– மாயக்கூத்தன் –
ட்விட்டர் உலகில் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதென்பது ஒருவிதமான மிரட்டல். எனக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை. ஒரு ட்விட்டிற்கு வந்த பதில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது, அவ்வளவுதான்.. மேலே படியுங்கள், நான் நினைப்பதை எழுத முடிகிறதா பார்க்கிறேன்.
வாழ்க்கை கொள்ள முடியாத அளவிற்கான துயரம் என்று ஒன்று இல்லை, அப்படி ஒரு துயரம் நேரும் போது நாம் நம்முடைய முடிவைச் சந்தித்திருப்போம் என்று வாதாட வேண்டும் என்ற நினைப்பிலேயே ‘வாழ்வு கொள்ளாத துயரம்’ என்ற தலைப்பை வைத்தேன். பிறகு, அப்படியொரு வாதம் செல்லுபடியாகுமா என்ற சந்தேகம் வலுக்க, அந்த வாதத்தை விட்டுவிட தலைப்பு மட்டும் நிலைத்தது. சிறப்பிதழில் வந்திருந்த மற்ற கட்டுரைகளின் தலைப்போடும் (நிர்க்கதியின் நிழலில், மானுடத்துயர், கரை சேர்ந்தார் காணும் கடல், நிறைவின்மையின் வழியே) பொருந்திப்போனது. ஆனாலும், துயரங்கள் எழுத்தில் எவ்வளவு விரிவாகச் சொல்லப்பட வேண்டும் என்ற கேள்வி இல்லாமல் இல்லை.
சு.வே சிறப்பிதழில் ஒரு கதையில் வரும் ஒரே இடம் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. தன் மகனுடைய ஆடம்பரத்திற்காக அம்மா தன்னுடைய ஆட்டுக்குட்டியை விற்பது, தான் வளர்த்த நாய்க்குட்டியை தன்னிடமிருந்து பிரிக்கும் போது வெள்ளந்தியாய், ஆனால் அர்த்தத்தோடு கேள்வி கேட்கும் பெண் குழந்தை, இந்த இடங்கள் படிக்கும் எவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும். இவை எல்லாவற்றையும் விட சேதுபதி அருணாசலத்தின் கட்டுரையில் அவர் இரண்டாவதாக குறிப்பிடும் பத்திகள்- அவர் ஏன் அந்தப் பத்திகளைத் தேர்வு செய்தார் என்பது எனக்கு விளங்கவே இல்லை. ஒருவருக்கு நடக்கும் வன்முறையை இத்தனை விரிவாகச் சொல்லியாக வேண்டியதன் அவசியம் தான் என்ன? நான் இங்கே சு.வேயின் படைப்புகளைப் பற்றி மட்டுமே சொல்லவில்லை. சுஜாதாவின் ‘நகரம்’ கதையையும்கூட இந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம். என்னைச் சில நாட்கள் தூக்கமில்லாமல் செய்த சில ஸ்ரீரங்கத்துக் கதைகளும் கூட.
இசை, ஓவியம், இலக்கியம் என்று ஒவ்வொரு கலையும் நம்மை சமநிலையில் வைத்திருந்து ஒரு உயர்வான சிந்தனை நிலைக்கு இட்டுச் செல்பவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எழுத்து என்னுடைய நம்பிக்கைகளை கேள்வி கேட்கலாம், முன்முடிவுகளை உடைத்துப் போடலாம். ஆனால், வாழ்வு வலி மிகுந்தது என்று உரைப்பது எழுத்தின் நோக்கமாக இருக்கமுடியுமா? வாழ்வில் வலியே இல்லையா என்றால், வலி மட்டுமே இல்லையே. நாம் பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்றோம். பெருமகிழ்ச்சியும் துன்பமும் நம்மை எப்போதும் ஆட்கொண்டிருப்பதில்லை. இன்பமோ துன்பமோ, அவரவருக்கு ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து நாம் நம்முடைய சமநிலைக்கு மறுபடியும் வந்துவிடுகிறோம்.
வலியும் துன்பமும் நிறைந்த படைப்புகளின் மீது தேவைக்கதிகமாக ஒரு பிரியம் இருப்பதாகத் தோன்றுகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகரும் திரைப்படம், பதறச் செய்யும் முடிவோடு அதிகம் பேசப்படும் ஒன்றாகிவிடுகிறது. புனைவுகளுக்கும் இது பொருந்தும். துயரம் மிகுந்த படைப்புகளை, அதுவும் விளிம்புநிலை மனிதர்களின் துயரை விவரிப்பதாகச் சொல்லப்படும் படைப்புகளைக் கேள்வி கேட்க ஒரு தயக்கம் இருப்பது போல் இல்லையா?
கல்கியின் சிறுகதையை விமர்சனம் செய்த ஒருவர், அவை நம்மை உலுக்குவதாய் இல்லை என்று எழுதியிருந்தார். கல்கியின் கதைகளை நான் வாசித்ததில்லை. ஆனால், ஒரு கதை நம்மை உலுக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம்? ஒருவேளை நம் வாழ்வை விட மோசமாக ஒன்று இருக்கிறது என்று ஒரு ஆறுதலா? சில சமயம் உலுக்குவது மாதிரி எழுதுவதில்லை என்றால், ஒரு மாதிரி ஒதுக்கிவிடுவார்கள் என்று கூட தோன்றுகிறது. துயரக் கதைகள் எழுதப்படுவது கூட, ஒருவருக்காவது நேர்ந்திருக்கலாம் அதனால் பிழை சொல்ல முடியாது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், இது மாதிரி கதைகள் அதிகம் அங்கீகரிக்கப்படுவதைப் பற்றி என்ன சொல்ல?
ஏன் நகரத்தில் நல்ல வேலையில் இருப்பவர்களின் வாழ்க்கை இது போல எழுதப்படுவதில்லை. பெங்களூரூவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் எல்லோருமே பணத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள் என்று நினைப்பது போல, குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் நினைப்பதைப் போல, இதுவும் ஒரு பொதுமைப்படுத்தல் தானா?. ஒருவேளை மேல்நிலையில் இருப்பவர்கள் வருடத்தில் நூறு நாட்கள் சமநிலையில் இருக்க, விளிம்பு நிலையில் இருப்பவர்கள் வருட்த்தில் இருநூறு நாட்கள் சமநிலையில் இருந்தால்? இதைப் பற்றிய ஆராய்ச்சி எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
இன்னொன்று, எது சவாலாக இருக்கும்- ஒருவனுடைய அவநம்பிக்கையை உடைத்து வாழ்வின் மேல் நம்பிக்கை எழச் செய்வது எளிதா அல்லது துளிபோல இருந்தாலும் அந்த அவநம்பிக்கையை ஊதிப் பெரிதாக்குவது எளிதா? கதைமாந்தர்களின் மீதெழும் அனுதாபம் நம்மை மேலானவர்களாக, மனிதர்களாக உணரச் செய்கிறதா? அதற்காகவாவது துயரக் கதைகள் அவசியம் வேண்டுமா? நான் எத்தனை கருணையோடும் அக்கறையோடும் இருக்கிறேன் என்று எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் காண்பித்துக் கொள்ள துயரக் கதைகள் அவசியமா?
எத்தனையோ கேள்விகள் இருந்தாலும் இந்தக் கதைகளின் இருப்பிற்கு என்னவோ அவசியம் இருக்கிறது. அது என்ன என்பது தான் விளங்கவில்லை. எழுத்தாளர் பேயோன், திசை காட்டிப் பறவைகள் புத்தகத்தில் ‘ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன்’ என்ற கட்டுரையை இப்படி முடித்திருப்பார். ”மனித வாழ்க்கை அர்த்தமற்றது, துயரமானது, எதுவும் நிலைக்காது என்று எழுத இத்தனை பேர்.”