாம் செய்வான். அவன் நேரமோ இல்லை எதோ ஒன்று தவறாக வந்துவிடும். அதற்கு அவன் என்ன செய்வான்? சில சமயங்களில் அவன் சரியாக செய்தாலும் வேறு யாருடைய தவறினாலோ முழுமையடையாமல் போகும். அவன் செய்வதற்கு முன்பாகவே அவள் ’எப்படியும் எதாவது தப்பு பண்ணுவ!’ என கிண்டல் செய்ய ஆரம்பித்தாள். அனன்யாவிற்கும் ரூபனிற்கும் அடுத்து என்ன படிக்க வேண்டும்; என்ன வேலைக்குப் போக வேண்டும்; என்பது பற்றி ஒரு திட்டமிருந்தது. அவனுக்கு அது கிடையாது. அனன்யாவோ இல்லை ரூபனோ எடுக்கும் படிப்பை எடுப்பான் என்பதால் இருவரும் முடிவு செய்து அவனிடம் ஒரு சத்தியத்தை வாங்கினார்கள். அவர்கள் எடுக்கும் கல்லூரியை அவன் எக்காரணம் கொண்டும் எடுக்கக் கூடாது. அவனாக யோசித்து அவர்கள் போகும் கல்லூரியைத் தவிர வேறு ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்றார்கள். அப்படி செய்தால் அவனிடம் ஜென்மத்துக்கும் பேசமாட்டேன் என கூறியிருந்தார்கள். அதனால் அவன் அவர்கள் படித்த கல்லூரிக்கு போகவில்லை.
அந்த நேரத்தில் சரவணன் அப்பா சொந்தமாக ஒரு வீட்டை வேறு ஏரியாவில் வாங்கியிருந்தார். அங்கிருந்து மாறியவுடனேயே ரூபனுடனான நெருக்கம் குறைந்தது. பார்க்கும்பொழுது பேசிக்கொள்வது என்றானது.
அனன்யா கடைசி செமஸ்டரில் அவனிடம் ப்ரேக் அப் செய்தாள்.
‘நான் உன்னைய ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டேன் சரவணா! உன்கிட்ட எதெல்லாம் புடிச்சுப் போயி ப்ரோபோஸ் பண்ணேனோ இப்போ அதையே புடிக்கலனு குறையா சொல்றேன் சரவணா. நான் தான் சரவணா மாறிட்டேன். அதுக்காக நீயும் மாறனும்னு எதிர்பாக்கறது எப்படி சரவணா நியாயமாகும். போதும் சரவணா இதுக்கும் மேலயும் உன்னை காயப்படுத்த விரும்பல. சாரி சரவணா உன்ன இவ்வளவு நாள் காயப்படுத்துனதுக்கு’ கண்ணீரை கர்சீப்பால் துடைத்துக்கொண்டே சொன்னாள்.
‘அனன்யா, ப்ளீஸ் அனன்யா நீ சொல்ற மாறி நான் மாறிடறேன். என்னைய விட்டுட்டு போயிடாத அனன்யா’
‘நீ ஏன் மாறனும் சரவணா. நீ மாறனும்னு சொல்ற அளவு இது ஒன்னும் பெரிய தப்பில்லை. இங்க நிறைய பேரு அப்படியேதான் இருக்காங்க. அது தப்பில்லை சரவணா. தப்பெல்லாம் என்மேல மட்டுந்தான் சரவணா. இப்போக்கூட சத்தியமா உன்மேல கோவப்பட்டு சொல்லல. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சரவணா. பழையபடி நீ என் நண்பனாவே இரு. உனக்குப் புடிச்சமாறியே இரு. நம்ம ப்ரேக் அப் பண்ணிக்கலாம்.
அதற்குப் பிறகு தருணை விரும்புவதை சொன்னாள். வெறுமனே வாழ்த்துகள் மட்டும் அனுப்பியிருந்தான். அதற்குப் பிறகு விசேசங்களுக்கு வாழ்த்துகள் அனுப்புவதோடு இருந்தது. அவன் என்ன செய்கிறான் என அவளுக்கும் கேட்க தோன்றவில்லை. இவனும் அவளிடம் கேட்கவில்லை. இந்ததூரத்தில் இருவருமே இருவரும் நலமாகயிருக்க வேண்டும் என நினைத்துகொண்டனர். தருணோடு ப்ரேக் அப் ஆனது முகநூல் பார்த்து தெரிந்துகொண்டான். அதேப் போல அவள் கல்யாணத்தையும் வேறோருவர் மூலம் தெரிந்துகொண்டால் அவனால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதுவும் ரூபனை திருமணம் செய்துகொள்வதை சொல்லாமலிருந்தால்……..
ரூபனும் அனன்யாவும் தங்கள் கல்யாண அழைப்பிதழை வாட்ஸப் பேஸ்புக் எல்லாவற்றிலும் ஸ்டேடசாக வைத்திருந்தனர். அவனுக்கு மட்டும் இருவரும் சொல்லவில்லை. இவனும் அதை ஏனென்று கேட்கவில்லை. அவன் வீட்டிற்கு பத்திரிக்கை வந்திருக்கிறது. ஸ்டேடஸில் இவனை மறைத்துவிட்டு ஸ்டேடஸ் வைக்கவும் ஒரு நிமிடமாகாது. அதை அவர்கள் செய்யவில்லை. அவனுக்கு சொல்லவில்லை. அதே சமயம் அவனுக்கு தெரியாமலிருக்க மறைக்கவும் முயற்சி செய்யவில்லை. இந்த இரண்டிற்குமான இடைவெளி அவனுக்கு இரண்டு விதமான சந்தேகங்களை எழுப்பியது. ஒன்று அவன் வருகையை விரும்பாமலிருக்கலாம். இல்லையென்றால் அவனிடம் சொல்ல தயங்கியிருக்கலாம். நிச்சயமாக ரூபனும் அனன்யாவும் தன் வருகையை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். அதேபோல தன்னிடம் சொல்ல ஏன் தயங்க வேண்டும்! ரூபன் அனன்யாவும் தன்னைப் புரிந்து வைத்தது இவ்வளவுதானா என்ற வருத்தமிருந்தது.
அப்பா அவனைக் கண்டிப்பாக செல்லவேண்டுமென கூறியிருந்தார். ‘நீ போனவுடனே கூட வந்தர்ரா..சாப்புடகூட வேணாம். ஆனா தலைய மட்டும் காட்டிடுறா. அவங்க அம்மா அப்பாட்ட மட்டும் வந்துட்டேன்னு காமிச்சுட்டு சாப்பிட கூட வேணாம் கெளம்பிடு. நம்ம குடும்பத்துக்கு நிறைய செஞ்சிருக்காங்கடா’ என கடைசியாக கெஞ்சவே வேறு வழியில்லாமல் சென்றான்.
இதில் அவன் வருத்தப்பட ஒன்றுமேயில்லை. அவர்கள் வீட்டுக்கு பத்திரிக்கை வந்திருக்கிறது. அதனால் போகிறான். ஒருவேளை அனன்யாவோ சரவணனோ ’ஏன் வந்தாய்!’ என கேட்டால் சத்தியமாக கேட்கமாட்டார்கள்! அப்படிக் கேட்கவேண்டும் என அவனின் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒரு குரூரம் விரும்பியது. ஒருவேளை அப்படி கேட்டால் உங்களுக்காக வரவில்லை. உங்கள் அம்மா அப்பாவிற்காக வந்தேன் என அந்த குரூர ஆசை நடந்தால் சொல்வதற்கான பதிலையும் தயராக யோசித்தே சென்றான். அவனுக்கு ஸ்டேஜ் ஏறும் எண்ணமேயில்லை. ரூபன் அம்மா அப்பாவைப் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம் என்றே தோன்றியது. ஸ்டேஜேறி அவர்கள் இவனைப் பார்த்து வருத்தப்படுமளவு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் நினைத்துக்கொண்டே ரிசப்சனுக்கு சென்றான்.
மேடையில் இருவரும் அவ்வளவு மகிழ்ச்சியாக நின்றிருந்தனர். அனன்யா முன்பை விட தற்போது இளைத்திருக்கிறாள். முன்பை விட அழகாகவும் இருக்கிறாள். ரூபன் முன்பை விட கருத்து போயிருந்தான். கோட்சூட் பட்டுப்புடவையில் மகிழ்ச்சியாக சிரித்துகொண்டு நின்றிருந்தனர்.
’நாங்க படிக்கிற காலேஜ் எக்காரணம் கொண்டும் எடுக்கக்கூடாது. நாங்க சொல்றத்தையும் தாண்டி வந்தா நாங்க ஜென்மத்துக்கும் பேசமாட்டோம்’ என அவர்கள் செய்த சத்தியம் நினைவுக்கு வந்தது. எங்கே தன்னிடம் பேசாமலே போய்விடுவார்களோ எனும் அச்சத்தில் தான் வேறு கல்லூரி எடுத்தான். அப்படி எடுத்தும் அவர்கள் கல்யாணத்திற்கு சொல்லவில்லை என்பது வருத்தமாக இருந்தது. அவனுடைய ரூபன் அனன்யாவே அவனை நிராகரித்தால் அவன் யாரிடம்தான் போவான்.
ஓரத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவர்கள் பார்க்காதவாறு ஓரமாக சென்று ரூபன் அம்மா அப்பாவை சந்தித்தான்.
அவனைப் பார்த்ததும் ரூபனின் அம்மாவும் அப்பாவும் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்கள். ‘டேய் சரவணா, முரட்டு ஆளா மாறிட்டியேடா! அம்மா அப்பாலாம் நல்லாருக்காங்களா! அவங்க வரலையா… ம்ம்ச்ச்… அவங்களையும் கூட்டிட்டு வந்துருக்கலாமே!
’இல்லம்மா. அப்பா அம்மா இன்னோரு நாள் வீட்டுக்கு வந்து பாக்கறேனு சொன்னாங்க.’
’சரி,சரி மொத சாப்பிடு’ என பந்திக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அனன்யாவின் அம்மாவைப் பார்த்தான்.
அவராகவே வந்து பேசினார். ‘சரவணா, நல்லாயிருக்கியாப்பா! ஏங்க யாருனு தெரியுதா நம்ம வீட்டுக்கு படிக்க வருவாப்ளயே ஒரு பையன்.’
‘ஏய் சரவணன தெரியாதாடி’ என அவர் அப்பா சொன்னார்.
அவர்களைப் பார்த்தது அவ்வளவு திருப்தியாக இருந்தது. உண்மையில் வந்தது நல்லது என யோசித்துக்கொண்டான். விஷ்ணு அங்கே அமர்ந்திருப்பதை பார்த்தான். இவனைப் பார்த்து வெட்கமேயில்லாமல் சிரித்தான். எப்படித்தான் அவர்கள் திருமணத்தையே கேவலமாக பேசிவிட்டு அங்கே வந்து சாப்பிடுகிறானோ என நினைத்துக்கொண்டே சாப்பிட அமர்ந்தான்.
அவள் அம்மா சாப்பிடும்பொழுது வந்து கேட்டாள்.’பாத்தியாப்பா திடீர்னு இவனக் கட்டிக்கிறேனு ஒத்தக் கால்ல நின்னாப்பா! பையன் நம்ம மதம்னா பரவால்ல. மதம் மாத்திட்டாங்கப்பா. ஒத்தப் புள்ளையாப் போச்சேனு எல்லாத்துக்கும் இறங்கி போறோம்’ என அழுதார்.
இதேபோல அவள் அம்மா , சரவணனைக் அவள் கல்யாணம் செய்யும்பொழுது ரூபனிடம் புலம்புவதாய் ஒரு கனவைக் கண்டதாய் அவனைக் காதலித்தபொழுது அனன்யா சொல்லியிருக்கிறாள். அதை நினைத்து சிரித்தான்.
சாப்பிட்டுவிட்டு மொய் இரண்டு வீட்டுக்கும் வைத்துவிட்டு அப்படியே அவர்கள் கண்ணில்படாமல் செல்ல நினைக்கும் பொழுது ரூபன் அப்பா பார்த்துவிட்டார்.
’சரவணா போட்டோ எடுக்காம எங்க போற? வா!’ என அவனை அழைத்துக்கொண்டே மேடையருகில் சென்றுவிட்டார்.
அவரோடு இவன் வருவதை பார்த்தவுடன் இருவரின் முகமும் மாறியது. அவன் வருகையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது அந்த திகைப்பிலும் அச்சத்திலும் தெரிந்தது.
அவர்கள் இருவரின் முகமும் மாறவும் இவனுக்கு மேடை ஏறவே ஒருமாதிரி இருந்தது.
எது நடக்கக்கூடாது என்பதற்காக இந்த கல்யாணத்திற்கே வர யோசித்தானோ, சரி வந்தாலும் இது மட்டும் செய்துவிடக்கூடாது என நினைத்திருந்தானோ அந்த தருணம் வந்துவிட்டது. ரூபன் அப்பா அவன் கையைப் பிடித்து அழைத்துப் போகும்பொழுது கையை உதறிவிட்டு சென்றுவிடலாமோ என்று கூட தோன்றியது. மேடையில் அவர்கள் இருவரின் முகத்தையும் பார்க்கவே முடியவில்லை. அவர்கள் அதிர்ச்சியில் நிற்பது இவனுக்குத் தெரிந்தது.
‘அப்பா!, லேட் ஆகுதுப்பா, போட்டோ வேணாம்ப்பா என அவரிடம் கெஞ்சிக்கொண்டே சென்றான்.
’சார்,ப்ளீஸ் சார் இனிமே பண்ணமாட்டேன் சார் பிரின்சிபால்ட்ட போவேணாம் சார் என ஆசிரியர் இழுத்து செல்லும்பொழுது கெஞ்சிக்கொண்டே வரும் மாணவனைப் போல மேடைக்கு செல்ல பயந்தான்.
’அட ஒரு போட்டோ எடுக்க எவ்வளவு நேரமாகப் போகுது’ என கூட்டிசென்றார்.
‘டேய் நம்ம சரவணாடா பாத்தியா உன் கல்யாணத்துக்கு வந்துட்டு போட்டோ கூட எடுக்காம போக பாத்தாண்டா. கூட்டிட்டு வந்துட்டேன்! என மேடையில் போட்டோ எடுக்க வரிசையில் நின்றவர்களைத் தாண்டி வந்து மேடையில் நிறுத்தினார்.
அவருடன் வேலை பார்க்கும் குடும்பம்தான் அடுத்து போட்டோ எடுக்க வேண்டியது. அவர்களிடம் நம்ம பக்கத்து வீட்டுல இருந்தாங்க. இவனும் என் பையன் மாறிதான். கொஞ்சம் அவசரமா போகணும் அதான் கோச்சுக்காதிங்க’ என்றார்.
’ஐயோ இருக்கட்டும் சார்’ என கூறிவிட்டு சரவணனைப் பார்த்து சிரித்தார்.
’அடுத்து சார் எடுக்கட்டும் என அவரை கைகாண்பித்துவிட்டு கீழே வேறு ஒருவரை பார்க்கவும் ‘அடடே வாங்க சார்’ என அவரை பார்த்து பேசிவிட்டு போட்டோ எடுத்துக்கப்பா வந்தறேன் என அவரை நோக்கி சென்றுவிட்டார்.
ரூபன் அனன்யாவின் முகத்தில் அவ்வளவு நேரமிருந்த மகிழ்ச்சி காணாமல் போனது. இவனைப் பார்த்ததும் இருவரின் முகமும் செத்துவிட்டது. அந்த முகத்தில் ஒரு புன்னகையை கஷ்டப்பட்டு வரவழைத்து அவனைப் பார்த்து சிரித்தனர்.
‘சாரி ரூபன், வந்துட்டு அப்படியே போயிடலாம்னு இருந்தேன். அப்பாதான் ஏத்திவிட்டுட்டாரு. இப்படி நடந்துருமோனு தான் வர பயந்தேன்.’ என சங்கடத்தோடு சரவணன் சொன்னான்.
ரூபன் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. கர்சீப்பால் துடைத்துக்கொண்டே, ’நீ ஏண்டா வருத்தப்படறே! நாங்கதாண்டா வருத்தப்படணும் சாரிடா’ என அவன் தோளைப் பிடித்தான்.
கேமராமேன் போட்டோ எடுக்க நிக்க சொல்ல நின்றுகொண்டே சொன்னான்.
’உண்மையாலுமே நீங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணப்போறிங்கனு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோசப்பட்டேன். உங்களுக்குள்ள எப்பயும் ஒரு அழகான வேவ்லெந்த் இருக்கும். உங்க பிரண்ட்சிப் காதலா மாறுன மொமண்ட் ஒரு கவிதை மாறி இருக்கும்ன்னு நினைச்சேன்’
கேமராமேன் ஓகே என கூற அவர்கள் பக்கம் திரும்பி ‘ஒரே ஒரு வருத்தம் உங்க கல்யாணத்தப் பத்தி கேக்கக்கூடாதவங்க மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு சொல்லியிருக்கலாமென இருவருக்கும் கைகொடுத்தான்.
‘ரூபன் உனக்கு சொல்லலாம்னு சொன்னான். நாந்தான் வேணானு சொல்லிட்டேன். அந்த தருண் எங்க கல்யாணம்னு சொல்லவும் இன்பாக்ஸ்ல வந்து அசிங்கமா பேசுனான். அவன் பேசுனது பிரச்சனையில்லை. நீயும் அவனை மாறியே … மேக்கப் கலையாத வண்ணம் கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்தாள்.
‘நான் அப்படி பண்ணுவேனு நினைச்சியா!’
’இல்லை. ஒருவேள நீ சொல்லிட்டனா சத்தியமா நான் தாங்கியிருக்கமாட்டேன் சரவணா’ என மீண்டும் துடைத்தாள்.
‘ச்சீ..நான் எப்படி அனன்யா அப்படி பேசுவேன்னு நினைச்ச, உங்க ரெண்டு பேர எப்படி நான் தப்பா நினைப்பேன்’
அவன் சொன்னவுடன் இருவரும் கண்ணீரைத் துடைத்தனர். இருவரும் அழுகவும் அவர்கள் அம்மா அப்பா வந்து விசாரித்தனர்.
‘ஒண்ணுமில்லமா, நீங்க போங்க தேம்பிக்கொண்டே அனன்யா அனுப்பினாள்.
என்னாச்சுப்பா என சரவணனைக் கேட்டனர்.
இல்ல ஒண்ணுமில்லம்மா என சொல்லவும் அவர்கள் நகர்ந்தனர்.
’அனன்யா, எல்லாரும் பாக்கறாங்க அழாத!’ என சரவணன் சொல்ல ’சாரிடா! உனக்கு நான் சொல்லியிருக்கணும்! ரொம்ப கில்ட்டியா பீல் பண்றேண்டா’ என அவனை அணைத்துக்கொண்டு அழுதாள்.
’அனன்யா எல்லாம் தப்பா நினைச்சுக்குவாங்க கைய எடு’
’சரவணனும் அவனை இன்னொரு பக்கம் அணைத்துகொண்டான்.
கேமராமேன் அப்படியே இருங்க என கூறிவிட்டு அதை அழகாக புகைப்படமெடுத்தார்.
’அண்ணா இன்னோனு எடுங்க. அதுல அழுதுருப்பேன்’ என கண்ணீரைத் துடைத்துவிட்டு அனன்யா சொன்னாள். மூவரும் சிரித்துக்கொண்டே அவ்வாறு நின்றனர்.
‘Thanks For Coming.it means a lot’ நீ ஒருவேள வராம இருந்தா வாழ்க்கை முழுசா உன் முகத்துல முழிக்காத மாறி Guilty ஆ Feel பண்ணியிருப்போம். நீ எங்களுக்கு அந்த தண்டனைய கொடுக்கல and நீ மாறிட்ட’
ரூபன் அனன்யாவை மறுக்கும் விதமாய் நீ மாறவேயில்லடா. அன்னைக்கு காவ்யா விஷயத்துல நீ அதப்பத்தி கேக்காம எப்படி ஜெண்டில்மேனா நடந்துகிட்டியோ அதேமாறி இப்பயும் நடந்துகிட்டடா’
சரவணன் அனன்யா பக்கம் திரும்பி, அடிப்பாவி! அதையும் அவன்கிட்ட சொல்லிட்டியா!
சாரிடா என சிரித்தாள்.
காவ்யா குழந்தைக்கு இன்னைக்கு காது குத்தறாங்க. அதான் அப்பா அம்மா வரல .and நானும் சாரி. ஸ்டேஜ் ஏற வேணாம்னு நினைச்சு எதுவும் வாங்கிட்டு வராம வந்துட்டேன்’.
‘டேய் நீ வந்தது எங்களுக்கு அவ்வளவு சந்தோசம் டா. சத்தியமா எங்க கல்யாணம் இப்பதான் complete ஆன மாறி feeling டா. என்ன அனன்யா.
’100 percet true. நாங்க லவ் பண்ண மொமண்ட்லருந்து மிஸ் பண்ண ஒருத்தன் நீ. ’உன்கிட்ட சொல்லணும்னு ஆசை சொல்லி நீ தருண் மாறி .. அதை விடு. சத்தியமா நான் அவ்ளோ ஹேப்பியா இருக்கேன்.
நானும். And also im very happy for you guys.
அப்பொழுது அனன்யா அம்மா வந்து ரொம்ப பேர் போட்டோ எடுக்க நிக்கிறாங்கடி. அப்பறம் பேசிக்கலாம் என சொல்ல அம்மா ‘நீ போம்மா’ என்றாள்.
’அம்மா சொல்றது கரெக்ட். நான் கெளம்பறேன். ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க’
‘சரி லாஸ்ட்டா ஒரெ ஒரு selfie’ என அனன்யா சொன்னாள்.
ஓகே என நின்றனர். அனன்யா சரவணனின் மொபைலை வாங்கி போட்டோ எடுத்தாள்.
முதலில் அனன்யா நடுவில் சரவணன் ஓரத்தில் ரூபன் நின்றிருந்தனர்.
’சீக்கிரம் எடு அனன்யா, வெய்ட் பண்றாங்க’
அவர்கள் எடுப்பதை கேமராமேனும் போட்டோ எடுத்துக் கொண்டார்.
வாட்ஸப் பண்ணிடறேன் என சொல்லிவிட்டு போகவிருந்தவனை ‘உண்மையாலுமே நீ வந்தது ரொம்ப சந்தோசம்’ என சொல்ல எனக்கும் தான்னு சொல்லிக்கொண்டே கீழே இறங்கினான்.
அவர்கள் மூவரும் அந்த சந்திப்பினால் எல்லையற்ற மகிழ்ச்சியையும் மனநிம்மதியையும் அடைந்தனர்.
ரூபனும் அனன்யாவும் அவனை கல்யாணத்திற்கு அழைக்கக் கூட யோசித்தனர். அவனும் கல்யாணத்திற்கு போவதற்கே யோசித்தான். அவர்களால் இனி ஒருபொழுதும் அந்த நட்பில் இருக்க முடியாதென மூவருமே உறுதியாக அத்தனை ஆண்டுகளும் நினைத்திருந்தனர். அவன் மேடையேறி நின்றபொழுது மூவரும் ஒரு சொல்லவெண்ணா குற்றவுணர்ச்சியை அடைந்தனர். எல்லாம் அவன் பேசும் வரையில் தான். அவன் பேசியவுடனேயே அவர்களின் அத்தனை ஈகோவும் குற்றவுணர்ச்சியும் காணாமல் போய்விட்டன. அவ்வளவுதான் மனிதர்கள்.
மீண்டும் மூவரும் பழையபடியே நெருங்கிய நண்பர்களாயினர்.
அனன்யா குற்றவுணர்ச்சியில் சரவணனை அணைத்த பொழுது கீழே அமர்ந்திருந்த விஷ்ணு அந்த குழுவில் ‘டேய் அனன்யா, சரவணன கட்டிபுடிச்சிட்டு நிக்கிறாடா’ என அனுப்பினான்.
’அன்னைக்கு பெரிய இவனாட்டம் குரூப்பவிட்டு வெளிய போனான்.இதுக்குதானா! ச்சைக்! என தருண் அனுப்பினான்.
’சரி இவ சரவணன கட்டிப்பிடிச்சுட்டு நின்னா ரூபன் அங்க என்னடா பண்றான்!’ என சிரித்துகொண்டே அனுப்பினான்.
‘அவனும் சேந்து சரவணன கட்டிப்புடிச்சுட்டு நிக்கிறாண்டா’ என விஷ்ணு அனுப்பினான்.
’ச்சீ! என்னடா சுத்த மானங்கெட்டவங்களா இருப்பாங்க போலருக்கு’ என பரணி அனுப்பினான்.
அப்போ நைட் ‘த்ரீசம்’ தான் என தருண் அனுப்பினான்.
‘வேறலெவல் டா’ என விஷ்ணு அனுப்பினான்.
‘அல்டிமேட் டா’ என பரணி அனுப்பினான்.