ஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்

கடலூர் சீனு

கப்பலில் பணிபுரியும் நண்பர் அழைத்திருந்தார். புவியில் நான் நிற்கும் நிலப்பரப்பின் நேர் பின்பக்கம், எங்கோ கடல்பகுதியில் மிதந்து கொண்டிருந்தார். இயல்பாக அ. முத்துலிங்கம் கட்டுரைத் தொகுதியின் தலைப்பை சொன்னேன். “அங்கே இப்போ என்ன நேரம்?” எனக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட எட்டு மணிநேர வித்தியாசம். அவருக்கு தற்போதுதான் விடிந்திருந்தது. எனக்கு மதியத்தை கடந்திருந்தது. வியப்பை சொன்னேன். நண்பர் கொட்டாவி விட்டபடி, அதுக்கு என்ன இப்போ, என்றார். இந்த நிமிடத்தில் நின்று என்னைக் கடந்து போய்விட்ட எட்டாவது மணி நேரத்தை ஊடுருவி நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த நிமிடத்தில் நின்று அவருக்கு இனிமேல்தான் வரப்போகிற எட்டாவது மணி நேரத்தை ஊடுருவி அவர் பேசி க்கொண்டிருக்கிறார். அவர், அதுக்கு என்னா இப்போ, என்று கடந்த விஷயம், எனக்கு என் குரலை மட்டும், மொபைல் என்ற காலப்பயண எந்திரத்தில் ஏற்றி அனுப்பி வைத்ததைப் போல பரவசமாக இருந்தது.

பகுத்து அடுக்கும் அனைத்து ஆய்வுகளுக்கும் அப்பால் காலம், லஸ்காக்ஸ் குகை ஓவியங்கள் போல ஒன்றன் மேல் ஒன்றெனப் படிந்திருப்பதாக அன்று மயக்கமெழுந்தது. அந்த குகை ஓவியங்கள் பதினையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலம் வரை, ஒன்றன் மீது ஒன்றென, அடுத்தடுத்த தலைமுறை மூதாதை மனிதர்களால் வரையப்பட்டவை. பொதுப் புழக்கத்துக்கு அல்லாத தனிமையான வழிபாட்டுத் தலம் என காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் குகை. இதே போல உலகின் வேறு பல குகை ஓவியங்களில் ஊகித்து அறிய சிரமம் அளிக்கும் ஓவியங்கள் பல அந்த ஓவியன் தனது கனவில் கண்டடைந்ததாக இருக்கும். அந்தக்கால மனிதனுக்கு கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையே ஆன வேறுபாட்டுக் கோடு அவ்வளவு துல்லியமான ஒன்றல்ல என்கிறது குகை ஓவியங்கள் மீதான ஆய்வு ஒன்று.

காலம், பருண்ம உலகு, நனவு, கனவு, இவை ஒவ்வொன்றிலும் அதன் அலகுகளுக்கு இடையே, துல்லியமாக வேறுபடுத்தும் கோடு ஒன்றினை அறிவியலின் அனைத்து புலங்களும் வளர்த்தெடுக்க முயன்று, நரம்பியலும் குவாண்டம் பிஸிக்சும் கொண்டு அப்படி ஒரு துல்லியக் கோடு சாத்தியம்தானா எனும் நிலைக்கு வந்து நிற்க, கலைவரலாற்றில் பின்நவீனத்துவ அழகியல் வழியே இதே இடத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழ்ப் புனைவுகளில் நவீனத்துவத்துக்குப் பிறகான இந்த பார்வையை, அழகியலை, கொண்டு கலாபூர்வமான உயரத்தை அடைந்த புனைவுகளில் யுவன் சந்திரசேகர் புனைவுகளுக்கு- அதிலிருக்கும் ”கதைசொல்லி” தன்மைக்காவும் அதில் துலங்கி வரும் ஆத்மீக நோக்குக்காவும்- தனி இடம் உண்டு.

யுவன் சந்திரசேகரின் நாவல், ‘ஊர் சுற்றி’. இதிலும் யுவனின் தனித்துவமான, கதைசொல்லி பாணியும் ஆத்மீக நோக்கும், வேறுபட்ட கதைக் களங்கள், காலங்கள், கதைகள், கூறுமுறைகள், வழியே புதிய பரிமாணம் ஒன்றினை நோக்கி பயணிக்கின்றன. திரைத்துறையில் பணிபுரியும் கமலக்கண்ணன். பத்து வருடங்களுக்கு முன்பு,படப்பிடிப்புக்காக சென்ற கிராமத்தில் அவன் சந்தித்த சீதாபதிக் கிழவர் சொன்ன கதைகளை தனது கருவியில் பதிந்து வைத்திருக்கிறான். குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கதைகளை தொகுத்து நூலாக மாற்ற எண்ணுகிறான். சீதாபதிக் கிழவரின் மீதான நினைவுகளாகவும், அவர் ”சொன்ன ” வாழ்க்கைச் சம்பவங்கள், கதைகள், கேட்டுச் சொன்ன கதைகள், இவற்றின் ”எழுத்து ”வடிவமாகவும், மந்திரவாதி இளவரசி கதைகள், நாட்டுப்புறக் கதைகள் போல பல்வேறு வடிவ கதைகளின் தொகையாகவும் அ-நேர்க்கோட்டு கூறுமுறையில் வடிவமற்ற வடிவம் கொள்ளும் நாவல்.

தாய் தந்தையரின் அகால மரணத்துக்குப்பின் அந்த கிராமத்தில் இருக்க இயலாது [1936-ல் என துல்லியமான கணக்குடன் துவங்குகிறது நாவல்] இலக்கின்றி தனது பதினாறாவது வயதில் தேசாந்திரியாக வெளியேறுகிறான் சீதாபதி. எண்பதுகளைக் கடந்த வயதில் தனது இறுதிக்காலத்தை தான் பிறந்த கிராமத்திலேயே கழிக்க எண்ணி ஊர் திரும்புகிறார் சீதாபதிக் கிழவர். அந்த கிராமத்துக்கு படப்பிடிப்பு காரணமாக வந்து சேரும் கமலக்கண்ணன், தனது இயக்குநருக்காக ”கதை பிடிக்கும் ” உந்துதலில் நிறைய கதைகளை வைத்திருக்கும் சீதாபதிக் கிழவரை சந்தித்து நட்பு கொள்கிறான். சீதாபதி கதைகள் சொல்கிறார். தனது வாழ்க்கைக் கதை, பயணக் கதை, ஆண்கள் கதைகள், பெண்கள் கதைகள், குழந்தைகள் கதைகள், உறவுகளின் கதைகள், பிரிவுகளின் கதைகள், நட்பின், துரோகத்தின் கதைகள், பசியின், காமத்தின் கதைகள், வாழ்க்கைகளின், மரணத்தின் கதைகள், அனைத்தாலும் ஆட்டுவிக்கப்படும் மனிதர்கள் கதைகள், கதைகளாக எஞ்சி நிற்கும் வாழ்க்கைகளின் கதைகள், வாழ்க்கையாக விரிக்கத்தக்க கதைகளாக எஞ்சும் கதைகள். கிராமத்தில், இந்தியாவின் வெவ்வேறு நிலங்களில், வைத்தியர்களுடன், சாமியார்களுடன், வேலை தரும் முதலாளிகளுடன், லம்பாடிகளுடன், பொம்மலாட்ட நாடோடிகளுடன், மும்பை டப்பாவாலா தொழிலாளிகளுடன், அணைக்கட்டு தொழிலார்களுடன், என விதவிதமான வேலைகளுடன், பசி, காமம், தனிமை, பயம், மரணம் என அடிப்படை உணர்சிகளுடன் அலைக்கழிந்து, ஊர் சுற்றி முடித்து தனது அந்திமகாலத்தில் சொந்த கிராமம் வந்து சேரும் சீதாபதி காணும் வாழ்க்கைகள் எல்லாம் அவருக்குள் கதையாக மாறுகின்றன. ஒரு எல்லைக்கு மேல் காலம் கனவு போதமகூட அழிந்து அவருக்கு நிகழ்ந்தது எல்லாமே கதையாகிறது. விதவிதமான மானுடத் தருணங்களை உள்ளடக்கிய கதைகளாகிறது.

சீதாபதியின் பெண் நாட்டக் கதைகள் குறித்து கமலக்கண்ணன் விமர்சிக்கும்போது, எல்லாம் எம்ஜியார் படம் மாதிரி இருக்கு, எல்லா பெண்ணும் சீதாபதியை தானா தேடி வராங்க, அவர் யாரையும் தேடிப் போறதில்லை, என்கிறான். கதைகள் வழியே பெண்கள் சார்ந்து துலங்கும் சீதாபதி ஆளுமை மீது இது கமலக்கண்ணனின் பார்வை. சீதாபதி தனது தந்தை குறித்த கதைகளைச் சொல்கிறார். மர்மமான தினங்களுக்குப் பின் அவர் தந்தை காமாந்தகன் ஆகிறார். தராதரம் இன்றி பெண் பித்தாக அலைகிறார். அவரது கொலைக்குப் பிறகே சீதாபதி கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். அப்பா கொலை செய்யப்பட விதத்தை அவன் காணும் வயது முக்கியம். பதினாறு வயது. பாலுறுப்பு துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அப்பாவின் பிணம். இங்கே துவங்கும் சீதாபதியின் ஓட்டம், அவராக பெண் விஷயத்தில் ‘அத்து மீறும் ‘ நிலை ஏன் நிகழவில்லை என்பதைச் சொல்லிவிடுகிறது. பீகாரில் அவரை எடுத்துக்கொள்ளும் பெண் துவங்கி, காட்டுக்குள் அவரை எடுத்துக்கொள்ளும் நிர்வாணப் பெண் வரை, அவர் ஒப்புக் கொடுப்பவராக மட்டுமே இருக்கிறார். அணைக்கட்டு தொழிலாளியாக இருக்கும்போது வலிய வரும் பெண்ணையும் அவர் புறக்கணிக்கும் பின்புலமும் இதுதான். வீடு புகுந்து பெண்ணை சூறையாடிய ஜமீன் மகன், ஊராரால் அடித்தே கொல்லப்படுவதைப் பார்த்தவர், குறி இழந்த தகப்பனின் நிர்வாண உடலைக் கண்டவர், இதைத் தவிர வேறு என்ன செய்வார் ?

சீதாபதி, அவரது அப்பா துவங்கி இறுதிக்கால வெங்கிட்டு கிழவர் எனும் நண்பர் வரை விதவிதமான ஆண்கள், விதவிதமான குணாதிசயங்கள். ஒழுக்கம் தவறும் ஆண்கள், துரோகம் செய்யும் ஆண்கள், பெண் பித்தேறித் திரியும் ஆண்கள், முதுமையிலும் வாத்சல்யத்துடன் காதல் குறையாமல் குடும்பம் நடத்தும் ஆண்கள், ஆண்மையற்ற ஆண்கள், புணர்ந்து புணர்ந்தே உயிரின் இறுதித் துடிப்பில் நின்று உயிர் விடக் காத்திருக்கும் ஆண்கள், தனது மாட்டை தரைமட்ட விலைக்கு கேட்டவனையும், அத்தகையதொரு அவமதிப்புக்கு தன்னை ஆளாக்கிய தனது காளையையும் ஒன்றாக வெட்டித் தள்ளிவிட்டு போலீசில் சரணடையும் ஆண், மனைவி ஒழுக்கமற்றவள் என அறிந்தும் அவள் மேல் சற்றும் பிரியம் குறையாத ஆண், நித்ய இளமையில் பெண்ணை உறையவைத்து தினம் இரவு அவளைச் சுகிக்கும் ஆண், என சீதாபதி சொல்லும் கதைகள் வழியே விதவிதமான ஆண்கள் மற்றும் ஆண்மை எனும் கருத்துருவை, சொல்லப்பட்ட கதைகள் வழியே, எல்லாம் கதைதானே எனும் மிதமான பாவனை வழியே, அதன் தீவிரத்தை அணுகிப் பார்க்கிறது நாவல்.

கணவனின் நிலைபிறழ்வால் மனம் கசந்து தற்கொலை செய்து கொள்ளும் சீதாபதியின் அம்மா துவங்கி, கணவனை பழிவாங்க தாசியாக மாறும் மிருதுளா தொடர்ந்து, கொள்ளைக்காரனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு,கொள்ளைக்காரனை தருமவானாகவும் நல்ல இல்லறத்தானாகவும் மாற்றி நிறைவாழ்வு வாழும் வசுந்தரா வரை கதைகளுக்குள் விதவிதமான பெண் நிலைகள் துலங்கி வருகிறது. சீதாபதியை விரும்பும் நாடோடிப் பெண் லத்திகா, காதலனால் ஏமாற்றம் அடைந்து குடும்பத்தை உதறி தேசாந்திரி ஆகும் பெண், இறுதிக்காலத்தில் சீதாபதிக்கு தோழியாக அமையும் பால்ய கால நட்புக் கிழவி, தாசி இல்லம் நடத்தும் பெண், அந்த இல்லத்தில் இருக்கும், அந்த தொழிலுக்கு வந்து சேர்ந்த பெண்கள், சர்க்கஸ் கம்பனி பெண், மந்திரவாதியால் சிறை எடுக்கப்பட்ட பெண், சிலை என மாற்றப்பட்ட பெண், காமத்தைச் சுகிக்க கிளியாக மாற்றப்பட்ட பெண், என பெண்களால் அவர்களின் அலைக்கழிப்புகளால் கொட்டி நிறைக்கப்பட்ட கதைகள். குழந்தைகள். கொள்ளை நோய் கொண்டு சாகும் குழந்தைகள், பிரசவத்தில் சாகும் குழந்தை, பஞ்சத்தில் உணவுக்கு அடித்துக் கொள்ளும் குழந்தைகள், அன்னை மடி கிடந்த முலை அருந்தும் அமைதியில் லயித்த குழந்தைகள், முயல், பாம்பு,கிளி என சக ஜீவன்கள் அடங்கிய கதைகளின் உலகம். கதைகளாக சிதறுண்ட உலகம்.

‘என்னை கொசு கடிச்சா உனக்கு வலிக்குமா? அப்டித்தான் நான் சொல்லும் கதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சில கதைகள் கொஞ்சம் தொண்டை கரகரக்க வெச்சி கண்ணை கலங்க வைக்கும். அது அவ்ளோதான், அதுக்கு மேல அதுல ஒண்ணும் இல்லை”. தான் சொல்லும் கதைகளை உம் கொட்டி கேட்கச் சொல்லும் சீதாபதி, தனது கதைகளை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கமலக்கண்ணனுக்கு சொல்லி விடுகிறார். அப்படி விவேகத்துடன் கேட்டாலும் கூட, அதைக் கடந்து உணர்வெழுச்சி கொள்ள வைக்கும் பல சித்திரங்கள் நாவலுக்குள் உண்டு.குறிப்பாக இரண்டு சித்திரங்கள், தற்கொலை மனநிலையில் இருந்த தனக்கு வாழ்வை நோக்கி திரும்பும் சாத்தியங்களை திறந்து காட்டிய தாசியை நடுச்சாலையில் மனைவியுடன் காலில் விழுந்து ஆசி வாங்கும் இளைஞனின் சித்திரம். இரண்டாவது பார் விளையாட்டில், பற்ற வந்த கரங்களை விடுத்து, அப்படியே பறந்து வானில் ஏறி மறைந்துவிடும் சர்க்கஸ் பெண் அம்மணியின் சித்திரம்.

காமம், தனிமை, வாழ்க்கை, ஆத்மீகம் என இலக்கியம் பரிசீலிக்கும் அடிப்படைக் கேள்விகளை, அப்படி மையம் கொண்ட கேள்வி என ஒன்றில்லை என்ற பாவனையுடன் அணுகி பரிசீலித்துப் பார்க்க முனைகிறது நாவல். பெண் கொண்ட காமம் ஏன் இவ்வாறு இருக்கிறது என்றொரு வினா இந்த நாவலின் கதைகள் வழியே தோன்றி வந்தால் அதற்கான பதிலை, காட்டுக்குள் வாழும் அந்த நிர்வாணக் குடும்பத்தின் கதைக்குள் வைத்து வினாவை பரிசீலித்துப் பார்க்கிறது நாவல். இப்படி இந்த நாவலின் கதைகளுக்குள் மையமற்ற ஒன்று போலும் சித்தரிக்கப்படும் ஒவ்வொன்றும் அதற்கான வினாக்களை இந்த கதைச் சிதறல்களில் எங்கெங்கோ பொதிந்து வைத்திருக்கிறது. ஒட்டுமொத்த வாழ்வு சார்ந்த வினாக்களையும் அவற்றின் மீதான பரிசீலனைகளையும் கதைகளை கலைத்துப் போட்டு விளையாடுவதன் வழியே, முதுமையின் கண் கொண்டு இந்த வாழ்வு சார்ந்து துலங்கி வரும் ஒட்டுமொத்தமும் விலகலும் கனிவும் கொண்ட பார்வையை, வாசகனுக்குக் கையளிக்க முனைகிறது இந்த நாவல்.

முற்றிய போக்குவரத்து நெரிசலில் எது குறித்தும் கவலை இன்றி, தனது மழலைக்கு முலையளித்தபடி லயித்து கிடக்கிறாள் ஒரு தாய். அக்காட்சியில் உறைந்து போகிறார் சீதாபதி. மும்பையில் அவரது வாழ்வு அந்த நொடி முடிவுக்கு வந்து தனது தேசாந்திரத்தை தொடர்கிறார். சீதாபதி போலவே அன்னையின் மரணத்தால் மனமுடைந்து, ஆத்மீக அலைக்கழிப்பில் இருந்த சாமியாரைச் சேருகிறார் சீதாபதி. அந்த சாமியார் அவரது அலைக்கழிப்பில் இருந்து இந்த சித்திரம் வழியேதான் மீளுகிறார். சீதாபதிக்கு காட்சியாக அந்த சித்திரம் எதை அளித்ததோ, அது அந்த சாமியாருக்கு தரிசனமாக மாறுகிறது, பூவில் அமரும் வண்டு துவங்கி, அந்திச் சூரியன் வரை அவரைச் சூழ இருக்கும் அனைத்தும் அன்னை மடியில் கிடந்து, அமுதருந்துவதில் லயித்து கிடக்கும் குழந்தையாக, இந்தப் புவி மொத்தமும் அன்னை மடியாக அவருக்கு தரிசனம் அளிக்கிறது.

பதின்பருவத்தில் வீட்டை விட்டு ஓடிய சீதாபதி முதியவராக கிராமம் திரும்புகிறார். மந்திரவாதி கதையில் வரும் இளவரசி, மந்திரவாதியின் பிடி நீங்கியதும் அதுவரை அவள் கொண்ட இளமை நீங்கி தொண்டுக் கிழவியாக காட்சி தருகிறாள். சீதாபதியின் நிலைக்கும் இந்தக் கதைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? ஊரெல்லாம் சுற்றிவிட்டு வருகிறார் சீதாபதி. ஊர் விட்டு எங்கும் போகாதவராக இருக்கிறார் வெங்கிட்டு கிழவர். இந்த இளவரசி கதையை வெங்கிட்டுவாக இருந்து கேட்டால் எழுபது வருடம் கழித்து அவர் சீதாபதியை சந்திக்கும் தருணத்தின் அபத்தம் புரியும். இப்படி கலைந்து கிடக்கும் இந்தக் கதைகளை தொடுத்துக்கொள்ளும் புள்ளிகளும் இந்த நாவலின் கதைகளுக்குள் கலைந்தே கிடப்பதே, முன் பின்னாக கற்பனை ஓடி, இவற்றை தொகுத்து அடைவதே இந்த நாவல் தரும் முதன்மை வாசிப்பின்பம்.

நாவலுக்குள் ‘வக்கணையாக ‘ எழுந்து ஒலிக்கும் சீதாபதி கிழவரின் மதுரை பேச்சு வழக்கு இந்த நாவலின் வாசிப்பு சுவாரஸ்யத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அடுத்ததாக அவரது வர்ணனைகள். மெதுவாகப் போகும் பேசின்ஜர் புகைவண்டியின் வேகத்தை இப்படி விமர்சிக்கிறார்- ”தான் போய்ச்சேரப் போற ஊர் இருக்குற உலகம் பிறக்கரத்துக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கு அப்புறம் என்ன” எனும் வேகத்தில் போகிறது புகைவண்டி. அடுத்ததாக மழையில் கரைந்து மறையும் உடல், சதுரமான யானை, தலையில் சுடருடன் எண்ணைக் கடலுக்குள் இறங்கும் மனிதன் என புத்தம் புதிதான,கனவுகளை கிளர்த்தும் படிமங்கள். இவற்றைப் போல பல நாவலின் பலம் எனில், நாவலின் பலவீனம் [அதைப் பூசி மெழுகும் அத்தனை கூறுகளும் நாவலுக்குள் வெற்றிகரமாக தொழில்பட்ட போதிலும்] இதில் மிக குறைவாக, அல்லது இல்லவே இல்லாத நிலக் காட்சிகள். சீதாபதியை தவிர்த்து கமலக்கண்ணன் வாசகருக்கு சொல்லும் கிராமச் சித்தரிப்பு கூட குறைவாகவே இருக்கிறது. குன்று, அதன் மேல் கோவில், ஊர் முடிவில் ஜமீன் பங்களா, கிராமச் சாலை, பிரதான சாலையுடன் நிகழ்த்தும் சந்திப்பு இவை தாண்டி கிராமம் எனும் சித்தரிப்பில் மேலதிகமாக எதுவுமே இல்லை. வருடத்தில் ஆறு மாதமும் தண்ணி ஓடும் அந்த மதுரை, சோழவந்தான் பக்கத்து தெக்கத்திகிராம வாய்க்காவுக்கு அதன் தண்ணிக்கு மூலம் எது?- வாசகனுக்கு தேவை இல்லை எனக் கருதி கமலக்கண்ணன் விட்டுவிட்டான் என வைத்துக்கொண்டாலும். கிழவர் பாரதம் முழுதும் சுற்றியவர் அவர் சொல்லும் கதைகளில்கூட நிலம் சார்ந்த தனித்தன்மை கொண்ட காட்சிகள் என எதுவும் இல்லை.

நிலக்காட்சி சார்ந்த சித்தரிப்பு இன்மையின் காரணமாக நிகழும் பிரதான பலவீனம் இந்த நாவலின் ஆத்மீக நோக்கை, அது வெளிப்படும் விதத்தை பலவீனப்படுத்திவிடுகிறது என்பதே. இந்த நாவலில் சித்திரிக்கப்படும் ஆத்மீக நிலை அல்லது வியக்தியை ஒரு புரிதலுக்காக பௌத்தத்தின் [அதாவது மதத்துடன் தொடர்பற்ற] சென் நிலை என வகுக்கலாம். நிறுவனமயப்பட்ட ஒன்றின் பிரதிநிதியாக இங்கே சைவ துரையை துரத்தும் நாகா பாபாவும், பௌத்தனும் வருகிறார்கள். நேரெதிராக சீதாபதி சத்திரத்தில் சந்திக்கும் பைராகி இந்த நிறுவனத்துக்கு வெளியில் உள்ளவர். அதாவது மெய்மையை அறிந்தவர். அவர் பசி காமம் என அடிப்படை விசைகளான இவை மட்டுமே கொண்டு, அதற்கு மேலான அனைத்தும் கற்பிதமே என்று இந்த உடலை தூய விலங்காக பார்க்கிறார். இதற்கு மேலான அனைத்தும் கற்பிதமே என்பதற்கு, ஆளுமை ஆளுமையாக மாறி அவரது குரு விளையாடிப் பார்த்த பாவனை விளையாட்டை குறிப்பிடுகிறார்.[சென் குருமார்களின் கதை போல ] இரவில் ஒளிர்கிறார். சென்றபிறகு அவர் அமர்ந்திருந்த திண்ணையில் வாழைப்பூ அளவு பெரிய மல்லிகைப்பூ இருக்கிறது. அந்த திண்ணையில் அமர்ந்து சீதாபதி இயற்கையுடன் கரைகிறான். ஏகாந்தம் என்பதை உணர்ந்து அந்த நொடி முதல் தனிமைத் துயரை இழக்கிறான்.

அகம் சார்ந்த நிலைபேறு எப்போதும் புறம் சார்ந்த ஒன்றால் ஒரு நாணயத்தின் இரு பகுதி போல சமன் செய்யப்பட்டிருக்கும். சாமியார், பால் கொடுக்கும் அம்மாவில் இருந்து அகவயமாக அடைந்த ஒன்று, புறத்தில் அவர் காணும் யாவும் அன்னை தரிசனம் என மாறுவது, என அதன் நிலை இந்த நாவலுக்குள்ளேயே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சீதாபதி அகம் கொள்ளும் படிமங்கள் [சதுர யானை, சுடர் எரியும் தலையுடன் எண்ணைக் கடலில் இறங்குவது,மழையில் உடலே கரைந்து வெறும் வியக்தியாக எஞ்சுவது] அந்தரத்தில் இருந்து அவருக்குள் விழுந்து கவிந்தது போலவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறாகவே எஞ்சுகிறது. அக உணர்வாக இயற்கையில் கரைந்து அழியும் சீதாபதி, நாவலுக்குள் எங்குமே புறவயமாக இயற்கையில் தோய்ந்து லயிக்கும் சித்திரங்களே நாவலுக்குள் இல்லை. காரணமாக அந்த வியக்தி நிலை ஒரு நிலைமாற்றம் என வாசிப்பில் உள்வாங்கப்படாமல் ஒரு கவித்துவ அனுபவமாகவே உள்வாங்கப்படுகிறது. சீதாபதி கொண்ட இந்த நிலை மாற்றம் ”அந்தரத்தில்” நிகழ்வதால் இறுதியாக அவர் கமலக்கண்ணன் வசம் இந்த வாழ்வு குறித்தும், வாழ்ந்துவிட்டுப் போகும் விதம் குறித்தும் சொல்லும்போது, பல விஷயங்கள் கண்டு, கடந்து, வாழ்ந்து முடித்த கிழவன் சொல்லும் விவேக ஞானம் கொண்ட’ கூற்றாக’ ஒலிக்காமல், சீதாபதி சொல்லும் மற்றொரு அபிப்ராயம் போலவே நின்றுவிடுகிறது.

ஒருமுறை பழுதுநீக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த தேர் ஒன்றின் [சக்கரத்தின் அச்சு மையம் ஐந்து அடி உயரத்தில்], முன் பின் சக்கரங்களுக்கு இடையே உள்ள நான்கடி அகல இடைவெளியில் நின்றுதேரின் அடித்தட்டை அண்ணாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கணம் பெண் ஒருவளின் தொடைகளுக்கு இடையே சிறுத்த உருவம் கொண்டு நின்று, அவளது பிரும்மாண்டமான இடைக்கரவை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதாக தோன்றி, சிலிர்ப்போடும் வெட்கத்தோடும் பார்வை நகர்ந்த கணம், அடித்தட்டில் இடுக்கிலிருந்த, கண்மறைவாய் செதுக்கப்பட்டிருந்த அந்த மரச்சிற்பம் கண்ணில் பட்டது. வளைந்த வில்லாக தலைகீழாக நிற்கிறாள் பெண்.அவள் பின்னால் அந்த வில்லின் நாண் என நிற்கிறான் ஆண். கலவி. [விசித்திர கோணத்தில் நிகழும் அந்தக் கலவியை நிஜத்தில் முயன்றால், உச்சம் நிகழ்ந்ததும் பாடையை எண்கோண வடிவில் அமைக்கவேண்டிவரும்]. அந்தச் சிற்பத்தின் உன்மத்தத்தை சமன்வயப்ப்படுத்தும் ஒன்றாக மாற்றிக் கொண்டிருந்தது, தலைகீழாக வளைந்து நிற்கும் அந்தப் பெண் முன் தவழும் நிலையில் அமர்ந்து, அவளிடம் முலையமுதம் அருந்தும் அவளது மழலை.

பாரத நிலம் முழுதும் பரவி ஆட்கொண்ட சிற்பத் தொகைகளில் எங்கும் சேராத, பெரும்பாலும் கண்ணிலேயே படாத, உன்மத்தம் கிளர்த்தும், என்றோ கண்ட அந்தச் சிற்பத்தின்,அது கிளர்த்திய உணர்வு நிலைக்கு, முகம் அளித்தது இந்த ‘ஊர் சுற்றி’ நாவல். காட்டுக்குள் தனது மழலைக்கு முலையளித்தபடியே சீதாபதியுடன் கலவி கொள்ளும் பெண்ணுக்கு, அந்த நாவலில் வரும் பெரும்பாலான பெண்களைப் போலவே பெயர் இல்லை. லஸ்காக்ஸ் குகைக்குள் பதினைந்தாயிரம் வருடங்களுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்களில், ஒரே ஒரு மனித உருவம் உண்டு. அது பெண். வணங்கப்பட்டவளோ, அல்லது வதைக்கப்பட்டவளோ, அவள் பெயர் என்ன என்பது தெரியாது. அந்த குகைப்பெண்ணில் துவங்கி இந்த நாவலின் வனப் பெண் தொடர்ந்து, சீதாபதியின் அந்திமக்கால கிழத் தோழி வரை ஒரு கோடு இழுத்துவிட முடியும். அப்படித் தோன்ற வைப்பதே இந்த நாவலின் உத்தேசம். அந்தக் கோட்டை வாசக மனம் போட முயல்கையில், அதை எவ்வளவு தூரம் அழித்து விளையாட முடியுமோ அவ்வளவு தூரம் அழித்து விளையாடுகிறது இந்த நாவல். இதன் அழகு.

ஊர் சுற்றி -யுவன் சந்திரசேகர் -காலச்சுவடு பதிப்பகம்.

2 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.