மானுடத் துயர்- பால்கனிகள் தொகுதியை முன்வைத்து….

கடலூர் சீனு

cuddalore seenu

மானுட துக்கம் என்றொரு சொல் உண்டு, இந்த உடல் கொண்டு இங்கு பிறந்து வருவதனாலேயே, அதன் எல்லைகள் காரணமாக , மானுட உடலம் உருவாகும்போதே அதன் கட்டமைப்புக்குள் எழுதப்பட்டுவிட்ட துக்கம். மானுடம் அனுபவிக்கும் அனைத்து துக்கங்களும், அதன் பிரதிபலிப்பு மட்டுமே என்று தத்துவ ஆய்வுகள் உரைக்கின்றன. இந்த பிரதிபலிப்பு துக்கங்களைத் தொகுத்து சாரமான மானுட துக்கத்துக்கு வந்து விழுபவனே ஆத்ம சாதகன்.

இவை எல்லாம் உயர் தளத்தில், இவை குறித்த எந்த பிரக்ஞையும் இன்றி இந்த துக்கத்தில் தவறி விழுவது இருக்கிறதே. அந்தத் துயர் இணையே அற்ற ஆறுதலே அற்ற துயர். நமக்கு மிக அருகே அத்துயரில் விழுபவர்கள். உலவிக் கொண்டிருக்கிறார்கள். அரவாணிகள். நீ ஒரு ஆம்பளையா என்ற வினாவை எதிர்கொண்டு கொலைகள் நிகந்திருக்கின்றன. நீயெல்லாம் ஒரு பெண்ணா எனும் ஒற்றை சொல்லில் பல தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அடையாளத்தைச் சந்தேகிக்கும் ஒரு சொல்லை சமூகத்தால் தாள இயலாது. எனில் தனக்கான அடையாளத்தை இந்த உடலுக்குள்ளிருந்து, உறவுகளுக்குள்ளிருந்து, சமூகத்திலிருந்து கணம்கணமாய் நித்தம் துயரத்தையும் அவமதிப்பையும் உண்டு செறித்தபடி, நிறுவ முயல்கிறார்களே அரவாணிகள் அவர்களின் துக்கம் , புத்தன் அடைந்த துக்கத்தைவிடப் புனிதமானதுதான்.

அரவாணிகள் குறித்த பதிவுகளும் ,ஆவணங்களும் நிறைய கண்டிருந்தாலும் , அவர்கள் குறித்த புனைவுகளில் ஆழமான ஒன்றென ,சு .வேணுகோபால் அவர்களின் சமீபத்திய நெடுங்கதையான ‘பால்கனிகள் ‘ புனைவையே சொல்வேன் .

மதுரை கம்பம் ஆகிய ஊர்களில் பரவி வாழும் , விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட , [இந்தத் தலைமுறையில் வேலைக்கு செல்லும்] கூட்டுக் குடும்பம் ஒன்றினில் நிகழும் கதை . கிட்ணா [ஊராருக்கு மோகினி] அவர்களின் செல்லக் குழந்தை . அவன் வளர வளர அவன் பால் திரிபு கண்டிக்கப்படுகிறது . ஒரு சூழலில் தான் ஒரு பெண் என திட்டவட்டமாக அறிந்து , தன பெண்மையைக் காத்துக்கொள்ள வீட்டை விட்டு வெளியேறுகிறான் கிட்ணா . அதன் விளைவாக அவனுக்கான சொத்தையும் இழக்கிறான் .

நெடுநாள் கழிந்து ஒரு பெண்ணாக , தனது குலதெய்வ வழிபாட்டில் தனது குடும்பத்தைக் காண வருகிறான் . அவமானப்படுத்தி விரட்டப்படுகிறான் . மீண்டும் பல வருடம் கழித்து கிட்னாவை அவனது அக்கா ஒரு பதட்டமான சூழலில் சந்திக்கிறாள் . கிட்னா அவனது இயல்பான சமையல் திறமையால் ஒரு உணவகத்தில் மாஸ்டராக இருக்கிறான் . அவனது பாலியல் தோழன் அவனை ஏமாற்றிவிட்டுச் சென்ற சூழலில், ஒரு மகனைத் தத்தெடுத்து ,தனிமையில் வாழ்ந்து வருகிறான் .

திவ்யாவின் நோக்கில் சொல்லப்படும் புனைவு , ஒரு பெண்ணாக தனது தம்பியை நினைத்துக்கூட பார்க்க இயலாத திவ்யா , இறுதியில் அவனுக்குள் உறையும் தாய்மையைக் கண்டு , அதன் வாயிலாக அவனது ஆளுமையை அவள் அங்கீகரிப்பதுடன் நிறைவு கொள்கிறது .

பால்கனிகள் தமிழின் யதார்த்தவாதம் ,இயல்புவாதம் முயங்கிய புனைவு .நவீன தமிழ் இலக்கியம் அதன் வரலாற்றுப் போக்கில் இயல்புவாத , புனைவுகளில் உச்சம் தொட என்ன தேவையோ அதை மட்டும் ‘கண்டுபிடித்து ‘ நீக்கி படைப்புகளை உருவாக்கி முன் செல்ல . மாறாக பிற மொழிகளில் அது செழித்தது . பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது புனைவின் வீச்சை தமிழில் தேடினால் , எதுவும் தேறாது என்பது ஒரு அப்பட்டமான உண்மை .

ஒரு காலகட்டம் பின்வாங்கி , அடுத்த நகர்வு துவங்கும் இச்சூழலின் பதாகை என நாஞ்சிலின் ‘யாம் உண்பேம் ‘ போல சில புனைவுகளை பட்டியல் இட்டால் அதில் இணையும் ஒன்றாக ‘பால்கனிகள் ‘ இருக்கும் . இக் குறுநாவல் அதன் அடிப்படைக் கட்டமைப்பால் செறிவாக உருவாகி , பாத்திரங்களை குறைந்த சொற்களில் முன்வைத்து புனைவின் வளர்ச்சிப் போக்கில் அவர்களின் ,மாறும் ,மாறாத குண இயல்புகள் துலங்குவதன் வழியே வாழ்வுக்கு இணையான நிகர் அனுபவமாக விரிகிறது .

திவ்யாவின் நோக்கில் சொல்லப்படும் இப்புனைவு , அவளது நோக்கில் கிட்ணா மெல்ல மெல்ல திரிபடைவதை ,அவள் அடையும் அதே குறுகுறுப்புடன் வாசகருக்குள் நிகழ்கிறது . குறிப்பாக தன மகளுக்கு பால் தர இயலாமல் ,தகிக்கும் தனங்களுடன் திவ்யா வீட்டுக்கு வரும்போது , கிட்ணா தன் மகளுக்கு அவனது முலைக் காம்பை சுவைக்கக் கொடுத்து , ஆறுதல் செய்வதைக் காணும் தருணம் , அவளது திகைப்பு வாசகனுக்கும் தொற்றுகிறது . புனைவின் இறுதியில் மோகினியின் குழந்தை பரிதியை இவன் கொடுத்து வைத்தவன் எனும் மனதுடன் எடுத்து கொஞ்சுகிறாள் . இந்த மெல்லிய மாற்றம் இங்கும் நிகழ ,இதுவே இந்தப் புனைவை கலைத் தருணம் கூடிய படைப்பாக மாற்றுகிறது .

கிட்ணா கோவில் கொடைக்கு வருகிறான் , தகராறில் பொறுத்துப் போகும் கிட்ணா ‘போடா அலிப்பயலே ‘ என்ற வசவு காதில் விழுந்ததும் ‘ஆமாண்டா அது என்ன நொட்ட வரும்போது தெரியலையோ ? இன்னொருக்கா சொல்லிப்பாரேன் ,கொட்டையில மிதிக்கிறேன் ‘ என ஆவேசமாக புடவை வழித்துக் கிளம்பும்போது , ” எப்டிக்கா மனுஷனால வெறுக்க முடியுது ? வெறுக்கறதுக்காக வாழ முடியுமா ?” எனக் கேட்கும்போது , உண்மையில் உடன் வாழும் சக மனிதன் என்றே மனம் ஏற்கிறது .

நவீன காவிய நடையின் உச்சம் வெண் முரசு சிகண்டினி எனில் , எதார்த்தவாதத்தின் முகம் மோகினி . இன்றைய தமிழ்நாவல் இலக்கிய வகை பேதங்கள் செழிப்பாக இயங்கும் ,வரலாற்று சாட்சியம் இவை இரண்டும் .
பால்கனிகள் கதையில் ஒரு வரி வருகிறது ”இயற்கை சிலருக்கு மட்டும் தனது சாரமான காருண்யத்தை ,அவர்களின் இயல்பாக பொதிந்து வாழ அனுப்பி விடுகிறது ”. பால்கனிகள் நாம் கட்டி உருவாக்கிய அறம் ,மனித நேயம் இவற்றுக்குப் பின்னுள்ள அற்பமான ‘மையத்தை ‘ ஒரு மிகைச் சொல்லுமின்றி பரிசீலிக்க வைக்கிறது .

மார்பகங்கள் பால்தரும் கனிகள் எனில் , குழந்தையைத் தந்து ,தாய்மையைத் தந்து , பால் புகட்ட இயலா மார்பகங்களைத் தந்த , இந்த இயற்கைப் பிறழ்வை எதில் சேர்க்க ?

இந்த வாதையின் கலை வெற்றியே பால்கனிகள் .

இரு நெடுங்கதைகள் அடங்கிய பால்கனிகள் தொகுதில் இரண்டாவது நெடுங்கதை ‘இழைகள்’. அவமதிப்பும், புறக்கணிப்பும், கீழ்மையும், கொஞ்சம் காருண்யமும் இழைகளாகக் கொண்டு நெய்யப்பட்ட வாழ்க்கையைச் சுமக்கும் ராமமூர்த்தி எனும் அரசுப்பள்ளி ஆசிரியரின் நினைவுகளாக விரியும் கதை.

தமிழக அரசு பாடப்புத்தக அட்டைகளில் ஒரு தொடர் வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். தீண்டாமை ஒரு பாவச்செயல். தீண்டாமை பெருங்குற்றம். தீண்டாமை மனிதத்தன்மை அற்ற செயல். இந்த வாசகங்கள் என்று காலாவதி ஆகும்? தீண்டாமை என்பது சொரியாசிஸ் போல வெளியே தெரியும் அடையாளம் மட்டுமே. நோயின் வேர் எந்தக் கலாச்சாரமும், பண்பாடும் சென்று தீண்ட இயலா மானுட மனத்தின் இருண்ட ஆழத்தில் எங்கோ உள்ளது.

ஜீன் குடால் தனது ஆவணம் ஒன்றினில் மனிதனுக்கும் குரங்குக்குமான ஆச்சர்யகரமான ஒற்றுமை என வன்புணர்வு உள்ளிட்ட சில அடிப்படை அலகுகளை விவரிக்கிறார். அதில் ஒன்று ‘வலுத்த’ குரங்கு இளம் பெண்கள் கூட்டத்துடன், பாதுகாப்பு மிகுந்த வலுவான கிளையில் தங்குகிறது. தசை புடைத்த ருசியான பழங்கள் அதற்கு மட்டுமே. ‘இளைத்த’ குரங்குகள் வலுத்தவனுக்கு அடிமை சேவகம் செய்து, அண்டி வாழ்ந்து , அவன் விட்டுத் தரும் உணவுகளை உண்டு ஜீவித்துக் கிடக்கின்றன.

இக் கீழ்மையின் வேர்கள் மானுடத்துக்கும் அப்பால் உள்ளதோ என்றும் தோன்றுகிறது. அடிமைகள் இன்றி உபரி இல்லை. உபரி இன்றி உடமை இல்லை. குடும்பம், தனிச் சொத்து, அரசு, கடந்தகாலம் எதுவுமே இல்லை. அடிமைகளை வெறுக்காமல் சக மனிதனை ஒரு மனிதனால் அடிமையாக நடத்த இயலாது. இது மற்றொரு அடிப்படை உளவியல் சிக்கல்.

நில உடமை சமுதாயம் மாறி, ஜனநாயக யுகத்துக்குள் நுழைந்துவிட்டோம். ஆனால் நமது சமூக ஆழ்மனம் இந்த நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து முற்றாக வெளியேறி ஜனநாயகப் பண்பை எய்திவிட்டதா? என்று வினவினால், விடை மழுப்பலாகவே அமையும்.

எனது நண்பர் அமெரிக்கா சென்று இறங்கிய முதல் நாள், முதன் முதலாக கேட்ட அறிவுறுத்தல் இது. ”நீங்க பாட்டுக்கு கேஷுவலா , கைகுலுக்க கை நீட்றதோ, தொட முயற்சி பண்றதோ பண்ணிடாதீங்க. அவங்க வெள்ளக்காரங்க, நீங்க அவங்ககிட்ட அப்டி நடந்துக்கறது இங்க சட்டப்படி குற்றம்.”

வேறொரு நண்பர் சொன்னார் ”பலநாள் சொந்தம் போல முகம் பூரிக்க ஹாய் என்று சொல்வார்கள். அவ்வளவுதான் அத்துடன் முகத்தை திருப்பிக் கொள்வார்கள். நீங்கள் என்றொரு ஜீவன் அங்கிருப்பதே அவர்களுக்கு தெரியாது. அவர்களின் பிளைன்ட் ஸ்பாட் அத்தனை வலுவானது”

சமீபத்தில் வெள்ளையானை நாவல் மீதான உரையாடல் ஒன்றினில் ஜெயமோகன் சொன்னார் ” ஒரு தலித்தால்தான் தலித்தின் துயரை எழுத முடியும் எனும் கூற்று உண்மையானால், ஒரு தலித்தால் மட்டுமே அந்த எழுத்திலுள்ள வலியை உணரமுடியும் என்றாகிறது. இது இலக்கியத்துக்கே புறம்பானது. தலித் இலக்கியம் எனும் வகைப்படுத்தலால் [ சமூகத்தில் அவர்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுகிறார்களோ ], தனிமைப்டும் போக்கே இறுதியில் எஞ்சும் ”.

சாதிக் கீழ்மையால், தனிமைப்படுத்த்ப்படும், புறக்கணிக்கப்படும், ஒருவன் குருதி ஈரம் உலராத தனது காயத்தை, அதன் வலியை, நினைத்துப் பார்ப்பதே ‘இழைகள்’ எனும் நெடுங்கதை. துயரத்தில் மேல் சாதி, கீழ் சாதி உண்டா என்ன? அது மானுடப் பொது. சாதியின் பெயரால் தான் அடைந்த கீழ்மைகள், அது ஏன் அதன் வேர்கள் எங்கே என்று புரியாமல் திகைத்து நிற்கும் ஒரு மிடில்க்ளாஸ் மனதின் நினைவலைகளே இக் கதை.

இலக்கியப் புனைவுகளில், குறிப்பிட்ட இரண்டு கதைகள் மிக தனித்துவமானது. முதலாவது தோப்பில் முகமது மீரானின் சன்னதியில் எனும் கதை. அடுத்தது ஜெயமோகன் எழுதிய வணங்கான் எனும் கதை.

சன்னதியில் கதையில் அத்தத் ஊரின் [கப்பலில் போய் சம்பாதித்த] பணக்கார பாய். அவருக்கு இரண்டு மகன்கள். வள்ளி துவங்கி அவளது பேரன் வரை அனைவரும் அவரது குடும்பத்தின் வேலையாட்கள். ராஜா போல வாழ்கிறார் பாய். வேலைக்காரர்களை மனிதர்களாக மதிக்காதவர். குடும்ப சண்டை உக்கிரம் அடைந்து தனது சொத்துக்களை இரு மகன்களுக்கும் எழுதி வைக்கிறார். வள்ளி குடும்பம். இரு மகன்மார் வீடுகளுக்கும் மாறி மாறி அடிமை சேவகம் செய்கிறது. நோய் முதுமை இரண்டும் பாயை குடும்பத்தினரின் புறக்கணிப்புக்கு ஆளாக்குகிறது.

ஒரு நாள் காலை பாய் கண்விழித்துப் பார்க்கிறார். நடக்க இயலாத நோய் முற்றிய பாய், மசூதி வாசலில் அனாதையாக கைவிடப்பட்டுக் கிடக்கிறார். அழுது புலம்புகிறார். எவரும் அவருக்கு உதவும் நிலையில் இல்லை. வள்ளி மட்டும் ஒவ்வொரு நாளும் அவரைக் கடந்து செல்லும்போதும் அவரை சுத்தம் செய்து, ஏமான்கள் தன் குடும்பத்துக்கு அளிக்கும் மிச்சிலில் கொஞ்சத்தை அவரது வட்டிலில் வார்த்துவிட்டு செல்கிறாள்.

ஒரு நாள் புயலும் மழையும் வலுக்கிறது. பாய் அழும் குரல் மழையின் ஓலத்தையும் தாண்டி, சேரியில் இருக்கும் வள்ளியின் வீடு வரை கேட்கிறது. சிறுவன் முருகன் திண்ணையில் இருந்து குதித்து இறங்குகிறான். ”அம்மா நம்ம எஜமான்மா” என்று கூவியபடி மழைக்குள் புகுந்து ஓடுகிறான். ஒரு கணம் யோசிக்கும் வள்ளி, புடவையை இழுத்து செருகி தானும் எஜமான் நோக்கி ஓடுகிறாள். நிர்வாணமாகக் கிடக்கும் தன் எஜமானை தாய் போல ஏந்திக்கொண்டு வீடு வருகிறாள்.

வணங்கான் கதை கறுத்தான் எனும் பண்ணை அடிமை, ஒவ்வொரு கணமும் எதிர்ப்பால் மீண்டெழுந்து கறுத்தான் எனும் ஆளுமையாக உயரும் பரிணாம கதியை எழுச்சியுடன் முன்வைக்கும் கதை.

முதல் கதை தமிழில் நிகழ்ந்த அபூர்வங்களில் ஒன்று. நில உடமைச் சமூகம் எனும் கலாச்சாரம் ஒன்றினை கட்டிவைத்த அடிப்படை சரடு ஒன்றினை, நேர் நிலை அம்சம் ஒன்றினை இத்தனை வலுவாக, உளம்பொங்கும் வண்ணம் சொன்ன கதைகள் குறைவே.

இரண்டாவது கதை மீறலின் கதை. என்னை உன்னால் அவமதிக்க முடியாது எனும் நிலைக்கு , ஒவ்வொரு கணமும் தன்னைச் சூழும் கீழ்மைகளைச் சுட்டெரித்து மீண்டெழும் ஆளுமை ஒன்றின் கதை.

இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடைப்பட்ட நிலை ஒன்று உண்டு. தனக்கு நிகழ்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், மீறிச்செல்லவும் வகையறியாமல் , கிடந்துழலும் நிலை. இந்த நிலையில் நிற்கும் ராமமூர்த்தி எனும் ஆசிரியர், தனக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட நாளில், தான் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்க்கும் வகையில் கூறப்பட்ட கதை.

போடிநாயக்கனூர் அருகே, வேலுப்பிள்ளையின் பண்ணையாள் சடையாண்டி மாரி தம்பதி. அவர்களுக்கு இரண்டு மகன் இரண்டு மகள். மூத்தவன் பரமன். ரேணுகா டீச்சர் அவனுக்கு ராமமூர்த்தி என பெயரிட்டு பள்ளியில் சேர்க்கிறாள். காளிமுத்து எனும் கருப்புச் சட்டைக்காரர் ‘நீங்கள்லாம் படிச்சாத்தான் இனிமே உங்களுக்கு விடிவு காலம்’ என்று சொல்லி ராமனை ஆசிரியர் பயிற்சி கல்வியில் சேர்க்கிறார்.

ராமமூர்த்தியின் குடும்பம் மொத்தமும் , பண்ணண வேலை, கடன் என உழைத்து களைத்து அவனை ஆசிரியர் ஆக்குகிறார்கள். ராமன் ஆசிரியர் ஆகிறான் வீடு கட்டுகிறான். குழந்தைகள் வளர்கிறார்கள். ராமமூர்த்தியின் மனைவி முத்துலட்சுமி, கணவரின் தம்பி, தங்கைகளை சண்டை போட்டு விரட்டி விடுகிறாள். மூத்த தங்கையின் மகளை, மனைவிக்கு தெரியாமல் செலவு செய்து டீச்சர் ட்ரைனிங் சேர்க்கிறார். ராமமூர்த்தி. பணி நிறைவு எய்த ஆறு வருடங்கள் இருக்கும் நிலையில் அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கிறது. தான் வாழ்ந்த, கீழ்மைகளும் அவமதிப்புகளும், கொஞ்சம் கருணையும் கவிந்த இந்த நடுத்தர வாழ்வை , விருது கிடைத்ததால் வந்த சிறு உவகையின் பின்னணியில் நினைவில் புரட்டியபடி வீடு நோக்கி நடக்கிறார் ராமமூர்த்தி.

கதையின் பல இழைகளில் ஒன்றாக, அரசுப் பள்ளி, அதன் சுகாதாரம், ஆசிரியர்கள் தொடங்கி மாணவர்கள் வரை கடைபிடிக்கப்படும் சாதிப் பாகுபாடு என சமகால கீழ்மையின் வரலாறு ஒன்று, கொஞ்சமே சொல்லி மீதியை விட்டு கலாபூர்வமாக ஆவணப்பதிவாகிறது.

ராமமூர்த்திக்கு சுயமாக வந்ததா, அல்லது கல்வியால் விளைந்ததா இந்த சுயமானம். அப்பாவையும் அம்மாவையும் வயது பேதமின்றி முதலாளி வீட்டில், எல்லோரும் பெயர் சொல்லி அழைப்பதில் அவனுக்கு வருகிறது முதல் கோபம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவன் கோபம் புரிவதே இல்லை. இதுல என்ன கிடக்கு என்றே நினைக்கிறார்கள்.

பள்ளியில், இளம்பிராயக் காதலில், ஆசிரியர் பணியில், தேநீர்க்கடையில் என ராமமூர்த்தி தன் வாழ்வு நகரும் அத்தனை எல்லைகளிலும் புறக்கணிப்பின் வேதனையை எதிர்கொள்கிறான். கதைக்குள் ஒரு மிகைச்சொல்லுமின்றி நம்மை நிம்மதி இழக்க வைக்கும் தருணங்கள் பல வருகின்றன. குறிப்பாக ராமமூர்த்தியின் கறிக்குழம்பு மோகம் அவனை அலைக்கழிக்கும் தருணங்கள். மதியம் வீட்டுக்கு வரும் அப்பா களியை சட்டியில் வைத்து கரைத்தபடி பிள்ளைகளை அழைக்கிறார். பிள்ளைகளோ இன்று அம்மா சாயிபு வீட்டிலிருந்து கறி பிரியாணி கொண்டு வருவதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். பிள்ளைகள் இன்று ”நல்ல சோறு ” சாப்பிடப் போகிறார்கள் என்று உவகையுடனும், பங்குவைக்க வேண்டிய தேவை இல்லாததாலும் அன்று வயிறார சாப்பிடுகிறார் அப்பா. பஞ்சு போன்ற கறி ருசி இழுக்க, பிள்ளைகள் நால்வரும் அம்மாவை தேடி போகிறார்கள். அம்மா வழியில் எதிர்படுகிறார்கள். மீந்த குழம்பிலும், பிரியாணியிலும் கறியைத் தேடி பிள்ளைகள் [குறிப்பாக ராமமூர்த்தி] ஏமாறுகிறார்கள்.தம்பியும் தங்கைகளும் அள்ளி அள்ளி உண்கிறார்கள், அம்மா தங்கைகளின் தலையை தடவியபடி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைத்துக்கும் மேல் ராமமூர்த்திக்கு வலி தரும் நினைவாக நிரந்தரமாக தங்குவது, அந்த பிரியாணி அடி பிடித்த பகுதி. அதை ஒரு பழைய வட்டிலில் கூட கொடுக்காமல், அம்மாவின் முந்தானையையே பையாக மாற்றி அதில் கொடுத்து அனுப்புகிறார்கள். அன்று அந்த பிரியாணி அவனுக்கு ருசிக்காமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம்.

ஊர் திருவிழா நெருங்க, சக மாணவர்களுடன் கிளம்ப எத்தனிக்கிறான். நினைவில் கிடாவெட்டு, கறிக் குழம்பு. அவர்களோ ராமமூர்த்தியும் உடன் வரப்போகிறான் என அறிந்து குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே அவனை புறக்கணித்துவிட்டு போய் விடுகிறார்கள். யாருமற்ற வீட்டின் முன் அவமானத்தை சுமந்து தனித்து நிற்கிறான்.

உறவில் அவனுக்கு தாத்தா முறை. வாரம் ஒரு முறை கறிக் குழம்பு சாப்பிடும் அளவு வசதி கொண்டவர். கறிக்குழம்பு வாசனையை பின்பற்றி அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் [சாதி சொல்லி திட்டி] ‘அடிச்சி பத்து நாயை’ என்கிறார். அந்த வீட்டு செண்பகத்துடன் அவளுக்கு திருமணம் முடிந்த பின்னும் ராமமூர்த்திக்கு உறவு தொடர்கிறது. நாக்கு ருசி, காமப் பசியில் வந்து நிற்கிறது.

சாதி மதம் பாராமல் நிகழ்வது கலவி மட்டுமே. சின்ன முதலாளி, ராமமூர்த்தியின் பெரிய தங்கையை சுகிக்கிறான். அங்கே சாதி தடை இல்லை. ராமமூர்த்தி நசீமாவை சுகிக்கிறான். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. அங்கு மதமும் தடை இல்லை.

சாதிப் படி நிலையில் கீழே உள்ளவனால் ஊருக்கு வெளியில்தான் மனை வாங்கி வீடு கட்ட முடியும். மின்சாரமே இல்லாமல், கூடவே புதிதாக வரும் அண்டை வீட்டாரின் புறக்கணிப்புடனும் பல நாட்கள் கழிக்கிறார்கள். கட்டிய வீட்டில் மாட்டி வைக்க அப்பா அம்மாவின் ஒரு புகைப்படம் கூட இல்லை.

அவனது ஆசிரியர் பயிற்சி விடுதிக்கு அவன் கேட்ட பணத்துடன் அப்பா வருகிறார். ராமமூர்த்திக்கோ அவன் விட்டு விலக விரும்பும் கீழ்மையை மீண்டும் அவன் மேல் சுமத்த வந்தவராக அப்பா தெரிகிறார். அப்பாவை யாரோ என்பதுபோல நோக்கி, கண்ணால் வெளியே வர சொல்கிறான். வந்ததும் அப்பா குறுகி நின்று கேட்கிறார் ‘ஏம்ப்பா நான் உள்ள வரக் கூடாதா’. அப்பா கொண்டுவந்த காசு ஜெயசுதாவை கவர்வதற்காக சட்டை பேன்ட்டாக மாறுகிறது. அந்தக் காசு கருங்கண்ணியை குட்டியுடன் விற்று கிடைத்த காசு.

கதையின் வலி மிகுந்த சித்திரம் கருங்கண்ணி ஆட்டுக்கும் அதன் குட்டிகளுக்கும் அம்மாவுக்குமான உறவு. அம்மா ஆடு வளர்க்கிறாள். அதில் பொருளாதார விடுதலை உள்ளது. ஆகவே அது முதலாளிக்கு பிடிக்காது. ஆகவே ஒரு ஆடு இரு குட்டிகளுக்கு மேல் அவளால் எப்போதுமே வளர்க்க இயலாது. ஒரு ஆடு, அதன் அடுத்த தலைமுறை வந்தபிறகு முந்திய தலைமுறையை அம்மா விற்று விடுவாள். மந்தையாக வளர்க்கையில் அப்படி ஒரு ஆடு மீது பாசம் படியாது. ஒற்றையாக வளர்க்கும்போது கிட்டத்தட்ட அது பிள்ளைகளுக்கு இணையான உறவாக மாறிவிடுகிறது. அதுவும் கருங்கண்ணி குட்டிபோட்ட ஆடு. அம்மா மதியம் தனது உணவைக்கூட பட்டினி கிடந்து கருங்கண்ணிக்கு அளித்து வளர்க்கிறாள். மகன் படிப்புக்காக அதை விற்கிறாள். மகள் ஒன்றினை இழந்தவள் போல ஆடு பிரிகையில் ஏங்கி அழுகிறாள். அனைத்தும் அறிந்தும் அந்தப் பணத்தைக் கொண்டே ராமமூர்த்தி , ஜெயசுதா முன் கெத்தாக நிற்க புதிய உடை வாங்குகிறான். ஜெயசுதா அவனின் குலதெய்வம் பெயர் கேட்கிறாள். அத்துடன் அவனை புறக்கணிக்கிறாள். நசீமாவுடனான கூடலில் அவனுக்குள் ஜெயசுதாவே எழுந்து வருகிறாள். நசீமாவின் பிள்ளைகள் அவனுடையவை. ஆனால் அவனால் ஒருபோதும் அள்ளிக் கொஞ்ச முடியாத, ஒரு மர்மக்கோட்டுக்கு அப்பால் இருப்பவை.

முப்பரிமாணம் கொண்டு ராமமூர்த்தியின் வாழ்வை சித்தரித்துக் காட்டி ,புறக்கணிப்பின் வலியை துல்லியமாக நமக்கு கடத்தி , புறக்கணிப்பதன் பின் உள்ள சிறுமையை, நமது அற உணர்வை மௌனமாக கேள்வி கேட்கிறது இந்தக் கதை.

தெணியான் எனும் இலங்கை எழுத்தாளரின் வாழ்வனுபவங்களில் ஒரு சம்பவம் . சாதிப் படிநிலையில் கீழ் படியில் இருப்பவர் தெணியான். ஊருக்குள் பெரிய சாதி எப்போதும் சாதி சண்டையில் திளைத்துக் கொண்டிருக்கிறது. தெணியானின் அம்மா குழந்தை பெற்றிருக்கிறார்கள். பெரிய சாதியில் குழந்தை பெற்ற ஒரு பெண் பிரசவத்தில் இறந்துவிடுகிறாள். வெளியே சாதியின் படிநிலை சண்டைகள் பிரிவுகள்.

தெணியான் வீட்டுக்கு பின் வாசலில், பெரிய சாதியின் ஆச்சி வந்து நிற்கிறாள். தாயை இழந்த குழந்தைக்கு, தெணியானின் அம்மா தனது தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் வார்த்து ஆச்சி வசம் கொடுத்து அனுப்புகிறாள்.

இலக்கியமும் கலைகளும், கால காலமாக புறக்கணிக்கப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள் பின் நின்று மானுடத்தை கேட்கும் கருணை அதுதான். தாய்ப் பாலுக்கு எங்கும் பசித்திருக்கும் குழந்தைபோல, புறக்கணிக்கப்பட்ட ஒருவனின் கருணைக்காண ஏக்கமே இந்த ‘இழைகள்’.

3 comments

  1. அன்புள்ள சீனு அண்ணனுக்கு , வணக்கம்.

    அண்ணன் ஜெயமோகன் வலைப்பதிவில் பௌத்த வரலாறு பற்றி ஒரு நூலை குறிப்பிட்டு உள்ளீர்கள் . காலச்சக்கரம் எனும் நூல் இந்த நூல் எதில் /எந்த வலை பதிவில் கிடைக்கும்?.மேலும் அந்த முஸ்டாங் அருகில் குகை பற்றிய லிங்க் தயவுசெய்து அனுப்பவும் .நன்றி
    உங்கள் பயண நூல்கள் அனைத்தும் படித்து ,அதை போல சில இடங்களை சுற்றியும் உள்ளேன் .மேலும் சுற்றுவேன் . கடைசியாக moodubidri jaina basathi போய்விட்டு வந்தேன்.அற்புதம் .

    9751777211

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.