இன்றைய மாலையின்
என் காதல் முழுக்கவும்
குளிர்சாதன பெட்டியிலிருந்து
இல்லாமல் போன
ஒரு மிகப்பெரிய
தக்காளிப் பழத்தின் மீது.
என்ன இருந்தாலும்
ஒரு எளிய பழத்தை குறிக்க
காதல் என்ற சொற்பிரயோகம்
மிகைதான் என்பீர்,
தெரியும்.
மென்மையான சதைக்குள்
பிரியத்தால்
வீங்கி புடைத்து வரியோடிய
பெரிய பாட்டியின்
முகத்தையும்
பிறந்த குழந்தையின்
பாதத்தையும்
புன்னகைக்கும் புத்தரின்
கன்னத்தையும்
நினைவுறுத்தி
தன்னுள்
அத்தனையையும் பதுக்கிக் கொண்டு
அமைதியாய் இருந்தது.
துவரம் பருப்பின்
சொரணையின்மையை
மூடி மறைத்து
வறுத்த வெங்காயத்தை
மேலும் இனிப்பாக்கி
முள்ளங்கி கத்தரி
முருங்கையையும்
தன் மென்புளிப்பால் ஊடுருவி,
வாழ்நாள் முழுக்கவும்
தன் இருப்பில் கசந்து,
வெட்டும் பலகையிலிருந்து
தவறுதலாக வந்து சேர்ந்து விட்ட
சில துண்டு பாகலையும்
தன் பிரியத்தால் நிறைத்து விட்டது.
ஒரு தட்டின் சாதம்
ஒரு கோப்பையின் சாம்பார்
ஒரு கரண்டி –
விருப்பமான ஒரு நாக்கு –
என்னவொரு தியானம்!
என்னவொரு கொண்டாட்டம்!