ஸிந்துஜா
வண்டி இன்னும் கிளம்பவில்லை. நாலேகால் என்று கைக்கடிகாரம் காண்பித்தது. நாலு மணிக்கு மைசூரை விட்டுக் கிளம்ப வேண்டிய வண்டி கிளம்பாமல் அடமாய் நின்று கொண்டிருந்தது. அந்த முதல் வகுப்பில் நான்கு பேர் என்று சார்ட் சொன்னது.உட்கார்ந்திருந்தோம். மூன்று பேர் என் வயதுக்காரர்கள்தாம். நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பது வரை. நான்காவது நபருக்கு வயது அறுபத்தி ஆறு
எங்கள் கம்பார்ட்மெண்டில் அடுத்திருந்த அடுக்குகளில் யாரோ கல்யாணப் பார்ட்டி போலிருக்கிறது. பத்திருபது பேர் இருக்கலாம். கச்சாமுச்சாவென்று சிரிப்பும் பேச்சுமாய் ஏதோ ரகளை நடந்து கொண்டிருந்தது.
எனக்கு எதிரே இருந்தவர் உட்கார்ந்த வாக்கிலேயே நல்ல உயரம் என்று தெரிந்தது. அகன்ற நெற்றி. பாந்தமான கண்ணாடி. தீர்க்கமான மூக்கு. முகத்தை இனிமையாகக் காட்டும் புன்னகை எப்போதும் உதட்டை விட்டுப் பிரிய மறுப்பது போல உட்கார்ந்திருந்தது. நான் வண்டிக்குள் வந்த போது அவர் ஒருவர்தான் வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் நட்பைத் தெரிவிக்கும் புன்னகை ஒன்றை எறிந்தார். அதை பிடித்துக் கொண்டு அவருடன் பேச ஆரம்பித்தேன்.
“என் பேர்” என்று பெயரைத் தெரிவித்தேன்.
“நான் ஸ்கந்தன்.”
“மாயவரம் போறேளா?”
“இல்லே. தஞ்சாவூர்” என்றார் அவர். “என் மாமனாருக்கு சதாபிஷேகம். ஒய்ஃப் குழந்தைகள் எல்லாரும் போன வாரமே போயிட்டா. நான் இப்ப போறேன். நாள்னிக்கு விசேஷம், நீங்க மாயவரமா?”
“இல்லேல்லே. நான் ஆடுதுறை வரைக்கும் போறேன். நீங்க இறங்கின ஒரு மணி நேரத்திலே நானும் இறங்கிடுவேன்” என்று சிரித்தேன்.
அப்போது மூன்றாமவர் வந்தார். வந்தவர் உட்கார்ந்ததும் அவரது கைபேசி ஒலித்தது. அவர்தான் அறுபத்தி ஆறு என்று நினைத்தேன். கைபேசியை எடுத்து “குட் ஈவ்னிங். ராமநாதன் ஸ்பீக்கிங்” என்றார். சில வினாடிகள் சத்தமில்லாமல் இருந்தன. “கட் ஆயிடுத்து” என்று கைபேசியை அணைத்தார்.
நான்காவது ஆளும் வந்து விட்டார்.. கன்னடக்காரர். இடையில் பஞ்சகச்சமும் மேலே சட்டையும் தலையில் டர்பனும் அணிந்திருந்தார். நெற்றியில் பளிச்சென்று திருமண். தடிமனான கண்ணாடிக்குள் கோலிப் பந்துகளைப் போலக் கண்கள் உருண்டன. புரஃபஸர் மாதிரி தென்பட்டார்.
“நான் ஸ்கந்தன். நீங்கள் எதுவரைக்கும் போகிறீர்கள்?” என்று ஸ்கந்தன் அவரிடம் பரிச்சயம் செய்து கொண்டார்.
“என் பேர் செட்லூர் வெங்கடரங்கன் பெங்களூருக்குப் போயிண்டிருக்கேன்” என்றார். “எனக்கும் கொஞ்சம் தமிழ் வரும்” என்று ஸ்பஷ்டமாக வார்த்தைகளை உச்சரித்தார்.
நான் புன்னகை செய்தேன்.
ஸ்கந்தன் அவரிடம் “அசப்பில் நீங்க மாஸ்தி மாதிரி இருக்கேள்” என்றார்.
“அவரெங்கே, நானெங்கே? போட்டுட்டு இருக்கற வேஷம் வேணும்னா அப்பிடி இருக்குன்னு நீங்க சொல்லலாம்” என்று நெற்றியையும் டர்பனையும் தொட்டுக் காட்டினார்.
மறுபடியும் கைபேசி ஒலித்தது. ராமநாதன் முகத்தில் சற்று அலுப்பைக் காட்டி “ஹலோ ராமநாதன் ஸ்பீக்கிங்” என்றார். “ஆமா, அப்போ கட்டாயிடுத்து. சொல்லுங்கோ” என்றார். மறுமுனையில் பேசிய குரல் முடிந்ததும் “ஸ்டேஷனிலேதான் இருக்கு. இன்னும் கிளம்பலே. நான்தான் அடிச்சுப் புரண்டுண்டு ஓடி வந்தேன். ஏ டூ பி லே ஒரு ஸ்ட்ராங் காப்பியானும் குடிச்சிட்டு வந்திருக்கலாம்” என்றார். மறுமுனை மறுபடியும் பேசி முடித்ததும் “ஆடுதுறைலே இறங்கினதும் போன் பண்றேன். வரட்டா” என்று கைபேசியை அணைத்தார்.
ஸ்கந்தன் சிரித்தபடி “இங்க ரெண்டு ஆடுதுறை டிக்கட்டா?” என்றார்.
ராமநாதன் அவரைக் கேள்வி தொங்கும் கண்களுடன் பார்த்தார்.
“நானும் ஆடுதுறைலேதான் இறங்கணும்” என்றேன் ராமநாதனைப் பார்த்து,
“ஓ அப்படியா? இதுக்கு மின்னாலே உங்களை நான் பாத்திருக்கேனோ?” .
“இல்லே. நான் இருக்கறது பாம்பேல. ஒரு வேலையா ஆடுதுறை போறேன். உங்களுக்கு அதான் ஊரா?” என்று கேட்டேன்.
“ஆமா. தலைமுறை தலைமுறையா அங்கதான் இருக்கோம். ஆனா எனக்கு யாதும் ஊரே. யாவரும் கேளிர்னு ஆயிடுத்து லைஃபிலே” என்றபடி சிரித்தார்.
கன்னடக்காரர் “தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே” என்று பாடினார்.
திகைப்புடன் மற்ற மூவரும் அவரைப் பார்த்தோம்.
அவர் மேலும் “அஞ்சாயிரம் வருஷத்துக்கு முன்னாலே லைஃபைப் பத்தி ஒருத்தனுக்கு என்ன தீட்சண்யம்! என்ன வேதாந்த மனசு! மெல்லிசு நூலால யானையைக் கட்டி இழுத்துண்டு போற அசாத்தியம்னா ஆளை அடிக்கிறது! பெரிய மகானாத்தான் இருக்கணும்!” என்று கண்ணாடிக்குள் பளபளக்கும் கண்களுடன் சொன்னார்.
‘நீங்களும் தீட்சண்யம்தான்! ஆளை அடிக்கிற அசாத்தியம்தான்!’ என்று அவரிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது எனக்கு.
“உங்களுக்கு எப்படி இவ்ளோ தமிழ்…?” என்று கேட்டார் ராமநாதன். “எங்களை மாதிரி மெட்ராஸ்காராளுக்குக் கூட மொத வரி மட்டுந்தானே தெரியும்!”
செட்லூர் சிரித்தபடி “எங்கம்மா சீரங்கம். சின்ன வயசிலேயே கொழந்தைக்குப் பால் போட்ற மாதிரி தமிழையும் போட்டிட்டா” என்றார்
புகை வண்டியும் மெல்ல அசைந்து நகர ஆரம்பித்தது.
ராமநாதன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு “இருபத்தி அஞ்சு நிமிஷம் லேட்டு. இதோட விட்டானே. ஆனா வழியிலே அட்ஜஸ்ட் பண்ணி மாயவரத்துக்குக் கரெக்ட் டயத்துக்குப் போயிடுவான்” என்றார். “ட்ரெயினை சரியான நேரத்துக்கு கிளப்பி சரியான நேரத்துக்குப் போக வச்சது எனக்குத் தெரிஞ்சு கடைசியா இந்திரா காந்திதான்.”
“எமெர்ஜென்ஸியோட மத்த அக்கரமங்கள்னாலே இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு நல்ல காரியங்களும் மூலேல போயிடுத்து” என்றார் ஸ்கந்தன்.
“ரொம்ப கரெக்ட்டா சொன்னேள். ஐயோ, இப்பக்கூட அதை நினைச்சாலே படபடங்கறது!” என்றார் ராமநாதன். “அன்னிக்கின்னு பாத்து நான் டெல்லிலே இருந்தேன். துர்க்மான் கேட்டுக்குப் போக வேண்டியிருந்தது. என்ன ஒரு கலவரம் அங்க! கலவரம்னா சொன்னாப் புரியாது, நேர்லே பாத்துருக்கணும். என்ன பயங்கரம்! ஜும்மா மசூதி பக்கத்து சந்து பொந்து எல்லாத்திலேயும் ஜனங்கள். எல்லார் மூஞ்சியும் ஏதோ எமன் வந்து பக்கத்துலே நிக்கற மாதிரி பேயறைஞ்சு கிடக்கு உடம்பெல்லாம் நடுங்கிண்டு பொண்களும் குழந்தைகளும் கத்தி அழறா. அன்னிக்குப் பாத்து நான் ரெண்டு டஜன் சர விளக்கு ரொம்ப சீப்பாவும் நல்லதாவும் கிடைக்குமே, வாங்கலாம்னு சாந்தினி சௌக்லேந்து நடந்து போனேன். மீனா பஜார் போய் அங்கேந்து ஜூம்மா மசூதி வரைக்கும் இருக்கற ரோடுலே சின்னச் சின்னப் பக்கத்து சந்துகள்லே இந்த விளக்குக் கடைகளைக் கொட்டி வச்சிருப்பான்கள், அப்படி ஒரு கடைக்குள் இருந்து பாத்துண்டு இருக்கறச்சேதான் தெருவிலே ஒரு சத்தம். கடைலேர்ந்து எல்லாரும் வெளியே ஓடி வந்து பார்த்தா ஒரே தலைகள்தான். ‘போலீஸ், துப்பாக்கி வச்சு சுடறாங்க, ஒடுங்க’ன்னு ஒரே சத்தம். பயந்து போய் மறுபடியும் கடைக்குள்ளே போய் ஒளிஞ்சுண்டோம். வெளியே ஒடிண்டு இருந்த கொஞ்ச ஜனம் வேறே கடைக்குளே நுழைஞ்சுடுத்து. ஒருத்தர் மேலே ஒருத்தர் மூச்சு விட்டுண்டு நின்னோம். கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் அப்படியே இருந்தோம். உயிர் மேல் ஆசைன்னா கஷ்டம் கூடக் கஷ்டமாத் தெரியறதில்லேன்னு அப்பத்தான் தெரிஞ்சது.”
“நீங்க டெல்லிலே வேலை பாத்துண்டு இருக்கேளா?” என்று நான் கேட்டேன்.
“இருந்தேன். நான் ஒரு ஜெயின் க்ரூப்பிலே சேர்ந்து அங்கயும் இங்கயுமா அலைஞ்சு திரிஞ்சு இப்ப ரிட்டையர் ஆயிட்டேன். ஆனா வடக்கு தெற்கு மேற்குன்னு எல்லா இடங்களுக்கும் போகற வேலை” என்றார்.
“யாதும் ஊரேன்னு சரியாத்தானே சொன்னீங்க” என்று செட்லூர் புன்னகை புரிந்தார்.
“உங்களுக்கு மைசூரா?” என்று கேட்டார் ஸ்கந்தன்.
“ஆமா. பொறந்து வளர்ந்தது எல்லாம் மைசூர்தான். மகாராஜா காலேஜ்லே படிச்சேன்.”
“பெரிய தலைகள் எல்லாம் படிச்ச காலேஜுன்னா அது?” என்று இடை
மறித்தார்.ஸ்கந்தன். “ஆர்.கே. நாராயண், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், குவெம்புன்னு பெரிய லிஸ்டே உண்டே!”
“ஆமா. அங்கே இந்தப் பொடித் தலையையும் சேத்துண்டாங்க” என்று சிரித்தார் செட்லுர். “எங்கப்பாவும் ஆர்.கே லட்சுமணனும் கிளாஸ்மேட்ஸ். மகாராஜா காலேஜில் படிச்சிட்டு உன்னை யாராவது மேலே படிக்கிறதுக்கோ இல்லே வேலைக்கோ ரிஜெக்ட் பண்ணினா நீ பெரிய ஆளாயிடுவேன்னு லட்சுமணன் சொல்லுவார்னு எங்கப்பா சொல்லுவார். அவருக்குப் படம் போடற திறமை இல்லேன்னு ஜே ஜே ஆர்ட் ஸ்கூல்லே அட்மிஷன் கொடுக்கலையாம். அவர் அண்ணா ஆர்.கே. நாராயணனை யூனிவர்சிட்டி எண்ட்ரன்ஸ் பரிட்சைல பெயிலாக்கிட்டாங்களாம்” என்று சிரித்தார்.
“உங்களையும் காலேஜிலே….?” என்று சிரித்தார் ராமநாதன்.
“ஆமா. பி.எஸ்சி சேர ஆசைப்பட்டேன். தரலே.பி.காம்லே சேந்து படிச்சேன். ஏ,ஜிஸ் ஆபீசிலே வேலை கிடைச்சது. ஆறு வருஷம் முன்னாலே இந்த ஊர் ஏ.ஜி.யா ரிட்டையரானேன்.”
“ஓ, உங்களை மொதல்லே பாத்ததும் நீங்க யாரோ காலேஜ் புரஃபஸர் மாதிரி எனக்கு இருந்தது! இப்ப நீங்க சொன்னதையெல்லாம் கேட்டா ஏதோ சினிமாலே வர்ற மாதிரி இருக்கு” என்றேன் நான்.
“எனக்கும்தான். நீங்க சொல்றதை வச்சுப் பார்த்தா ரெண்டு வருஷங் கழிச்சு என் பேரனையும் மகாராஜா காலேஜிலேயே சேத்து விட்டுடறது உத்தமம்னு தோணறது. அவன் ஹாஸ்டல்லே இருந்தாலும் பரவாயில்லே!” என்று சிரித்தார் ராமநாதன். மற்றவர்கள் சிரிப்பில் கலந்து கொண்டோம்.
“உங்க காலேஜுக்குப் பக்கத்திலேதான்… வாணி விலாஸ் ரோடு பக்கத்திலே ஒரு பெரிய ரைட்டர் இருந்தாரே?”என்று ராமநாதன் யோசித்தார்.
“ஆமா. குவெம்பு வீடு அங்கேதான்.”
“அதேதான். அதுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு சந்துலே டைலர் கடை ஒண்ணு இருந்தது. சையதோ சைமனோ என்னவோ பேர். ஆள் வாட்டசாட்டமா சினிமா ஸ்டார் மாதிரி இருப்பான். கோட்டு தச்சா அவன் தச்சுக் கொடுக்கற மாதிரி இருக்கணும்னு எப்பவும் கல்யாணக் கூட்டம் நிக்கும். நாலாவது மெயினோ அஞ்சாவது மெயினோ சரியா ஞாபகம் இல்லே இப்போ” என்றார்.
“எனக்குக் குவெம்பு வீடு தெரியும். இந்த டைலரை எங்கே நீங்க ஆடுதுறையிலேயும்,டெல்லியிலேயும் இருந்துண்டே கண்டு பிடிச்சீங்க?” என்று செட்லுர் ஆச்சரியப்பட்டார்.
“எனக்குப் பொண்ணு கொடுத்தவா உங்க ஊர்க்காராதான்!” என்றார் ராமநாதன். “ஆனா நான்தான் கோட்டைத் தைக்கக் கொடுத்துட்டு வந்து இந்த இடத்தைப் பத்தி என் மாமனாருக்கு சொன்னேன். அதுவரைக்கும் அவருக்கும் அதை பத்தித் தெரிஞ்சிருக்கலே.”
பேச்சு அரசியல், சினிமா, நாடகம், பத்திரிகை என்று நீண்டு கொண்டே போனது.
அடுத்த அடுக்குகளில் இருந்த கூட்டம் வந்து எழுந்து முன்னே சென்றது. ஏதோ ஸ்டேஷன் வருகிறது போலிருக்கிறது. என்று நினைத்தேன்.
“மத்தூர்” என்றார் ராமநாதன்.
“மத்தூர் வடை ரொம்ப ஃபேமஸ் ஆச்சே” என்றேன் நான்.
“ஒரு காலத்திலே” என்றார் ஸ்கந்தன். “இப்ப யாரெல்லாமோ போட்டுண்டு ட்ரெய்னுக்குள்ளே வந்து மத்தூர் வடைங்கிறான். சகிக்கலை. நூறு வருஷமா போட்டெடுத்து பேர் வாங்கினவனை நூறு நாளைக்கு முன்னாலே வந்தவன் காப்பியடிச்சு சம்பாதிக்கிறான்னா வயத்தெரிச்சலாத்தான் இருக்கு.”
“அவாதான் ஸ்டேஷனிலே இருந்ததை மூடிட்டாளே. போன தடவை கார்லே வந்தப்போ இங்க ஸ்டேஷன்லேந்து முக்கா கிலோ மீட்டர்லே மத்தூர் டிஃபானின்னு ஓட்டல் இருக்கு. அங்க ஒரிஜினல் வடை கிடைக்கிறதுன்னு யாரோ சொன்னா. அங்க போய் வாங்கிண்டு போனேன்” என்றார் ராமநாதன். “ஓட்டல்காரர்தான் அப்போ பழைய கதையை எடுத்துச் சொன்னார். நூறு வருஷத்துக்கு முந்தி பெங்களூருக்குப் நீராவி ரெயில்தானே போயிண்டிருந்தது. அப்ப தண்ணி டேங்கை ரொப்பறதுக்கு மத்தூர்லே வந்து நிக்குமாம். பக்கத்திலே ஷிம்ஷான்னு ஆறு. காவேரியோட போய் கலக்கறது அது. அதுலேர்ந்து தண்ணி பிடிச்சிண்டு வந்து டேங்க்கையெல்லாம் ரொப்புவாளாம். இந்தக் காரியம் நடந்து முடிய அரைமணி முக்கா மணி நேரமாகும். அப்ப ட்ரெய்னலே வரவா கிட்டே ஓட்டல்காரர் இட்லியும் வடையும் விக்க ஆரமிச்சார். கொஞ்ச நாள் கழிச்சு ஸ்டேஷன்லேயே மத்தூர் வடைக் கடையை ஆரமிச்சுட்டார். ஓஹோ ஓஹோன்னுதான் ரொம்ப வருஷம் ஓடிண்டு இருந்தது. ஒரு நா மூடிட்டா. ஏன் தெரியுமா? வர்ற டிரெயின் எல்லாம் ரெண்டு நிமிஷம் மூணு நிமிஷத்துக்கு மேலே நிக்கப்படாதுன்னு ரயில்வேல புதுசா உத்திரவு போட்டா, யாரெல்லாமோ ஒரு வடைத் தட்டைத் தூக்கிண்டு கம்பார்ட்மெண்டுக்குள்ளே நுழைஞ்சு மத்தூர் வடைன்னு விக்க ஆரமிச்சது, வடை விலையை பத்து ரூபான்னு ரயில்வேக்காரா ஃபிக்ஸ் பண்ணினது எல்லாத்தையும் ஓட்டல்காரர் பாத்தாறாம். போறும், ஆளை விடுங்கோன்னு மூடிப்பிட்டார்.”
எனக்கு ராமநாதனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு விஷயத்துக்குப் போனால் கூடவே அதன் உள்ளுக்குள்ளும் போய்ப் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளும் அவர் சுபாவம்!
வண்டி ஓடிக் கொண்டிருந்தது.
“இன்னும் ரெண்டு மாசம் போச்சுன்னா பெங்களூர் எக்ஸ்பிரஸ்வேலே பஸ்ஸெல்லாம் மைசூருக்கு ஒண்ணரை மணி நேரத்திலேயே போய்ச் சேந்துடுமாம். இப்ப மூணு மணி நேரம்னா ஆறது” என்றார் ஸ்கந்தன்.
“எப்பவோ வந்திருக்க வேண்டியது. கோர்ட்டு, கேசுன்னு இழுத்தடிச்சிட்டாங்க” என்றார் செட்லூர்.
“எல்லாம் பணம் செய்யற வேலை” என்றார் ராமநாதன்.
“அப்படியா? ” என்றேன் ஆச்சரியத்துடன்.
“ஆமா. எல்லாம் பாலிட்டிஷியனோட விளையாட்டுதான். எப்போ மொத மொதலா கவர்மெண்டுல இந்த பிராஜெக்ட்டை எடுத்தாங்களோ அவங்களோட அந்த முடிவுக்கு சில மாசங்களுக்கு மின்னயே பெங்களூர்லேந்து மைசூருக்கு ரோடு போற வழியை சுத்தி இருக்கற நிலத்தை யெல்லாம் பார்ட்டி ஆட்கள் வளைச்சிட்டா. ஆனா பிராஜக்ட் வரப்போ நல்ல நஷ்டஈடு கிடைக்கும்ங்கிற அவங்க நினைப்பிலதான் மண்ணு விழுந்துடுத்து. அப்புறம் என்ன, கோர்ட்டுதான், வாய்தாதான்.
எவ்வளவு வருஷம்? எல்லாம் பண ஆசைதான்.”
“பணத்தையும் அதிகாரத்தையும் வச்சுண்டு கடைசியிலே என்ன பண்ணப் போறோம்? செத்தா நாலு பேர் தூக்கிண்டு போய் மண்ணிலேதான் புதைக்கணும். இல்லே எரிச்சு மண்ணோட மண்ணா கரைக்கணும். பணம் இருக்கேன்னு பிளேன்லே போயி வானத்திலே உடம்பை அடக்கம் பண்ணிட முடியுமா?” என்று சிரித்தார் செட்லுர்.
“வாஸ்தவம். மகான்கள் சொல்லியே கேக்காதவா சாதாரண மனுஷா சொல்லியா கேக்கப் போறா?” என்றார் ராமநாதன்.
செட்லூர் எழுந்து மேலே கைப்பைகளையும் பெட்டிகளையும் வைத்திருக்கும் இடத்திலிருந்து ஒரு சிறிய சூட்கேஸை எடுத்து தான் உட்கார்ந்த இடத்தின் அருகில் வைத்துக் கொண்டார்.
“உங்க ஊர் வந்துடுத்து” என்றார் ஸ்கந்தன் சிரித்தபடி.
“பெங்களூரில் எங்க ஜாகை உங்களுக்கு?” என்று ராமநாதன் கேட்டார்.
“மல்லேஸ்வரம். அஞ்சாவது கிராஸ் கிட்டக்க” என்றார் செட்லூர்.
“அங்கதானே இந்த கீதாஞ்சலி தியேட்டர்…?”
“ஆமா. எல்லாப் பெரிய தியேட்டர்களுக்கும் கெடச்ச அந்தஸ்து அதுக்கும் கிடைச்சு மூடிட்டா. இப்போ பெரிய மால் இருக்கு அந்த இடத்திலே” என்றார் செட்லூர்.
“நானும் அங்க வந்துட்டுப் போயி ரொம்ப வருஷம் இருக்கும்” என்றார் ராமநாதன்.
“அதுக்குப் பக்கத்திலே கோகனட் அவெனியுன்னு தேங்கா மரத்தையெல்லாம் வெட்டிப் போட்டுட்டு கட்டிடமா மாத்தி விட்டுட்ட ரோடுலதான் என்னோட வீடு இருக்கு” என்றார் செட்லூர் சிரித்தபடி.
“கோகனட் அவெனியூன்னா சிதானந்தா மடத்துக்குப் பக்கத்திலேயா?” என்று கேட்டார் ராமநாதன்.
“அது எங்க இருக்கு?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் செட்லூர்.
“அஞ்சாவது கிராஸ் டவுனிலே நாலு ரோடு சேர்ற இடம்தானே நீங்க சொல்றது? அங்க ஒரு ராகவேந்திரா பேக்கரி கூட ரொம்ப ஃபேமஸா இருந்தது.”
மறுபடியும் ஆச்சரியத்துடன் செட்லூர் “அந்த பேக்கரிக்குப் ஏழெட்டு வீடு தள்ளித்தான் நானும் இருக்கேன். அந்த பேக்கரியும் தெரு பூரா வாசனை அடிச்சிண்டு இப்பவும் நிக்கறது” என்றார்.
“அந்த பேக்கரிக்குப் பக்கத்தாப்பிலே ஒரு சின்ன சந்து போகும். உள்ளே போனா ஒரு வீடு மாதிரி அந்த மடம் இருக்கு. அது இன்னும் அங்கேதான் இருக்குன்னு எனக்கு எப்படித் தெரியும்னா நான் ஒவ்வொரு வருஷமும் மடத்துக்கு பணம் அனுப்புவேன். அவாகிட்டியிருந்து ரசீது வந்துடும். மடம் உள்ளே அவ்வளவு தெய்வ சாந்நித்யம் ரொம்பி வழியற இடம். பத்துப் பேரை சேந்தாப்பிலே பாக்க முடியாது. அமைதின்னா அப்பிடி ஒரு அமைதி. அரை முழ நூலைக் கீழே போட்டா சத்தம் கேட்கும்” என்றார் உணர்ச்சி வசப்பட்ட குரலில்.
“பாருங்கோ. நான் இவ்வளவு வருஷம் இங்கே இருக்கேன். உங்க மூலமா தெரிஞ்சிண்டேன். ரொம்ப தேங்க்ஸ்” என்றார் செட்லூர்.
ஏழரை மணிக்கு வண்டி பெங்களூரை அடைந்தது. செட்லூர் எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார். சிறிது நேரம் பேசியபடி இருந்தோம். பிறகு அவரவர் கொண்டு வந்திருந்த இரவு உணவை சாப்பிட்டோம். மற்ற இருவரும் படுக்க ஆயத்தமானார்கள். நான் படுத்தபடி தலைக்கு மேலிருந்த சிறிய மின் விளக்கின் ஒளியில் கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தைப் படிக்கலானேன்.
காலையில் வண்டி தஞ்சாவூரை அடைய கால் மணி இருக்கும் போது ஸ்கந்தன் எழுந்து விட்டார். ராமநாதனும் நானும் அவர் எழுந்த சத்தத்தில் விழித்து விட்டோம். நான் பாத்ரூம் போய் விட்டுத் திரும்பியதும் ராமநாதனும் அங்கே சென்றார். அவர் திரும்பி வந்ததும் எனக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்து விட்டு “சித்த நாழில நாம இறங்க வேண்டிய இடமும் வந்துடும். ஆடுதுறையிலே நீங்க எங்கே தங்கறேள்?” என்று கேட்டார்.
“நான் அங்க ஒரு டாக்டரைப் பாக்கப் போறேன். பாத்துட்டு சாயங்காலம் திருச்சிக்குப் போயிடுவேன்” என்றேன்.
“பாம்பேலேந்து ஆடுதுறைக்கு டாக்டரைத் தேடிண்டு வந்திருக்கேளா?” என்று சிரித்தார். “கேக்கவே ஆச்சரியமா இருக்கே? பேரென்ன?”
“டாக்டர் லயோலான்னு”
“கேட்ட பேராவே இல்லையே. எங்க இருக்கு அவரோட கிளினிக்?” என்று கேட்டார் ராமநாதன்.
நான் அவரிடம் விவரத்தைச் சொன்னேன். அவர் பேசாமலிருந்தார். ‘ஏதோ கத்துக்குட்டி டாக்டர்’ என்ற நினைப்பு அவர் முகத்தில் படர்ந்திருந்த அலட்சியத்தில் தெரிந்தது. “உங்களுக்கு நிச்சயம் தெரியுமா அவர்ஆடுதுறையிலதான் இருக்கார்னு? நானும் இந்த ஊர்க்காரன்தான். ஆனா கேட்ட பேராவோ பாத்த இடமாவோ இல்லையே” என்றார்.
“நான் தேடிப் பாத்துக்கறேன்” என்றேன் நான்.
ரயில் ஆடுதுறையில் நின்ற போது இறங்கினோம். குளிர்ந்த காற்றின் ஸ்பரிசம் பட்டு உடம்பு ஒரு முறை சிலிர்த்தது.
“எவ்வளவு நீள பிளாட்ஃபார்ம் !” என்று வாய் விட்டுச் சொன்னேன். அவ்வளவு சிறிய ஊருக்கு, அதிகம் பேர் பிரயாணம் செய்யாத இடத்திற்கு இவ்வளவு விசாலமாக நீளமாகக் கட்டி விட்டிருந்த புண்ணியவானை நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே அவருடன் நடந்தேன். ஸ்டேஷனுக்கு வெளியே வந்ததும் இரண்டு ரிக் ஷாக்கள் எங்களைத் தேடி வந்தன. அவர் தன்னுடைய பெட்டியை ஒன்றில் வைத்து விட்டு இன்னொரு ரிக் ஷாக்காரனிடம் “சார் போகற இடத்தை விஜாரிச்சுக் கூட்டிண்டு போறியா? என்று கேட்டார். அவன் தலையாட்டினான். அவர் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு ரிக் ஸாவில் ஏறிக் கொண்டார்.
நானும் ரிக் ஷாவில் ஏறிக் கொண்டேன். போக வேண்டிய விலாசத்தைச் சொன்னேன்.
“நம்ம பச்சிலை வைத்தியருங்களா?” என்றான். நான் வியப்புடன் தலையாட்டினேன்.
“சாமி, அது இங்கேர்ந்து நாலு மைலு இருக்கும். ஏதாச்சும் கூட போட்டுக் குடுங்க” என்றான்.
“சரி தரேன். நீ போ” என்றேன்.
அவன் ரிக் ஷாவை மிதித்து ஒட்டிக் கொண்டு சென்றான்.
“நான் சொன்னவுடனேயே நீ அவரான்னு கேட்டுட்டியே. இங்க அவரை எல்லாருக்கும் தெரியுமா?” என்று அவனிடம் கேட்டேன்.
“பின்னே? இந்த ஊர்க்காரங்க வைத்தியத்துக்குஅவருகிட்ட போறதை விடுங்க. தெக்கே தூத்துக்குடி, கன்யாகுமரி, வடக்கே தில்லி காசுமீரு கிழக்கே கல்கத்தான்னு வெளியூருலேந்து எம்புட்டு சனம் வந்து போயிட்டு இருக்கு. போன வருசம் ஒரு சாயபு துபாயிலேந்து குடும்பத்தோட மருந்து வேணும்னு வந்தாங்கன்னா பாத்துக்கோங்க” என்றான் ரிக் ஷாக்காரன்.
அவன் வைத்தியரின் வீட்டுக்கு இருபது நிமிஷத்தில் கொண்டு போய் விட்டு விட்டான். பணத்தை அவனுக்கு கொடுத்த போது எனக்கு ராமநாதனின் நினைவு வந்து போயிற்று.