சீரா
மும்பை பேருந்துகளில் வயோதிகர்களுக்கு இருக்கை கிடைக்குமென்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. வயோதிகன் என்று சொல்லுமளவிற்கு வயதொன்றும் ஆகவில்லை ஐம்பத்தேழுதான். ஆனால் ஜேப்படிக்காரர்கள் சமத்துவவாதிகள், நிற்பவர் வயோதிகர் இளைஞர் என்ற வஞ்சகம் பாராமல் சமர்த்தாக எடுத்துக்கொள்வார்கள். அதிலிருந்து தப்பிக்க வயோதிகன் போர்வைக்குள் மறைந்து இருக்கைத் தேட வேண்டியிருக்கிறது. சாலையின் இராக ஆரோகண அவரோகணதில் பேருந்து உருண்டுசெல்லும். ஓட்டுனரின் சாரீரத்திற்கு ஏற்றார்போல் இராகத்தின் வளைவு சுளிவுகள் கமகங்கள்; கானகாலம் என்றேதுமின்றி நித்தம் மாறும் இராகங்கள். மும்பை வீதிகளில் எல்லா வண்டிகளும் திரிஸ்தாயியில் சஞ்சரிக்கும் மோகனம் தான்.
கர்நாடக சங்கீதம் பரிச்சயமானது பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில். வேறு வேலை கிடைக்கும் வரை அந்த வேலைதான் என்றாகிவிட்டது. பெரிதாக ஒன்றுமில்லை தேமே என்று கதவருகே நிற்க வேண்டும். கச்சேரி தொடங்கி ஒருமணிநேரம் கழித்துகூட வருவார்கள், வெடுக்கென்று கதவை திறப்பார்கள், இருக்கை இருக்கிறதா என்று இரண்டு நிமிஷம் நோட்டமிடுவார்கள். இந்தச் சந்தடியை பார்வையாளர்களால் சகிக்க முடியாது. அதனால் நான் கச்சேரி முடியும் வரை நிற்க வேண்டும், கதவை அரவமின்றி திறந்து இருக்கையைச் சுட்டிக்காட்ட வேண்டும். நிற்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.
நிற்க வேண்டும், நிற்க நிற்க தான் நிலத்தின் இசை கேட்க்கும். நிலம் தன்னுள் ஊன்றியவர்களுக்கு இசைத்துக் கொண்டே இருக்கிறது. நிலத்தின் மேல் நமது இசைக்கு மாறாய் கீழொரு இசை கிளரப்படுகிறது. மேலெழும் அதி தாரஸ்தாயி கீழே அனு மந்திர ஸ்தாயியாய் வீழ்கிறது, சம்பூர்ண சாதவம் சாதவ சம்பூர்ணமாய் சுழல்கிறது. வீழ்தல், அங்கு எழுதல் என்பதே இல்லை வீழ்தல் மட்டும் தான். முந்தைய கணத்தைவிட இந்தக்கணம் ஆழமாக வீழ்ந்து முந்தைய வீழ்தலை எழுதலாய் காட்டும் மாயம். மேலெழும் காந்தாரத்திற்கு சிலிர்த்து நிசாதத்திற்கு அடங்கும்.பிரம்மாண்டமானவை அதற்குள் பொதிந்திருக்கும் மறுபக்கத்தை தன்னுள் ஒன்றாதவருக்கு காட்டுவதில்லை, தெய்வத்தைப் போல கடலைப் போல மலையைப் போல யானையைப் போல. நிலத்தின் இக்குறும்புகளும் அதனுள் ஊன்றியுள்ளவர்களுக்கே பிரத்யேகமானவை. சிலநாட்களில் மரங்களின் அசைவுகளெல்லாம் திருதமாய் பட்டது. கதவருகே நின்றுக்கொண்டு நிலத்தின் இசையில் சஞ்சரிப்பேன்.
மேலாளர் தெரிந்தவரென்பதால் இதைச்செய்யச் சொன்னார் மற்றபடி இது ஒரு வேலையில்லை கச்சேரிக்கான மேடையலங்காரங்களுக்கு உதவ வேண்டும்,நின்றுக்கொண்டே.
நிற்றலென்பது என் வாழ்வோடு பிணைந்தது. சிலநேரங்களில் யோசிக்கையில் நிற்றலைப் பிரித்துவிட்டால் என்னில் எதுவுமே மிஞ்சாது என்று தோன்றும். மும்பைக்கு வந்ததற்கு பின்பும் நிற்றல் தான் இருக்கிறது. ஊரில் கொட்டகையில் மகத்திற்கொரு அயல்நாட்டு படங்கள் வரும், அதில் வரும் முத்தாடல்களும் காட்சிகளும் நம்மூர் படங்களில் கிடையாது. ஆட்டத்திற்கு போகிற அவசரத்தில் கொம்பை ஆழமாக ஊணவில்லை, ஆள் வந்து பார்ப்பதற்குள் மாடு கால்வாசிக்கும் மேல் வயலுள் புகுந்துவிட்டது. இராத்திரி வீடுசேர்கையில் அப்பா ஏதும் பேசாமல் துணியை உருவி கம்பத்தில் கட்டினார்.
நின்றேன். அதுவரை நிலம் எனக்கு அவ்வளவு அணுக்கமில்லை. நிலம் நகராவின் துள்ளல்களோடு பொரிந்தது . நிலம் ஓயாது காலடிகளை முடிச்சிடுகிறது. நிலத்தில் அத்தகைய எண்ணில்லா நரம்புகள் புரையோடுகின்றன. ஒவ்வொரு காலடி மீட்டல்களுக்கும் அந்நரம்புகளின் அதிர்வுகள். நரம்புகள் அறுபடும்போது மீண்டும் புனரமைப்பு, ஓர் உயிரினம் வீழ மற்றொரு எழுதல், நிலம் அதன் நரம்புகளை மீட்ட உருவாக்கியதுதான் எல்லாம். தீராத மீட்டலுக்காக தோன்றியவர்கள் நாம். அன்றிரவு முழுக்க உலகின் அத்தனை உயிரினங்களின் மீட்டல்களும் என் காலடியில் ஒன்றியது. அதில் உள்ள லயத்தைப் பார்க்கையில், இந்நிலம்தான் உலகஉயிர்களின் ஒவ்வொரு காலடிகளையும் நகர்வுகளையும் நிர்ணயிக்கிறது. தன் லயத்திற்கேற்ப நம்மை இட்டுச்செல்கிறது. நிலம் பிரம்மம், அதில் ஒன்றி நிற்றலே மாதவம். அதில் ஒன்றி நமக்கான நரம்பை அறுத்துச்செல்வதே முக்தி. சகல நரம்புகளையும் துண்டித்து வானுறைதல்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.“
அனைத்து நரம்புகளும் பந்தாய் என் காலடியில் கிடக்க நான் சர்வப் பிரஞ்ஞனாக நின்றிருந்தேன். அக்கணத்தில் சர்வ உயிர்களையும் இட்டுச்செல்லும் விசை நான். கட்டைவிரல் கீறலில் மொத்த உலகமும் இயங்கும். அது ஓர் அகால நிஷ்டை. நடு சாமத்திற்கு மேல் நண்பன் வந்து கட்டை அவிழ்த்தான். சிறுமூட்டையுடன் அன்றிரவே வீட்டைவிட்டு ஓடினேன்.
எந்த நம்பிக்கையில் மும்பை வந்து சேர்ந்தேனென்று தெரியவில்லை. கடைசி ஐந்து ரூபாய் நோட்டுடன் வேலை தேடியலைந்தேன். மொழி தெரியாது. இறுதியில் கிடைத்தது பேச அவசியமில்லாத வேலை. நெடுஞ்சாலை உணவகத்திற்கு முன் நின்று கொடியாட்ட வேண்டும். அங்கு வேலை பார்த்த நாட்களிலெல்லாம் நான் உணர்ந்தது கால்களை மட்டும்தான். விரைவாக கடந்து செல்லும் வாகனங்களின் அதிர்வை நான் சுமந்து நிற்ப்பேன். மனிதர்கள் சாப்பிடும் நேரத்தில் நான் சாப்பிட சென்றுவிட்டால் அந்நேரத்தில் கொடியாட்ட முடியாது அதனால் அமனித நேரங்களில்தான் சாப்பாடு. சாப்பிடும் நேரத்தில் மட்டும்தான் என் முழுவுடலையும் உணர்வேன், சாப்பிட முடியாது ஊரிலிருந்து வரும்போது எடுத்துவந்த பணம் அக்கா கல்யாணத்திற்காக வைத்திருந்தது. மீண்டும் நிற்பேன் என் கால்களை மட்டுமே உணர்வதற்காக. அதன்பின் தான் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில் வேலை.
இப்பொழுதும் கதவை திறக்கிற வேலைதான் ஒரு நட்சத்திர விடுதியில். அதேபோல் நின்றுகொண்டே. என் வாழ்நாளில் நான் உட்கார்ந்ததே இல்லை என்று கூட தோன்றும். விடுதியில் வேலை செய்யத் தொடங்கிய சிறிது நாட்களிலே நினைத்தாலும் உட்கார முடியாதபடி ஆனது. காலில் நரம்புகள் முடிச்சிட்டாற்போல் சுருண்டுகொண்டன, சிவப்பும் கருப்புமாய். அவற்றை பார்க்கும்பொழுதெல்லாம் அன்றிரவு என் காலுக்கடியில் உலக உயிர்களின் நரம்புகள் கிடந்ததுதான் நினைவிற்கு வரும். அன்று நான் ஊழி மூர்த்தி ஒரே கணத்தில் சகல நரம்புகளையும் அறுத்து வீசியிருக்கலாம், இப்பொழுது அதே நரம்புகள் என் கால்களில் சுருண்டுக் கிடக்கின்றன. வலியைத் தாங்கிக்கொண்டு நிற்கலாம் உட்கார்ந்தால் மீண்டும் நிற்க முடியாது. நிற்பேன் வயிற்றை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு.
பேருந்து, நிறுத்தத்திற்கருகில் வந்துவிட்டது இப்பொழுதே கதவருகில் நிற்கவேண்டும். காலை ஒன்பது மணியானாலும் அரசு அலுவலகத்தில் கூட்டம்தான். வரிசையில் நிற்க வேண்டும். நிற்றலே நானாகிவிட்டேன். பிறப்புவிகித அதிகரிப்பால் இறப்புவிகிதமும் அதிகரிக்கிறது. கல்லறைகளில் புதைக்க இடமில்லை, இடமிருக்கிறது ஆனால் மனிதனுக்கு அடையாளம் அவசியம். இறந்தபின்னும் அவனுக்கொரு அடையாளமாய் ஒரு கல்லறை. முதலில் தங்கள் குடும்பத்தினரை புதைத்த இடத்தின் மேலே தங்களது மற்றொரு குடும்பத்தினரை புதைக்கலாம். இப்பொழுது எந்த பிணத்திற்கு மேல் அதிக பிணம் இல்லையோ அங்குதான். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எலும்புக்கூடுகளுக்குத் தான் நான் மாலை போடுவேன் மெழுகுவர்த்தி ஏற்றுவேன் என்று புரட்சிக்கொடி தூக்கியதில், அரசு ஒரு புதுமை செய்தது. செங்குத்து கல்லறைகள். பிணங்களுக்கென்று சுவரெழுப்பி அதற்குள் அப்படியே செங்குத்தாக புதைத்துவிடுவது. இதற்கும் கடுமையான போட்டி. நான் என் வாழ்நாள் முழுதும் நின்றே கழித்துவிட்டேன். ஒரு சில சமயங்களில் கால்களை துண்டாக வெட்டிவிடலாம் என்று கூட தோன்றும். இப்பொழுதெல்லாம் நிலத்தில் நிற்கவே அருவருக்கிறது. ஒவ்வொரு காலடியிலும் நிலம் நம்மை உறிஞ்சுகிறது செத்தையாக்குகிறது. நம்மைக் கொண்டே தன்னை பெருகிக்கொள்கிறது. அதன் மலைகளும் பிரம்மாண்டங்களும் இறந்த உயிரினங்களின் பிம்பங்கள். அதன் நரம்புகள் அறுபடுவதேயில்லை, பல முடிச்சுகளுடன் சீரமைக்கப்படுகிறது.எவராலும் விடுவிக்க முடியாது பல முடிச்சுகளுடன் கூடிய சிக்கல். நமது காலடியில் அமுங்கும் நிலம்தான் இமயமாய் உயர்கிறது. நாமில்லையெனில் நிலத்தின் வளைவுகளும் மேடுகளும் குகைகளும் கிடையாது, அது வெறும் வசீகரமற்ற தட்டையான பரப்புதான். அதன் வசீகரத்தை விடுவதற்கு மனமில்லை. நமது காலடிச் சுவடுகள் அதற்கு தேவை. எல்லோரையும் நடக்கத் தூண்டுகிறது. சிறகுள்ள பறவைகளைக் கூட எப்படியோ வசீகரித்து தன்மேல் நடக்க வைக்கிறது. எப்பொழுது ஓர் உயிரினத்திற்கு நடக்கத் திராணியில்லையோ அப்பொழுதே அகற்றிவிடுகிறது.
இந்நிலத்தின் பகடையாய் நான் என் வாழ்நாள் முழுக்க உருண்டிருக்கிறேன். இந்நிலம் எனக்கு கொடுத்த ஒரே அடையாளம் நிற்றல். நான் இறந்தபிறகாவது அவ்வடையாளம் அழியவேண்டும். இதற்கு மேலும் என்னால் நிற்க முடியாது. எப்படியாவது யாரிடமாவது மன்றாடி இறந்தப் பின்னாவது நிற்காமல் இருக்க வேண்டும். வரிசை ஒரு வழியாக தேய்ந்து தேய்ந்து கரைந்தது.
“ தும்ஹால காய் ஹவே ஆஹே ? ( என்ன வேண்டும்? ) “
“ மலா பசாயாச்சே ஆஹே ஷாப். ( உட்கார வேண்டும் ) “