உஷாதீபன்
அனைத்துப் பணியாளர்களும் வந்து சேரும் முன் கிளம்பி விட வேண்டும் என்று மனம் பரபரத்தது. அன்றைக்கென்று பலரும் சீக்கிரமே வருவது போல் தோன்றியது. மாடி அலுவலகத்திற்குச் செல்பவர்கள் சத்தமாய் படியில் ஏறிச் செல்வது தொந்தரவாக இருந்தது. எங்கு வந்தாலும் அமைதியில்லை. புற உலகின் சப்தங்கள் மனதை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கின்றன. அமைதியைக் குலைக்கின்றன. பாதுகாப்பான அமைதியும் தனிமையும் கிடைப்பதில்லை. மனித ரகசியங்கள் சுதந்திரமற்றவை. சிக்கலில் தவிப்பவை. அவைகளால் ஏற்படும் சிடுக்குகள் அநேகம். ச்சே…! நினைக்கும் வழி செயல்படுவதில்தான் எத்தனை சங்கடங்கள்? அமைதியில்லாத, ஆரவாரமான இந்த சர்வீஸே பிடிக்கவில்லை. எங்காவது ஏகாந்தமான இடத்தில் சென்று யார் கண்ணிலும் படாமல் இருந்துவிடமாட்டோமா என்றே மனம் ஏங்குகிறது.
பக்கத்துக் தகரக் கொட்டகை பொறியியல் ஆபீசில் தளவாட சாமான்களை எடுக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. எவர் கண்ணிலும் படும் முன் நழுவி விட வேண்டும். இன்னும் சிறிது நேரம் போனால் அதிகாரியே வந்துவிடக் கூடும். அவர் பார்வையில் படக் கூடாது. பிறகு விடுப்பு எடுத்துக் கிளம்புதல் ஆகாது.
வீட்டு ஞாபகமாகவே இருந்தது. இந்நேரம் வேலையெல்லாம் முடித்திருப்பாள். கிளம்பியிருப்பாள். பஸ்ஸைப் பிடிக்க ஒரு மணி நேரம் முன்னால் போனால்தானே டயத்துக்கு ஆபீஸ் போய்ச் சேர முடியும்? அல்லல் படட்டும். அப்போதுதான் புத்தி வரும்…! அருமை தெரியும்…! பின் எப்படித்தான் மடங்க வைப்பதாம்? புதிய புதிய வழிகளைக் கண்டு பிடிக்க வேண்டியதுதான். நான் இல்லாமல் எதுவும் ஆகாது என்ற நிலைக்குக் கடத்த வேண்டும். தவியாய்த் தவித்து வந்து விழ வேண்டும். எனக்கு அட்ஜஸ்ட் ஆகவில்லையென்றால் பிறகு அவள் எதற்கு? தொட்டதற்கெல்லாம் முறுக்கிக் கொள்ளுதல்….பெரிய இடம் கொள்ளா சொத்து பத்தோடு வந்து இறங்கியவள் மாதிரி? பேரழகி என்ற நினைப்பு. நீயெல்லாம் எனக்கு ஈடா? என்பதான அலட்சியம். படிப் படியா இறக்குறேன் எல்லாத்தையும். கறுவிக் கொண்டான்.
கேஷ் புக்கை எழுதி முடித்துவிடுவோம் என்று கிளம்பி வந்திருந்தான். அதுவே இப்போது தப்பாய்ப் போயிற்று. வரவு செலவுகள் மறந்து போகும். குறித்துக் கொள்ள சோம்பேறித்தனம். நினைவில் நிற்காமலா போய்விடும்? நிற்க மறுக்கிறது இப்போது. சமீபமாய்த்தான் இந்த மறதி வந்திருக்கிறது. கவனம் பூராவும் வேறொன்றில் குவிந்திருக்கிறது. அதில் சுய இன்பம் காண்கிறது. மனிதனுக்கு யதார்த்தத்தை விடக் கற்பனை உலகில் சஞ்சரிப்பதில் தனி இன்பம். அங்கு போட்டிக்கு ஆள் கிடையாது. எதிர்வினை இருப்பதில்லை. தவறாயின் சுட்டிக்காட்ட எதுவுமில்லை. யாருமில்லை. அந்த நினைப்பின் சுழிப்பில்தான் நடப்பு மறந்து போகிறது.
கொடுக்கல் வாங்கல்கள் நினைவில் வரிசை கட்டி நிற்கும்போதே பணப்பதிவேட்டினை எழுதி முடித்து விட வேண்டும். அப்போதுதான் நிம்மதி. தாமதித்தால் தப்பு வந்து, அடித்தல் திருத்தல் என்று ஆகிவிடும். பணப்பதிவேட்டில் அப்படித் தவறுகள் நிகழ்வது சந்தேகத்தை ஏற்படுத்தும். கண்டனம் தெரிவிக்கப்படும். ஒரு சீனியர் நீங்க…இப்டியா கேஷ் புக் மெய்ன்டெயின் பண்றது? தலை குனிய வேண்டியிருக்கும். தேவையில்லாமல் அந்த மனச் சுமை எதற்கு? இதற்குத்தான் சற்றுத் தாமதமானாலும் தேவலை என்று முதல் நாளே கேஷ் புக்கை எழுதி முடித்து விட்டுக் கிளம்புவது. அது நேற்று நடவாமல் போனது. போதாக்குறைக்கு கேஷ் செஸ்டைப் பூட்டினோமா என்று வேறு ஒரு விபரீத சந்தேகம். உடம்பும் மனமும் பதற ஓடி வந்திருந்தான். எவனாவது சூறையாடியிருந்தா? அலுவலக வேலைகளைப் பொறுத்தவரை என்றுமே ஒரு நிதானம் உண்டுதான். அதுவும் கூட இப்போது தவற ஆரம்பித்திருக்கிறது. மனசும் எண்ணங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இப்படி அலைய விடக் கூடாது. அதனால் வரும் குழப்பங்கள் அநேகம். எதற்கு இந்தக் குரோதம்? இயலாமையால் எழுந்த வன்மமா?
சமீபத்தில்தான் இந்தத் தவறு அடிக்கடி நிகழ்கிறது. எந்த மனநிலை தன்னை அப்படி ஆட்கொள்ள வைக்கிறது, இதை மறக்க வைக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான். நினைப்பு பூராவும் வேறொன்றில்…லயித்திருக்கிறது. அதுவும் தெரியத்தான் செய்கிறது. ஆனால் அந்த இன்பம் தனி. அதற்கு ஈடே இல்லை. சௌந்தர்ய லோகம். றெக்கை கட்டிப் பறக்கும் லாவண்யம்…! தானாகவே தேடி வந்த சந்தோஷம். கையெட்டும் தூரத்தில். வலிய வந்து உள்ளங்கையில் தவழ்கிறது. மிதக்கிறது. அலை பாய்கிறது.
சார்….நேத்து கேஷ் பாக்ஸைப் பூட்டாமப் போயிட்டீங்க…! – வாட்ச்மேன் சம்புகன் சொன்னபோது…முதலில் அவன் மேல்தான் சந்தேகம். அடப்பாவி… பணத்தைச் சுருட்டிட்டுக் குடிக்கக் கிளம்பிடுவானே….! எனக்கு எதுவும் தெரியாதும்பானே…! – பெட்டியில் இருந்ததையெல்லாம் சரி பார்க்க ஆரம்பித்தான். கூடவே அவனிடம் கேட்டான்…பவானி வந்திச்சா…கூட்டிப் பெருக்கி, தண்ணி எடுத்து வச்சாச்சா? அது எப்பயோ வந்திட்டுப் போயிடுச்சி சார்…. –சொல்லிவிட்டு விலகி விட்டான்.
அவனும் அதுவும் ஓடிப் பிடித்து விளையாடுவதாக ஒரு செய்தி காதுக்கு வந்திருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும். விபரீதமாகுமுன் தடுத்தாக வேண்டும். இதுக்குத்தான் வயசான ஆளுகளாப் பார்த்து வாட்ச்மேனாப் போடணும்ங்கிறது…! தோணத்தான் செய்கிறது. எந்த மனசு இன்னும் தடுக்காமல் தள்ளிப் போடுகிறது? கண்டிக்கவாவது வேண்டாமா? அட…வயசானவன் சரியா இருப்பான்ங்கிறது என்னய்யா நிச்சயம்? அந்தப் பிள்ளை வேறே பார்க்கிறதுக்கு கொஞ்சம் சோக்காத்தான் இருக்கு…வேலைக்கு வந்தா அத மட்டும் கண்ணும் கருத்துமாப் பார்த்திட்டு நகர வேண்டிதானே? அதென்ன அங்கிட்டும், இங்கிட்டும் திரும்பித் திரும்பிப் பார்வை? அதுவே சரியாத் தெரிலயே…! எதுகளத்தான் நம்ப முடியுது இந்தக் காலத்துல?
பணப் பத்திரங்களெல்லாம் சரியாகவே இருந்தன. வேறு சில பாண்டுகளும் அப்படியே இருந்தன. கணக்கில் வருவது, வராதது என்று இரண்டு கவர்களில் பணம் வைத்திருப்பது வழக்கம். அலுவலகம் வரும் வி.ஐபி.க்களை உபசரிப்பதற்கென்று அதிகாரியால் கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் தொகைதான் கணக்கில் வராதது. அதற்குக் கணக்கு எழுத வேண்டும் என்கிற அவசியமில்லை. இருக்கும் வரை செலவு செய்துவிட்டு, தீர்ந்தது என்று சொன்னால் போதும். மீண்டும் வந்து சேரும். அது தனி அரசியல். அதில் எவ்வளவு இருந்தது என்று துல்லியமாய் மனதில் வைத்துக் கொண்டதில்லை. அதனாலேயே இப்போது அது குறைகிறதா என்பதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதற்குக் கணக்கு வைக்காதிருப்பது யாருக்கும் தெரிய நியாயமில்லை. அதிலிருந்து பைசா தொட்டதுமில்லை. வெறும் காசா இன்பம்? அந்தக் காசை விட்டெறிந்தால்தான் இன்பம்…!
எல்லாம் சரியாயிருக்கில்லை சார்…? என்று வேறு கேட்டுக் கொள்கிறான். ம்….ம்… – என்று முனகியதோடு சரி….அது, உன் மீது எனக்கு முழு நம்பிக்கையில்லை என்பதைச் சொல்லாமல் சொல்வது. பணப்பெட்டியைப் பூட்டாமல் வெறுமே சாத்தியிருந்தாலும் பரவாயில்லை. யாரும் அருகில் வரப்போவதில்லை. அதில் சாவியைத் தொங்கவிட்டுப் போயிருந்தால்? வீட்டிற்குப் போய் சாவியைக் காணவில்லையே என்ற சந்தேகம் கூட எழவில்லையே? ஆபீஸ் பேக்கை திறந்தால்தானே தெரியப் போகிறது? காலையில் பார்த்து அதிர்ந்தபோதுதான்…அடித்துப் பிடித்து ஓடி வரப் பண்ணியது.
எங்க இவ்வளவு பரபரப்பா கிளம்பிட்டீங்க…!? – கோபமும் ஆத்திரமுமாகக் கேட்டாள்.
கேஷ் பாக்சைப் பூட்டாம வந்திட்டேண்டீ….! ஏகப்பட்ட டாக்குமென்ட்ஸ், பணம்லாம் இருக்கு அதுல…தொலைஞ்சேன் நானு…. – பறந்து வந்தாயிற்று. இன்னும் படபடப்பு தீரவில்லை.
எதாச்சும் ஒரு சாக்கு வேணுமே உங்களுக்கு…இன்னைக்கும் நா பஸ்ல போய் சாகணுமா? எல்லாம் என் தலைவிதி….உங்களக் கட்டிட்டு அழறதுக்கு…- அவள் பேசியது மேற்கொண்டு காதில் எதுவும் ஏறவில்லை. உடம்போடு பதறுகிறது. சர்வ நாடியும் ஒடுங்கிப் போனது.
ஒரு தவறினால் மனம் தொடர்ந்து சிதைகிறது. சிந்தனை சிதறுகிறது. கவனம் பிசகுகிறது. கருத்து தவறுகிறது. ஆனால் அந்தத் தவறைத் தவிர்க்க முடியவில்லை. தவறு என்று தெரிகிறதுதான். ஆசை சப்புக்கொட்டிக் கொள்கிறது. புத்தியை மறைக்கிறது. ஒரே ருசி என்றும் நிலைப்பதில்லை. சுலபமாய்க் கிடைப்பதற்கும் என்றும் மதிப்பில்லைதான். எதையோ பழி வாங்கும் உக்ரம். யாரைக் கேவலப்படுத்த இது? எதுவோ கிடைக்காத கோபத்தில், அல்லது கிடைத்துப் போதாத ஏக்கத்தில், வெறியில் இன்னொன்று சுலபமாகக் கிடைக்கும்போது அதை அனுபவிக்கத் துடிக்கும் வேகம். சுலபமாகக் கிடைப்பது எதுவும் நலம் விளைவிக்காதுதான். கேட்டுக்கு வழி வகுக்கும்தான். ஆனாலும் அதில்தான் ஈர்ப்பு ஏற்படுகிறது மனிதனுக்கு. அதனை நாடித்தான் மனம் தவிக்கிறது. நக்கித் தின்பதில்தான் இன்பம்….!
என்ன ஒரு பாவனை? என்ன ஒரு சிரிப்பு? நெளிந்தும், சுழித்தும், உதட்டைப் பிதுக்கியும், கடித்தும், மடித்தும், கண்களைச் சுருக்கியும், மயக்கியும், ஓரப்பார்வை பார்த்தும்….வீட்டுப் பெண்கள் இதையெல்லாம் செய்ய முடியுமா? ஒரு சினிமா நடிகை இதையெல்லாம் காட்டுகிறாளே என்று மனைவியிடம் கேட்க முடியுமா? அதே சினிமா நடிகை அவளது கணவனிடம் அப்படியிருக்க முடியுமா? தனிமையென்றாலும், அந்தரங்கமேதான் ஆனாலும் அந்த நெளிப்பும், வளைவும், சிமிட்டலும், சுழிப்பும் குடும்பப் பெண்ணுக்கு உகந்ததா? அல்லது இப்படியெல்லாம் செய்யேன்….என்றுதான் கேட்க ஏலுமா? நீங்க என்ன லூசா? என்று பதிலுக்குக் கேட்டால்? சினிமாவுல வர்றமாதிரி அத்தான்னு கூப்பிடச் சொல்வீங்க போல்ருக்கே…? கிறுக்கு…!
அவள நினைச்சிட்டுத்தான் உன்னை அணைக்கனும் போல்ருக்கு…..இப்டி உம்முனு இருந்தீன்னா? கொஞ்சமாச்சும் ஒரு சிணுங்கல், குலுங்கல், சிரிப்பு, சுளிப்பு, தவிப்பு, பெருமூச்சு, வெட்கம், வேகம்….இதுல எதுவுமே கிடையாதா உன்கிட்டே? ஊடல்னா என்னன்னு தெரியுமா? அது காமத்திற்கு இன்பம்னு சொன்னதை அறிவாயா? வீட்டு வேலை செய்றமாதிரி, எல்லாம் முடிஞ்சு ராத்திரி படுக்கைல விழுந்தவுடனே நீட்டி நிமிர்ந்திற வேண்டிதானா? என்னவோ பண்ணிக்கோன்னு இப்டி மரக்கட்டை மாதிரிக் கிடந்தீன்னா? தமிழ்ல முயங்குதல்னு ஒரு வார்த்தை உண்டு தெரியுமா? முயல் குட்டியான்னு கேட்டுறாத…! அதுக்கு என்ன அர்த்தம்…ம்? ரெண்டு பேரும் சேர்ந்து சொர்க்கத்துக்குப் போறது? அதெல்லாம் நீ என்னத்தக் கண்ட? ஆத்தக் கண்டயா, அழகரச் சேவிச்சியா? எதாச்சும் இப்டிக் கேட்டா கிலோ என்ன விலைம்பே….அதானே உனக்குத் தெரிஞ்சது? அட…நான் படுத்தறதை ரசிக்கவாச்சும் தெரியுதா உனக்கு? கண்ண மூடிட்டுக் கிடந்தா? தூங்கிட்டியோன்னுல்ல நினைக்க வேண்டிர்க்கு…கொர்ர்ர்ன்னு குறட்டை வேறே…! பெண்களுக்கு மென்மை வேண்டாமா? இப்டியா ஆம்பிளை மாதிரி ஆக்டிவிட்டீஸ்?
.ஜவுளிக்கடை பொம்மையப் பார்க்கத்தான் முடியும்…அனுபவிக்க முடியுமா? அதுபோலதான் நீயும்…! அதாவது அலங்கரிச்சு நிற்கும். நீ? எப்பப்பாரு…விடியா மூஞ்சி மாதிரியே இருக்க? அந்த முகத்தக் கொஞ்சம் சோப்புப் போட்டுக் கழுவி, பளிச்சினு இருந்தாத்தான் என்ன? வேறே யாரும் நோக்க வேண்டாம். நா பார்க்க வேண்டாமா? முகர்ந்து பார்க்கைல உன்னோட வியர்வையையா நக்குறது? அதுக்கு ஒரு மணம் இருந்தாலும் பரவால்ல…பீரியட் டைம் மாதிரி வாடை வருது…வாமிட் வருது எனக்கு….உன் வியாதி ஏதும் எனக்கும் தொத்திரும் போல்ருக்கு…என்னா கிரகம்டா சாமி…! இப்டி ஒரு சேர்க்கைய எவன் கண்டு பிடிச்சான்? இயற்கை வகுத்தது இப்டித்தான் இருக்குமா?
ஒரு கோடு போட்டு…அதுலயே நடக்கணும்னு சொல்லி அங்க இங்க திரும்பக் கூடாதுன்னு கன்ட்ரோல்டா வளர்த்து ஆளாக்கி என்கிட்டக் கொண்டு வந்து விட்டுட்டாங்க உங்க வீட்ல….இப்ப நா…பட்டுக்கிட்டிருக்கேன்….கல்யாணம் பண்ணியாச்சுன்னா அடுத்தாப்ல குழந்தை பெத்துக்கணும்ங்கிறது வழி வழியா வந்திட்டிருக்கிற நடைமுறை…ஆனா அதுக்கு முன்னாடி கணவன் மனைவி ரெண்டு பேரும் சந்தோஷமாக் கொஞ்ச நாட்களை, ஒரு ரெண்டு வருஷத்தை… விட்டேத்தியா அனுபவிக்கிறதுன்னு ஒண்ணு இருக்கே….அது தெரியுமா? எதுக்காக அப்டிம்பே…! எல்லாம் என் தலையெழுத்து! அதுக்கும் குழந்தைக்கும் சம்பந்தம் கிடையாதாக்கும்….நா சொல்றது புரியுதா? அப்டிக் கழியுற நாட்கள் கொஞ்சம் அசிங்கமாவும் கூட இருக்கும்…இருக்கத்தான் செய்யும்….ச்சீய்….இப்டியெல்லாமா ன்னு மொகத்தச் சுழிக்கக் கூடாது…எழுந்து ஓடக் கூடாது….தெரிஞ்சிதா? அதுலதான் சிலபேருக்கு சந்தோஷம்…வள்ளுவர் கூட ஒரு குறள்ல சொல்லியிருக்கார்…தெரியுமில்ல…செவ்வி தலைப்படுதல்னு… நீ என்னத்தப்படிச்சே…செவ்வீன்னா என்னன்னு கேட்பே…..படிச்சிட்டு….உவ்வே…..ன்னிருப்பே. அதானே உங்க வீட்ல சொல்லிக் கொடுத்திருக்கிறது?
படுக்கையில் அவளோடு இப்படித்தான். அதில் ஆர்வம் இருப்பதாகவே தெரியவில்லை. மாதம் மூன்று நாட்கள் ஒதுங்குகிறாளே…! அதையாவது தெளிவாய்ப் புரிந்து கொண்டிருப்பாளா? இன்னிக்குதானே குளிச்சே….இன்னும் ஒரு வாரம் பத்து நாளைக்குப் பக்கத்துல வரப்படாது…தெரிஞ்சிதா…? நானும் நெருங்க மாட்டேன்… உறீம்….உன்கிட்டப் போய் சொல்றன் பாரு….செகன்ட் வீக்தான் உடம்பு பக்குவமா இருக்கும்….அதான் சரியான டைம்….எல்லாத்துக்குமே ஒரு முறை இருக்குடீ…ஒரு சிஸ்டம் இருக்கு….வகுத்து வச்சிருக்காங்க….எதெதுல சிஸ்டமா இருக்கணுமோ அததுல அப்டித்தான் இருந்தாகணும்…அதுலயும் பிசகுறபோதுதான்…தப்புத்தண்டா ஆயிடுது….நா சொல்றது புரியுதா? புரியலியா? ம்…ம்…ம்னு மண்டைய மண்டைய ஆட்டு….அதுவும் உங்க வீட்ல சொல்லிக் கொடுத்ததுதான்….இல்லன்னா இந்த ஆட்டு ஆட்டுவியா?
மனுஷன் தாங்க முடியாத ஒழுக்கத்துல இருந்தா அசடுன்னு ஆயிடும். இருக்க வேண்டிதான்…அவசியம்தான்…அதுக்காக எங்க எங்க…யார் யார்ட்ட…எப்ப…எப்போன்னு ஒரு கணக்கு இல்லியா? புருஷன்ட்டயே இந்த ஒதுங்கு ஒதுங்கினா? நா தொட்டாலே கூசுதுங்கிறே…அப்புறம் எதுக்குக் கல்யாணம் பண்ணினே? எங்கயும், எதிலயும் கை போட விடமாட்டேங்கிறே? உன் கூச்சத்தப் போக்கணும்னா மொத்தமா உடம்புல துணியில்லாமத்தான் ஆக்கணும்…அது நல்லாயிருக்குமா? குடும்பக் குத்து விளக்கு…! அது கூட ரெண்டு மனசும் சம்மதிச்சு நடக்கறதுதாண்டீ…. உனக்கு எங்க தெரியப் போகுது… அதெல்லாம்..? நீ ஒரு பாஷாண்டி..!..
நாளும் பொழுதும் அப்படியே விடிந்திருக்கின்றன. எப்பொழுது தூங்கினோம் என்று தெரியாமல் கண்ணயர்ந்திருக்கிறான். அவளுக்கு எதுவுமில்லை. பரப்பிரம்மம், ஜெகந்நாதம்….!.
உனக்கும் எனக்கும் ஒண்ணே ஒண்ணுதான் படு பொருத்தம். சொல்லட்டா… நா சங்கரன்…நீ சங்கரி….இது ஒண்ணுதான்….சுந்தரி…சௌந்தரி…நிரந்தரியே…..ன்னு இப்ப நீ ஆகிப் போனே….! விட்டு உதறவா முடியும்? கட்டி இழுத்திட்டுப் போய்த்தான் ஆகணும்…கரை சேருவோமோ இல்ல…கலத்துலயே மிதக்கப் போறாமோ…? யார் கண்டது?
எத்தனையோ நாட்கள் இப்படித்தான் கழிந்திருக்கின்றன. உங்களுக்கு வேறே வேலையே இல்லையா? காலைலர்ந்து வீட்டு வேலை, ஆபீஸ் வேலைன்னு ஓய்ஞ்சு வந்து விழுந்திருக்கேன்…சரசம் பண்ண வர்றீங்களாக்கும்….விண்ணு விண்ணூங்குது உங்களுக்கு…எனக்கானா அசந்து அண்ணாக்கத்து வருது….ஆபீஸ்ங்கிற எடத்துக்குப் போய் வெறுமே பெஞ்சைத் தேய்ச்சிட்டு வந்தா இப்டித்தான் இருக்கும்..என்னடா செய்வோம்னு…..மானேஜர்ங்கிற பேர்ல இருக்கிறவனையெல்லாம் விரட்டிக்கிட்டுத் திரிய வேண்டியது…உங்களுக்குன்னு அல்லாடட் ஒர்க் கிடையாது….பிறகென்ன கேட்கணுமா? உங்க சில்மிஷத்துக்கெல்லா நாந்தான் கிடைச்சனா? பேசாமப் போய்ப் படுங்க….சதா தொந்தரவு பண்ணிக்கிட்டு…..! நீங்க பக்கத்துல வந்தாலே எனக்கு உடம்பெல்லாம் பூரான் ஊர்ற மாதிரி இருக்கு…ஒரே வேர்வை நாத்தம்….!
அடிச் சண்டாளி…! நீ ரொம்ப மணக்கிறியோ..? உன் நாத்தம் பெரிசா…என் நாத்தம் பெரிசா? உலகமே நாத்தந்தாண்டீ….மலக் குழிதான் இந்த உடம்பே…! சுமந்திட்டுத்தான திரியறோம்? என்னத்தத் தெரிஞ்சு வச்சிருக்கே நீ…? ராத்திரி ஒரு வாய் அரிசியை வாய்ல போட்டுட்டுத் தூங்கி எந்திரிச்சு…காலைல துப்பு…அதுல எது வாய் வச்சாலும் செத்துப் போயிரும்…மனுஷனே வெஷந்தான்…எல்லாத்தோடயும்தான் இந்த வாழ்க்கை…அதப் புரிஞ்சிக்கோ….!
என்ன தொந்தரவு செய்தேன் என்று இவள் இப்படிச் சலித்துக் கொள்கிறாள்? கட்டியணைப்பது கூட ஒரு குற்றமா? அது கூட இல்லாமல் எப்படி ஆசையை வெளிப்படுத்துவதாம்? எப்படி ஆரம்பிப்பதாம்? ஆரம்பமே அதுதானே? அதற்கே இவள் இப்படிச் சலித்துக் கொள்கிறாள்? தாம்பத்ய உறவிலேயே விருப்பம் இல்லையோ? அவள் வீட்டிலே யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையோ? இந்த உலகாயத அனுபவங்கள் எதுவும் கற்றுக் கொடுக்கவில்லையோ? ஓட்டை சினிமாவே ஆயிரம் கற்றுத் தருமே…இவளுக்கு அதுகூடவா இல்லாமல் போனது?
எண்ணங்கள் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன. அதனூடேதான் அன்றாட நாட்களும் கழிந்து கொண்டிருக்கின்றன. சண்டையும், சச்சரவுமாய்….ஊடலும் கூடலுமாய் இருக்க வேண்டிய வாழ்க்கை அதற்கு நேர்மாறாய்…..நகை முரண் அல்லாது வேறென்ன?
மணியைப் பார்த்தான். பத்து நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவராய் காம்பவுன்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். இவன் அலுவலகத்திற்கும், மாடி அலுவலகத்திற்கும் என்று சற்றுத் தாமதமாய்த்தான் வருவார்கள். நிர்வாகப் பிரிவு. அங்கே அதுதான் வழக்கமாய் இருந்தது. வருகைப் பதிவேட்டைப் பிரித்து விடுப்பு விண்ணப்பத்தை நுழைத்தான்.
சம்புகன்…லீவு லெட்டர் வச்சிருக்கேன்….இன்னைக்கு ஒரு நாள் நா லீவு…அன்புத்தாய் வந்ததும் சொல்லிடுங்க…உங்க பதிலி சாமியப்பன் வந்த பிறகு , நீங்க கிளம்புங்க…சரியா….? – சொல்லிவிட்டு இவன் கிளம்பினான். அடுத்த இன்சார்ஜ் அன்புத்தாய். சீனியர் அஸிஸ்டென்ட். அதனிடம்தான் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அதுவே சந்தேகக் கேஸ்…உடம்பு முடியாதது. என்று லீவு போடும் என்று சொல்லவே முடியாது. இப்படி ஆட்களை வைத்துக் கொண்டுதான் நிர்வாகம் பண்ண வேண்டியிருக்கிறது. ஒரு அவசர ஆத்திரத்திற்குத் தடங்கலின்றி லீவு போட முடிவதில்லை.. அன்புத்தாய் போலானவர்கள் அதைப்பற்றியெல்லாம் நினைப்பதில்லை. நினைச்சா லீவு….நினைச்சா ஆபீஸ்…அவர்கள் வசதிக்குத்தான் அலுவலகம். அலுவலக வசதிக்கு அவர்களில்லை.
மனதில் என்னவெல்லாமோ குரோதமாய்த் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. அடுத்தவர்களிடம் என்னடா தப்புக் கிடைக்கும் என்று அலைகிறது..காரணமில்லாமல் குற்றம் கண்டுபிடிக்க முனைகிறது. தான் தப்புச் செய்வதுபோல் மற்றவர்களும்தான் செய்கிறார்கள் என்று உறுதி செய்யத் துடிக்கிறது. தொட்டால் குத்தம் என்று எதுவும் அகப்படாதா எனத் தேடுகிறது. எல்லோரும் சுதந்திரமாயும், சந்தோஷமாயும் இருப்பதாகவும், தான் மட்டும் எதிலும் தோல்வியையே சந்திப்பதாயும் குமுறுகிறது.
அட…குடும்ப வாழ்க்கையாவது சந்தோஷமாய் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. எளிய, நடுத்தர வர்க்க மனிதர்களுக்குண்டான சின்னச் சின்னச் ஆசைகளும், சந்தோஷமுமே வீட்டில் மனைவியுடனும், குழந்தைகள் இருந்தால் அவைகளோடும் கொஞ்சி விளையாடி தங்கு தடையற்று அனுபவிப்பதுதான். குழந்தைக்கே வழியில்லை இன்னும்…அட…பொண்டாட்டியுடனாவது சந்தோஷமாய் நேரத்தைக் கழிக்கலாம் என்றால் அதற்குமா ஆயிரத்தெட்டு சுணக்கங்கள்? அவளே ஒரு தாங்க முடியாத நோக்காடாய் இருந்தால்? கழிவிரக்கம்…
அவன் லீவு போட்டுவிட்டு வரப் போகிறான் என்பது அவளுக்குத் தெரியாது. காலையில் அவன் சீக்கிரமே கிளம்பி ஆபீஸ் வந்து விட்டதால் நிச்சயம் அவள் உறரிபரியாய்க் கிளம்பத்தான் செய்வாள். பஸ்ஸில் போயாக வேண்டுமே? அவள் கிளம்புவதற்கு முன் கண்டிப்பாக நளினி வரப்போவதில்லை. எத்தனை அழகான பெயர். வேலைக்காரிக்குப் பெயர் நளினி…! நளினி என்று பெயர் வைத்து வளர்ந்து பெரியவளாகி விட்டபின்தானே அவள் வேலைக்காரியானாள்…! அதற்காக அவளிடம் அழகு தங்கக் கூடாதா? நளினம் நடனமாடக் கூடாதா? வேலைக்காரிகளிடம்தானே பெரும்பாலும் அழகு கொட்டிக் கிடக்கிறது? கேட்பாரற்று தன்னிச்சையாய் வளர்ந்து காடு போல…!
கொல்லைப்புற முற்றத்தில் பாத்திரங்கள் கிடக்கும் என்று அந்தப் பெண் சைடு வழியாகப் பின்புறம் வந்து, தேய்த்து அடுக்கிவிட்டுப் போய்விடும். சுள்ளென்ற வெய்யிலில் சில்வர் பாத்திரங்கள் காய்ந்து நெருப்புக் கனிந்ததுபோல் செவேலென்று பளபளக்கும். மாலை வீடு வந்து அவைகளை எடுத்து உள்ளே அடுக்கும்போது, எவ்வளவு ஆரோக்கியமா இருக்கு பாருங்க….என்பாள் சங்கரி. சுத்தம் சோறு போடும்…! பெரிய்ய்ய்ய தத்துவம் கிழிகிறது. சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்து என்ன செய்ய? மனசு அழுக்காகத்தானே கிடக்கிறது? எதைக் கொண்டு அதைச் சுத்தம் செய்வது? இந்த உடம்பே அழுக்கு…அழுக்குக்குள்தான் அழகும்…அழகு சிதையும்போது அழுக்கு. அது மறையும்போது அழகு. மீண்டும் அழுக்கு….மாறி…மாறி….சிதைந்து மறைந்து….மறைந்து சிதைந்து….
என்ன ஆரோக்கியமோ? ரொம்பத் தெரிந்த மாதிரி…! பகல் பூராவும் அத்தனை பாத்திரங்களும் வெளிப்பக்கம் கெடக்கு. யார் வர்றா, யார் போறாங்கிறதே தெரியாது. நாம பொழுதடைஞ்சு வீடு வர்றோம்….எவனாவது ஆள் போக்குவரத்து இல்லைன்னு தெரிஞ்சு பாத்திரங்களை லவுட்டிட்டுப் போயிட்டான்னா? அந்தம்மாவே ஒருத்தனை அனுப்புதுன்னு வச்சிக்குவோம்…. நமக்குத் தெரியவா போகுது? அதுகிட்டக் கேட்க முடியுமா? யாரை எதுக்குன்னு நம்புறது? (என்னையே என்னால நம்ப முடியல்லயே…!)
ஆம்மா….இந்த ஓட்டைப் பாத்திரத்தை எடுத்திட்டுப் போய்த்தான்….கொழிச்சிடப் போறானாக்கும்…நீங்க ஒண்ணு….பஞ்சத்துக்கு அடிபட்டவன் கூடத் தொட மாட்டான்…..இப்பல்லாம் லம்ப்பா அடிக்கிறதுதான்….எத்தனை நியூஸ் பார்க்கிறோம்…?
அதுக்கில்லடீ நா சொல்றது…..ஒரு பொழுது தீர்த்தம் சாப்பிடுறதுக்கு ஆச்சுன்னு தூக்கிட்டுப் போகலாமுல்ல….? தண்ணியடிக்கிறவனுக்கு காசில்லேன்னா புத்தி அப்டித்தான் போகும்….அது தெரியுமா உனக்கு? இன்னிக்கு அரசாங்கம் இலவசமாக் கொடுக்கிற காசே கூட அந்த வகைலதான போயிட்டிருக்கு…..எவன் ஒழுங்கா வீட்டுல கொண்டு போய்க் கொடுக்கிறான்? ஒரு சர்க்கிள் மாதிரி திரும்ப கவர்ன்மென்ட்கிட்டயே அந்தக் காசு வந்திடுதாக்கும்…..
அப்ப நீங்க இடைல வந்து பாத்திரங்களை உள்ளே எடுத்து வச்சிட்டு, வீட்டைப் பூட்டிட்டு, திரும்ப ஆபீஸ் போங்க….என்னால நடுவுலல்லாம் கிளம்பி வர முடியாது….உங்களுக்குத்தான் வண்டி இருக்குல்ல….
கேட்டால் இப்படிச் சொல்லிக் கொள்ளலாம். அவளே வழி சொல்லிக் கொடுத்திருக்கிறாள்.
அதிகச் சத்தமின்றி வண்டியை வராண்டாவில் ஏற்றி நிறுத்தினான். தான் இடைப்பட்ட நேரத்தில் வந்திருப்பது எவருக்கும் தெரியப் கூடாது. பக்கத்து, எதிர் வீடுகள் உள்பட…யார் எப்போ…வந்தா, போனா இவனுகளுக்கென்ன வந்தது? மெல்ல வீட்டைத் திறந்தான். திரையை இழுத்து விட்டான். எந்தப் பக்கத்துலயிருந்தாவது கண்ணு இந்தப் பக்கம் இருந்தா?அடுத்தவன் என்ன செய்றான்ங்கிறதுதானே இவனுகளுக்கு கவனமாயிருக்கு? உறாலைக் கடந்து அடுப்படியைத் தாண்டி பூட்டியிருந்த கொல்லை இரும்புக் கதவுப் பக்கம் போய்ப் பம்மியபோது, பாத்திரங்கள் தேய்படும் சத்தம் கேட்டது. வந்திருக்கிறாள். வேலை நடக்கிறது……
பூட்டியிருந்த கதவைத் திறந்தான். அவனைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. அடர்ந்த கருங் கூந்தலை இழுத்துக் கட்டி செழிப்பான கொண்டையாய் முடிந்து அதில் வட்டமாய் மல்லிகைச் சரம்.. அகன்ற நெற்றியில் சற்றே பெரிய வட்டமாய்ப் பதிந்திருந்த குங்குமப் பொட்டு, அவள் முகத்திற்கு மிகுந்த சோபையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பாத்திரம் தேய்க்க வர்றவளுக்கு எதுக்கு இம்புட்டு அலங்காரம்? எனக்காகத்தானா? ஆள வீழ்த்துறதுக்கான அஸ்திரமா? சரிய்ய்யான கைகாரியா இருப்பா போல்ருக்கு? தொடை வரை ஏற்றி விட்டிருந்த புடவையை இறக்காத நிலையிலேயே வெறித்து நோக்குவதைக் கண்டு அவளிடம் புன்னகை மலர்ந்தது. பார்த்தா பார்க்கட்டுமே…! என்ன கெட்டுப் போகுதாம்…! எவ்வளவு தாராளம்? காலை வெயிலில் பளபளக்கும் செழுமை. அகன்று பரந்திருக்கும் பிருஷ்டம்…! அப்டியே அலேக்காக உள்ளே தூக்கிட்டுப் போயிடுவமா…? பாவி…அநியாயம் பண்றாளே…?
இதுக்காகத்தான் வந்தீகளாக்கும்……நல்லாத்தான் ப்ளான் பண்றீக…..என்றவாறே தேய்த்துக் கழுவிய பாத்திரங்களை வாளியில் அடுக்கி உள்ளே எடுத்து வந்தாள். அதற்கு மேல் அவளே தாங்க மாட்டாள். எலித் தொல்லை ஜாஸ்தி என்று கவனமாய் எல்லா ஜன்னல்களையும் அடைத்துக் கொக்கி போட்டுப் போயிருந்தாள் சங்கரி. வெளியிலிருந்து எவருக்கும் ஒரு பொட்டுத் தெரியாது. தானாகவே அமைந்து விட்ட பாதுகாப்பான சூழல். வசதியான மறைவு. வாசல் கதவு மட்டும் பூட்ட வேண்டும்…..ஊறீம்….அது கூடாது…பூட்டினால்தான் சந்தேகம் வரும்…ஏதும் சத்தம் வருகிறதா என்பதில் மட்டும் கவனமிருந்தால் போதும்….எந்த மயக்கத்திலும் ஜாக்கிரதை தேவை….எதிலும் மனிதனுக்கு முழுச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாதோ? ஏதேனும் தீய சக்திகள் தடை செய்ய சுற்றிலும் வட்டமிட்டுக் கொண்டேயிருக்குமோ?
கொஞ்சம் பாத்திரங்கள் இன்னும் தேய்ப்பதற்குக் கிடந்தன. அப்படி மீதி வைப்பதுதான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. அந்த சூட்சுமம் அவளுக்குத் தெரியும். வாளியிலுள்ள பாத்திரங்களை மேடையில் அடுக்குவதுபோல் பாவனை செய்தாள். ஒரு மாதிரி மயக்கப் பார்வையோடு-(அந்தக் கண்ணுதான் என்ன வேலையெல்லாம் பண்ணுது?) வழக்கமான அந்த ஓரத்தில் ஒதுங்கினாள். அவளுக்கும் வேண்டியிருக்கு போலிருக்கு…!. ஒரு புதுவகையான மணம் அவளிடம். அது என்றோ பிடித்துப் போனது. மூக்கிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அதுதான் எப்போ எப்போ என்று துடிக்கிறது. தொட்டு விடத் தொட்டுவிடத் தொடர்கிறது.
நளினீ…..உங்கிட்டத்தான் எவ்வளவு நளினம்….அடியே என் லட்டு…..என்றவாறே அவளை நெருங்கினான் சங்கரன்.
விரல் கூடப் படவில்லை. வாசல் கேட் திறக்கும் சத்தம். விடுவிடுவென்று கொல்லைப் பக்கம் அவள் பாய, இவன் வாயிலை நோக்கி ஓட…….வந்திட்டீங்களா…..எங்க வராமப் போயிடுவீங்களோன்னு வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்னு சொல்லிட்டு வந்தேன்….எதிர்பார்க்கலேல்ல…? என்றவாறே அவசரமாய் நுழைந்தாள் சங்கரி….! எதையோ நினைத்துக் கொண்டுதான் கிளம்பி வந்திருப்பாளோ? நல்ல வேளை பூட்டவில்லை. பூட்டியிருந்தால் சட்டென்று சந்தேகப்பட்டிருப்பாள்.
லீவு போட்டுட்டியா…..? பலே….. என்றான் சங்கரன். அவன் சந்தோஷம் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. என்றும் வராதவள் வந்தால்…?
அதான் சொல்லிட்டு வந்திருக்கேன்னு சொன்னனே…. எங்கிருந்து லீவு போடுறது…. நீங்கதான் திரும்பக் கொண்டு விடணும்……. நல்லதாப் போச்சு எனக்கு….. மத்தியான வேளைல பஸ்ஸே வராது…..
சொல்லியவாறே வேகமாய்க் கொல்லைப் பக்கம் நோக்கிப் போனவள்…..ஒரு நிமிடம் எதையோ நோக்கினாள். பிறகு கேட்டாள். என்னா கேள்விடா சாமி….!
அவர் வந்தப்புறம் நீ வந்தியா….இல்ல… முன்னமேயே வந்திட்டியா….? என்றாள் நளினியைப் பார்த்து. இதென்ன கேள்வி? எதிராளியை உலுக்குவதில் திறமைசாலி…….
ஏன்க்கா அப்டிக் கேட்குறீங்க…? – தலையைக் குனிந்தவாறே முனகினாள் நளினி.
இல்ல…கொல்லைக் கதவைத் திறந்து வச்சிருக்காரேன்னு தோணிச்சி….அதால கேட்டேன்…
அவள் முகம் இறுகிப் போயிற்று.
முன்னமயே வந்திட்டேன்க்கா….. என்றாள்.
உங்கள யாரு கொல்லைக் கதவைத் திறக்கச் சொன்னது? அவபாட்டுக்குத் தேய்ச்சு அடுக்கிட்டுப் போறா…! வெளியேறின பிறகு சாவகாசமா உள்ளே எடுத்து வச்சா ஆகாதா? சைடு வழியா வந்து சைடு வழியாவே போகட்டும்னுதானே கொல்லைல பாத்திரங்களைப் போட்டு வைக்கிறது? அப்படி என்ன அவசரம் உங்களுக்கு? வந்தா அமுக்கிட்டு உட்கார்ந்திருக்க மாட்டீங்களா? அவளென்ன பார்வை வேண்டிருக்கு?
சங்கரியின் சுளீரென்ற அந்தக் கேள்வியின் வித்தியாசமான, கொச்சையான வார்த்தைப் பிரயோகத்தில் அப்படியே ஆடிப்போய் ஸ்தம்பித்து நின்றான் இவன்.
——————————————————-