‘பை நாளைக்கு சாயங்காலம் பாக்கலாம்’ எப்போது போல், வானில் தோன்றியவுடன் அவனுடன் சில வினாடிகள்பேசிய வீனஸ் உலாக் கிளம்ப, அவளுடைய மாலை வருகைக்காக காத்துக் கொண்டிருந்த சில நட்சத்திரங்கள் அவள் பின்னால் அதீத சிமிட்டலுடன் செல்வதைப் பார்த்தபடி இருந்த துருவன் மீண்டும் தனிமைப்பட்டான். சற்று தொலைவில் மினுங்கியபடி தோன்ற ஆரம்பித்திருந்த விண்மீன்களைஅவன் அழைக்க, அவை வெறுமனே கையசைத்து விட்டு நாலைந்து பேராகச் சேர்ந்து விளையாட ஆரம்பித்தன. ‘நானும் வரேன்’ என்று அவன் சொல்ல, ‘ஐயோ நீ ரொம்ப பெரிய ஆளு, உன் லெவலுக்கு நாங்க வர முடியாது’ என்று விலகிச் சென்றார்கள். சேர்த்துக்கொண்டாலும் அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்கப் போவதில்லை, ஒருபோதும் தோற்க விடுவதில்லை, அதற்கு இப்படியே இருந்து விடலாம்.
எல்லாம் ‘அவரின்’ உபயம். தந்தைமடியில் உட்காரும் பிரச்சனையில் ஆரம்பித்து, அந்த ஆசை நிறைவேற ‘அவரை’ நோக்கி தவம் செய்து, பின் ‘அவரின்’ அருளால் விண்ணில் இந்த இடத்திற்குவந்து சேர்ந்தது’அவருக்கு’ அணுக்கமானவனாகமற்றவர் அவனை குறித்து எண்ண வைத்துள்ளது. முன்பெல்லாம் அவருக்கு பிரியமானவனாக இருப்பது பற்றி பெருமிதம் கொள்வான், அவரும் பாற்கடலிலிருந்து கிளம்பி விண்ணுலா செல்லும்போதெல்லாம்இவனருகில் வந்து சில அன்பு வார்த்தைகள் பேசி விட்டுதான் செல்வார். பின் அவரைக் காண்பது அரிதாகியது, இப்போது எந்த அவதாரத்திற்கான முஸ்தீபுக்களில் இருக்கிறாரோ. அல்லது இனி எந்த அவதாரத்தினாலும் பயனில்லை என அவருக்கு பிடித்தமான ஆழ்நித்திரையில் இருக்கலாம், சிக்கிக் கொண்டது நான்தான்.
நடந்தவையெல்லாம்இப்போது மங்கலாகத் தான் நினைவில் உள்ளது, ஆசைப்பட்டது போல் தந்தை மடியில் உட்கார்ந்தேனா, என்னை மீண்டும் பெற்றோருடன் சேர்க்காமல் ஏன் இங்கு தனியாக அமர வைத்தார். இப்படி முடிவற்ற தனிமையில் உழல்வதற்கு பூமிலேயே வாழ்ந்து முடிந்திருக்கலாம். இப்போதெல்லாம் மினுங்கக் கூட மனமிருப்பதில்லை.
oOo
துருவனுக்கு எதிரே இருந்த, சமீபத்தில்தான் கட்டி முடித்து குடும்பங்கள் குடியேற ஆரம்பித்திருந்த அபார்ட்மென்ட்டின் மூன்றாம் தளத்தில் உள்ள வீட்டின் உள்ளறைக்குள் நுழைந்த ஐந்தாறு வயதிருக்கக் கூடிய சிறுவன்,ஜன்னலையொட்டி இருந்த நாற்காலியின் மீதேறி ஜன்னல் கம்பிகளை பிடித்து வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தவன், ‘இன்னிக்கு பத்து ஸ்டார்ஸ் புதுசா இருக்குமா’ என்று,தட்டில் சாதத்துடன் ‘சாப்டுடா’ என்றபடி வந்த அம்மாவிடம் சொன்னான். ‘அதோ போல் ஸ்டார்’ என்றான் சிறுவன்.
‘அது இருக்கட்டும், சாப்புடு’.
‘அந்த ஸ்டார் மட்டும் ஏம்மா எப்பவுமே தனியா இருக்கு, அதுக்கு ப்ரண்ட்ஸ் இல்லையா’
‘சொல்றேன் ஒரு வாய் சாப்பிடு’
‘மூன் இன்னும் வரலையே, இன்னிக்கு ப்ளூ மூன்தான, ஸ்நேக்மூன கடிக்கறதால அது ப்ளூ ஆயிடுதா’
‘ஆமா சாப்பிடு’
‘பாம்பு மூன ஒரே அடியா முழுங்கிடுமா, இல்ல கடிக்க மட்டும் செய்யுமா’
‘மூன் சரியா சாப்பிடாட்டி பாம்பு முழுங்கிடும், உன்னையும்தான்’
‘பாம்போட ஸ்டமக் இருட்டா இருக்குமா’
‘நாளைக்கு கேட்டு சொல்றேன், இந்தாகடைசி வாய்’ஊட்டி விட்டு அம்மா, ‘அந்த பாம்பு கிங் கோப்ராவா, அனகோண்டாவா’ என்ற சிறுவனின் கேள்வியைக் கண்டுகொள்ளாமல் அறையை விட்டு வெளியேறினாள்.அவள் வேலை முடிந்தது. மீண்டும் வெளியே பார்த்தபடி’பாவம் மூன்’ என்று முணுமுணுத்தபடி இருந்தவன் பின் சித்திரக் கதையொன்றைபடிக்க ஆரம்பித்தான்.
oOo
‘என்ன அங்கேயே பாத்துட்டிருக்க’ என்ற குரல் கேட்டு துருவன் திரும்பினான். நிலா.
‘சாங்காலம் அந்த அபார்ட்மென்ட் பையன் ஒன்ன பாம்பு வெறுமனே கடிக்குமா, இல்ல முழுசாமுழுங்கிடுமான்னுகவலைப்பட்டுக்கிட்டுக்கிருந்தான் ‘ என்று துருவன் சொன்னதற்கு நிலா உரக்க சிரிக்க அந்த இடத்தில் ஒளி இன்னும் வலுவானது.
‘பாவம் தனியா இருக்கான், அபார்ட்மென்ட்ல அவன் வயசுல வேறகுழந்தைங்க இல்லல’ என்று நிலா கேட்க, ‘ஆமா, சாயந்திர நேரம் பூரா ஜன்னலேந்து வெளியே எட்டிப் பாத்துக்கிட்டுருப்பான்’
‘தனியா இருக்கறது எவ்ளோ கொடுமைனு எனக்குத் தெரியும்’ என்று நிலா சொல்ல, ‘என்ன விட நீங்க ரெண்டு பேரும் எவ்வளவோ மேல். இன்னிக்கு அந்த பையனோட அம்மா அவனுக்கு பருப்பு சாதம் தந்தாங்க, நெய்வாசனை இங்க அடிச்சுது. எங்கம்மாவும் எனக்கு அத ஊட்டி விட்டிருக்கா, இப்ப யாரு… உனக்கு மட்டும் என்ன, எல்லாரும் ஒன்னத்தான் பாக்கறாங்க, கவித எழுதறாங்க. ஒனக்கு நல்ல அதிர்ஷ்டம், நா தான்எப்பவுமே தனியா இருக்கேன், என்ன யாரும் கண்டுக்கறது இல்ல’
‘என்ன கவித எழுதி என்ன, காதல்ல ஜெயிச்சவுடனேஅம்போன்னுவிட்டுட்டு போயிடறாங்க. ஒனக்காவது நெறய நட்சத்திர சொந்தம் இருக்கு, மத்த ப்ளானட்ஸ் மாதிரி இல்லாம எர்த்க்கு நான் மட்டும்தான். ஐ ஆம் மோர் அலோன்.’
‘அப்படிலாம் சொல்லாத,…’
‘ஒங்க ரெண்டு பேருக்கும் அப்பா அம்மா இருந்தாங்க, இருக்காங்க, எனக்கு? அப்படி யாராவது இருக்காங்களா, இல்லையானே தெரியாது’
‘..’
‘அவ்ளோ ஏன் என்னோட ஒளியே எனக்கு சொந்தம் இல்ல, சூரியன் கிட்டேந்து கடன் வாங்கறேன்’
‘..’
எல்லா வீடுகளும் உறங்கிக்கொண்டிருக்கும் பின்ஜாம நேரத்தில் மினுங்குவதை கிட்டத்தட்ட நிறுத்தி துருவன் மீண்டும் மிளிர ஆரம்பித்து சிறுவனின் அபார்ட்மென்ட்டைசில கணங்கள் கவனித்த பின், மேகத்தின் மீது படுத்துறங்கிக் கொண்டிருந்த நிலாவை ‘எழுந்திரு’ என்று தட்டினான். ‘ட்யுடி டைம் முடிஞ்சிருச்சா’என்றபடி துயில் கலைந்தநிலாவிடம் ‘அதெல்லாம் இல்ல, வா போலாம்’ என்றான் துருவன்.
‘எங்க கூப்பிடற’
‘அந்தக் குட்டிப் பையன் கனவுக்குள்ள’
oOo
உடல் நீலம் பாரித்திருந்த நிலவை பாதி விழுங்கியிருந்த, தலையில் நட்சத்திரமொன்று பூத்திருந்த கருநாகத்தின் வாலைப் பிடித்திழுத்துக் கொண்டிருந்தான் சிறுவன். ‘நானா அது’ என்று நிலாவும் துருவனும் ஒரே நேரத்தில் கூறியதை’கஜேந்திரா, கஜேந்திரா’ என்று கத்திக் கொண்டிருந்தான் சிறுவனின் ஒலி அமிழ்த்தியது. ‘தப்பு தப்பா கூப்படறான், காப்பாத்த ஒருத்தரும் வர மாட்டாங்க ‘ என்று நிலா சொல்ல,’சரியா கூப்பிட்டா மட்டும் என்ன ஆகப் போகுது, அவர் வந்து இவனையும் தனியா வானத்துல ஒக்கார வெச்சுடுவாரு’ என்றபடிதுருவன் சிறுவனின் அருகே சென்றான். அவர்களை நோக்கிய சிறுவன் ‘இன்னொரு மூன்’ என்று உரத்த குரலெழுப்பியபின் திரும்பிப் பார்த்து ‘எங்க பாம்பு, ப்ளூ மூன்’ என்று அரற்ற ஆரம்பிக்கவும், ‘சத்தம் போடக் கூடாது’ என்றபடி துருவன் அவனுடைய வலது கையையும்,நிலா அவனுடையை இடது கையையும்பற்றிக்கொள்ள மேலெழும்பி வான்வெளிக்கு வந்தார்கள்.
‘மூன் நீ எப்படி பாம்பு கிட்டேந்து தப்பிச்ச, கலர் திருப்பி வெள்ளையாயிட்டியே’
‘பாம்புலாம் ஒன்னும் இல்லப்பா.’
‘இல்ல, இருக்கு, அதனாலத்தான் நீ இன்னிக்கு ப்ளூ ஆயிட்ட, அந்த ராகுதான ஒன்ன கொத்த வரான் அவனுக்கு பயந்துதான் நீ அப்பப்ப காணாமப் போயிடற’
‘அவன் ஏன்பா என்னை கடிக்கணும். நான் சும்மா எர்த்க்கு பின்னாடி போய் ஒளிஞ்சுப்பேன்’ என்று நிலா சொல்லிக்கொண்டிருக்கும்போதே’பாவம் அந்தாளே தலை வேற உடம்பு வேறையா ரொம்பா காலமா சுத்திட்டிருக்காரு’ என்ற துருவனைப் பார்த்து ‘சும்மாரு’ என்றாள்.
‘எதுக்கு நீ ஒளிஞ்சுக்கற’
‘ஒன்ன மாதிரி சின்னப் பசங்க என்ன கண்டுபிடிக்கறாங்களான்னு பாக்கறதுக்காக தான்’
‘என்னையும் சேத்துக்க அதுல’
‘அடுத்த வாட்டி கண்டிப்பா நீயும் உண்டு’
‘என்னையும் சேத்துக்கோ’ என்ற துருவனை முறைத்தாள் நிலா.
‘போல் ஸ்டாரையும் சேத்துக்கலாம், பாவம்’
‘அவனுக்கு நெறய வயசாச்சு, ஒன்ன மாதிரி கொழந்தை இல்ல அவன்’
‘ப்ளீஸ்’ என்று சிறுவன் கெஞ்ச ‘சரி, ஒனக்காக’ என்ற நிலாவைக் கட்டிக்கொண்டவன் ‘ரொம்ப ஜில்லாப்பா இருக்கு’ என்றான். பின் துருவன் பக்கம் திரும்பி ‘நீ மட்டும் எங்கேயும் போகாம செம் ப்ளேஸ்ல இருக்கியே, ஏன்’ என்று சிறுவன் துருவனிடம்கேட்டதற்குஅவன்பதில் தேடிக்கொண்டிருக்க நிலா ‘லேட்டாயிடுச்சு வீட்டுக்கு போலாம் வா’ என்றாள்.
‘எனக்கு ஸ்கை மொத்தத்தையும் சுத்திக் காட்டுங்க, அதோட என்ட் வரைக்கும் போயிட்டு வரணும், அப்பறம் ராகுவ பாக்கணும்’
‘இன்னிக்கு வேண்டாம், நாளைக்கு நைட் ஒன்ன கூட்டிக்கிட்டு போறேன்’ என்றபடி அவனைமீண்டும் தூக்கத்தினுள் அழைத்துச் சென்று திரும்பினாள் நிலா.
தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை பார்த்தபடி ‘பாம்பு ஒன்ன முழுங்க ஆரம்பிச்சது மட்டும் தான் கனவா, இல்ல இப்ப நடந்ததும் கனவு தானா’ என்று துருவன் கேட்க’கனவுன்னா யாரோடது? பையனோட கனவா, அதுல நாம நுழைஞ்சோமா, இல்ல கனவு கண்டதே நானோ நீயாகவோ இருக்கலாமில்லையா. இப்ப நாம பேசறது கூட கனவில்லைன்னு சொல்ல முடியுமான்ன’ என்றாள்நிலா.
‘குழப்பாத, அப்ப எது தான் நிஜம்’
‘வாட் ஈஸ் லைப், இப் நாட் பட் அ ட்ரீம்’
oOo
அடுத்த நாள் மாலை ‘ஹாய்’ என்றபடி பிரகாசமாக வந்தாள் வீனஸ். ‘ஹாய்’ ‘என்ன ரொம்ப பரபரப்பா இருக்க’
‘அதெல்லாம் ஒண்ணுமில்ல’
‘…’
‘என்ன அந்த அபார்ட்மெண்ட்டையே பாத்துக்கிட்டிருக்க,’
‘ஒண்ணுமில்ல’
‘…’
‘இன்னிக்கு கண்டுக்கவே மாட்டேங்கற’
‘அப்டிலாம் இல்ல’
சில வினாடிகள் கழித்து ‘ஒனக்கு நெறைய எடத்துக்கு போணும்ல’ என்று துருவன் கேட்க ‘போனாப் போறதுன்னு உன்கிட்ட தினோம் ரெண்டு நிமிஷம் பேசினதுக்கு எனக்கு தேவை தான். எனக்கென்ன ஆளா இல்லை’ என்று கிளம்பிய வீனஸின் பின்னால் எப்போதும் போல் விண்மீன் குழுவொன்று தொடர்ந்து சென்றது.
‘அந்தபையன் வருவானான்னு பாத்துக்கிட்டிருக்கியா’ என்றபடி நிலா வந்தாள்
‘வருவான், ஆனா அவனுக்கு நேத்து நடந்தது ஞாபகம் இருக்குமான்னு தான் தெரியல’
‘அது யாரோட கனவுங்கறத பொறுத்துதான் இருக்கு’
‘அம்மா தாயே, நீ திருப்பி ஆரம்பிக்காத’ என்று துருவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது அபார்ட்மெண்ட் ஜன்னலில் சிறுவன்.கையசைத்த அவனை நோக்கி துருவன் மினுங்க, குட்டிப் பயல் கைதட்டினான். ‘என்னத்த பாத்துடா கைதட்டற’ என்று உள்ளே வந்த அம்மா கேட்க ‘என் ப்ரண்ட்ஸ்மா’ என்றான். ஜன்னல் பக்கம் திரும்பாமல் ‘பாத்து நில்லு சேர் வழுக்கிடப் போகுது’ என்று கூறிவிட்டு அம்மா அறையை விட்டு வெளியே சென்றாள்.
கைதட்டியபடியே ‘இன்னிக்கு நைட் என்ன கூட்டிகிட்டு போணும்’ என்ற சிறுவனின் கூக்குரலைக் கேட்டு நிலா கன்னக் குழி விழ முகம் மலர, அவளுள்ளிலிருந்து முதல் முறையாக ஊற்றெடுத்த, சூரியனிடமிருந்து வருவதை விட அடர்த்தியான மஞ்சள் நிற ஒளியைக் கண்டு துருவன் சிரித்தான். அந்த மஞ்சள் சிரிப்பொலியை கேட்டு மற்ற கோள்களும், நட்சத்திரங்களும்தங்கள் இயக்கத்தை நிறுத்தி அவர்களிருவரையும்விழி இமைக்காமல் பார்த்தபடி இருந்தன. சீம்பாலின் நிறத்திற்கு மாறிய பாற்கடலின் அலைக்காற்று அங்கு துயில் கொண்டிருந்த ‘அவர்’ மீது பரவ கண் திறக்காமல் புன்னகைத்தார். பாதாள உலகில், மூன்று தலையுடைய தன் காவல் நாய்மஞ்சள் ஒலிகற்றையை சுவாசித்துமயங்கிதன் சர்ப்ப வாலை தரையில் தட்டியபடி படுத்து விட்டதை கண்ட ஹேட்ஸ், தன் சக பேரரசரான மகாபலியிடம் அந்த இனிய ஓசை குறித்து வினவ அவர் தமிழும், மலையாளமும் கலந்த மொழியில் விளக்கினார். அந்தி மாலையின் வண்ணங்களினால் நனைந்திருந்த பூலோகத்தை சிறுவனின் கைதட்டல் மென் ஊதா நிறமாக நிரப்ப மானிடர் ஒரு கணம் மயங்கி நின்றனர்.
அழகு மற்றும் கவித்துவம் வாய்ந்த முடிவு…..காலத்துக்கள்.. இந்த கதை ஒரு மை கல்…. உங்களின் கதை பயணத்தில்…தனிமையின் அழகு ஊஞ்சல் ஆடுகின்றது..