கரை சேர்ந்தோர் காணும் கடல்

– ஜா ராஜகோபாலன்

ja rajagopalan

சமையல் கலைஞர் சுப்ரமணியத்தை வைத்துதான் இக்கட்டுரையை தொடக்க வேண்டியிருக்கிறது. இன்றைய காண்ட்ராக்ட் கலாச்சாரம் வரும் முன்னர் 80, 90களில் நெல்லை பகுதிகளில் சமையல் கலையில் புகழ் பெற்ற கலைஞர். பந்தி பரிமாறுவது அவரது சமையலில் பிரசித்தம். புதுப் பையனுக்கு அவர் கற்றுத் தந்ததை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

“மூணாம் எலைக்கு ஏண்டா சாதம் போடல்ல?”

“அவர் வேணும்னு கேக்கலையே மாமா”

“போடா அறிவு கெட்டவனே ! திருப்தியா சாப்ட்டவன் கைய பின்னுக்க இழுத்துண்டு லேசா பின்னால சாஞ்சிருப்பன். இப்படி பொறங்கைய நக்கிண்டு இருக்க மாட்டான். லஜ்ஜப்பட்டவனாருக்கும். நீதான் பாத்துப் பரிமாறனும். எல பாத்து பரிமாறறதுன்னா எலய இல்லடா அம்பி, ஆளப் பாத்து. தெரியறதா?”

நான் இலக்கியத்தில் சமையல் கலைஞன் இல்லையானாலும் நல்ல சாப்பாட்டு ரசிகன். அவ்விதத்தில் எனது 20 வருட வாசிப்பைக் கொண்டு நானே உருவாக்கிக் கொண்ட சல்லடை வழியேதான் எனக்கான ரசனைத் தேர்வுகளை வரையறுத்துக் கொள்கிறேன். எனது வாசிப்பு, ரசனை அடிப்படையிலேயே இதையும் எழுதுகிறேன். 2000 களின் மத்தியில்தான் எனக்கு சு.வேணுகோபால் வாசிக்கக் கிடைத்தார். மூன்று காரணங்களுக்காக நான் அவரை தமிழின் முக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் நிறுத்துகிறேன். முதல் காரணம் அவரது படைப்புகளில் பேசுபொருளை அவர் கையாளும் விதம்.

இலக்கியம் அதன் ஆதிவடிவான குலக்கதைப்பாடல்களாக இருந்த காலந்தொட்டு இன்று வரை சில பேசுபொருட்களை மையமாக வைத்திருக்கிறது. கலைடாஸ்கோப்பின் மாறாத மைய அச்சில் கிடக்கும் சில வளையல் துண்டுகள் சுழற்றலில் விதவிதமான தோற்றவகைகளைக் காட்டுவது போல சில குறிப்பிட்ட மானுட உணர்வுகளே இலக்கியத்தின், படைப்புக் கலைகளின் மாறாத மூலங்கள். குலவரலாறு, வீரம், காமம் போன்ற சில இன்றுவரையில் பேசுபோருட்கள். மொழியும், நாகரிகமும் வளரும் கால மாற்றத்தில் செடி மரமாவது போல இப்பேசுபொருட்களும் கிளை விரித்து வளர்ந்தன. குலவரலாறு தெய்வ வழிபாடாகவும் , வீரம் என்பது லட்சியம், தியாகம் எனும் அளவிலும் , காமம் காதலாகவும் மாறிவந்து பரிணாம வளர்ச்சி காட்டின. இலக்கியம் மேலும் வளரும் காலத்தில் காமத்தின் ஏக்கம் அகப்பொருளாக அமைந்து வந்திருக்கிறது. காமத்தின் பித்துநிலையை பக்தி இலக்கியங்கள் தெய்வத்தின் மீது மடைமாற்றிக் கொண்டன என்றால் அதற்கு முந்தைய சமண இலக்கியங்கள் காமத்தை எதிர்முனையிலிருந்தே அணுகின. ஒரே கள்ளை வெவ்வேறு வடிவ கோப்பைகளில் , வெவ்வேறு நிறங்களில் திகட்டத் திகட்டத் தந்தன சிற்றிலக்கியங்களின் சில வகைப்பாடுகள்.

கவிதைகளின் காலம் முடிந்து உரைநடையின் காலம் வந்தபோது காமம் லட்சியவாதத்தின் முன் அடிக்கடி மண்டியிடவேண்டியிருந்தது. நவீனத்துவம் துலங்க ஆரம்பித்த நாளிலிருந்து காமம் மெல்ல தனியொருவனின் ஆழ்மனப் போராட்டத்தின் இயக்குவிசை எனும் அளவில் இலக்கியத்தில் அதன் இடத்தை அடைந்தது. அந்த இடத்திலிருந்துதான் காமத்தை வேறொரு வண்ணத்தில் கொடுக்க முடியாமல் போனது நம் இலக்கியத்திற்கு. ஒரு கூறுமுறையாக உருவான தாவணி அக்காக்கள், அத்தைகள், சித்திகள் முப்பதாண்டு காலம் நமது இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்த அக்காக்களை அறிமுகம் செய்த முதல் வரிசை படைப்பாளிகள் தவிர பிறர் கையாண்ட விதத்தில் அக்காக்கள் விடலைப்பருவ ஆணின் பகல்கனவு தோற்றங்களாகிப் போனார்கள்.

புளித்த பின்தான் கள் என்றாலும் அதீதப் புளிக்கவைப்பு அடுத்த கட்டமாக இருந்தது. எல்லைகளை மீறும் காமங்கள் கருப்பொருளாகின சிலகாலம். நிழலுருவ நிர்வாணம் காட்டி சென்றன பல படைப்புகளும். வெளிப்படையிலான வகையில் காமத்தின் திரிபுகளைப் பேசத்தலைப்பட்டன சில படைப்புகள். ஆதி உணர்வு மொழியில் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியாத நிலையில்தான் 90 களின் படைப்பாளிகள் அந்த நகர்த்தலை செய்யத் தலைப்பட்டார்கள். அவர்களில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளாக ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் சு.வேணுகோபால், ஆகியோரைத்தான் சொல்வேன்.

சு.வேணுகோபால் எனக்கு அறிமுகமானது கூந்தப்பனை வழியே . அதிலிருந்து முன்னும், பின்னுமாய் அவரை வாசித்து அறிந்துகொண்டேன். “பிறகு பாறைப்பள்ளத்தில் நீர் வற்றவேயில்லை” என்ற கடைசிக்கு முந்தைய வரியை கூந்தப்பனையில் வாசித்தபோது நெடுநாட்கள் கழித்து காட்டுநெல்லியின் துவர்ப்பினிப்பு வாசிப்பில் ஊறி வந்தது. மீண்டும் ஒரு முறை கீழிருந்து மேலாக கதையை வாசித்துப் போனேன் . சு.வேணுகோபால் என்ற அருமையான கதைசொல்லியை அப்படித்தான் கண்டுகொண்டேன்.

தமிழிலக்கியத்தின் 1970 தொடக்கி 2000 வரை வெளியான முக்கிய படைப்புகள் அனைத்தையும் ஒரே மூச்சில் வாசித்தோமானால் அவற்றில் பெரும்பான்மையும் நிறைவேறா காதல்களின் ஏக்கங்களை, காமத்தால் பீடிக்கப்பட்ட, முறைசாரா உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்களை மட்டுமே பேசியிருப்பதாக உணர்கிறேன். மிகச் சிலரே அதைத்தாண்டி செயல்பட்டிருக்கிறார்கள். பேசக்கூடாத பொருளென சொல்லவில்லை.ஆனால் தொடர்ந்து வாசிக்கையில் சில கேள்விகள் மனதில் எழுந்தன . இவ்வளவு சிக்கலானதாகவா இருக்கிறது காமத்தின் மீது கட்டப்பட்ட உறவுகள்? அப்படியானால் அதைத் தாண்ட முயலுபவன் நேராக துறவுக்குள்தான் விழ முடியுமா? துறவன்றி இதைக் கடக்க வாழ்க்கை நமக்கு எதையுமே வாய்ப்பாக்கவில்லையா? இக்கேள்விகளுக்கான பதிலை நான் அப்படைப்புகளுக்குள் தேடிக் கண்டடைய முயற்சித்து தோல்வி அடைந்தேன். இந்தக் கேள்விக்கான விடையை சு.வேணுகோபாலிடமிருந்துதான் அறியத் தொடக்கினேன்.

காமம் என்ற பேசுபொருளை சு.வேணுகோபால் கையாளும் விதத்தில் ஒரு மீள்சொல்லல் இருப்பதாக நினைக்கிறேன் . கூந்தப்பனையில் காமத்தை ஆள இயலாதவன் , ஆட்டத்தில் மனைவியைத் தொலைத்தவன் , பால்கனிகளில் பால்திரிபு இல்லாத அர்த்தநாரி, திசையெல்லாம் நெருஞ்சியில் பூக்கும் முன்பே காய்த்துவிட்ட விடலை என சு.வேணுகோபால் படைப்புகளில் வரும் அனைவருமே காமத்தால் ஏதோ ஒரு விதமாக பாதிக்கப்பட்டவர்கள். அந்த பாதிப்பின் இழிவை , விளைவை கணந்தோறும் சந்தித்துக் கொண்டே இருப்பவர்கள். எப்படி அந்த நிலையை அடைகிறார்கள் எனும் களம் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதுதான் என்றாலும் சு.வேணுகோபால் தான் கையாளுவது கொதிகலன் என்று உணர்ந்துதான் இருக்கிறார். அவரது கதைமாந்தர்கள் எவருமே தமது திரிபு நிலைக்கு நியாயம் கற்பிப்பதில்லை. அதை வலிந்து மேற்கொள்ளும் பாவனைகளைக் கொண்டிருப்பதில்லை. கதைமாந்தர்கள் முட்செடி உண்ணும் ஒட்டக உவமையை நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பதுதான் சு.வேணுகோபாலது பாத்திரப்படைப்புகளின் வெற்றி. காமத்தின் அலைக்கழிப்பால் அதில் ஈடுபடுபவர் மாத்திரம் அல்ல, அவரைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்படும் சித்திரம் சு.வேணுகோபால் படைப்புகளில் மீண்டும், மீண்டும் வருவதைக் காண முடியும். அவரது கதைக்களன் அந்தப் புள்ளியிலிருந்துதான் விரிகிறது. காமத்தால் மூழ்கடிக்கப்பட்டோ, ஏமாற்றப்பட்டோ, கைவிடப்பட்டோ நிற்கும் ஒரு கதாபாத்திரம் அவரால் நமக்குக் காட்டப்படுகிறது. அந்த நிலையின் கட்டியங்கள், உச்சங்கள், அதனைச் சந்திக்கும் புள்ளியில் கதாபாத்திரங்கள் எதிர்நோக்கும் நடைமுறை சிக்கல்கள், அதில் பங்குபெறும் பிற மாந்தர்கள் என்ற ஒரு திட்டவட்டமான வரையறைகளோடுதான் சு.வேணுகோபால் படைப்பை நமக்குத் தருகிறார்.

இந்த சுழலில் சிக்கும் கதாபாத்திரங்கள் என்ன முடிவினை நோக்கிப் போகின்றனர் என்ற இடத்தில்தான் சு.வேணுகோபால் கவனிக்கத்தக்க படைப்பாளியாகிறார். எந்த நிலையிலும் ஆதி இச்சையின் ஆடலை வெல்ல முடிவதில்லை சு.வேணுகோபாலின் கதாபாத்திரங்களால். ஆனால் அவர்கள் அனைவருமே ஆட்டத்தின் போக்கை மடைமாற்றிக் கொள்கிறார்கள். குஞ்சுக்கு இரை ஊட்டப் பறக்கும் பறவை “ஆட்டத்தில்” கதையை முடித்தால், ஜெயராணியின் மகன் பிஞ்சு விரல்களால் ஆல்பர்ட்டின் கண்ணீரைத் துடைத்துதான் “இரட்சணியம்” கிடைக்கிறது. ரயிலடியில் குழந்தையோடு விடைபெற்றுச் செல்லும் கிட்ணனின் ” இன்னொரு ஜென்மம் வேனாண்கா ” என்ற குரலோடுதான் பால்கனிகள் கனிகின்றன. ஊற்றுக்கண் திறக்கும் செழுமையில்தான் செழிக்கிறது கூந்தப்பனை. காமத்தின் அலைக்கழிப்புகள் கொண்டுசேர்க்கும் கரையாக கனிவும், தாய்மையும்தான் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்களுக்குத் தெரிகிறது. காமக் கடும்புனலில் சிக்கிக் கொண்டவர்கள் கரையேறும் நிலமாக விரிந்த மனதையும், கருணை ஊறும் தாய்மையையும்தான் அவர்கள் கண்டடைகிறார்கள். அப்படி ஒரு ஒளிமிக்க எதிர்காலமல்லாத இருளை சு.வேணுகோபால் நமக்குத் தருவதில்லை. தன்னாலும், இயற்கையாலும் தன்மீது செய்யப்பட்ட அனைத்து அழுத்தங்களையும் மீறி மானிடம் எப்படி இன்னும் தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொள்கிறதோ அப்படியே சு.வேணுகோபால் படைப்புகளும். அறுக்கப்பட்ட அடிமரத்தின் ஓரத்தில் துளிர்க்கத் தொடங்கும் சிறு துளிரைக் காட்டாமல் முடிவதில்லை.

இரண்டாவது காரணமாக நான் முன்வைப்பது அவரது பாத்திரப்படைப்புகளுக்காக. சு.வேணுகோபாலின் பாத்திரங்களில் இரண்டு கூறுகளை நாம் பொதுவாகக் காணமுடியும். முதலாவதாக அவரது கதைமாந்தர்கள் “பொலிகாளைகளோ” அல்லது “பால் பசுக்களோ” அல்லர். பூக்கும்வரை தன்னைக்காட்டாமல் நெல்லோடு களையாக வளரும் கோரை எனதான் அவரது கதைமாந்தர்களின் திரிபு பேசப்படுகிறது. தாம் அப்படி ஆகிவிடுவதை அந்தக்கதாபாத்திரங்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றுதான் படுகிறது. எல்லாம் சரியாகத் தொடங்கியும் “ஆட்டத்தில்” கனகம் தடம் மாறும் தருணம் எது என்ற மாய வினாடியின் விளக்கத்தை சு.வேணுகோபால் நமக்கு சொல்வதில்லை . அந்த மர்மத்தின் வசீகரத்தை வாசகனிடமிருந்து முற்றிலும் ஒதுக்கித் தள்ளுகின்றனர் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்கள். அந்த மர்மத்தை விலாவரியாகப் பேசும் விதம் அவரது கதாபாத்திரங்களுக்குக் கிடையாது. அவரது கதைமாந்தர்கள் தமது “அனுபவங்களை” விரிவாகப் பேசுவதேயில்லை என்பது கவனிக்கத்தக்கது. அவர்களுக்கு எழும் அறச்சிக்கல்களோ , அகக் குழப்பங்களோ படைப்பின் பேசுபொருட்கள் அல்ல. நிகழ்ந்தவற்றின் விளைவுகளை மட்டுமே எதிர்நோக்கும் அவரது கதைமாந்தர்கள் தமிழ் இலக்கிய உலகுக்கு சற்று புதியவர்கள்தான் . வாழ்வின் முடிவற்ற புதிர்பாதையில் அவர்கள் எதிர்கொள்ளும் மேலும் சிக்கலான ஒரு முட்டுச்சந்தை அவர்கள் கடக்கும் விதத்தில்தான் கதை நகர்கிறது. கத்தி மேல் நடக்கும் வித்தைதான்.

இரண்டாவது கூறாக சு.வேணுகோபாலின் கதாமாந்தர்கள் காமத்தை எவ்விதத்திலும் வரையறை செய்யவோ , விளக்கவோ , வகைப்படுத்தவோ முயற்சிக்காதவர்கள். இன்னும் சொன்னால் அதை புனிதப்படுத்தவும் கூட அவர்கள் முயற்சிப்பதில்லை. ஆழ்மனதின் அக இருட்டு என்ற விதத்திலோ , ஆதி இச்சையின் புனிதம் என்ற விதத்திலோ காமம் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்களால் கையாளப்படுவதில்லை. வேறெந்த உணர்வும் கூட அதீத முக்கியத்துவம் பெறுவதில்லை. ஆனால் நடந்து போனவற்றின் மீதான எண்ணச் சிதறல்களை ஓடவிட்டுக் கொண்டே தமது முன் நிற்கும் வாழ்வை நோக்கிப் பேசும் கதைமாந்தர்கள் . பண்பாடு, கலாச்சாரம் , மரபு போன்ற எந்த மயிர் பிளக்கும் விவாதங்களும் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்களுக்கு இல்லை. எறும்பின் கடலை ஒரே எட்டில் தாண்டிவிடும் மனிதன் போல அவர்கள் ஒரே தாவலில் ஒளியும், காருண்யமும் நிறைந்த அடுத்த படிக்கு தாவிவிடுகிறார்கள். அவர்களை அப்படித் தாவ உந்தும் புள்ளிகளில்தான் சு.வேணுகோபாலும் கச்சிதமாக கதையை முடிக்கிறார். குளித்து ஈரத்துடன் நிற்கும் குழந்தைகளின் நினைப்போடுதான் ஆட்டம் நினைவில் நீடிக்கும். குழந்தையை மார்போடணைத்துக் கொண்டு அதைப் படிக்க வைக்கும் கனவுடன் ரயிலடியில் கிட்ணன் பிரிந்து செல்லும் காட்சிதான் பால்கனிகளில் நம் மனதில் தைத்து நிற்கும். “அழாத மாமா, அம்மா அழுது ” என்று பிஞ்சு விரலால் ஆல்பர்டின் கண்ணீர் துடைக்கும் ஜெயராணியின் மகன்தான் இரட்சணியத்தில் நம் நினைவை ஆக்கிரமிக்கப்போவது. எவ்விதத்திலும் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்கள் அவர்கள் செய்த செயலாக நம் எண்ணத்தில் நீடிக்கப் போவதில்லை. அவர்கள் செய்யப்போகும் செயல்வழியேதான் நம் நினைவில் நீடிக்கிறார்கள் . அதை உருவாக்கிய விதத்தில் சு.வேணுகோபால் கவனிக்கத்தக்க படைப்பாளியாகிறார்.

மூன்றாவது காரணமாக நான் நினைப்பது சு.வேணுகோபாலின் எழுத்து நடை. உவமைகள், படிமங்கள் , உருவகங்கள் போன்ற இலக்கிய நுட்பங்கள் வழியே படைப்பை நகர்த்திச் செல்லும் புனைவிலக்கியத்தின் எழுத்துமுறைக்கு சு.வேணுகோபால் பரிச்சயமில்லாதவராகத்தான் தெரிகிறார். அவரது எழுத்து நடையும் கூட எவ்வித கதை சொல்லும் உத்திக்குரிய ஒன்றாகவும் இருப்பதில்லை. காட்சிப்படுத்துதல், உரையாடல்கள் ஆகிய இரண்டும்தான் அவரது எழுத்து நடையின் பெரும்பான்மைக் கூறுகள். ஒன்றிலிருந்து மூன்று, மூன்றிலிருந்து ஒன்பது என தாவிச் செல்லும் எழுத்து நடை அவருடையது. தேர்ந்த வாசகன் இடையில் இருக்கும் விடுபடல்களை தானே நிரப்பித் தொடர்கிறான். சு. வேணுகோபால் வெகு வேகமாக உச்சியை அடைந்துவிடுவது இந்தத் தாவல்கள் மூலம் என நினைக்கிறேன் . ஒரு இடம் சொன்னால் சரியாக இருக்கும். ஆட்டம் படைப்பில் வேறொருவனுடன் ஊர்சுற்றி வரும் மனைவியை வீட்டின் வாசலில் வைத்து அடித்து நொறுக்குகிறான் வடிவேல். ஒரு பத்தி முழுவதும் அவள் வாங்கும் அடிகளைச் சொல்லி அடுத்த பத்தி ஒரே வரியில் முடிகிறது -” உயிரை மாய்த்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை”. முதல் பத்தியை விட பெரிதாக ஆகிவிடுகிறது இந்த ஒரு வரி . இந்தத் தாவல்கள்தான் சு.வேணுகோபாலின் எழுத்து நடையாக அவரது படைப்புகள் அனைத்திலும் கிடைக்கின்றன.

காட்சிப்படுத்துதலுக்கு அவர் தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் இரண்டு விஷயங்களையே. நிலக்காட்சி அமைப்புகளும், வேளாண்பயிர் வயல்களும். அவரது அசாதாரணமான நுண் தகவல்கள், அவை கதையோடு பொருந்தி கதையின் குறியீடாக மாறுமிடம் அனைத்தும் இந்த இரு விஷயங்களின் வழியேதான் நடக்கின்றன. நிலம் எனும் நல்லாள் படைப்பில் குமரனின் மரணம் காட்சிப்படுத்தப்படும் இடம் சூரியகாந்தி பூத்த , நீர் பாயும் வயல். அவனை எழவொட்டாது சரிப்பது மண்தான். வயல்களும், பயிர்களும் , மரங்களும் , பாறைகளும், பனைகளும் நிறைந்த பல நிலக்காட்சிகள் அவரது அனைத்துப் படைப்புகளிலும் கிடைக்கும். ஆனால் படைப்பின் குறியீடாக அந்த நிலக்காட்சிகளை , வயல்களை மாற்றிக் கொள்வதில் சு.வேணுகோபாலின் வெற்றி இருக்கிறது. மொட்டை வெயிலில் , அனலுமிழ்ந்து கிடக்கும் பாறை அடியில் இருக்கும் நீரூற்றைக் கண்டு , குலை தள்ளும் தென்னையை செழிக்கச் செய்கிறான் கூந்தப்பனையின் நாயகன். இப்படி சமகால கதைசொல்லல் முறையில் குறியீடுகளை வளைத்துக் கொண்டுவரும் உத்தி வெகு சில எழுத்தாளர்களுக்கே வாய்த்திருக்கிறது.

இப்படியான கூறுமுறை , வர்ணனைகள், கதை மாந்தர் , பேசுபொருள் , எழுத்து நடை என துலங்கும் சு.வேணுகோபால் தாவல்களை ஒரு நல்ல உத்தியாகவே பயன்படுத்துகிறார் என்றாலும் அவையே சிறிய தடைகளாகவும் தோன்றுகின்றன . பெருநாவல் ஒன்றுக்கான களத்தில் அவர் புக முடியாமல் போவது இதனால்தானோ என்று தோன்றுகிறது.

எவ்வாறாயினும் , லஜ்ஜைப்பட்டவனுக்கு பரிமாற ஆயிரம் படைப்புகள் இருக்கும் காலத்தில், திருப்தியாய் உண்டு கையை பின்னுக்கு இழுத்து சாய்ந்தவனுக்குப் பரிமாற சு. வேணுகோபாலைப் போல வெகு அரிதான சில படைப்பாளிகளே இருக்கிறார்கள் . அவ்வரிசையில் இன்று சிறப்பான படைப்பூக்கத்துடன் இருக்கும் சு.வேணுகோபால் தமிழின் என்றும் தவிர்க்க இயலா படைப்பாளிகளில் ஒருவர்தான்

8 comments

  1. // நம் இலக்கியத்திற்கு. ஒரு கூறுமுறையாக உருவான தாவணி அக்காக்கள், அத்தைகள், சித்திகள் முப்பதாண்டு காலம் நமது இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்த அக்காக்களை அறிமுகம் செய்த முதல் வரிசை படைப்பாளிகள் தவிர பிறர் கையாண்ட விதத்தில் அக்காக்கள் விடலைப்பருவ ஆணின் பகல்கனவு தோற்றங்களாகிப் போனார்கள்.
    தமிழிலக்கியத்தின் 1970 தொடக்கி 2000 வரை வெளியான முக்கிய படைப்புகள் அனைத்தையும் ஒரே மூச்சில் வாசித்தோமானால் அவற்றில் பெரும்பான்மையும் நிறைவேறா காதல்களின் ஏக்கங்களை, காமத்தால் பீடிக்கப்பட்ட, முறைசாரா உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்களை மட்டுமே பேசியிருப்பதாக உணர்கிறேன். மிகச் சிலரே அதைத்தாண்டி செயல்பட்டிருக்கிறார்கள்.//

    இதைப்போல ஒரு sweeping statementஐ நான் அரிதாகவே கண்டிருக்கிறேன். உண்மையில் ராஜகோபாலன் எந்தப் படைப்புகளை படைப்பாளிகளைச் சொல்கிறார்?. தமிழின் தீவிர இலக்கியவாதிகளான,க.நா சு. சுந்தரராமசாமி, அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சா. கந்தசாமி,நகுலன், ந.முத்துசாமி, கி.ராஜநாராயணன்,ஜி.நாகராஜன்,பிரமீள்,சார்வாகன், விட்டல் ராவ், ஆ.மாதவன், பூமணி,அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஆதவன்,சம்பத், நாஞ்சில் நாடன் பிரபஞ்சன், அம்பை,சூடாமணி, கிருத்திகா ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் தீவிரமாக செயல் பட்டுக் கொண்டிருந்த காலகட்டமிது.மிகக் குறைந்த காலத்துக்காவது சில நல்ல படைப்புகளைத் தந்த மாலனையும், சுப்ரமணிய ராஜுவையும் கூட விட்டுவிடுவோம். இவர்களது எந்தப் படைப்புகளைக் கொண்டு அவர் சொல்லும் நிறைவேறா காதல்களின் ஏக்கங்களை, முறைசாரா உறவுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்களை மட்டுமே பேசியிருப்பதாக உணர்கிறேன் என்கிறார்? நிச்சயமாக ராஜகோபாலன், பாலகுமாரன இந்துமதி, சிவசங்கரி ஆகியோரை, நான் குறிப்பிடும் இந்த எழுத்தாளர்களது வரிசையில் வைக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

    நான் இங்கு குறிப்பிடாது விட்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்கள் மூவர். அவர்கள் தி. ஜானகிராமன், வண்ண நிலவன், வண்ண தாசன்.ஒப்பு நோக்க மேலே குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்களை விட அதிகமும் ஆண் பெண் உறவுகளைப் பற்றி அதிகம் எழுதியிருப்பவர்கள் என்று சொல்ல முடியும். ஆனால் அது மட்டுமே அவர்களது படைப்புலகம் அல்ல என்பதைனையும் மிக எளிதாக கண்டு கொள்ள முடியும்.அதிலும் ஜானகிராமன் 82லியே மறைந்தும் விட்டார் அப்படியே அதுதான் அவர்களது படைப்புலகம் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டால் கூட. இவர்களின் எண்ணிக்கை நான் முன்னே சொல்லியிருக்கும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் ஒரு மிகச் சிறு பான்மைதானே.. இத்தனைக்கும், இடதுசாரி எழுத்தாளர்களான சிதம்பர ரகுநாதன், கந்தர்வன், டி.செல்வராஜ், ராஜேந்திர சோழன், ச.தமிழ்ச்செல்வன்,கு.சின்னப்பபாரதி,பொன்னீலன் போன்றவர்களை நான் குறிப்பிடவேயில்லை. இலக்கியத் தரம் என்ற விதத்தில் அவர்களை, நான் முதலில் சொல்லும் வரிசையில் சேர்ப்பதற்கு இரண்டாவது கருத்து உண்டு என்றாலும் இவர்கள் ராஜகோபாலன் சொல்வது போன்ற எழுத்துக்குச் சொந்தக்காரகள் அல்லவே

    மேலே நான் சுட்டியிருக்கும் எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும், ஒரேயடியாக புறம் தள்ளுவது மிகவும் வருத்தத்திற்குரியது. ஆகமொத்தம் 70களில் இருந்து 2000 வரை தமிழின் தீவிர இலக்கியப் பரப்பின் (நாம் வணிக எழுத்துக்களை இங்கு சேர்க்க மாட்டோம் தானே) பெரும்பான்மையான படைப்புகள் பெரும்பான்மையும் நிறைவேறா காதல்களின் ஏக்கங்களை, காமத்தால் பீடிக்கப்பட்ட, முறைசாரா உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்களை மட்டுமே பேசியிருப்பதாக
    சொல்லும் ராஜகோபாலன் குறைந்த பட்சம் சில எழுத்தாளர்களையாவது, சில படைப்புகளையாவது பெயர் சொல்லி சுட்டிக் காட்டியிருக்க வேண்டாமா? ராஜகோபாலனைப் போன்ற நல்ல எழுத்துத் திறமையும், இலக்கியம் மீது மட்டற்ற ஆர்வமும் கொண்டுள்ள ஒரு இளம் (இன்னமும்)வாசகரே/எழுத்தாளரே இது போன்ற தடாலடியான தீர்மானங்களுக்கு வருவதும் அதனைத் துணிந்து பதிவு செய்வதும், அவரது அலட்சியத்தையும்,, எடுத்துக் கொண்ட பொருள் குறித்து பேசுமுன் அது குறித்து ஆழமான அறிதல் தேவையில்லை என்று நினைப்பதையும் காணும்போது வருத்தமாகவே உள்ளது.இதைப் பதிவு செய்வதற்கு முன் அவர் ஒரு முறையாவது 70கள் தொடங்கி 2000 வரை வெளி வந்த முக்கியமான தமிழ் படைப்புகளை புரட்டிப் பார்த்திருந்தால் இப்படி ஒரு தவறான புரிதலுக்கு வந்திருக்க மாட்டார்.

    ஒரு மேலோட்டமான பார்வைகே 18வது அட்சக்கோடு,கரைந்த நிழல்கள்,மானசரோவர்,ஒற்றன், காகித மலர்கள், ஜேஜே சில குறிப்புகள், சாயா வனம், அவன் ஆனது, க்ருஷ்ணபருந்து,மணலும் புனலும்.கோபல்ல கிராமம்,தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும், மானுடம் வெல்லும், வானம் வசப்படும்,போக்கிடம்,நதிமூலம்,இடைவெளி,பிறகு,பள்ளி கொண்டபுரம், உறவுகள், தலைமுறைகள், நாளை மற்றும் ஒரு நாளே, குறத்தி முடுக்கு,ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்,தந்திர பூமி, மாயமான் வேட்டை,குருதிப் புனல்,நித்யகன்னி, வேள்வித் தீ, என்று ஒரு முடிவிலாத பட்டியல் உண்டே (இவை சட்டென்று மனதில் தோன்றியவைதான் இது போக இன்னும் எவ்வளவோ படைப்புகள் இருக்கும்.). இவை அனைத்தையுமேவா ராஜகோபாலன், அக்கா அத்தை சித்தி, நிறைவேறா காதல் கதைகள்,மற்றும் விடலை ஆண்களின் பகற் கனவுக் கதைகள் என்று சொல்கிறார்? ராஜகோபாலனிடமிருந்து நிச்சயம் ஒரு விளக்கம் தேவைப்படுகிறது.

    ஒரு கட்டுரையை வெளியிடும்போது அந்த இதழ், அந்த கட்டுரையாளரின் ஒவ்வொரு கருத்தையும் கேள்விக்குள்ளாக்க முடியாதுதான்.ஆனால் இப்படிப் பட்ட முன் தீர்மானிக்கப்பட்ட, தடாலடி முடிவுகள் வந்து விழும் போது அதற்கான சான்றுகளை அந்தக் கட்டுரையாளரிடம் கோரிப் பெற்றிருக்கலாம். அந்த வகையில் பதாகை ஆசிரியர் குழு இன்னமும் கூட விழிப்புடன் இருந்திருக்கலாம் என்றுத் தோன்றுகிறது.அக்காக்ககள், அத்தைகள் சித்திகள் முப்பதாண்டு காலம் நம் தமிழ் இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்று எழுதுவது அந்தக் காலக்காட்டத்தில் எழுதிவந்த மாபெரும் எழுத்தாளர்களை அவமதிப்பது அல்லவா? ஒரு எழுத்தாளருக்கு சிறப்பிதழ் வெளியிட்டு கொண்டாடும் வேளையில் இப்படி பல மூத்த எழுத்தாளர்களை தடாலடி ஒரு வரி அறிக்கைகளில் அவமதிப்பதை அனுமதித்திருக்க வேண்டாமே.அவரிடமிருந்து குறைந்தபட்ச ஆதாரமாவது கோரியிருக்கலாம்.

    1. “முதல் வரிசை படைப்பாளிகள் தவிர பிறர்” என்று சொல்வதே பிரச்சினைக்குரிய பயன்பாடுதான்- யாரெல்லாம் முதல் வரிசை படைப்பாளிகள் என்ற கேள்விக்குச் செல்ல வேண்டியதிருக்கும். ஒரு சமாதானத்துக்காக, நீங்கள் சுட்டிக்காட்டிய எழுத்தாளர்கள் முதல் வரிசை படைப்பாளிகள் என்றும், படைப்புகள் முதல் வரிசை படைப்புகள் என்றும் சொல்லி வைக்கிறேன். ஆனால் நேர்மையாகச் சொன்னால், இப்படி ஒரு விமரிசனம் வரும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது பதிப்பாசிரியர் குழுவின் முக்கியமான கடமை. அதைச் செய்யத்தவறியதால், நீங்கள் சொல்வது போல், “மாபெரும் பல மூத்த எழுத்தாளர்களுக்கு” மட்டுமல்ல, கட்டுரையை எழுதிய ஜா ராஜகோபாலன் உட்பட பதாகையில் எழுதியவர்கள் அனைவருக்கும் நியாயம் செய்யத் தவறிவிட்டோம் (இப்படிதானே எதைக் கொடுத்தாலும் போட்டிருப்பாங்க என்ற கேள்வி வரும், அது சரியல்ல என்றாலும்). மன்னித்துக் கொள்ளுங்கள், இனி மேலும் கவனமாக இருக்கிறோம்.

      இது போன்ற கறாரான எதிர்வினைகள் மிகவும் அவசியம். எங்களை மதித்து அதைச் செய்ததற்கு கூடுதல் நன்றிகள்.

      1. அன்புள்ள சுரேஷ் அண்ணா,
        இத்தனை ஆண்டுகளில் நீங்கள் இவ்வளவு நிதானம் மீறி எழுதி நான் பார்த்ததில்லை .
        நான் இந்தக் கட்டுரையை எழுதும்போதே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியிருக்கிறேன். இது என் வாசிப்பு, ரசனை அடிப்படையிலான கருத்து மட்டுமே.எனது எல்லா ரசனை கட்டுரைகளிலும் இதைக் குறிப்பிட நான் தவறியதில்லை. இதில் விமரிசன முறைமை, வழமை, கடமை எதையும் நான் பின்பற்றி எழுதவில்லை . இதில் நான் கருதிய கருத்துகள் தவறென்றால் அது என் வாசிப்பின் குறைபாடாகவே கொள்ளுங்கள் . நீங்கள் சொல்ல முனைந்திருப்பதும் அதுதான்.

        ஆனால் எழுத்தாளர்களை அவமதிப்பது என்பன போன்ற உங்கள் கருத்துக்களை எப்படி வரிகளுக்கு இடையே வாசித்து பொருள் கொள்கிறீர்கள்? நீங்கள் எப்படி என் கட்டுரையிலிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதை நான் சொன்னதாக சொல்லி விட்டு, அடுத்த வரியிலிருந்து எழுத்தாளர்களை நான் அவமதித்ததாக சொல்லி , அடுத்த பத்தியில் இந்த அவமானத்தை அவமதித்த ஆசிரியர் குழுவையும் ஒரு போடு போட்டீர்களோ அதே முறையில்தான் நானும் எனது கருத்துக்கு வந்து சேர்ந்தேன். 🙂 அந்த முப்பது வருட எழுத்துகளில் பேசுபொருள் எதுவாக இருந்தது என்ற பொதுக் கருத்தை நான் உருவாக்கிக் கொண்டுதான் பேசியிருக்கிறேன். அதற்குப் பொருள் அந்த எழுத்தாளர்களை நான் சாடினேன் , அவமதித்தேன், அந்த காலக் கட்டத்தில் எழுதிய மகத்தான எழுத்தாளர்களை இடக் கையால் ஒதுக்கித் தள்ளினேன், அவர்களில் பலர் பிற எதையும் எழுதவே இல்லை என்பதல்ல . எழுத்தாளர்கள் வழியே வாசிப்பை மேற்கொள்வது ஒரு முறை என்றால் எழுத்துகள் வழியே மட்டும் பேசுவது ஒரு முறையாக இருக்கக்கூடாதா? நிங்கள் இட்ட பட்டியலில் உள்ள பல எழுத்தாளர்களும் நான் சொன்ன விதத்தில் எழுதியவர்கள். அதே நேரம் வேறு வகைப் படைப்புகளையும் கையாண்டிருக்கிறார்கள். அதை நான் எங்கும் மறுக்கவில்லை. ஆனால் அதை நான் இங்கு பேசுபொருளாக்கவில்லை. அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பல படைப்புகளில் பேசப்பட்ட பொருள் எதுவாக நான் உணர்நதேனோ அதையே நான் சொன்னேன். அக்கருத்து தவறு என நீங்கள் நினைத்திருந்தால் அக்கருத்தை மறுத்து சொல்லியிருக்கலாம். ஆனால் அதன் வழியே ஏன் நான் எழுத்தாளர்களை அவமதித்து விட்டதாக பழி சுமத்துகிறீர்கள் அண்ணா ?

        நான் ஆய்வுக் கட்டுரை எதையும் எழுதவில்லை. நீங்கள் அளித்த பட்டியலில் இரண்டு படைப்புகள் தவிர அனைத்தையும் வாசித்திருக்கிறேன் என பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன, எவ்வளவு, யாரை வாசித்திருக்கிறேன் என்ற பட்டியல் இடும் இடமல்ல இந்தக் கட்டுரை . வாசித்தவரை என் கருத்து என்னவாக இருக்கிறது என்பதையே சொல்லியிருக்கிறேன். நான் வாசிக்கும்போது அப்படி உணர்ந்தேன் என்றுதான் எழுதியிருக்கிறேன். அதிலும் முதல் வரிசை படைப்பாளிகள் தவிர என்று அதற்கான விதிவிலக்குகளொடுதான் எழுதியிருக்கிறேன்.உங்கள் வாசிப்பு முறை எழுத்தாளனை மையமாகக் கொண்டது என நினைக்கிறேன். நான் எழுத்தை ஒரு காலக்கட்டப் பின்ணணியில் வைத்து வாசித்துப் பார்த்தேன். ( திரைப்பட விமரிசனங்களில் இம்முறை இருப்பதாக நினைக்கிறேன். உடனே 47 கட்டுரைகளை அதற்கு தரவாக காட்டச் சொன்னால் எங்கே போவேன் ….:) ) நான் உணர்ந்தது என் வாசிப்பின் போதாமையாகவே இருக்குமே தவிர எழுத்தாளனை அவமதிப்பதாக இருக்காது . முப்பதாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற வரியில் ஒரு இளிப்பானைப் போடாதது என் தவறே. இனி சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப்பருப்பு சேர்க்க மாட்டேனென்று உறுதி அளிக்கிறேன்.
        ஆனால் எந்த சந்தர்பத்திலும் நான் எந்த எழுத்தாளரையும் அவமதிக்கும் நோக்கில் எழுதவில்லை. அப்படிப் பேசியதன் மூலம் நான் துளியும் நினைக்காத ஒரு விஷயத்தை என் மேல் பழி சுமத்த வேண்டாம். என்னை விட அதிக வாசிப்பும், ஆய்வு மனப்பான்மையும், கறார் தன்மையும் கொண்ட நீங்கள் எனக்கு இப்படி ஒரு பட்டத்தை சுமத்தியிருக்க வேண்டாம். ஒரு எழுத்தாளரின் படைப்புகள் மீதான வாசிப்பைப் பற்றி பேச வந்த இந்தக் கட்டுரை இன்று வேறு காரணங்களுக்காக பேசப்படும்படி செய்துவிட்டீர்கள்.

        //இது போன்ற தடாலடியான தீர்மானங்களுக்கு வருவதும் அதனைத் துணிந்து பதிவு செய்வதும், அவரது அலட்சியத்தையும்,, எடுத்துக் கொண்ட பொருள் குறித்து பேசுமுன் அது குறித்து ஆழமான அறிதல் தேவையில்லை என்று நினைப்பதையும் காணும்போது வருத்தமாகவே உள்ளது.//

        நான் சொன்ன ஒரு வாக்கியத்தின் வழியே மொத்த தமிழ் எழுத்தாளர்களையும் நான் அவமானப்படுத்தி விட்டதாக சொல்லும் நீங்கள் எழுதிய இந்த வரிகளைப் பார்த்தால் ………நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி, கோபமடைந்து , அதற்கு கழுவாய் தேட முயன்று, ஆசிரியர் குழுவை வேறு காய்ச்சி எடுத்து ….. என் கட்டுரை மீதான உங்கள் வாசிப்பில் ஏதோ இடறல் இருக்கிறது. இப்படி ஒரு புரிதலோடு நீங்கள் எக்கட்டுரையும் எழுதியதில்லை. இனி நான் “துணிந்து” எக்கருத்தையும் இங்கு வைக்கப்போவதுமில்லை.

        ஆதாரம் கோர நான் வழக்கு எதுவும் தாக்கல் செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் மை லார்டு ! ( இளிப்பான்)

        ஹ்ம்ம் , இப்படியெலாம் “உறுதிபட” உங்களுக்கு மறுப்பு தெரிவிக்க ஆசைதான் . ஆனால் ஒரு வரி என்னை சோர்வடையச் செய்து விட்டது. “நான் எழுத்தாளர்களை அவமதித்தேன் ” என்ற பொருளில் வரும் வரி. அப்படி உங்களுக்கு தோன்றியிருக்கும் பட்சத்தில் எனது நோக்கம் அதுவல்ல என்பதை உளப்பூர்வமாக தெரிவிக்கிறேன். என் பொருட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட ஆசிரியர் குழுவினர் என்னை மன்னிப்பாராக ! இக்கட்டுரையை வைத்திருப்பதையும், நீக்குவதையும் நான் ஆசிரியர் குழுவின் முடிவிற்கே விடுகிறேன்.
        இது தொடர்பான எந்த விவாதத்தையும் நான் இங்கு தொடரப் போவதில்லை. அது சு.வேணுகோபாலுக்கு செய்யப்படும் மரியாதைக் குறைவாகவே கருதுகிறேன். எனது தனி மின்னஞ்சலில் என்னை வைய வருவோர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
        இவ்வாறு எதிர்பாராமல் நிகழ்ந்தமைக்கு பதாகை ஆசிரியர் குழுவினரிடம் என்னைப் பொறுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
        நன்றி.,

        அன்புடன்,
        ராஜகோபாலன் ஜா.

        1. விரிவான பதிலுக்கு நன்றி.

          இந்தக் கட்டுரை எக்காரணம் கொண்டும் நீக்கப்பட மாட்டாது என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்- அதற்கான அவசியமும் இல்லை.

          நானும் ஒரு சிறு விளக்கம் சொல்லிக்கொள்கிறேன்.” நம் இலக்கியத்திற்கு ஒரு கூறுமுறையாக உருவான தாவணி அக்காக்கள், அத்தைகள், சித்திகள் முப்பதாண்டு காலம் நமது இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்த அக்காக்களை அறிமுகம் செய்த முதல் வரிசை படைப்பாளிகள் தவிர பிறர் கையாண்ட விதத்தில் அக்காக்கள் விடலைப்பருவ ஆணின் பகல்கனவு தோற்றங்களாகிப் போனார்கள். தமிழிலக்கியத்தின் 1970 தொடக்கி 2000 வரை வெளியான முக்கிய படைப்புகள் அனைத்தையும் ஒரே மூச்சில் வாசித்தோமானால்…” என்று போவதுதான் பிரச்சினை.

          சுரேஷ் சொல்றது ரொம்ப சிம்பிள்- பத்டிரிக்கையாசிரியர்க்ளில் ஒரு சிலரைத் தவிர பிறர் எமர்ஜென்சி காலத்தில் பணிந்து போனார்கள் என்று சொல்லும்போது, சில விதிவிலக்குகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் என்று அர்த்தமாகிறது. அதாவது, பணிந்து போவதுதான் rule, எதிர்ப்பது exception, என்கிற மாதிரி. அதனாலதான் அவர், “இந்த அக்காக்களை அறிமுகம் செய்த முதல் வரிசை படைப்பாளிகள் தவிர பிறர் கையாண்ட விதத்தில்” என்பதைப் பார்த்துவிட்டு, வெகு சிலரைத் தவிர அத்தனை பேரும் என்று அர்த்தம் வருவதாக வருத்தப்படறார்- தாவணி அக்காக்கள் இல்லாத முக்கிய படைப்புகளின் ஒரு ஆரம்ப கட்ட லிஸ்ட் போட்டுட்டு, தாவணி அக்காக்கள் இருக்கற முக்கிய படைப்புகளின் லிஸ்ட் கேக்கறார். நீங்க லிஸ்ட் போடறதுன்னு ஆரம்பிச்சா நீங்க சொல்லச் சொல்ல அவரும் பதிலுக்குச் சொல்லுவார்ன்னு நினைக்கிறேன், எது அதிகம் பாக்கலாம்ன்னுட்டு 🙂

          உங்க பதிலைப் பார்க்கும்போது “இந்த அக்காக்களை அறிமுகம் செய்த முதல் வரிசை படைப்பாளிகள் தவிர” மத்த எழுத்தாளர்களையும் அவர்களது முக்கிய படைப்புகளையும் அப்படியெல்லாம் முத்திரை குத்தி அவமானப்படுத்தும் நோக்கம் உங்களுக்கு இல்லை என்று தெரிகிறது. உங்களையறியாமல் நீங்கள் அதைச் செய்திருப்பதால் பதிப்பாசிரியர்களின்மீது இன்னும் கூடுதல் பழி விழுகிறது, என்னைப் பொறுத்தவரை நிச்சயம் நாங்க பொறுப்பாக செயல்படவில்லை என்பது நிச்சயம், அதற்காக வருந்துகிறேன்.

          நீங்கள் தரும் விளக்கத்தைப் பார்க்கும்போது, ஒரு சிறு நாத்தடுமாற்றம்தான் என்று தெரிகிறது- பதிப்பாசிரியர்கள் கவனமாக இருந்திருந்தால் நிச்சயம் அதைத் தவிர்த்திருக்கலாம்.

  2. ராஜ கோபாலன், நீங்கள் வேண்டுமென்றே எழுத்தாளர்களை அவமதிப்பதாகவோ அதுதான் உங்கள் நோக்கம் என்றோ நான் சொல்லவில்லை. ஒரு முப்பதாண்டு கால தமிழ் இலக்கிய பரப்பில் இந்த அக்காள்கள், அத்தைகள் சித்திகள் கதைகள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது எனும் போது அங்கு நிகழ்த்தப்பட்ட பல சாதனைகளும் அதை சாதித்தவர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இலக்கியம் போன்ற தளங்களில் புறக்கணிப்பு என்பது அவமதிப்பு என்றுதான் நான் சொல்வேன் அதைத்தான் சொன்னேன் மேலும் அது உண்மையுமல்ல ..அப்புறம் ஒரு தரவரிசையை ஏற்படுத்த பட்டியல்களே சிறந்த வழி. அதனாலேயே நான் அப்படி ஒரு பட்டியலைத் தந்தேன் என் வாசிப்பை காண்பித்துக் கொள்ள அல்ல. தமிழின் தீவிர இலக்கியத்தின் எந்தஒரு வாசகனுக்கும் அறிமுகமான பட்டியல்தான் அது(முழுமையானதும் அல்ல மற்றும் , இது உங்களுக்குத் தெரியாததும் அல்ல ).இப்படி ஒரு பட்டியலைத் தாண்டி, நீங்கள் சொல்லும் வகையான எழுத்துக்கள் தான் இந்த முப்பதாண்டுகள் ஆதிக்கம் செலுத்தியது என்றால், அந்தப் படைப்பாளிகள் யார்., அந்தப் படைப்புகள் என்னென்ன என்பதே என்னுடைய மிக எளிமையான கேள்வி. நீங்கள் அதை முன்வைக்க வில்லையென்றால் இந்த விவாதம் தொடர வாய்ப்பில்லை.விவாதங்களில் சில சமயங்களில் சற்றுத் தீவிரமான தொனியை மேற்கொள்ள வேண்டி வந்துவிடுகிறது. அதுதான் நான் நிதானம் தவறிவிட்டதாக உங்களை நினைக்க வைத்துவிட்டது.என்று நினைக்கிறேன்.மற்றபடி உங்கள் கட்டுரையின் தலைப்பின் கவித்துவமும் பதிவுகளும் எனக்கு பிடித்திருந்தது.தொடர்ந்து உரையாடுவோம், விவாதிப்போம்.

    சுரேஷ்.

  3. நூறு வயது வாழ்க்கையில் ஓர் ஆள் ஓரிரு முறை தடுக்கி/வழுக்கி விழலாம். அந்நேரங்களில் அந்த ஆளை, “குருடு” என்று நக்கல் பண்ணக்கூடும், ஆனால் அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். “நொண்டி” என்று யாரும் தள்ளிவைப்பதில்லை. வேணுகோபாலைப்பற்றியதொரு ஆக்கபூர்வமான ஆய்வுக் கட்டுரையில், எடுத்துக்காட்டு தராமல் ஒரு காலகட்டத்தைப் பற்றிச் சொல்லியது வழுக்கலாகலாம், அதுகூட மேற்கத்திய வழக்கப்படி. (புத்தம் ‘சூன்யவாதம்’ பேசுகிறது என்று சொல்லும் ஆதிசங்கரர் அது எந்த சூத்ரம் அல்லது பிந்தி வந்தவர்களில் எவருடைய கிரந்தம் என்று சொல்லவில்லை.) ஜா.ராஜகோபாலன் ஒரு காலகட்டத்தை அவரது வாசிப்பிலிருந்து புரிந்துகொண்டபடி பொதுமைப்படுத்துகிறார். வண்ணநிலவனுடைய இன்ன கதைகள், சுந்தரராமசாமியுடைய இன்ன கதை, பிரமிளுடைய இன்ன கதையிலுள்ள தொனி என்றெல்லாம் சொல்லியிருக்கலாம், ஆனால் அந்த வம்பு இந்தக் கட்டுரையில் என்னத்துக்கு?

    “ஒரு ட்ரெயினில் நடக்கும் கதைக்கு, ஒரு காட்சியில், அந்த வண்டியின் நீளத்தைக் காண்பிக்கவேண்டி வந்தால், வெளியே வயல்வெளியில் கேமராவை நிறுத்திப் படம்பிடிக்கமாட்டேன்; அதே ட்ரெயினில் ‘கார்டு’ நிற்கிற பெட்டியில் ஒரு ‘ஸ்டாண்டு’ பொருத்தி அதில் கேமராவை நிலைப்படுத்தி அந்த ‘ஷாட்’டை எடுப்பேன்,” என்று ஹிட்ச்காக் சொல்லியிருக்கிறார். சூழலிலிருந்து விலகாமல் இருப்பது கலையின் அறம் என்று அவர் கருதுகிறார், அவ்வளவுதான். வயல்வெளியில் கேமரா வைத்துப் படம்பிடித்த இயக்குநர்கள் எல்லாரையும் அவமதித்ததாக அது ஆகாதே?

    – ராஜசுந்தரராஜன்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.