கவிஞன் என்பவன் காலம் முழுக்க மனதில் கருவைச் சுமந்து திரிவதோடு, தன் கருவை ஊட்டமுடன் உருப்பெறச்செய்து , பிரசவித்து, சிலாகித்து மகிழும் கொண்டாட்டக்காரன்.
அனுதினப் பொழுதுகளில் நமக்குத் தோன்றுவனவற்றையெல்லாம் ஒரே மூச்சில் எழுதித் தள்ளிவிடலாம். ஆனால், எழுதும் அவ்வளவும் தனிச்சிறப்பு பெறும் வாய்ப்புகளை வென்றெடுக்கின்றனவா? இல்லை. எழுதவென எவ்வளவோ நிகழ்வுகள் மனதின் ஆழத்தில் அடுக்கடுக்காய்த் தேங்கியிருப்பினும் உள்ளிருந்து வெள்ளமென ஆர்ப்பரித்தெழும் நிகழ்வு மட்டுமே ஒரு வெற்றிகரமான படைப்பை உருவாக்க இயலும்.
கவிதை என்பது அவரவர் ஆழ்மன இருப்பின் கிளர்ந்தெழுதலின் சிறப்பு. பூமியிலிருந்து நோக்குகையில் காட்சிக்குத் துளியளவு தென்பட்டாலும் மிகுந்து ஒளிர்பவை வானில் மிதக்கும் நட்சத்திரங்கள். அதுபோல் அளவில் சிறிதாக இருப்பினும் பளிச்சென்ற வரிகளால் ஆழ்மனதினை வெகுவாய் அசைத்து சிலிர்ப்பூட்டுபவை கவிதைகள். நொடிப்பொழுதில் ஆழமான உணர்வுகளை நம்முள் கடத்திவிடுபவை அவை. எவ்விதமனோநிலையிலும் ஒரு படைப்பாளிக்கு கவிதை என்பது எழுச்சி பெறலாம். குறிப்பாகச் சொல்லப்போனால் உயிரின் ஆழமான வேர்ச்சரடுகள் மலரும் தருணமது. ஒரு படைப்பாளிக்கு தன்னியல்பு மற்றும் மெனக்கெடல்கள் மூலம் தரமானதும் ஆத்மார்த்தமானதுமான படைப்புகள் கிட்டுகின்றன. ஒருவரது உணர்வுகளின் உந்துதல் வழி வடிவமைப்பு பெறும் கவிதைகள் ஆத்மார்த்தமானவை.
படைப்பாளிகள் தங்கள் வாசிப்பில் ஆழம் செல்லச் செல்ல அவர்களின் எண்ணக்கிடங்குகள் உருப்பெற்று, அவை உயிர்ப்பிக்கும் அசாதாரண படைப்புகள் தனித்துவம் பெறுகின்றன. ஒரு படைப்பாளியின் முதற்போதை அவனது மூச்சு போன்ற வாசிப்பு. இரண்டாம் பட்சம்தான் எழுத்து. எழுதியாகவேண்டிய கட்டாயமென்பது இங்கு எவர்க்கும் இல்லை. ஒரு படைப்பானது தன்னளவில் தனக்கே உரிய தனித்தன்மையுடன் அப்படியேதான் இருக்கிறது. அதை அணுகுவதற்கான முழுப்பொறுப்பும் வாசகனைச் சார்ந்ததே.
கவிஞர் செல்வசங்கரன் அவர்களின் முதல் தொகுப்பு “பறவை பார்த்தல்”. பல வருடங்களின் திறனார்ந்த சேகரிப்பு இவரது கவிதைகள். இத்தொகுப்பில் இவரது மன உணர்வுகள் மிக நேர்த்தியான ஒரு பாங்குடன் வடிவமைப்பு பெற்றிருப்பதுடன் தனித்தன்மை பொருந்தியகவிமொழி கையாளப்பட்டுள்ளது. எவ்வித ஆர்ப்பரிப்புமின்றி வரிகளில் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் செல்வசங்கரன்.எண்ண அலைகளின் விரிவு, அன்றாடஅகவய மற்றும் புறவய நிகழ்வுகளை உரசிச்செல்லும் நினைவுகள் போன்றவற்றை நுணுக்கமுடனும் நுட்பம் வாய்ந்த சொற்தேர்வுகளுடனும்வெகு சுவாரஸ்யத்துடனும் இருக்கும்படி இத்தொகுப்பினை மிகவும் கவனமாகச் செதுக்கியுள்ளார். சுருங்கச் சொல்லவேண்டுமாயின் ததும்பும் உள்ளுயிர்ப்பின் தாக்கம், சரியான சொற்கோர்வை மற்றும் அழகியல் கொண்டு கட்டமைக்கப்பட்ட சிறப்பான தொகுப்பு இது.
கவிதைகள் சற்று நீளம் கொண்டவையாக இருப்பினும், வாசிப்பின் மூலம் சுவாரஸ்யமான வரிகளை மென்மையாய்ப் பற்றிக்கொண்டு ஒரு செழிப்பான நீரோட்டம்போல் பக்கங்களை திருப்திகரமாய்க் கடக்க முடிகிறது.
1.
“கடல்” என்பது எப்போதும் அனைவரின் பார்வையில் ஒரு பிரம்மாண்டமாகவே இருந்திருக்கிறது. இவரைப் பொறுத்தமட்டில்
“கடல் அருகாமையில்
உபரி வெளிச்சமும்
பின்பு கடலுமே இருந்தது”
என்ற தனது அசாதாரண பார்வையில் பிரம்மாண்டமான கடலை சாதாரணப்படுத்துகிறார். இத்தொகுப்பின் முதல்கவிதை இது.
“பிள்ளை விளையாட்டில்
வசிக்காமற் சென்ற
மணல்வீடுகள் சில
சற்றுக்கு முன் அதனோடிருந்தன”
பிள்ளைகள் கடற்கரையில் மணல்வீடு கட்டி விளையாடுகிறார்கள். அவர்கள் வசிக்காமல் விட்டுவிட்டுப்போன அவ்வீடுகளில் தான் வசித்துவிடும் முயற்சியில் அவைகளை முற்றிலும் கரைத்துவிட வருகுகின்றன கடலலைகள். இவ்வரிகள், நம்மை அவ்வீடுகள்மீது ஒருவித ஏக்கப் பார்வையினை மெலடியாய் வீசச் செய்கின்றன.
முடிவில்
“எப்பொழுதும் கடலென்பது
பரசிய மண்ணும் உப்பு நீரும்
சில பூச்சிகளுமே”
என்ற வரிகள் மூலம் தனது பார்வை விரிவை இவ்விடம் பதிவு செய்கிறார்.
2.
மூக்கினுள்ளிருந்து நீண்டு வளர்ந்திருக்கும் ஒரு முடி பற்றிய அற்புதமும், சுவாரஸ்யமும் கலந்தநினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
“கண்ணாடி முன் நின்றுஎனது
மூக்கை வெகு அருகாமையில்
பார்த்த அன்று
மூக்கினுள்ளிருந்து ஒரு முடி
நீண்டு வளர்ந்திருந்தது
லேசாகச் சுருண்டிருந்தது
நெளிவின் நுனி பிடித்து
மெதுமெதுவாய் இழுக்க
உள்ளிருந்து ஒரு அதிர்வு கிளம்பி
நினைவு பிசகியது”
எனத் தொடங்குகிறது இக்கவிதை.
“ குறுகுறுப்பை, ஒரு மாதிரியான
நினைவுச்சுருக்கை
வேண்டுமளவிற்குப் பெற்றுக்கொண்டேன்”
எனும் இடைவரியின் நினைவுச்சுருக்கில் அகப்பட்டுக்கொள்கிறது மனம்.
“வீரியத்தினை மட்டுப்படுத்த
கத்தரியை உள்ளே துழாவிய அன்றிலிருந்து
குறுகுறுப்புடன் உச்சத்தில் வலி புரட்டியெடுத்தது.
அன்று எனது மூக்கை அறுத்துக்கொண்டிருந்தேனென
நம்பத்தகுந்த சிலர் கூறினார்கள்”
இவ்வாறு மனதினுள் சுவாரஸ்யமான குறுகுறுப்பை இக்கவிதை உண்டு செய்கிறது. இத்தொகுப்பில் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கவிதை இது. இவ்விடம் அம்முழுக்கவிதையினையும் உங்களுக்கு அறியத் தருகிறேன்.
நினைவுச்சுருக்கிலிருந்து நீண்ட குறுகுறுப்பு
“கண்ணாடி முன் நின்று எனது மூக்கை
வெகு அருகாமையில் பார்த்த அன்று
மூக்கினுள் விருந்து ஒரு முடி
நீண்டு வளர்ந்திருந்தது
லேசாக சுருண்டிருந்தது
நெளிவின் நுனி பிடித்து
மெதுமெதுவாய் இழுக்க
உள்ளிருந்து அதிர்வு கிளம்பி
நினைவு பிசகியது
காட்சி மயக்கில் ஒருவித குறுகுறுப்பினை உணர்ந்தேன்
மயிர்க்காலை இழுத்து இழுத்து
குறுகுறுப்பை ஒருமாதிரியான நினைவுச்சுருக்கை
வேண்டுமளவிற்குப் பெற்றுக்கொண்டேன்
ஒற்றை மயிர் கையோடு வந்த பின்பு
குறுரோமங்களை
சிரமத்துடன் இழுத்துக்கொண்டிருந்த நாட்களில்
அதிலொன்று சற்று நீண்டு வளர்ந்திருந்தது
எப்பொழுதும் குறுகுறுப்பிலே கிடந்தேன்
தும்மல் கட்டுக்கடங்காது போக
வீரியத்தினை மட்டுப்படுத்த
கத்தரியை உள்ளே துழாவிய அன்றிலிருந்து
குறுகுறுப்பின் உச்சத்தில் வலி புரட்டியெடுத்தது
அன்று எனது மூக்கை அறுத்துக்கொண்டிருந்தேனென
நம்பத்தகுந்த சிலர் கூறினார்கள்.”
இக்கவிதையானது ததும்பும் உள்ளுயிர்ப்பின் தாக்கம் நிறைந்து காணப்படுகிறது. வாசிக்கும்போது மூக்கினுள்ளிருந்து சிறிது நீட்சியுடனிருக்கும் ஒரு முடியைப் பிடித்திழுத்து கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ள காட்சி மயக்கு, நினைவுச்சுருக்கு இவற்றை அனுபவிக்கவென அனிச்சையாய் மூக்கினுள் நுழைகிறது கைவிரல்.
3.
இவரது கவிதைகளில் பெரும்பாலும் சில தொடர்நிகழ்வுகள் உள்ளடக்கம் பெற்றிருப்பதால் வரியமைப்பு நீள்தன்மை கொண்டதாக அமையப்பெற்றுள்ளது. ஆகையால்தான் குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் முக்கியமென எடுத்தெழுதஇயலவில்லை.
இன்னும் நன்றாகத் தட்டுங்கள்
“விழா நாயகர்களென செல்லமாக அழைக்கப்படும்
உங்கள் கைகளை நன்றாகக் தட்டுங்கள்
சிறிதும் இடைவெளி விட்டுவிடாதீர்கள்
அவரது மனையாளின் முன்னால்
அவருக்குக் கூச்சத்தை வாரி வழங்குங்கள்
அவர் எழுந்து போகும்போது
கண் அகலாது பார்த்து
அவரது உடலைக் கூனிக் குறுகவையுங்கள்
சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பாவை வாங்கித் திரும்பி
உங்களை நோக்கி வணங்கும்போது
அவர் வழிவதை தாராளமாகப் பாருங்கள்
மேடையின் நடுவே அப்படியே நிறுத்தி
தாளமுடியாத அளவு சங்கோஜத்தைத் தந்து
அவரது கண் பல் உதடு எல்லாவற்றையும் துடிக்க விடுங்கள்
நா தழுதழுக்கட்டும்
அப்படியும் விட்டுவிடாதீர்கள்
எல்லோரும் ஒன்றுகூடி இன்னும் நன்றாகத் தட்டுங்கள்
இன்னும் பற்றைக்குள் கீழிறங்கிவிடுவார்போல
கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு
தட்டிக்கொண்டேயிருங்கள்
ஓங்கி ஓங்கி தட்டுங்கள்
அவர் பாவமென்ற நினைப்பு மட்டும்
உங்களுக்கு ஒருபோதும் வந்துவிடக்கூடாது
செல்வங்களே
நீங்கள் இன்னும்
மண்டை கனத்த எத்தனையோ பேரை
சொறிந்துவிட வேண்டியிருக்கிறது.”
இன்றைய சூழலில் , மண்டை கனத்த மனிதர்கள்தான் கைதட்டல் பெறுகிறார்களா? அல்லது கைதட்டல் பெறுபவர்கள் மண்டை கனத்தவர்களா? எனும்படியான வினாக்களில் சிந்தனை நுழைவதில் முனைகிறது.
எப்போதும் ஏற்றம் என்பது படிப்படியாகவே நிகழும் ஒன்று. ஆனால் இறக்கம் என்பது தடாலடியாக சறுக்கி விழுவது. ஒரு நபருக்கான சொறிதலை (பாராட்டு, புகழ்ச்சி) முன்னிருத்தி அவர்களது படைப்புகளைமுடிவுசெய்துவிட இயலாது. ஆகையால்தான் ,சொறிபவர்கள் சொறிவதை நிறுத்திவிட்டு செறிவில் கவனம் செலுத்தவேண்டுமென்ற எண்ணத்தை இக்கவிதை நம் மனதில் அழுந்த ஊன்றி விதைக்கிறது.
4.
ஒரு கவிதையானது எல்லோர்க்கும் ஒரே கோணத்தில் புரிய அவசியமில்லை. ஒரு கவிதை பற்றிய புரிதல் வெவ்வேறு அடர்த்தியில் வெவ்வேறு கோணங்களில் வாசகர்களுக்கு அமையப்பெற்றிருப்பதை அவசியம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
உதாரணமாக,
“வேண்டுமென்றே
பல்லை இந்தச் சுத்தியல் கொண்டுடைத்து
கதற முடியும்
இப்பொழுது
சுத்தியலைக் கீழே வைத்துவிட்டு
அந்தக் கடையில் போய்
டீ குடித்து வரலாம்
அடித்துவிட்டால்
கண்டிப்பாக உட்கார்ந்து அழவேண்டும்.”
இக்கவிதையினைக் குறிப்பிடலாம். அவரவர் உணர்விற்கேற்பமேற்கண்ட கவிதையின் ஆழ்வரிகளைப் புரிந்துகொள்ளலாம்.
நேர்மையான எண்ணங்கள் கலவையாய்க் கலக்கப்பெற்று , தரமான அடித்தளத்துடன் கவனமாகக் கட்டமைத்து பொருத்தமான வண்ணங்கள் பூசப்பட்ட நேர்த்தியான வீடென இத்தொகுப்பைக் குறிப்பிடலாம்.
தொகுப்பு- பறவை பார்த்தல்
ஆசிரியர் – செல்வசங்கரன்
வெளியீடு – மணல் வீடு.