காஸ்மிக் தூசி

தூய வெண்மையின் பொருளின்மை

காஸ்மிக் தூசி 

தனிமையின் விஷமேறி
நீலம்பாரித்து நிற்கும்
வானம்
மேகங்கள் அற்று
மேலும் வெறுமை கூட
நீலம் அடர்கிறது.

இலைகளற்ற கிளைகளில்
விளையாட யாருமற்று
நிறங்களை துறந்த கிரணங்கள்
உக்கிர வெண்மையை
ஓலமிடுகின்றன

நிறங்களின் வெறுமையில்
நிறையும் வெண்மையில்
திசையெங்கும் பிரதிபலித்து
மீண்டு வந்து சேரும்
மேலும்
சிறிதளவு
வெண்மை.

பனி பூத்து
பனி கொழிக்கும்
வனமெங்கும்
தானே எதிரொளித்து
சோம்பிக் கிடக்கும்
தூய வெண்மையின்
பொருளின்மையில்,

எப்படியாவது
ஒரு துளி அர்த்தத்தை
சேர்த்துவிட
முயல்வது போல்

பசியில்
வளை நீங்கி
வந்து நிற்கும்
மெலிந்த அணிலின்
மரத்தின் வேரோரம்

பனியில் புதைந்து துழவும்
என் கால்கள்
நெருங்கி நிலைப்பட
அசையாமல் ஆகும்
அணில்

இப்போது
எங்களுடன்
ஏரி தியானிக்கிறது
காற்று தியானிக்கிறது
வானம் தியானிக்கிறது
மரங்கள் தியானிக்கின்றன.
மலைத்தொடர்கள் தியானிக்கின்றன

அணிலின் விழித்திரையில்
ஒரு புராதன
ஓவியமாய்

அசைவின்றி
எஞ்சி
ஒருங்கும்
இப்பிரபஞ்சம்.

யாதனின் யாதினும் நீங்கி

காஸ்மிக் தூசி 

பறவைகள் அணில்கள்
பூச்சிகள் புழுக்கள்
பூ பழம் காய்
இலை குருத்து
யாதனின்
யாதினும் நீங்கி,

பிடுங்கி
தலைகீழாய்
நட்டது போல்
பற்றற்று
பிரபஞ்சப் பெருவெளியில்
தனித்து நின்றிருக்கும்
அந்த பெரும் பிர்ச்மரம்.

துக்கம்
விசாரிக்க வந்த
பழைய தோழனைப்போல்
எதிர்பாராமல்
எங்கிருந்தோ
வந்து சேர்ந்து விட்டது
ஒரு கரும் பறவை.

சிலை போல
நிலை பெயராது
எதுவும் சொல்லாது
கைபற்றி அமைதியாய்
அமர்ந்திருந்து

குசலம் முடித்து
எம்பித் தாவி
ஒலி எழும்ப
சிறகடித்து பறந்து செல்ல,

இலையற்ற
கிளை அசைத்து
விடையளித்த பின்,

வழமை போல
தன் தியானத்துக்கு
திரும்பி விட்டது
மரம்

வீட்டுக்கு வெளியே வட துருவம்

காஸ்மிக் தூசி 

அமைதியாய் வந்து அமர்ந்திருக்கும்
நடு இரவில்
வீட்டுக்கு வெளியில்
வட துருவம்

குளிரின் கொடுங்காற்று
கூரையின் மேல்
சரிந்து இறங்குகையில்

எவரின் மீதோ
ஒரு வசை
வாழ்த்து
விமர்சனம்.
மற்றும்
இவை யாதுமற்ற
வெறுமையின் சலிப்பு.

ஊளையிட்டு சண்டையிடும்
இவ்வளவு காற்றும் வருவது
எங்கிருந்து?
இவ்வளவு பனியும் இதுவரையும்
இருந்தது எவ்விடத்தில்?

இதையெல்லாம்
கண்டுபிடிக்கதான்
பொழுதுபோகாத
அந்த மூதாட்டி

கையில் குழவியுடன்
வெற்றிலையை இடித்து
கடவாயில் வைத்தபடி

நிலவில்
காலை நீட்டி
அமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறாளோ
பூமியை?

 

அப்பாவின் கடவுள்  

 
பாட்டியின் கடவுள்  
தாத்தாவின் வடிவில்  
பொன்னழகு சாமிக்கு  
பூசை முடித்து   
பாட்டிக்கு  
பொட்டு வைக்கிறது.  
 
தாத்தாவின் கடவுள்  
ஏரிக்கரையோரம்  
மீசை முறுக்கி  
குதிரையில் வாளேந்தி 
ராத்திரி பகலாய்  
காவலுக்கு நிற்கிறது  
 
பரசுராமர் உருவில் இருந்து  
பெரியாருக்கு  
கூடு விட்டு   
கூடு பாய்ந்த  
பெரியப்பாவின் கடவுள்  
இப்போது  
பஸ்டாண்டுக்கு நடுவில் 
சிமிண்டு சுவரில்  
மாலையுடன் சிரிக்கிறது  
 
அப்பாவின் கடவுள் 
அப்போது ஹிப்பி வளர்த்த  
கமலஹாசன்.  
இப்போது யார்  
என்பதை  
அவர் சொல்வதில்லை  
நாங்கள்  
கேட்பதுமில்லை.  
  
கால் மடக்கி அமர்ந்த  
பளிங்குச் சிலையின் படமாகி 
சாய்பாபாவின் வடிவில் 
உள்ளங்கை காட்டி  
ஆசிர்வதிக்கும்   
என் மனைவியின்  
கடவுள் 
 
கரடி பொம்மையை  
தன் குட்டிக் கைகளால்  
இறுக அணைத்தபடி  
மனைவிக்கு பக்கத்தில்  
ஒருக்களித்து உறங்கும் 
என் கடவுள்  
 
எல்லாவற்றையும் 
மேலிருந்து 
பார்த்துக்கொண்டிருக்கும் 
அந்த  
பெரிய  
கடவுளுக்கு 
யாராம்  
கடவுள்? 

தற்செயல்களின் அற்புதங்களில் எழும் தெய்வம்  

 
இன்று காலை  
நடைப்பயிற்சி செல்கையில்  
என் பின் வந்து  
பதுங்கி,  
தயங்கி நின்றபின்  
   
திடீரென வேகமெடுத்து  
முந்திச்சென்று   
பாதை மறைக்கும்  
குளிரின் காற்று.   
 
தாடை வருடி  
இளவேனிலின்  
வாழ்த்தை  
கன்னக்கதுப்பில்  
முனுமுனுத்து  
 
மஞ்சள் தும்பை நிறைத்த  
புல்தரையில் படர்ந்து  
படுத்து உருண்டு  
நிதானமாய் மேல் எழுந்து   
விண்நோக்கி   
விரைகிறது. 
 
ஏரியை நோக்கி  
இறங்கிச்செல்லும் பாதை 
திடீரென வழிமறிக்கும்  
பிர்ச் மரத்தின்  
ஏந்திய யானையின்  
துதிக்கை.  
உடலெங்கும்  
வண்ணம் பூசி  
தியானித்திருக்கும்  
தனித்த ஒரு பறவை.  
 
மெளனம் கலைத்து 
மணிக்கழுத்தில்  
உச்சரித்த ஒலி ஒன்று  
மந்திரம் கொண்டு  
உன் குரலாய்  
எதிரொலிக்க     
 
கேட்டுக் களித்து  
மிதந்து செல்லும் 
மேகத்தின் நெகிழ்ச்சியில்  
முகிழ்க்கும்  
துளிக்கண்ணீர்.  
நாசியின்  
நுனி தீண்டும் 
என் விதிர்ப்பு கண்டு, 
   
விஸ்தாரமாய்  
மல்லாந்திருக்கும்  
ஏரியின் மீது 
ஆபாசித்து      
புல்வெளியின் சரிவில்  
அலையாகி நெளிந்து செல்லும் 
 
தனியனாய்  
நான் நடக்கும்  
பாதை நெடிதும்   
காட்டுப்பூவின்  
நறுமணமாய்  
நிறைந்து  
 
விடாது  
உடன் வரும்    
துணையென,    
 
பெயர் தெரியாத  
ஒரு  
தெய்வம்.