‘சங்கு முகம் ஆடி சாயாவனம் பார்த்து
முக்குளமும் ஆடி முத்தி பெற வந்தானோ!
திங்கள் முகம் காட்டி சின்ன உதட்டால் முலைப் பற்றி
பாலும் வழிந்தோட பாலகனாய் வந்தானோ!’
சரவணனும் ரமணனும் படுத்திருந்த திண்ணையில் காற்றில் மிதந்து வந்த இந்தப் பாடல் இளக்கி இளக்கி சரவணனை உள்ளே அழ வைத்தது; ரமணனுக்கோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருவெண்காடு, ஸ்வேதாரண்யம் எப்படிச் சொன்னாலும் உவக்கும் பெயர். பழுப்பும் வெளுப்புமான பெரும் மணல் வெளி தேடி அவர்கள் அந்த ஊரில் காலை முதல் அலைந்து ஒரு மாதிரி கண்டு பிடித்து விட்டார்கள். ஏறக்குறைய செவ்வக வடிவிலான மைதானம்; தென் கிழக்கு மூலையில் சேவல் கொண்டைப்பூக்கள், வானின் வர்ணத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருந்தன. சங்குக் கொடிகளும், தும்பைச் செடிகளுமாக யாரோ ஒருவர் எழுதி வைத்த ஓவியம் போல் அந்த மூலையில் மட்டும் காட்சிச் சித்திரங்கள். மீதி மைதானம் முழுதும் மணல்-அதிகம் வெண்மையும், சிறிது பழுப்பும் கலந்த மண்.
மேற்கூரையற்ற திண்ணை, சற்றே சிதிலமடைந்திருந்தாலும் படுத்துக் கொள்வதற்கு வாகாக இருந்தது. வளர் நிலவின் பதினாலாவது நாளிலேயே முழுமை காட்டும் நிலவு. பூரித்து பொங்கி வழியும் பால் நனைக்கும் நிலம். எதிரே உள்ள மைதானத்தில் பரவியிருந்த மணல் நிரை தன் மீது படரும் வெள்ளொளியில், இடையிடையே காணப்படும் சிறு கற்களின் துகள்களில் பல நிற மணிகள் பதித்த வெள்ளியாபரணமெனத் துலங்கியது.
“எதுக்குடா இந்த அலைச்சல்? என்னவேற கட்டியிழுக்கற?’’ என்ற ரமணனின் கேள்விக்கு, ’’நாளக்கி தெரிஞ்சுப்ப, காலேல எந்துருக்கணும், சங்கு முகத்த கேட்டுண்டே தூங்குடா,” என்றான் இவன்.
அவள்…பூமிஜா இந்தக் காற்றை இப்படி உணர்வாளா? விளிம்புகளற்ற வெள்ளித்தட்டு இது என ஏற்றுக்கொள்வாளா? ஏன் வர இயலாது என்று சொல்லிவிட்டாள்? இந்த எண்ணங்களை உதறுவதற்காக ’ரமணா’ என்று கூப்பிட்டான். மெலிதான குறட்டை ஒலிதான் கேட்டது.
கோயில் காவலர்தான் அவர்களுக்கு இந்தத் தங்குமிடத்தைச் சொன்னவர். ’தம்பிகளா, பொழுதேறிப் போச்சுது. சீகாழி போயி தங்கிக்கிடலாம். அலய வேணாம்னா இங்க படுங்க. பின்பக்கத்துல வாய்க்கா ஓடுது. காலப் பணியாரம், மதிய விருந்து எல்லாம் நம்ம வூட்லதான்; இல்ல, உங்களுக்கு எங்க வூட்ல சாப்ட சங்கடம்னா அய்யரு க்ளப் இருக்கு; ராவைக்கு எங்க வூட்டுக்கு கூட்டிப் போலாம்ணா பொண்ணு புள்ள பெத்து அஞ்சு மாசம்தான் ஆயிருக்கு, அதனாலத்தான் இப்ப கூப்டல. உங்க விருப்பப்படி செய்ங்க’. அவர் அழைப்பை மறுத்து ஏதோ சொல்ல வாய் திறந்த ரமணனை சரவணன் முந்திக் கொண்டான். ’இங்கயே படுத்துக்கறோம்; காலைல உங்க வீட்டு சாப்பாடுதான்,’ என்றான். ’என்னடா,நீயா இப்படிச் சொல்ற’ என்ற ரமணனுக்குத் தெரியுமாகாயங்கள் தெய்வங்களாகக் கூடுமென்று.ஈரம் வற்றிக் காய்ந்து போனதென்றாலும் தடங்கள் இல்லாமலா போய்விடுகின்றன?
‘இங்கே எல்லாமே மூன்று,’ என்றார் கோயில் அர்ச்சகர்; ‘அம்பாள், ஸ்வாமி, ஆகமம் மட்டுமில்ல, தீர்த்தம் கூட மூணுடாப்பா’. ரமணன் ஆவலோடு அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்க இவன் மூன்று என்பதிலியே நின்றுவிட்டான். எந்த மூன்று? இவன், பூமிஜா, பால் கொடுத்துக்கொண்டே இறந்து போய்விட்ட அம்மா!
இப்படி திறந்த வெளியில் இதுவரை படுத்திருக்கிறோமா என சரவணன் நினைத்துப் பார்த்தான்; ரமணனால் எப்படி எல்லாவற்றையும் இயல்பாக ஏற்கமுடிகிறது? முன்னர் அவர்கள் அலுவலகத்தில் பத்து பேர்தான். எல்லோருமே ஆண்கள்; அவர்களின் முக்கிய வேலையென்பதே ‘க்ரியேடிவ்’ஆக இருப்பதுதான். அவர்கள் எந்தப் பொருளைக் கொண்டும் எதையும் வடிவமைக்கலாம்; பின்னர் அதை 3-டி ப்ரின்டரில் அச்சிட்டு நிறுவிவிடுவார்கள். கம்பெனிக்கு பல க்ளையன்ட்ஸ்.
அந்த சேவல் பண்ணைக்கு வந்த முதல் பெண் பூமிஜா; ’பெயரே வித்தியாசமாக இருக்கிறது.ஆளும் அப்படி இருந்தா நாம க்ரியேடிவ் கம்பனின்னு சொல்லிக்கலாம்’என்று மூர்த்தி சொன்னபோது சரவணனுக்கு எரிச்சலாக இருந்தது.அவன் ஊரெல்லாம் தேடிச் சேர்ந்த வேலை இது; பெண்களை வேலையிடத்தில் சந்திக்கவேண்டாம் என்பதே அவனுக்கு நிறைவாக இருந்தது.மூர்த்தி கொண்டாடுகிறான், தான் பயப்படுகிறோம், ரமணா என்ன நினைக்கிறான்? கேட்டபோது சிரித்தான்; அழுத்திக் கேட்டபோது எனக்கு ஜினோஃபோபியா இல்லை என்று சொல்லிச் சிரித்தான். ஒரு கணம் தன் அந்தரங்கத்தை அவன் பார்த்துவிட்டதாக சரவணன் அதிர்ந்தான். ரமணன் தனக்கு ‘எடிபஸ்’ என சந்தேகிக்கிறானோ என நினைத்தான், இது அதுவல்ல, வேறு.ஆனால், அதுவாக மாற வழியில்லாத வேறெதுவான ஒன்றோ?
பூமிஜா பத்து ஆண்களுடனும் இயல்பாகப் பழகினாள்.தான் தனியாக இங்கே வேலை செய்கிறோம் என்ற பதட்டம் அவளிடம் தென்படவில்லை. போலியாக நாணவுமில்லை, மேலே விழுந்து பழகவும் இல்லை. அவள் வயதைவிட மூப்பானவளாகத் தெரிந்தாள். அந்தத் தோற்றம் அவளுக்கு ஒரு ஆளுமையைத் தந்ததாக சரவணன் நினைத்தான். மூர்த்திக்குத்தான் அவளைப் பிடிக்கவில்லை, ஆனாலும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு அவளைப் பற்றி அறிய முயன்று தோற்றுப் போனான். சரவணன் அவள் வேலைக்குச் சேர்ந்த முதல் மூன்று மாதங்கள் அவளை நேராகப் பார்க்கவில்லை, பேசவும் இல்லை. ஆனால்,இவளின் ஆளுமை ஒரு பெரும் குடையாக தன்னைக் கவிந்து கொண்டு கனிவு கொள்ளக் கூடாதா என ஏங்கினான்.
அன்று ஒரு பெரிய ஒப்பந்தம் இவர்கள் கம்பெனிக்குக் கிடைத்தது. ரமணன், பூமிஜா, சரவணன் மூவரும் அந்த ப்ராடக்ட்டிற்கான விளம்பரத்தில் புதிதாக நுட்பமாக, யாருமே இதுவரை சிந்தித்திராத கோணத்தில், பார்வையாளர்களை வியக்க வைக்க வேண்டும் என்பது கம்பெனியின் உத்தரவு. காலையில் தொடங்கிய உரையாடல்கள், வரைபடங்கள், ஸ்லோகன்கள் மாலை எட்டு மணி வரை நீடித்தும் ஒன்றும் சிறப்பாக அமையவில்லை. ’சாப்டப் போலாமா?டயர்டா இருக்கு ரமணன்’ என்றாள் பூமிஜா.
“ஷ்யூர், வாடா நீயும்”
‘இல்லடா, நீங்க போய்ட்டுவாங்க’
“ரமணா, நான் மனுஷங்கள சாப்ட்ற வழக்கமில்ல, தைரியமா வரச் சொல்லுங்க”
அப்படித்தான் தொடங்கினான், அவள் பார்க்காதபோது அவள் முகத்தைப் பார்த்தான், நீண்ட விரல்களுள்ள கால்களைப் பார்த்தான், கிட்டத்தட்ட வேண்டுதல்கள் இல்லை யாசித்தல் கொண்ட பார்வைகள்; அவன் தவித்து மறுகினான். மூன்று மாதக் குழந்தைக்கு அந்த நினைவிருக்குமா.. நெஞ்சு வலியில் அம்மா வலக்கையைஊன்றிகீழே சாய்ந்து உயிர் விட்ட நிலையிலும் அவன் பற்றிக் கொண்டிருந்த அவள் மார்பு. அது பறிபோன பின் அதனை நினைத்து நினைத்து அழுதது, இரண்டு வயதாகையில் அவர்கள் வீட்டில் வேலை செய்த சிகப்பி மாரில் தொற்றிய குழந்தையுடன் உட்கார்ந்து அரிசி புடைக்கையில் தானும் அவள் மடி ஏறி மற்றொரு மாரைப் பற்றியது, அத்தை தன்னை பலவந்தமாகப் பிடித்து இழுத்தது, கண்களில் நீரும், திகைப்புமாக சிகப்பி நின்றது, மறுநாளிலிருந்து அவள் வேலைக்கு வராதது?
எப்போது தூங்கினான் என்றே அவனுக்குத் தெரியவில்லை. ’டேய்,சரூ, ஏந்துருடா’ ரமணன் குளித்து தயாராகி இருப்பதைப் பார்த்ததும் இவனுக்கு வெட்கமாகக்கூட இருந்தது. இரவில் வெள்ளியாபரணமெனத் தெரிந்த மைதானம் காலையில் அந்த சுவடற்று இருந்தது. ரமணன் இரண்டையும் உண்மை என்பான்; இருக்கக்கூடும்.
இட்லியும், பொங்கலும், சட்னியும், டீயும் காலை விருந்து. மரச் சட்டத்திலிருந்து தொங்கிய தூளியில் கருவறைக்குள் துயில்வதைப் போல் ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலே சிறு சிணுங்கலாக ஆரம்பித்த குரல் ஓங்கியது. சமையல்பகுதியில் தன் அம்மாவிற்கு உதவிக் கொண்டிருந்த அவள், முன்னறைக்கு வந்து குழந்தையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டே உள்ளே விரைந்தாள்..
“என்னடா உன் ப்ளேன்? இந்த மைதானத்ல ஓடி விளயாடப் போறமா?’’
‘மணல் சிற்பம் செய்யப் போறோம்டா’
“அந்த க்ளயன்ட்டுக்காகவா? கான்செப்ட் என்ன?”
‘அவங்க பொருள்’மா தூத்’இல்லியா?’
“அதுக்கும் மணல் சிற்பத்துக்கும் என்னடா கனெக்க்ஷன்?’’
‘இருக்குடா. ஒரு அம்மா, மணல் அம்மா, தன் குழந்தய அதுவும் மணல் தான், மடி மேல போட்டுண்டு பால் குடுக்கப் போறா’
“சரி”
‘அப்போ, நிஜக் குழந்த அவ மேல தாவறது’
“இன்ட்ரஸ்டிங்க்”
‘அவ கை நீண்டு ’மாதூத்’தை நிஜக் குழந்த கிட்ட கொடுக்கறது’
“மார்வலஸ், ஐ சே; அம்மாவுக்கு மாத்து இதுதான்னு ப்ராடெக்ட் நிக்குது’’
‘இதை பூமிஜாவோட ரண்டு நா முன்னால டிஸ்கஸ் பண்ணேன். வழக்கம் போல நீ ஆஃபீஸுக்கு வல்லடா; அதுதான் அவகிட்ட பேசினேன், டெட்லைன் வேற பயமுறுத்துதே’
“டோன்ட் பி அபாலொஜிஸ்டிக். அவளும் இந்த ப்ராஜெக்ட்ல இருக்கா, மைன்ட் யு; அவ என்னடா சொன்னா, அவளும் வந்திருக்கலாமில்ல”
‘என்னயே கண் கொட்டாம பாத்தாடா, பின்ன கிட்ட வந்து முதுகுல தட்டிக் கொடுத்தா; அப்றம் நகந்து போனா;எதுத்தாப்ல நின்னுண்டு இத மணல் சிற்பமா செய்யணும். வெள்ளையும், பழுப்பும் கலந்த மண், குழந்த நிஜமா இருந்தா நல்லது, இல்லேன்னா க்ராஃபிக்ஸ் பன்ணுவோம்னா. நீங்களும் வாங்கன்னு சொன்னேன்; அப்பப்ப படம் அனுப்பு, நான் இங்க பேக்ரவுன்ட் செய்யறேன்னுட்டா’
“சரி, நாம ஆரம்பிப்போம்”
இவன் வரைகோடுகள் அமைத்து வர வர ரமணன் இன்றைய இளம் தாயை வரைந்து வந்தான்; சரிதான், மரபார்ந்த தாயின் வடிவம் இதற்கு வேண்டாம், தாய்மை தெரிந்தால் போதும். கைகளே தொட்டிலென அந்தச் சிற்பம் குழந்தையைத் தாங்கியபோது கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். நிஜக் குழந்தைக்கு என்ன செய்வது என்று நினைத்து ‘சரி, அனிமேஷனில் செய்து கொள்ளலாம்’ என்று தீர்மானிக்கையில் தன் பேத்தியை அந்தக் காவலாளி கொடுத்தார். நிலவின் வெண்தடம் இப்போது தெரிய அவன் புன்னகைத்து படங்கள் எடுத்தான்.