நிலம் சுமந்தலைபவன் – சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி

த கண்ணன், வெ. சுரேஷ், தியாகு, அன்பழகன், புஷ்யமித்திரன், செந்தில்குமார், நித்யா

DSC_0168

சு.வேணுகோபால் – இருபது ஆண்டுகளாகப் பல காத்திரமான இலக்கிய ஆக்கங்களைப் படைத்து வருபவர். குமுதம் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற தனது முதல் நாவலான ‘நுண்வெளி கிரகணங்கள்’ மூலமாக இலக்கிய உலகில் அறிமுகமான போதும், இன்னமும், தீவிர இலக்கியங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களின் சிறிய வட்டத்துக்குள் மட்டுமே பெரிதும் சிலாகிக்கப்படுபவராக இருக்கிறார். வேணுகோபால் விவசாயப் பின்னணியில் நிறையப் புனைவுகள் எழுதியுள்ளார் என்பதை மட்டுமே அவரைப் படித்துள்ள வாசகர்கள் அறிவார்கள். ஆனால் வேணுகோபால் யார், அவரது பின்னணி என்ன, அவரது ரசனை எத்தகையது, அவரது இலக்கியப் பார்வை என்ன, பயணம் எத்தகையது, அவரது ஆதர்சங்கள் யார் என்பது குறித்து அறிந்தவர்கள் மிகச் சிலரே. இணைய உலகுக்கு அவரது அறிமுகம் முற்றிலுமாகக் கிடையாது என்றே சொல்லலாம்; இணைய உலகின் அறிமுகம் அவருக்கும் கிடையாது. அவரை இணைய இலக்கிய வாசகர்களுக்கு விரிவான முறையில் அறிமுகம் செய்யும் நோக்கில் இந்த நேர்காணலை எடுத்தோம். நம்மிடையே உள்ள ஒரு முக்கியமான படைப்பாளி, சு.வேணுகோபால் அளிக்கும் முதல் விரிவான நேர்காணல் இதுதான் என்பது எங்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது; அதேவேளை,இந்த முதல் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாகவும் இருந்தது.

வேணுகோபால் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்று பல இலக்கிய வகைமைகளை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’, ‘களவு போகும் புரவிகள்’, ‘வெண்ணிலை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், பால்கனிகள், கூந்தப்பனை, திசையெல்லாம் நெருஞ்சி ஆகிய குறுநாவல் தொகுப்புகளும், நுண்வெளி கிரகணங்கள், நிலமென்னும் நல்லாள், ஆட்டம் ஆகிய நாவல்களும் வெளிவந்துள்ளன. அவரது எழுத்து உக்கிரமாகவும் இருக்கும்; மென்மையாகவும் இருக்கும். அப்பட்டமாய் முகத்திலும் அறையும்; கூர்ந்து கவனித்தால் மட்டுமே புலப்படும் நுட்பங்களோடும் இருக்கும். கிராமிய வாழ்க்கையின் அவலங்களையும் அழகுகளையும் ஆழங்களையும், நகரத்துக்குப் பெயர்ந்துவிட்டவர்களின் போக்குகளையும் பல்வேறு தளங்களில் அவர் எழுதியுள்ளார்.

இந்த நேர்காணலை நடத்திய நண்பர்களான வெ. சுரேஷ், தியாகு, அன்பழகன், புஷ்யமித்திரன், செந்தில்குமார், நித்யா, கண்ணன் ஆகியோர் கொண்ட எங்கள் குழுவுக்கு வேணுகோபால் ஏற்கனவே மிகவும் பரிச்சயமானவர்தான். கோவையில் உள்ள தியாகு நூலகத்தில் சனிக்கிழமைதோறும் நிகழும் இலக்கிய உரையாடல்களில் அடிக்கடி எங்களோடு வேணுகோபாலும் இணைந்துகொள்வார். ஒரு படைப்பாளியாக அவரை நாங்கள் நேசிக்கும் அளவுக்கு, ஒரு நண்பராக ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் நேசத்தோடும் மிகந்த அக்கறையோடும் நடந்துகொள்பவர் அவர்.

அத்தகைய ஒரு நண்பரோடு, அதே தியாகு நூலகத்தில் ஒரு விரிவான நேர்காணலை நிகழ்த்த முடிந்தது அனைவருக்கும் இனிமையான அனுபவம். ஐந்து மணிநேரம் தொடர்ந்து நிகழ்ந்த இந்த உரையாடலின் பெரும் பகுதியைப் பதிவு செய்துள்ளோம். வேணுகோபால் சுவாரசியமான பேச்சுக்காரர். செந்தமிழும், போடி வட்டாரத்து கிராமியப் பேச்சுவழக்கும், நகரத்துப் பாதிப்பும் மாறிமாறி இயல்பாக அவரது பேச்சில் வெளிப்படும். ஏற்ற இறக்கங்களுடன், உணர்ச்சிப் பரவசத்துடன், அவ்வப்போது நாடகீய பாவனைகளுடன் பேசக்கூடியவர். அவரது பேச்சின் சுவையை எழுத்தில் முழுமையாய்க் கொண்டுவருவது சிரமமானதுதான். இலக்கியத்தின் மீது, குறிப்பாய் தி.ஜானகிராமன் மீது, பெரும் காதல் கொண்டுள்ளவர் என்பதை நாங்கள் அறிவோம். அதைவிட ஆழமாய்த் தன் மண்மீதும் மனிதர்கள்மீதும் அளப்பிலாப் பேரன்பு கொண்டவர் என்பதும் அறிவோம். அவரது ஊரும் நிலமும் அவர் எங்கிருந்தாலும் அவருள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நிலமென்னும் நல்லாள் நாவலுக்கு அவர் முதலில் வைக்க விரும்பிய தலைப்பு, ‘நிலம் சுமந்தலைபவன்’ என்பதையும் அறிவோம். அவரும் அவர் சுமந்துகொண்டு இருக்கும் நிலமும், இலக்கியக் கனவுகளும் பார்வையும் இந்த நேர்காணலில் வெளிப்படும் என்று நம்புகிறோம்.

இனி நேர்காணல்.

சுரேஷ்: ரொம்ப நாளா முயற்சி செய்து இன்னிக்குத்தான் வந்திருக்கோம். உங்கள் கதைகளை நிறையப் படிச்சுட்டோம். நிறையப் பேசிட்டோம். உங்ககூடயும் பேசியிருக்கோம். எங்களுக்குள்ளேயும் பேசியிருக்கோம். எங்களுக்கெல்லாம் ஒரு ஆதங்கம் என்னன்னா, வேணுகோபால் புனைவுகளிலேயே நிறுத்திட்டாரே. பெரிய நேர்காணல்களோ, கட்டுரைகளோ பெரிசா வெளிய வரவில்லை. முக்கியமாய் இது இணையதள காலமாய் இருக்கு. வெறும் அச்சு ஊடகத்தில் மட்டுமே இருக்கிற உங்கள் மேல போதிய வெளிச்சம் விழவில்லையோ? அதனால, இணையப் பத்திரிக்கைகள்ல வந்தால் இன்னமும் உங்களைப் பரவலா அறிமுகப்படுத்தும்னு நினைக்கிறோம். அறிமுகம் இல்லை என்றில்லை. பெரிய பரிசு வாங்கினவர், பரவலான கவனம் இருக்கு என்பது வேறு. அதையும் தாண்டி, இன்னும் கொஞ்சம் எங்களுக்கு சந்தோஷம் ஏற்படுத்துகிற வகையில, நீங்கள் பல்வேறு விஷயங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க என்பது வெளிவரணும்; இன்னமும் அதிகம் வெளிச்சம் விழணும் என்பது எங்கள் ஆசை. அதுக்கு வேண்டித்தான் இந்த நேர்காணல். இதுக்கு முன்னாடி நாஞ்சில் நாடன்கிட்ட ஒரு பேட்டி பண்ணியிருந்தோம். அது ஒரு பரவலான கவனம் பெற்றது.

ஆரம்பிக்கும் போதே, சு.வேணுகோபால் யார்? அவரே சொன்னா நல்லாயிருக்கும்.

வேணுகோபால்: சு.வேணுகோபால் என்கிறவன் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பது முக்கியமான விஷயம். முன்னாடி சொன்னீங்க, ஏன் non-fiction எழுதலை?. முக்கியமா விவசாயம் தொடர்பா பெரிய பெரிய கட்டுரையெல்லாம் எழுதியிருக்கேன். மழை என்ற சிற்றிதழ்ல தொடர்ந்து எழுதினேன். ‘கவர்மெண்ட் மாப்பிள்ளைகள்’னு வந்துச்சு. ‘பட்டுத்தேரிய நுட்பங்கள்’னு ஒரு பெரிய கட்டுரை. அப்புறம் ‘முடிந்துபோய் விட்டது உழைப்பின் மேன்மை’ – எல்லாமே முப்பது நாற்பது பக்கம். மூன்று இதழ்களோட மழை நின்னிருச்சு. அது என்னன்னா, கட்டுரை எழுதக்கூடாது என்றில்லை. விவசாயம் அல்லது இலக்கியம் தொடர்பா எழுதச்சொன்னா எழுதிகிட்டு இருக்கேன். எனக்குக் கிடைச்ச சின்ன மேடைகளிலே சிறுகதை முன்னோடிகள் பற்றித் தொடர்ந்து எழுதிகிட்டு இருந்தேன். உதாரணமா, ‘ரசனை’ கோயமுத்தூர் வட்டத்திலே வந்த ஒரு சின்ன இதழ்தான். மரபின் மைந்தன் முத்தையா நடத்தினார். தொடர்ந்து பத்து பெர்சனாலிட்டியப் பற்றி எழுதினேன். யார்யார்னா, சுந்தர ராமசாமி பற்றி எழுதினேன், பிரபஞ்சனைப் பற்றி, அம்பையை பற்றி. அப்புறம் நாஞ்சில் நாடன், பூமணி பற்றி எழுதினேன். அதே மாதிரி, ‘உங்கள் நூலகத்திலே’ வண்ணநிலவன் பற்றியும் செல்லப்பாவைப் பற்றியும் எழுதினேன். ‘புதுப்புனல்’ல கு.அழகிரிசாமி, ஜானகிராமன் பற்றி எழுதினேன்.

சுரேஷ்: திண்ணையிலே நான் பார்த்திருக்கிறேன்.

வேணுகோபால்: வண்ணதாசன் பற்றி எழுதணும் என்று நினைக்கிறேன். ஆனா, ஒரு அலுப்பு, எழுதி எழுதி வைச்சு என்ன பண்றது. இப்போ கு.ப.ரா. பற்றி எல்லோரும் ஒரு மாறுபட்ட கருத்து சொல்லிகிட்டு இருக்காங்க. அவருக்கு ரொம்ப பின்தங்கிய இடம்தான் என்கிற கருத்துகூட இடையில வந்துச்சு. சமீபத்தில தியாகுகிட்டத்தான் அந்தப் புத்தகத்தை வாங்கிட்டுப்போய் படிச்சேன். பெருமாள் முருகன் தொகுத்தது. ஏற்கனவே நம்ம சதீஷ் தொகுத்திருக்கார். காலவரிசைப்படி நல்லாருக்குன்னு சொன்னதினாலே, இதைப்போய் வாங்கிப் படிச்சேன். படிக்கும்போது ஒரு குறிப்பு மாதிரி, ஒரு சின்ன நோட்ல எழுதி வைச்சேன். ஆறு ஏழு பக்கம் இருக்கும். அது சோம்பேறித்தனம் என்றில்லை. மேடை சார்ந்த இடங்களை நாடிப்போறது இல்லைங்கிறதுதான்…எழுதி ஒரு காலச்சுவடுக்கோ, உயிர்மைக்கோ, உயிரெழுத்துக்கோ அனுப்புறதிலே, வரவர இப்போ ஒரு அலுப்பு; எதுக்கு அனுப்பி, அது பப்லிஷ் ஆயிடுச்சுன்னா பரவாயில்லை, பப்லிஷ் ஆகாமற் போறபோது, எதுக்கு இப்படிக் கஷ்டப்பட்டோம்னு இருக்கு.

உதாரணமா, ஜெயகாந்தனைப் பற்றி ஒரு ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நல்ல கட்டுரை எழுதினேன். தலைப்பு வந்து, ‘மரபைச் செழுமையாக்க வந்தவர்’. அந்தக் கட்டுரையப் படிச்சுட்டு புதுப்புனல்ல, ‘சார், நீங்க அவரது பலம் பலவீனம் சொல்லியிருக்கீங்க. நான் அவருக்கு நெருங்கிய ஒரு நட்பார்ந்த வட்டத்திலே இருந்தேன். நானும் எம்.ஜி.சுரேஷ் எல்லாம். ஆனா இந்தக் கட்டுரை வரும்பொழுது அவர் மனம் கோணுமே! அதைப் பிரசுரம் பண்ணாம வைச்சுக்கிடலாமே’ என்று சொன்னார். ஒரு கட்டுரையால அவங்க விரும்புன நட்பு கெடவேணாமன்னு நானும் சரின்னுட்டேன். இம்மாதிரியெல்லாம் இருக்கு.

அதனாலேயே நான்-பிக்சன் எல்லாம் எழுதக்கூடாது என்றில்லை. எழுதணும். அதை எழுதாதினாலே தமிழ் இலக்கியம் பின்தள்ளிப் போறதுக்கான வாய்ப்பு அதிகமா இருக்கு. க.நா.சு. அதையெல்லாம் நினைச்சுப் பண்ணலை. பிக்சன், நான்-பிக்சன் எதையுமே அவர் விடலை. தொடர்ந்து எழுதிகிட்டிருந்தார். விமர்சனங்களை அவர் தொடர்ந்து செய்தார். அந்த வகையிலே ஜெயமோகன் கூட ஓரளவு செய்கிறார். நம்மளுக்கு அதில கருத்து என்னவாக இருந்தாலும்கூடத் தொடர்ந்து செய்கிறார். ஆனால், க.நா.சு. அளவுல தார்மீகமாக செஞ்ச ஆட்கள் இன்னிக்கு வரைக்கும் யாருமே இல்லை. வெங்கட் சாமிநாதனே கூடப் பார்த்தீங்கன்னா, ஒரு இக்கட்டு வரும்போது, இதை எழுதுன்னு சொல்லும்போதுதான் எழுதியிருக்கார். தொடர்ந்து செய்யவில்லை. க.நா.சு. தொடர்ந்து செய்தார். பிரசுரம் ஆகுதா ஆகவில்லையான்னு சொல்லி விட்டுவிடவில்லை. நான் எழுதாமலில்லை. எழுதி வைச்சுருக்கேன். சிறுகதைகள் நாவல்ங்கிறது விடக் கொஞ்சம் குறைந்தபட்சமா இருக்குது. தொடர்ந்து செய்யலாம்னுதான் நினைச்சுட்டு இருக்கேன்.

அப்புறம், இணைய தளத்துலே ஏன் போகவில்லைன்னா, எனக்குக் கணினி சார்ந்த பயன்பாடு இன்னும் தெரியலை. அதுதான் முக்கியமான காரணம். இரண்டாவது, நண்பர்கிட்ட கேட்கும்போது, இணையதளத்துல வரலாமா வேணாமாங்கிறதுக்கு இரண்டு விதமான கருத்து நிலவுது. நீங்கள் அக்கப்போர்களுக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு இருக்கவேண்டிய ஒரு காலகட்டம் இருக்குது. அதே சமயத்துலே, இளம் ஆட்கள் நல்லா வர்றாங்க. அவுங்களை தெரிஞ்சுகிடறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. இருக்கிற புத்தகங்கள் படிப்பதற்கு மலைமாதிரி கிடக்கு. வாங்கி வைச்ச புத்தகங்களே நூறு புத்தகங்களுக்கு மேலே படிக்காமல் இருக்கு. இது ஒரு காரணம். அப்போ, இதுல போய் இயங்குறத விட, முக்கியமான புத்தகங்கள் படிப்பது, எழுத வேண்டியது இருக்கு. அதனாலே, இதுல போய் நான் என்னத்தைச் சொல்லிவிட முடியும். இது நம்ம நேரத்தைக் கொன்னுறுமோங்கிற ஒரு அச்சத்துனாலேகூடத் தள்ளிவைச்சுட்டேன். இணையத்துக்குள்ளப் போகக்கூடாதுங்கிறதில்லை. இந்த இரண்டு கருத்து இருக்கிறதுனால, இன்னும் கொஞ்சம் தள்ளி இருக்கட்டுமே…கொஞ்ச நாள் கழிச்சுக்கூட உள்ள நுழைஞ்சுக்கிடலாம் என்று வைச்சுட்டேன்.

தியாகு: இந்த இடத்தில ஒரு ஜோக் அடிக்கலாமா.

வேணுகோபால்: சொல்லுங்க, சிரிக்கலாம்.

தியாகு: “இணையதளத்தில் எழுதுபவர்களெல்லாம் அக்கப்போர்வாசிகளா,” சு.வேணுகோபால் அறிக்கை. அப்படினு போட்டுறலாமா?

வேணுகோபால்: அப்படிச் சொல்ல வரலை.. தமிழ் இலக்கியத்தை வளர்த்ததில் சிற்றிதழ்களுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கு. மிடில் மேகசின்னு சொல்றோம் – அறுபதுகள்ல ஆனந்த விகடனுக்கு ஒரு பங்களிப்பு இருக்குன்னு சொல்றோமில்லீங்களா? அது மாதிரி, எல்லோருமே எழுதுவதற்கான ஒரு வெளி இன்னிக்கு இணையதளத்துல கிடைச்சிருக்கு. அவங்கவங்க ஒரு ப்ளாக் தொடங்கி எழுதலாம். அது சரியா இருக்கா இல்லையா, அது இரண்டாவது. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கு ஒரு வெளி கிடைக்குது, இல்லீங்களா? அது ஒரு முக்கியமான விஷயமாயிருக்கு. ஆனா, எழுதறவங்களுடைய இலக்கிய ஆளுமை என்ன என்கிற கேள்வி இருக்கு, இல்லீங்களா?

என்னையே ஒருத்தர் எடிட் பண்றது ஒரு நல்ல விஷயம் என்று பார்க்கிறேன். சமீபத்துல லா.ச.ரா. படிச்சிட்டிருந்தேன். பண்பாட்டு ரீதியிலே, குடும்ப உறவிலே மிக நுட்பமான கவித்துவ இடங்களை எழுதினவர் லா.ச.ரா. அவர்கிட்டியே, சில – பிழைகள் என்று சொல்லமுடியாது – ஆனால், திருத்திக்கிடலாம் என்று சில இடங்கள் இருக்கும். ஒரு இடம் சொல்றனே- அபூர்வ ராகங்கள் – நீங்க படிச்சிருப்பீங்க – அந்தக் கதையில, ரெண்டு பேரு கடற்கரைக்குப் போகலாம்னு நினைக்கிறாங்க. ஒரு பேரழகி, நீண்ட கூந்தல், கருப்பாக இருப்பாள். ஆனா அழகாக இருப்பாள். அவளைக் கல்யாணம் பண்ணணும்னு முடிவு பண்றான். அம்மா சொல்றாள். ‘ஏன்டா அம்பி, பேரழகியெல்லாம் வந்தாங்க. நீ அவளையெல்லாம் விட்டுட்டு, இவளப்போய், ஒரு அட்டக்கருப்பிய – தொட்டா ஒட்டிக்கிடும். இவளப்போய் கல்யாணம் பண்ணிக்கிறேங்கிறயே,’ அப்படின்னு கேட்கிறாங்க. கருப்பா இருக்காங்க. ஆனா அழகி. கருப்பிலே ஒரு அருமையான அழகு இருக்கு. அந்தக் கூந்தல் மிக அழகாக இருக்கும். அது மிகவும் சாராம்சமான விஷயம். ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னா, ‘இன்னிக்குக் கடற்கரைக்குப் போலாமா’ன்னா, போவோமே என்று மனைவி சொல்கிறாள். போவோம்னு சொல்லும்போது மழை பொழிந்துட்டிருக்கு. மழை பொழியும் போது எப்படி நீங்க கடற்கரைக்குப் போவீங்க? காற்றும் மழையா இருக்கு. எப்படிப் போவீங்க? இது சின்ன இடம்தான். அதற்காக அந்தக் கதையினுடைய தரத்தை நீங்க குறைச்சிடமுடியாது. நீங்க ஒரு எடிட்டரா இருந்தா, ‘சார், என்ன இது மழை பொழிஞ்சிட்டு இருக்கு. நீங்க இந்த டையத்துல போவீங்களா?’னு கேட்பீங்க. நானா இருந்தா, என்ன நினைப்பேன்னா, ‘கடற்கரைக்குப் போன பின்னாடி, அங்க மழை பிடிச்சுகிடிச்சு; நனைஞ்சு வந்தாங்க.’ இது ஒரு எடிட்டர் சொல்ல வேண்டிய வேலைதான். இந்தச் சின்னச்சின்ன விஷயங்களுக்காக ஒரு எழுத்தாளரை, ‘இதை எழுதிட்டாரு, ஒரு குறையுள்ள சிறுகதை’ என்று சொல்லி விட முடியாது. இது திருத்திக்கொள்ளக்கூடிய பிழைதான்.

இணையத்தில் இம்மாதிரியான வேலைகள் நிறைய இருக்கும்னு நினைக்கிறேன். உங்களை ஜட்ஜ் பண்றதுக்கு ஒரு ஆள் தேவையிருக்கு. சிற்றிதழ், நம்மோட கதைகளை கவிதைகளை கட்டுரையைப் பிரசுரம் பண்ணுதா பண்ணலையா என்பது இரண்டாவது விஷயம். எனது கட்டுரை பிரசுரம் பண்ணவில்லை என்றால், அதில் பல அரசியல் இருக்கலாம். அது வேறு. ஆனால், ஒரு கதை நல்ல கதையா மோசமான கதையா என்பதற்கு, அவன் என்ன எதிராளியாக இருந்தாலும்கூட, ஒரு இலக்கியத்துக்குத் தகுதிப்பாடு இருக்கா இல்லையாங்கறதுக்கு, ஒரு இலக்கிய வாசிப்பு இருக்கில்லீங்களா, அது துணைகொள்ளும். அது காலச்சுவடாக இருக்கலாம், அல்லது தீராநதியாக இருக்கலாம், அல்லது புலமாக இருக்கலாம், உயிரெழுத்து உயிர்மை எதுவாகவும் இருக்கலாம் – எதிர்முகமாகக் கூட இருக்கலாம்…ஆனால், இந்தக் கவிதை, இந்தச் சிறுகதை நல்ல கதையாக இருக்குனு சொல்றதுக்கு ஒரு வாசக அனுபவம் இருக்கில்லீங்களா – அது செய்யும். அந்த இடம் இல்லாத போது, நல்ல கதைகளும், நல்ல படைப்புகளும், ரொம்ப ரொம்ப சாதாரணப் படைப்புகளும்கூட அங்க வரும். என்னுடைய நேரத்தைக் கொல்லும் இல்லீங்களா. நமக்கு இருக்கிறது ரொம்பக் குறைவான நேரம். சலிச்சு சலிச்சு நீங்க தங்கத்தை மட்டும்தான் பார்க்க வேண்டிய இடமா இருக்கு இப்ப நேரம்.

சிங்கப்பூர்ல சிறுகதைப் போட்டி, தமிழ்ச்சங்கம் சார்பா வைப்பாங்க. அதில் 92-93 காலகட்டத்துல, சுந்தர ராமசாமி போயிருந்தார். இவர்தான் நடுவர். கதையத் தேர்ந்தெடுத்து, எதுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசுன்னு சொல்லாம, சில கதைகளை மட்டும் எடுத்துக் கொடுத்துவிட்டு மட்டும் வந்து விட்டார். அப்போ பெரிய விவாதம் கூட நடந்தது. ஏன் வந்து ஃபர்ஸ்ட் ப்ரைஸ் செகண்ட் ப்ரைஸ்னு கொடுக்கலைனு சொல்லும் போது, அந்தத் தகுதி அந்தக் கதைகளுக்கு இல்லை என்று கூட ஒரு தரம் எழுதினார். இன்னொரு வார்த்தைகூடச் சொன்னார் – குமுதத்திலே வருகிற சிறுகதையினுடைய அளவுக்குக்கூடத் தரமாக இல்லை என்று எழுதினார். அதற்காக சிங்கப்பூரிலே இலக்கியம் வளரக்கூடாது என்று இல்லை. ஆனா அப்படி ஒரு விமர்சனம் தங்களை உரசிப் பார்த்துக்கொள்ளக்கூடிய நல்ல இடம்தானே.

சிங்கப்பூர் கதைகளைப் படிக்கும்போது, எனக்கு என்ன தோணுதுன்னா, அவங்க வேதனைகளையோ அல்லது உள்ளார்ந்த உறவுச் சிக்கலையோ எழுதுவது கம்மியாக இருக்கு. அவுங்க நெனப்பு பூராமே – தமிழ்நாட்டு நெனப்புலே நிறையக் கதைகள் எழுதிகிட்டு இருக்காங்க. இங்கிருந்து எப்படி மைக்ரேசன் ஆனோம்னு இருக்கு. இன்னிக்கு எப்படி வாழ்கிறோம் என்கிற இடமிருக்கில்லையா, அந்த இடத்திற்கு அவர்கள் நகரும்போது நல்ல கதைகள் கூட வரலாம். உதாரணமாக, மலேசிய எழுத்தாளர் ரே.கார்த்திகேசு – அவர் சில நல்ல கதைகள் எழுதியிருக்கார். அப்போ, அந்த பூமியிலே அதற்குரிய வாழ்வியல் பின்னணியோடு கனமான கதைகள் வருவதற்கு ஒரு விமர்சனம் தேவையா இருக்கு, இல்லீங்களா? இணையதளத்திற்குக் கூட விமர்சகர் இருந்தா நல்ல விஷயம்தான். திரும்பத் திரும்ப நம்மளை வளர்த்துக்கிறதுக்கு…

நான் எப்படி வளர்ந்து இருக்க முடியும், என்னை விமர்சனம் பண்ணாமே வளர்ந்திருக்க முடியுமா? உதாரணம் சொல்கிறேன். என்னுடைய முதல் நாவல்ல இந்த அபூர்வ ராகங்கள் மாதிரி ஒரு இடம். ஒரு கணவன் மனைவி. ஒரு கொலை செய்யப் போறாங்க. அந்தக் கொலைக்காக ஒரு ஆளைக் கேட்கிறான். ஒரு இடத்திலே, கிட்டத்தட்ட தன் மகனைக் கொலை செய்வதற்காக – அவனுக்கு இரண்டு மனைவிகள் – இரண்டாவது மனைவிகிட்டக் கேட்கிறான். ஆனால் அவள் மௌனம் சாதிக்கிறாள். கொடுக்கிறேன்னு சொல்லலை. அவளுக்கும் ஆறு குழந்தைகள் இருக்கு. ஒரு பையன் விளையாடிகிட்டு இருக்கான். இப்போ இவங்க பேசிகிட்டு இருக்கிறதப் பார்த்துகிட்டு, பையனை வெளியே போய் விளையாடுன்னு சொல்றா. ஆனா, முந்தின இரண்டு பாராகிராஃப் முன்னாடி வெளியே மழை தூறிகிட்டு இருந்துச்சுன்னு எழுதியிருந்தேன். ஆனா அவன் போய் விளையாடப் போய்விட்டான்னு அடுத்த பாராகிராஃப். ஒருவேளை முதல் நாள் எழுதிவிட்டு இரண்டாவது நாள் இதைத் தொடங்கினேனா என்னனு தெரியவில்லை. என்னுடைய ஒன்றுவிட்ட அண்ணன் பையன் – தூரத்து உறவுன்னு வைச்சுங்களேன் – பங்காளி. அவருடைய மகள், எட்டாங்கிளாஸ் படிக்கும்போது, இந்த நுண்வெளி கிரகணங்கள் படிச்சா. படிச்சுட்டு, திடீர்னு, என்னைக் கேட்டா. ‘அண்ணா, வெளிய மழை பொழியுது. நீங்க குழந்தையப் போய் விளையாடச் சொல்லுறீங்களே. எப்படி? மழை விழும்போது குழந்தையை விளையாடச்சொல்லுவாங்களா?’ அப்படின்னு சொன்னா. இப்ப வரக்கூடிய செகண்ட் எடிசன்ல அதை நான் திருத்தறேன்.

இதுக்காக வேணுகோபால் எழுத்தை நீங்க குறைச்சு மதிப்பிடமுடியாது. இது வடிவ ரீதியான ஒரு விஷயம். இதற்கப்பால், கதையின் தரம்னு ஒன்னு இருக்கில்லீங்களா, அது சார்ந்து, கருத்தியல் சார்ந்து, பார்வை சார்ந்து, இந்தக் கதை என்ன சொல்கிறது என்று இருக்கே, அதையும் மதிப்பிடணும். இது அடுத்த கட்டம். பார்வை சார்ந்தது மட்டுமில்லை, ஆளுமை சார்ந்து இவனுடைய இடம் என்ன? இந்த ரைட்டருடைய தனித்துவம், ஆளுமை, இவனுக்குரிய மொழியினுடைய வீச்சு, இது எல்லாம் சேர்ந்து மதிப்பிடலாம். ஒரு இணையதளம் என்ன பண்ணலாம்? இந்தப் படைப்பைப் பிரசுரம் பண்ணலாம், பண்ண வேண்டாம் என்று முடிவு பண்ணலாம். எனவே, ஒருவகையான எடிட்டிங் நல்லதோ? ஆனா, சுதந்திரமா எழுதக்கூடிய வெளி கிடைச்சிருக்குங்கிறதையும் சொல்ல வேண்டும்.

அன்பழகன்: இணையத்திலயே கவிதையோ, புனைவோ எழுதவேண்டியதில்லை. விவசாயம் பற்றிச் சொல்றீங்க. விமர்சனம் செய்யறீங்க. அதைக்கூட நீங்க இணையத்திலே போடலாம். கதை மட்டும் பப்ளிஷர் கிட்ட இருந்து வரட்டும். நீங்க நிறைய தகவல் வைச்சிருக்கீங்க.

வேணுகோபால்: இணையம் இன்னும் எனக்குப் பழக்கப்படவில்லை. இன்னிக்கு வரைக்கும் கையிலேதான் நான் எழுதிகிட்டிருக்கேன். அது ஒரு பிரம்ம வித்தையெல்லாம் கிடையாது. ஒரு சோம்பேறித்தனம் தான். ஆறு மாசம் இந்த கம்பூயட்டர் கத்துகிடறதுக்குப் பதிலா ஆறு சிறுகதை எழுதிடலாமே என்கிற மைண்ட்செட். இந்த ஆறு சிறுகதைகள் எழுதப்போறதில்லை. அது வேற. ஆனா, இந்த ஆறு சிறுகதை எழுதற டைம் வேஸ்ட் பண்ணக்கூடாதுங்கிறதுதான்…

சுரேஷ்: ஹை என்ட் ஃபோன் வாங்கறது கூட இந்தமாதிரித்தான். அது வாங்கினா, ஒரு மாசம் படிக்கிறது போகுமே.

வேணுகோபால்: இன்னொரு விஷயம். இந்த செல் ஃபோனை, தமிழ்நாட்டிலேயே கடைசியா வாங்கின எழுத்தாளன் – நானாகத்தான் இருப்பேன். அதுவும் நான் வாங்கல. வெண்ணிலைக்குக் கொஞ்சம் முன்னாடி – 2004-2005ன்னு வைச்சுக்கோங்க. வசந்தக்குமார் வம்பா வந்து ஒரு நம்பரை வாங்கி, என் கையிலே திணிச்சுவிட்டுப் போயிட்டார். ஏன்னா, பிழைத்திருத்தம் போடணுங்கிறதுக்காக. அப்படித்தான் என் கைக்கு செல்ஃபோன் வந்துச்சு.

சுரேஷ்: அடிக்கடி கூப்பிடறதுக்காக (சிரிப்பு) சு.வேணுகோபால், எழுத்தாளர் சு.வேணுகோபால் அப்படின்னு எப்போ முடிவு பண்ணினீங்க. நீங்க எழுத்தாளர்னு எப்பக் கண்டுகொண்டீங்க.

வேணுகோபால்: விவசாயம் சார்ந்த பின்னணியில இருந்து வந்தவன். ஒரு சின்னக் குக்கிராமம். அந்தக் குக்கிராமத்தில எப்போதுமே, லவுட்ஸ்பீக்கர் இருக்கும். அதாவது ரேடியோ குழாய் என்று சொல்லுவமே, கல்யாணம், காதுகுத்து, சின்னச் சடங்கு எல்லாத்துக்கும் வைப்பாங்க. இந்த மாதிரி சமயத்துல ஊரவிட்டு, தோட்டத்துக்குப் போனீங்கன்னா, தோட்டத்தில அந்தப் பாட்டு சத்தம் கேட்கும். பாடல் ரொம்ப அழகா இருக்கும். ஏன்னா ஊருக்குள்ள இல்லாம, தோட்டத்துல வரப்புல உட்கார்ந்து அமைதியா இரைச்சல் இல்லாம இருக்கும். ரொம்ப மென்மையா இருக்கும்.. எழுபதுகள்ல வந்த பாடல்கள் திரும்பத்திரும்பப் போடுவாங்க. அந்த வசந்த மாளிகை வந்துச்சா வரலையான்னு நமக்குத் தெரியாது. நீதிக்குத் தலைவணங்கு – எம்.ஜி.ஆர் படம் வந்துசுச்சா வரலையா தெரியாது. சின்னப் பையன் தானே அப்ப – எழுபதுகளின் ஆரம்பத்தில, நான் ஒண்ணாம் கிளாஸ்கூடப் போயிருக்கமாட்டேன். ஆனா அந்தப் பாடல் என்னை வசீகரம் பண்ணும். முக்கியமா கண்ணதாசனோட பாடல்களைக் கேட்போம். அப்ப அந்தப் பாடலைக் கேட்கும்போது, ஒரு ஈர்ப்பு. கொஞ்சம் பத்தாவது பன்னிரண்டாவது வரும்போது, நம்ம ஏன் ஒரு கண்ணதாசன் மாதிரி ஆகக்கூடாது.

கவிதை மீது ஒரு ஆர்வம் இருந்தது. கவிஞன் ஆகணும்னுதான் எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது, ஆரம்பத்தில. மிக முக்கியமா, கண்ணதாசன் மாதிரி ஒரு கவிஞன் ஆகணும்கிறதுதான் என் மனசு விரும்பிச்சு. அப்போ, உத்தமன்னு ஒரு படம் வந்த புதுசு. ஒரு பாடல். சிலை வடிக்கக் கல்லெடுத்தேன். சிற்றுளியால் செதுக்கி வைத்தேன். சிலைவடித்து முடியுமுன்னே, தலைவெடித்துப் போனதம்மா. நான் படிக்கிறதே அஞ்சாங்கிளால், இல்ல ஆறாம் கிளாஸ்னு வைச்சுக்கோங்க. என்னவோ காதலி நம்மள விட்டுட்டுப் போன மாதிரி, அந்த வரிகள் இருந்தது. அப்போ இவ்வளவு அழகாக எழுதறாரே, நாமும் ஒரு இலக்கியவாதியா வரணும்னு தோணுது.

ஆனால், படித்து வரும்போது நம்முடைய அனுபவம் என்ன மாதிரி ஆகிப்போச்சுன்னா, கொடூரமான ஒரு அனுபவம். முக்கியமா நீங்க சந்திக்காத ஒரு அனுபவம், கண்ணன் சந்திக்காத ஒரு அனுபவம், அந்தக் கிராமம் எனக்குக் கொடுத்தது. அல்லது அந்தப் பகடை ஆட்டத்தில் நானும் ஒரு ஆளாக இருந்தேன். இந்த ஆட்டத்திலே நான் ஆடலைன்னா, இந்தக் காய் வெட்டப்பட்டிருக்கும். அல்லது, நான் பல காய்களை வெட்டியிருக்கணும். அது ஒரு ஆட்டம் தான். கிராமத்துலே, அந்த ஆட்டம் இருக்கில்லீங்களா, எப்பவுமே இந்த உயிர்மீது ஒரு பயம். அல்லது பிறத்தியார் மீது உள்ள பயம். அப்புறம் வீரன் மாதிரி நடக்கிறேங்கிறது. எப்போதுமே ஒரு ஐம்பது பேர் படைபலத்தோடு இருந்த என் உலகம். அந்த உலகம் கொடுத்தப் பல்வேறு மனிதர்கள். சின்னப் பசங்க, எல்லாருடைய, அனுபவங்கள் – இந்த அனுபவங்கள் ஒரு கவிஞனுக்குரிய அனுபவமா இல்லை. அது அழகான தென்றல் வீசக்கூடிய, ஒரு பெரிய நெல்வயல்ல, நெளிந்து செல்லுமே ஒரு ரம்மியமான காட்சி, அந்தக் காட்சி அல்ல. சேறும் சகதியுமா, இருக்கக்கூடிய அந்த நிலத்துக்குள்ள நீங்க பரம்படிக்கிற மாதிரியான ஒரு அனுபவம் வாய்ச்சது. பரம்பு அடிக்கணும். பரம்பு அடிக்கிறவன் கவிதை எழுத முடியாது. தென்றல் மாதிரி இருக்கிற, உலாப் போகிறவன்தான் கவிதை எழுத முடியும்.

எனவே இந்த இடம் நம்மளுக்கு வாய்ச்சிருக்குங்கிறதுனாலே, இந்த இடத்துக்கு நான் வந்தேன். நம்ம இடம் கவிஞனா அல்லது ஒரு புனைகதையாளனா என்கிற போது, அனுபவத்தினுடைய ஏரியா இருக்கே – அந்த அகன்ற பரப்பு, ஏதோ ஒரு வகையிலே அது அந்த இறைவன் கொடுத்த ஒரு சொத்து. கசப்பான அனுபவம் தான். ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு கசப்பான அனுபவம் ஏற்படுதோ- அது அவனுக்கு உரம். சொத்து. அது அந்த கிராமத்திலே. எனக்குக் கிடைச்சது அதனாலே இந்த அனுபவம் புனைக்கதைக்குரிய ஒரு பெரிய சொத்தாக இருந்தது. கவிதையே எழுதலைன்னு இல்லை. சின்ன வயசில ப்ளஸ் டூ முடிஞ்சவுடனே பழைய நோட்ல எல்லாம் எழுதினேன். அப்படி எழுதும்போது, அந்தக் கவிதைலகூட ஒரு சிறுகதைக்குரிய டோன்தான் இருந்தது. ஆனா நான் அதைக் கண்டுகிட்டேன்னு சொல்ல வரலை. நான் கவிஞன் அல்ல, சிறுகதையாளன்தான்னு அந்த நிமிடத்தில தெரியலை. ஆனால் அந்த டோன், ஒரு சிறுகதைக்குரிய டோன், ஒரு புனைவுக்குரிய டோன்தான் அந்தக் கவிதைக்குள்ளேயும் இருந்துச்சு. அந்த மாதிரிக் கவிதைதான் எழுதியிருப்பேன நோட்ல. அந்த நோட் கூடத் தொலைஞ்சு போயிருச்சு.

மித்திரன்: ஆர்வம் சரி. எழுத்து கைவசப்படும்னு எப்ப உணர்ந்தீர்கள்?

வேணுகோபால்: கைவசப்படும் கைவசப்படாது – அந்த மாதிரி எல்லாம் நினைக்கலை. எடுத்த உடனே, என்ன நினைத்தேன்னா, நான் ஒரு எழுத்தாளன்தான்னு நினைச்சேன். மனசுக்குள்ள நான் எழுத்தாளன். இதுதான் ஆகமுடியும். இப்படி வச்சுக்கோங்க – சின்ன வயசுல பல்வேறு எண்ணங்கள் தோணும் – ஒரு நடிகனாகலாம், டைரக்டராகலாம்னு தோணும். இதெல்லாம் பதிணெட்டுவயசுல தோணும். ஒரு பாடகனாப் போகணும்னு தோணும். எனக்கு அந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் தோணுச்சு.

களை வெட்டற இடத்தில நாலு மணிக்கு வந்துட்டேன்னா ஒரு முப்பது பேர் தோட்டத்துல களை வெட்டிகிட்டு இருப்பாங்க. அவங்க ஏதாவது சினிமாப் படங்களைப் பத்திப் பேசிகிட்டு இருப்பாங்க. நான் ஏதாவது ஒரு ஜோக் அடிச்சா, அவங்க ரொம்ப கலகலன்னு சரிப்பாங்க. ‘ஏய் நீயெல்லாம் ஒரு நடிகனாப் போலாம்’ன்னு சொல்வாங்க. இது ஒரு ஆர்வம்தான். ஆனா இந்த மாதிரி நம்மளை நாமளே அளந்து கொள்ளக்கூடிய ஒரு ஸ்கேல் இருக்கே – முக்கியமா, நான் ஒரு ராணுவ வீரனா ஆக முடியாது. அது எனக்கே தெரியும். ஒரு நடிகனா ஆகலாம். ஆனா, ஆகறதுக்கு ஒரு முயற்சி இருக்கு. ஆனா எந்த நடிகனா ஆகப்போகிறேன்கிறது இருக்கில்லீங்களா. ஒரு கதாநாயகனா ஆகப்போகிறோமோ, வில்லனா ஆகப்போகிறோமோ – இதெல்லாம் பின்னாடி தோன்றதுதான். நம்மளுக்குரியது எழுத்துனு ஒன்னு இருக்கில்ல – அதுக்கு உயரமோ, குட்டையோ, நிறமோ, சொத்தோ, சுகமோ, எதுவுமே இதுக்கான விஷயமில்லை. இதெல்லாம் ஒருவகையில யோசிக்காமலே, கொஞ்சம் யோசிச்சனான்னு தெரியலை, இதெல்லாம் சேர்ந்துதான் நான் அதைத் தேர்ந்தெடுத்தேன். அடிப்படைல எனக்கு ஒரு எழுத்தாளனாகணும்கிற கனவுதான் இருந்தது.

கண்ணன்: அனுபவங்கள்னு சொன்னீங்களே – கிராமத்திலே உங்களுக்குக் கிடைச்ச அனுபவங்கள், உயிருக்குப் பயப்படற அனுபவங்கள் – அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

வேணுகோபால்: எங்க ஊர் அம்மாப்பட்டி கிராமம். போடியில இருந்து ஆறு ஏழு கிலோமீட்டர் தள்ளியிருக்கக்கூடய கிராமம். எங்களுக்குப் பெரிய நகரம்னா போடிதான். அங்கதான் போய்ப் படிக்கணும். எங்க ஊர்ல ஒண்ணாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை – இளையோர் ஆதாரப் பள்ளி – அங்கதான் படிச்சேன். அதுக்கப்புறம், ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒரு கிலோமீட்டர் போய் படிச்சுட்டு வரணும். எங்கே, சில்லமரத்துப்பட்டில. எப்பவும் செம்மரிக் கிடா வளர்த்துகிட்டே இருப்பேன். அந்தக் கிடா வித்துட்டோம்னா அடுத்து ஒரு கிடா இருக்கும். ஒரு வெள்ளாடு எப்பவுமே வீட்ல இருக்கும். அல்லது பசுக்கள் நிறைய இருக்கும். ஏதோ ஒன்றைக் காலைல ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரைக்கும் தோட்டத்துல போய் மேய்ச்சுகிட்டிருப்பேன். அங்கே ஒரு புத்தகத்தைக் கைல வைச்சுகிட்டு இருப்பேன். பாடம் தொடர்பாகத்தான்.

மேய்ச்சலுக்கு விடுவோம். அஞ்சு ஏக்கர் நிலத்துல கடலை இருக்கும். அந்தக் கடலை வந்து எப்பத் தொண்ணூறு நாளைக்கு மேல ஆகுதோ, ஸ்டார்ச் தயாரிக்காது அந்த இலை. அப்போ, அந்த ஆட்டுக்குட்டி வயல்ல வரப்புல இரண்டு கடிகடிச்சுட்டு மேஞ்சிட்டு இருக்கும். இரண்டு கிடா வளர்க்கிறேன்னா, அல்லது செம்மரி ஆட்டுக்குட்டி வளர்க்கிறேன்னா – காலைல போய், அதைப் பனிமேய்ச்சல்னு சொல்லுவோம். மேய்ச்சுட்டு, தோட்டத்திலேயே மோட்டர் ஓடிகிட்டு இருக்கும், அங்கியே குளிச்சுட்டு, வீட்டில் வந்து ஒன்பது மணிக்கு சாப்பிட்டு பள்ளிக்கூடம் போனா பத்து மணி ஆயிடும். ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவேன்.

அப்போ, ஆறு மணியில இருந்து ஒன்பது மணி வரைக்கும் தோட்டத்திலேயே இருப்பேன். எல்லோரும் வேலை செஞ்சுகிட்டு இருப்பாங்க. பருத்திக் கொழுந்து அடிச்சிகிட்டு இருப்பாங்க. களை வெட்டிகிட்டு மருந்து அடிச்சிட்டு இருப்பாங்க. தண்ணி பாய்ச்சிட்டு இருப்பாங்க. அப்போ எங்க பெரியப்பா – பூமிக்கு ஒரு வணக்கம் உண்டு. தோட்டத்துல சூரிய நமஸ்காரம் பண்ணிட்டு – இப்ப சூரிய நமஸ்காரம்னு சொல்லக்கூடாது இல்லையா – குளிச்சிட்டு இருப்பார் எங்க பெரியப்பா. இதெல்லாம் பார்த்துகிட்டு வருவேன். ஒரு கிலோமீட்டர் நடந்து போகணும். போய்ட்டு மறுபடியும் வீட்டுக்குத் திரும்பி வருவேன். வந்து சாப்பிட்டுப் போவேன்.

இதிலென்ன வேடிக்கைனா, காலை மாலை நாங்கதான் தட்டுல போட்டு சாப்பிடணும். ஏன்னா பெரிய விவசாயக் குடும்பங்கிறதுனால, அப்பா அம்மா ரெண்டு பேரும் தோட்டத்துக்குப் போயிருவாங்க. நாங்க அண்ணந்தம்பி நாலு பேரு. எங்க இரண்டு அண்ணன் ப்ளஸ் ஒன் முடிச்சிட்டாங்க. நானும் இன்னொரு அண்ணனும் இருக்கோம். காலைல வந்து நாங்களே தட்டுல போட்டு சாப்பிட்டுத் தட்டைக் கழுவி வைச்சிட்டுப் போவோம். மதியம் பள்ளியிலிருந்து வந்து வெயில்ல பன்னிரெண்டே முக்காலுக்கு விடறாங்கன்னா, குடுகுடுன்னு ஓடிவருவோம். ஆண்கள் பெண்கள் எல்லாம் நடந்துதான் வருவாங்க. வந்து சாப்பிட்டுத் திரும்ப அங்க ஸ்கூலுக்குப் போவோம். மறுபடியும் மாலை நாலரை மணிக்கு வந்து பைய வைச்சுட்டு, ஆட்டுக்குட்டியை மறுபடியும் ஓட்டிகிட்டு தோட்டத்துக்குப் போவோம்.

நானே போய் மோட்டர் எடுத்துவிட்டு நானே தண்ணி பாய்ச்சுவேன். ஆட்கள் உண்டு. ஆனா நான் அதை பிரியமாச் செய்வேன். அல்லது ஒரு இருபது பேர் களை வெட்டிகிட்டு இருக்காங்கன்னா, நானும் இடையிலே ஒரு சால் பிடிச்சு வெட்டுவேன். அது ஒரு இனிமையான பொழுதாகத்தான் இருந்தது. இந்த வாழ்க்கையோட – படிப்பும் விவசாயமும் பிரித்தறியமுடியாத ஒரு பின்னலோடதான் நான் வளர்ந்தேன். படிப்பு தனியா விவசாயம் தனியா இருந்ததில்லை. இது இளமைக்கால வாழ்க்கை.

இன்னொன்னு, அங்கங்க கொஞ்சம் நிலங்கள் இருந்ததுனாலே என் நண்பர்கள் எப்பவுமே கூட இருப்பாங்க. உதாரணமா நூத்திப்பத்து நாள் ஆயிடுச்சுன்னா கடலைச் செடிகள் லேசாப் பட ஆரம்பிக்கும். அப்போ அந்தச் செடிகளைப் பிடிங்கிடலாம். ஏன்னா அந்தக் கடலை இத்துப்போயிடும். அந்தச்செடியப் பிடுங்கினா கடலை இருக்கும். அதாவது இன்னும் சாகாத செடிகளை விட்டு, படாத அல்லது காயாத செடிகளைப் பிடுங்கினா, அடியில பத்திருபது கடலை இருக்கும். அதுக்கு நண்பர்கள் வருவாங்க. ஒரு நாளைக்கு இருபதுமுப்பது கடலைச் செடிகளைப் பிடுங்கிட்டு வந்து களத்துல வைச்சு எல்லாரும் சாப்பிடுவோம். நட்பு வட்டம் தோட்டம் சார்ந்து இருந்ததுனாலே, ஏழை எளியவர்கள் என்னோட கூடவருவாங்க. அந்தச் சின்ன வயசிலே அப்படி இருந்தது.

அதே மாதிரி, ஒரு கிராமம் சாதி முரண்கள் இருக்கில்லையா – அந்த சாதி முரண்கள் இருப்பதாலே, தெரிந்தோ தெரியாமலோ சாதி சார்ந்து இயங்க வேண்டி இருக்கு. உதாரணமா உங்க நண்பரை ஒருத்தர் அடிச்சிடுவாங்க. வெறுமனே, இன்னொருத்தர் அடிக்கிறான்னா நம்ம பார்த்துகிட்டு இருக்கமுடியாது. நம்ம பதிலடி கொடுத்தாகணும். இப்போ, அந்த பதிலடி கொடுத்தீங்கன்னா, இவன் அடிச்சான் அவன் அடிச்சாங்கிறதில்லை. சாதி சார்ந்து ஆயிடும் – அந்தச் சாதி இவனை அடிச்சிட்டான்னு ஆகிவிடும். இது மாதிரி நிறைய ஆகியிருக்கு. எப்பொழுதுமே நம்மள நம்பி ஒரு கூட்டம் இருப்பாங்க. ஒரு சினிமாப் படம் பார்க்கிற மாதிரின்னு வைச்சுக்கோங்களேன். நம்ம அவனைக் கைவிட முடியாது. அவன நம்பி ஒரு இருபது பேர் இருப்பாங்க. அவன் அவங்களக் கைவிட முடியாது. டென்ட் தியேட்டர் போனா, எங்க தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்தா, வீட்டிலிருந்து தோட்டத்துக்குப் போனா எப்பொழுதுமே ஒரு அச்சத்துலதான் இருக்கணும். நம்மள அவன் அடிச்சுருவான். நம்மள அவன் அடிச்சுட்டா – நாம திருப்பி அடிச்சே ஆகணும். நம்மளுக்கு அடிக்கலேன்னாலும் நண்பனுக்காக அடிச்சே ஆகணும். இந்த மாதிரிப் பகைமை எப்போதுமே இருக்கும்.
ரொம்ப முரண்பட்டு, நான் கல்லூரி படிக்கிற காலத்துல – நான் சம்பவங்கள் சொல்லாமல் சொல்றேன் – அப்படி ஆன காலத்துல ஒரு திட்டம் போடறாங்க. இவனத் தூக்கிட்டோம்னா நம்மளுக்கு நல்லதுன்னு அவங்க நினைக்கிறாங்க. இந்த தகவல் நம்மளுக்கு வருது. எப்படின்னா எங்க தோட்டத்துல எப்பவுமே களை வெட்டறாங்களே இருபது பேர் – அவங்க கேட்டிர்றாங்க. ஒரு பாலத்துக்கு அடியிலே சாப்பிட்டு இருக்காங்க. அப்ப இதக் கேட்டு அலறியடிச்சிட்டு ஓடிவர்றாங்க. இப்படியே பார்சல் பண்ணி அனுப்பிடுங்கன்னு வர்றாங்க. நான் தூங்கிட்டு இருக்கேன். இரவு தண்ணீர் பாய்ச்சுட்டு வந்ததுனாலே. அப்போ அவங்க சொன்ன உடனே, எழுப்பறாங்க. வெளியே வந்து, ‘உடனே சிவகங்கைக்குக் கிளம்பிப் போயிடு’ங்கிறாங்க. ஏன்னு கேட்டா, ‘கிளம்பிப் போ, கிளம்பிப் போ’ன்னு சொல்றாங்க. ‘முடியாது’. எனக்குத் தன்மானப் பிரச்சனை. நம்ம பயந்து போனோங்கிற மாதிரி ஆயிடும். தன்மானப் பிரச்சனையா இருக்கு. அப்ப எங்க வீட்ல என்ன நினைக்கிறாங்கன்னா, ‘ஐயோ, நல்லா படிச்சு வர்ற பையன். இந்த முரண்ல சிக்கிச் சீரழியப் போறான்’. அப்போ அவங்க என் விருப்பத்தை மீறி என்னை வளர்த்த, என் ஒன்று விட்ட அக்கா இருக்காங்க. அங்க கொண்டு போய் விட்டுட்டாங்க. அப்புறம் அதிலிருந்து தப்பித்தேன்.

நல்ல வேளை, என் பெற்றோர்கள் அண்ணன்கள் எல்லாம் என்னைப் பார்சல் பண்ணி அனுப்பலேன்னா, இந்த முரண்கள்ல ஏதாவது நடந்திருக்கலாம். அல்லது நான் ஏதாவது நிகழ்த்தியிருப்பேன். இது நிகழ்வது ஒரு சர்வ சாதாரண விஷயம் தான். இது நாள்தோறும் நிகழ்வதுதான். அது என்றைக்கிருந்தாலும் ஒரு ஆபத்துங்கிறதுனால, எங்க வீட்டில எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் படிச்சிருக்காங்க – எங்க அக்கா, எங்க கிராமத்திலயே ரெண்டாவது டிகிரி ஹோல்டர். எங்க அத்தை பொண்ணு முதல்முதல்ல படிச்சாங்க. அப்பா கொண்டுபோய் பராசக்தி காலேஜ்ல விடறாங்க. அப்போ எங்க ஊர்ல என்ன சொல்றாங்கன்னா, பொட்டப் புள்ளையக் கொண்டுபோய் படிக்கப்போடறதான்னு சொல்றாங்க. அப்பா படிக்காதவர். அவர் பொண்ண எப்படியாவது படிக்க வைக்கணுங்கிறதுக்காக பியூசில கொண்டுபோய் விடறாங்க. இதமாதிரி எங்க அண்ணன் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சான். இன்னொரு அண்ணனும் எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படிச்சான். எனக்கு நேர் மூத்தவன் கல்லூரி படிச்சான். இப்படி இருக்கும் போது இவன் இப்படி படிக்காமப்போய்விடுவானோ. ப்ளஸ் டூவோட, இவன் இந்த சண்டை சச்சரவுல போயிருவானேங்கிறதுக்காக, என்னைக் கொண்டுபோய் சிவகங்கையில – என்னைத் தூக்கி வளர்த்த அக்காகிட்ட விட்டுட்டாங்க – ஒரு கொலை சார்ந்து எங்கள் குடும்பத்தை அண்டிப்பிழைத்த குடும்பம் – புதுப்பட்டியிலே ஒரு கொலை நடந்துபோய்விடுது…ஒரு பண்ணையார் வீட்ல. இவங்க பண்ணயார் வீட்ல வேலை செஞ்சவங்க. அங்கிருந்து தப்பித்தல்ல…அந்தக் கொலையை ஏற்றுக்கொள்ளமுடியலை.இறந்துபோனவன் ரொம்ப நல்லவனாம்…. ஸ்கூல் வைச்சு நடத்தின குடும்பம். எங்க வீட்டுக்கு வரும்பொழுது, எங்க கொட்டம், பெரிய கொட்டமாயிருக்கும். அந்தக் கொட்டத்துல வீடுகள் இருக்கும். அந்த வீடுகள்ல அவங்க வந்து இருந்தாங்க. அப்ப நான் பிறந்திருக்கேன். நான் பிறந்தபோது என்னைத் தூக்கி அவங்க வளர்த்திருக்காங்க. எங்க அக்காளுக்கும் அவளுக்கும் ஒரே வயசு. பிழைக்க வந்தவங்க. ஆனா இரவு நேரத்துல எங்க வீட்லதான் தூங்குவா. ராசாத்தி அக்கான்னு பேரு. தூங்கும் போது எங்க அக்கா இப்படிப் படுத்திருந்தாங்கன்னா, அந்த ராசாத்தி அக்காவுக்கும் இடையிலதான் நான் படுப்பேன். எங்க அக்காளவிட என்னை ரொம்பப் பாசமா வளர்த்தா. அவங்ககிட்டப் போய் என்னை ஒப்படைச்சாங்க. அந்தக் அக்காவைக் கொண்டுபோய சிவகங்கைல கட்டிக்கொடுத்தாங்க. அதனாலே கல்யாணம் பண்றவரைக்கும் எனக்கு அவங்க மூத்த அக்காவா இருந்தாங்க.

கிராமத்துல பெண்களையும் இளைஞர்களையும் ரொம்ப வசீகரித்த பையன் நான். ரெண்டு விதமான பேரு இருக்கு. எதிர் சாதியினரே என்ன சொல்லியிருக்காங்கன்னா, இந்த ஊர்லயே ஒரு பக்குவப்பட்ட மனிதர் – ஒரு விவசாயி – அவர் சொன்னது – எங்கிட்ட சொல்லலை – என்னுடைய அக்கா பையன்கிட்ட சொன்னது. ‘இந்த ஊர்லயே எனக்கு ரொம்ப பிடிக்காத பையன் வேணுகோபால் தான்டா,’ அப்படினு சொல்லிட்டு, ‘ரொம்ப பிடித்த பையன் அந்தப் பையன்தான்,’ அப்படின்னு சொன்னாராம். ஒரு தேவர். ‘ஏன்னு கேட்டீங்கன்னா, அவன் வந்து துணிச்சலா, எதுன்னாலும் சண்டைக்கு நின்னு துணிஞ்சு அடிச்சிட்டு போகிறான். அது எனக்குப் பிடிக்கலை. ஆனா அவன் வீரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.’ ரெண்டுமே ஒரே பதில்தான். இன்னொரு இடம்சார்ந்து டச் பண்ணும்போது அவங்களுக்கு அது வேதனையா இருக்குது. ஆனா அதே வீரத்தை மதிக்கவும் தெரியுது. அதாவது அவனுக்காக இல்லைனாலும் ஏதோவொரு நியாத்துக்காக சண்டை போடறான் இல்லையா, அது பிடிக்குது.

தியாகு: உங்ககிட்ட அவர் தன்னை அடையாளம் கண்டுகிட்டார்னு சொல்லலாமா.

வேணுகோபால்: நிச்சயமா இருக்கலாம். அவர்கூட அப்படி இருந்திருக்கலாம். அப்புறம் கிராமத்துல, எந்தப் பகைவனாக்கூட இருக்கலாம். அவனுடைய சாகசங்கள் எப்பவுமே எல்லாருக்கும் பிடித்தமானதா இருக்கும். இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, ஆண்களுக்கு, பெரியவர்களுக்கு எல்லாருக்குமே பிடிக்கத்தான் செய்யுது. அப்படி அவருக்குப் பிடித்திருக்கலாம். அப்படித்தான் அந்த அக்காகிட்ட என்னைக் கொண்டுபோய் மூணு வருஷம் இருந்து பிஏ டிகிரி முடிச்சேன்.

சுரேஷ்: நீங்க படிச்சது சிவகங்கைலையா சார்?

வேணுகோபால்: இல்ல, இல்ல. நான் அமெரிக்கன் கல்லூரியில படிச்சேன். அந்தக் கல்லூரி படிக்கும்பொது இந்தத் தகராறு எல்லாம் நடந்தது. ப்ளஸ் டூ – அது தான் ஒருவிதமான விடலைப் பருவம். துடிப்பா எதையும் செய்யணும். தட்டிக் கேட்கணும். நியாயம் கேட்கணும். அந்தப் பருவம் அதைச் செய்யுது. இப்போ, ஒருத்தன் அடிபட்டுட்டு இருக்கும்போது, நீ ஏண்டா அவனை அடிக்கிறேன்னு நாம கேட்க மாட்டோம். அப்ப கேட்காம இருக்க முடியாது. வயது அப்படி. அது ஒரு அற்புதமான, கவித்துவமான வயது. அந்த வயதுதான் நம்மள மனுஷனா மாற்றுது. ஆனா இப்ப நாம என்ன நினைக்கிறோம்னா நீ மனுஷனா இருக்காத. கோபப்படாதேன்னு சொல்றீங்க. நியாயத்தைக் கேட்காதேன்னு சொல்றீங்க. எங்க கிராமத்துல நான் நியாயமா இருந்திருந்தா ஒரு எம்.எல்.ஏ ஆயிருக்கலாம். குறைந்தபட்சம், நாலு ஊரு சேர்ந்த ஒரு பஞ்சாயத்து போர்ட் தலைவரா நிச்சயமா ஆகியிருக்கலாம். அதுக்கான ஒரு வாய்ப்பு இருந்துச்சு. ஆனா எம்.எல்.ஏ ஆகறதுக்கு ஒருபோதும் வாய்ப்பில்லைங்கிறது எனக்குத் தெரியும். ஏன்னா நான் விரும்பிய கட்சி எப்பவுமே தோத்துகிட்டுத்தான் இருந்துச்சு (சிரிப்பு). அதுக்குக் காரணம் எங்கப்பா அதுல இருந்தார்ங்கிறதுதான்.

ஒன்னுமில்லை சார் – காமராசர் காங்கிரஸ்ல எங்கப்பா இருந்தாரு. அப்பா படிக்காதவரு. அப்பா பத்தி ஒன்னு சொல்லிடறேன் – படிக்காதவர் படிக்காதவர்னு அப்பப்ப சொல்லிட்டே இருக்கேன்னா, தாத்தா போய் ஸ்கூல்ல சேர்த்துவிட்டிருக்காரு. சேர்த்துவிட்டவுடனே என்ன பண்ணியிருக்காங்கன்னா, இவரு ஏதோ கீழே நோண்டிகிட்டிருக்கார். விவாசாயி பிள்ளைதானே. கவனிக்காம இருக்காருன்னு, வாத்தியார் என்ன பண்ணியிருக்கார்னா, குச்சியில மண்டையிலே தட்டியிருக்கார். இது ஸ்கூலுக்குப் போய் ரெண்டாவது நாளோ முதல் நாளோ நடந்த நிகழ்ச்சி. தட்டினது, அடிச்சதை அவர்னால தாங்கிக்க முடியல. அஞ்சு வயசோ ஆறு வயசோ இருக்கலாம். மறுநாள் என்ன பண்றார்னா வீட்டுக்குப் போய் ஒரு கூடைல சாணி அள்ளிப்போட்டுட்டுவந்து சன்னலுக்குப் பின்னாடி இருந்து, வாத்தியார் வந்தவுடனே சன்னல் வழியா சாணியை விட்டு எறிஞ்சிருக்கார். அப்படி எறிஞ்சிட்டு அன்னியோட முழுக்குப்போட்டுட்டார். முழுக்குப் போட்டுட்டு விவசாயம் பார்த்தார். ஆனால் பேப்பர் படிப்பார். எனக்கு ரெண்டாம் க்ளாஸ் மூணாம் க்ளாஸ் வரைக்கும் ஆணா ஆவண்ணா சொல்லிக்கொடுத்தது எங்கப்பா. அவரே எப்படியோ கத்துகிட்டார். இந்த அப்பாதான் அக்காவைக் கொண்டுபோய் காலேஜ்ல விடறார். அவரு காமராசர் மீது ரொம்பப் பிரியமாக இருப்பார். அப்போ எங்க ஊர்பக்கம் சிலமரத்துப்பட்டில விசுவாசபுரம்னு இருக்கு. இந்த ஊருக்கு வரும்பொழுது, அப்பா மேடையில எல்லாம் பேசமாட்டார். ஒரு பந்தல் போடுறதோ, மேடை போடுறதோ இதெல்லாம் இருந்திருக்கு. முன்னாடி நின்னு செய்வாங்களாம். உதாரணமா மாலை போடணும்னா கூட மேடைக்கு மேல வரமாட்டாராம். ‘போப்பா நீயே போய் போடப்பா,’ அப்படிம்பாராம்.

உங்கப்பா காமராஜர் கட்சி, காமராஜர் கட்சினு சொல்லும்போது…பெரும்பாலும் சுயமாவா சிந்திச்சு இந்தக் கட்சிக்குப்போறோம். அப்பா திமுகல இருந்தா பையன் திமுகவுக்குப் போறான். அப்பா அதிமுகல இருந்தா பையன் அதிமுகவுக்குப் போறான். சுயமாகப் போறதில்ல. அந்த மாதிரித்தான் போனேன். ஆனால், கல்லூரியெல்லாம் படித்தபின்பு கிட்டத்தட்ட அந்த கட்சியிலேயே மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்து மிகப்பெரிய கசப்பை அனுபவித்துவிட்டு நானாக அது ஒரு கட்சியல்ல, மோசமான அதிகாரம் கொண்டது என்கிற நிலைமையிலிருந்து விலகி சுயபுத்தியோடு வெளியே வந்துட்டேன்னும் சொல்லணும். ரஷ்யாவில கம்யூனிசம் நொறுங்கி நாடுகள் சிதறுனப்போ ரொம்ப வருத்தப்பட்டேன். மெல்ல கம்யூனிசத்தின்பால் மனசுபோச்சு. பண்பாட்டுத் தளத்தத் தக்கவச்சுகிட்டு கம்யூன் அமையணுமுன்னு ஆசைப்பட்டேன். அதுசார்ந்து படிச்சேன்.

தியாகு: விவசாயம் சார்ந்த கிராமிய வாழ்க்கையிலிருந்து நகரத்தை நோக்கி எப்ப நகர்ந்தீர்கள்?

வேணுகோபால்: ப்ளஸ் டூ வரைக்கும் அம்மாப்பட்டி கிராமம்தான். ஒன்னுல இருந்து ஆறாம் வகுப்பு வரைக்கும் ஊருக்குள்ளேயேதான். பத்துவரைக்கும் பக்கத்து ஊர் – போய்ப்போய் வரணும். சும்மா ஒரு கிலோமீட்டர்தான். சிலமரத்துப்பட்டிங்கிறது. ப்ளஸ் டூ ஆறு கிலோமீட்டர் – திருமலாவரம்னு இருந்துச்சு. போடிக்குள்ளயே ஒரு ஏரியா. எங்க ஊருக்கு அங்கிருந்து வர்றது பக்கம். அதுக்கு அப்புறம் கல்லூரிக்குப் போனதிலே, ஹாஸ்டல்ல இருந்தேன்.

தியாகு: நகரம் உங்களை எப்படி பார்த்துச்சு. நீங்க நகரத்தை எப்படிப் பார்த்தீங்க?

வேணுகோபால்: நான் கிராமத்திலிருந்து வேற எந்த நகரத்திலயும் போய் தங்கினது கிடையாது. எடுத்தவுடனே அமெரிக்கன் காலேஜ்ஜுக்குப் போறேன். அங்க சேர்ந்த பிறகு என்னன்னா – கிராமத்துல, நான் சாப்பிடற நேரம் தவிர, வீட்டில இருந்ததே கிடையாது. அதாவது, இரவு எட்டு மணிக்கு சாப்பிட்டேன்னா. எட்டு மணிக்கு மேல நண்பர்களோட இரவு நேரத்துல எங்கிட்டாவது திருடப் போறது, இல்லைனா சினிமாவுக்குப் போறது, இதுதான்.

இப்ப உதாரணமா, கடலை போட்டிருக்காங்கன்னு வைச்சுங்களேன். கடலைல ரெண்டு வகையா இருக்குது. நாட்டுக்கடலைனு இருக்குது, கம்பெனிக் கடலை இருக்கு. பொதுவா மேட்டாங்காட்டுல அல்லது வானாம்பாரி நெலத்துல கொடிக்கடலைதான் போடுவாங்க. நாங்க நாட்டுக்கடலைனு சொல்லுவோம். அந்தப் பருவம் இருக்கும். அங்கெல்லாம் குழிக் கணக்குதான். இங்கொரு நாலு குழி, இங்கொரு ஏழு குழி – இது மாதிரி இருக்கும். அந்தத் தோட்டத்தை சுத்தி எங்க தோட்டமிருக்கும். திருடுவது எங்களுக்கு ஈஸி. யாருமே என்னைத் திருடன்னு சொன்னதே கிடையாது. ‘இவனுக்கெதுக்குத் திருடணும்? திருடணும்னு அவசியமிருக்காதே. ரொம்ப நல்ல பையனாச்சே.’ அப்ப இந்த தோட்டத்திலே வந்து ஒரு நாள் கடலை பிடுங்கினோம். கடலை பிடுங்கினா சும்மா ரெண்டு கடலை மூணு கடலை பிடுங்கமாட்டோம். ஒரு சுமை. எட்டுப் பேர் போறோம். ஒரு ஆள் கட்டித் தூக்கிற அளவுக்குப் பிடுங்குவோம். மூணு அணைப்பு வேணும். அஞ்சு பாத்தில பிடுங்கணும். பிடுங்கின பின்னாடி அதை வேட்டியிலேயோ, கக்கத்திலேயோ வைச்சுகிட்டு வேறொரு இடத்திலே இரவெல்லாம் வட்டமா உட்கார்ந்து சாப்பிட்டுட்டு, அங்கேயே போட்டுட்டுப் போவோம். ரெண்டாவது நாள் அந்தத் தோட்டத்திலே திருடவே மாட்டோம். பாவமில்லையா? ஒரு தடவை பண்ணியாச்சு. அது அவ்வளவுதான். கடலை எடுக்கிற வரைக்கும் அது பண்ணமாட்டோம். அடுத்து பக்கத்துத் தோட்டத்தில பண்ணமாட்டோம். இதுக்குச் சம்பந்தமில்லாம ஒரு கிலோமீட்டர் தள்ளி வேறு இடத்துக்குப் போவோம் நாளைக்கு. அல்லது ஒரு நாள் ரெண்டு நாள் கழிச்சி. ஏன்னா காவலுக்கு இரவெல்லாம் இருப்பாங்க. பக்கத்துத் தோட்டத்துக்காரன் இருப்பான். அதனால இங்க போவோம். இங்க போய்ப் பிடுங்கினோம்னா ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வருவோம். அந்த சீசன் முடியறதுக்கும் கரெக்டா இருக்கும். இப்படி ஒரு வாழ்க்கை இருக்குது.

நாங்க தூங்கினது ரொம்பக் குறைவாக்கூட இருக்கலாம். அதாவது, பெரும்பாலும் பதினோறு மணிக்குத்தான் நான் தூங்கினதா நினைக்கிறேன். அதே மாதிரி, ஏழரைக்கு சாப்பிடணும்னு தோணும். சாப்பிட்டாச்சுன்னா, எட்டு மணிக்குப் படம் போட்டுருவாங்க. இங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் போகணும். காட்டுக்குள்ள போட்டிருப்பாங்க டெண்ட் தியேட்டர். உமா மகேஸ்வரின்னு ஒரு டெண்ட் தியேட்டர் இருந்திச்சு. அப்ப நண்பர்களெல்லாம் சேர்ந்துட்டுப் படம் பார்க்க ஓடுவோம். அப்ப ஃபர்ஸ்ட் ஷோ எட்டு மணிக்குத்தான் போடுவாங்க. காரணம் எல்லா கிராமத்துலேயும் வேலை செஞ்சு முடிச்சிட்டு குளிச்சி சாப்பிட்டுதான் போவாங்க. நல்ல அற்புதமான காலங்கள். உங்களுடைய நேரத்தைத் திங்காது. அஞ்சரை ஆறு மணிக்கு களை வெட்டிட்டு வீட்டுக்கு வர்றீங்க. பருத்தியெடுத்துட்டு வர்றீங்க. குளிக்கறீங்க. சமைக்கறீங்க. எல்லாருமா சேர்ந்து சாப்பிடறீங்க. குடும்பத்தோட ஏழே முக்காலுக்கு நடந்து போவாங்க. கால் மணி நேரத்துல நடந்துரலாம். போய், படம் பார்த்துட்டு, பதினோரு மணிக்கு வந்து தூங்கி ஆறு மணிக்கு, அல்லது அஞ்சு மணிக்கே அம்மா எந்திருச்சுருவாங்க.

இப்ப நான் படத்துக்கும் போகணும். ஏழரைக்கு சாப்பிட்டேன்னா, எங்க வீட்ல ‘ஐயோ இவன் படிக்காம இப்படி இருக்கானே, கெட்டுப் போயிருவானே’ம்பாங்க. கரெக்டா, எஸ்கேப் ஆன உடனே, ஆறு பேரு முக்குல நிற்பாங்க. ஆறு பேரோட அப்படியே போனோம்னா, படம் பார்க்கிறது மட்டுமில்ல – அங்க மிகப்பெரிய சண்டை நடக்கும்.

நகரத்துக்குப் போன உடனே என்ன நடந்துபோச்சுன்னா, பேர்தான் நான் அமெரிக்கன் காலேஜ்ல படிச்சேன், ஹாஸ்டல்ல இருந்தேன். அந்த கோரிப்பாளையம் தெரு தவிர வேறு எங்கயும் தனியா நடந்து போனதில்லை. ஒரு காரணம்- ஒரு வருசம்வரைக்கும் எனக்கு பஸ் ஏறிப்போனா தப்பிப்போயிருவோமோ அப்படிங்கிற பயம். மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகணும். எங்க இறங்கி எப்படிப் போறது? அல்லது தியாகராஜன் காலேஜ் இருக்கே, தெப்பக்குளம் பக்கத்துல. தெப்பக்குளத்துக்கு எப்படிப் போறது? பசங்களோட போகணும். எல்லாம் ஹாஸ்டல்லதான் இருப்பாங்க. இது நமக்கு சிக்கலா இருக்கும். எந்த வண்டில ஏறணும்? இந்த நிமிடத்துல என்னமோ ஆயிடுச்சுனா?

வெளியே போறதவிட அறைக்குள்ளே அடங்கினேன். புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சேன். +2 வரைக்கும் நான் ஒன்னும் வாசிச்சதே கிடையாது. பாடப்புத்தகம் கூட ஏதோ பாஸ் பண்ணுகிற அளவுக்குத்தான் படிச்சிருப்பேன். எந்தக் கதைகளும் படிச்சது கிடையாது. மத்தவங்க நூலகத்துக்குப் போறது ஆச்சரியமாக இருந்தது. பக்கத்துல சிலமரத்துப்பட்டியில கிளை நூலகம் இருந்தது. அந்த நூலகத்துக்குப் போய் உறுப்பினரா சேர்வாங்க. புத்தகம் எல்லாம் எடுத்துகிட்டு வருவாங்க. ஜெயகாந்தன், சாண்டில்யன் எல்லாம் அப்போ பிரபலமா இருந்தாங்க. ஆனா பெரிய ஆச்சரியம். நான் அப்படிப் போய் நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து எல்லாம் படிச்சது கிடையாது. எங்க ஊரிலே நூலகம் இல்லை. அப்போ கல்லூரியிலே வெளியே சுத்தத் தெரியாததுனாலே, ஒரு சிறுகதைத் தொகுப்போ அல்லது ஒரு நாவலோ எடுத்தோமானா, அதை இரவெல்லாம் படிக்கிறது. அப்படி ஒரு வாசிப்பு அனுபவம், உலகத்தோடு ஒட்ட முடியாததால் வாசிச்சிட்டு இருந்தேன்.

அன்பழகன்: தமிழைப் பொருத்த அளவிலே, முதலில் எதை வாசிக்க ஆரம்பிச்சீங்க?

வேணுகோபால்: நான் தேர்ந்தெடுக்கும் போதே இலக்கியம் தொடர்பான கல்விதான்னு தெளிவாயிட்டேன். ஏன்னு கேட்டீங்கன்னா, எனக்குக் கணிதம் சுட்டுப் போட்டாலும் வராது. நான் 10th பாஸ் பண்ணினதே எந்த சாமி புண்ணியமோ. அதை ஜம்ப் பண்றதுக்கு நான் பட்ட கஷ்டம்…கணிதமும் ஆங்கிலமும்…பெரிய கஷ்டம்தான்னு வைச்சுங்களேன். +2 வரும்போது கணிதம் இல்லாத ஒரு குரூப் எடுக்கணும்னு சொல்லிட்டு, செகண்ட் குரூப் எடுத்தேன். அது ஒரு தப்பு பண்ணிட்டேன். அந்த இடத்திலே தமிழ் மீடியமும் இருந்தது. ஆங்கில மீடியமும் இருந்தது. ஒருவேளை ஆங்கில மீடியத்துல படிச்சிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லாயிருந்திருக்குமோன்னு நினைக்கிறேன். ஆங்கில மீடியத்துல ஃபர்ஸ்ட் குரூப் மட்டும் இருந்தது. செகண்ட் குரூப்பு இல்லை. அதனாலே செகண்ட் குரூப் எடுத்துட்டேன். கணக்கும் வராது, சரி தமிழ் மீடியம் படிக்கிறோம்னு சொல்லிட்டு. ஆனா, கல்லூரி போகும்போது தேர்ந்து எடுத்தேன். நான் ஒரு ரைட்டர். ஒரு எழுத்தாளன். ஒரு வார்த்தைகூட எழுதலை. ஆனா அப்படின்னு நினைச்சுட்டு இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

தியாகு: எடுத்த எடுப்பிலே எப்படி ரைட்டர்னு முடிவு பண்ணனீங்க. கண்ணதாசன் தானே கனவிலே இருந்தது.

வேணுகோபால்: அப்படித்தான் இருந்தது. கண்ணதாசனேதான்னு துல்லியமா வரையறுக்க முடியாத பருவம். அப்படித் தோணிச்சு. பெண்ணை தேவதையாப் பார்க்குற கவிமனம் கண்ணதாசன்கிட்ட இருந்துச்சு. எங்கிட்ட இல்ல. நான் அப்படி நினைக்கல. தமிழ் எடுத்தா நிறைய தமிழ் சம்பந்தமாகப் படிக்கலாம். அப்போ தமிழ் படிக்கும்போது ஒரு ரைட்டர் ஆகலாமில்லையா. அப்படித்தான் அதைத் தேர்ந்தெடுத்தேன். 3 சாய்ஸ்களிலும் தமிழ் தமிழ் தமிழ்னு தான் எழுதினேன்.

கண்ணன்: உங்களுக்கு யாராவது வழிநடத்தினாங்களா?

வேணுகோபால்: இல்லை. வழிநடத்துலே. நான் மனரீதியாக இதப் பண்ணினேன். இதுதான் தோதாக இருக்கும்னு மனரீதியாவே தேர்ந்தெடுத்தேன். என்னைச் சேர்த்து விட்டது, அங்கு ஏற்கனவே படித்த அழகேசன் நந்தகோபாலுனு…அவர் பாட்டனி படிச்சாரு. அவர் கூப்பிட்டுப் போய் அங்க சேர்த்தினார். அங்க இருந்த சிலபஸ் நல்ல சிலபஸ். நவீன இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வைச்சிருந்தாங்க. குறிப்பா புதுமைப்பித்தன் கதைகள், மௌனியின் கதைகள்…சும்மா ஒன்று இரண்டு கதைகள். கு.அழகிரிசாமி கதைகள் – இந்த மாதிரி வைச்சிருந்தாங்க. அப்புறம் நீல பத்மநாபனுடைய தலைமுறைகள், ஃபைல்கள்னு ஒரு சின்ன குறுநாவல் – அதெல்லாம் பாடத்திட்டத்தில் வைச்சிருந்தாங்க. ஜெயகாந்தனுடைய உன்னைப் போல் ஒருவன் வைச்சிருந்தாங்க. எடுத்த உடனே, 17 வயசு முடிஞ்சு, 18வது வயசுல, இந்தத் தரத்திலான நாவல்கள், சிறுகதைகளைப் படிச்சேன். அப்போ நீங்க ஏற்கனவே கேட்டதுமாதிரி, நகரத்துக்குள்ள நான் சுற்றப் போக மாட்டனா, நாலரை ஆயிடுச்சுனா, லைப்ரரில போய் ஒரு புத்தகத்தை எடுத்துட்டு வருவேன். அந்த டயத்துல ஒரு சின்ன ப்ரோக்ராம் வைச்சாங்க. என்னன்னா, 1986ல ஜெயகாந்தனை அமெரிக்கன் கல்லூரிக்கு அழைச்சிட்டு வர்றாங்க. சுதானந்தான்னு ஒரு ஆசிரியர் இருந்தார். சாமுவேல் சுதானந்தா.

தியாகு: வெண்ணிலை புத்தகம் அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கீங்க.

வேணுகோபால்: ஆமா. சுதானந்தா என்ன பண்ணினார்னா, ‘ஜெயகாந்தன் வரப் போறாரு,’ – 6 மாசத்துக்கு முன்னாடியே, பாருங்க – ‘நீங்க என்ன பண்றீங்கன்னா, ஜெயகாந்தனுடைய பல நூல்கள் – சிறுகதை, நாவல், கட்டுரை எல்லாம் படிச்சிருக்கணும். அவர்கிட்ட ஒவ்வொரு மாணவனும் ரெண்டுமூணு கேள்வி கேட்கணும்,’ அப்படின்னு சொல்றாரு. அப்போ, உன்னைப் போல் ஒருவன் நாவல் இருந்தது. சிறுகதை இல்லை. நாவல் வைச்சதுனால, சிறுகதை வைக்கலை. நான் லைப்ரரிலே தேடித்தேடிச் சிறுகதை படிச்சேன்.

ஒரு எழுத்தாளர் வருகிறார். கேள்வி கேட்கணும். அவர் எப்படி இருப்பார்? வரிசை எல்லாம் நம்மளுக்குத் தெரியாது- நூலகத்தில எது கைல கிடைக்குதோ – ‘தேவன் வருவாரா’, ‘யுக சந்தி’, அப்புறம் கடைசிப் புத்தகத்தை முதல்ல படிக்கிறேன். ‘சக்கரங்கள் நிற்பதில்லை’தான் அவரது கடைசிச் சிறுகதைத் தொகுப்பா இருக்கலாம். ‘ஒரு பிடி சோறு’, ‘கை விலங்கு’. அப்புறம் குறுநாவல்ல ‘பாவம் இவள் ஒரு பாப்பாத்தி’, ‘இந்த நேரத்தில் இவள்’ – இதெல்லாம் எடுத்திட்டு வருவேன். எடுத்துட்டு வந்தா, அடுத்த நாள் விடியக்காலை குவிஸ் வைச்சிருப்பாங்க. பத்துக் கேள்வி கொடுத்து விடை எழுதணும். அல்லது ஒரு சின்ன டெஸ்ட் வைச்சிருப்பாங்க. பாடத்திலிருந்து ரெண்டு கேள்வி – ஒவ்வொரு சப்ஜெக்ட் வைச்சிருப்பாங்க. இன்னிக்கு ஒரு சப்ஜெக்ட், நாளைக்கு ஒரு சப்ஜெக்ட்..இப்ப இலக்கணம்னா..நன்னூல்னா நன்னூல் இருக்கும். அல்லது நாடகம்னா நாடகம் இருக்கும். இதற்கு கேள்வி இருக்கும்.

நான் புத்தகத்தை எடுத்துட்டு வந்து டேபிள்ல வைச்சிருவேன். விடியக் காலைல பரீட்சை இருக்கும். எல்லாரும் என்ன பண்ணுவாங்கன்னா படிச்சிட்டுத் தூங்குவாங்க. நான் இப்போ யுகசந்தியைப் படிச்சு முடிக்கணும். யுகசந்தியிலே 12 கதை இருக்கும். 8 மணிக்குச் சாப்பிட்டு உட்கார்ந்தேன்னா இரவு 1 மணிக்கு அல்லது 3 மணிக்குப் படிச்சு முடிச்சிடுவேன். அந்த சின்ன புத்தகத்தை. நாளைக்கு டெஸ்ட் இருக்கில்லீங்களா…உடம்பு எல்லாம் சூடாகிவிடும். அதுக்கு அப்புறம்தான் படிப்பேன். இது ஒரு நாள் இல்ல. ஒவ்வொரு முறையும் செய்வேன். இப்படி நான் அமெரிக்கன் கல்லூரியிலே இரண்டு நாளைக்கு ஒரு புத்தகம்னு படிச்சேன். ‘கனகாம்பரம்’ முன்னட்டை இல்லாமப் படிச்ச ஞாபகமிருக்கு. இன்னொரு பெரிய வேடிக்கை, கதைத்தலைப்பு என்னன்னே தெரியலை – ஆனா அது என்னை ரொம்பப் பாதித்தது. அட்டை இல்லை, முன்னுரை எல்லாம் கிழிஞ்சு போச்சு. பின்னட்டை கெட்டியாக இருக்கு. முன்னட்டை போச்சு. அந்தக் கதை எனக்கு ரொம்பப் பதட்டத்தை உருவாக்கிவிட்டது. ஒரு எழுத்தாளன் சென்னை போன்ற ஒரு நகரத்துக்கு வருகிறான். ஒரு வீட்டிலே ஒரு அறையிலே குடி ஏறுகிறான். பக்கத்திலே – நான் கீழ் அறைனு நினைச்சுகிட்டேன் – ஆனா அது பக்கத்து அறை. நாள்தோறும் சண்டை நடக்குது. ஒரு நாள், கணவன் அடிக்கிறான். மறுநாள் இரவும் அடிக்கிறான். அவனாலே தாங்கிக்கிட முடியலை. மறுநாள் கதவைத் தட்டுறான்.
‘மிஸ்டர், என்ன ஒரு பொம்பளைப் புள்ளையைப் போட்டு இப்படி அடிக்கறீங்க. ஓலம் போட்டாக்கூடத் திரும்பத்திரும்ப அடிக்கறீங்க.’
‘நீ யாரடா இதை கேட்க.’
‘இல்ல, இல்ல. இனிமேல் கைவைச்சீங்கன்னா கேட்டுத்தான் ஆகணும்.’
‘என்னுடைய மனைவியை அடிப்பேன். குத்துவேன். நீ யாரு கேட்கிறதுக்குங்கிறேன்’
‘நீங்க அடிச்சீங்கன்னா, நான் வந்து திருப்பி அடிப்பேன்’
‘ஓகோ நீ வந்து அந்த அளவு வந்துட்டீங்களா.’
இதோட அந்த முதல் டையலாக் முடியுது. போயிறான். மறுநாள் இந்தப் பிரச்சனை இன்னும் கூடுது. ‘அது யாரு என்னைத் தட்டிக் கேட்கிறான். உனக்கும் அவனுக்கும் என்ன’னு தகராறு நடக்குது. திரும்ப என்னன்னா, அந்த மூன்றாவது நாள் அவன் வருவதற்குத் தாமதமாகிவிடுகிறது. இந்தப் பெண் அந்த வீட்டிற்கு போறாங்க. உடனே அவன் கட்டிலில் இருந்து எந்திருச்சு உட்கார்றான்.
‘உங்களோட ஒரு நிமிஷம் பேசலாமா?’
‘பேசலாம்.’
‘லைட்ட அணைச்சிருங்க’ என்கிறாள்.
சொன்ன உடனே, ‘ஏன் லைட் எரியட்டுமே’ங்கிறான்.
‘இல்லீங்க லைட் ஆப்ஃ பண்ணுங்க’
லைட் ஆப்ஃ பண்ணுகிறான். அவள் அவன் மடியிலே தலை வைத்தாள். அதிலே நுட்பமாக முத்தம் கொடுத்தாள் என்று இருக்கா தெரியலை. மறுபடியும் இரண்டாவது முறை படிக்கணும். ஆனால், இப்ப லைட் போடுங்க என்று சொல்கிறாள். ஒரே ஒரு நிமிடம் அவளுடைய கண்ணீர், சூடான கண்ணீர் மடியிலே பட்டுச்சுனு எழுதறார். கிளம்பிப் போயிட்டாங்க.

இந்தக் கதை ரொம்ப பயங்கரமா பாதித்தது. ஏன் இவனை நாடி வந்து அழுகணும். ஒரு வார்த்தை சொல்கிறாள். ‘இந்த ஒரு நிமிஷம் தான் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக வாழ்ந்து விட்டேன்.’ ஒரு நிம்மதியான பெருமூச்சு விட்டாள்னு இருக்கும் அதிலே. பின்னால் இதிலே வெவ்வேறு விவரணைகள் எல்லாம் இருக்கும். இந்தக் கதை என்ன கதைனு அப்பத் தெரியலை. என்னுடைய பதினெட்டாவது வயதில் படிச்சேன். இது ‘சிறிது வெளிச்சம்.’ கு.ப.ரா.வுடையது. என்னுடைய சிறு வயதிலே இது மாதிரியான கதைகள் படிச்சேன்.

கண்ணன்: ஜெயகாந்தன் வந்து பேசியதாகச் சொன்னீங்க.

வேணுகோபால்: 86ல அவர் வர்றாரு. இரவெல்லாம் நான் நினைக்கிறேன், நிறையக் கேள்வி கேட்கணும். அப்புறம், நம்ம ஒரு எழுத்தாளரா ஆகணும்னு கனவு, இதெல்லாம் இருக்கு. அதே மாதிரி ஒரு ஆறு மாசம் கழிச்சு அவர் வர்றார். வந்தா அந்த நிமிடத்துல நான் குறைந்தபட்சம் நூறு கதை படிச்சிருப்பேன். எடுத்தவுடனே பாருங்க, ஜெயகாந்தன் தான் படிக்கிறேன். +2 வரைக்கும் இலக்கியம்னா என்னன்னு சுட்டுப்போட்டாக்கூட தெரியாது. எனக்கு விவசாயம்னா என்னனு தெரியும். இந்த ஆட்டுக்குட்டி நல்லா வளருமா வளராதா அப்படினா தெரியும். இந்தக் கால் ஊக்கமா இருக்கு, இது நல்லா வரும் அப்படீம்பேன். தலையப் பார்த்துச் சொல்லிடுவேன். இந்தக் கொம்பு காதைச் சுத்திச் சுருளும்னு சொல்லிடுவேன். ஏன்னா அது என்னுடைய அனுபவம். ஆனா இலக்கியம்னா என்னனு தெரியாது.

செந்தில்: நீங்க ஆரம்பிக்கும்போதே இந்தப் படியில இருந்து ஆரம்பிக்கறீங்க. அறைக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறீங்க. உங்ககிட்ட விவாதிக்கிறதுக்கோ, படித்ததைச் சொல்லிப் பார்த்துக்கிறதுக்கோ உங்க கூட யாராவது இருந்தாங்களா?

வேணுகோபால்: இல்லை. ஏன்னா, நூல்களை எடுத்திட்டு வருவேன். ஜெயகாந்தனைப் படிக்கும்போது, முடிவு சார்ந்த கதைகள் இருக்கில்லீங்களா – ஒரு கதைல என்னன்னா, ஒரு பெண்ணை முழுக்க நிர்வாணமாப் பார்க்கணும்னு ஒருத்தன் விரும்பறான். அந்தப் பருவம் இருக்கு இல்லீங்களா, ஒரே பதட்டமா இருக்கு. இதென்னடான்னு பார்கிறோம். அப்படி நினைக்கிற ஒரு கல்லூரியில் படிக்கிற பையன். காலை நேரம் வேட்டியை உடுத்தறான். புத்தகத்தை எடுத்துட்டு கீழே வர்றான். கீழ வரும்பொழுது ஒரு பெண் – மனநிலை பாதிக்கப்பட்ட பெண், தெருவிலே நிர்வாணமா அழுக்கேறிய உடம்போடு போறா. அப்படிப் பார்த்த உடனே, அவன் என்ன பண்றான் – தன்னோட வேட்டியை எடுத்து அவளுக்கு உடுத்திவிட்டு, குடுகுடுன்னு அவன் தங்கியிருக்கக்கூடிய அறைக்கு ஓடுறான். இப்படியொரு கதை ஜெயகாந்தன் எழுதியிருப்பாரு. இந்தக் கதை முடிவு சார்ந்து இருக்கில்லீங்களா. இந்த இளம் பருவம் எதை நோக்கித் தள்ளுது. அதனுடைய முடிவு நம்மை எந்த விதமாகத் திருப்பி அடிக்குது. மனிதன் இந்த காமத்தை நோக்கிப் போகும்போது கூட அவன், சில கணங்கள், நகர்ந்து அற்புதமான மனிதனா மாறக்கூடிய தருணங்கள் இருக்கே, அந்த மாதிரியான இடங்கள்தான் ஜெயகாந்தனுடைய எல்லாக் கதைக்கும் இலக்கணமாக்கூட நீங்க சொல்லலாம்.

யுகசந்தி, எந்தக் கதைக்கும் இலக்கணம், உங்களை வேறு ஒரு மனிதனாக மாற்றுவது. புதுமைப்பித்தன் பிரச்சனையை இது இப்படி இருக்குனு சொல்லிட்டார். ஆனா அந்தப் பிரச்சனைக்கு ஒரு நல்தீர்ப்பு, ஒரு நல்வழிகாட்டினு சொல்றோமில்லையா, ஒரு நல்ல பாதைனு சொல்றோமில்லையா, அந்தப் பாதையைக் காட்டினதுல ஜெயகாந்தனுக்கு ஒரு பங்களிப்பு இருக்கு. அம்மாதிரித்தான் எல்லாக் கதைகளும் வருது. ‘அக்கினிப் பிரவேசம்’. அவர் சொல்றாரில்லையா. ஒரு பெரிய விவாதம் வருகிறபோது, கேட்கிறாங்க – எப்படி, தண்ணியைத் தெளிச்சா, பெண் புனிதம் ஆகிடுவாளா? அதற்கு அவர் சொன்ன பதில், உன்னுடைய மகள் உன்னுடைய தங்கை இந்த இடத்திலே இருந்தால் நீ எப்படி இருந்திருப்பே. நான் ஒரு தகப்பன் ஸ்தானத்திலே, ஒரு அண்ணன் ஸ்தானத்திலே அந்தப் பெண்ணைப் பார்க்கிறேன். இன்னொரு பதில் கூட இதே கேள்விக்கு அவர் சொல்லியிருப்பார். 79-80ல ஏதோ கல்லூரியிலே பேசும்போது, நீ சாக்கடைல விழுந்திருக்கேன்னு நான் கையைக் கொடுத்து மேலே தூக்கிவிடப் பார்க்கிறேன். நீ திரும்பத் திரும்ப சாக்கடைலேயே விழுகணும்னு நினைக்கிறயேனு ஒரு பதிலைச் சொல்றாரு. ‘எனக்கு மேல வர இஷ்டம் இல்லை. இதிலதான் கெடப்பேன்’னு சொல்றீங்களே, உனக்கு எப்படி அந்தக் கதை புரியும்னு சொல்லியிருக்கார்.

ஜெயன் அற்புதமா ஒரு இடத்தில சொல்லியிருக்கார். அவகிட்ட இருக்கிற குழந்தைமைங்கிறத, வாய்க்குள்ள bubble gum மென்னுகிட்டிருந்தா, வீட்டுக்குப் போய் குளிக்கும்போதும் மென்னுகிட்டிருந்தானிருக்கும். அதுக்குப் பல்வேறு அர்த்தம் இருக்கு. அந்த நினைவை அசை போட்டுட்டிருந்தான்னு இருக்கு. அப்புறம் ஒரு innocentஆன பொண்ணுன்னு இருக்கு. அதை ஜெயன் ஒரு இடத்திலே சொல்லியிருக்கார்.

சுரேஷ்: இப்ப ஜெயகாந்தன் நினைவுரை ஆற்றும்போதுகூட சொன்னார்.

வேணுகோபால்: அப்போ ஜெயகாந்தனைத் தொடர்ச்சியா, ஒரு 100-150 கதைகள் படிச்சிருப்பேன். 10-15 குறுநாவல் படிச்சிருப்பேன். வரிசைக் கிரமம் இல்லை. கிடைச்சது. அதே மாதிரி, நாவல்ல ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘வாழ்க்கை அழைக்கிறது’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ எல்லாம் படிச்சேன். ஆனா எடுத்த உடனே ஜெயகாந்தனைத்தான் படிச்சேன். படிச்சிட்டு, ஜெயகாந்தன் வரும்போது – அவருடைய ஆளுமை தெரியுமில்லீங்களா, கேள்வி கேட்டா நேரடியா பதில் சொல்ல மாட்டார். ஒரு பாப்பா கேள்வி கேட்டா, நாம இனிமையா, மனமுவந்து பதில் சொல்வோம். அதாவது என்னுடைய பலவீனங்களும் சேர்த்து. ஆனா, ஜெயகாந்தன் அப்படிச் சொல்ல மாட்டார். பலவீனம் இருந்தாக்கூட அதை கம்பீரமா மேனேஜ் பண்ணுவார். ஒரு பெண்- ஆசிரியர், எந்திருச்சு கேட்கிறாங்க, ‘என்னங்க, இவ்வளவு வேகமா எழுதிட்டு, இப்பெல்லாம் நீங்க கதைகளோ நாவல்களோ எழுதறதே இல்லையே. ஏன் எழுதாமப் போயிட்டீங்க’. அதுக்கு என்ன சொல்லலாம், ஏதோ ஒரு பதில் சொல்லலாம். அவர் சொன்ன பதில், இன்னும் எனக்கு ஞாபகமாயிருக்கு. ‘நான் எழுதியது எல்லாவற்றையும் நீ படித்துவிட்டாயா? முதலில் நான் எழுதியவற்றைப் படி,’ அப்படீன்னார். இந்த கம்பீரம் இருக்கே, திருப்பி அடிக்கிறது. இன்னொரு கேள்வி: ‘நீங்க மார்க்சியத்திலிருந்து தடம் மாறிப் போயிட்டீங்க’ன்னு கேட்டாங்க. ‘வாழ்க்கை என்பது பன்முகப்பட்டது. நீ சொன்ன உலகம் மட்டும்தான் உலகம் என்பதை நான் நம்பமாட்டேன்,’ அப்படிங்கிறார். இந்த மாதிரியான பதில்கள் இருக்கில்லீங்களா, நம்ம கேள்வி கேட்டு, நம்மைக் காயப்படுத்திருவாரோங்கிறதுக்காக நான் எந்தக் கேள்வியும் கேட்கலை. ஆனா, அப்ப எல்லாரும் ஒரு நோட்ல ஆட்டோகிராப்ஃ வாங்கினாங்க. நான் என்ன நினைச்சேன்னா, ஜெயகாந்தனுக்கு நான் ஆட்டோகிராப்ஃ போடக்கூடிய காலம் வரும்னு நினைத்தேன். அதாவது நம்ம கேள்வி கேட்க முடியலை. ஆனால் ஜெயகாந்தனோடு என்றைக்காவது ஒரு நாள் உட்கார்ந்து பேசக்கூடய நிலை வரும். அல்லது நான் ஒரு எழுத்தாளன் என்று அவர் கண்டுபிடிப்பதற்கோ – கண்டுபிடிச்சாரா கண்டுபிடிக்கலையா, அது வேற – ஆனா அது மாதிரி நான் வருவேன்கிறது என்னுடைய மனசுல உருவாச்சு.

அவருடைய உருவம், நடை உடை, பெரும்பாலும் எனக்கு அவர்மீது – இப்படி முரட்டுத்தனமாப் பேசறாரே என்கிறதுதான் இருந்ததே தவிர, அவர்மீது பெரிய காதல் எல்லாம் உருவாகலே. அவரைப் படித்திருந்தேன் இல்லையா, எழுத்திலிருந்த காதல், நேரடியா இல்லை. என்னை அரவணைச்சுக்கிடுவார்னு நினைச்சேன். என்னை உதைச்சுத் தள்ளுறதுமாதிரி இருந்தது. வாசகனை உதைத்துத் தள்ளுகிற மாதிரி இருந்தது. ஆனாலும் படிச்சது பூரா அந்த மாதிரித்தான் படிச்சேன். அப்புறம் ஜானகிராமன், இந்த மாதிரிப் படிச்சேன்.

செந்தில்: பகிர்ந்துக்கிறதுக்கு யாராவது கூட இருந்தாங்களா?

வேணுகோபால்: இல்லை. அலெக்ஸ்னு ஒரு பையன் இருந்தான். அவனும் படிப்பான். அவன் வேற ஹாஸ்டல்ல இருந்தான். அவன் இது படிச்சேன்னு சொல்வான். ஆனால் இது பகிர்ந்துகொள்வதற்கு என் வயது ஒத்த, வாசிப்பில் தீவிரம் உள்ள ஒரு மாணவனோ ஆசிரயரோ கூட கிடைக்கவில்லை. மணிமாறன் அய்யானு ஒருத்தர் இருந்தார். அவருக்கு இந்த சிலபஸ் உருவாக்கறதுக்கு ஒரு பங்களிப்பு இருந்தது. சுதாநந்தாவுக்கு ஒரு பங்களிப்பு இருந்தது. நவீன இலக்கியம் தொடர்பாக. ஆனால் ஆசிரியர்களோட இதைப் படிப்பதற்கான ஒரு வாய்ப்பு இருந்துச்சான்னு தெரியல. ஆனா, இலக்கியம் என்பது எப்படி நுட்பமா, ஒரு வரி எப்படி இலக்கியமாகிறது, அந்த வரிக்குள்ள எப்படி ஒரு வாழ்க்கை வந்து சேர்கிறது, என்பதை, முதல் வரியை ஒரு நாள் முழுக்க நடத்திருக்காரு. சாமுவேல் சுதாநந்தா. எப்படி நடத்தினார்னா, ‘தங்கம் வெகுநாட்களுக்குப்பின் தலைவாரிப்பின்னிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.’ இதுதான் முதல் வரி.

சுரேஷ்: உன்னைப் போல் ஒருவன்ல.

வேணுகோபால்: ஆமாம். தங்கம் வெகுநாட்களுக்குப்பின் தலைவாரிப்பின்னிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அப்ப இத்தனை நாள் தலை வாரலையா? வெகு நாள்னு சொல்றாரு. எத்தனை நாளா? ஏன் ஆசைப்படறா? ஏன் தலைவாரிக் கொள்ளணும்? அது உடைந்த சீப்பு. இரெண்டா இருக்கும் அந்த சீப்பு. இதை சொல்லிச்சொல்லி, பெரிய ஒரு வாழ்க்கை பின்னாடி இருக்குது. தலைவாரிச் சீவ முடியாத அளவு ஒரு வேதனை இருக்குது. ஒரு வாழ்க்கை அற்றுப்போன, ஒரு கயிறு அற்றுபோய் கிடக்குது. இப்படி எல்லாம் இருக்கில்லீங்களா, இதை அவர் சொல்லிக்கொடுத்தாரே தவிர, சகஜமா உரையாடுவதற்கு, ‘இதை வாசித்தேன், இப்படிப் புரிஞ்சுகிட்டேன்’னு உரையாடுவதற்கு, யாரும் இல்லேன்னுதான் நினைக்கிறேன். 17 வயசில சொல்றீங்க. எம்.ஏ. படிக்கிற வரைக்கும்கூட இல்லேன்னுதான் நினைக்கிறேன்.

செந்தில்: உங்களுக்கு ஆசிரியரோட தேர்வு எப்படி நடந்தது? இதிலிருந்து இதுக்கு நகர்றீங்க. எது இலக்கியம்னு எப்படி கண்டு கொண்டீர்கள்?

வேணுகோபால்: இல்ல, நான் அப்படியெல்லாம் கண்டுக்கிடமுடியலை. வாசிச்சு வாசிச்சுத்தான்…இது நல்ல இலக்கியங்கிறது எனக்கு அந்த வயதில தெரியாது. ஆனால், எடுத்தவுடனே நான் எதைப் படிச்சேன்னா – ஜெயகாந்தன் படிச்சேன். அடுத்து ‘அம்மா வந்தாள்’ படிச்சேன். என்னுடைய 17-18 வயசில. இன்னும் நான் திரும்பிப் படிக்கலே. இந்தப் பேட்டிக்கே ஜானகிராமன ஒரு தடவை ரிவைஸ் பண்ணிட்டு வரணும்னு நினைச்சேன். ஆனா ஒரு வாரமா சரியாத் தூங்கலை. அதற்கான வாய்ப்பு நீங்களும் கொடுக்கல.

சுரேஷ்: அவசியம் இல்ல சார். மனதில் எப்பவுமே இருக்கே.

வேணுகோபால்: ‘அம்மா வந்தாள்’ படிக்கும்போது என்னான்னா, எனக்கு இன்னிக்கு வரைக்கும் ஒரு காட்சி இருக்கில்லீங்களா, அவன் உருவாக்கின கும்பகோணம் சித்திரம் இருக்கில்லீங்களா, அதை என்னால மறக்கவே முடியாது. அப்புவை ட்ரெய்ன்ல ஏத்தி, கொண்டுபோய் வேதபாடசாலைல விட்டுட்டு, அவன் திரும்பின கணம். அப்பா போன பின்னாடி- டாய்லெட் எல்லாம் அப்ப இருக்காது- காட்டுப்பக்கம் போய் ஒரு அரளிச்செடி பின்னாடி மறைஞ்சு அமர்ந்து, ‘நம்ம இங்க வந்து படிக்கணுமா,‘ என்று நினைக்கக்கூடிய இடங்கள்ல இருந்து…அவரு கொடுக்குற அந்த சித்திரங்கள் இருக்கில்லையா, landscape என்பது…ஒரு மனிதன் எப்படி இயங்குவான் – அப்படிங்கிறது. அந்த நாவல் அப்படியிருந்தது. அது மட்டுமில்லை – வெறும் ஒரு புற உலகத்தினுடைய பின்னல் மட்டும் அதில் இல்லை. கேரக்டரைசேசன் பிரமாதமான கேரக்ட்டரைசேசன். இன்னைக்கும் எல்லாரும் அலங்காரத்தம்மாளைச் சொல்றோம். மோக முள் யமுனாவைச் சொல்றோம். ஆனா, உண்மையிலேயே ப்ரில்லியண்டான கேரக்டர் யாருன்னு சொன்னீங்கன்னா, நான் அதில் வரக்கூடிய இந்துவைப் பார்க்கிறேன். சின்ன விஷயம் தான். ஆனா அவள் பெரும் கெட்டிக்காரி. தன் வேதனையை அடக்கிக்கொண்டு, அதை கடந்துசெல்லக்கூடிய ஒரு பெண். அடுத்த ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு தெம்பு. பேரழகு. அம்மாவைப் பற்றி, ‘தாய் தாய்னு சொல்ற. உங்க அம்மா யோக்கியம் தெரியும்’கிறதை சொல்லாம சொல்லக்கூடிய இடம். இவன் போய்கிட்டு வந்த பின்னாடி இவள் எப்படி ஒரு பக்குவமான ஒரு பெண்ணுங்கிற இடம். எல்லாத்துக்கும், ஒரு சின்னப் பெண்ணு. ஒரு 23-25 வயசு. ஒரு விதவை. அந்த விதவைங்கிற பாத்திரத்தை இவ்வளவு அற்புதமா உருவாக்கினது, என்னுடைய ஆசான் ஜானகிராமன் தான்.

அந்தப் பதினெட்டு வயசுல, என்னிக்கு ஜானகிராமனத் தொட்டேனோ- பூராப் புத்தகத்தையும் தள்ளிவிடுவேன் (நூலகத்தில்)…ஏதுனா சிக்கியிருக்கான்னு – அப்படி எடுத்த ஒரு புத்தகம், நளபாகம். அதிலே அவளுக்குக் குழந்தை இல்லாமல் இருக்கும். சமையற்காரன்- இப்ப, பாற்கடல் படிச்சிட்டிருந்தேன். லா.ச.ரா. அதுல ஒரு இடம். கூட்டுக்குடும்பம் இப்ப இல்லைனு ஆச்சு. கடைசி மருமகளா வர்றாங்க. நாலு மருமகள்கள் இருக்காங்க. தீபாவளி வருது. என்ன நிகழுதுனு தெரியலை. குளிக்கறாங்க. அடிக்கடி மேல போயிட்டு வர்றாங்க. மேல பார்த்தா – நீங்க கொட்டு மேளத்தையும் சேர்த்துப் பார்த்துகிடலாம். கொட்டுமேளத்தில வரக்கூடிய தங்கச்சி கேரக்டருக்கும் இதுக்கும் வாழ்க்கையில ஏதோ ஒரு தொடர்பு இருக்குனு நான் நினைக்கிறேன்- பார்க்கறாங்க. அவங்களுக்குத் தொண்ணூறு வயசு. மாமனாரும் மாமியாரும் போய் வருவது, ‘ஏதோ உச்சிப் பிள்ளையாரைத் தரிசனம் பண்ணிட்டு வருகிற மாதிரி இருக்கும’னு சொல்வா – ‘அம்மாவும் அப்பாவும்’னு சொல்வா அதில். ஒவ்வொரு நாளும் இருக்கும். ஒரு நாள் இரண்டுபேரும் ஜோடியா இறங்கி வந்தாங்க. வந்தவுடனே, அம்மா நல்லா குளிச்சு லேசா, நல்லா பளபளக்கக்கூடிய அந்த முடி, அப்பாவோட நெத்தியிலே இருக்கக்கூடிய அந்த திருநீறு, குளிச்சிட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு வரக்கூடிய அந்த கணத்திலே, ‘எனக்கு என்ன தோன்றுச்சுனா, காலைத் தொட்டுக் கும்பிட்டேன். அந்தத் தோற்றம் என்னைக் கும்பிடச் சொல்லிச்சு,’ லா.ச.ரா. எழுதறார்…’அந்தப் பேரழகி இருக்காளே,’- அந்தக் கிழவி, ‘அவளுடைய ஆசிர்வாதம் உங்கள் அப்பா வழியா வந்து எனக்கும் கொஞ்சம் கிட்டாதானு நினைச்சு ஆசிர்வாதம் வாங்கினேன்.’ இந்தக் காட்சி இருக்கே, இம்மாதிரியான காட்சிகளினுடைய கவித்துவம் இருக்கே, இந்த கவித்துவங்கள் லா.ச.ரா.கிட்டப் பல்வேறு இடங்களில் இருக்கு.

இம்மாதிரிதான், நளபாகத்தில், அவன் உழைப்பான். அவனிடமிருந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு எண்ணம் இவளுக்குத் தோன்றுகிறதே, அந்த இடம் எனக்கு ரொம்பரொம்பப் பிடிச்சது, அந்தக் காலத்துல.

அப்புறம், மோக முள்ளைப் பற்றிச் சொல்லிடறேன். கல்லூரியல படிச்சுகிட்டிருக்கேன். அப்பல்லாம் நூறு ரூபாதான் ஹாஸ்டல் ஃபீஸ் இருக்கும். சௌராஷ்டிரா சந்து, அன்னம் புத்தக நிலையம் வந்திருக்குது. என்னதான் விவசாயக் குடும்பமா இருந்தாலும், எங்க வீட்ல மாசத்துக்கு நூறு ரூபா அனுப்பறது ஒரு பெரிய விஷயம்தான். மாசமாசம் அனுப்பறதுன்னா…ஆறு மாசத்துக்கு ஒருமுறைதான் வருமானம் வரும்…அந்த டையத்துல நீங்க வாங்கமுடியும். அப்ப நாலு மாசத்துக்கு சேர்த்துத்தான் நீங்க பணம் கட்டவேண்டியிருக்கும். அப்ப என்ன பண்ணுவேன்னா, நூறு ரூபாங்கிறது இன்னிக்கு ஆயிரம் ரூபான்னு வைச்சுக்கோங்களேன். 86ல. இறங்கிப்போவேன். நண்பர்களோட போயி, சந்தக் கண்டுபிடிச்சு வைச்சிருந்தேன். மீனாட்சி அம்மன் கோயில்ல இருந்து இப்படிப் போகணும், போனவுடனே சவுராஷ்டரா சந்து, இதுல போகணும்னு எப்படியோ கண்டுபிடிச்சு போனா, மோகமுள் இருக்கும். அதை அப்படியே திருப்பிப் புரட்டிப் பார்ப்பேன். விலை பார்த்தா, எண்பது ரூபான்னு போட்டிருக்கும். கிட்டத்தட்ட ஒரு மாதத்தினுடைய மெஸ்பீஸ் ரூபா. பார்த்துட்டு பெருமூச்சு விட்டுட்டுத் திரும்பி வந்துடவேன். என்னிக்காவது வாங்கிறலாம்னுட்டு. பாக்கெட்ல முப்பது ரூபா, நாற்பது ரூபா இருக்கும். திரும்ப ஒரு வாரம் கழிச்சு, சனிக்கிழமை போவேன். ஓடுவேன். போனா, அந்த புத்தகம் இருக்கா, ரைட். புத்தகம் விற்காம இருக்கும். அப்படியே திரும்பி வந்துடவேன். இப்படியே அந்தப் புத்தகம் இரண்டு மாசம் விற்காம இருந்தது. ஏன்னா, எண்பது ரூபாங்கிறது பெரிய விஷயம். ஒரு நாள் எப்படியோ செட்-அப் பண்ணி, ஏதோவொரு தொகையோட போனா, புத்தகம் இல்லை. அது மாதிரி எனக்கு வேதனை தந்தது வேறு ஒன்னுமில்ல .செகண்ட் ரிலீஸ் போட்டிருந்தாங்க – தங்கச்சுரங்கம், சிவாஜி கணேசன் படம். ‘15 ஆண்டுகளுக்குப் பின்’. அலங்கார் தியேட்டர்ல. நான் கெஞ்சி, ‘டேய் என்னைக் கூப்பிட்டுப் போங்கடா. எனக்கு அந்த இடம் தெரியாது’ன்னு சொல்லிட்டு…இந்தப் படமெல்லாம் பார்க்காதிருந்தா, அன்னிக்கே வாங்கியிருக்கலாமே, அப்படி நினைச்சேன். அதற்கு அப்புறம் நூலகத்திலிருந்து எடுத்துப் படிச்சேன்.

அப்புறம் இன்னொன்று. ஜே.ஜே. சில குறிப்புகளுக்காக, சங்கரன் கோயிலுக்கு ஒரு நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். போகும்போது, திருநெல்வேலி பஸ் ஸ்டான்ட்ல ஹிக்கின்போத்தம்ஸ் இருக்கும். கண்ணாடில ஜே.ஜே.சில குறிப்புகள் இருந்ததைப் பார்த்திருக்கேன்…எங்கோ போகும்போது. ‘அங்க இருக்குடா’ன்னு, இங்கிருந்து கிளம்பிப் போனோம். நண்பருடைய அக்கா கல்யாணமோ ஏதோ போயிட்டு. ஜங்சன் போறோம். போனா, கடை லீவு. ஞாயிற்றுக்கிழமை. திரும்பி வந்தோம். ஜே.ஜே.சில குறிப்புகள் நூலகத்தில எடுத்துப் படிச்சேன்.

இந்த மாதிரி, அவருடைய (ஜானகிராமனுடைய) கதைகள் படிச்சேன். ஐந்திணைப் பதிப்பகம் போட்டாங்கில்லையா. தனித்தனியாத்தான் படிச்சேன். கொட்டுமேளம் தனித்தொகுப்பு. ‘சிகப்பு ரிக்‌ஷா’ தனித்தொகுப்பு. அப்படித்தான் படிச்சேன். எப்ப நான் ஜானகிராமனைக் கண்டுபிடிச்சனோ, தேடித்தேடி, என்ன கிடைக்குதோ அதெல்லாம் வாங்கி வந்திருவேன். அந்த மாதிரித்தான் அடுத்த அடிக்குப் போனேன். அதுக்கப்புறம் புதுமைப்பித்தனுக்கு NCBT போட்ட, ஒரு மனிதன் கூனி இருக்கிற மாதிரி ஓவியம் இருக்கில்லீங்களா…

கண்ணன்: என்கிட்ட இருக்கு. மீ.ப.சோமசுந்தரம் தொகுப்பு.

வேணுகோபால்: ம். அவருடைய 12 கதைகள் போட்டாங்க. புதுமைப்பித்தனைப் படிச்சேன். அப்போ எனக்கு கு.அழகிரிசாமி கிடைக்கல. ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு – இந்த ரெண்டு புத்தகம் மட்டும் கிடைச்சது. அந்த நூலகத்திலே. போய்த் தேடுவோம். சிலபஸ்ல ஒரு கதை வைச்சிருப்பாங்க. அந்த ஒரு கதை – இதுவே, இவ்வளவு அழகா இருக்கே, அப்ப இன்னும் படிக்கலாம்கிறதை வைச்சுதான் படிச்சனே தவிர, ஆசிரியர்களோ, மாணவர்களோ, அல்லது சீனியர்களோ, யாருமே கைகாட்டல.

அப்புறம் நிகழ்ந்தது என்னன்னா, ஒரு நாள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போறோம். மூணு வருஷம் இருக்கோம்ல. அப்போ நகரத்துல போய்ப்போய்ப் பழகறோமில்லையா. ஆறு மணிக்கு மேல தான் உள்ள போனா கூட்டமா இருக்கும். கல்லூரி விட்டவுடனே, 4.30 மணிக்கு, எதிர் வெய்யில் கடுமையா இருக்கும். அஞ்சு மணிக்குப் போனோம்னா, ரீகல் தியேட்டர்ல அப்படியே நடந்து போனா, மீனாட்சி கோயில் பின் பக்கம், நேதாஜி சிலை இருக்கும். அங்க பழைய புத்தகக் கடையெல்லாம் இருக்கும். எக்கச்சக்கமா புத்தகம் கிடக்கும். கணையாழிப் பத்திரிக்கை, பழைய பத்திரிக்கை, 1983ல வந்த நாலைஞ்சு புத்தகம் கிடந்தது. கிடந்தத எடுக்கிறேன். எடுத்தா, அதில மோக முள்ளினுடைய தொடர், 83வது வாரம் இருக்கக்கூடிய அந்த புத்தகம் இருக்கு- 83வது வாரம்தான் சிக்கலுக்குரிய தொடர். அதுல க.நா.சு. எழுதியிருந்தார். தமிழில் மிகச்சிறந்த நாவல்கள், இந்தியாவில் மிகச்சிறந்த நாவல்கள், உலகில் மிகச்சிறந்த நாவல்கள். தமிழில் மிகச்சிறந்த நாவல்கள் அதில் இருந்தது. அதில ‘ஒரு புளிய மரத்தின் கதை’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘தலைமுறைகள்’, ‘கடல்புரத்தில்’, ‘தலைகீழ் விகிதங்கள்’, இத மாதிரி பத்து இருந்தது. இந்த லிஸ்ட் பார்த்தவுடனே, இதைத் தேடிப் படிக்கணுமே- அந்த இடத்துக்குப் போறேன்.

எனக்கு க.நா.சு. ஒரு கைடென்ஸ் தான். மூணு புத்தகங்கள் செட்டாக் கிடந்தது இல்லீங்களா, இந்திய நாவல்கள், உலக நாவல்கள் இருந்துச்சு. வாசகர்களுக்குப் பிடித்த பத்து பத்து போட்டிருந்தாங்க. இதை தேர்ந்தெடுத்து அத்தனையும் படிச்சேன். தேடித்தேடி எப்படியாவது படிச்சேன். ப.சிங்காரத்தினுடைய ‘புயலிலே ஒரு தோணி’க்காக, இங்கிருந்து சென்னைக்கு போயி, திலீப் குமார் வீட்டுக்கெல்லாம் போனேன். மந்தவெளிங்களா?

தியாகு: ராமக்கிருஷ்ணா மடத்துக்குப் பக்கத்துல, மாடில.

வேணுகோபால்: அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். ‘ஒரே ஒரு பிரதிதான் இருந்துச்சு. வித்துப் போச்சே’ன்னார்.

அன்பழகன்: ப.சிங்காரம் மதுரைல தினத்தந்திலதான் வேலை பார்த்துட்டிருந்தார். நீங்க அங்கேயே பார்த்திருக்கலாம்.

வேணுகோபால்: எனக்குத் தெரியாதில்லீங்களா. க.நா.சு., எனக்கு, ஒரு உரையாடலை நிகழ்த்தியதற்கு, இன்னொரு இடத்துக்கு தாண்டினதற்கு, ஒருவகையான இலக்கிய முன்னெடுப்புக்கு, நான் க.நா.சு.வைத்தான் சொல்வேன். அந்த கணையாழியைக் கண்டெடுத்தேன். அதைத் தொடர்ந்து படிச்சேன். இன்னும் நகரும் போது, சி.மோகனுடைய கட்டுரை புது யுகம் பிறக்கிறதுல கிடைச்சது.

நான் எம்.ஃபில்ல சுந்தர ராமசாமியின் திறனாய்வு பற்றி திறனாய்வு எடுத்திருந்தேன். அப்போ சுந்தர ராமசாமியின் கட்டுரைகள்னு, 8 கட்டுரைகள் ஒரு சின்ன புஸ்தகமா க்ரியா போட்டது. ஆனா ஒரு ஆய்வாளனுக்கு அது பத்தாது. நிறையக் கட்டுரைகள் எழுதியிருந்தார். கட்டுரைகளைத் தொகுக்கலை. வெவ்வேறு சிற்றிதழ்கள்லதான் இருந்தது, என்னுடைய கைடுக்கும் அவ்வளவு தெரியாது. தி.சு.நடராஜன்தான். அவர் ஒரு முக்கியமான ரைட்டர்னு சொல்லியிருக்காரே தவிர, இன்னின்ன இடத்துல எழுதியிருக்கார்னு தெரியல. ஆனா பாலசுந்தரம் என்கிற பேராசிரியர் வீட்ல சிற்றதழ்கள் இருக்குனு சொன்னாங்க. அவர் வீட்டுக்கு, மீனாட்சிநகர், தெற்கு வாசல் தாண்டிப் போகணும். வீட்டைக் கண்டுபிடிச்சு அவர்கிட்ட அந்த புத்தகத்தை வாங்கினேன். ‘புது யுகம் பிறக்கிறது’ கிடைச்சது. அதுல சுந்தர ராமசாமி, நாவல் பற்றிய சில கட்டுரைகள் எல்லாம் எழுதியிருக்கார். அதுல, சி.மோகன், ‘நாவல் கலையும் அதன் அவசியமும்’ என்ற கட்டுரை எழுதியிருந்தார். 1987ல வந்த கட்டுரை. நான் 90லதான் அந்த இதழ் வாங்கினேன். அதில தமிழில் சிறந்த நாவல் இல்லைனு போட்டிருப்பார். தமிழில் சிறந்த நாவல்னு மூணு – ‘மோக முள்’, ‘புயலிலே ஒரு தோணி’, சம்பத்தினுடைய ‘இடைவெளி’. அதற்கடுத்து நல்ல நாவல்கள்னு ‘பொய்த்தேவு’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, இந்த மாதிரி ஒரு பத்து. குறிப்பிடத்தக்க நாவல்கள்னு ஒரு 28. இந்த லிஸ்ட் கிடைச்சது. இதெல்லாம் தேடி நான் படிச்சேன். க.நா.சுவுக்கு அப்புறம் சி.மோகனுடைய அந்தப் பட்டியல் எனக்கு உதவிகரமா இருந்தது.

நான் படிக்கும்போதே, ஜெயகாந்தன், ஜானகிராமன், கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமினு இப்படி போய்ட்டேன். இப்போ என்ன ஆயிடுச்சுன்னா, கோவி மணிசேகரனோ, அகிலன் ‘சித்திரப் பாவை’யோ படிக்க என்னால முடியல. அகிலனுடைய ‘வேங்கையின் மைந்தன்’ படிச்சேன். படிச்சுட்டு என்னால ஒட்ட முடியல. எனக்கு ஈர்க்கலை. கல்கியின் சில சிறுகதைகள் மட்டும் படிச்சேன். ஒரு எடிட்டர் தேவையிருக்குனு நான் சொன்னேனில்லையே – கல்கிக்கு ஒரு எடிட்டர் கண்டிப்பா தேவை. குழந்தைத்தனமான சில பிழைகள் எல்லாம் இருக்கும். படைப்புரீதியான பிழைகள் இருக்கும். ஏன் படைப்புரீதியா பிழைகளே இருக்கக்கூடாதுன்னா – ஒரு குழந்தை முழுக்க ஒரு ஜீவ துடிப்பா இருக்கில்லீங்களா, அதிலே நமக்குத் தேவையில்லா ஒன்னு ஒட்டிட்டு இருந்தா நமக்கு எப்படியிருக்கும். அது குழந்தைக்குச் சம்பந்தமில்லை. அது மாதிரி, ஒரு படைப்புக்குள் ஒரு சின்னப் பொய்யை எழுதினீங்கன்னா, அந்தப் பொய் அற்புதமான கதையைப் போட்டுக் குலைச்சுடும். கீழே கொண்டு போய்விடும்.

தியாகு: தற்கால இலக்கியத்தில எழுதறவங்க இதை கவனிக்கிறதே இல்லை. சர்வசாதாரணமா பிழைகளை மலிந்து கொட்டிடறாங்களே?

வேணுகோபால்: அந்தப் பிழைகள்னாலே, அது சொல்ல வந்த அற்புதமான இடம் இருக்கில்லையா, அது தாவவே தாவாது. அந்த இடத்துக்குப் போகவே முடியாது. ஏன்னா, ஒரு வாசகனை நம்ப வைக்காத ஒரு படைப்பு மிகப்பெரிய தோல்வியுற்ற படைப்பு. மகத்தான கலைஞனாக்கூட இருக்கலாம். வாசகனை நம்பவைக்காத, வாசகனுடைய உள்ளுணர்வைத் தொடாத ஒரு படைப்பு… எப்படித் தொடாதுன்னா – ஒரு சின்ன பையன் வந்து கேட்பான். ‘எப்படி ட்ரெய்ன் வந்து க்ராஸ் ஆகும். ஆகாதில்ல. ரோடே இல்ல, ட்ரெய்ன் எப்படி க்ராஸ் ஆகும்’னு ஒரு கேள்வி கேட்பானில்லை? இந்தக் கேள்வி எல்லாம்- ஒரு எடிட்டர் கூட தேவையில்லை. ஒரு நல்ல வாசகர்- ‘யப்பா, இத எழுதியிருக்கேன். இதை செக் பண்ணு’னு சொல்லணும்.

சுரேஷ்: படிப்பாளி எப்போ படைப்பாளி ஆகிறார்?

வேணுகோபால்: இதுக்கு முன்னாடி, என்னோட மூணு புத்தக வாசிப்பச் சொல்லிடறேன். +2 முடிச்ச நேரத்துல, non-fiction மூணு நல்ல புத்தகங்கள் படிச்சேன். ஒன்னு, கண்ணதாசனுடைய ‘வனவாசம்’. இன்னொன்னு, காந்தியினுடைய சுய சரிதை. 900 பக்கம் இருக்குமா? பி.ராமமூர்த்தியுடைய ‘ஆரிய மாயையா திராவிட மாயையா: திராவிடக் கழகத்தினுடைய தோற்றமும் இன்றைய தேய்வும்’. அது ஒரு 700 பக்கம் இருந்தது. மூன்று புத்தகங்களும் உண்மையிலேயே ரொம்ப நல்ல புத்தகங்கள்.

வனவாசத்தை நீங்க சுயசரிதைனு சொல்லாம, ஒரு நாவலா கற்பனை பண்ணிப் பாருங்க. அதைக் கண்ணதாசன் எழுதல. ஒரு கண்ணன் எழுதினார்னு வைச்சுக்குவோம். கண்ணன் திரைப்படத்துறை சார்ந்தவர் அல்ல. அதுபற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. ஆனா, அது கண்ணன் எழுதிய புத்தகம்னு கற்பனை பண்ணினீங்கனா, அதிலிருக்கக்கூடிய உண்மையிருக்கில்லீங்களா, எப்படி இவ்வளவு உண்மையை எழுதினான்னு ஆச்சரியப்படுவீங்க இல்லியா, அப்படி ஒரு ஈர்ப்பு அது மேல இருந்தது. ஒரு நாவல் இவ்வளவு உண்மையைப் பேசணும்னு நான் நினைச்சேன். எப்படி நினைச்சேன்னா, ஒரு சுயசரிதை அளவு, ஒரு நாவல் ஒரு உண்மையைப் பேசணும்னு நினைச்சேன். இவனைவிடச் சிறப்பான உண்மையைச் சொல்லணும்னு நான் எடுத்துகிட்டேன். அதுவே உண்மையான ஒரு சுயசரிதை. இதைவிடச் சிறப்பான ஒரு உண்மையச் சொல்லணும்.

காந்தியுடைய சுயசரிதைக்கு வாங்க. அதில கடைசி அத்தியாயம் இருக்கே. விடைபெற்றுக்கொள்கிறேன்னு இருக்கும். அது படிச்சபிறகு இரவெல்லாம் அழுதேன் நான் – ஏன் இப்படி முடியுது அப்படின்னு சொல்லி. 18 வயசுங்க. ஏன்னா அவ்வளவு நேசிச்சு நேசிச்சுப் படிச்சேன். உதாரணமா, ஆப்ரிக்காவில இருக்கும் போது ஒரு பெண்மணி, ‘நீங்க கிறிஸ்தவத்துல சேருங்க,’ அப்படிம்பா. ‘எனக்கு கிறிஸ்தவத்தினுடைய கொள்கை பிடிக்குது. என்னுடைய ஆன்மா மாற முடியாது’னு சொல்லியிருப்பார். அந்தப் பெண் இவர் மேல அவ்வளவு அன்பா இருப்பாங்க. இவர் திரும்பத்திரும்ப அந்த விஷயத்தைச் சொல்லிட்டே இருப்பார். அந்த கடைசி சேப்டர்ல என்ன எழுதியிருப்பார்னா, ‘என்னுடைய அரசியல் வாழ்க்கை, இதுவரைக்குந்தான் அறியப்படாத வாழ்க்கை. இனிமேல் திறந்த புத்தகம்.’ திறந்த புத்தகமா இருக்கு, எல்லோருக்கும் தெரிந்த வாழ்க்கையா இருக்கு, அதனால எழுதலை அப்படின்னு முடிப்பார். பின்னாடி, ‘இல்லை, அதுல பல அரசியல் இருக்குது, அதனால எழுதல போலன்’னு நானா நினைச்சது உண்டு. ஏன் அப்படி நினைச்சேன்னா, நேதாஜி மேல இருந்த பற்றுனால அப்படி நினைச்சேன். பட்டாபி சீதாராமையாவை நிப்பாட்டுவார். பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வினு சொல்றாரில்லையா. அந்த நேரத்தில, ஒரு மாபெரும் வீரனை எதிர்த்து இவர ஏன் நிப்பாட்டணும்? அவர் மீது இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பற்றுதல். அந்த மாதிரி எதிர்நிலையெல்லாம் பின்னாடி தோணுச்சு. ஆனாலும், அதுக்கு முன்னாடி, சுயசரிதை ரொம்ப ரொம்ப என்னைப் பாதிச்சது. அப்ப என்ன நினைச்சேன்னா, காந்தியை விட, கண்ணதாசனைவிட ஒரு நாவலில் உண்மை சார்ந்து எழுதணும். ஒரு நாவலில் சுயசரிதை தாண்டிய ஒரு உண்மையை நாடணும்னு நினைச்சேன். இது என்னுடைய வாசிப்பிலிருந்து நான் உண்டாக்கிக்கொண்டது.

அதற்கு அப்புறம் பத்து வருசம் கழிச்சுத்தான் நான் எழுதறேன். இது 18 வயசுல படிக்கிறது – இந்த மூன்று புத்தகம். படிச்சுட்டு, பி.ஏ., எம்.ஏ. எம்.ஃபில்., எல்லாம் முடிச்சுட்டு, ஒரு வருஷம் ஒரு ஸ்கூலுக்குப் போறேன். கல்லூரி முடிக்கிற வரைக்கும் நாம எதுவும் ஒரு பெரிய அளவில எழுதலை. +2 முடிக்கும்போது மட்டும் ஒரே ஒரு கதை எழுதினேன். ப்ராக்டிக்கல் நோட்டில. ஒரு விவசாயக் குடும்பத்துல, ஒரு தலித் பையன் அந்த விவசாயக் குடும்பம் சார்ந்த ஒரு பெண்ணைக் காதலிச்சுடறான். இது வெளிய தெரிய வருது. அவனை என்ன பண்றாங்கன்னா, அந்தக் கொட்டத்துல அடிச்சு தூக்கிலிட்டுக் கொன்னுர்றாங்க. இப்படி என் முதல் கதையை எழுதியிருக்கேன்.

சுரேஷ்: ரொம்ப propheticஆ இருக்குன்னு சொல்லலாமோ.

வேணுகோபால்: ஆமா, 16-17 வயசில இதுதான் நான் எழுதின முதல் கதை. அந்த நோட்டே கிடைக்கிலை. இதுக்கு அப்புறம் எம்.ஃபில் முடிக்கிற வரைக்கும் ஒன்னும் கதைகளெல்லாம் எழுதலை. கவிதை கிறுக்கிப் பார்த்தேனே தவிர எதுவுமே எழுதலை. வாசிப்புக் கடுமையா இருந்தது. எப்ப நான் அமெரிக்கன் காலேஜ் நுழைஞ்சனோ அப்போதிருந்து, எம்.ஃபில் முடிக்கிற வரைக்கும் தேடித்தேடிப் படிச்சேன். சிறுகதைகளும் நாவலும் தேடித்தேடிப் படிச்சேன். படிச்ச பின்னாடி, கொடைக்கானல்லே, ஒரு ஸ்கூலுக்கு தமிழ் டீச்சராப் போனேன். ஒரே ஒரு வருஷம். அந்த ஸ்கூல்ல ஒரு பெரிய வேடிக்கை. தூங்குவது தவிர்த்து எல்லா நேரமும் குழந்தைகளுக்காக நீங்க இருந்துகொண்டே இருக்கணும். காலைல நாலு மணிக்கு எந்திரிச்சிட்டீங்கன்னா, 4 டூ 7 அந்தக் குளிர்லே ஸ்வெட்டர் போட்டுட்டு வரும் அந்தக் குழந்தைகளெல்லாம். அங்க போய், காலை ஸ்டடி நடக்கும். ஹாஸ்டல்ல. மறுபடி சாப்பிட்டுவந்து இரவு 8 மணில இருந்து 10 மணிவரைக்கும் நடக்கும். அப்பொ தொடர்ந்து அவங்களைக் கண்காணிச்சுகிட்டே இருக்கணும். விளையாடும்போது இந்த க்ளாசுக்கு நம்ம டீச்சரா இருப்போம். ஞாயிறன்று ஏதாவது கடைக்குப் போனாங்கன்னா கூடப்போகணும். எல்லாமே இருக்கும். தூங்குவது தவிர்த்து இது நடந்துகிட்டுருக்கும். அப்ப எனக்கு ஒரு பயம். ‘நாம ஒரு பெரிய ரைட்டர் இல்லையா. ரைட்டராகத்தானே பிறந்தோம். இதென்ன இந்த வேலை பண்றோம், இது ஆகாதுடான்’னு சொல்லிட்டு வந்துட்டேன். தோட்டத்தையெல்லாம் பாகம் பிரிச்சாச்சு. என்னுடைய இரண்டாவது அண்ணா கல்யாணம் பண்ணின உடனே பாகம் பிரிச்சாச்சு. எனக்கான சொத்துகள் எங்க அம்மா பார்த்துகிட்டிருந்தாங்க. வேலையின் பொருட்டு எங்க ஒரு அண்ணன் கிட்ட ஒப்படைச்சுட்டுப் போயிருந்தேன்- ஒரு வருஷத்தோட முடிச்சுட்டு திரும்பி வந்துட்டேன். திரும்பி வந்தா, அண்ணங்க வெள்ளாமை வைச்சுருக்காங்க. அப்போ என்ன பண்ணமுடியும்? நான் வெள்ளாமை பார்க்கிறேன்னு சொல்ல முடியாது. நான் பாட்டுக்கு அந்த அண்ணன் வீட்ல, இந்த அண்ணன் வீட்ல சாப்பிட்டு, சும்மா இருக்கேன். அந்த சமயத்துல ஒரு அறிவிப்பு. தினமணி அப்ப எங்க வீட்ல வாங்கிப் போட்டுட்டு இருந்தோம். சுஜாதா ரிட்டையர் ஆகி இங்க வந்துட்டார். குமுதத்துக்கு ஆசிரியாரா வர்றார். அப்போ அவருக்கும் ஒரு ஆசை இருக்கு. கணையாழியுடைய கடைசி பக்கங்கள் படிச்சீங்கன்னா, அதுல வரக்கூடிய சுஜாதா வேற, குமுதம் ஆனந்த விகடன்ல வர்ற சுஜாதா வேற. ஒரு சீரியஸ் ரைட்டரத் திரும்பத்திரும்ப சொல்லிட்டிருப்பார். நைனா ராஜநாராயணனுடைய ‘கோபல்லகிராம’த்தைச் சொல்லுவார். ‘ஜேஜே சில குறிப்பு’களைச் சொல்லுவாரு. ஜி.நாகராஜனுடைய ‘நாளை மற்றுமொரு நாளே’வைச் சொல்லுவார். இதெல்லாம் முக்கியமான படைப்புகள்னு சொல்லுவார் அவரு. இவர் இங்க ஆசிரியரா வரும்போது ஒரு நல்ல காரியம் பண்றாரு. நல்ல இலக்கியத்தை வளர்க்கலாம்னு. முக்கியமான எழுத்தாளர்கள்கிட்ட- உதாரணமா வண்ணதாசன், வண்ணநிலவன்கிட்டயெல்லாம் கவிதைகளும் கதைகளும் வாங்கிப் போட்டுட்டே இருந்தார். அதோட, ஏன் குமுதத்துக்கு ஒரு கெட்ட பேர் இருக்கு. இலக்கியத்தை வளர்க்காத பத்திரிக்கை. இதுல சுஜாதா இருக்கணுமா, அப்படினு ஒரு எண்ணம் இருந்நிருக்கலாம். இதை ஒரு நல்ல இடத்துக்கு எடுத்துட்டுப் போகணும்னு உண்மையிலேயே அவர் நினைச்சிருக்கலாம். அந்த நேரத்திலே ஒரு போட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணி, ஒரு போட்டி வைக்கறாங்க. ஒரு நாவல் எழுதி வெற்றியடைஞ்சீங்கன்னா நீங்க அமெரிக்கா போகலாம். ஒரு குறுநாவல் எழுதினா லண்டன் போகலாம். ஒரு சிறுகதை எழுதினா மலேசியா போகலாம். ஒரு கவிதை எழுதினா கோலாலம்பூர் போகலாம். இந்த மாதிரி ஒரு திட்டம். ஏர் இந்தியாவோட சேர்ந்து. வீட்ல தினமணி வாங்கும்போது நான் இந்த விளம்பரத்தைப் பார்த்தேன். இத மாதிரி குமுதத்திலே ஒரு போட்டி வைச்சிருங்காங்கன்னு. இங்கிருந்து சார், ஆறு கிலோமீட்டர், அப்போ எங்க ஊருக்கு, 2000லதான் பஸ்ஸே வந்தது. சைக்கிள்லதான் போடிக்குப் போகணும். இல்லைனா நடந்து போகணும். இங்கிருந்து நடந்து போனேன். வாங்கறதுக்கு வெட்கம். ஏன்னா, போட்டில கலந்துக்கப் போறோமில்லையா. பத்திரக்கை விற்கறதுக்குன்னு ஒரு கடை இருக்கும் பஸ் ஸ்டாப்ல. அங்க இரண்டு குமுதம் வாங்கிப் பார்த்தா இந்த விதிமுறைகள் எல்லாம் போட்டிருக்காங்க. நாவல், சிறுகதை இதமாதிரி. அப்ப என்ன பண்ணிட்டேன்னா, சரி, நாம இதிலே எறங்கிடணும்டா. ஏன்னா, வயசு இருவத்தியாறு ஆயிடுச்சில்லே. என்னவாப் பிறந்திருக்கோம்னு ஒரு இது பண்ணனும் இல்லையா. அப்படின்னு சொல்லிட்டு, அத வாங்கினவுடனே, வாங்கி வைத்த நாள்ல செலக்ட் பண்றேன். கவிதை எழுதலாமா, சிறுகதை எழுதலாமா, குறுநாவல் எழுதலாமா, நாவல் எழுதலாமா- அப்படிங்கிற மாதிரித்தான் பார்த்தேன். அமெரிக்கான்னா ஒரு பெரிய மோகம் இருக்கில்லையா- போறதே போறோம், அமெரிக்காவுக்குப் போவோம், அப்படின்னு தோனிச்சு. ஊர் உலகத்துக்கு அமெரிக்கா போறோம்கிறது ஒரு பெரிய விஷயம் இல்லையா. முன்னாடி லண்டன்னா பெரிய விஷயம். பட்டிக்காடா பட்டணமால சிவாஜி சொல்வாரில்லையா, ‘லண்டன் லண்டன் என் ஜிஞ்சுனாக்கிடி’ன்னு. இப்ப அமெரிக்காங்கிறதுல ஒரு உற்சாகமிருக்கில்லீங்களா. நாவல்ங்கிறத நானா மனசுக்குள்ள செலக்ட் பண்ணிகிட்டு, மறுநாள் உட்கார்ந்து எழுதறேன். ஏன்னா கல்லூரி, ஸ்கூலையும் விட்டாச்சு. விவசாயமும் அண்ணன்கிட்ட வெள்ளாமை இருக்குது. சாப்பாடு அம்மா சமைச்சுப் போட்டுறுவாங்க. கேட்டா வேலைவாய்ப்பு இல்லைனு சொல்லிக்கிடலாம் இல்லையா. சொல்லிட்டு உட்கார்ந்தேன். கரெக்டா எட்டு மாசம். முதல்ல ஆறு மாசம்னு கொடுத்தாங்க. யாரோ கடிதம் போட்டிருப்பாங்க போலத் தெரியுது. நாவலுக்கு ஆறு மாசம் பத்தாது, அப்படின்னு. மீண்டும் ஒரு நாலு மாசம் தள்ளி கிட்டத்தட்ட பத்து மாசம், கணக்குக்கு அவங்க கொடுத்திருந்தாங்க. அப்ப நாவலை செலக்ட் பண்ணியாச்சு. ஆனா அதுக்கு முன்னாடி என்ன ஒரு நாவல் எழுதணும்னு நினைச்சிருந்தேன்னா, கல்லூரி சார்ந்து ஒரு நாவல் எழுதலாம்னு. வாசித்து வந்த ஒரு பையன் இருக்கானில்லீங்களா…அப்போ ஜே.ஜே.சில குறிப்புகள் படித்து அதன் மீது மிகப்பெரிய மயக்கங்களோடு இருந்த ஒரு காலம். அதனால அதுமாதிரி ஒரு நாவல் எழுதணும்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இந்த போட்டி வந்தவுடனே, நாம் வாழ்ந்த நமக்கு அனுபவமான ஒரு உலகத்திலிருந்து ஏன் எழுதக்கூடாதுனு சொல்லிட்டு, பூர்விகமா, கர்நாடகத்திலிருந்து, இஸ்லாமியர்களுடைய தாக்குதலினால், ஐநூறு வருஷத்துக்கு முன்பு, அங்கிருந்து தப்பித்து வந்து இந்தத் தமிழ் மண்ணில் கால்வைத்து, இங்கே தங்களுடைய உழைப்பின் மூலமாக, அல்லது இங்கு உருண்டு, இந்த பூமியோடு விவசாயம் பண்ணி, பூமியைச் சீர்திருத்தி, இந்த பூமியிலிருந்து வளர்ந்து, மண்ணோட மனிதனா அவன் மாறின இந்த உலகம் இருக்கில்லீங்களா, இதை ஏன் நம்ம எழுதக்கூடாது, அப்படின்னு ஒரு கணம் தோன்றின உடனே, எனக்குத் தெரிந்த என்னுடைய பின்புலம் சார்ந்த ஒரு நாவல் எழுதலாம்னுதான் அதை எழுதினேன். ஆனால் எழுதறதுக்கு முன்னாடியே சில கனவுகள் எல்லாம் இருந்தது. என்ன இருந்ததுன்னா, ஒரு நாவல் என்பது, ஒரு சிறுகதை என்பது இன்னொரு மொழியிலே மொழிபெயர்க்கவே முடியாத அளவு அதனுடைய ஆற்றல் அதிலே தங்கி இருக்கணும். அதாவது ஒரு நாவல் இன்னொரு மொழியிலே எளிமையா மொழிபெயர்க்கக்கூடிய விஷயம் அல்ல. மொழிபெயர்க்கவே முடியாத அளவு அந்த பண்பாட்டினுடைய இழைகளோடு பின்னியிருக்க வேண்டும். அப்படினு நான் நினைச்சேன். அப்படி நினைச்சுட்டு அந்த நாவலைத் தொடங்கினேன். அதிலே எடுத்தவுடனே இப்படி ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன். ‘அறுதாள் அறுத்துப் பட்டேரி போட்டும் போடாமலும் இருக்கக்கூடிய நெல்வயல்கிளிடையே குதிரைகள் துரத்தி வந்தன’- அப்படினு இருக்கும்.

நான் என்ன எழுதப்போறேன்னே தெரியலை. ரொம்பத் தோராயமாகக்கூட தெரியலை. இந்த பின்புலத்திலே எழுத வேண்டும்னு மட்டும் எனக்குத் தெரிஞ்சது. நான் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து. ஆனா எழுத எழுத ஊற்று மாதிரி, அங்கங்கே குத்தினா எப்படித் தண்ணீர் பீரீட்டு வருமோ, தன்னைத்தானே நகர்த்திக் கொண்டு போச்சு. அதிலே ஒன்னேஒன்னு, எனக்குக் கைகொடுத்தத்து என்னன்னா, ஒரு சின்ன கர்ண பரம்பரைக் கதை நம்மளைத் தள்ளிவிட்டுச்சு. தள்ளினவுடனே சில வண்டிவந்து ஸ்டார்ட் ஆகி அதுபாட்டுக்கு ஓடிடுமில்ல, அந்த மாதிரி. அப்படித்தான் அந்த நாவலை எழுதினேன். அந்த நாவல் மனசு தவிர வேறு எதுவமேயில்லை. அதுவாகவே நான் இருந்தேன் அந்த எட்டு மாசமும். அப்போ ஒரு வெட்கம் வேற…யாருக்கும் தெரியக்கூடாதுங்கிறதுக்காக. எல்லாரும் தூங்கினதுக்கு பின்னாடி எழுத ஆரம்பிச்சேன். ‘எதுக்கு இவன் ஸ்கூலுக்குப் போகாம நல்ல வாய்ப்பைக் கெடுத்துட்டு இருக்கான்’னு எங்க அம்மா சொல்வாங்கன்னு சொல்லிட்டு, பத்து மணிக்கு மேல, விடியக்காலை அஞ்சு மணி வரைக்கும், இரவு நேரத்துலதான் அதிகமா எழுதினேன். என்னுடைய நண்பன் வைரமணின்னு, அவன் என்ன பண்ணுவான்னா, போடிக்கு ஒரு ட்ராக்டர் ட்ரைவரா இருந்தான். இங்கிருந்து போகும்போது, ஒரு அஞ்சு ரூபாய்க்கு பத்து ரூபாய்க்கு நூறு பேப்பரு, அம்பது பேப்பரு இப்படி வாங்கிட்டு வந்து தருவான். அந்த நாவல் அவனுக்குத்தான் சமர்ப்பனம் பண்ணினேன். ஏன்னா, அவன்தான் எனக்கு எருமை மாட்டுமேல சவாரி பண்றதுக்குப் பழக்கிவிட்டது. ஆறாவது வரைக்கும் என்கூடப் படிச்சான். அவன் பேப்பர் வாங்கித்தருவான். ‘டேய் இந்த இடத்துக்கு மேய்க்கப் போறேன்டா’ன்னு அவன் என்னைக் கூப்பிட்டுப் போவான். அது மாதிரி ஒரு சின்ன உதவி. ஆனா எழுத ஆரம்பிச்சவுடனே அது தன்னைத் தானே நகர்த்திகிச்சு. டிசம்பர் 26, 28ம் தேதி முடிச்சேன். ஏன்னா, அப்பல்லாம் ஜெராக்ஸ் கடை போடியில கிடையாதுங்க. இங்கிருந்து சைக்கில்ல 16 கிலோமீட்டர் – தேனிக்கு வந்து, அப்ப ஒரு ஜெராக்ஸ் 2 ரூபாயோ ஒரு ரூபாயோ, ஜெராக்ஸ் எடுத்து, 400 பக்கத்தை எடுத்து வைச்சுட்டு, கசாமுசான்னு இருக்கும். அது ஒரு ரீரைட் கூட பண்ணலைங்க. ஒரே அமர்வுல எழுதினோமில்லையா. அதைத்திரும்பி ஒரே ஒரு முறை படியெடுத்தேன் – அதாவது இப்படி எழுதிப்போட்டத் திரும்ப கடகடன்னு ஒரு முறை எழுதினேனே தவிர, அதைத் திரும்பிப் படிச்சுப்பார்க்கலை. அப்படியே ஒரு பெரிய பார்சல்ல போட்டு, 28ம் தேதி அனுப்பினேன். ஆனா, என்ன சொல்றது, அந்த ரஜினி பாட்டு மாதிரி, ‘சொல்லி அடிப்பேனடி’ன்னு. என் நண்பர்கள்கிட்ட மட்டும் சொன்னேன். கரணைக்குத் தண்ணி பாய்ச்சிட்டிருந்தான், பழனிச்சாமின்னு, அவன்கிட்டப் போய் சொன்னேன்: ‘மச்சான், நான் அமெரிக்கா போகப்போறேன்’, அப்படின்னு. ‘என்னடா, சொல்றே,’ அப்படின்னான். ‘அமெரிக்கா போறேன்டா’ன்னேன். அப்படிச் சொன்னேன் நான். எப்ப சொன்னேன்னா, அந்த அறிவிப்பு வந்த நாள்ல சொன்னேன்.

94 முடிஞ்சுச்சு. 95 மே, ஜூன் வாக்கிலே ஒரு கடிதம் – கணினிலதான் தட்டச்சுப் பண்ணி, சுஜாதா அனுப்பியிருக்கார். மதிய நேரம் தண்ணி பாய்ச்சிட்டு வர்றேன். எங்க அம்மா முனங்குது, ‘இவன் என்ன இவன், இப்படியே ஊரைச் சுத்திகிட்டு இருக்கான்.’ எங்க அம்மா சாப்பாடு போட்டிருக்குது, நான் சாப்பிடலாம்னு உட்கார்றேன். ஒன்றரைக்குத்தான் கிராமங்களிலே தபால் வரும். அவன் கொண்டுவந்தவுடனே, பார்த்தவுடன கண்டுபிடிச்சுட்டேன். குமுதத்தில இருந்து வந்திருக்கு. உடைச்சுப்பார்த்தா அதில இருக்கு, ‘உங்களுடைய நாவல் முதல் இடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.’ உடனே கிளம்பி சென்னைக்கு வரணும். கன்ஃபர்ம் பண்ணியாச்சு. நாசூக்கா- பிரஸ்ல ஏதாவது சிக்கல் வருமில்லையா…இன்ன நாள் வாங்கன்னு சொல்லியிருந்தாங்க. அப்ப, கைல சாப்பிட்ட சாப்பாடோட, எங்க அம்மாகிட்ட, (விரலைச் சுண்டி) ‘அம்மா, உம் மகம்மா, அமெரிக்கா போறாம்மா. பாருமா,’னு உற்சாகத்துல சொன்னேன். அதுக்கு ஒன்னும் விளங்கலை. ‘எது இவன் அமெரிக்காங்கிறான். அது என்னங்கிறான்.’ அப்படித்தான் விளங்காம முகச்சுழிப்போட சிரிக்குது. பிறகு அங்க போனேன். என்னைப் பார்த்ததும் சுஜாதா என்ன சொன்னாரன்னா, ‘இவ்வளவு சின்னப்பையனா இருக்கியே, நான் 45 வயது கடந்தவர் இந்த நாவலை எழுதியிருப்பாருன்னு நெனச்சேன்,’ அப்படின்னார். சுஜாதாகிட்ட நேரடியாக் கேட்கும்போது, இதில் பல்வேறு பாத்திரங்கள் இருக்கு – இப்ப தலைகீழ் விகிதங்கள்னா ரெண்டு கேரக்டர். அதை நோக்கிப் போகும். இது பன்மைத்துவமான நாவல். பல்வேறு விஷயம். கலாச்சாரத்தைப் பற்றிப் பேசும். ஒரு கொலையைப் பற்றிப் பேசும். பல கேரக்டரைப் பற்றிப் பேசும். ஒரு லவ்வைப் பற்றிப் பேசும். உழவைப் பற்றிப் பேசும். தொன்மத்தப் பற்றிப் பேசும். வாழ்க்கையிலிருந்து பல்வேறு விஷயங்களோடு அது இருந்ததனால, அவர் என்ன சொன்னார்னா, 27 வாரங்கள் கதையம்சத்தோடு தொடரா வர்றமாதிரி போட்டுக்கிடலாம்னு சொன்னார். சரின்னு வந்துட்டேன். விகடன்ல இருந்து பேட்டிக்கு வந்தாங்க.

சுரேஷ்: குமுதத்தில வெளியே அறிவிச்சுட்டாங்களா?

வேணுகோபால்: அறிவிப்பு வந்தாச்சு. நான் மெட்றாஸ் போயிட்டு வந்தாச்சு. பிறகு பல்வேறு காரணங்களால குமுதத்தில அது தொடரா வரலை. ஆனா, அமெரிக்கா போயிட்டு வந்தேன். அப்புறம் பாவைச் சந்திரனுடைய புதிய பார்வைனு ஒரு இதழ் வந்திச்சு இல்லீங்களா, ரவின்னு இப்ப சினிமாவுல இருக்கார் – என்னுடைய நண்பர் – அவர் அனுப்பி, அதுல தொடராப் போடறேன்னு சொன்னார். நான் என்ன நினைச்சேன்னா, முதல்லியே ஆறு மாசம், எட்டு மாசம் சும்மா இருந்தது. ஒரு புத்தகமாக் கொண்டு வரலாமேன்னு சொன்னேன். அவரும் ‘அதுவும் நல்லதுதான்’னார். அதுவும் கொஞ்சம் தள்ளித்தள்ளிப் போய் இரண்டு வருசம் கழிச்சுத்தான் வந்தது.

சுரேஷ்: ஆனா அதுக்கு முன்னால சிறுகதைகளோ எதுவுமே எழுதல? முதல்ல எழுதினதே நாவல்தான். ஜாக்பாட்தான். சொல்லி அடிச்சிருக்கீங்க. வடிவம் சார்ந்து யார்கிட்டியாவது கலந்துகிட்டீங்களா.

வேணுகோபால்: வடிவம் சார்ந்து என்ன விஷயம்னா, ஒன்னு, வாசிப்பு. வாசிப்புத் தன்னை தானே ஒரு வடிவத்தைக் கண்டடையும். இப்ப, அம்மா வந்தாள்க்கு ஒரு வடிவம் இருக்கா, இல்லையா? பையன் அங்கிருந்து கிளம்பி வர்றான், பல்வேறு விசயத்தைச் சந்திக்கிறான். திரும்பிப் போறாங்கிறது ஒரு வடிவம் இருக்கில்லீங்களா. இதுக்குள்ளே அவனுடைய ஒட்டுமொத்த உலகத்தை, அம்மாவைப் பற்றிய சித்திரங்கள், தண்டபாணி பற்றிய சித்திரங்கள், சிவசு பற்றிய சித்திரங்கள், அக்கா ஏன் வராம இருக்காங்க, இந்து ஏன் இதை இத்தனை நாள் சொல்லலை, எப்படி இந்த விஷயம் இந்துவுக்குத் தெரிஞ்சுது, இத்தனை இருக்கில்லீங்களா. இத்தனையும் ஒரு ட்ராவல்ல வந்து முடிக்கிறார் இல்ல? இந்தக் கண்டுல இந்த நூலைக் கரெக்டா சுற்றியிருக்காரில்ல. படிக்கும்போது, ஒரு வடிவத்துக்காகப் படிக்கிறதவிட, ஒரு நாவலை வாசித்து வாசித்து அதனுடைய வடிவத்தை நீங்க கண்டடையறது ஒரு நல்ல விஷயம் தான். இப்ப நம்ம பாடத்திட்டத்தில இருந்ததில்லீங்களா, தலைமுறைகள் நான் படிச்சேன். அது கிட்டத்தட்ட ஒரு இனக்குழு சார்ந்த நாவல். நைனாவுடைய கோபல்ல கிராமம் படிச்சேன். அதில் வேறொரு விதமான கதைசொல்லல் – அடுக்கடுக்கா இருக்கும். வெவ்வேறு தலைமுறைகளுடைய அடுக்குகள் அதிலிருக்கும். அதில் ஒரு தோற்றம் இருக்கும். காலைச் சூரியன் உதிக்கறதில் இருந்து ஆரம்பிச்சு, நாவல் முடியறபோது, அந்த செவ்வானம் மறைந்து மடியற மாதிரி முடியும். தற்செயலா அவர் இதப் பண்ணியிருக்கார். காலைல சூரியன் எழுறதுக்கு முன்னமே, உழவடைக்குப் போவாங்க, உழுகப் போவாங்கன்னு ஆரம்பிக்கும். ஆனா அது ஒரு சின்ன மையமான ஒரு புள்ளிதான். அந்த நாவலுடைய மையமான இடம், அவன் திருடிட்டான் – தங்கத்துக்காக ஆசைப்பட்டு, தண்ணிக்குள்ள வைச்சு கொன்னுட்டான். இவனுக்குத் தண்டனை. இதுதான இருக்கு. இதை வைத்துக்கொண்டு என்ன பண்றார், முழுக்கமுழுக்க ஒரு பூர்விக வரலாறைச் சொல்றார். அப்ப இந்த வாசிப்பில இருந்து, நானா ஒரு வடிவத்தைக் கண்டடைஞ்சிருக்கேன். இதுக்கு ஒரு வடிவத்தை நான் எப்படிக் கண்டடைஞ்சிருக்கலாம்னா, எடுத்த உடனே ஒரு mythஐத்தான் ஆரம்பிச்சேன். எப்படி மித்துனா, இவனுக்குக் கனவிலிருந்து விழிக்கிறதுக்கு முன்னாடி, கனவுல வர்றதுதான் நாவலுடைய தொடக்கம். ஒரு பத்து பக்கம். வாசிப்பவனுக்கு ஒரு இடறலா இருக்கும். என்னடா இது, ஒரு கனவுத் தன்மையா இருக்கேன்னு. ஆனா ஒரு பத்தாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு அவன் பாட்டிதாத்தா சொன்ன விஷயங்கள் வெவ்வேறு ரூபங்களா வந்திருக்குங்கிறது வாசகன் பிடிச்சுக்கிடலாம். இவனுடைய காலம், இவன் இங்கிருந்து, வளர்ந்து, கல்லூரி போகக்கூடிய அந்தக் காலத்துக்குள், இரண்டு மூன்றாண்டு ஆண்டுகள் நடக்கக்கூடிய விசயங்களை, ஒரு மிகப்பெரிய நோயிலிருந்து மீண்டு போறது, இதுக்குள்ள ஒரு மிகப்பெரிய குடும்பத்தினுடைய சரிவு, விவசாயத்தினுடைய சரிவு, ஏற்றம் இறக்கம், குடும்பத்துக்குள்ள வெவ்வேறு பெண்களுடைய ஓலங்கள், இதெல்லாமே இந்தக் காலத்துக்குள்ளே தன்னாலே முடிஞ்சிருச்சு. இப்படி ஆரம்பிச்சு அவன் கிராமத்தை விட்டு நகர்ந்து போற அளவிலே, எல்லாம் இழந்து, அந்த கிராமத்தைவிட்டு – அப்பயும் பாருங்க, கோயமுத்தூர்னுதான் எழுதியிருந்தேன் 🙂

கோயமுத்தூர், கணபதி போறான்னு எழுதியிருந்தேன். இப்ப, கோயமுத்தூருக்கே வந்துட்டேன். கிராமத்தைவிட்டு வெளியேறின உடனே நாவல் நின்னுறுமில்லையா, அந்த அளவு, தன்னைத்தானே ஒரு வடிவம், அது அடைஞ்சது. இது வாசிப்பினால் நான் கண்டடைந்ததுதான். அதே சமயத்தில, ஜெயமோகனுடைய நாவல்ங்கிற புத்தகம் 94ல வந்திறது. அப்போ, விவாதங்கள் நடந்தது. ஆனா, நான் 94ல நாவல் எழுதிட்டேன் – டிசம்பரோட. அது அந்த டையத்துல வந்தது. அந்த பன்மைத்தன்மைனு சொல்றோமில்லையா, ஒரு நாவல் என்பதில் வெவ்வேறு விதமான தலைமைப் பாத்திரங்கள் இருக்கலாம். ஒரு தலைமைப் பாத்திரம் இல்லை, வெவ்வேறு தலைமைப் பாத்திரங்கள் இருக்கலாம். அது தற்செயலா அதுல இருந்தது. இதற்கு கா.ந.சு.வுக்கு ஒரு நன்றி சொல்லணும். அவர் பொய்த்தேவுல அந்த மாதிரி இடங்களை – சோமுப் பண்டாரம்னு ஒரு கேரக்டர் இருக்கும், இங்கொன்னு இருக்கும். ஏன், மோக முள்ளே நீங்க வைச்சுக்கிடலாம். நாலைஞ்சு முக்கியமான பாத்திரங்கள். தங்கம்னு ஒரு பாத்திரம் இருக்கும். பாபுவோட அப்பா நல்ல ஒரு கேரக்டர். யமுனா. அம்மா. இப்படிப் பல்வேறு கேரக்டர்கள். இந்த நுண்வெளி கிரகணங்கள் நாவல் படிச்ச வாசகர்கள் இது உண்மையிலே நடந்ததுன்னு நம்புனாங்க. சுந்தர ராமசாமி சொன்னார், ‘சொந்த வாழ்க்கை நாவலாகாது’ன்னு. என்ன வேடிக்கை தெரியுமா? அப்படி அவர நம்ப வச்சேன் எழுத்தில. அந்த நாவல் என் வாழ்க்கைக்கோ என் குடும்பத்து வாழ்க்கைக்கோ துளிகூட சம்பந்தமில்ல. அனுபவத்தின் சாரம் இருந்தது. பண்பாட்டுக் கூறுகள் மட்டும்தான் உண்மை. வாழ்க்கை முழுக்கக் கற்பனை. உண்மையிலேயே சித்தய்யன்கோட்டை என்கிற ஊருல நடந்ததா உருவாக்கினேன். அதை வாசகர்கள் அப்படியே நம்பினாங்க. சௌடம்மா இருக்காங்களா? எங்க இருக்காங்க? மல்லையா பற்றி வேற குறிப்புகள் இருக்கா? சித்தய்யன்கோட்டை வீட்டப் பாக்கணும். இப்படிப் படிச்சவங்க எல்லாம் கேட்டாங்க. உண்மையில இது அத்தனையும் பாக்கணும்மன்னா எம் மனசுக்குள்ளதான் பாக்கணும். புற உலகத்தில பாக்க முடியவே முடியாது. சுந்தர ராமசாமியை இப்படித்தான் ஏமாத்தினேன். இப்படி வாசகர நம்பவச்சேன் பாருங்க – அதுதான் வடிவம். அதுதான் கலை. இந்த ரகசியத்த இப்பத்தான் முதன் முதல்ல சொல்றேன். ஏன்னா, அந்த நாவல் உண்மையிலேயே நடந்ததுன்னு வாசகர்கள் நம்பட்டும் அப்படிங்கிற ஆசை இப்பவும் இருக்குது.

சுரேஷ்: புளியமரத்தின் கதையும் அப்படித்தானே.

வேணுகோபால்: புளியமரத்தின் கதை அப்பப் படிச்சுட்டேன். அந்த பன்மைத்தன்மையோட எழுதணும்கிறத நான் நினைச்சேன். அந்த வடிவத்தையும் நான் அப்படிக் கற்பனை பண்ணினேன். நான் எழுதினப்புறம், ஜெயமோகனுடைய அந்த புத்தகம் வந்த பின்னாடி, அதோடு ஒப்பிட்டும் பார்த்தேன். அதுக்கப்புறம் – அதாவது பரிசெல்லாம் வாங்கியாச்சு – அதுக்கப்புறம் பதிப்பிக்கறதுக்கு முன்னாடி இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன சேப்டர்கள் – பத்திருபது பக்கம்கூட அதில எழுதியிருக்கலாம். அப்படியே விட்டுட்டேன்.

சுரேஷ்: பொதுவாகவே வேணுகோபாலுடைய படைப்புகளிலே, ஒரு கட்டற்ற தன்மை இருக்கே. பாசிட்டிவாகத்தான் சொல்றேன்.

வேணுகோபால்: அது ஒரு நல்ல விசயம் தான். அருண்னு சொன்னேனில்லையா. அருண்கிட்ட வசந்தகுமார் கேட்கிறார். ‘தமிழ்ல ரெண்டு ஆளுமைகள் இருக்காங்க. ஒன்னு ஜெயமோகன். இன்னொன்னு வேணுகோபால்னு சொல்லுவேன். சொல்லிட்டு – நீங்க இரண்டு பேரையும் படிச்சிருக்கீங்க இல்லையா, இவங்க இரண்டு பேருக்குள்ளும் உள்ள எழுத்தினுடைய வித்தியாசம் என்ன,’ அப்படீன்னு அவர் கேட்டார். கேட்டபோது, அவர் ஒரே ஒரு பதில் சொன்னார். ‘ஜெயமோகன் தோப்பில இருக்கிற எல்லாத் தென்னை மரத்துக்கும் ட்ரிப்பக் கரெக்டா போட்டுறுவார். வேணுகோபால் அந்தத் தோப்புக்கு மடையைத் திறந்து விடுவார்,’ அப்படின்னு ஒரு பதில் – நான் கம்முன்னு உட்கார்ந்திருந்தேன் – அருண் சொன்னார். கட்டற்ற தன்மைனு நான் என்ன நினைக்கிறேன்னா, புற உலகத்தினுடைய அத்தனை கோலங்களையும் – ஒரு மனிதன், அவனுடைய அனுபங்கள் என்பது மட்டும் அல்ல – அந்தப் புற உலகம், அவனைச் சார்ந்திருக்கக்கூடிய எல்லாவிதமான – காற்று, வெப்பம் அல்லது வறட்சி எல்லாமே இணைந்திருக்கணும்னு என் மனசு அப்படி சொல்லும். அதுனாலே கூட இருக்கலாம். அப்புறம் இன்னொன்னு, இதே விஷயத்தை நான் லா.ச.ரா.கிட்ட பார்த்திருக்கேன். ஒரு சின்ன கட்டற்ற தன்மை எப்படியிருக்குன்னா, நவீனத்துவம்ங்கிற அழகியல் இருக்கில்லீங்களா, அங்க ஒரு வடிவநேர்த்தி, அதாவது, கச்சிதம் இருக்கும். எப்படின்னா, அந்த ஒருமை. நான் சொல்லவந்த விசயம் மையமான விஷயம். அந்த மையமான விஷயத்தை நீங்க வரைந்து வரைந்து வரைந்து ..நாம ஒரு குளத்தில கல்லைப் போட்டோம்னா, ஒரே அலை அப்படிப்போய் அப்படி முடியுதில்லீங்களா, இன்னொரு அலை வரக்கூடாது. அப்படியான ஒரு வட்டத்தை அது விரிச்சுகிட்டே போகும், நவீனத்துவ அழகியல். ஆல்பர்ட் காம்யூவ சொல்லலாம். அந்நியனோ, வீழ்ச்சியோ படிச்சாலோ, காஃப்காவுடைய விசாரணையோ, உருமாற்றமோ எது படிச்சாலும் அந்த நவீனத்துவத்தினுடைய அழகியல் – பிரச்சனை, நவீனத்துவத்தினுடைய பிரச்சனை, இந்த மனிதன் ஏன் இப்படி ஈரமற்றுப் போனான். ஏன் இவ்வளவு கொடூரமா இருக்கான். அதற்கான காரணம் என்ன. ஏன் நட்பார்ந்த கருணை இல்லாமப் போச்சு. இந்த கேள்விகளோட அந்த அழகியல் இருக்கும். ஆனால், லா.ச.ரா.வுக்கு மனசே ஒரு காவிய மனம், ஒரு விஷயத்தைச் சொல்லிட்டிருக்கும்போதே, அதை மேலும் கொஞ்சம் அழகுபடுத்திச் சொல்லிடலாம்னு ஒரு எண்ணம் தோணும். இப்ப என்ன பண்ணுவார்னா, ஒரு காட்சியை சொல்லியாச்சு. குழந்தைகளோட விளையாடற காட்சி சொல்லியாச்சு. அதுக்கு அடுத்து ஒரு இரண்டு வரி எழுதுவார். என்ன எழுதுவார்னா, ஒரு பொண்ணு இருக்கா – யோகம்கிற கதையில – ஒரு மெத்தை மாதிரி மரத்தடியில செத்தை இருக்கு. அதில போய் விழுந்து புரள்றா. ஒரு 18 வயசுப் பொண்ணு. ஒருத்தன் கெடுத்து, கர்ப்பிணி ஆயிடுவா. அவர் சொல்றார், ‘சில சமயம் பெரிய மனிதர்கள் கூட குழந்தையாகி உருள வேண்டும் என்கிற ஆசை இருந்துகொண்டுதானே இருக்கிறது.’ இப்ப நம்மளே இருக்கோம்…யாருமே இல்லைனா, திடீர்னு ஒரு பாட்டு பாடறோம்னு வைச்சுகோங்களேன். ரெண்டு குதி குதிப்போம். இது இயல்பான விஷயம் தானே.

சுரேஷ்: இதைத்தான் தீம் பார்க்லயெல்லாம் நல்லா பயன்படுத்திக்கிறாங்க. மேல இருந்து விழறது அந்த மாறி விளையாட்டுக்கள் வழியா …

வேணுகோபால்: இந்த மாதிரி தன்னியல்போட அந்த இடத்துக்குள்ள போகும்போது, (கட்டற்றதன்மை) இருக்கலாம். அந்த மையப் பிரச்சனைக்கு ரொம்பத் தள்ளிப் போயிடக்கூடாது.

சுரேஷ்: சொல்லப்போனா இந்த இயல்புதான் நவீனத்துவத்தைவிட நம்ம மரபுக்கு நெருக்கமானது. விக்ரமாதித்யன் கதை, மதனகாமராஜன் கதை, மகாபாரதம் எல்லாத்திலயும் இது அதிகமா இருக்கு.

வேணுகோபால்: நம்ம தாத்தா கதை சொல்லும் போது, முக்கியமானது சொல்லிட்டிருக்கும் போது அதை விட்டுட்டு, ‘இப்படி நடந்திட்டிருக்கும் போது,‘ அதுவும் ஒரு வெத்தலையைப் போட்டுட்டு, அன்னிக்கு மழை வந்ததைச் சொல்வார். நம்மளுக்குக் கதையை அங்க கொண்டு போகணும். ‘அன்னிக்கு அப்பா, பயங்கர மழை,‘
‘தாத்தா அதைச் சொல்லு.‘
‘இரு வர்றேன்’
மழைக்கும் கதைக்குமான ஒரு தொடர்பு இருக்கும்.

அன்பழகன்: ‘மண்ணைத் தின்றவன்’னு ஒரு கதை எழுதியிருக்கீங்க. அதன் முடிவுலதான் சாதியைப் பற்றிச் சொல்றீங்க. ஆரம்பத்துல வேறு ஏதேதோ போய்கிட்டு இருக்கும். விவசாயத்துல தோல்வி அடைஞ்சது, வேலைக்கு இன்டர்வ்யூ போனது, கூடப் படிச்சவனுக்கு உதவி பண்றது…கதை முடியற இடத்தில தான் சாதி வருது. அதுதான் மையக் கருத்து.

தியாகு: ஒரே வரி. உங்க பேர் என்னன்னா, இசக்கி. இசக்கி என்ற சொல் கேட்டவுடனே மலத்தை மிதித்த மாறிச் சுருங்கினார்னு சொல்லி, அவன் தலித்ங்கிறதக் கேட்டு அவன் சுருங்கிறத சொல்லிருவிங்க – கடைசி ரெண்டு வரிதான்.

வேணுகோபால்: ஒரு படைப்பாளிக்குப் பார்வைன்னு சொல்றோமில்லீங்களா – இப்போ எல்லாருக்கும் நேரக்கூடிய ஒரு விஷயம்தான். ஒரு வெங்காயம் வைக்கிறோம். கேப்பை வைக்கிறோம். பருத்தி வைக்கிறோம். அல்லது மக்கச்சோளம் நடுறோம். நாம் வைத்த அந்த வெள்ளாமை வந்து சேரும்போது விலை வீழ்ச்சியினாலே ஒரு பெரிய சரிவு. நாம 20000 ரூபாய் போட்டிருப்போம். அதுல வர்றது 3000 தான் வரும். இவன் நாலு மாசம் பாடுபட்டிருப்பான். இவனுடைய சம்பளமும் போச்சு. அந்த 17000மும் போச்சு. அப்ப, கைக்காசையும் சேர்த்துத்தானே கணக்குப் பண்ணனும். இருபதாயிரத்தோட அவன் நான்கு மாசம் சம்பளம் – அன்னிக்கு ஒரு 5000 – நாலைஞ்சு இருபது. அப்ப நாற்பதாயிரம் நஷ்டம் வருது. இது எல்லா விவசாயிக்கும் நிகழக்கூடியது. சரி, இதைச் சொல்லிட்டீங்க. இதுக்கு மேல விவசாயத்தின் மீதான இன்னும் கூடுதலான ஒரு பரிமாணத்தைச் சொல்ல வேண்டியிருக்கில்ல. அதுதான் அந்தப் பார்வை. இதுவே ஒரு தலித் விவசாயிக்கு நடந்தா என்ன ஆயிருக்கும்கிற ஒரு கேள்வி இருக்கில்லையா? அந்த இடம் வரைக்கும் ரைட்டு – அதுக்கப்பால் இதை வைத்தோமென்றால் இதன் பரிமாணம் இன்னும் கூடும். இதுக்குத்தான் ஒரு வாசிப்பு வேணும், தொடர்ந்து விவாதம் வேணும். படைப்புபற்றிய ஒரு சிந்தனை வேணும். இந்த இடங்கள்னாலே தான் அது நிக்குது. அது மனிதனுடைய ஊனப்பட்ட, அல்லது மனிதனைக் குறுகச்செய்த இடம், எங்கேயோ குறுகச்செஞ்சிருக்கலாம். ஆனா அந்தக் குறுகச் செஞ்ச இடம், இந்த பின்னணியும் குறுகச்செய்த இடமும் இணையும் போதுதான் அதுக்கு அவ்வளவு பலமா இருக்குது. அதை மட்டும் சொல்லியிருந்தேன்னா நீங்க பொருட்படுத்துவீங்களா? ஆனா இது முழுக்க முழுக்க உடலா இருக்கு. அந்த விவசாயம் செய்ய அந்த பரப்பு இருக்கில்லீங்களா, அது முழுக்க முழுக்க ரத்தமும் சதையுமான உடல். ஆனா அதுக்குள்ள இருக்க சின்ன உயிர்தான் அந்த இடம். படைப்புக்குரிய இடம். அதுதான் அந்த மண்ணைத் தின்றவன். படைப்பாளிக்குப் பார்வை என்பது முக்கியமான விஷயம். சிறுகதை எழுதுவது கம்பி மேல வித்தைமாதிரித்தான். அந்தப் பார்வை இல்லாத போது, அது வெறுமனே கதையா இருக்கும். நிறையப் பேர் கிட்ட – இப்போ முற்போக்கு எழுத்துல பார்த்தீங்கன்னா, ஒரு பிரச்சனை இருக்கும். அது தெரிஞ்ச பிரச்சனை தான். அது தரிசனமா இல்லை. அவனை, தன்னைத்தானே கண்டடையக்கூடிய இடம் – நம்மை இப்படித்தான் இந்த உலகம் பார்க்குதா, அல்லது, அந்த அம்மணிக்கேகூட என்ன பிரச்சனையா இருக்கு. சே, இவனப் போய் இப்படி சொல்லிட்டமா? இப்போ ரெண்டு பேரும் ரெண்டு விதமா – தீமையையும் கண்டுகொள்கிறோம். நன்மை சார்ந்த ஒரு இடத்தில தீமை திணிக்கப்படுகிறதுங்கிறதையும் கண்டுகொள்கிறோம். படைப்பினுடைய வீச்சு எங்க வரும்னா அந்தப் பார்வைக்கும் ஒரு பங்களிப்பு இருக்கு. வெறுமனே பார்வை மட்டுமே படைப்பாகவும் ஆகாது.

சுரேஷ்: உங்க கதையுலகம் பரந்துபட்டதா இருக்கு. நிறையப் பிரச்சனைகள். பார்க்கிறது எல்லாமே உங்களைப் பாதிக்குது. திசையெல்லாம் நெருஞ்சி எடுத்தா அது ஒரு களம். அதிலயே உருமால்கட்டு – வேறு ஒன்று. இப்படி நான் வகுத்துக்கிறேன். அந்த திசையெல்லாம் நெருஞ்சி தொகுப்பே பார்த்தால், அதுல நாலு பிரச்சனைகள். முதல்ல சாதிக்குள்ள இருக்கிற பொருளாதார ஏற்றதாழ்வு, கிராமங்களுக்குள்ளே இருக்கிற சாதி ஏற்றதாழ்வு – இது எப்படி? இதுல ஒரு திட்டமிடல் இருக்கா?

வேணுகோபால்: எனக்குப் பெரும்பாலும், 90 சதம் தற்செயல் நிகழ்வுகள்தான். இதை எழுதணும் இதை எழுதக்கூடாதுங்கிறதுதான். எப்படினா, எனக்கு எழுதும்போதே பத்து கதை எழுதணும்னு ஒரு லிஸ்ட் தான் தோணும். அய்யோ, இப்படித்தான் தோணும். எது முன்னாடி எழுதறேன், எது பின்னாடி எழுதறேன்னு நானே கூட வகுக்கமுடியாது. இப்படியொரு விஷயம் – இதை எழுதுவோம்னுதான் நினைச்சிருப்பனே தவிர…ஆனா அது என்னவோ தெரியலை, வெரைட்டியா விழுந்திருக்கு. ஒருவகையில தற்செயல்தான். பிற்காலத்துலதான் நான் என்ன பண்றேன் – நீங்கெல்லாம், விமர்சகர்கள் சொல்லச்சொல்லத்தான் நான் வெரைட்டியா எழுதணுமோ அப்படிங்கிற இடத்துக்கு வந்தேன். அப்படி இல்லாமலே, முதல் தொகுப்பு இருக்கில்லீங்களா, ‘பூமிக்குள் ஓடுகிறது ஒரு நதி’ – அந்தத் தொகுப்பை முதன்முதல்ல என்னுடைய கல்யாணத்தன்று கொண்டு வரலாம்னு ஆசைப்பட்டு, இந்தத் தொகுப்பை எஸ்.சங்கரநாராயணன்கிட்ட கொடுத்திருந்தேன். அவர் என்ன பண்ணினார்னா, ‘நான் டைப் அடிச்சு, சென்னையில இருக்கிறதனாலே கொண்டுவந்துடலாம்’னு சொன்னார். 2000 ரூபாய் செலவழிச்சு டைப் அடிச்சார். 2000 ரூபாய் என்னால அப்ப கொடுக்க முடியலை. கேட்டுட்டே இருந்தார். ஏய், கொடுப்பா கொண்டுவந்துரலாம்னாரு. அது தள்ளித்தள்ளிப் போயிடுச்சு. கொண்டு வரமுடியலை. அப்போ என்ன பண்ணினேன்னா, அவர் டைப் அடிச்ச வாக்கிலே வைச்சிருந்தாரு. வசந்தகுமார் அப்பத்தான், 98 – அந்த காலத்துலதான் வர்றாரு. வந்தவுடனே, நண்பர்கள் – பாஸ்கர் சக்தி, அவரெல்லாம் எங்க பக்கத்து ஊர். லட்சுமிபுரம். நான் ‘நுண்வெளி கிரகணங்கள்’ பரிசு வாங்கி குமுதத்திலே வந்த அந்த விளம்பரத்தின் வழியாக இவங்கெல்லாம் என் வீடு தேடிவந்து பேச ஆரம்பிச்சாங்க. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில இருந்து எல்லாம் வந்தாங்க. அவங்க சொல்லியிருக்காங்க. வேணு இப்படி ஒரு தொகுப்பு தொகுத்தான். அது இன்னும் வராமலே இருக்குன்னு. உடனே இவர் போயி, என்னை யாருன்னு தெரியாமலே, அதை வாங்கிட்டு நேரே எங்க வீட்டுக்கு வந்திருந்தார். வந்து, உன்னுடைய தொகுப்பை நான் போடறேன்னார். சொல்லிட்டு – அவர் சொன்னது – நான் சமீபத்துல, 2000க்கு ஒட்டி எழுதவந்த ஆட்கள்ல இவ்வளவு வெரைட்டியா எழுதக்கூடிய பையன் இவன் ஒருத்தன்தான். அதனால இவனைப் போடுறேன்னு பாஸ்கர் சக்திகிட்ட சொன்னாராம். அப்படி நினைச்சு எழுதலை. வெவ்வேறு விஷயங்களை நாம சொல்லணும்னுதானே தோணியிருக்கும். சொன்னதே சொல்றதைவிட.

சுரேஷ்: இது ரொம்பக் கவர்ந்த விஷயம்தான். அதற்கு முன்னால இன்னொரு தொகுப்பு – எனக்குப் பெயர் ஞாபகம் வரல. அதில முதல் கதைல கடன்கொடுக்கவந்து மதமாற்றப் பிரச்சாரம் பண்ணுவாங்க.

கண்ணன்: கண்ணிகள்.

வேணுகோபால்: இப்ப விவசாயம் தெரியும். கண்ணிகள்னா ஒரு விலங்கு, பறவை வந்து அதுல மாட்டிக்கிடறது. இதுல இன்னொரு பிரச்சனை இருக்கு. ஒரு படைப்பாளிக்குப் பல்வேறு சுதந்திரம் இருக்கு. அவன் தன் சொந்த சாதிக்குள்ள நடக்கக்கூடிய அயோக்கியத்தனத்தையும் சொல்வான். அதே சமயத்துல, மாற்று சாதியில நடக்கிறதையும் சொல்வான். இன்னிக்கு என்ன பெரிய பிரச்சனைனா, மாற்று சாதில நடக்கிறதை சொல்றதுக்கு, மாற்று மதத்தைச் சொல்றதுக்குப் பெரிய அச்சமா இருக்கு. ஒரு இந்து மதத்தை ஒரு கிருத்துவன் எழுதறது அச்சமாத்தான் இருக்கு. ஒரு முஸ்லிம் வந்து எழுத முடியாம இருக்கலாம். இல்ல நான் வந்து ஒரு முஸ்லிமுடைய பிரச்சனையை இக்கட்டை சொன்னேன்னா, இவன் யாரு வந்து சொல்றதுக்கும்பாங்க. ஆனா அந்த அச்சமெல்லாம் அப்ப எனக்கு இல்லை. இன்னிக்குத்தான் அந்த நெருக்கடியெல்லாம் ஜாஸ்தியா இருக்கு. தொண்ணூறுல நான் எழுதவந்த காலத்துல எழுத்தாளருக்கெல்லாம் ஒரு சுதந்திரம் இருந்தது. நுண்வெளி கிரகணங்கள் என் சொந்த சாதி இப்பப் படிக்காம இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன். கண்ணிகள் என்னன்னா, எங்க ஊர்பக்கம் நான் போகும் பொழுது – +2 படிக்கிற வரைக்கும், கிருஸ்துவம்னா என்னன்னா தெரியாது எனக்கு. எங்க ஊரு, முழுக்க முழுக்க விவசாயக் குடும்பங்கள் நிறைந்தது, சார். ஒரு முஸ்லிம் இல்லாத ஊரு, ஒரு கிருஸ்தவர் இல்லாத ஊரு. பல்வேறு சாதிகள் இருக்குது. சரீங்களா? அப்படிப்பட்ட ஊருல – கேள்விப்பட்டிருக்கலாம் – ஆனா, ஏசுவை எப்படி வணங்குவாங்க, அதுக்கான நம்பிக்கை என்ன, சடங்குகள் என்ன, எதுவுமே தெரியாது. அப்படியொரு சமயத்துல, எங்க ஊருக்கு வந்து துண்டுப் பிரசுரம் கொடுப்பாங்க. முக்கியமா மாலை நேரத்துல, தலித்துகளை நோக்கி வருவாங்க. இப்படி வந்திருக்காங்க, கிட்டத்தட்ட எங்க உறவுக்காரங்க எல்லாம் தேனியில இருந்து, கூடலூர் வரைக்கும். அங்க இந்த மாதிரிப் புதுசா வந்துகிட்டிருந்தாங்க. சில டைம் இப்படிப் பணத்துக்காக மாறியிருக்காங்க. எங்க இதுல ஒரு பாட்டி இப்படிப் பணத்துக்காக மாறிச் சாமியாடியிருக்காங்க. மூணு ஞாயிற்றுக்கிழமை போயிருக்காங்க. பாட்டி குறியெல்லாம் சொல்வாங்க. அந்தப் பாட்டிக்கு மூணு ஞாயிற்றுக்கிழமைக்கு மேல தாங்க முடியல – போடா நீயும் ஒஞ்சாமியும்னு திரும்பி மாரியாத்தாகிட்டயே வந்துட்டாங்க. இந்தப் பாட்டி தனக்கு ஒரு சின்ன பவர் இருக்குன்னு நம்புது – தன்னை நாடி எல்லாரும் வருவாங்க. குறி சொல்வாங்க. இதெல்லாம் விட்டுப்போக, அதுக்கு மனமில்ல. திரும்பித் தாய் மதத்துக்கே – போட்டாச்சு, வந்தாச்சு. இது எங்க ஊர்ல நடந்த ஒரு விஷயம். இத அப்ப நான் ஒரு புன்னகையோடதான் பார்த்தேன். ஒரு படைப்பாளியா புன்னகையோட பார்க்க முடியல. இந்த இக்கட்டுல, பணத்தக்கொடுத்துக்கூட மாற்றுவதற்கு இது நடந்தது. அந்த விஷயத்தை ஏன் நாம ஒரு படைப்பாளியா எழுதக்கூடாது, அப்படின்னு தோணிச்சு. உதாரணமா, தலித் தனக்குரிய சுயமரியாதை, கண்ணியம், மனிதனை மனிதன் நேசிக்கக்கூடிய ஒரு ஏக்கம், இந்த ஏக்கத்தை மனதினில் தேக்கின ஒரு கனவுனால, அவன் என்ன பண்ணலாம், அவன் அந்த இடத்துக்குப் போகலாம். ஒரு இடைப்பட்ட சாதி மாறுறான்னா அதுல ஒரு உள்நோக்கம் இருக்கு. இதுல பணம் இருக்குங்கிற ஒரு விஷயம் இருக்கில்லீங்களா. முக்கியமா, இடைசாதியை நீங்க மாத்தினீங்கனா, இடைச்சாதியைச் சார்ந்த எல்லோரும் மாறுவதற்கான ஒரு வாய்ப்பு இருக்கு. அந்த இடம், முக்கியமா, புதுப்பட்டியில, முயன்று பார்த்தார்கள். மாறனாங்களா மாறலையாங்கிறதில்லை…முயன்றுபார்த்தார்கள். இந்தச் செய்தி எனக்கொரு செய்திதான். ஆனா நமக்குத்தான் தெரியுமே, விவசாயின்னு நான் பேனா எடுத்துட்டேன்னா அதுக்குள்ள இந்த விஷயம் வந்துடும். இதுவும் ஒரு பார்வை சார்ந்த விஷயம்தான்.

கண்ணன்: இப்ப நீங்க இது செய்தியா வந்ததுன்னு சொல்றீங்க. எந்த அளவு உங்களுடைய நேரடி அனுபவங்களை எழுதறீங்க.

வேணுகோபால்: இது ஒரு நல்ல விஷயம் கண்ணன். நான் இதுவரைக்கும் கிட்டத்தட்ட, ஒரு 90 சதம் என் சொந்த அனுபவத்துல இருந்து எழுதவே இல்லை.

கண்ணன்: எழுதவே இல்லைங்கறீங்களா?

வேணுகோபால்: சரக்கிருக்கு. இன்னும் வைச்சிருக்கேன். 90 சதம் எழுதலை. 10 சதம் என் வாழ்க்கையில இருந்து எழுதியிருக்கலாம்.

கண்ணன்: தி.ஜானகிராமனை ஆசான்னு சொல்றீங்க. ‘என் சொந்த அனுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன்,’னு அவர் சொல்றாரே.

வேணுகோபால்: அதை இன்னொரு கேள்வியா வைச்சுக்கோங்க. இப்ப, நீங்க கேள்வி கேட்கலாம், ‘ஏன் உங்க நுண்வெளி கிரகணங்களே உங்க வாழ்க்கையைச் சார்ந்துதானே எழுதினீங்க?’ உங்க பின்புலம் சார்ந்து எழுதறது வேற. தொழில் சார்ந்து எழுதறது வேற. ஆனா என்ன ஒரு பெரிய வேடிக்கைனா, சொந்த அனுபவங்கள், சொந்த கஷ்ட நஷ்டங்கள் இருக்கில்லைங்களா – இன்னொருத்தருடைய வாழ்க்கையுடைய ஒரு சின்ன கூறு கிடைச்சவுடனே, அந்த வாழ்க்கையை மிகப்பெரிய அளவிலே விரித்துப் பயணப்படுகிறேன். இப்ப ஒரு சிலந்தி, இரை வந்தால், அப்படியே அந்த இரையை நோக்கி, வலையைச் சரசரன்னு பிண்ணிக்கட்டுதில்லீங்களா, அது மாதிரி, ஒரு செய்தியை என்னுடைய சொந்த அனுபவத்தினுடைய அந்த மூலக்கூறுன்னாலே அதை அப்படியே, கதையாப் பண்றேன். அதுதான் அனுபவமா இருக்கே தவிர, அந்தப் பிரச்சனை, அதனுடைய மையமான கருத்து, என்னுடைய கருத்து அல்ல. அதனால, இந்த அனுபவங்கள் ஏதோ ஒரு வகையில, அந்தக் கதையை உந்தித் தள்ளிகிட்டிருக்கு. அந்தக் கதையை ஒரு கருவுற்ற குழந்தையா மாற்றுவதற்கான ஒரு முனைப்பு இருக்கில்லீங்களா. ஆனா கரு என்னுடைய கருவல்ல. அதை வளர்த்தது விட்டது பூரா நான். நான் சாரோட கருவை வயிற்றில் தாங்கியிருக்கேன். அந்தக் கருவை என்னோட ரத்த நாளங்களால் வளர்க்கிறேன். அது மாதிரித்தான் என்னுடைய பங்களிப்பு என்பது – நான் அதை வளர்த்தேன் என்பதுதான். என்னுடைய சொந்த வாழ்க்கை ஒரு 10 சதவிகதம் இருக்கலாம். அதே சமயத்துல என் நண்பர்கள் சார்ந்து, நான் பார்த்துக் கேள்விப்பட்டது ஒரு 20-30 சதவிகிதம் இருக்கலாம். ஒரு 40 சதம் உண்மையும், 60 சதம் புனைவும்தான் என்னுடைய படைப்புன்னு சொல்லலாம். இன்னும் கொஞ்சம் நெருக்கிப் பிடிச்சீங்கன்னா ஒரு 35 சதம் உண்மை, 65 சதம் புனைவும், அந்தப் புனைவு என்பது என்னன்னா, என்னுடைய அனுபவத்துனுடைய சாராம்சம்னு வைச்சுக்கோங்க. இந்த விஷயம் இப்படித்தாண்டா நடந்திருக்கும் – சொல்றோமில்லைங்களா. அது ஏன்னா, என்னுடைய அனுபவம் அப்படி. கண்டறிஞ்சிருப்பேனில்ல? என்னுடைய அனுபவத்தினுடைய சாறுதான் இப்படி வழிநடத்துதுன்னு நினைக்கிறேன். இப்படித்தான் அந்தப் படைப்பு இதுவரைக்கும் உருவாகியிருக்கு.

கண்ணன்: தி.ஜானகிராமன் பற்றிக் கேட்டேன்.

வேணுகோபால்: இது ஒரு பெரிய வேடிக்கைதான். இந்த நாவல் வந்தபோது சுந்தர ராமசாமி படிச்சார். அவர் என்ன சொன்னார்னா – ‘ஜானகிராமன் உரையாடல்ல மிக கெட்டிக்காரர். நீங்ககூட, உங்க உரையாடல் கொஞ்சம் கொஞ்சம் அந்த இடத்தில இருக்கு.’ இது ஒரு விஷயம். வசந்தகுமார், ‘உங்களுக்கு யார் பிடிக்கும்’னு கேட்டார். ‘இப்போதும் எப்போதும் என்னுடைய மரணம் வரைக்கும் ஜானகிராமன் தான் என்னுடைய குரு,’ அப்படின்னு சொன்னேன். அப்படிச் சொல்லும்போது, ‘அவருடைய ஒரு அடையாளம் கூட, படைப்பில இல்லையேப்பா,’ன்னார். ‘ஒரு அடையாளம் கூட இல்லையே.’ இந்த பதில் எனக்கு ரொம்ப சந்தோஷமான பதிலா இருந்தது. எனக்கு குரு அவர்தான். சில டையத்துல குரு பாடியதுமாதிரியே சிஷ்யன் பாடமாட்டான். இதுக்கு நான் என்ன காரணம் சொல்றேன்னா – அவர் பிறந்தது ஒரு பிராமணப் பின்னணி. ஒரு சங்கீதப் பரம்பரை. அவரது கலாச்சாரம் – ஒரு வேலைவாய்ப்பு சார்ந்து அதை நம்பி வாழக்கூடிய ஒரு உலகம். கண்டிப்பா, ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’னு சொல்வீங்க இல்லீங்களா – அந்த இடத்தைச் சார்ந்துபோகக்கூடிய ஓர் உலகம். என்னுடையது சாதிப்பிண்ணலால் ஆன ஒரு உலகம். விவசாய உலகம். அந்த இடத்தில இருந்து வேறுபட்ட உலகம். தஞ்சையிலயும் பிராமணர்கள் எல்லாம் நிலங்கள் வைச்சிருந்தாங்க. ஆனா அவங்க எல்லாத்தையும் அடுத்தவங்கள விவசாயம் பண்ணவிட்டுட்டு, அதிலே தோற்று, அல்லது வருமானம் சரியா வராம, அந்தப் பங்குத்தொகை வராம விட்டுட்டுப் போயிட்டாங்க, எல்லாருமே. ஆனா நான் களத்துல இறங்கி வேலை செஞ்சேன். எனவே இரண்டு சமூகமும் வெவ்வேறு சமூகம். எனவே என்னுடைய ரத்தத்திலிருந்துதான் என் கதையை எழுதமுடியும். ஜானகிராமன் அவருடைய ரத்தத்திலிருந்துதான் அவர் கதையை எழுதமுடியும். ஆனா அவர் பார்த்த மனுஷங்க இருக்காங்க இல்லீங்களா, அது மாதிரி என்னுடைய மனுஷங்கள நான் பார்க்கலாங்கிறது இருக்கு இல்லீங்களா. எனக்கும் ஒரு மனுஷன் இருக்கான். இதுல சௌடம்மான்னு ஒரு மனுஷி இருக்கா இல்லியா. நுண்வெளி கிரகணங்கள்ல ஒரு மனுஷி வர்றா இல்ல. அதே மாதிரி கூந்தப்பனைல சுரேந்திரன்னு ஒரு மனுஷன் வர்றான் இல்லியா. நிலமென்னும் நல்லாள்ல கடைசில வாழைத்தாரோடு ஒரு மனுஷி வர்றா இல்லை. நான் என்னுடைய மனுஷியை எழுதினேன், வேணு. நீ உன்னுடைய மனுஷிய எழுதுன்னு எனக்கு ஜானகிராமன் சொன்னதாக நான் எடுத்துக்கிறேன். அப்படித்தான் அவர் என்னுடைய குரு. ஆனா இன்னொருத்தருடைய சிக்கலை நான் என் சொந்த அனுபவமா மாத்தி எழுதறேன். அது மெட்ராசில நடந்தாலும் சரி. அதாவுது நீங்க ஒற்றை வரியில ஒரு மானுட சிக்கலைச் சொல்றீங்க. அது எனக்குப் புதுசா இருக்கும். அந்த ஒற்றை வரியை என் அனுபவமா மாற்றி,15 பக்கம் கதை எழுதறேன்.

சுரேஷ்: நண்பர் சுனில் கிருஷ்ணன் ஒரு கேள்வி கேட்டிருந்தார். நீங்க ஜெயகாந்தனைப் பற்றிப் பேசும்போது, அந்தக் கேள்வியுடைய validity கூடின மாதிரி இருந்தது.., சமீபத்தில உங்களுடைய ஆட்டமும், நிலமென்னும் நல்லாளும் படிச்சிருக்கார். படிச்சதிலிருந்து அவர் என்ன கேக்கறார்னா , கதையின் ஒட்டுமொத்த போக்குக்கு எதிரா பாசிட்டிவ்வா முடிக்கணும்னு முடிச்ச மாதிரி இருக்குங்கிறார். இப்ப நீங்க ஜெயகாந்தன் பற்றி சொல்லும்போது சொன்னீங்க. ஒரு பிரச்சனையை எடுக்கிறார். ரெண்டு தரப்பையும் உட்கார்ந்து பேசறார். ஆனா அவருடைய முடிவுகள் எப்போதும் முற்போக்கா, எது அதிகமா மனித குலத்துக்கு நன்மைதரும் – அதை நவீனத்திலிருந்து எடுத்துக்கிறதுக்குத் தயங்காம ஒரு முற்போக்காத்தான் முடிக்கிறார் அப்படீன்னு. இப்ப உங்க கதைகள்ல. அதனோட பாதிப்பு இருக்கா. எனக்கு இதுவரைக்கும் அப்படிப் படல. ஆனா அப்படி ஒரு தரப்பு இருக்கு. அவங்க நண்பர்களுக்குள்ள விவாதிச்சிருப்பாங்க போலிருக்கு. நீங்க ஜெயகாந்தன் பற்றி இந்தக் கருத்தைச் சொன்னப்போ நண்பர் சொன்னதுல ஏதோ ஒரு element of truth இருக்கோன்னு தோணுது.

வேணுகோபால்: நான் அறுபது எழுபது கதைகள் எழுதியிருப்பேன். அதிலே ஒரு ஐம்பது கதைகள் நிராதரவான விஷயத்தைக் காட்டியிருப்பேன். வெண்ணிலைனே வைச்சுக்கோங்க. புத்துயிர்ப்புனு ஒரு கதை – ஜெயனுக்குப் பிடிச்ச ஒரு கதை. அந்தப் பசு மாடுக்குத் தீவனம் தேடிப்போறார் இல்லீங்களா – கடைசில திருடறார் இல்லீங்களா…தற்கொலைக்குப் போறார் இல்லீங்களா – அதுல ஒரு குழந்தை பிறக்குதுங்கிறதத் தவிர வேற ஒண்ணும் இல்லை. அவ மாசமா இருக்கா, கர்ப்பிணியா இருக்கா, கிட்டத்தட்ட பத்து நாளைக்குப் பின்னால பிறக்கவேண்டியது அந்தப் பதற்றத்துல முன்கூட்டப்பிறக்கிறா. பனிக்குடம் இறங்கிடுதுங்கிறனாலே பிறக்கிறா. வாழ்க்கையிலே நேர்நிலை உச்சங்களும் உண்டு. மலையிலிருந்து சரிந்து உருண்டு விழுந்துவிட்டு எழவே முடியாப் பள்ளத்தாக்கில் விழுந்து எலும்புக்கூடான சம்பவங்களும் உண்டு. யாருமே பார்க்க முடியாமல். இரண்டுமே வாழ்க்கையிலே இருக்கு. இந்த உச்சங்கள் ரொம்ப அபூர்வமானவை. உதாரணமா, நுண்வெளி கிரகணங்களை எடுத்துகிடுங்க. முடிவு என்ன? அதே மாதிரி திசையெல்லாம் நெருஞ்சியில் அந்த நாவிதனுடைய முடிவென்ன? ஆனால் வாழ்க்கையினுடைய ஒரு பேராற்றிலே பெரும் பரப்பிலே நல்ல மனிதர்கள் வந்துடுவாங்க. இத்தனை பேர் லஞ்சம் வாங்கும்போது ஏன் நீங்க வாங்காம இருக்கீங்கன்னு ஒரு கேள்வி இருக்கில்லீங்களா? கண்ணன்கிட்ட, வரும்போதெல்லாம், ‘கண்ணன், உலகமே – லஞ்ச லாவண்யம் இவ்வளவு ஆயிபோயிடுச்சு கண்ணன். தாங்கவே முடியலை,’ அப்படின்னு சொல்லிட்டு வந்தேன். ஆனா, அது 90 சதம் இருக்குது, 99 சதம் இருக்குது. வேறு ஒரு சதம் இருக்குதே. இது மாதிரித்தான் கதைகளுக்குள்ளேயும் மனிதனுடைய நல்லியல்புகள் அங்கங்கே வரக்கூடிய இடங்கள் இருக்கு. நல்ல மனிதர்களைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கு. கண்ணிகள்லே வேறு ஒன்றா இருக்கு. ஆனா இந்தக் கதைல இப்படியிருக்கு. இன்னொன்னு – அது முடிவு சார்ந்த விசயம் அல்ல. அது அந்த பாத்திரம் காலூன்றுவதற்காகத் தத்தளித்த தத்தளிப்பினுடைய முடிவு அது. அதை அப்படித்தான் பார்க்கணும்.

சுரேஷ்: நிலமென்னும் நல்லாள்லேயும்…

வேணுகோபால்: அவன், இந்த கோயமுத்தூர்ல கால் ஊன்ற வேண்டாமா? அவனுக்கு என்ன ஆதரவு? நீங்க சொல்லக்கூடிய ஆதரவு கிடையாது. நீங்க சொல்லக்கூடிய வேலைகள் சம்பந்தமாகவோ, நீங்க சொல்லக்கூடிய கலாச்சாரம் சார்ந்தோ அல்ல. அவன் அவன் இழந்த மண்ணைவிட்டு பிச்சு எடுக்கமுடியவில்லை. அந்த மண்ணை இழந்த அவனுடைய..ஒரு தவிப்பு..அது கிட்டத்தட்ட அவனைக் காய் அடிச்சது மாதிரின்னு வைச்சுக்கோங்க. அதைத் தேடணும் இல்லையா. எப்படி அம்மா வந்தாள்ல ஏதோ ஒன்றைத் தேடுறாங்க இல்லையா. அவன் தேடுறான். கால் ஊன்ற, at least, நாவல்லையாவது கால் ஊன்றணுமில்லையா? குறைந்தபட்சம், நாவல்லையாவது கால் ஊன்றணுமில்லையா?

கண்ணன்: அதை இயற்கை மூலமாகத்தான் செய்யறீங்க, இல்லையா? இயற்கை மூலமாகத்தான் அந்தக் காலூன்றலை இங்கே செய்யறீங்க. கூந்தப்பனையிலேயும் கிட்டத்தட்ட அதே மாதிரித்தான். அந்த வறட்சியில மரத்துக்கு தண்ணி ஊற்றுவதன் மூலமா.

வேணுகோபால்: ஆமா. ஏதோ ஒரு வகையில அவன் காலூன்றணுமில்ல? அவன் ஆண்மையற்றவன். ஆண்மையற்றவன் என்பதற்காக இந்த உலகத்தில் நிராகரிக்கப்பட்டவன். நம்மளுக்கு, ஒரு லட்சம் வருட மரபுத் தொடர்ச்சி உண்டு. உங்க தாத்தாவுக்கு முன்னாடி தாத்தாவுக்கு முன்னாடி தாத்தாவுக்கு முன்னாடில இருந்துதான் நீங்க இங்க வந்து உட்கார்ந்திருக்கறீங்க. பாற்கடல்ல ஆசீர்வாதம் வாங்கின மாதிரித்தான். நான் என்னுடைய ஓராயிரம் பரம்பரைல முன்னோடியிருந்துதான் வந்திருக்கேன். நான் எங்கெங்கேயோ ஓடியிருக்கலாம். எங்கெங்கேயோ அடிபட்டு என்னுடைய முன்னோர்கள் வந்திருக்கலாம். ஆனா நான் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறேன்னா, ஒரு மரபுத்தொடர்ச்சி இருக்குது. உங்களுக்கு இருக்கு, அவங்களுக்கு இருக்கு. இந்த மரபுத்தொடர்ச்சி அறுந்து போவதற்கு எப்படி நாம விடமுடியும். அவன் அந்த இடத்திலிருந்து வந்தானில்லையா? அந்த மரபைப் பிடிக்கணுமில்லையா? மரபுன்னா, மொண்ணையா, பழமைங்கிறத நான் சொல்லலை. அவனுக்குரிய ஆதாரம், சுருதின்னு ஒன்று இருக்கில்லையா? அந்த சுருதியை அவன் பிடிக்கணும். உங்களுக்கு உங்க பாப்பா இருக்குது. அவனுக்கு இதோட அறுந்து போகிறது. மரபு. யாருக்கு? அந்த கூந்தப்பனையிலே வரக்கூடியவன். அவன் அந்த மரங்களின் வழியாக, அந்த தண்ணீர் ஊற்றுவதன் வழியாக, அவன் ஒரு மரபுத் தொடர்ச்சி உருவாக்குறான். அவனுக்கு ஆசை இருந்திருக்காதா? இன்னொன்னும் சொல்றேன். எங்க ஸ்கூல் அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் இருக்கில்ல, சார், அங்க படிக்கிற காலத்துல, அழகா இருக்கும் சார், அந்த ஸ்கூலு. மொத்தமே, மூணே மூணு கட்டடம்தான். உங்க ஊர் பக்கம் இருக்கே, ஓட்டு வீடு – என்ன ஓடு – ஓசூர் ஓடோ என்னவோ சொல்வீங்களே, அந்த ஓடு தான் ஒரு பக்கம் இருக்கும். அது பழைய கட்டடம். இந்தப் பக்கம் அஞ்சாம் கிளாஸ்க்கு புதுக்கட்டடம். ரெண்டாம் கிளாஸ் மூணாம் கிளாஸ் சிமெண்ட்டு. மையத்துல நல்ல கிரவுண்ட். அருமையா இருக்கும். அது எங்க கிராமத்துல யாரு கொடுத்ததுன்னு தெரியலை. நாலு மணிக்கு விட்டாங்கன்னா, ஒரு மணிநேரம் விளையாடுவோம். அப்ப, ராசுன்னு ஒருத்தர் ப்யூனா வந்தார். அவர் என்ன பண்ணினார்னா, சுத்தி மரம் வைக்கலாம், அப்படின்னார். மரம் வைச்சது மட்டுமில்லாம, இந்த மரம் கண்ணனும் வேணுகோபாலும் சேர்ந்து வளர்க்க வேண்டியது. இந்த மரம் தியாகுவும் சுரேஷூம் சேர்ந்து வளர்க்கவேண்டியது – அப்படி நேந்துவிட்டார். நாங்க, நேந்துவிட்டதுனாலே, அந்த மரத்துக்கு தண்ணி, வேர் பிடிக்கிற வரைக்கும், உதாரணமா, மூணாங்கிளாஸ்லயே நேர்ந்து விட்டாங்க – மூணு வருஷம் பார்த்துக்கிடுவோமில்லையா – அது மரமாயிடுச்சு. இன்னிக்கு வரைக்கும் அந்த மரம் இருக்கு, சார். நான் வளர்த்த மரம். இன்னிக்கு நடந்துபோகும் போது, அந்த மரத்தைப் பார்க்காமப் போகமாட்டேன்.

கண்ணன்: அந்த மாதிரியான பின்னணிதான் உங்களை இந்த மாதிரி முடிவு எடுக்க வைக்குதா?

வேணுகோபால்: இல்ல, இல்ல. இது unconsciousஆ தொழிற்பட்டிருக்குமோன்னு நினைக்கிறேன். நிஜமாகவே, இப்ப நீங்க கேட்ட பின்னாடிதான் யோசிக்கிறேன்.

கண்ணன்: இது இரண்டுக்கும் ஒப்புமை இருக்கிறதுகூட உங்களுக்குத் தோன்றியிருக்காது.

வேணுகோபால்: இல்லை. நாவல் எழுதும்போது நினைச்சதில்லை. இப்பவரைக்கும் நினைச்சதில்லை. ஆனா, unconscious அது இருந்திருக்கலாம்.

தியாகு: இதை unconsciousங்கிறீங்க. அதே கதையில, கூந்தப் பனையிலே, பெண்ணை நண்பருக்கு மாற்றிக்கொடுக்கிறது – அந்த நிலைமை வர்றது பெரிய விஷயம். பொதுவா அதுமாதிரின்னா தற்கொலை தோணும், பொறாமை தோணும், கோவம் தோணும், அவங்களக் கொல்லணும்னு தோணும். இந்த மாதிரித்தான் இருக்கும். இதைத்தாண்டி இப்படியொரு நிலைமை வர்றதுக்கு என்ன காரணம்?

வேணுகோபால்: அப்படியான ஒரு ஆள் இல்லைனு நீங்க நினைக்கறீங்களா? சாத்தியம் ரொம்பக் குறைவு. இப்போ இந்த முடிவு எடுப்பதற்கு மிகப்பெரிய மனப்போராட்டங்கள் வேணும். ஆனா ஒரு அசால்டாத்தான் எடுக்கிறான். இவன்மீது ஒரு நம்பிக்கை. இவன்மீது ஒரு கனிவு. அவன் அந்தக் குடும்பத்துல மிக முக்கியமான நண்பனாத்தான் இருக்கான். குடும்பம் அழிஞ்சு போகணும், குடும்பம் கெட்டுப் போகணும்னு நினைக்கூடிய நண்பன் கிடையாது. ஆனால், அவளுக்குன்னு ஒரு இடமிருக்கில்லைங்களா. இரண்டு விதமான இயக்கங்கள் உண்டு. ஒன்று, உறவுரீதியானதா இருக்கலாம். தாய்மைரீதியாக்கூட இருக்கலாம். தன்னைச் சார்ந்து, ஒரு பெண் வாழ்க்கை பூராவும் இழந்துகொண்டிருக்கக்கூடிய ஒரு இடம் இருக்கு. ஒரு எழுத்தாளனுடைய கனிவாக்கூட நீங்க எடுத்துக்கலாம். இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால், ஏன் மூன்று பேர் சேர்ந்து வாழக்கூடாது? ஒரு நண்பன். அவன் வெறுத்து ஒதுக்கலை. திருமணம் பண்ணிக்கிடட்டும். நானும் கூட இருக்கேங்கிறதுதான். அது நிகழ்ந்தபின் தான் மனிதனுடைய ஆட்டம் வேறுவிதமாகத் தொடங்குகிறது. என்னை மதிக்கலை. என்னை avoid பண்றா.

தியாகு: அதுதான் இயல்பு. ஆனா இது வந்து இயல்பு இல்லைனு தோணுது.

வேணுகோபால்: அந்த இடத்துக்குப் போறது. அதாவது, அந்த பையனுக்குக் கட்டிக்கொடுக்கிறதுன்னு சொல்லிட்டு – அந்தப் பெண் தெளிவாக இருக்கா. அது அல்ல – இப்படியே இருந்தரலாம்னுதான் நினைக்கிறா. அந்தப் பெண்ணைப் பற்றி நாம் ஒரு பாய்ன்ட்கூடக் குற்றம் சொல்லமுடியாத அளவுக்கு நல்லவ தான். நேர்ந்தாச்சு. இவனைக் கல்யாணம் பண்ணியாச்சு. இது ஒரு முக்கியமான விஷயம் அல்ல.

தியாகு: இந்தப் பெண்ணுக்குத்தான் கல்யாணத்துக்கு அப்புறம் மாற்றம் வருது. She has totally changed.

வேணுகோபால்: ஆங்…இதுதான் படைப்பாளியினுடைய பயணம்னு சொல்றது. இங்கே அப்படித்தான் நிகழும்னு நான் நினைக்கிறேன். நான் யூகிக்கிறேன்.

சுரேஷ்: இந்த இடத்தில நீங்க இன்னொரு கோணத்தை விட்டுட்டீங்களோன்னு தோணுது. பொதுவா நம்ம சமூகத்தில திருமணம்கிறது ரெண்டு பேர் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். நீங்க அந்த இடத்தில அந்தப் பெண்ணோட தாயார் தகப்பனாரையோ இவனோட தாயார் தகப்பனாரையோ கவனமாத் தவிர்த்திட்டீங்களே. உங்க சொல்லிலேயே, நீங்க ‘செஞ்சிட்டீங்களோ’ – அந்த இடத்திலே.

வேணுகோபால்: இல்லை. இந்த மூன்று பேருமே இருக்கக்கூடியது அவர்களுடைய கிராமத்தில் அல்ல.

சுரேஷ்: திருப்பூர்ல.

வேணுகோபால்: வேலைக்கு வந்த இடம். இது அவங்களுக்கு ஒரு வசதி அல்லவா.

தியாகு: ஆட்டத்திலேயும் இப்படித்தான்.

சுரேஷ்: ஆட்டத்திலே இயல்பா நடக்குது. அவ போயிடறா.

வேணுகோபால்: இதுக்கு இன்னொன்னு சொல்றேன். ஒரு நண்பர், இப்படி நடந்திருக்குன்னு ஒரு சின்ன, செவிவழிச் செய்தி சொன்னார். இந்த மாதிரி, நண்பனுக்கு அவர் திருமணம் செய்து வைத்தார், அப்படினு ஒரு செய்தி. இந்தச் செய்திதான் எனக்கு இதற்கான கரு. ஒரு சின்ன ஒரு வரிச் செய்தி. இந்தச் செய்தியினுடைய ஆதாரம் – இதை வைத்துக்கொண்டு – நான் சொன்னேனில்லீங்களா, செய்திவந்து நாவலா, குறுநாவலா மாறியிருக்குனு சொல்றேனில்ல. ஆனால், முழுக்க முழுக்க உடல் என்னுடைய உடல்தான். இதுலே, ஒரு பெரிய வேடிக்கை என்ன சொல்லணும்னா, ஒரு நண்பர் – நெடுஞ்சாலையில பணியாற்றுறார். ஜெயகாந்தன் மாதிரி ஒரு பேரு – ஒரு வாசகரா இருந்தார். தயங்கித் தயங்கி என்னிடம் வந்தார். ‘சார், உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?‘ன்னார். கேளுங்கன்னேன். “கூந்தப்பனையைப் பற்றி கேட்கலாமா?” கேளுங்கன்னேன். “தப்பா ஒன்னும் நினைச்சுக்க மாட்டீங்களே?” இல்லை, நினைச்சுக்க மாட்டேன். ‘சார், உங்களுக்கு ஆண்மை இல்லையா?’ நான் கையைப் பிடிச்சுக் குலுக்கினேன். அதாவது என்னன்னா, அது நானாகவே மாறியிருக்கேன். ஒரு படைப்பு வந்து – அப்படிக் கேட்டாரு. அதுதானே படைப்பு.

தியாகு: எழுத்தாளனின் வெற்றி.

சுரேஷ்: இது பால்கனிகளுக்கு இன்னும் பொருத்தமா இருக்குன்ன சொல்லலாமா 🙂

வேணுகோபால்: ‘பால்கனிகள்’ படிச்சிட்டு வசந்தகுமார் அண்ணா சொன்னார், ‘இது திருநங்கைகளுடைய வேத புத்தகமுன்னு. இதை அவர் சொன்னபோதுதான் நெனச்சேன், இன்னும் ஆழமா பயணப்பட்டிருக்கலாமோன்னு. ஏன்னா, இவ்வளவு பெரிய வார்த்தை கிடைக்கிறபோது – கிடைக்கும்ன்னு நெனச்சு எழுதல்ல. கிடைச்சுருச்சு. அப்ப இன்னும் பல்வேறு பரிமாணங்களோட பண்ணியிருக்கலாமேன்னு ஆர்வம் தோணுது.

இனி ‘கூந்த பனை’க்கு வர்றேன். ஒரு தேர்ந்த வாசகன், நல்ல ஆளுமை – ஜெயன் வந்து என்ன பண்ணினார்னா, வேணுவினுடைய ஒரு மகத்தான கவித்துவ உச்சம்னு எழுதியிருக்கார். என்ன விசயம்னா, அவருக்குத் தெரியும், வேணு எப்படி முரட்டுப் பையன்னு. ஆனால், இவரு ஒரு வாசகன், என்னை யாருன்னு தெரியாத அளவில வந்திருக்கார். இந்தக் கேள்வி கேட்டார். அப்பன்னா, அந்த வேதனையை, அவனுடைய வேதனையை – அந்த ஆண்மையற்றவனின் வேதனையை ஒரு இலக்கியவாதியா, ஒரு படைப்பாளியா, ஒரு மனுஷனா நெருங்கி இருக்கேன்கிறது இருக்கில்லையா. இப்ப வாங்க. இப்ப புதுசா எழுதவரக்கூடிய பின்நவீனத்துவம்னு சொல்றோமில்லையா, இந்த இதயத்தினுடைய நெருக்கத்தை அந்த எழுத்து அடையுதா, இல்ல செக்ஸை அடையுதான்னுதான் நான் கேட்கிறேன். உங்களுடைய நோக்கம் என்ன? இது செக்ஸ் பிரச்சனைதான். ஆனால், ஆன்மாவினுடைய கண்ணீர் அல்லவா? ஒரு இதயத்தினுடைய கண்ணீர் அல்லவா? நீங்க, மறுபடியும் பாருங்க. ஜானகிராமன் எப்படி ஆசான் ஆகிறார் என்று. அவர் எல்லாம் செக்ஸ் கதைதான் எழுதினாரு – அப்படி சொல்லமுடியுமா.

சுரேஷ்: அப்படி ஒரு குற்றச்சாட்டு இருந்தாலுமே…

வேணுகோபால்: இந்துவுக்குத் தேவை என்னது? ஒரு வாழ்க்கை அல்லவா? பாற்கடலிலே ஒரு கேள்வி இருக்கில்லீங்களா. நீ மகனை இழந்ததைப் பற்றித்தான் பேசியிருக்க. நான் புருஷனை இழந்திருக்கேனே! அப்படிச் சொன்னவுடனே அந்தக் குழந்தையை இறக்கிவிட்டுட்டுக் கட்டிப்பிடிச்சுக்கிறா இல்லையா, அதுக்கும் இந்துவுக்குமான ஒரு உறவு இருக்கா இல்லையா? ஒரு படைப்பாளி, அந்த வாசிப்பு அனுபவத்தைக் கண்ணீர் சார்ந்து நெருங்கறதுதானே ஒரு முக்கியமான விசயம். ஒரு பெண்ணுடைய கண்ணீர். ஒரு ஆணினுடைய கண்ணீர். அதுதான் உலகம் முழுக்க இலக்கியமா இருந்திருக்கு.

சுரேஷ்: நீங்க ஜானகிராமன் பற்றிச் சொன்னதினால, ஒரு முக்கியமான வேறுபாடு. உதாரணமா, பாலுறவு மீறல் கதைகள் இருக்கில்லையா, நெறிப்படுத்தப்பட்ட உறவை மீறி நிகழ்கிற உறவு இருக்கில்லையா – ரட்சண்யம், அபாயச் சங்கு,…

கண்ணன்: உள்நின்று உடற்றும் பசி.

சுரேஷ்: ஜானகிராமன் இதுமாதிரியாக நிகழ்கிற இடத்தை ரொம்ப பூடகமாகச் சொல்லிட்டுப் போறார். நீங்க அதை கொஞ்சம் explicitஆவே சொல்றீங்க. காலமா?

வேணுகோபால்: காலம் தான். அதாவது, ஒரு எழுத்தாளனுடைய சுதந்திரம் ஒன்னு. அப்புறம் அந்தக் காலத்துக்கு அதுக்கு மேலே அவரால…சொல்லியிருக்க முடியும். ஜானகிராமனால சொல்லியிருக்க முடியும். ஏன், அம்மா வந்தாள்ல மொட்டை மாடியில அவங்க படுத்திருக்கிற விஷயத்தை கெட்ட வார்த்தைலகூடச் சொல்வார். தேவடியான்னோ ஏதோ ஒரு வார்த்தைய பயன்படுத்துவார், இல்லீங்களா?

தியாகு: அவர் காலத்துக்கு அதுவே மிகப் பெரியது.

வேணுகோபால்: அவர் நோக்கம் இதை எழுதக்கூடாதுன்னு இல்லை. ஆனால் இதை எழுதினா இவங்க நம்மளை வேறொன்னா மதிச்சிருவாங்க. இலக்கியத்தினுடைய தகைமையிலிருந்து பின் தள்ளிடுவாங்கங்கிற ஒரு அச்சவுணர்வினாலே அப்படி எழுதியிருக்கலாம். நம்மளுக்கு காலச் சுதந்திரம் இருந்தது. இருக்குது. அதனாலதான் அந்த இடம் எழுதினேன். ஆனாலும்கூட நான் எந்த அளவு அதைப் பயன்படுத்தணும், எதுக்காகப் பயன்படுத்தறேன்கிறதும் இருக்கு. அளவு கூட இல்லை. அதனுடைய நோக்கம் என்ன? அளவுக்கு ஒரு பக்கம், ரெண்டு பக்கம் கூட எழுதலாம். அந்த ரெண்டு பக்கத்துக்கான நோக்கம் இருக்காங்கிறதுதான் கேள்வி.

அன்பழகன்: உங்க பால்கனிகள்லே திருநங்கைகள் பற்றி வருது. முடிவு கொஞ்சம் பொருத்தமாத் தெரியலை. இதுவே நைனா வந்து கோமதினு ஒரு சிறுகதை எழுதறார். அதுல முடிவு கச்சிதமா இருந்தது. பால்கனிகள் குறுநாவல். எனக்கு ஏதோ முழுமை பெறலையோன்னு தோணுது. ஒரு குழந்தையைத் தத்தெடுக்கிறது மாதிரி – எனக்கென்னவோ செயற்கையாத் தெரிஞ்சது.

வேணுகோபால்: திருநங்கையைப் பற்றி எழுதுவதைப் பற்றி இப்ப நான் என்ன நினைக்கிறேன்னா, ஒரு திருநங்கையோடு ஒட்டி உறவிருந்திருந்தா இன்னும் நல்லா எழுதியிருப்பேனோ? நட்பாத்தான் சொல்றேன். ஒரு படைப்பாளியா, ஒரு திருநங்கையுடைய நட்பு இருந்திருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்குமோன்னு தோணுது. ஆனால், எனக்கு திருநங்கைகளை ஒரு எல்லைவரை பார்க்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. சின்ன வயசிலே, எங்க பக்கத்து ஊர்ல கிருஷ்ணன்னு ஒரு பையன் இருந்தான். டிராமா போடுறதுக்கு ஒரு பொம்பளப்புள்ள மாதிரி ஆளத் தேடிகிட்டு இருந்தோம். நான் அப்ப, பத்தாவது படிச்சிட்டிருக்கேன். அப்ப, ஞானசேகரன்னு ஒருத்தர் பாக்கியராஜ் மாதிரி ஒரு பெரிய டைரக்டர் ஆகணும்னு பெரிய கனவுல இருந்தார். அவர் என்ன பண்ணுவார், சின்னச் சின்னக் கதையெழுதி, ஒரு காளியம்மன் கோயில், இந்த மாதிரி இடங்களில் நாடகம் போடுவார். அவர் அப்போத்தான் டிகிரி முடிச்ச நேரம். அப்ப பொம்பளைப்புள்ள மாதிரி சாயல் வேணுமேங்கிறதுக்காக பக்கத்து ஊர்ல இருந்து, கிருஷ்ணனைப் பிடிச்சிட்டு வந்தார். நாங்க அப்ப சின்னப் பசங்க. அவனைப் பார்த்திருக்கோம் – நடை உடை சாயல் பாவனைனு. இயல்பிலேயே அவங்களக் கூர்ந்து பார்க்கும்போது, அவங்கள மாதிரிப் பேசுவேன் நான். ‘யக்கா, வணக்கம்கா, எப்படிக்கா போறீங்க’ அப்படின்னு பேசுவேன் 🙂 சின்ன சின்ன தூரத்தில இருந்து பார்த்த அனுபவம் இருக்குது. இந்த திருநங்கைக்கு, அவனுடைய பரப்பிருக்கில்லீங்களா, எந்த நேரத்தில எங்க இருப்பான்னு சொல்ல முடியாது. இந்த நேரத்தில இங்கிருப்பான். நாளைக்கு ட்ரெயின்ல போயிட்டு இருப்பான். பயண சாத்தியம் வந்து நம்மள விட ஜாஸ்தி. ஏன்னா குடும்பத்தை விட்டு இருக்கான். எந்த இடத்திலேயும் இருக்கலாம். இது ஒன்னு. நான் பார்த்த திருநங்கையிலிருந்து அவங்களுடைய உள்ளத்துக்கு நான் கொஞ்சம் தாவறேன். நான் ஒரு திருநங்கையா, எப்படி நான் கூந்தப்பனைல ஆண்மையற்றவனா மாற முயற்சி செய்யறனோ, அது மாதிரி திருநங்கையா மாறினனா மாறலையாங்கிறது ரெண்டாவது. ஆனா ஒரு படைப்பாளிக்கு கூடு விட்டுக் கூடு பாயக்கூடிய ஒரு தன்மை வேணும். ஆனா எங்கேயோ ஒரு இடத்திலே, திருநங்கைகள் ஒரு குழந்தையைத் தூக்கி வளர்த்தலைங்கிறதை நீங்க சொல்ல முடியுமா?

அன்பழகன்: அப்படிச் சொல்லலை. கொஞ்சம் செயற்கையாத் தெரிஞ்சதுன்னுதான் சொல்றேன்.

வேணுகோபால்: சரி. ஆனால், அப்படி நான் பார்த்திருக்கிறேன். சைக்கிள்ல ஒரு பொண்ணு – ஒரு திருநங்கை – ஒரு குழந்தையை எடுத்து வளர்த்தறத நான் பார்த்திருக்கேன். பார்த்திருக்கேன்னா, ஒரு fraction of a second தான். நான் கேட்டேன். என்ன, இந்த குழந்தையோட. ‘அவ வளர்க்கிறாப்பா,’ அப்படினு சொன்னாங்க.

அப்புறம், இன்னொன்னு, நான் திருநங்கைக்குரிய உணர்விருக்கில்லீங்களா அத ரொம்ப கவனமா கையாண்டிருப்பேன், அவ வாழ்வதற்கான ஒரு வழி அது.

சுரேஷ்: அது ஒரு கவித்துவமான இடம்தான். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஒருத்தர், ஒரு குழந்தையை எடுத்து வளர்த்தி தாயாகிற உணர்ச்சில, sublimationனு ஒன்னு இருக்கில்லையா. எனக்கு அந்தக் கதை ரொம்ப திருப்தியா இருந்தது. ‘இழைக(ள்)’ளுமே ரொம்ப முக்கியமான ஒரு கதை. தலித்தோட பாடு இழைகள்ல இன்னும் நல்லாயிருக்கும். மலைக்குப் பயணம் போறானில்லையா, ரொம்ப அற்புதமா இருந்தது. இவன் போறான், பசங்க அவனை விட்டுட்டு முன்னாடி போயிடறாங்க. அப்ப அவன் நினைச்சுக்கிறான், எனக்கு எப்படித் தோணாம இருந்தது. ஒரு பயணம் போறாங்க. ஒரு பிக்னிக் போறாங்க. நம்மள எப்படி அவங்க கூட்டிட்டுப் போவங்கன்னு நினைச்சேன்னு சொல்லிக் குமைஞ்சுட்டு போறது…ரொம்ப நல்லாயிருந்தது.

வேணுகோபால்: அந்தக் கதையைப் படிச்சுட்டு, இப்போ நாம பார்த்தோமில்லையா, லிங்கம்னு ஒருத்தர். அந்தச் சேப்டர்ஸ் படிச்சுட்டு, விக்கிவிக்கி அழுதாறாம். போன்ல பேசும்போதே கைநடுங்க அழுகறார். வசந்தகுமார் அண்ணாகிட்ட போன் பண்ணி, இந்த இழைகள் நான் படிச்சுட்டேன். அந்த பிரியாணி சாப்பாடு வாங்கிட்டு வர்றான் இல்லையா, வாங்கிட்டு வந்தவுடனே அதுல கறி இருக்காது. வெறுமனே பிரியாணிதான் இருக்கும். ‘எங்கேம்மா பிரியாணி’னு அவன் கேட்பான். அதைப் படிக்கும் போது அவரால தாங்க முடியல…அழுதுட்டார். அதுக்குத்தான், கண்ணன், நான் வரும்போதெல்லாம் சாப்பாடு வாங்கிக் கொடுப்பாரு. அவர் சின்ன வயசில பட்ட அவமானம்…ரொம்ப ஏழ்மையில வளர்ந்தவரு..தலித் – அவர் சொன்னாரு, ‘ தலித் எழுத்தாளரை விட நீதான் தலித் கதையை எழுதியிருக்கே’ அப்படின்னு. ஒரு தலித் சொன்ன வாசகம். ஒரு தலித் வாழ்க்கையை தலித் எழுத்தாளரை விட கவித்துவமா சொன்னது நீ மட்டும்தான்னு. ஒரு நல்ல வாசகர். ஜானகிராமனுடைய ரசிகர். பெரிய படிப்பாளி. தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஜானகிராமன் மூவரையும் கொண்டாடுகிறவர். 65 வயசிலயும் தினம், தினம் புதுசுபுதுசாப் படிக்கிறார்.

கண்ணன்: நீங்க இரண்டு extremeலேயும் இருக்கறீங்க. ஒரு பக்கம் ரொம்ப நேரடியா, ரொம்ப உக்கிரமாச் சொல்றீங்க. ஒரு பக்கம் ரொம்ப கவனமாப் பார்த்தாத்தான் தெரியுது. இப்போ, ‘புற்று’ கதையிலே ஒரு பெண் சிசு வதை பற்றியதாகத்தான் நான் புரிஞ்சுகிட்டேன். குழந்தைகள், நாயைப் பற்றிய கதையாகவே போயிட்டிருக்கும். கடைசிலதான் ஒரு பெண் குழந்தை மீதான ஒன்றாக வேறு ஒரு பரிமாணம் எடுக்கிற மாதிரி இருக்கு. ‘உள்ளிருந்து உடற்றும் பசி’யிலும் கடைசிலே மட்டும்தான் ஒரு டயலாக்ல வெளிவரும்.

வேணுகோபால்: ஒரு படைப்பாளி ஒரு விஷயத்தை எழுதும்போதே தேர்ந்தெடுக்கிறான். யாருடைய பார்வையிலிருந்து எழுதலாம். மிக முக்கியமா சிறுகதையில். நாவலை நீங்க கலைச்சுப் போட்டுறலாம். யாருடைய பார்வையிலிருந்தும் நீங்க அத்தியாயங்களா எழுதலாம். ஒரு சுதந்திரம் இருக்கு. சிறுகதைல ரொம்ப கவனமா இருக்கணும். அதுதான் ஒரு எடிட்டர் வேணும்னு சொன்னதுகூட. லா.ச.ரா.கிட்ட – அவன்னு சொல்லிட்டிருப்பார். திடீர்னு நான்னு கூட வந்துரும். அதுக்காக அதெல்லாம் குறைன்னு இல்லை. நம்ம எடிட் பண்ணிறலாம். இதெல்லாம் ஒரு பெரிய குறை கிடையாது. இப்ப என்னன்னா, அந்தக் கதைக்குள்ள ஒரு குழந்தையினுடைய பார்வைதான் இருக்கு. ஒரு சின்னப் பாப்பாவுடைய பார்வைல போகுது. அவ நாய்க்குட்டி வளர்க்கிறா. நாய்க்குட்டி எந்தக் குட்டியும் வளர்கலாம்னுதான் அவ நினைப்பா. ஆனா சமூகத்துல எங்க பார்த்தாலும் பெண்குட்டியை நாம எடுத்து வளர்க்கிறதே இல்லை. ஆண் குட்டிதான். நேற்றுக்கூட ஒரு நாய்க்குட்டி என் பையனுக்குப் பின்னால ஓடிவந்துச்சு. ‘அம்மா இதை எடுத்து வளர்க்கலாமா’ன்னு அவன் சொன்னான். அப்புறம் பார்த்தா, பக்கத்து வீட்டுக்காரங்கெல்லாம் அது பெண்குட்டினு சொல்றாங்க. நேத்துக்கூட நடந்தது. இயல்பான விஷயம்தான். இன்னும் கிராமத்துல தாய் நாய், பெண் நாய் ஆறு குட்டி, ஏழு குட்டி ஈன்றுச்சுன்னா, நாலு பொட்டைக்குட்டி இருக்கும். ரெண்டு ஆண் குட்டி இருக்கும். அல்லது சமமாத்தான் இருக்கும். இது மூணு அது மூணு இருக்கும். இந்த மூணையும் எடுத்துட்டுக் கொண்டுபோய் புற்றுல உள்ள விட்றுவாங்க. மொட்டுக் கெணறு. இது எங்க கிராமத்துல நடக்கிற ஒரு விஷயம். இப்போ, அந்தக் கதை யாருடைய point of viewல சொல்றேன்னா, அந்த சிறுமியுடையது – ஒரு மூணாங்கிளாஸ் நாலாங்கிளாஸ் போகக்கூடியவ. அவளுக்கு எந்த அளவுக்கு இதெல்லாம் தெரியும் – பெண் குட்டியை புற்றில போடுவாங்களா, கிணற்றில விடுவாங்களான்னெல்லாம் தெரியாது. அவளுக்கு ஒரு குட்டிங்கிறதுதான் மிக முக்கியமானதா இருந்துச்சு. ஒன்னு. அவளுக்கு ஒரு இமேஜ் வந்துகிட்டே இருக்கு. தம்பிக்கு முன்னாடி ஒரு பெண் பிறந்தாளா, அப்படின்னு. ஒரு ரெண்டு மூணு வருஷம் முன்னால கட்டில்ல ஒரு குழந்தை உருண்டுகிட்டு இருக்கிற மாதிரி தோற்றம் வந்துகிட்டே இருக்கு. கேட்டா, பதிலில்லை. இப்போ ஒரு கேள்வி கேட்கிறா. கேட்கும்போது, பக்கத்து வீட்டுக்காரங்க யாரும் சொன்னாளா, அப்படின்னு ஒரு எமோஷன் வரும். இல்லைம்மாங்கிறா. இவளுக்கு அந்த இமேஜ் வந்துகிட்டே இருக்கு. அதுவே ஒரு வாசகன் புரிஞ்சுக்கிடலாம். நான் போய் விளக்க வேண்டியதில்லை. இங்கதான் ஒரு முற்போக்கு எழுத்தாளனுக்கும் ஒரு கலைஞனுக்கும் உள்ள வித்தியாசம். போதும். அது வாசகனுக்குத் தெரிஞ்சிடும். அப்புறம் குழந்தையினுடைய பார்வையில சொல்றேங்கிறது முக்கியமான விஷயம். அதனால அங்கு குறைந்தபட்சமா இருக்கு.

உள்ளிருந்து உடற்றும் பசி கூட கடைசில அந்த பதினெட்டு வயசுப் பெண்ணினுடைய கோணத்திலதான் சொல்றேன். அண்ணனுடைய உழைப்பு…இது ஏன் தெரியாது – நம்ம கிராமங்களிலே, சில மீறல்கள் அக்கா தங்கச்சிக்குள்ள நடக்குதுன்னா, கடைசிலதான் நமக்கு அந்தச் செய்தி வந்து சேரும். நண்பர்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இந்தியச் சமூகத்தில அப்படித்தான் இருக்கமுடியும். அதுதான் படைப்பாளி, பண்பாட்டு இழையினுடைய மனோபாவத்துல எழுதணுங்கிறதுக்குக் காரணம் அதுதான். இந்த மனோபாவத்தில நீங்க ஒரு விஷயத்தைச் சொல்லணுங்கிறது. இப்ப அந்த பாப்பாவுக்கு எப்பத் தெரிஞ்சிருக்கும். ஒரு கனவு மாதிரித்தான் இருக்கு. காலைத் தொடற மாதிரி இருக்குது. உலுக்கி விழுந்தா, அவனும் ஒன்னும் இது பண்ணலை. ஒரு டையலாக் தான், ‘அக்கா அவங்க சொல்லலையா?’

சுரேஷ்: ரொம்ப உக்கிரமாத்தான் இருந்தது. அக்கா எல்லாம் சொல்லலையாங்கிறது.

வேணுகோபால்: அதுவும் தலைகுனிந்து கொண்டுதான் சொல்றான். ‘அக்கா அவங்க சொல்லலையா?’ இதுக்கு ஒரு கண்ணியம் இருக்கில்லீங்களா? ஒரு இடம் இருக்கில்லீங்களா? இதை செக்ஸ் கதைனு சொல்வீங்களா நீங்க? பின் நவீனத்துவம்னு சொல்றீங்களே, அந்த பின் நவீனத்துவத்தினுடைய மிகப் பெரிய பிரச்சனை அல்லவா இது?

சுரேஷ்: இது ஒருவகையான starvation பற்றிய கதை தானே.

வேணுகோபால்: இதில யாரக் குற்றம் சொல்வீங்க? குற்றச்சாட்டு வைக்கமுடியுமா…என்ற கேள்வி இருக்கில்லையா. இதை தெரிவிப்பது தான் என்னுடைய நோக்கம் – இப்படி ஒரு சிக்கல் இருக்குது. சமூகத்திலே உள்ளே நுழைஞ்சிருக்கு.

கண்ணன்: இதிலே இவ்வளவு நாசூக்கா சொல்லிட்டுப் போறீங்க. பட்டும் படாம. ஆனா இரட்சணியம் எல்லாம் ரொம்ப explicitஆ இருக்கே.

வேணுகோபால்: அது அல்ல. சொல்றதே அவன் தானே. அந்த ரட்சணியத்திலே, +2ல ஃபெயிலானதற்கு என்ன காரணம்னு தேடறானில்ல. +2 ஃபெயிலாகிறான். ஃபெயிலாகிறது இயல்புதான். வேறு நினைவுகள் ஓடுது. அனுபவப்பட்டவனே இவன்தானே. தன்னுடைய அனுபவத்தைத் தானே அவன் சொல்றான். இப்போ, அதைக் கண்ணனுடைய பார்வைல சொல்றதுன்னா, அதுக்கு ஒரு லிமிட்டேசன் இருக்குன்னு சொல்ல வரேன்.

கண்ணன்: இல்லை, இதில் ரொம்ப அதிகபட்சமா இருக்கேன்னு கேட்கிறேன். ஒரு 17 வயது பையனுக்கு, அவ்வளவு அனுபவங்கள், அதுவும் வெவ்வேறு மனிதர்களோடு சாத்தியாமா?

வேணுகோபால்: கரெக்ட் கரெக்ட். இது ஒரு நியாயமான கேள்விதான். நீங்க சொல்றதை நான் இப்படி எடுத்துக்கறேன். ஒரு கதை சொல்கிற அளவு இவனுக்கு அவ்வளவு அனுபவம் இருக்குமா.

கண்ணன்: அனுபங்கள்ங்கிற போது, ஒருத்தர் ரெண்டுபேர்னாக்கூட பரவாயில்லை. நிறையப்பேர்கூட இத்தனை அனுபவங்கள் சாத்தியமாங்கிறதுதான் என்னுடைய கேள்வி?

வேணுகோபால்: ரெண்டு பேர் தான்.

சுரேஷ்: அவனுடைய சித்தி முறையாகக்கூடிய ஒருத்தரும், ஜெயராணியும்.

வேணுகோபால்: அந்த +2 பையனுடைய அனுபவத்தைத்தான் அந்தக் கதைல சொல்றேன்.

சுரேஷ்: அதைச் சொல்லும்போது, அவனுக்கு அதிலிருக்கக்கூடிய த்ரில் தீராத ஒரு இடத்திலேயே சொல்வான். த்ரில் தீரலை அவனுக்கு இன்னும். அதைத் தாண்டலை. அந்த வயசுக்குரிய த்ரில்லையும் அவன் சொல்றான்.

வேணுகோபால்: ஆமாம். த்ரில் தாண்டலை. அதை அவன் அடையமுடியுமானு தெரியலை. அது going on. progress நடந்துகிட்டு இருக்கு. ஆனால் அந்தப் பையன் இருக்கானில்லீங்களா, அவனுக்கு நீங்கதான் ஒரு மரபை வைச்சிருக்கீங்க. ஒரு அஞ்சு வயசுப் பையனுக்கு, அம்மாவுக்கு இப்படியான மீறல்கள் இருக்கிறதுனால, அம்மாவை அவன் ஒன்னும் குறைவாச் சொல்லிடமுடியாது. அம்மாவின் நேசிப்புக்குரிய ஆள்னு அவனையும் குறையாகச் சொல்லிடமுடியாது. அவன் இன்னும் கொஞ்சம் பக்குவப்பட்ட வயது – ஒரு 13,14 வரும்போதுதான் அம்மாவைப்பற்றிய, அவமானத்துக்குரிய விஷயமாயிருக்கும். ஆனா, அவன் கண்ணீரை வந்து துடைக்கிறான் இல்லீங்களா, ‘என் கண்ணீரால் உன் துயரத்தைக் தாங்குவேன்.’

கண்ணன்: முடிவு நல்லா இருக்கும்.

வேணுகோபால்: நான் அமெரிக்கன் காலேஜ்ல சூப்பிரண்டா இருந்தேன். என்னுடைய அறையிலே ஒரு காலண்டர் தொங்கிட்டு இருந்துச்சு. அந்த காலண்டர்ல பைபிலுனுடைய சில வாசகங்கள் இருந்துச்சு. அந்த ஒரு வாசகம் அந்தக் கதையா உருவாகுச்சு. ‘என் கண்ணீரால் உன் துயரத்தைக் தாங்குவேன்.’ அந்தப் பையன் சொல்றதில்லை. நான்தான் அதில சொல்றேன்னு வைச்சுகிடுங்க. இம்மாதிரியாகக்கூட ஒரு படைப்புக்கான விஷயம் கிடைக்கும். ஆனா அந்த +2 பையனுடைய அனுபவத்தில இருந்துதான் சொல்ல வர்றேன்.

கண்ணன்: ஆனால் நீங்க கிருஸ்தவர்களைப் பன்னிரண்டாவது வரை பார்த்ததே இல்லைனு சொல்லிட்டு, ரெண்டு மூணு கதைகள்ல பயன்படுத்தியிருக்கீங்க – நிரூபணம் கூட ஒரு பைப்ளிக்கல் முடிவுதான்.

வேணுகோபால்: அமெரிக்கன் காலேஜ்லதான படிச்சேன். ரெண்டு extremeலயும் இருந்திருக்கேன்.

சுரேஷ்: ரொம்ப ஆத்தென்டிக்கா வந்திருக்கு.

வேணுகோபால்: ரட்சண்யம் பற்றி இரண்டு வேடிக்கை. ஒரு புத்தகக் கண்காட்சில ஒருத்தர் வந்திருக்கார். வந்தவுடனே – அது திசையெல்லாம் நெருஞ்சில தானே இருக்கு? – ‘இவனெல்லாம் ஒரு எழுத்தாளனா, ரொம்ப மோசமான எழுத்தாளன்’னு சொல்லிருக்கார். வசந்தகுமார் அண்ணாதான் அங்க கடையில உட்கார்ந்திருக்கார். ‘யப்பா, இங்க வாப்பா. நான் இவனத்தாம்பா உலகத்திலயே மகா எழுத்தாளன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். நீ எழுத்தாளனே இல்லைங்கிற’ன்னார். ‘இல்ல சார், நீங்க இதெல்லாம் பப்ளிஷ் பண்ணக்கூடாது’ அப்படின்றக்காரு.
‘சரி, இலக்கியம்னா என்ன’னு அவரும் பேசியிருக்கார்.
அவன் எந்த மனசுக்கும் ஆட்படவில்லை. ஒரு கிருஸ்த்துவ சமுதாயத்தினுடைய விதிமீறல்களை இவன் சொல்லிட்டான்கிறதுதான் அவருக்கு. கடைசில தான் ‘உன் பேர் என்னப்பா’னு அவர் கேட்டிருக்கார். அவர் ஜோசப்னு சொல்லிருக்கார். ‘அப்ப சரிதான், உனக்கு பிடிக்காது.’ அவர் ஊழியத்தை நம்பக்கூடிய ஒரு கிருஸ்துவரா – கிருஸ்துவன்னு சொல்லக்கூடாது. கிருஸ்துவம் நமக்கு நிறைய கொடுப்பினை செஞ்சிருக்கு- ஊழியத்தை நம்பக்கூடிய ஒரு கிருஸ்தவரா இருக்கலாம்.

இன்னொரு நண்பர் – இந்த லிங்கம்னு சொல்றேனில்ல. அவங்க ஊர்ல – வேலூர்ல் – எல்லாமே தலித்துகள், அதிகமா கிருஸ்துவர்கள இருப்பாங்க. அவர் சொன்னாரு, ‘வேணு, எப்படி இவ்வளவு சரளமா வருது – ஒரு கிருஸ்துவன் கூட இவ்வளவு ஸ்லோகங்களைச் சொல்ல வராதே. இதை எப்படிப் பண்ணினீங்க’ அப்படீன்னார். நான் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கன் காலேஜ் விட்டவுடனே, டிசம்பர் மாசத்துக்கு முன்னாடி, கிருஸ்துவக் கூட்டம் நடக்கும். அப்பத்தான் தினகரன், பால் தினகரன் எல்லாம் பார்த்திருக்கேன். அங்க போய் நின்னு வேடிக்கை பார்க்க – சைட் அடிக்கப் போவோம். பெண்கள் கூட்டம் கூட்டமா வருவாங்க. ரொம்ப அழகா இருப்பாங்க. மாலை நேரம், ஒரு அஞ்சு மணிக்கு அப்படியே கூட்டம் சேர்ந்துகிட்டே இருக்கும். 8 மணிக்கு சொற்பொழிவு நிகழ்த்த ஆரம்பிச்சாங்கன்னா, 11 மணி வரைக்கும் இருக்கும். பெண்களை சைட் அடிக்கறதுக்காக நாங்க போகும்போது ஓரத்துல நின்னுக்கிடுவோம். அப்போ, அங்கிருந்து தினகரன் சொல்வார். ‘இங்கே வந்திருக்கும் மற்ற மதத்துக்காரருக்கும் இறைவன் அருள் புரிவாராக. இந்த இடத்திலே கர்த்தர் ஆசிர்வதிப்பார்.’ கேட்கிறதுக்குப் புதுசா இருக்கும். எனக்கு இது புத்தம்பது உலகம். புதிய பண்பாடு. ஆனா எல்லாம் தமிழர்கள். அதற்குரிய பண்பாட்டு அம்சத்தோடதான் அந்தப் புதிய உலகத்தைப் பார்க்கிறேன். உள்வாங்குகிறேன். வேடிக்கை மனத்தோடதான் போனேன். ஆனா, புதிய பண்பாட்டு முறைய அறிஞ்சுக்கிர்றேன். என் கிராமத்தில பாக்காத, கிட்டாத உலகம் இது. இப்போ, அந்த ஸ்லோகமும் நம்மளுக்குக் காதுல விழுந்துகிட்டு இருக்கும். அப்புறம் காலேஜ் சேப்பல்(chapel) இருக்குது. நாள்தோறும் அங்க போதனை நடக்கும். இதெல்லாம் காதுல விழுந்தததை வைத்துக்கொண்டு அதைப் பண்றதுதான்.

அன்பழகன்: நீங்க வேலை பார்க்கும் போது சாலமன் பாப்பையா இருந்தாரா?

வேணுகோபால்: இல்ல, எனக்கு அவர் ஆசிரியர். 98லேயே ரிட்டையர் ஆயிட்டார்.

தியாகு: காமமும் கண்ணீரும் கலக்கிறது எப்படி? உதாரணமா வெண்ணிலைல தொடக்கத்தில காமப்பார்வையோட அந்தப் பெண்ணைப் பார்ப்பான். முடியும்போது படிக்கிறவங்க யார் கண்ணிலேயும் கண்ணீர் வந்துரும். இந்த ரசவாதம் எப்படி?

வேணுகோபால்: காமம் என்பது எல்லாருக்கும் இருக்கக்கூடிய விஷயம். ஒரு முரட்டான ஆளு, மோசமான ஆளுகிட்டக்கூட இருக்கத்தான் செய்யும். நல்லவனுக்கு மட்டும் இருக்கும், கெட்டவனுக்கு இல்லை, அப்படியெல்லாம் கிடையாது. காமம் என்பது காமன்(common)ஆன ஒரு விஷயம். ஆனால் முரட்டுத்தனமான ஆட்களுக்குக் கூட, அவன் ஒரு துயரத்தைப் பார்த்துட்டான்னா, அந்த இடத்துல காமத்தைவிட துயரத்துக்கு மிகப் பெரிய இடம் கொடுப்பான். தனக்குள்ளே ஒரு புது மனுசன அவன் கண்டடையறான். காமவயப்பட்டவனுக்குள்ள ஆன்மா புத்துயிர்ப்பு பெறுது. அந்த ஆன்மா காமத்த மீறிக் கண்ணீராப் பொங்கவைக்குது. அந்த இடத்துல வேற ஒரு முடிவு எடுப்பானாங்கிறது இல்லை. இந்தக் கதையில வரக்கூடியது, சும்மா பெண்களைப் பார்க்கணும் போகணும் அப்படிங்கிறதுதான். போகும்போது கூட அந்தப் பொண்ணு நின்னு பார்த்துகிட்டுத்தான் இருக்கா. வேற படத்துக்குப் போறாங்க. அப்ப அந்தப் படம் போடலை. திரும்பி வர்றானுக. இதெல்லாம் இருக்குது. ஆனா அவள் நோக்கம், ‘ஜெராக்ஸ் கடையில இந்தப் பசங்களப் பார்த்திருக்கனே, பார்த்திருக்கனே’னு நினைக்கிறா.

இன்னொன்னு சார், ஒரு 18 -25 வயசுள்ள பையனுக்கு மகத்தான எண்ணங்கள் அதிகமா இருக்கும். நம்மளுக்கு மகத்தான எண்ணங்கள் கெட்டிதட்டிப் போயிரும். வயது ஏறஏறஏற, எனக்குச் சின்ன வயதிலிருந்த சமூகத் தொண்டனா மாறணும்கிற பெரிய விஷயம் இருந்துச்சு இல்லீங்களா, இப்ப பலமடங்கு இறங்கியிருச்சு. இன்னிக்கான சாப்பாடு என்ன, எப்படித் தகவமைத்துக்கொள்வதுங்கிறதில தான் இருக்கேன். ‘என்னை அடிச்சுட்டான், தூக்குடா’ன்னா, தூக்கிருக்கேனே. நான் யோசிக்கலையே. பசிக்காக நான் திருடியிருக்கேனே. என்னுடைய பசிக்கா இல்லை. என்னுடையா நண்பனுடைய பசிக்காக திருடிருக்கனே. திருட வேண்டிய அவசியம் இல்லை. ஆனா, வீட்டில கொண்டுபோய் சாப்பாடு எடுத்து தட்டுல போடமுடியாது. ஏன்னா, அவன் வந்து, அவங்க அம்மா இன்னொருத்தரோட ஓடிப்போனங்களோட பையன். தாத்தாவுடைய வளர்ப்பில இருக்கான். அவனை வீட்டில போய் தட்டு எடுத்துப்போட்டம்னா எங்க அம்மா, இவனோட எல்லாம் சேர்ந்துகிட்டிருக்கியான்னு அடிக்கும். அப்ப என்ன பண்றது . அவனுக்காகப் போய் தேங்காய் திருடினேன் . இது மாதிரி ஒரு நூறு கதை. நான் சொன்னேனில்லையா, என் சொந்த வாழ்க்கையை எங்கேயுமே எழுதலைனு. ஆனால், இந்த சம்பவங்கள், ஒரு திருடனைப் பற்றி எழுதும்போது, எனக்கு அந்த உக்கிரமும் அந்த அனுபவமும், அவன் என்ன பட்டிருப்பான், என்ன திருடியிருப்பான், என்ன நோக்கத்தில வந்திருப்பான்கிறது எனக்கு தெரியும்னு சொல்றேன்.

கண்ணன்: அதுதான் புத்துயிர்ப்பு கதையில் திருட்டு தத்ரூபமா வருதா?

வேணுகோபால்: புத்துயிர்ப்புல வேறு மாதிரி வரும். அது பசுவுக்காக, தீவனத்துக்காக திருடறது. சகஜம்தான் சார், கிராமத்துல. எங்க வீட்டில, இப்ப எங்க படப்பு இருக்கும். எங்க அண்ணன் அழகா, ரொம்ப ரம்மியமாப் படப்பைப் பண்ணுவான். எப்படினா, 12 காலை ஊன்டுவான். நல்ல உயரத்துக்கு ஊன்டுவான். மேல பலகை போட்டு, அதுக்கு மேல நாத்து – நாத்துனா, மாட்டுக்கான நாத்து, இரும்புச்சோள நாத்து- ஒரு 25 வண்டி நாத்தை, இங்கிருந்து ஒரு 6 பாகத்திற்கு ஏற்றி, அதை நல்லா நேந்து, ஒரு மாசம் பார்த்துகிட்டே இருப்பான். அதுல எவனாவது ஏறித் திருடிட்டா எப்படியிருக்கும்? அதே மாதிரிக் கீழேயும் போடுவான். கீழ மூங்கிலைப் போட்டு, ஒரு சின்ன சந்து விட்டிருப்பான் – ஏன்னா, கரையான் ஏறக்கூடாது. கொட்டத்துக்கு வெளிப்புறமா போட்டு வைச்சிருந்தோம்னா, பயங்கரமா இருக்கும். இதுல எவனாவது பத்திருபது முடியைத் திருடிட்டுப் போயிடுவான். இதெல்லாம் நிகழக்கூடியது தான். எங்க படப்புன்னு இல்ல, எல்லாப் படப்பிலேயும் நிகழும்.

சுரேஷ்: மனநிலை பிறழ்ந்தவர்களும் உங்க கதைகள்ல முக்கியமான பாத்திரங்கள்ல வர்றாங்க.

கண்ணன்: வெகுளியான பாத்திரங்களும் இருக்காங்க. பைத்தியங்களும் இருக்காங்க.

சுரேஷ்: இரண்டு கதை ஞாபகம் வருது. அந்த குழந்தையைக் கொன்னுடற ஒரு பைத்தியம். அப்புறம் மெத்தப் படிச்ச பைத்தியம் ஒன்னு.

வேணுகோபால்: இந்த மெத்தப் படிச்சதை நான் சொல்லிடறேன். நானும், என்னுடைய நண்பன் ஜெயராஜும் – இப்பவும் போனா, அவனோடதான் சுத்துவேன். அவன் மதுரைலேயே பிறந்தவன். பிரிட்டோ ஸ்கூல்ல தமிழாசிரியரா இருக்கான். ஒரு வருடம் எனக்கு இளையவன். ஆனால் ரெண்டு பேரும் ஒத்த நண்பரா, ஒரே க்ளாஸ்மேட் மாதிரி ஆயிட்டோம். ஒரு நாள் ஆரப்பாளையத்துல, பஸ்ஸைவிட்டு இறங்கி – அவன் வந்திருந்தான். வண்டிய நிப்பாட்டி, கீழ இந்த யானைக்கல் பாலம் இருக்கில்லீங்களா, கீழ்ப்பாலம்னு இருக்கும். தண்ணீர் வந்தா மேல போகும். வைகையின் மேல நீர் போகும். ஆனா அன்னிக்கு கொஞ்ச நேரம்தான். திரும்பி வந்திட்டிருந்தோம். என்னுடைய சீனியர் விசுவநாதன்னு ஒருத்தர். அவர் அந்தப் பக்கமாப் போயிட்டிருக்கார். அவனாப் பேசிட்டு, அவனா உளரிட்டு, ரெண்டு பக்கமும் போயிட்டு, திரும்ப வந்திட்டிருந்தான். அப்படி, இப்படி, பிறகு நின்னான், கல் எடுத்துட்டுப் போயிட்டிருந்தான். அவன் பி.எச்டி. படிச்சு முடிச்சவன். இந்த ஒரு காட்சியைப் பார்த்தேன். இவ்வளவுதான். இந்தக் காட்சியைப் பார்த்தவுடனே, அதை வைத்துக்கொண்டு, நமக்கு…

சுரேஷ்: பெண்ணா மாத்திட்டீங்க.

வேணுகோபால்: பெண்ணா மாத்துறோம். அதற்கான சாத்தியங்கள் இருக்கில்ல. பெண்ணுக்குச் சொல்லும்போது, ஒரு ஆணினுடைய துயரத்தைவிட ஒரு பெண்ணினுடைய துயரம் எவ்வளவு பெரிய விஷயம். ஏன்னா, அவங்க தானே நசுக்கப்பட்டவர்களா இருக்காங்க. அல்லது சுரண்டப் பட்டவர்களா இருக்காங்க. அப்போ அந்த இடத்தை நாம பிடிக்கும்போது – ஒரு தேர்வுதான். எழுத்தாளனுடைய தேர்வுதான்.

அன்பழகன்: பெண்ணுனு பார்க்கும்போது, உங்களோட இன்னொரு கதை – மீதமிருக்கும் கோதும் காற்று. அதுல ஒரு விபச்சாரியை, அந்த அளவுக்கு – அவங்களே சொல்ல முடியாது. அவங்க வேதனை, அவங்க ரணம்.

சுரேஷ்: பலதரப்பட்ட மனிதர்கள். நிறைய வெரைட்டி இருக்கு உங்கள் கதைகள்ல.

வேணுகோபால்: இது அனுபவம் சார்ந்ததில்லை. படைப்புங்கிறது எனக்கே வேடிக்கையா இருக்கு. மூணு கேள்வி இருக்கு. ஒன்னு – விபச்சாரியை உனக்குத் தெரியுமா? எனக்குத் தெரியாது. விபச்சாரியோட உனக்குத் தொடர்பு இருக்கா? அதுவும் இல்லை. விபச்சாரியோட துன்ப துயரங்களை அருகிலிருந்து பார்த்திருக்கிறாயா? அதுவும் இல்லை. ஒரு எழுத்தாளன்கிறது மட்டும்தான். வாசிப்பும் இருக்கு. நான் எழுத்தாளனாக உருவாயாச்சு. அதாவது நுண்வெளி கிரகணங்கள் வந்தாச்சு. அப்போ என்னுடைய நண்பர்கள் – தேனி மாவட்டம் சார்ந்து, அங்கிருக்கிற நண்பர்கள் – பாலசுப்பிரமணியன்னு ஒரு பையன் இருந்தான். ஆசிரியரா இருந்தான். அப்புறம் ஆனந்த விகடன்ல வைத்தின்னு இருந்தாரு. பாஸ்கர் சக்தி. நாங்கெல்லாம் ஒரே வயசுக்காரங்க. அவங்களும் ஒவ்வொரு கதைகள் எழுதின காலம். என்னைத் தேடி வர்றாங்க. தேடி வரும்போது கொஞ்சம் கொஞ்சமா இலக்கிய சர்ச்சைகள் பேச்சு இதமாதிரி இருக்கு. ஒரு நாள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலே ஒரு சின்ன தொகுப்பு போடுறாங்க. ‘யானைத் தடம்’னு கொண்டுவர்றாங்க. அதை நீங்க விமர்சனம் பண்ணனும்னாங்க. நம்ம அப்பத்தான் எழுத வந்திருக்கோம். ஒரு நாவல் எழுதியிருக்கோம்கிறதுதான். நண்பர்களுடைய கதைகள் ரெண்டுரெண்டா ஒரு எட்டு கதைகள் சேர்த்துத் தொகுத்தாங்க. அதுல தேனி சீருடையானுடைய ரெண்டு கதை இருந்துச்சு. ஒரு கதை ஒரு ப்ராஸ்டிட்யூட்டைப் பற்றியது. அவ தேனியில் நகரத் தெருக்களில் அலையறா. அவளுக்குப் பசிக் கொடுமை. அன்று ஒரு லாட்ஜ்ல காத்திகிட்டிருக்கா. அன்னிக்கு ஒரு ஆடவன் கிடைக்கவே இல்லை. ஆனால், அன்றைக்குத்தான் அவள் நிம்மதியாக ஒரு நல்ல தூக்கத்தைத் தூங்கினாள், அப்படின்னு ஒரு கதை. இதை நான் கடுமையா எதிர்த்தேன். அவர் தெருவோரத்தில ஆப்பிள் பழக்கடை வைச்சிருந்தார். கேட்கிறேன், ‘நீங்க, இன்னிக்கு இந்தக் கடை வைச்சிருக்கீங்க.’ ஸ்டூல் மாதிரித்தான் போட்டிருப்பார். ‘பழங்களையெல்லாம் துடைச்சுத் துடைச்சு வைக்கறீங்க. ஆப்பிள், ஆரஞ்சுகள் இதெல்லாம் வைச்சிருக்கீங்க. இன்னிக்குப் பகலெல்லாம் அதை வைச்சுட்டு, இரவு 9 மணிவரைக்கும் ஒரு பழமும் விற்காம உட்கார்ந்திருந்தால், அப்பாடா இன்னிக்குக் கைகால் எல்லாம் வலிக்கவே இல்லை, நிக்கக்கூட இல்லை, அப்படின்னு நினைப்பீங்களா?’

‘இல்லை வேணு, அது எப்படி நினைப்பேன்?’

‘அதேதான் சார். நீங்க ஒரு கதை இப்படியெல்லாம் எழுதலாமா? ஒரு உள்ளத்துக்கு மிகப்பெரிய துரோகம் செஞ்சுட்டீங்க,’ அப்படின்னு சொல்லிட்டு அதே வேகத்தில வந்து ஒரு கதை எழுதினேன். இந்தக் கதை அதற்கு எதிரா எழுதின கதை. வைத்தி என்ன பண்ணினான்னா, அப்போ நான் குமுதம் விருதுனாலே ஓரளவு பரவலா அறியப்பட்டிருந்தேன். விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், ‘இந்தப் பையன்கிட்ட ஏதாவது கதை இருந்தா கேளப்பா’ அப்படின்னு சொல்லியிருக்கார். வைத்தி போன் அடிக்கிறான். ‘டேய் அவரே நேரடியா ஒரு கதை கேட்கிறார்டா. குடுறா,‘ன்னு கேட்கிறான். சரின்னு இந்தக் கதையைக் கொடுத்தேன். படிச்சுப் பார்த்துட்டு ஒன்னும் சொல்லாம திருப்பிக் கொடுத்திட்டாராம். விகடன்ல இதைப் போட முடியாது. இன்னொரு நண்பர், ‘ஏய், உன் கதையை – எல்லாம் உட்கார்ந்து சாப்பிட்டு இருந்தோம். படிச்ச உடனே வாந்தி வருதப்பா,’ அப்படின்னு சொன்னான். ஆனால், சில பேர் மட்டும்தான் சொன்னாங்க, ‘ஒரு விபச்சாரியை இவ்வளவு கருணையோடும் இவ்வளவு வேதனையோடும் எழுதியிருக்கே’ன்னு.

சுரேஷ்: இங்கேயும் கோபுர விளக்கு எங்கேயோ எதிரொலிக்கலை? ஆனால், இது வேற தளம். பயங்கரமா எழுதியிருக்கார்.

வேணுகோபால்: இந்தக் கதைக்கு நன்றி சொல்லனும்னா, தேனி சீருடையானுக்குத்தான்
இப்போ, ஒரு கேள்விங்க. வேணுகோபால்க்கு அனுபவமில்லை. ஏதோ பஸ் ஸ்டான்ட்ல பார்த்திருக்கலாம். ஆனா இந்தக் கதை எப்படி அந்த இடத்துக்குப் போகமுடிஞ்சது. இதெல்லாம் ஆரம்ப காலக் கதைகள்.

சுரேஷ்: உங்க எழுத்து முறை எப்படி. நேரம் ஒதுக்கி எழுதுவீங்களா?

வேணுகோபால்: சிலர் வந்து காலத்த systematicஆ வச்சு இருக்கிறதா சொல்றாங்க. அப்படி இருந்தாத்தான் அவங்க எழுதமுடியும். பல இதழ்களுக்கு எழுதணும். எனக்கு சிஸ்டமேடிக்கே இல்லை, சார். வெண்ணிலைக்கு அப்புறம் கதையே எழுதலைனா பாருங்க. மூணு சின்ன நாவல் தானே எழுதினேன். ஆனா, படிப்பேன், நாள்தோறும் படிப்பேன். கிறுக்குத்தனமா படிப்பேன்.

தியாகு: விவசாயத்துல நல்லா வந்த ஒரு மரத்தைப் பிடுங்கி, இன்னொரு இடத்தில நட்டா, வேர் ஊனிக்குதா?

வேணுகோபால்: இல்லை. இப்ப சிஸ்டம் எல்லாம் வந்திருக்கு. தோண்டி கொண்டுப் போய் வைக்கிறாங்க. அது ஒரு செயற்கையாத்தான் இருக்கு. பெருமரங்களை நடுவது சிரமமாகத்தான் இருக்குது.

தியாகு: அப்ப வேணுகோபால் இன்னும் ஊனலையோ?

வேணுகோபால்: ஊனலைனுதான் நினைக்கிறேன். எப்படி ஊனலைனு கேட்டீங்கன்னா, மிக முக்கியமான ஒரு விஷயம் – அம்மாப்பட்டியில எனக்கு நண்பர்கள் வட்டம் பெரிசு. சின்னக் குழந்தையிலிருந்து, 30 வயது வரைக்கும் நண்பர் வட்டங்களோடுதான் இருந்தேன். தோட்டம் சார்ந்து, ஒரு கல்யாணம் சார்ந்து, அல்லது ஒரு சண்டை சார்ந்து, அல்லது ஒரு வியாபாரம் சார்ந்து – நான் பருத்தி கொண்டு போறேன்னா, என்கூட பத்து பேர் வருவாங்க. ‘டேய், கமிஷன் கடைல போய்ப் பாரு. பருத்தி எடுத்துட்டுப் போகணும். நான் வரமுடியாது,’ அப்படியன்னா ஏன்னு கேட்காமக்கூட என் நண்பன் ஒருவன் போய் நிப்பான். ஒரு மோட்டர் இறக்கணும்னா நாலு பேர் வேணும். இன்னிக்கெல்லாம் நாம தண்ணிக்குள்ள போட்டுறோம். அப்ப இறக்கி ஏத்தறது பெரும் பாடு. கயித்தைப் போட்டு. எப்பவுமே பத்து பேர் ஒரு விவசாயி வீட்டில இருக்கணும். அப்படி இருப்போம். இன்னொரு தோட்டத்துக்கு நான் போகணும். இப்படி இருந்த ஒரு உலகம் இருக்கில்லீங்களா, எப்போதுமே மனிதர்களோடு இருந்தேன். இன்னும், சின்ன வயசில களை வெட்டும்போது, சொன்னேனில்லையா, பள்ளிக்கூடத்தை விட்டு வந்துட்டன்னா, 30 பேரு களை வெட்டிகிட்டு இருப்பாங்க. கீழே சால் பிடிச்சு நானும் வெட்டுவேன். அப்படி வெட்டும்பொழுது, அவங்க சொல்லக்கூடிய கதைகள் இருக்கில்ல, அப்ப என்ன சொல்வாங்கன்னா – டேய் நீ இப்படியே வெட்டி வந்தேனா என் சம்பளத்துல பாதி தர்றேன்டா, அப்படிம்பாங்க. இப்படி அழகா வெட்டுறையேன்னு ஊக்குவிப்பாங்க. அவங்க சொல்லக்கூடிய காதல் கதைகள், கண்ணீர் கதைகள் – எனக்கு ரொம்ப வசீகரமானது பெண்கள் கதைகள்தான்னு நினைக்கிறேன். இப்போ நினைவிருக்கோ இல்லையோ, ஏதோ ஒரு கதை சொல்லி இருப்பாங்க. யு.ஆர்.அனந்தமூர்த்தி அடிக்கடி சொல்வார். பெண்கள் பொறணி பேசுவதை உற்றுக் கேளுங்கள்னு. ஏன்னா, அதில ஒரு உண்மை, ஒரு துயரம், அவங்களுக்கு அது பொறணியா இருக்கலாம். சார்ந்த ஒருவருக்கு ஒரு துன்பமா இருக்கலாம். நான் என்ன எடுத்துக்கிறேங்கிறதுதானே இருக்குது. எனக்கு ஒரு தகவல் வருதில்லையா. இவங்களோடவே இருந்தேன். பெண்களோட, நட்பு வட்டத்தோடு, சினிமா எதுவாக இருந்தாலும். இங்கே வந்து அறையை விட்டு – அந்த நண்பர்கள் இல்லை, சார் – ‘அப்படியே வாங்க சார், ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வரலாம்’னு எப்படி சுரேஷைக் கூப்பிடறது. சுரேஷூம் நானும் பழகறதே ஒரு பெரிய பிரச்சனையா இருக்கே. போளுவாம்பட்டிக்குள்ள வந்து ஏழு வருஷமா அந்த அறைதான் என்னுடைய நண்பன். அல்லது அந்த வீடுதான் என்னுடைய நண்பன். என்னோட பால்யத்த வளத்தெடுத்த ஊரு இது இல்லையே. வெறுப்பையும், குரோதத்தையும், கருணையையும், கனிவையும் இந்த மக்களிடமிருந்து நான் பெறலையே! சும்மா வணக்கம் வைக்கிறவங்கள நான் எப்படி நண்பன்னு சொல்லிக்கிடமுடியும்?

சுரேஷ்: போளுவாம்பட்டி ஒரு கிராமம்தானே.

வேணுகோபால்: இல்லை இல்லை. நானா நடந்து போறேன். எனக்கு நண்பன் இல்லை, சார். நான் திருடுவதற்கு ரெடி. நீங்க வர்றீங்களா? உங்களுடைய பசிக்கு நான் திருடுவதற்கு வர்றேன். அந்த நண்பன் இல்லையே எனக்கு.

அன்பழகன்: இப்ப ஊர்ல, அந்த நண்பர்கள் இருக்காங்களா?

வேணுகோபால்: அது இல்ல, சார். என்னுடைய வயசுல அவங்க இருக்காங்க. வெவ்வேறு வேலையில இருக்கலாம். ஒருத்தன் விவசாயியா இருக்கான். ஒருத்தன் ட்ரைவரா இருக்கான். இப்போ மாதத்துல பத்து நாள் தேனி டூ திருவனந்தபுரம் சரக்கு ஏத்திக்கொண்டுபோய்க் கொடுத்துட்டு வரான். நான் ஆ.மாதவனைப் போய் ஒரு நாள் பார்த்துட்டு வந்ததைச் சொன்னேன். கடைத்தெருக் கடையில போய் சுத்தியடிச்சுட்டு வந்ததைச் சொன்னேன். அது ஒரு பெரிய கதை. ‘டேய் ஒருநாள் உங்கூட வர்றேன். போய் நம்ம ரெண்டு பேரும் என்ன பண்றோம்னா அந்த செல்வி கடையில உட்கார்ந்துட்டு பேசிட்டு வருவோம்டா,’ அப்படினு சொல்லியிருக்கேன். எனக்கு இன்னிக்கும் கூட ஆர்வம் இருக்கு. டேய் எப்படா வர்றே அப்படிங்கிறான். எட்டாங்கிளாஸ் படிச்ச பையன்.

தியாகு: இந்த ஒட்டாமை, கோயமுத்தூரிலே பதியப்படாத தன்மை உங்கள் வாழ்க்கை அனுபவம், நிலமென்னும் நல்லாள்ல பெருமளவு இருக்கு.

வேணுகோபால்: அந்தச் சாராம்சம் இருக்கலாம். இப்படி வைச்சுக்கங்க. எனக்கு அந்நியப்பட்ட ஒரு வேதனை இருக்கில்லீங்களா, ஏதோ தனிமைப்பட்டுட்டோமோன்னு. அந்தப் பிரிவு இதை எழுதத் தூண்டுது. அப்படியே எழுதினாலும், ஒரு படைப்பாளியா இல்லாம, வேணுகோபால்ங்கிற மனிதனா வந்து பண்ணினா, அதனோட முடிவு வேறயாத்தான் இருக்கும். ஆனால் வேணுகோபால் என்கிறவன் அந்த அனுபவத்தோடு ஒரு படைப்பாளியா மாறும்போது, உலகத்தை நீங்க ஏற்றுக்கொண்டுதானே ஆகணும். ஒரு பயணம் என்பதை, ஒரு இடம்மாற்றம் என்பதை ஏற்றுக்கொண்டுதானே ஆகணும். எனக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனா இங்க, தஞ்சாவூர்ல இருந்து எத்தனை பிராமணர்கள் மயிலாப்பூருக்குப் போனாங்க. எப்படிப் போனாங்க? இங்கிருந்து டில்லிக்கு எப்படிப் போனாங்க? போயிட்டு இருந்தாங்களே! இது எனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் எல்லா மனிதனுக்கும் பிடிக்காம இருக்குமா என்கிற ஒரு கேள்வி இருக்குது. அப்போ, நீ என்ன செய்யப் போறே? ஏதோ ஒரு வகையில உன்னை அடையாளப்படுத்த வேண்டிய சூழல் இருக்கில்லீங்களா?

கண்ணன்: கலாச்சார வேறுபாடுகளை ரொம்ப நுட்பமா அதில சொல்றீங்க. உதாரணமா, தண்ணீர் சார்ந்தது – இங்க தண்ணீர் நிறைய இருக்கு, அங்க தண்ணீர் இல்லை. அதனாலே பயன்படுத்துகிற விதம் மாறுது.

வேணுகோபால்: கண்ணன், ஒரு வேடிக்கை என்ன தெரியுங்களா? இந்த ஊருக்கு வரும்போது எங்க மாமனார் எங்க தோட்டத்திலே இருந்தார். உழுது போட்டிருக்கோம். மக்காச்சோளம் நடலாம்னு இருக்கோம். என்ன பார் போடலையான்னாரு. ‘பார் போடலையாவா? அதான் பாத்தி போட்டிருக்கோமில்ல.’ எங்க ஊர்ல பாத்திதான் போடுவோம். ‘ஹிம். நீங்கெல்லாம் விவசாயம் பண்ன லட்சணத்தை பார்த்தா. பார் போடாத விவசாயமா. உங்க விவசாயத்தைக் கொண்டு போங்க. குப்பைல போடுங்க,’ அப்படின்னார். எனக்கு உயிரே போச்சு. அது அவனுடைய முறை. கேப்பை பாத்தி போட்டுத்தான் நடணும். ஏன்னா, நிறைய நடமுடியும். அப்ப, அவன் பாத்தியைக் கண்டுபிடிச்சிருக்கான். இந்த பார்னா மண்ணு பொதுபொதுபொதுனு இருக்கும். மஞ்சளுக்கு அணைகட்டுவதற்கு – அந்த மண்ணு தேவையாயிருக்கு. மஞ்சளுக்குரியது தான் பார். கரும்புக்குப் பார். அதிலே என்ன பண்ணிட்டோம் – பருத்தி எல்லாத்தையும் அதுல நட்டாங்க. எங்களுக்குப் பாருன்னாவே என்னான்னு தெரியாது. ஆனா அதை நான் கைக்கொள்ளலைங்கிறதுக்காக ஏளனத்துக்குரிய விஷயம் இல்லை அது. நான் அதிசயமா பார்ப்பேன். ஓ, இப்படியொரு முறையிருக்கா. நான் பார்க்கிற பார்வைங்கிறது வேற. ஆனா அவங்க பார்க்கிற பார்வை – இதை தாங்கிக்கிட முடியாது. அப்ப நம்ம ஓகோன்னு விவசாயம் பண்ணினோமே, நம்மள விவசாயியே இல்லைங்கிற மாதிரியில்ல பாக்குறாரு. இது ஒரு முறை. அது ஒரு முறை. நான் தப்பா சொல்லலை. அவங்க விளங்கிக் கொண்டது அப்படி. நாம நினைக்கிறோம், ஒரு இலங்கைத் தமிழன் இந்தியாவுக்கு வந்தால் மட்டும் ஒரு அந்நியத்தன்மை இல்லை. அல்லது ஒருத்தன் இங்கிருந்து அமெரிக்கா போனா மட்டும் அந்நியமாகிறதில்லை. ஒரு மாவட்டம் விட்டு மாவட்டம் வர்றதுகூட அந்நியப்படறதுதான். அதுவும் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வருவது ரொம்பக் கடினமான வேலை.

சுரேஷ்: உங்க ஆசிரியர் பணியைப் பற்றிச் சொல்லுங்க. அது உங்களுக்குத் திருப்தி அளித்ததா? திருப்பியும் ஆசிரியப் பணிக்குச் செல்வதற்கு நாட்டம் உண்டா?

வேணுகோபால்: நான் படித்ததின் நோக்கம், தேர்ந்தெடுக்கொண்ட விஷயம், நானா என்னை உருவாக்கிக் கொண்டது எல்லாமே ஒரு படைப்பு சார்ந்துதான். தெளிவாக. என்னுடைய மனசும் அப்படித்தான் இருந்தது. அதற்கான ஒரு தேடலோடுதான், அந்தக் கல்வி உதவுமோன்னுதான் அதைப் பண்ணினோம். அதுல எம்.ஏ. படிக்கணும், எம்.ஃபில். படிக்கணும், பி.ஹெச்டி. படிக்கணுங்கிறது எல்லாம் ஒரு கல்வி தகுதிக்காக. படைப்புக்காக அல்ல.

சுரேஷ்: பார்க்கப்போனா தமிழ் இலக்கியத்திலேயே மெத்தப் படித்த படைப்பாளி நீங்கதான்.

வேணுகோபால்: ஐயோ. ஒருபோதும் இவர் இந்தப் படிப்புப் படிச்சிருக்காருன்னு சொல்லவே வேண்டாம்.

ஆசிரியர்ப் பணி என்னான்னா, ஆசிரியர் பணி பார்க்கணுங்கிறதுக்காக நான் செய்யலை. ஒரு பாதுகாப்புக் கருதி எடுத்துகிட்டேன். இலக்கிய மாணவன் தொடர்ந்து படிக்கலாம், அதன் எல்லைவரை படிக்கலாங்கிறது ஒன்றுதான். நான் பணியாற்றியது ஒரே ஒரு பள்ளி, அப்புறம் எல்லாம் கல்லூரிகள். பொதுவாவே, வேணுகோபால் நல்ல ஒரு, ப்ரில்லியண்ட் ஆசிரியர், வசீகரமான ஆசிரியர், ப்ரில்லியண்ட்ங்கிறவிட ஒரு ஈர்ப்பா சொல்லிக்கொடுப்பான்கிற பேர் இருக்கும். ஒரு பாடத்தை என்னுடைய சொந்த அனுபவங்களில் இருந்து சொல்லித்தருவேன். அது அவங்களுக்கும் ரொம்ப ஈர்ப்பா இருக்கும். ஏன்னா, அது பாடத்துல இல்லை. பாடத்தோட தொடர்புடைய ஒன்றா இருக்கும். எல்லாப் பசங்களும் ரொம்ப பிணைப்பா இருப்பாங்க. அமெரிக்கன் காலேஜ்ல இருக்கும் போது, நான் ஹாஸ்டல்ல இருந்தாலும், ஒரு பத்து பேர் கூடிக்கிடுவாங்க. கேண்டீன் போனா இருபது பேர். நாலு மணிக்கு கல்லூரி முடிஞ்சா ஏழு மணிவரைக்கும் கேண்டீன்ல சுத்தி உட்கார்ந்திருப்பாங்க. இரவெல்லாம் பேசிட்டிருப்போம். அப்படித்தான் இருந்தது. எனவே கல்வியில நான் பகிர்ந்துக்கிறதுக்கோ சொல்லித்தர்றதுக்கோ நல்ல இடம்தான். ஒரு வருமானம் தான். ஆனால், படைப்பு சார்ந்த ஒரு உருவாக்கத்துக்கு எந்த வகையிலும் அதில் ஒரு பயன்பாடு இல்லை. ஏன்னா, ஒரு பணிப்பளு இருக்கு. இதெல்லாம் எழுதணும்னா நேரம் இருக்காது. படிப்பிருக்கும். தேர்ந்து படிக்கலாம். சொல்லித்தரலாம். படைப்பெல்லாம் பின்தங்கிப் போகுதேங்கிற ஒரு ஏக்கம் இருந்தது. அதனால தான் அந்தப் பணி வேணாம்னு நினைக்கிறேனே தவிர பணி ஆற்றக்கூடாதுங்கிறதில்லை.

சுரேஷ்: ஆற்றின வரைக்கும் மாணவர்கள்கிட்டப் பேசுவதற்கு நிறைய இருந்திருக்கும்.

வேணுகோபால்: இதுவரைக்கும் 13 வருஷ மாணவர்கள் – அழைக்காத மாணவர்கள் இல்லை. மாணவர்கள் எல்லார்கிட்டயும் இப்ப என்னுடைய செல்போன் நம்பர் இருக்கு. எப்பயோ படித்த மாணவர்கூட எனக்கு போன் பண்ணி பேசக்கூடியதிருக்கும். அதனாலேயே போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிடுவேன் நான். ஏன்னா ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒரு மாணவன் பேசுவாரு. அவருக்கு ஒரு நல்ல பதில் சொல்லணுமே. எனக்கு என்னன்னா, அந்தப் பணி நல்ல பணிதான். ஆனால் நான் பார்த்தது பூராவுமே self-finance. சனி ஞாயிறு கூட விடுமுறை இருக்காது. ஞாயிற்றுக்கிழமை இருந்தாக்கூட அதுசார்ந்த ஏதாவது பணி இருக்கும். பேப்பர் திருத்தறதோ, மார்க் என்ட்ரி பண்றதோ, வினாத்தாள் தயாரிக்கிறதோ, அதை டைப் அடிக்கிறதோ, இது மாதிரி பல்வேறு வேலை தொடர்ந்து இருக்கும். இன்னிக்கு இத்தோடு முடிஞ்சதுனா, நாளைக்கு ஒரு வேலை இருக்கும். எனவே அந்தப் பணி தொடர்ந்து இருக்கிறதுனாலே, படைக்கணுங்கிற விருப்பம் நிறைவேறாமப் போகுதேங்கிற ஏக்கத்தினாலதான் பணிக்கு வேணானு சொன்னேனே தவிர, அந்த ஆசிரியப் பணியிலே ஒரு ஆசிரியனா நிறைவடையக்கூடிய ஒரு இடம் இருக்கு. படைப்பாளியா நிறைவடையவே முடியலை. தடையா இருந்தது நேரம்.

அன்பழகன்: அரசுப்பணிக்குத் தேர்வு எழுதலையா நீங்க?

வேணுகோபால்: அது ஒரு பெரிய கதை. நான் படித்த காலத்திலே எம்.ஃபில் போதுமானதா இருந்துச்சு. அதை நோக்கியிருக்கும் போது, பி.எச்டி வேணும்னாங்க. பி.எச்டி முடிச்சவுடனே நெட் வேணும். இப்படி என்னுடைய காலத்திலே ஒரு விதி விளையாடிகிட்டே இருக்குது. நான் ஆடி மாசம் பிறந்தேன். அதனால சூரக்காத்து அடிச்சுகிட்டே இருக்கு 🙂 சாகிற வரைக்கும் அடிக்கும்போல இருக்கு. எங்க அம்மா சொல்வாங்க – ஆடி மாசம் பிறந்து ரொம்ப அசைச்சுப் போட்டியேடா. எம்மேல ரொம்பப் பிரியமா இருக்காங்க, இப்ப. இருக்கிற மகன்களிலேயே நான்தான் அவங்களுக்குப் பிடித்த மகன்.

நீங்க இப்ப வேலை தேடுவதிலே என்ன தயக்கம், ஆசிரியர் வேலை பிடிக்கலையானு கேட்கறீங்க. லா.ச.ரா.வை படிச்சீங்கன்னா, அந்தக் கதையைப் படிக்கும்போது நாம் ஏதோ ஒருவகையில், ஒரு வாசகன், ஒரு வகையில், இந்தக் குடும்பத்துக்குத் துரோகம் பண்றோமோ, ஒரு பொறுப்பின்மை எனக்கிருக்குதோ, என்ன இந்தப் பெண் இவ்வளவு உழைச்சிகிட்டிருக்கா, பிள்ளைகளுக்காக, அவங்களுக்காக, நான் பொறுப்பின்மையோட இலக்கியம் இலக்கியம்னு இந்த புடுங்கிற வேலை செஞ்சிட்டிருக்கனே, இது நியாயமா இல்லை, அப்படினு தோணுது சார். இலக்கியமா வாழ்க்கையானா, வாழ்க்கையை நீ முதல்ல பாருங்கிறது முக்கியமாப்படுது. ஆனா எத்தனை தடவை செருப்பில அடிச்சாலும் இந்த படைப்பாளி, திரும்பதத் திரும்ப புதுமைப்பித்தன் வேடம் போட்டுகிட்டு டான்ஸ் ஆடுவாங்களே தவிர மறுபடியும் அங்க போகவே மாட்டாங்க. இது இளைஞர்கள் மேல பொறாமைல சொல்லலை. நான் கூட புதுமைப்பித்தன் பொறாமைனால சொன்னாரா, கு.அழகிரிசாமியையும் ரகுநாதனையும் பார்த்து, இதை வந்து ஒரு டைம்-பாஸா வைச்சுக்கோ, வாழ்க்கை முக்கியம் அப்படினு ஒரு தடவை சொல்றாரு. இரண்டாவது இடத்தில நீ இலக்கியத்தை வைச்சுக்கோ அப்படினு சொல்றாரு. அவரோ இவ்வளவு பெரிய மாஸ்டர்பீஸ் எழுதிட்டு, இவங்கெல்லாம் மாஸ்டர்பீஸ் எழுதாமப் போகட்டும்னு நினைச்சு சொல்லிருப்பாரோ…never sir. ஒரு போதும் ஒரு படைப்பாளி அப்படிச் செய்யமாட்டான். நீ படைப்பாளியாத் தமிழ்ச்சமூகத்தில இருக்கிறது மிகமிகச் சிக்கலான ஒரு செயல். படைப்பாளினா எல்லாருமே ஜெயகாந்தனையோ, ஜெயமோகனையோ ஒப்பிடக்கூடாது. படைப்பாளினா பல்வேறு படைப்பாளி இருக்காங்க. படைப்பாளியா இங்க வாழ்றது, பல்வேறு அரசியல், நீங்க ஒரு படைப்பைப் படைச்சுட்டீங்கன்னா, அது நல்ல படைப்பா இருந்தால்கூட இதை யார் பப்ளிஷ் பண்ணுவாங்கன்னு பார்க்கணும், அவனுக்கு நீங்க ஜால்ரா போட்டிருக்கணும், இந்தப் பத்திரிக்கைக்கு அந்தப் பத்திரிக்கைக்கு ஜால்ரா போட்டிருக்கணும், இதுமாதிரி ஒருவகையான வலைகள் இருக்கு. இதையெல்லாம் மீறி, நீங்க வரணும். லா.ச.ரா. படிக்கும்போது, அவர் சொல்றது கரெக்டாதான் இருக்கு. எவ்வளவோ இழந்து வர்றோம், இலக்கியம் இலக்கியம்னு சொல்லிட்டு என்னத்த நாம சாதிச்சோட்டோம். உருப்படியா ஒரு குடும்பத்துக்கு நல்லது செஞ்சா ஒரு நன்றி உணர்வாவது இருக்கும். ரெண்டு பசங்கள நல்லா வளர்த்தான்னு. ஆனால், இதெல்லாம் விட்டுட்டு இலக்கியம்கிறது மிகப்பெரிய துரோகம் அப்படினு தோணும் சார். அதாவது, இன்னொருத்தருடைய படைப்பை நான் வாசகனாய் இருந்து படிக்கும்போது தெரியுது – எனக்கே இது தெரியலை, நான் துரோகம் பண்றேன்னு. இது சரியான பாதை அல்ல, அப்படிங்கிறது. இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியலை. எனக்கு இரண்டு வகையாக தெரியுது. என்னை நீங்க மாடு மேய்க்கச் சொல்லுங்க. நான் சந்தோசமா மேய்ச்சுருவேன். அல்லது ஒரு தோட்டத்தைப் பார்க்கச் சொல்லுங்க, நான் சந்தோசமாச் செய்திடுவேன். அறுவடைல நீங்க ‘வேணு இப்படி அறுவடைக்குக் கொண்டுவந்து நிப்பாட்டிட்டான்’னு சொல்லிடுவீங்க. என்னைப் போய் சம்பாதிக்கப் போங்க, பணத்துக்குப் போங்கன்னா முடியலைனு சொல்ல வர்றேன். தமிழ்நாட்டில மகத்தான படைப்பாளியன்னா, அவன் எல்லா அவமானங்களோட செத்துத் தொலையணும். அதுதான் தமிழ்நாட்டுப் படைப்பாளிக்கு விதிச்சிருக்க விதி. அத இனி எவனாலயும் மாத்த முடியாது.

கண்ணன்: நீங்க ஒரு தோட்டத்தைப் பார்த்துட்டு இலக்கியத்தில் ஈடுபடறது இன்னும் சாத்தியம் தானே?

வேணுகோபால்: அந்தச் சுழல் இருக்கில்ல சார், வாத்தியார் சுழலைவிட பிரம்மாண்டமான சுழல். இது சின்ன அலைனா, அது சுனாமி. விவசாயம் இன்னிக்கு ஒரு சுனாமி. சுருட்டிப் பனைமரத்தளவுக்கு ஒரு சுழட்டு சுழட்டி ஒரே அடி அடிச்சிரும். அதுல நீங்க உருண்டுகிட்டே இருக்கணும். அது வேறு விதமானது. ஆனால் அது ஒரு படைப்பாளிக்குப் பேரனுபவங்களைத் தரக்கூடியது. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தந்துகிட்டே இருக்கும். ஓரளவு routine அனுபவம்தான் இது (வாத்தியார் வேலை). ஆனால், விவசாயம் ஒவ்வொரு வெள்ளாமைக்கும் நீங்க உறுதியாச் சொல்ல முடியாது. ஆண்பிள்ளையா பெண்பிள்ளையான்னு சொல்ல முடியாது. எந்த நிமிடத்திலும் அது உங்களை வீழ்த்திடும். ஏச்சிடும், சரிச்சுப் போடும், அல்லது ஏமாத்திப்போடும், அல்லது கொண்டாட வைக்கும், எல்லாமே நடக்கும். ஆனால், இன்னிக்கு இருக்கிற சூழல்ல விவசாயி வெற்றி அடைவது ஜீரோ சதமா இருக்கு.

கண்ணன்: நகரமயமாதலை சில நுட்பமான வழிகளில் நீங்க சொல்ற மாதிரித் தெரியுது. உதாரணமா – பெயர்கள். சில பெயர்கள் ரொம்ப நவீனமா வைக்கறீங்க. உயிர்ச்சுனைலையே பார்த்தோம்னா, நிதின், உமா, பிருந்தா இது மாதிரி நகரம் சார்ந்த பெயர்களா இருக்கு.

வேணுகோபால்: காலம். படைப்பாளிக்குத் தெரியுமில்லையா, இது இந்தக் காலத்துல எழுதறோம்கிறது.

கண்ணன்: கதைகளைப் பொருத்து மாறிட்டே வருது. இதைத் திட்டமிட்டு வைக்கறீங்களா.

வேணுகோபால்: யோசிச்சுன்னு இல்லை. ஒரு புழக்கத்தில இருந்து தான் வருது. இந்த இடத்திலே, இந்த காலத்திலே, இந்த ட்ரென்ட்ல என்ன இருக்குங்கிறதுதான். இன்னிக்கு ஒரு சின்ன குழந்தையை நான் குப்புசாமின்னு சொன்னா அது சாத்தியமில்லை. குழந்தைக்கு யாருமே குப்புசாமின்னு வைக்கிறதில்லை.

கண்ணன்: அது உங்களுதுல தனித்துவமாத் தெரியுது. சினிமாவிலயே இப்ப கிராமத்துப் படங்களிலெல்லாம் பார்த்தால், பழைய பெயர்களாத்தான் இருக்கு. பெரும்பாலும் இதை யாரும் இன்னும் கவனிக்கிறதில்லை. கிரமம்னு வந்தாலே கிராமத்துப் பெயரா வைக்கறாங்க. ஆனா கிராமத்தில யாரும் இப்ப அந்தப் பெயர்களை வைக்கிறது இல்லை.

சில கதைகள்ல, தொழில்மயமாகிற இடத்தில பாதிக்கப்படுகிற மாதிரி வர்ற கதைகளில் எல்லாமே நவீனமான பெயர்கள் வைச்சிருக்கீங்க.

சுரேஷ்: அதி நவீனமான பெயர்கள்னு கூடச் சொல்லலாம். நிதன், பூமிகா,..

கண்ணன்: சிறிய கிராமம், சிறு நகரம்னு பார்த்து வைக்கறீங்களா?

வேணுகோபால்: தலைமுறைதான். முன் தலைமுறைல என்ன பெயர் வைச்சிருந்தாங்க. இன்றைக்கு என்ன பெயர் வைக்கிறாங்க. தலைமுறைகள்தான் யோச்சிச்சேன் நான். அப்புறம் இடம் சார்ந்தும் யோசிக்கிறேன்.

சுரேஷ்: அப்புறம் தற்காலமா எழுதறதே தமிழ்ல குறைஞ்சு போச்சு. அப்படி எழுதும்போது நகரத்துக்கு வந்துடறாங்க. ஜெயமோகன் மாதிரியானவங்க சிறுகதைகள் எழுதினாக்கூட நாற்பதுகள், ஐம்பதுகள், அறுபதுகள்ல வைச்சுத்தான் எழுதறாங்க. தொண்ணூறுகள்ல, 2000ங்கள்ல நடக்கிற மாதிரியான கதைகள் எல்லாம் வேணுகோபால்தான் எழுதிகிட்டிருக்கார். காலம் ரொம்பப் பிரதானமா இல்லை, ஆனா நம்மால புரிஞ்சுக்கக்கூடியதா இருக்கு.

அன்பழகன்: விவசாயப் பின்புலம் சார்ந்துதான் பெரும்பாலான சிறுகதைகள் வருது. கிராமத்திலயே இருந்திருக்கீங்க. பாவைக்கூத்தெல்லாம் நடக்கும். அதெல்லாம் தொட்டுப் பார்க்கலாமே. ஒரு சைக்கிள் சாம்பியன் சைக்கிள் ஓட்டுவாரு. இதெல்லாம் அதிகமா யாருக்கும் தெரியாதே.

வேணுகோபால்: அடிப்படைல என்ன தோணும்னா, வயசிருக்குது – ஆனா உண்மையிலயே அது இல்ல சார் – அப்படினு ஒரு கற்பனைலயே, எழுத்தாளனுக்குரிய ஒரு கற்பனைலயே விட்டுறறேன். உதாரணமா, நொங்கு வித்துகிட்டு வருவாங்க. நூறு நொங்கப் பானையில சுமந்துகிட்டு வருவாங்க. காய்கறிகள் விற்பாங்க. காடாத் துணியைக் கொண்டுவந்து ஏலம் விடுவாங்க. தர்பார் ஏலம் விடுவாங்க – வாழ்க்கையில ஒரே ஒரு தரம் பார்த்திருக்கேன், சின்ன வயசில. அதாவது நீங்க கேட்ட விலைக்குக் குடுத்தறணும். ஒரு ரூபாய்க்குக் கேட்டாலும் குடுத்தறணும். அந்த மாதிரி. இந்த ஏலமெல்லாம் உள்ளே வரலை.

இந்த மாதிரி ஆட்களை நம்ம எழுதும் போது, நான் என்ன நினைக்கிறேன்னா, அவனுடைய வாழ்க்கையை எழுதணுங்கிறபோது நான் ஒரு பார்வையாளனா எழுதக்கூடாது. அவனுடைய வாழ்க்கையில நான் பயணப்படணும். அதுக்கான நேரம், அந்தப் பொறுமை எங்கிட்ட இல்லைங்கிறேன். ஆனால் ஒரு பெரிய நாவல்குள்ள அவங்க சாதாரணமா வந்து போயிடலாம். ஏன்னா, வேறு ஒரு களம் அங்க நடந்துகிட்டிருக்கு. இடையிலே ஒரு கோயில் கும்பிடறாங்க. அன்னிக்கு அவன் வந்து போனான்கிறது போதும். அவன் அங்கிருந்து நகர்ந்துவந்து இந்த கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, மூன்று நாள் இருந்து போனான்னா, அந்த வாழ்க்கை இருக்குன்னா நான் அதற்குள்ள அந்தப் பயணம் பண்ணனும். கழைக்கூத்தாடிகள் இருக்காங்க – வெறுமனே அவங்களை எழுதறது கூடாது. அவங்க கலையையும் சேர்த்துத்தான் எழுதணும். கழைக்கூத்தாடி பார்(bar) விளையாட்டு விளையாடுறான்னா, அந்த பார் விளையாட்டை நான் வெளையாடணும்னு சொல்றேன். விளையாட முடியலைனா நீ அதை எழுதக்கூடாது.

நான் ஒரு கதை – ஒயிலாட்டக் கலைஞனைப் பற்றி எழுதியிருக்கேன். அநேகமா வெண்ணிலைலே இருக்கும்னு நினைக்கிறேன். கொம்பும் கொடியும். ஒரு குடிகாரன், குடிகாரனுடைய மனைவி, மாமனார் – 24 மணிநேரம் பையன் குடிச்சிட்டிருப்பான். கூட்டுறவு வங்கிலே வேலை பார்ப்பான். அரிசி போடறது மண்ணெண்ணை ஊத்தறதுல ஏமாத்தி இருப்பான். ஒரு நாலு தடவை இது பண்ணலாம். கணக்கு டேலி ஆகலைன்னா போய்க் கட்டணும். எத்தனை தடவை அந்த பொண்ணு இதைப் பண்ணிட்டே இருப்பா. மாமனார் மேல ஒரு பிரியம் வர்ற மாதிரி ஒரு கதை கொம்பும் கொடியும். அதுல மாமனார் ஒரு மிகப்பெரிய ஒயிலாட்டக் கலைஞர். அந்த ஒயில் ஆடுவார். அந்த ஒயிலாட்டத்தினுடைய நுட்பங்களையும் அதில எழுதியிருக்கேன். ஏன்னா ஒயில் கலை எனக்குக் கொஞ்சம் தெரியும். அந்தக் கலை துருத்திகிட்டோ, ஸ்டிக்கர் பொட்டு மாதிரி ஒட்டிக்கிட்டோ இருக்கக் கூடாது. வாழ்கையினுடைய ஒரு அம்சமாக வந்தால்தான். ஒயிலாட்டம்னா தொழிலா செய்யற ஆள் இல்லை; ஓய்வு நேரத்தில் ஆடுகிற கலைஞன்தான். எந்தக் கலைஞனை தேர்ந்தெடுக்கிறோம்கிறது – நல்ல கலைஞன், கபடி ஆட்டத்திலில்லையா, ஒயிலாட்டத்தில் இல்லையா, காவடி சுத்தறாங்கில்லையா, பிரமாதமா காவடி சுத்துவான். இங்கிருந்து கொண்டுபோய், நேர்த்திக்கடன் முடஞ்சவுடனே மறுநாள் பசுமாட்டைப் பிடிச்சுகிட்டு மேய்க்கப் போயிடுவான். அந்த நிமிடம்தான் அவன் காவடியாட்டக் கலைஞன். எதை எடுக்கிறோம்னு இருக்கு. அதை சரியாவும் செய்யணும். அவனுக்குரிய ஒரு வாழ்க்கை இருக்கில்லீங்களா, அவனுடைய கண்ணீர் என்ன, அவனுடைய பிரச்சனை என்ன,…

தியாகு: இலக்கியப் பெருவழியில் பெருந்தடைகள் ஏதாச்சியும் இருந்ததா?

வேணுகோபால்: எந்த ஒரு படைப்பாளியும் அந்தக் கனவுகளோட இருப்பானே, சார். இப்போ நான் வேலைக்குப் போறதா அல்லது பெருந்திட்டத்தை தயார் பண்றதானா, பெரும்திட்டத்தைச் செஞ்சு முடிக்கலைங்கிறதுக்காகத்தான் கூப்பிடற காலேஜ்கூட போகாம இருக்கேன். வாழ்க்கை என்ன கஷ்டத்தைக் கொடுத்தாலும் அதை செஞ்சிடலாம்.

கண்ணன்: உங்க குறுநாவல்களையே விரிச்சு எழுதியிருக்கலாம்னு தோணுமா?

வேணுகோபால்: நியாயமா அதுதான் பண்ணிருக்கணும். ஆனா, இடையில ஏதோ ஒன்று வரட்டுமே, ரொம்பத் தள்ளிப் போயிருச்சே, இதுவாவது வரட்டுமேன்னு தூக்கி அப்படியே கொடுத்தறதுதான்.

இன்னொன்று. குறுநாவலும் சிறுகதை மாதிரி ஒரு perfectஆன வடிவம்தான். இந்த விஷயத்தை இவ்வளவு செறிவாகவும் இவ்வளவு விரிவாகவும் இதுக்குள்ள சொல்லியாச்சு. அதுக்கு மேல சொல்லணும்னா அது வேற ஒரு நாவலுக்குரிய அம்சமாயிருக்கும். எனவே அதை நாம விரிக்கவேண்டிய அவசியம் இல்லை. அதுவே ஒரு இலக்கியப் பிரதி என்கிற தகுதி பெறும்போது, சரி வரட்டும்ங்கிறதுதான்.

ஆனால் நாவல் என்பது குறுநாவல் அல்ல. அது ஒரு மிகப்பெரிய இடம். குழந்தைகள் வர்றாங்க. இயற்கை வருது. வறுமை வருது. வறட்சி வருது. வறட்சியே ஒரு பாத்திரமா இருக்குது.

தியாகு: உங்க நிலமென்னும் நல்லாள் இந்த அம்சங்களையெல்லாம் கொண்டிருக்கு.

கண்ணன்: இது நானே கேட்கணுன்மு நினைச்சது. உங்கள் படைப்புகளை ஒரு தொகுப்பாய்ப் பார்க்கும்போது, வறட்சி ஒரு பாத்திரமாத் தொடர்ந்து வந்துகிட்டேதான் இருக்கு.

வேணுகோபால்: ஒரு நல்ல படைப்பாளிக்கு கனவுகள், சவாலான விஷயம், ஒரு தஸ்தயெவ்ஸ்கி மாதிரி டால்ஸ்டாய் மாதிரி அன்னா கரினீனா எழுதணும், கரமசோவ் ப்ரதர்ஸ் எழுதணும். எழுதணும்தான். ஆனால் அவனுடைய பின்புலம்னு ஒன்னு இருக்கு. வாழ்க்கை பற்றி ஒரு பின்புலம். அவன் சரியா கால் ஊன்றமுடியுதா. அவனுக்கு ஒரு அவமானம் இல்லாமல் அதைச் செய்ய முடியுதா. தமிழ் எழுத்தாளர்களுக்கு ரொம்ப அதிகமா இருக்கு. சுந்தர ராமசாமி கவிதை தான் சொல்லணும்.

நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.

வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலியுண்டு

ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்.

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.

எனது கொடி பறக்கிறது
அடி வானத்துக்கு அப்பால்

இந்தக் கவிதைல முதல் இரண்டு வரிகளை மட்டும் எடுத்துப் பாருங்க. நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை துடைகள் பிணைத்துக் கட்ட கயிறுண்டு உன் கையில். வாளுண்டு என் கையில். ஒரு பெண் பிரசவம் பண்ணும்போது, காலை இறுக்கிக் கட்டினா, என்ன ஆகும். ஆனாலும், அந்தக் கட்டுற கயிற்றையும் வெட்டுவேன், குழந்தையையும் பெற்றெடுப்பேன் – அந்த நிலைமைதான் எல்லாத் தமிழ் எழுத்தாளருக்கும்.

இந்தக் கவிதை வந்தபோது, சுந்தர ராமசாமி சில வருடங்கள் எழுதாம இருந்தாரில்லையா, அவரே சொல்லியிருக்காரு, நான் ஒரு தியானத்திலெல்லாம் இல்லை, குடும்ப வேலைகள், ஜவுளிக்கடையைப் பார்க்கிறதுனு தொழில் சார்ந்துதான் இருந்தேன். ஏதோ ஒரு சின்ன தொய்வு. மறுபடியும் எழுதும் போது எதிர்பார்ப்பு – இப்படி வளர்ந்து வந்தவர் இல்லாமல் போயிட்டாரேனு எல்லாரும் பரவலாப் பேசுவாங்க.

இப்ப நீங்களே அந்தப் பெருநாவல் என்னாச்சுனு கேட்கறீங்க. இது சுந்தர ராமசாமியுடைய கவிதையா இருந்தாலும், வேணுகோபாலுடைய கவிதையா அல்லது ஜெயமோகனுடைய கவிதையா மாறிகிட்டே இருக்கு. எல்லா எழுத்தாளருடைய கவிதையா இருக்கு.

அந்தக் கவிதையோட அவர் வர்றாரு. பல்லக்கு தூக்கிகள் இதெல்லாம் வருது.

சுரேஷ்: பிறமொழி இலக்கியங்கள்ல எவ்வளவு ஈடுபாடு? உலக இலக்கியங்கள், இந்தியப் பிறமொழி இலக்கியங்கள் இதெல்லாம் நிறையப் படிப்பீங்களா?

வேணுகோபால்: இதுக்கும் க.நா.சு.வை.தான் சொல்லணும். எனக்கு முதல்லே வாசிப்புனு மட்டும் இல்லை – நம்ம ஒரு ரைட்டரா இருக்கோம். ஏற்கனவே படித்து வரும்போதே தெரியுது, எந்த தரம்ங்கிறது. இப்ப ஜெயகாந்தனுக்கு ஒரு தரம் இருக்குதுனா, அதுக்குமேல கு.அழகிரிசாமிக்கு ஒரு தரம் இருக்கு. அதுக்கு மேல தி.ஜானகிராமனுக்கு ஒரு தரம் இருக்கு. இதெல்லாம் நாம பார்க்கிறோம். அந்த எழுத்தினுடைய ஆளுமையைப் பார்க்கிறோம். அது மாதிரி உலக இலக்கியம் உலக இலக்கியம்னு சொல்றாங்களே என்று உலக இலக்கியத்தையும் தேடிப் போகவேண்டியதா இருக்கு. அதுக்கு க,நா.சு போன்றவர்கள் வழித்தடம் போட்டிருக்கிறார்கள். இந்திய நாவல்னு சொல்றாரு. உலக நாவல்னு சொல்றாரு. இது என்னுடைய 18, 19 வயசிலேயே செவிவழியா காதுல விழுகுது. உலக நாவல்னா எப்பிடியிருக்கும்னு நாம ஆங்கிலத்தில உடனே படிக்க முடியாது. அப்போ மொழிபெயர்ப்பு ஏதாவது இருக்குமா. அப்படி எனக்குக் கிடைத்த மொழிபெயர்ப்பு என்னன்னா, ஒரு பழைய புத்தகக்கடையில பார்த்துட்டு இருந்தேன். மீனாட்சி கோயிலுக்குப் பின்னாடி , அந்த ஒரு சந்து முழுக்கப் பழைய புத்தகமாக அடுக்கி வைச்சிருப்பாங்க. அதில ஒரு கடைல…அவன் சொல்வான்…சார் இது வேணுமா அது வேணுமா…அவன்கிட்டப் பேசிட்டிருந்தா ஒன்னும் முடியாது. நம்மளாத் தேடணும், நம்மளுக்கு எது பிடிச்சிருக்குன்னு. அப்ப, மதகுரு இருந்தது. செல்மா லாகர்லெவ் (Selma Lagerlof) எழுதினது. மதகுரு பார்த்தவுடனே நமக்கு அவ்வளவு ஒரு உணர்ச்சி…க.நா.சு. சொல்லியிருக்காரே. உலகத்தினுடைய பத்து சிறந்த நாவல்களில் ஒன்னுன்னு. இதைப் பார்த்தவுடனே இதை எப்படியாவது வாங்கிடணும்னு அந்த புத்தகத்தை எடுக்கறேன். எடுத்தா 3.80 பைசா அந்த புக்கு. இவ்வளவு பெரிய, 800 பக்கம் உள்ள ஒரு புத்தகம். அவன் என்ன பண்ணிருக்கான் – முன்பக்கத்திலே திருத்தி, 50 ரூபாயோ ஏதோ போட்டிருக்கான். பின் அட்டையிலே திருத்தாம விட்டுட்டான். பிறகு சொல்றேன். மூன்று ரூபான்னு இருக்கே. ‘சார், யார் சார் மூன்று ரூபாவுக்குத் தருவாங்க’னு ஏதோ சொல்றான். பிறகு ஏதோ கொடுத்து வாங்கினேன். அந்த நாவல், இன்னிக்கு வரைக்கும் மிகச் சிறந்த நாவல்களிலே ஒன்னு. கெஸ்டா பெர்லிங் சாகா (Gosta Berlings Saga). அந்தப் பெண் நோபல் பரிசு வாங்கினாங்க. இன்னும் எனக்கு நினைவிருக்கு. ஒரு முன்னுரை இருக்கு. ‘இந்த நாவலை மட்டும் ஐம்பது முறையாவது படிச்சிருப்பேன். முதன்முதல்ல கல்கத்தா இம்பீரியல் லைப்ரைரில படிச்சிச்சேன். ஒவ்வொரு அத்தியாத்தையும், திரும்பத் திரும்ப அஞ்சு தடவை, ஆறு தடவை படிச்சுப்படிச்சு ரசிச்சிருக்கேன்னு எழுதறாரு (க.நா.சு.). க.நா.சு.வைப்பற்றி ஒருத்தர் என்ன சொல்லியிருக்கார்னா, உலகத்திலேயே ஒரு பெயர் தெரியாத மனிதன், இந்தப் பெண்ணைக் காதிலித்திருந்தார்னா, அது க.நா.சு.வாத்தான் இருக்கும். அவ்வளவு நேசிச்சு நேசிச்சு அந்த நாவலை மொழிபெயர்த்திருக்கார். பொதுவா மொழிபெயர்ப்புல சில குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்டு. தோராயாமா மொழிபெயர்த்திருவார். ஆனா, இந்த மொழிபெயர்ப்பு அவ்வளவு சிறப்புங்க. அது அவ்வளவு அற்புதமானது. அந்நியமான, திருட்டுத்தனமான நான்கு நண்பர்கள் கிருஸ்தவத்தால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல வேறு ஒரு மனிதனாக வேறு ஒரு உன்னத மனிதனாக மாறக்கூடியது தான் அந்த நாவல். அந்தக் குளிரயும் அந்த வெடவெடப்பயும் – இன்னிக்குப் படிச்சாக்கூட எனக்குக் குளிரும். அந்த மாதிரி எழுதியிருக்கார். ஒரு பெண்ணினுடைய தாக்கத்தினாலே அப்படி மாறுவாங்க. என்னை ரொம்பப் பாதிச்ச நாவல்.

அப்புறம், அன்பு வழினு பேர் லாகர்குவிஸ்டு(Par Lagerkvist) எழுதின ஒரு நாவல். அதை, எல்லாரும் அன்பு வழி அன்பு வழினு சொல்றாங்களே, அப்ப சுபமங்களா எல்லாம் வந்த புதுசு. அன்பு வழி மாதிரி ஒரு நாவலை என் வாழ்க்கைல எழுதிட்டேன்னா நிம்மதியா இருப்பேன்னு நம்ம வண்ணநிலவன் சொன்னதெல்லாம் இருக்கு. அந்த டையத்தில பாருங்க – நெய்வேலி வேர்கள் இலக்கிய மன்றத்திலிருந்து பாரபாஸ்னு (Barabbas) போட்டுட்டாங்க. வேற ஒரு பேர்ல. பாரபாஸை வாங்கிப் படிச்சேன். க.நா.சு. மொழிபெயர்த்தது.

துகார்ட் (Roger Martin du Gard) உடைய தபால்காரன் (The Postman – Vieille France) படிச்சேன். ஒரு தபால்காரன் ஒரு கிராமத்துல ஊரினுடைய அத்தனை விதமான மனிதர்களையும் எழுதியிருப்பான். குடி, கூத்து, போரினால் வெளியூரிலிருந்து பிரான்சுக்கு வந்தது – ரொம்ப அற்புதமா, இன்னிக்கு வரைக்கும் படிக்கக்கூடிய அளவு ஒரு ஃபிரெஷ்ஷா அவ்வளவு புதுமையா இருக்கும். அப்புறம் அன்னா கரீனினாவைச் சின்ன வயசிலேயே படிச்சேன். டி.எஸ்.சொக்கலிங்கம் தானே மொழிபெயர்த்தது? அவர்தான் நினைக்கிறேன். நீங்க கேட்கிறீங்கில்ல, காமத்தை இப்படி எழுதிட்டீங்களேனு, எனக்கெல்லாம் அவன் முன்னோடியா இருக்கான். அவன் அந்த இடத்தை அடைஞ்சிருக்கான். அப்ப நமக்கு ஒரு தைரியம் வருதில்லீங்களா. டால்ஸ்டாய் எழுதும்போது வேணுகோபாலும் எழுதலாம். இந்த எல்லை வரைக்கும் எழுதலாம். அன்னா கரீனினாவைப் படிச்சேன். எனக்கு முன்னோடிகளுக்கு நான் நன்றி சொல்லணும். க.நா.சு.வுக்குக் கண்டிப்பா இந்த வகையில தலைதாழ்ந்து, சிரம்தாழ்ந்து ஒரு எழுத்தாளனா நன்றி சொல்லணும். ஆங்கில வழியாப் படிக்கிறதைவிட மொழிபெயர்ப்பின் வழியா படிக்கிறதில கொண்டு செலுத்தினதில் அவருக்கு ஒரு பங்கு இருக்கு. அவர் மொழிபெயர்த்த விருந்தாளி – ஆல்பர்ட் காம்யூ, அற்புதமான குறுநாவல். விருந்தாளி தொகுப்புல ஒரு 4-5 கதைகள். அப்படிப் படிச்சேன். அப்புறம் ஒரு முறை போகும்போது, பாருங்க நம்ம நண்பர்களெல்லாம், நம்ம முன்னோடிகள் – கோணங்கி மாதிரி இருந்த அந்த இளைஞர்களெல்லாம் மீட்சினு ஒரு இதழ் கொண்டுவந்தாங்க. ஆர்.சிவகுமார், நண்பர்களெல்லாம் சேர்ந்து ஒரு கழுகு படம் போட்ட லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்னு வந்துச்சு. அதை நான் தெருவிலதான் எடுத்தேன். அந்தத் தொகுப்பில ஒரு அற்புதமான கதை – செவ்வாய்க் கிழமை பகல்தூக்கம்னு சொல்லிட்டு. அதிலேதான் கார்சிய மார்வெஸ்ஸுடைய மிகப்பெரும் சிறகுகளுடைய வயோதிகன் படிச்சேன். செவ்வாய்க்கிழமை பகல்தூக்கம் வண்ணநிலவன் மொழிபெயர்த்திருந்தார். பறவை நிகழ்த்திய அற்புதம், மிகப்பெரும் சிறகுகளுடைய வயோதிகன் ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்திருந்தார். அதெல்லாம் எனக்கு, ஒரு மேஜிக்னா (மேஜிக் ரியலிசம்னா) இவ்வளவு அழகா இருக்கும்னு காண்பிச்சது. இன்னிக்கு மேஜிக்னு சொல்லிட்டு எவனுமே மேஜிக் கதை எழுதலை சார். நான் மேஜிக்கைப்பற்றி நம்பாதவன். நான் மேஜிக் கதை எழுதியிருக்கேன். களவு போகும் புரவிகள் சொல்லலாம். இருட்குகைக்குள் விரியும் ஒளிப்புகை சொல்லலாம். என்னைவிட மேஜிக்பற்றியே பேச்சுமூச்சு இல்லாத காலத்தில, லா.ச.ரா. எழுதியிருக்கார். ஜனனி படிச்சுப் பாருங்க. ராஜகுமாரியப் படிச்சுப் பாருங்க. ராஜகுமாரி காவிரி ஆற்றை, ஒரு பரத்தையாக் கொண்டுவந்து, பரத்தையினுடைய பேரன்பினால் பெருக்கெடுத்து ஓடி, அத்தனை ஆட்களையும் உடல்ரீதியாகவும் உள்ளத்திலேயும் தொட்டதை எழுதியிருக்கார் – ராஜகுமாரில. நாம எல்லாரும் அவரைக் குடும்பக்கதை எழுதறவர்னு சொல்லிட்டிருக்கொம். அதிகம் அதுதான் எழுதினார். ஆனால், ராஜகுமாரி எழுதியிருக்கார். பெரும் புனைவு. அதே மாதிரி ஜனனி. ஒரு பெண், சக்தி என்பவள், திரும்ப ஒரு பெண்ணுடைய உடலில் பிறந்து மனுஷியா வாழ்ந்தா எப்படியிருக்கும்கிறதுதான். கிட்டத்தட்ட புதுமைப்பித்தன் கடவுளும் கந்தசாமியும் எழுதினாரே – ஆனா அதுமாதிரி கிடையாது. அதுல எள்ளல்தான் அதிகம். இதுல ஒரு வேதனையைக் கொண்டுவந்திருப்பார். ஒரு பெண் பெறக்கூடிய அத்தனை அவமானங்களையும் அந்த சக்தி படறா. பிறந்ததிலிருந்து. பிறக்கும்போதே, illegalஆ பிறக்கிறா. ஆண்டாள் மாதிரி, அவன் தூக்கிட்டு வந்து வளர்க்கிறான். குழந்தையில்லாதவன். பிரம்மாதமான மேஜிக் கதைகள். மேஜிக் என்பது மேஜிக்ல இல்ல. வாழ்க்கையில இருக்கு. எனவே எல்லாக் கதையிலேயும் ஆதார சுருதி மனிதனுடைய நாடிநரம்புகளை இதயத்தைத் தொடக்கூடிய கதைகள்தான். வடிவம்தான் சார், மேஜிக்னு சொல்றோம். உருவகக் கதைகள்னு சொல்றோம். metaphorனு சொல்றோமில்ல. படிமம் படிமம்னு சொல்றீங்க. இன்னிக்குப் படிமம் மட்டுமே ஒரு உத்தியா? பிரமிள் படிமக் கவிஞர்னு சொல்லிட்டிருக்கோம். படிமம் என்பது ஒரு உத்தி. அதைப் பிடித்துக்கொண்டு தொங்கிகிட்டு இருக்கமுடியாது. எனவே இதெல்லாம் இருக்கில்லையா – மொழிபெயர்ப்பில இதெல்லாம் எனக்குப் பெரிய கொடுப்பினை. தஸ்தயெவ்ஸ்கியுடைய கரமசாவ் சகோதரர்கள் படிச்சேன். அது படிக்கும்போதுதான் – எனக்கு இயல்பிலேயே உளவியல், மனிதன் இந்திந்த விசயத்திலே இப்படித்தான் நினைப்பான்கிறது, தஸ்தயெவ்ஸ்கியப் படிக்கிறதுக்கு முன்னாடியே, இயல்பிலேயே ஒரு கலையாக எனக்கு இருந்திச்சு- சரஸ்வதி நாக்குல எழுதின மாதிரினு வைச்சுக்கோங்க. நான் முன்னாடி சொன்னேனில்லையா, கண்ணதாசனைவிடப் பெரிய உண்மையை எழுதணும்னு சொல்லிட்டு. காந்தியை விட. அந்த இடத்தை நான் எடுத்துகிட்டேன். இதை ஒரு வடிவமா எடுத்திட்டேன். ஒரு இலக்கிய அறிவா எடுத்துகிட்டேன். இந்த உள்ளத்தினுடைய உண்மையை – இவரைப் பற்றித்தான் எழுதறேன். ஆனா இவர் என்ன நினைச்சிருப்பாரு. எந்த எல்லைக்குப் போவாருங்கிறதை நான் ட்ராவல் பண்றேன். இதுக்கெல்லாம் டால்ஸ்டாயுடைய அன்னா கரீனினா இருக்கு. அந்தப் பெண்ணை, நம்ம ஊர்ல இருந்தா என்ன நினைப்போம். அப்படித்தான் தொடங்கி, அந்தப் பெண்ணினுடைய மாபெரும் காதலை இழந்து, இந்த உலகம் காதலுக்கான இடமே இல்லைங்கிறதை உணர்கிறா இல்லைங்களா, ரயில்ல செத்துப்போறா இல்லீங்களா, அப்போ அவளுடைய துயரத்தை நாம அடையறோமில்லையா, அப்போ அந்த மொழிபெயர்ப்பெல்லாம் எனக்கு ரொம்ப உதவிகரமா இருந்தது. ஒருவகையிலே நான் ஒரு குறைபாடு உடையவன். எல்லாரையும் படிச்சு நான் வந்திருக்கணும். உதாரணமா பாலகுமாரனைப் படிச்சிருக்கணும், சிவசங்கரியை, சுஜாதாவைப் படிச்சு வந்திருக்கணும், அணுராதா ரமணனை, ராஜம் கிருஷ்ணனைப் படிச்சு வந்திருக்கணும், ஒன்னொன்னு ஏதாவது படிச்சிருக்கலாம். ஆனால் வாசிப்பே இப்படிப் போயிடுச்சு. உலக இலக்கியங்கள்ங்கிற போது – நாம அதெல்லாத்தோடும் தொடர்பு படுத்திப் பார்க்கிறோம். நம்ம புதுமைப்பித்தனுக்கு என்ன இடம். ஜானகிராமனுக்கு என்ன இடம். ஜானகிராமனுக்கு என்னை மாதிரியான ஒரு வாழ்க்கை கிடைச்சிருந்தா, வேணுகோபாலுடைய வாழ்க்கை கிடைச்சிருந்தா தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாயை மிஞ்சியிருப்பான்னு நான் சொல்வேன். அவருடைய வாழ்க்கை, அவருடைய அனுபவம் ஒரு எல்லைப்பட்டது. எழுத்தின் வீச்சு அப்படியிருக்கு. அவருக்கு இது வாய்த்திருந்தால், மனப்பூர்வமா எழுதியிருப்பார். அவர் எப்போதுமே மறைக்கிறதில்லை. அவர் மாதிரி ஒரு பெண்ணைக் காருண்யம், பேரன்பு கொண்டு எழுதினவர் யாருமில்லை. அது எந்தப் பெண்ணா இருந்தாலும்கூட, நெகட்டிவ் கேரக்டர், பாசிட்டிவ் கேரக்டர் எதுனாலும் பேரன்பு கொண்டு எழுதவார். ரொம்பக் கருணையோடு பார்த்த ஒரு மனுஷன். இது ஒரு படைப்பாளிக்கு அடிப்படை விஷயம். எங்க அம்மா எங்கூட சண்டைப் போடலாம். இன்னொரு வகையில எனக்கு அம்மா தானே. எனவே உலக இலக்கியக்கியங்கள் இந்த மாதிரி நல்லாப் படிச்சேன். ஆல்பர்ட் காம்யூவோட ‘அந்நியன்’, நதானியேல் ஹதார்ன்னுடைய ‘அவமானச் சின்னம்’ (Nathaniel Hawthorne, The Scarlet Letter), காஃப்காவோட ‘விசாரணை’, ‘உருமாற்றம்’, ஹெமிங்வேயோட ‘கிழவனும் கடலும்’, கிரேசியா டெலடாவோட ‘அன்னை’ (Grazia Deledda, La Madre) – இப்படி நிறையப் படிச்சேன். இந்திய நாவல்களில யூ.ஆர்.அனந்தமூர்த்தியோட ‘சம்ஸ்காரா’, பஷீரோட ‘பால்யகால சகி’, தகழியோட ‘செம்மீன்’, இப்படிப் படிச்சேன். சிறுகதைகள் எக்கச்சக்கமா படிச்சேன். புதுமைப்பித்தன் ஒரு 46 கதை மொழிபெயர்த்து இருக்காரில்லீங்களா, அதெல்லாம் தேடித்தேடிப் படிச்சேன். புதுமைப்பித்தன் ஒரு முன்னுரையில எழுதறாரு, ‘இதிலிருக்கிற ஒரு நாற்பது கதைகள் வாசகர்களுக்கானது, இரண்டே இரண்டு கதை எனக்கானது.’ தீமூட்ட அப்படினு ஒன்னு. ஜாக் லண்டனுடைய கதை. நான் என்ன பண்ணுவேன்னா, அவருக்கு மட்டுமே பிடித்த கதை இருக்கில்லீங்களா, அதைத்தான் முதல்லே படிப்பேன். ஒரு தேர்விலேயும் இன்னொரு தேர்வு.

இப்போ யு.ஆர்.அனந்தமூர்த்தி, இல்லைனா ஏதோ ஒன்னு கிடைச்சுதுன்னு வைச்சுக்கங்க, சூரியன் குதிரைனு ஒரு கதை இருக்கும். அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடித்த கதை. இந்தியக் கதைகள்கூட கிடைக்கிற தொகுப்புகள்ல இருந்து படிப்பேன். அதே மாதிரி மலையாளக் கதைகள். கமலா தாஸ் இருக்காங்கில்ல, மாதவிக்குட்டி – அவங்க ஒரு பட்சியின் வாசனைனு பிரமாதமான ஒரு கதை எழுதியிருக்காங்க. அவங்க இறந்தபோது சொன்னாங்க, மலையாளத்திலிருந்து மிகச்சிறந்த மூன்று கதைகள் எடுக்கணும்னா, மாதவிக்குட்டியினுடைய பட்சியின் வாசனை இருக்குமன்னு. அதை நான் படிச்சிருக்கேன். நீல பத்மநாபனுடைய மொழிபெயர்ப்பில். உடனே மறுபடியும் எடுத்துப் படிச்சேன். ஆங், இந்தக் கதைதான், ஆமாம்னு சொல்லிட்டு வச்சேன். பஷீரின் கதைகளைப் படிச்சேன். அதே மாதிரி எம்.டி.வாசுதேவன் நாயர் – நம்ம பா.ஜெயப்பிரகாசம் ஒரு கதைல இரவு நேரத்துல தேவர் வீட்டில வந்து இரவாடிகள் ஆடுவாங்கில்லையா, ஒரு கதை, ‘அம்பலக்காரர் வீடு’ – அந்தக் கதையை ஒட்டி நாயாடிகள், இதமாதிரி ஒரு வம்சம் இருக்கில்லையா, அதை வைத்து எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதின கதை, ரொம்ப சின்ன வயசில படிச்சேன். யாரோ நண்பர் கேட்டிருந்தார்னு அந்தக் கதையைச் சொன்னேன் நான். அவர் எழுதின கதைலையே இதுதான் பெஸ்ட் என்றேன். சிவசங்கரி தினமணிக்கதிர்ல இந்திய எழுத்தாளர்கள் பேட்டிகள்னு கூடவே ஒரு சிறுகதையையும் கொடுத்துக்கிட்டு வந்தாங்கல்ல, அதைத் தொடர்ந்து படிச்சேன். அப்போ நான் கல்லூரியில படிக்கிறேன். இந்த வாசிப்பு இருக்கில்லீங்களா, மேலான படைப்புகளின் வாசிப்பு, நாம எதை எழுதினாலும், அது தன்னியல்பா மேலானதாப் போயிரும். அதாவது, சிரமப்படவேண்டியதே இல்லை – எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும், அது ஒரு முக்கியமான இடத்தை அடைஞ்சிடும். ஏன்னா, நம்ம வாசிப்பு நமக்குக் கைகொடுக்குதோன்னு நினைக்கிறேன்.

சுரேஷ்: உங்க சமகால படைப்பாளிகள், அடுத்த தலைமுறை படைப்பாளிகள் பற்றி என்ன நினைக்கறீங்க.

வேணுகோபால்: தூரன் குணானு ஒருத்தர், சில நல்ல கதைகள் எழுதியிருக்கார். யாருன்னு தெரியாது. கர்ண மகாராசனு ஒரு கதை படிச்சேன். ரொம்ப நல்லாயிருந்தது. கோணங்கியுடைய கல்குதிரைல (தூரன் குணாவின்) எட்டாவது கன்னி, ரொம்ப நல்ல கதை. ஒரு நாவிதப் பெண், கவுண்டர் ஊருக்கு வந்து என்னானாங்க அப்பிடங்கிறது. அசதா ஒரு காதல் கதை, பிரமாதமான கதை – அக்கார்டியன்னு முடியும் (இசைக்காத மீன்களின் அக்கார்டியன்), அது ரொம்ப பிரமாதமா எழுதியிருக்கார். சிவக்குமார் முத்தய்யான்னு ஒரு பையன், ‘செறவிகளின் வருகை’ன்னு ஒரு நல்ல கதை எழுதியிருக்கார். பா.திருச்செந்தாழை ‘ஆண்கள் விடுதி: அறை எண் 12’ அப்படின்னு நுட்பமான ஒரு கதை எழுதியிருக்கிறார். காலபைரவனுடைய ‘பட்டித் தெரு’வை உயிரெழுத்தில படிச்சேன். நல்ல கதை. அவரோட ‘புலிப்பானி ஜோதிடர்’ இன்னும் மேலானது. சில பேரு இப்ப சட்டுன்னு ஞாபகத்துக்கு வரல. வெங்கடேசன் – நமக்கெல்லாம் சீனியர் – கல்குதிரைல கொலையாளிகள் மூன்று பேர் ஒரு இரவு நேரத்தில போவாங்க, அப்ப மூணு பேருக்கும் ஒரு சந்தேகம் வரும். ஒருத்தன் கைல மிகப்பெரிய ஆயுதம் இருக்கும். அவங்க மூணு பேரும் இந்தக் கத்தியை மாத்தி மாத்தி பிடிச்சுட்டு போவாங்கன்னு ஒரு கதை எழுதியிருப்பார். பா.வெங்கடேசன்.

சுரேஷ்: ராஜன் மகள், தாண்டவராயன் கதை எல்லாம் எழுதியிருக்கார்.

வேணுகோபால்: ராஜன் மகள் ரொம்ப நல்ல கதைதான். ஆனா அவரெல்லாம் எனக்கு சீனியர். என்னுடைய சமகாலத்துல, விசும்புனு ஒருத்தர், கொமருன்னு ஒரு நல்ல கதை எழுதியிருக்கார். ஆனா, contemporaryஆ அவருடைய பங்களிப்பு என்னங்கிற கேள்வி எழுது. சில பேர் ஒவ்வொரு கதையை ரொம்ப அற்புதமா எழுதியிருக்காங்க. அசதா ஒரு கதை மிகப்பிரமாதமான கதை எழுதியிருக்கார். ஆனால், சிறுகதை ஆளுமைங்கிற இடத்தில இப்ப புதுமைப்பித்தன், ஜெயமோகன், வண்ணதாசன், வண்ணநிலவன்னு சொல்றீங்கில்ல, கு.அழகிரிசாமினு ஒரு ஆளுமை சொல்றீங்கில்ல, அந்த வரிசைல இவங்களுடைய இடமென்ன? அதுக்கு இந்தச் சில்லறைச் சகாயங்கள், சில்லறை மோகங்கள், இதெல்லாம் விட்டாமட்டும்தான் அந்த இடத்தை அடையமுடியும். இலக்கியம்கிறதை மட்டும் ஒரு பெரிய கனவாக் கொண்டா, இந்த இடத்தை அடையலாம்.

தியாகு: சமகால இலக்கியத்துல பெரும்பாலும் சில்லறை மோகத்தில தான் தவழ்ந்துட்டு இருக்காங்கன்னு சொல்றீங்களா?

வேணுகோபால்: வேணாம்னு சொல்றேன். இலக்கியம்னா உங்களுக்கு அந்தத் திறமை இருக்குது. இந்த இடத்தை அடைங்கன்னு சொல்றேன். இவங்க காமத்தக் கையாள்ற விதம் இலக்கியமா இல்ல. எந்த லாஜிக்கும் இல்ல. படைப்பாளி நெனச்சா அந்தப் பெண் கதாப்பாத்திரம் படுக்குறா. நெனைச்சா சிரிப்பா இருக்கு. இவங்க பெண்ணப் புரிஞ்சுகிட்ட விதம்.

தியாகு: அதைத் தாண்டி வரமாட்டேங்கிறாங்கங்கிறீங்க.

வேணுகோபால்: ஆமாம். நிறையப்பேர் இருக்கலாம். பெரிதா ஈர்க்கலை. அங்கங்க நல்ல கதைகள் எழுதினாலும், பன்னிரெண்டு கதை எழுதினா பன்னிரெண்டும் முத்துங்கிற மாதிரி இருக்கில்லையா, அதை கு.அழகிரிசாமிகிட்டத்தான் பார்க்கமுடியும். அவன் எழுதின நூறு கதையும் முத்துடா. வெவ்வேறு வெரைட்டிடா, அந்த முத்துக்களினுடைய விலைகள் வேணா கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கலாம். அவனத்தான் படைப்பாளியா நாம கொண்டாடுறோம்.

கண்ணன்: கதை செய்தல் பற்றி நீங்க கடுமையா விமர்சனம் வைக்கறீங்க.

வேணுகோபால்: கதை செய்தல் என்பது ஒரு விஷயம் செய்தியிலேயோ, உங்க ஊர்லயோ நடந்தத வைச்சுட்டு, அப்படியே கொண்டுபோய் வைக்கறீங்க இல்லையா, அதுதான் இன்னிக்கு வந்துட்டு இருக்கு. ஆனால், அதற்கான வேர் என்ன, அதற்கான உள்ளத்தினுடைய கொதிப்பு என்ன, இந்த இடத்துக்கு ஏன் வந்தாங்க, இவனுடைய ஒரு பெரிய படைப்பு, ஒரு கர்ப்பத்தை வளர்த்தற மாதிரி, இந்த இடத்திலதான் அது எல்லாமே செழித்து, ஒரு உருவமா உருவாகுது. அந்த இடம் அங்க இல்லையோன்னு நினைக்கிறேன். அது தனியா ஒட்டிகிட்டு இருக்கும். இது செய்யப்பட்டதுனு தெரியும். இது ஒரு பரபரப்புக்காக ஒட்டப்பட்டதுனு தெரியும். உதாரணமா, காமம் எப்படி செயற்கையா சேர்க்கப்பட்டதுனு நீங்க சொல்லிறலாம். ஒரு சேப்டர் இது, ஒரு சேப்டர் இதுனு வைக்கிற மெத்தேட் நீங்க கொண்டுவருவீங்க. ஏதோ ஒரு சீரியசா சொல்ற மாதிரியும், அப்புறம் உங்களுக்கு கிலுகிலுப்புப் பண்றமாதிரியும், உங்கள சமாதானப் படுத்தற மாதிரி, இப்படியான ஒரு டெக்னிக் எல்லாம் பதிப்பகம் சார்ந்தும் வருது.

தியாகு: இது ஒரு பார்முலாக் கதைங்கிறது தெரிஞ்சுரும்.

வேணுகோபால்: ஆமாம். இதெல்லாம் செய்யப்பட்டதா இருக்கும். நான் இன்னொன்னும் சொல்றேன். ஒரு கதை, ஒரு சிறுகதை, புனைவு தாங்க. ஆனால், அது உண்மையிலேயே நடந்ததுனு நீங்க நம்பணுங்க. அப்படி நம்ப வைக்கக்கூடிய அந்தத் திராணிதாங்க படைப்பு.

சுரேஷ்: கேள்விகளுக்கு இடமளிக்காம நம்பிக்கையைத் தோற்றுவிக்கணும்.

வேணுகோபால்: ஒரு வார்த்தைகூட தவறக்கூடாது. புனைவுதாங்க. உண்மையிலேயே இது சித்தாபுதூர்ல நடக்கல. நீங்க எழுதியிருக்கீங்க. ஆனால் அது உண்மையிலேயே சித்தாப்புதூர்ல, இன்ன தெருவில, இன்ன இடத்துல நடந்ததுனு சொல்லி நான் நம்பி, அந்த அம்மாவை எங்க பார்த்தீங்கனு நான் கேட்கணும். அதுதான் அந்த படைப்பாளியினுடைய பங்களிப்புனு சொல்லலாம்.

சுரேஷ்: உங்க பப்ளிஷர் (தமிழினி வசந்தகுமார்) பற்றி சொல்லுங்க. அவர் விரும்புவாரான்னு தெரியலை. ஆனா, உங்களுடைய படைப்புகள்ல அவருக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு இல்லையா. உங்களை வழிநடத்தினவர்னு சொல்லலாமா?

வேணுகோபால்: நிச்சயமா. நான் ஒரு எடிட்டர் வேணுமின்னு சொன்னேன் இல்லீங்களா. புற உலகத்துக்குச் சாராத ஒரு தவறையும் செஞ்சிட மாட்டேன். இப்படி நடந்து போறான்னா, போயிருக்க முடியாதுங்கிற அந்த தவறைச் செஞ்சிருக்க மாட்டேன். என்ன பண்ணுவார்னா, ‘வேணு, உன்னுடைய ஆற்றல் இது அல்ல’ அப்படிம்பார். 23 கதைகள் எழுதின ஒரு பெரிய வேடிக்கை இருக்கு. 23 நாளைக்கு 23 கதைகள் எழுதினேன். அது தான் வெண்ணிலை. இங்கிருந்து கொல்லி மலைக்குக் கிளம்பினோம். ட்ரெய்ன்னா நான் பயப்படுவேன். என்னைக் கொண்டுவந்து, டிக்கெட் எடுத்து, உட்கார வைக்கணும். ஏன்னா, மாறி ட்ரெய்ன் ஏறிடுவேன்கிற பய உணர்ச்சி. அந்த நீளம் எல்லாமே ஒரு பயம். பஸ்னா நாம ஏறி உட்கார்ந்திரலாம், இந்தாங்க டிக்கெட்டுனு கொடுத்திரலாம். மெட்ராஸ்ல இறக்கிவிட்டுருவாங்க. ஆனா, ட்ரெய்ன் எந்த கம்பார்ட்மென்ட்ல ஏறணும் S1, S2 இதெல்லாம் நம்மளுக்கு சாத்தியப்படாத விஷயம். இவர் என்ன பண்ணிட்டார்னா, இங்கிருந்து கிளம்பி வா அப்படினுட்டார். கோபால் (எம்.கோபாலகிருஷ்ணன்) தான் இங்கிருந்தார். கோபாலும் நீயும் சேர்ந்து வந்துருன்னார். காலைல உழவர் சந்தை வண்டியிருந்துச்சு. நீ கோபால் வீட்ல தங்கிக்கோன்னார். அது எதுக்கு அவருக்கு தொந்தரவா இருக்கும்னு காலையிலேயே வந்துட்டேன். நான் போய், ஆறரை வண்டிக்கு அஞ்சேமுக்காலுக்கே வந்து நின்னுட்டேன். அப்பத்தான் செல்(cellphone) வந்த டைம். அடிச்சு அடிச்சு அடிச்சுப் பார்க்கிறேன். வரவே இல்லை. இன்னொரு நண்பர் அங்க வந்தார். டிக்கெட் எடுத்துத் தர்றேனு சொன்னார். நான் வேண்டானுட்டேன். மனைவி குழந்தையெல்லாம் என்கிட்டத்தான் விட்டுட்டுப் போய் அவருக்கு எடுத்துட்டு வந்தார். 6.05, 6.10 அதுவரைக்கும் காணோம். போன் அடிச்சு அடிச்சுப் பார்க்கிறேன். சுவிட்ச் ஆப்னு வருது. திடீர்னு பார்த்தா, ஆறேகால். எனக்கு கால் வருது. ‘வேணு, நான் ட்ரெய்ன்ல ஏறி உட்கார்ந்துட்டேன். நீ பதினொன்னாவது கம்பார்ட்மென்ட்ல வந்துரு. எங்கிருக்க’ன்னார். ‘உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்,‘னேன். கோபால் என்ன பண்ணிட்டார்னா, அங்க ஏறி உட்கார்ந்துட்டார். என்னடா இதாயிப்போச்சேனு சொல்லிட்டு, முழிச்சுட்டு இருந்தேன். என்னுடைய இந்த பலவீனங்கள் அவருக்குத் தெரியாது. இன்னும் டிக்கெட் எடுக்கலைங்கிறேன். பரவாயில்லை, வாங்கிறார். என்னால முடியலை. என்னடா இப்படிப் பண்ணிட்டாரேனு இருந்தேன். இந்த விசயத்துல என்னைக் கைக்குழந்தை மாதிரி அணச்சுக்கிட்டுப் போகணும். இந்தப் பழக்கம் இந்தக் காலத்தில ஒத்து வராதுதான். இது ஒரு பலகீனம். இது கோபாலுக்குத் தெரியாதில்லையா. நான் நினைச்சிருந்தா, மறுபடியும் காந்திபுரம்வந்து சேலம் பஸ்ஸைப் பிடிச்சு ஒரு மணிநேரம் ரெண்டு மணிநேரம் முன்னப்பின்ன ஆகும். வந்திருக்கலாம். ஃபோனை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு அப்படியே வந்து நரசிபுரம் போயிட்டேன். போனவுடனே, 25 நாள் லீவ் இருந்துச்சு. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கதை எழுதினேன். கதை எழுதிட்டு இன்னிக்கு போஸ்ட் பண்ணினா, அவருக்கு பத்து மணிக்குச் சேர்ந்துரும். கரெக்டா ரெண்டு மணிக்கு போன் அடிப்பாரு. ‘பரவாயில்ல, வேணு,’ அப்படிம்பார். அடுத்த கதை. அடுத்த கதை. ‘கொஞ்சம் பரவாயில்லை. அதைவிட பெட்டர், அதைவிட பெட்டர்,’ இப்படியே சொல்லிட்டே வருவார். கடைசில நெருங்க நெருங்க, ‘இன்னும் எத்தனை கதை உன்னால எழுத முடியும்.’ ‘எத்தனை கதை வேணும்னாலும் எழுதிடலாம். ஆனா இன்னும் அஞ்சாறு நாள் தான் லீவிருக்கு.’

‘உனக்குனு ஒரு தனித்துவம் இருக்கு. உனக்குனு ஒரு தன்மை இருக்கு. அந்தக் கதையைக் காணோமே’ம்பார். ‘அப்படிங்களாண்ணே’னு சொல்லிட்டு, ஒரு கதை எழுதினேன். ‘தனித்துவம் இருக்குது. ஆனா உன்னுடைய வீச்சு இல்லையே.’ சரி. ‘தனித்துவமும் இருக்கு. வீச்சும் இருக்கு. உன்னுடைய பொயட்டிக் சென்ஸ் அடையலையே.’ ஓ, அப்படிவேற எங்கதைக்குள்ள இருக்கா? அப்புறம் அடுத்த கதை. ‘பரவாயில்லை. ஆனா, உனக்குத் தன்னியல்போட ஒரு எழுச்சி இருக்குமில்ல. அது வரலை.’ இப்படியே 20 கதை எழுதியாச்சு. இது என்னடான்னு பார்த்தா, ‘அண்ணே, நான் ஒரு கதை எழுதலாம்னு பார்க்கிறேன். ஆனா, நைனா இந்தக் கதையை அட்டெம்ப்ட் பண்ணியிருக்கார்ணே’
‘நைனா அட்டெம்ப்ட் பண்ணினா, அது நைனாவுடைய கதை. நீ உன்னுடைய கதை எழுதவேண்டியதுதானே’ன்னார். சரின்னு சொல்லிட்டு, அந்தக் கதையை ஒருநாள் கடகடன்னு எழுதிட்டு – மொதல்ல ரப்ஃபா ஒரு ஜெராக்ஸ் எடுத்துட்டு அனுப்பிட்டேன். பொதுவா 2 மணிக்கு அடிப்பார். 10 மணிக்கு வாங்கி, பத்தரைக்கு அடிச்சார். ‘பெஸ்ட் டா,‘ அப்படின்னார். அதுதான் தொப்புள் கொடி. நீங்க சொன்னீங்களே கிறுக்கி கதை. தி பெஸ்ட் அப்படிம்பார். இது பயந்து பயந்து எழுதினேன். இம்மாதிரி ஒரு உற்சாகமும் அவர்கிட்ட கிடைச்சது.

அப்புறம், ஒரு படைப்பு – ஆட்டம் இருக்குது. இந்த ஆட்டத்தைப் பற்றி நம்ம எழுதிட்டே வர்றோம். ‘ஏம்பா, அந்த வீரபாண்டித் திருவிழாவுக்கெல்லாம் நீ நூறு முறை போயிருக்க. ஒரு வரிதான் வருது. இந்தப் பகுதி இன்னும் கொஞ்சம் விரிவு பண்ணா நல்லா இருக்குமே,‘ அப்படினு சொல்லுவார். ‘அப்படியாண்ணே, நானு வேற ஒரு நாவலுக்கு எழுதலாம்னு மனசில வைச்சிருந்தேன்‘னு சொல்வேன். ‘எல்லா எல்லாத்துலையும் – இன்னொரு நாவலிலேயும் எழுதலாம்பா,‘ அப்படி அந்த இடத்தைச் சுட்டிக் காட்டுவார். இந்த இடத்தில இதை வைச்சா நல்லாயிருக்குமே. சரியான பொருத்தப்பாடோட அதை எழுதும் போது இன்னும் அதனுடைய பரிமாணம் கூடும். அம்மாதிரி செய்வார். சின்னச்சின்னத் திருத்தங்கள், இவன் இப்படி நினைப்பானா, ஒரு பெண் இப்படி நினைக்குமா, – ‘ஆமாண்ணே, ஏதோ அவசரத்துல எழுதியிருக்கேன்.’ அந்த கரெக்சனையும் சொல்வார். எனவே ஒருவகையிலே அந்த படைப்பை செம்மைப்படுத்துனதிலே, அழகுபடுத்தினதிலே, வீச்சைக் கூட்டினதிலே, நிச்சயமா அவருக்கு ஒரு பங்கு இருக்கு. நான் என்ன நினைக்கிறேன்னா, அவர் அடிப்படையிலே ஒரு படைப்பாளியாத்தான் வரணும்கிற கனவுல இருந்த ஒரு மனிதர். நல்ல பெரும் விவசாயக் குடும்பத்தில பிறந்தவர். சினிமாத்துறை சார்ந்துகூட போகணும்னு விரும்பியிருக்கார். அவர் சென்னையில பார்த்த படங்களெல்லாம் உலகத்தரமான சினிமா. உலகத்தின் தரமான டைரக்டர்களைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பார். அவருக்கு இந்த அனுபவம் இருக்கில்லையா, ஒரு திரைப்படத்தினுடைய வடிவம் – அது இலக்கியத்திற்கு ஏதோ ஒரு வகையிலே அவருக்குப் பயன்படுதுன்னு நினைக்கிறேன். அதே மாதிரி ஜானகிராமன், புதுமைப்பித்தன், அழகிரிசாமி மேல அவருக்கிருக்கிற அபரிமிதமான மதிப்பு, என்கிட்ட நிறைய சொல்லியிருக்கிறார். விக்டர் ஹ்யூகோ எப்படி கெட்டிக்காரன். பாதசாரி எப்படி மொழியில கெட்டிக்காரன், சேக்ஸ்பியரோட சொல்வீச்சின் உக்கிரம் எப்படியிருக்கு. நவீன ஒட்டுமொத்த கவிஞர்களைவிட ஜெயமோகன் ‘கொற்றவை’யில அடஞ்சிருக்கிற இடம் என்ன? இப்படி ரொம்ப கனமாப் பேசியிருக்கார். எங்கிட்டத்தான் மனம்விட்டுப் பேசியிருக்கார்ன்னு நெனைக்கிறேன். காமமெல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். வாழ்க்கையில, இலக்கியத்திலே நேர்கிற கவித்துவ உச்சங்கள் முதன்மையாப் பார்க்கிற மனம் அவருக்குள்ள நீக்கமற இருக்கு. இந்த வாசிப்பு, சினிமா அனுபவம், அவருக்கே இருந்த படைப்பு மீதான ஒரு நாட்டம், இதெல்லாம்தான் நம்மை அளவீடு செஞ்சு அதை நேர்த்திப் படுத்தியிருக்கு. நிச்சயமா என்னோட படைப்பைச் செறிவாக்கினதிலே, அழகுபடுத்தினதிலே, வீச்சைத் தூண்டிவிட்டதிலே, அவருக்கும் பெரும் பங்கிருக்கு.

நித்யா: விவசாயம் சார்ந்து வாழ்ந்திருக்கீங்க. விவசாயம் குறித்து நிறைய நுணுக்கங்களைப் பகிர்ந்துக்கறீங்க. ஏன் அது சம்பந்தமா குறிப்புகள் மாதிரி, கட்டுரைகள் மூலமா அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தக்கூடாது?

வேணுகோபால்: ஏற்கனவே சில கட்டுரைகள் எழுதியிருக்கேன். ஆனா பதிப்பிக்கலை.

நானே ஒரு எஞ்சினியர் மாதிரி யோசிப்பேன். ஒரு வெள்ளாமை வைக்கிறோமில்லையா, துவரை வைக்கிறோம். துவரை வைச்சோம்னா, அதுலயே பல வெரைட்டி இருக்கும். கருப்புத் துவரை இருக்கும். வெள்ளைத் துவரை இருக்கும். அது ஊடுபயிராத்தான் போடுவாங்க. ஆனா முழுசா விவசாயம் பண்ணலாம்னு சொல்றேன். துவரைல நான் கண்டுபிடிச்சது என்னன்னா, அந்த கம்பெனித் துவரையிலேயும், குறுகிய நாள்ல பூவெடுத்து விளையறது இருக்குது. ஒரு மாசம் கழிச்சு விளையறதும் இருக்கு. ஆனால், ஒரு மாசம் கழிச்சு விளையற அந்தத் துவரைல, அதிகமாகக் காய்க்குது. அந்த ஒரு மாசத்துக்கு முன்னாடி பூவெடுக்குது இல்லையா, அதுல ஆக்கைகள் கொஞ்சம் காற்றோட்டமா இருக்கும். காற்றோட்டம்னா, அடர்த்தி இல்லாத இருக்கும். அதுல குறைவா இருக்கும். மூன்று மடங்கு அந்த ஒரு மாசத்துக்குப் பின்னாடி வர்றது கொடுக்கிறதும் இருக்கு. துவரை நம்ம எப்ப விதைக்கிறோம்னா, சித்தரை மாசம் விதைக்கிறோம். நான் என்ன சொல்றேன்னா, சித்திரை மாசம் – அந்தத் துவரை வரும்போது விலை வீழ்ச்சினு சொல்லிடறாங்க. ஆனால் விலை வீழ்ச்சியோ விலை ஏற்றமோ விளைச்சல் சார்ந்ததல்ல. நம்மளா வைச்சுக்கிடறதுதான். இருந்தாலும், ஒரு விவசாயிக்கு ஒரு துவரைல காய்க்கிறதைவிட, இது மாதிரி மூன்று மடங்கு காய்க்கிறதுதான் நல்ல விஷயம். இதை என்ன பண்ணலாம்னா, வெள்ளைத்துணி கட்டி கட்டிவைச்சு, நல்லா விளைகிற துவரையை மட்டும் எடுத்து பக்குவப்படுத்தி வைக்கலாம். விதைக்கிற போது ஒரு மாசம் முன்னாடி விதைக்கலாம். அதாவது சித்திரை மாசம் விதைக்கிறதுக்குப் பதில் பங்குனி மாசத்துல விதைக்கலாம். கரெக்ட்டா கார்த்திகை பிறக்கும்போது பூவெடுத்திடும். மார்கழி முடியும்போது பிஞ்சு விட்டு ஆரம்பிச்சு ஒரு மாசத்துல காயாயிடும். இப்ப எடுத்தபின்னாடி நம்ம அதைப் பக்குவப்படுத்தி வைக்கணுமில்லீங்களா. நல்லா காயவைச்சு, அதுக்கு செம்மண் குலைச்சுப் புரட்டிக்கொண்டுவந்து, நல்லாக் காய்ஞ்சுடும், தண்ணீர் சத்தெல்லாம் இறங்கிடும். தண்ணீர் சத்து இருந்தா மடிவு வாடை அடிக்கும் – விதை முளைச்சுக் கருகிப் போயிடும். விதை முளைப்பு வரக்கூடாது. விதைப்புல போட்டாத்தான் விளைக்கணும். கல்லு மாதிரி இருக்கணும். ஈரம் இருந்திச்சுனா முளைச்சிரும். நிலக் கடலையும் அப்படித்தான். பாசிப்பயிரில நல்லா செம்மண் போட்டு, உருட்டி, குடுவையில போட்டு வைச்சுட்டோம்னா, அடுத்த வருசம் வரைக்கும் – அஞ்சும் வருசம்னாலும் சரி, இருபது வருசம்னாலும் சரி, வண்டு மொய்க்கவே மொய்க்காது. எங்க அம்மா செய்யறதை நான் பார்த்திருக்கேன். நானும் கூடமாட அதை உருட்டியிருக்கேன். இது மாதிரி – இப்பத் துவரைக்குனு இல்ல, அவரை விதையையும் அந்த மாதிரி எடுத்துவைப்போம்.

இப்படி ஒரு விவசாயியாக நான் கவனித்தத்தை, எங்க அப்பா அம்மா செய்யும்போது, கூட இருந்து பார்த்ததை, அந்த தொழில்நுட்பங்களைப் பற்றியெல்லாம் எழுதலாம். துவரை, தென்னை, நெல் பற்றியெல்லாம் யாராவது எழுதியிருக்காங்களான்னு தெரியலை.

சுரேஷ்: உங்களுடைய கட்டுரைத் தொகுப்பு ஒன்று வரணும்.

வேணுகோபால்: தொகுத்திடலாம். நான் எழுதிட்டு வரேன். கு.ப.ரா. ந.பிச்சமூர்த்தியைப் படிச்சேன். அந்த உயரத்துக்குப் போகலை. நல்ல ரைட்டர் தான். ஆனா கு.ப.ரா. அளவில்லை. கு.ப.ரா.வையும் லா.ச.ரா.வையும் மனரீதியா திடீர்னு ஒப்பிடணும்போலத் தோன்றுச்சு. கு.ப.ரா. எந்த இடத்தில மெஜஸ்டிக்கா இருக்கார்னா, பெண்களுடைய குமுறுலை, தன் கணவனோ மாமியோரோ மாமனாரோ, ஒரு ஆண், மிக முக்கியமா, எதிர் பால், நேருக்கு நேரா குமுறுயிருக்கா சார். வாய்ப்பு வரும்போது தன்னுடைய உள்ளக்கொதிப்பைக் குமுறியிருக்கா. லா.ச.ரா. அந்தக் குமுறலைச் சாந்தப்படுத்தியிருக்கார். அதை நேருக்கு நேரா பெண் ஆணுக்கு முன்னாடி வைக்கலை. அந்தக் குமுறலை இயல்பான ஒன்னுதானேனு – ஒரு கதைக்குள்ள – ஆனா அப்படி இருக்கமுடியாது. உண்மைக் காரணத்தை யார் அதிகமாச் சொல்லியிருக்காங்கன்னா கு.ப.ரா. சொல்லியிருக்கார். இவர்கிட்ட (லா.ச.ரா) என்ன அழகு வருதுன்னா, அது ஆறின பின்னாடி ஒரு தன்னியல்போடு ஒரு நகர்வு வருமில்லையா, இதுவும் கடந்து செல்லும்னு – அந்த இடத்திலிருந்து கதையை ஆரம்பிக்கிறார். அந்த வேதனை இப்ப சாந்தப்பட்டு நகருது. ஒருவகையான நினைவோட்டத்திலதான் எல்லாக் கதையையும் சொல்லுவாரு. கு.ப.ரா. அப்படியில்லை. நேருக்கு நேரா நிகழ்ந்துகிட்டு இருக்குது. இந்தச் சம்பவம் இந்த கணத்தில் நிகழ்ந்துகிட்டிருக்கு. அந்த கணத்தினுடைய உச்சம் அவன் வரும்போது வெடிக்குது. ‘விடியுமா’ கதையில ‘என்னடா அம்பி, அவரோட என்னடா வாழ்ந்தேன். நாள்தோறும் சண்டை. ஒவ்வொரு நாளும் சச்சரவு. நான் என்னத்த வாழ்ந்துட்டேன்,’ அப்படினு ஒரு வசனம் வருதில்லையா, அடிச்சுட்டா இல்லீங்களா, அந்த கணத்தில. இம்மாதிரி எல்லாத்திலயும் இருக்கு கு.ப.ரா.கிட்ட. பெண் சார்ந்து, விதவையோ, கணவனைப் பிரிந்து இருப்பவளோ, மாமியார்னால பிரிந்து இருப்பவளோ, எல்லா இடத்திலேயும் அது இருக்கு.

லா.ச.ரா.வுடைய ஒரு கதைல – ஒருத்தன் சைக்கில்ல போறான். நடுரோட்ல ஒரு ஆடு படுத்திருக்கு. வந்த வேகத்துல அடி, நடு முதுகுல விட்டுட்டுப் போயிடறான். முதுகு ஒடிஞ்சு போயிருது. ஆடு எந்திரிச்சு நிக்க மாட்டேங்குது. நிக்குது. பொத்துனு விழுகுது. அப்போ அதனோட குட்டி பால் குடிக்கச் சுத்திசுத்தி வருது. அப்படினு எழுதறார். போயட்டிக்னு சொல்றோமில்ல சார், இந்த இடத்தைத்தான் நான் போயட்டிக் போயட்டிக்னு சொல்லிட்டே இருக்கேன். இது வலிந்து சொல்லக்கூடாது. தன்னியல்போட அந்தக் கதைல வந்துட்டிருக்கு. இதுமாதிரி காட்சிகள் இருக்கில்லீங்களா, சில இடத்துல பிரமாதமா போட்டிருப்பார். இந்தப் போயட்டிக்கான இடம் கு.ப.ரா.வுக்கு இல்லை. காரணம், லா.ச.ரா.வுக்கு மரபு கொடுத்த கை. இந்தியப் பண்பாட்டு மரபு இவரை அந்த இடத்துக்கெல்லாம் கொண்டு போகுது. வடிவத்தை மீறி அவர் போவார்னா, அது காவிய மரபுதான். நவீனத்துவத்தில அது வராது. இந்தக் காருண்யத்த அவங்க neglect பண்ணுவாங்க. எல்லாமே கசப்பானதுதான். எல்லாமே சந்தேகத்துக்கு உரியதுதான், அப்படினு ஒரு பார்வை இருக்கு. சந்தேகத்துக்குரியது தான். ஆனாலும் இம்மாதிரியும் நடந்துறுது.

சுரேஷ்: நீங்களும் ஜெயமோகன் மாதிரி, உங்க முன்னோடிகள் பற்றி ஒரு தொகுப்பு எழுதணும். இப்ப சாருவும் எழுதறார்.

வேணுகோபால்: நான் ஏற்கனவே ஒரு முப்பது கட்டுரைகளுக்கு மேல எழுதி வைச்சிருக்கேன். பல்வேறு சிதறிக் கிடக்குது. தொகுத்துப் போடணும். நீங்க சொல்றதுமாதிரித் தொடர்ந்து எழுதறேன்.

இப்போ யுவன் சந்திரசேகர் கூட கவிதைகளை முன்வைத்து ஒரு தொடர் எழுதிட்டு வர்றார்.

ஒரு கட்டுரை எழுதறது இருக்கில்லீங்களா, முழுக்க ஒருத்தரைப் படிச்சிட்டு, வண்ணநிலவனையோ, வண்ணதாசனையோ, கி.ரா.வையோ, பூமணியவோ, புதுமைப்பித்தனையோ, ஒருத்தரைப் படிக்கிறதுக்கு ஒரு பத்து நாள், எழுதறதுக்கு ஒரு ரெண்டுமூணு நாள் வேணும். யோசிச்சுப் பார்த்தா, 15 நாள் இதுக்காக உட்கார்ந்திருக்கோம், ஒரு சிறுகதை எழுதியிருக்கலாமோ – அப்படிங்கிற மாதிரித் தோணுது. ஆனா, எழுதினதையாவது தொகுத்துப் போட்டுரலாம்.

என்னிடம் இன்னொரு விஷயம் என்னன்னா, ஒரு பத்திரிக்கையாளனை நான் நாடிப் போகணுமாங்கிறதுதான். உதாரணமா, ஜானகிராமனைப் பற்றி ஒரு 35 பக்கம் பத்து வருஷத்துக்கு முன்னாடி எழுதியிருக்கேன். அதுல ஒரு சின்ன பீஸைத்தான் புதுப்புனல் போட்டாங்க. ஜானகிராமனைப் பற்றிக் கொடுங்கனு கேட்டபோது, ஒரு அஞ்சு பக்கத்துக்கு – அந்தக் கட்டுரைல இருந்து எழுதலை. அந்தக் கட்டுரையைக் காலச்சுவடுக்கு அனுப்பினேன். ஆனால், அதுல நான் ஒரு மதிப்பீடு பண்ணியிருந்தேன் – தமிழில் நான்கே நான்கு பேர்தான் மிகப்பெரிய சிறுகதை எழுத்தாளர்கள். பிறர் இருந்தாங்க. ஆனா, மிகப்பெரிய ஆளுமைகள் நான்கு பேர்தான்னு அதில் எழுதியருந்தேன்: புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜானகிராமன், ஆ.மாதவன். மற்ற ஆட்கள் ஒரு சிறுகதையை விஸ்தீரணம் பண்ணினவங்க – இதுல சுந்தர ராமசாமியோ மற்றவர்களோ ஒரு எல்லை வரைக்கும் போயிருக்காங்க. இந்த லிஸ்ட்ல அவங்க எல்லாம் வரமாட்டாங்கன்னு அன்றைய மனநிலையில் எழுதியிருந்தேன். அப்படினுதான் அந்தக் கட்டுரையே தொடங்குது. பத்து வருஷத்துக்கு முன்னாடி. அதுல அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வரி இருக்கில்லீங்களா. என்னுடைய மதிப்பீடு இது. நீங்க நிறுவுங்க அவர் மிகவும் முக்கியமான ரைட்டர்னு. ஆனால், அந்தக் கட்டுரையைப் போடவே இல்லை. பக்கம் அதிகமா இருக்குன்னா எடிட் பண்ணிப் போடலாம். அதுவல்ல விஷயம். ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு அரசியல், ஒரு நிலைப்பாடு இருக்கு இல்லீங்களா.

சுரேஷ்: அதுக்குத்தான் ப்ளாக் மாதிரி விஷயங்கள்.

வேணுகோபால்: அதுதான் முன்னாடியே சொன்னேன். அது மிகப்பெரிய வெளியா இருக்கு. செய்வோம்.

கண்ணன்: கதை சொல்லும் முறையில நீங்க சில சோதனைகள் எல்லாம் செய்து பார்த்திருக்கீங்க. தீராக் குறையில, முழுக்க முழுக்க அந்த பாட்டி பேசுற மாதிரி இருக்கு.

வேணுகோபால்: மோனோலாக். ஒற்றைக் குரல்ல.

கண்ணன்: அந்த வடிவத்தை எப்படி அடையறீங்க. கிடந்த கோலம்ல இடையில இடையில அவள் சிந்திக்கிற மாதிரி அவளுடைய எண்ணவோட்டம் தனியே வரும். கதை சொல்லிட்டே வர்றீங்க. இடையிலே டக்குனு அது வரும். மறுபடி கதையைத் தொடர்ந்து சொல்வீங்க.

வேணுகோபால்: கிடந்த கோலத்துல வருவது எல்லாருக்கும் நேர்வது தான். தற்சமயம் ஒன்னு நிகழ்ந்துகிட்டே இருக்கும். ஆனா பழசு போய்ட்டு வரும். இது ஒரு ஊசலாட்டம் மாதிரித்தான். ஆனா அந்த ஒற்றைக்குரல் என்னன்னா, ஒரு பாட்டியை எங்கேயாவது பார்த்தீங்கன்னா, உட்கார்ந்துட்டீங்கன்னா, அது ஒரு கதை சொல்லும். ‘இப்படி வந்தானா, அதை ஏன் கேட்கிற’ அப்படீனு சொல்லும்போது, இந்தக் குரலை நான் எடுத்துகிட்டேன். ஒரு பாட்டி நாம பேசாம இருந்தா என்ன சொல்லிமுடிக்குமோ, நமக்கு நேரம் இருக்கு, பஸ் வந்துரட்டும், சரி பேசட்டும்னு விடறோமில்ல, ஒற்றைக் குரலுக்குள்ள இத்தனையும் வந்துரும். ‘வாப்பா, வாப்பா, உட்காருப்பா, இன்னாருக்கு…’ அப்படினு அது சொல்லுமில்லையா, இந்த வடிவத்தை அந்த பாட்டியிடமிருந்து எடுத்துகிட்டேன். வேறு சிலர் கூட முயற்சி பண்ணியிருக்கலாம் – இந்த ஒற்றைக் குரலை. ஆனா அது அம்சமா இருக்குது. ஒற்றைக் குரல்ல சொல்லிட்டீங்கனா, சிறுகதையினுடைய ஒருமை கூடிவருவது பிரமாதமா ஆயிடும். அவ எவ்வளவு சொல்லமுடியும்கிற எல்லை இருக்குமில்லையா, அந்த எல்லைக்குள்ள நாம சொல்லிமுடிக்கணும். டைமிங் இருக்குது. அவன் வந்திருக்கான் ஊருக்கு. பெரியம்மாவைப் பார்த்துட்டுப் போகணும்னு வர்றான். ரொம்பப் பிரியமா இருக்கான். இவன்கிட்ட கொட்டித் தீர்கணும். எந்த அளவுக்குக் கொட்டித் தீர்க்கிறது. நம்மளுக்கும் ஒரு எல்லை இருக்கு. இதை சொல்லி முடிச்சுட்டா கதையை நிப்பாட்டிக்கிடலாம். அந்த இடம் கிடைச்சவுடனே, உத்தி ஃப்ளாஷ் ஆன இந்தக் கதையை எழுதிறலாம்னு தோணுச்சு.

கண்ணன்: முதல்ல உங்களுக்கு வடிவம் தான் தோணுமா?

வேணுகோபால்: இரண்டும் தோணும். சில நேரத்துல, ரெண்டும் சரியான நேரத்துல தோணும். இருட்குகைக்குள் விரியும் ஒளிப்புகை. – அது எப்படித் தோணுச்சுனா, ஒரு நாள் திடீர்னு என்ன நினைக்கிறேன்னா, மரபு ரீதியா அசரீரினு ஒன்னு இருக்கு. இப்ப நாம பேசிட்டிருக்கிறதெல்லாம் அசரீரி கேட்டுட்டிருக்கும். நம்மள யாராவது தூக்கிட்டுப் போனா அசரீரி அவங்ககிட்ட பேசும். இது நம்ம தமிழ் இலக்கியம் படிக்கிறதுனாலயோ, மணிமேகலை படிப்பதாலோ, பொதுவாவே தமிழ்நாட்டில அசரீரிங்கிற ஒரு விஷயம் நம்மளுக்குத் தெரியும். ஒருத்தன் இறந்தா சொர்க்கத்துக்குப் போறான்னு சொல்றான். எவ்வளவு நேரத்துல சொர்க்கத்துக்குப் போலாம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாமா. இறந்தபிறகு அவன் உயிர் அப்படி நின்று இந்த உலகத்தைப் பார்த்தா எப்படியிருக்கும். அது தான் இருட்குகைக்குள் விரியும் ஒளிப்புகை. தன்னைப்பற்றி நண்பர்கள், அவன் இவன் என்ன நினைக்கிறாங்கனு அந்த ஒளி உங்க நெஞ்சுக்குள்ள போகுது. நீ என்ன நினைக்கிற. ஒருத்தன் நினைக்கிறான், ‘படுபாவி செத்துத்தொலைஞ்சான்டா.’ அவனுக்கு ஒரு சந்தேகம் இருக்குது. ஒரு சீன் இருக்கும். சோளக்காட்டுக்குள்ள ஒரு தலித் பெண்ணு ஒரு முதலாளியை செருப்பால டப்பு டப்புனு அடிப்பா. எதுக்கு அடிச்சிருப்பானு யோசிச்சுப் பாருங்க. அது சொல்லியாச்சு. அதுக்கு மேல நீங்க சொல்லவேண்டியதில்லைங்கிற மாதிரி ஜம்ப் பண்ணிப் போறதுக்கு, இந்த வடிவம் உதவுது. இவனைக் குளிப்பாட்டித் தூக்கி பூத உடலை அடக்கம் பண்ற வரைக்கும் அப்படியே பார்க்கிறான். அப்படியே அந்தப் புகை தனது இறுக்கம் தளர்ந்து தளர்ந்து மேகமாக – மேகமும் சில சமயம் அப்படியே சன்னமாகிக் கரைஞ்சு போயிடும். அந்த மேகம் என்னுடைய இமேஜ்ல இருந்து அப்படியே புகையாய் ஒன்னுமில்லாமக் கரைஞ்சுடுவான். அந்த வடிவத்தைக் கொடுத்தேன்.

கண்ணன்: உங்களுடைய அரசியல், வேறு ஏதாவது நிலைப்பாட்டை மீறி, வேறு ஒரு நிலைப்பாட்டை படைப்பில் எடுக்கிற மாதிரியான இடங்கள் இருக்கா?

வேணுகோபால்: பண்ணியிருக்கேன். ஆட்டத்திலேயே அந்த மாதிரி ஒரு இடம் வருது. எனக்கு திமுக மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. ஆனா குடிச்சுப்போட்டு ஒருத்தன் அல்லாடிகிட்டுச் சொல்லுவான், ‘மறுபடியும் எங்க தலைவன் வருவான்டா.’ மனப்பூர்வமா ஒரு திமுக தொண்டனுடைய மனநிலையில் இருந்துதான் சொல்றேன். எந்த விதமான விமர்சனமும் இல்லாம…ஒரு 60-65 வயசு மனிதன், அப்படி அந்த இடம் சொல்லியிருக்கேன். அதே மாதிரி அதிமுகவை வேறு வகையா சொல்லியிருக்கேன். கரைவேட்டி கரைவேட்டினு கூட வரும். நான் எப்போதுமே கட்சியை வைத்துக்கொண்டு ஒரு மனிதனை எடைபோடுவதே இல்லை. நான் திரும்பவும் சொல்றேன், ஒரு கம்யூனிஸ்டுகாரன் கிட்டயும் ஒரு அற்புதமான மனிதன் இருக்கான்னு தான் சொல்றேன். அத தூய கலையிலக்கியவாதிகள் இனங்காணல. நான் அதத் தூக்க நினைப்பேன்.

சுரேஷ்: கம்யூனிஸ்டுகாரன் தான் அற்புதமான மனிதன்னு நினைக்கிறவங்கதான் அதிகம் 🙂

வேணுகோபால்: படைப்புக்குள்ள ஒரு விமர்சனம் இருக்கில்ல, அதுக்காக நான் சொல்றேன். அதாவது, ஒரு கம்யூனிஸ்டுகாரன் தான், அவன் சம்பாதிக்கப் போறான், ஒரு வீடு கட்டிட்டான், ஒரு லௌகிக தளத்தில எல்லாருக்கும் இருக்கிறதுதான். இதை வைச்சு ஒரு கம்யூனிஸ்டுகாரனைச் சார்ஜ்(charge) பண்ணாதீங்கன்னு சொல்றேன். நீ வீடுகட்டுற, அப்புறம் அவன் வீடு கட்டக்கூடாதா? நாம எல்லாருமே நல்ல மெட்ரிக்குலேஷன் கொண்டுபோய் போடுறோம். அவர் கொண்டுபோய் போட்டவுடனே ஒரு சார்ஜ் இருக்கு. இன்னும் கொஞ்சம் திருப்பிப் போடுங்க. ஒரு தமிழ் பற்றாளர், ஒரு இங்கிலிஷ் மீடியத்துல போட்டார்னா, காலத்தினுடைய கட்டாயம். இதை வைத்துக்கொண்டு, தமிழ் பற்றாளர்னு ஏத்துக்க மாட்டேங்க முடியாது. கிண்டல் அடிக்கலாம். ஆனா அவனுக்கும் ஒரு சுதந்திரம் இருக்கும்கிறதையும் நான் சொல்றேன். படைப்புனு வரும்போது இப்படி. தனிப்பட்ட முறைல எனக்கு விமர்சனங்கள் உண்டு. பல்வேறு கட்சிகள் மீது. படைப்புனு வரும்போது, முதல்ல அவன் மனுஷன். நல்லவனா இருக்கலாம், கெட்டவனா இருக்கலாம்.

கண்ணன்: நீங்க தமிழ் படிச்சதனால, பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கம் ஏதேனும் உங்க படைப்பில இருக்கா?

வேணுகோபால்: முன்னாடி, ஒரு கருத்தைக் க.நா.சு. வைத்தார். தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு இலக்கியம் படைக்கத் தெரியாதுன்னு. ஜெயன்கூட தொடர்ந்து இதைக் கொஞ்ச நாள் சொல்லிட்டு இருந்தார். அப்புறம் நானெல்லாம் எழுத வந்த பின்னாடி அதைக் கொஞ்சம் மாத்திகிட்டார்னு வைச்சுக்கோங்க. அதுக்குக் காரணம் என்னன்னா, அந்த காலத்துல எழுதினது, மு.வ. போன்றவர்கள் எழுதின இலக்கியம், திருக்குறளுக்கு ஒரு உரை எழுதின மாதிரித்தான். ஒரு குறளுக்கு ஒரு பாத்திரத்தை உருவாக்கின மாதிரித்தான். பொய்மையும் வாய்மையிடத்தன்னா, அதுக்கு ஒரு பாத்திரம். சொந்த அனுபவங்களிலிருந்து, வாழ்க்கையிலிருந்து அவங்க எதுவமே எழுதலை. சமூகத்திலிருந்து ஒரு கதையை இன்றைக்கான ஒரு பொருள்படும்படி, இன்னிக்கு வாழ்க்கைக்கு அர்த்தம் தரும்படியா ஒன்னும் எழுதலை. திருக்குறள்ல இருக்கு – அதுக்கு ஒரு வடிவம் தர்றாரு. அதனாலு அவர் அப்படிச் சொன்னாரு.

ஆனால், எனக்கு தமிழ் இலக்கியத்தினுடைய எந்த பாதிப்பும் இல்லாமல் போச்சுங்கிறதுதான் நீங்க என்னைப் படிக்கிற போது பார்க்கவேண்டியிருக்கு. சிலப்பதிகாரம் படிச்சிருக்கேன். கம்ப ராமாயணம் படிச்சிருக்கேன். சங்க இலக்கியம் படிச்சிருக்கேன். நீங்க யோசிச்சுப் பார்த்தீங்கன்னா, எந்த பாதிப்புமே இருக்காது. நம்ம முத்துலிங்கத்தினுடைய பழந்தமிழ் இலக்கிய பாதிப்பு நல்லா இருக்கும். தேவாரமும், திருப்பாசுரங்களும் எல்லாமே விழுந்திட்டிருக்கும். சுஜாதா கதைலகூட அவ்வப்போது வரும். நாஞ்சில் கதைகள்ல வரும்.

கண்ணன்: உங்களுது தலைப்பிலதான் இருக்கு.

வேணுகோபால்: தலைப்புகூட நண்பர்களுடைய வற்புறுத்தலினால் இருக்கும். எனக்குப் பழந்தமிழ் இலக்கிய பாதிப்பு இல்லைங்கிற மாதிரித்தான் தோணுது எனக்கு. நான் rawவாகத்தான் வாழ்க்கையிலிருந்து எழுதிகிட்டிருக்கேன்.

சுரேஷ்: இருந்தா நல்லாயிருக்கும்னு நினைக்கிறீங்களா?

வேணுகோபால்: இருக்கணும். கண்டிப்பா. சிங்காரத்தையெல்லாம் நாம படிக்கும்போது…அது என்ன சொல்றது.

கண்ணன்: சிங்காரம் குறைவாகத்தான் படிச்சிருக்காரு. ஆனால் அதையும் சரியாப் பயன்படுத்தியிருக்கார்.

வேணுகோபால்: ஆமாம். பண்ணியிருக்கார். ஒரு எள்ளல் தொணிக்கும், இன்னிக்கு இருக்கிற தமிழ்ச் சமூகமும், பழைய தமிழ்ச் சமூகமும்னு சொல்லிட்டுப் போகும் போது, இலக்கியத்தின் பாதிப்புப் பிரமாதமா இருக்கு. அந்தக் கதைக்கு இன்னொன்னு இருக்கு. தமிழ் இலக்கியம் படித்த, அல்லது அந்தப் பாரம்பரியத்தில வந்த பாத்திரமாக இருந்தால் சரியாகப் பொருந்தும். நான் எழுதினது சாதாரண ஒரு ஆள். அவனுக்கு இலக்கியம் தெரியாது. இப்படி வைச்சுங்களேன். ஒரு தமிழாசிரியன் மாதிரி ஒருத்தன் நாவலுக்குள்ள வந்தான்னா, நாம சொல்லக்கூடிய எல்லா இடத்தையும் அடைஞ்சிடணும். இப்போ, ஒரு கேள்வி. நாஞ்சில் சொன்னதுக்கு, ஒரு கேள்வி வருதில்லைங்களா, நாஞ்சில் சொல்றாரா, கேரக்டர் சொல்லுதாங்கிறது இருக்கில்லீங்களா? பாத்திரத்துக்குத்தான் நான் முக்கியத்துவம் கொடுப்பேன். எனக்கு நான் எந்த இடத்திலேயும் முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை. வேணுகோபாலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட ஒரு சிறுகதைனு சொல்லுங்க, இல்ல ஒரு படைப்புனு சொல்லுங்க.

இன்னொன்னு கூடச் சொல்லலாம். என்னை அவமானப்படுத்திக்கொள்வதற்கு நான் தயாரா இருக்கேன். ஒரு படைப்பாளிக்கு அது ரொம்ப வேணும் சார். அல்லது தன்னைச் சிதைச்சுக்கிறதுக்கு நீங்க தயாரா இருக்கணும். அடிக்கடி சொல்றதுதான் – சொந்த வாழ்க்கையை நாம பேசாம இருக்கிறது நல்லது.

கண்ணன்: இதுவரைக்கும் நாங்க கேட்காமல், நீங்க பேசாமல் விட்டுப் போனது ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?

வேணுகோபால்: நிறைய இருக்கு. ஒரு நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி. திடீரன்னு அம்பை போன்ல கூப்பிட்டார். 2000க்குப் பின்னாடி எழுதிகிட்டு இருக்கிற இளைஞர்கள்ல நீங்க பவர்புல்லான ரைட்டர்ன்னு சொன்னாங்க. சந்தோசம்மா அப்படின்னேன். அவங்கள அதுவரைக்கும் பாத்ததுகூடக் கிடையாது. பேசுனதும் கிடையாது. அவங்க சொன்னாங்க, ‘எங்க ஸ்பாரோ அமைப்பு வழியா உங்கள மிகச்சிறந்த இளம் எழுத்தாளர்னு கௌரிவிக்கலாமன்னு தேர்ந்தெடுத்திருக்கோம்.’ சந்தேசம்மான்னு சொல்லிட்டு, உங்க ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதை சின்ன வயசில படிச்சது இன்னும் பசுமையா இருக்குன்னேன். அப்புறம் அரைமணிநேரம் கழிச்சுக் கூப்பிட்டாங்க. எங்க அமைப்பில இருந்து தேர்ந்தெடுக்கல, சும்மா அப்படிச் சொன்னேன், அப்படியன்னாங்க. சரிம்மா, அதுனால என்ன அப்படியன்னேன். அப்புறம் ஒரு மணிநேரம் கழிச்சு வேணு உங்களத்தான் 2000க்குப்பின் வந்த சிறந்த எழுத்தாளரன்னு தேர்ந்தெடுத்திருக்கோம், அப்படின்னார். நான் ஒரு சிரிப்பு மட்டும் சிரிச்சேன். ஒரே நாள்ல மூணுமணி நேரத்துக்குள்ள என்னென்ன மாற்றம். அப்புறம் அது என்னாச்சுன்னு தெரியல. இங்க என்ன நடக்குது? இது நடந்து அஞ்சுவருசமாச்சு. எங்கயும் சொல்லல. இது மாதிரி நிறைய இருக்கு. கண்ணன், நான் சுயம்புவா வந்தவன், கண்ணன். சுயம்புவாகவே எழுந்து நிப்பேன். அதுதான் அவங்களுக்கு முன்னாடி நான் செய்யவேண்டிய காரியம்.

தியாகு: தமிழ்கூறும் நல்லுலகுக்கு உங்கள் செய்தி 🙂

வேணுகோபால்: இதுதான் முதல் பேட்டி. வாழ்க்கையிலேயே. இணையமே தெரியாத ஒருத்தனைப் பற்றி இணையத்துல போடறீங்க.

உலகப் படைப்பாளிகள் பூராவுமே, தன்னையும் தன் சமூகத்தையும் கடைந்து கடைந்து, அமுதத்தையும் விஷத்தையும் காட்டி, ஏதோ ஒரு வகையில சமூகத்தை முன்னெடுத்துத்தான் கொண்டுபோயிருக்கான். எல்லாப் படைப்பாளியும். வால்மீகி படைப்பாளி ஆகலைனா, அவர் வேற ஒன்னா இருப்பார். நானும் கூட அப்படித்தான். ஆனால் அந்தப் படைப்பு மானுட சமூகத்துக்கு எப்போதுமே ஒரு கனிவு, அல்லது ஒரு தாய்மையைச் சுரந்து கொடுத்துகிட்டேதான் இருக்கும். அதை நோக்கத்தான் எல்லா படைப்பாளியும் – மேஜர், மிக முக்கியமான, ஆளுமையான படைப்பாளியாக இருப்பவன் – மணிமேகலைல, அந்த படைப்புல எத்தனை குறைபாடுகள் இருந்தால் கூட, அதுல அமுதசுரபி என்கிற ஒரு கற்பனை வடிவம் இருக்கில்லீங்களா, அது நாம எங்க பசியைப் பார்த்தாலும், நாம ஒரு ரூபாய் எடுத்துப் போடுறோமில்ல, அது அமுதசுரபிதான். ஏதோவொரு கோட்பாடு அதுல. இதை சீத்தலைச் சாத்தனார் கண்டுபிடிச்சார். அதே மாதிரித்தான் மனிதன் என்பவன் – ஒரு சின்ன சுவருக்குள்ள அடைக்க முடியாது. ஆயிரம் வாசல் அவனுக்கிருக்கு. அவனுடைய வீச்சு பிரம்மாண்டமானதுங்கிறத தஸ்தயெவ்ஸ்கி சொல்லிருக்காரு. இந்தக் கனவு இருக்கில்லையா, பாரதியும் அப்படித்தான் சொல்லிருக்கார். தன்னைப் பற்றிச் சொல்லும்போது கூட, மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடுனு சொல்றார். எல்லாமே ஒரு சுயபரீசலனைதான். எனவே, இந்த உலகத்தினுடைய பெரும்கனவுகள், இந்த சமூகத்தின் மீதான மாபெரும் அக்கறையினால்தான் இந்தப் படைப்பாளிகளெல்லாம் இன்னிக்கு முன்னாடி நிற்கறாங்க. அந்தக் கனவுகளோட ஒரு படைப்பாளி எண்ணும்போதுதான், இன்னிக்கு இல்லைனாலும் ஒரு ஐம்பது வருஷம் கழித்து அவன் பேசப்படுவான். அப்படித்தான் புதுமைப்பித்தனைப் பேசிட்டிருக்கோம். அப்போ, அந்த தார்மீக உணர்விருக்கில்லீங்களா, அதோட எந்த படைப்பாளியும் செயல்படணும். சில அற்ப சந்தோசங்கள் வரும் போகும். அவன் அங்கீகரிக்கலை, இவன் அங்கீகரிக்கலை, இவன் பப்ளிஷ் பண்ணலை, இதைப் பற்றிக் கவலைப்படாம, அதை நோக்கிப் போயிட்டே இருக்கவேண்டியதுதான். படிக்கிறவன் படிக்கட்டும். படிக்காதவன் போகட்டும். ஆனால், மாபெரும் அந்த இடத்தை தரிசிக்கணும்கிறதுதான் என்னோட கனவு.

2 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.