எத்தனை எத்தனை மனிதர்கள்

பாவண்ணன்

paavannan

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சு.வேணுகோபால் எழுதத் தொடங்கியபோது, தமிழ்ச்சிறுகதைகள் ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தொட்டுவிட்டிருந்தன. அவற்றின் செழுமையும் வளமும் என்றென்றும் போற்றக்கூடிய தன்மையுடன் இருந்தன. சிறுகதைகள் புதிய தளங்களைக் கடந்து, புதிய எல்லைகளைத் தொட்டிருந்தன. குறிப்பிடத்தக்க ஆளுமைகள் உருவாகி நிலைபெற்றிருந்தார்கள். அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் உருவாக்கிய நட்பற்ற சூழலைக் கடந்து, சீரான இடைவெளிகளில் மிகச்சிறந்த சிறுகதைகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. கரிய ஏளனம் படிந்த குறுநகைகள் தோன்றித்தோன்றி நிராசைக்குள்ளாக்கி வந்த ஒருவித இறுக்கமான சூழலில், மன உறுதியும் தீராத வேட்கையும் கொண்டவர்கள் மட்டுமே படைப்புகளில் தம்மை இடைவிடாமல் வெளிப்படுத்தி வந்தார்கள்.

’நுண்வெளிக் கிரகணங்கள்’ என்னும் நாவல் வழியாக தொடக்கத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சு.வேணுகோபால், அடுத்தடுத்து சிறுகதை முயற்சிகளிலும் ஈடுபட்டார். வசீகரமான மொழியமைப்போடு எதார்த்தப் பின்னணியில் வாழ்வின் அவலங்களை அவருடைய சிறுகதைகள் முன்வைத்தன. அழிந்துகொண்டிருந்த விவசாயம், வாய்ப்புகளற்று கருகிச் சாம்பலாகிப் போகும் திறமைகள், சந்தர்ப்பங்கள் சார்ந்து நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறிமாறி நிறம்கொண்டு வாழும் தனிமனிதர்கள், எந்தப் பொதுஅறத்துக்கும் உட்படாத அவர்களுடைய மதிப்பீடுகள் என பல்வேறு தளங்களில் மாறிமாறி இயங்கிவந்த அவருடைய சிறுகதையுலகத்தின் நம்பத்தகுந்த தன்மையாலேயே, அக்கதைகள் உடனடியாக வாசகர்களின் கவனிப்பைப் பெற்றன. சிறந்த இளம்படைப்பாளுமைகளை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு பத்தியை தொடர்ந்து நான் அப்போது காலச்சுவடு இதழில் எழுதி வந்தேன். அந்த வரிசையில் நான் குறிப்பிட்டு எழுதிய அனைவருமே இன்று ஆளுமைகளாக மலர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கணிப்பு மெய்யாகியுள்ளது என்பதில் என் மனம் நிறைவடைகிறது. அந்தப் பட்டியலில் ஒரு பெயர் சு.வேணுகோபால்.

சு.வேணுகோபாலின் பெரும்பாலான சிறுகதைகள் இதழ்களில் பிரசுரமாகாமல் நேரடியாக புத்தக உருவத்தில் வெளிவந்தவை. வாழ்க்கை குறித்த ஆழமான பார்வையை அவருடைய படைப்புகள் கொண்டிருக்கின்றன. சம்பிரதாயமான கதைக்களங்களை நிராகரித்து, முற்றிலும் புதிய களங்களை அவர் கட்டியெழுப்பிக்கொள்கிறார். உரையாடல்கள் வழியாக கதையின் மையத்தை நோக்கி அவர் நிகழ்த்தும் பிரயாணம் மிகவும் சுவாரசியமானது. வாழ்க்கையில் மிகமிக இயற்கையாக மனிதர்களின் மேன்மை வெளிப்படும் தருணங்களை அடையாளப்படுத்துவதுபோலவே, மனிதர்களின் கீழ்மை வெளிப்படும் தருணங்களையும் அவருடைய படைப்புகள் முன்வைக்கின்றன. மேன்மைகளையும் கீழ்மைகளையும் எவ்வித சார்புகளும் அற்று மதிப்பிடும் பக்குவமும் முன்வைக்கும் தேர்ச்சியும் அவரிடம் ஒருங்கே காணப்படுகின்றன. அந்தக் குணமே, தமிழில் அவரைச் சிறந்த படைப்பாளியாக அடையாளப்படுத்த உதவும் பண்பாக இருக்கிறது.

எதிர்காலத்தில் சு.வேணுகோபாலின் பெயரை நிலைநிறுத்தப் போகும் சிறுகதைகளில் ஒன்று ’புத்துயிர்ப்பு’ என்னும் சிறுகதை. தல்ஸ்தோய் அடையாளப்படுத்தும் புத்துயிர்ப்பு வேறு. சு.வேணுகோபால் அடையாளப்படுத்தும் புத்துயிர்ப்பு முற்றிலும் வேறொரு தளத்தைச் சார்ந்தது. மழைபொய்த்து பூமியே வறண்டுபோன ஒரு கிராமம். ஆறும் காடும் வயல்களும் சூழ்ந்த கிராமமென்றாலும், எங்கும் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. ஒரே ஒரு பச்சைப்புல் கூட இல்லை. எங்கெங்கும் வறட்சி. இந்த வறட்சியின் பின்னணியில் இயங்கும் ஓர் விவசாயக்குடி இளைஞன் கோபாலின் இறுதிநாள் வாழ்வைப் படம்பிடிக்கிறது இக்கதை. ஒருபுறம் பிள்ளைத்தாய்ச்சியான மனைவி. இன்னொருபுறம், கன்றீனுவதற்காகக் காத்திருக்கும் வீட்டுப் பசு. பசுவுக்குத் தீவனம் கொடுக்க இயலாத ஊர்க்காரர்கள், வந்த விலைக்கு அதை விற்றுவிடுகிறார்கள். ஆனால், முதல் ஈத்தில் பதினேழு லிட்டர் பால் கறந்த பசு, இரண்டாவது ஈத்தில் அதற்குக் குறையாமல் கறக்கத் தொடங்கிவிட்டால் தான் பட்ட கஷ்டமெல்லாம் கரைந்துபோய்விடும் என்ற எண்ணத்தில் புல்லுக்கும் வைக்கோலுக்கும் அலைவதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறான் கோபால். விலைக்குக்கூட அவனால் வைக்கோலை வாங்கமுடியவில்லை. ஒருநாள் முழுதும் அலைந்து திரிந்தும் வெறும் கையோடு திரும்ப நேர்கிறது. பசியோடு பசு நிலைகொள்ளாமல் தவிப்பதை அவனால் நேருக்குநேர் பார்க்கமுடியவில்லை. ஒரு வேகத்தில் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் கவுண்டர் தோட்டத்துக்குச் சென்று வைக்கோல் போரில் வைக்கோலைத் திருடி எடுத்துவர முயற்சி செய்தபோது பிடிபட்டு உதைபடுகிறான். அந்த அவமானத்தில் பூச்சிக்கொல்லியை எடுத்துக் குடித்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்கிறான். அப்போதுதான் அவன் மனைவிக்குப் பிரசவ வலி வந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். பாசப்போராட்டத்தையும் பசிப்போராட்டத்தையும் மனப்போராட்டத்தையும் ஒரே கோட்டில் கொண்டு வந்து சித்தரித்திருக்கும் விதம் சு.வேணுகோபாலின் திறமைக்குச் சான்றாகும்.

இக்கதையின் இறுதியில், பிறந்த குழந்தையை வெயில் படும்படி சிறிது நேரம் பிடித்திருக்கும் சடங்கையொட்டி நகரும் சில கணங்கள் மிகமுக்கியமானவை. அந்தக் குழந்தையை வெயில் படும்படி பிடித்திருக்கும் ஒருத்தி, சுட்டெரிக்கும் சூரியனைப் பார்த்து ”கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் மேலே போகிற சூரியனே, இந்தா இந்தக் குழந்தையைப் பாரு” என்று மனவருத்தத்தோடு சொல்கிறாள். அத்தருணத்தில் அக்குழந்தை உடலை வளைத்து கையையும் காலையும் அசைக்கிறது. உதட்டோரம் ஒரு புன்னகை படர்கிறது. அந்தச் சிரிப்பை கடவுளைப் பார்த்து கேலியுடன் குழந்தை சிரிக்கும் சிரிப்பு என்று எழுதுகிறார் வேணுகோபால். அதையொட்டி, ஒரு மன எழுச்சியின் வேகத்தில் “குழந்தை தெய்வத்தின் தெய்வம், அது ஒருபோதும் எந்த அதிர்ச்சியையும் கண்டு பின்வாங்குவதில்லை” என்று ஒரு வாக்கியத்தை எழுதி கதையை முடித்துக்கொள்கிறார். தன்னிச்சையாக வந்து விழுந்திருக்கும் இந்த வரிதான் புத்துயிர்ப்பு கதையின் மையம் அல்லது கதை நிகழ்த்தும் அனுபவம் என்று சொல்லலாம். குழந்தை எந்த அதிர்ச்சியையும் கண்டு பின்வாங்குவதில்லை. ஆனால் மனிதர்கள் பின்வாங்குகிறார்கள். கோபம் கொள்கிறார்கள். அடித்துக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் கோழைகளாக உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஒருகணம், ஒரே ஒரு கணம் குழந்தை உள்ளத்தோடு அவர்கள் சூழலை எதிர்கொண்டிருந்தால், அவர்கள் பின்வாங்காமால் முன்னோக்கி நகர்ந்திருக்கக்கூடும். எனினும் அகம் கொந்தளிக்கும் மானுடம் என்பதே உலக நியதியாக இருக்கிறது.

வறட்சியின் கொடுமையைச் சித்தரிக்கும் ’உயிர்ச்சுனை’யும் முக்கியமான ஒரு சிறுகதை. மழை இல்லாததால் கிணற்றில் நீர்மட்டம் குறைந்துகுறைந்து ஒருநாள் இல்லாமலாகிவிடுகிறது. இன்னும் சில அடிகள் தோண்டி குழாய்களை இறக்கினால் ஒருவேளை நீர் வரலாம் என்னும் நம்பிக்கை பெரியவரிடம் இருக்கிறது. சொந்த மகளிடமே கடன் வாங்கி, அந்த விஷப்பரீட்சையில் இறங்குகிறார். அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வி அடைந்துவிடுகிறார். தொடக்கத்தில் நீர் வருவதுபோல சில கணங்கள் இறைத்தாலும் அடுத்த சில கணங்களிலேயே நின்றுவிடுகிறது. தாத்தா துக்கத்தில் உறைந்து உட்கார்ந்துவிடுகிறார். கடன் கொடுத்த மகள் கோபத்தில் வெடிக்கிறாள். திருமணத்துக்குக் காத்திருக்கும் இன்னொரு மகள் அவநம்பிக்கையுடன் மெளனம் கொள்கிறாள். யாரும் கவனிப்பாரற்ற சூழலில் கீழே விழுந்து சிராய்ப்புடன் அழுதபடி எழுந்துவரும் பேரக்குழந்தையை அக்கறையோடு விசாரிக்க யாருமில்லை. யாராவது தன் சிராய்ப்பைப்பற்றி விசாரிக்கக்கூடும் என நினைத்த சிறுவன் ஒவ்வொருவரிடமும் சொல்ல முயன்று, தோல்வியில் துவண்டு, அழுகையுடன் நகர்ந்து அங்கிருந்த நாய்க்குட்டியிடம் சொல்லி அழுகிறான். இறுதியில் சொல்லின் பொருள் புரியாமல் ‘நான் செத்துப்போவப் போறேன்’ என்று அக்குட்டியிடம் சொல்லிவிட்டு நடந்துபோகிறான் அச்சிறுவன்.

புத்துயிர்ப்பு சிறுகதையில் இடம்பெற்றிருந்த குழந்தையின் பாத்திரத்துக்கு இணையாக, இக்கதையில் சிறுவனின் பாத்திரம் இடம்பெற்றிருக்கிறது. பெரியவர்களின் துக்கம் ஒரு முனையிலும் சிறுவனின் துக்கம் மற்றொரு முனையிலும் உள்ளது. பெரியவர்கள் தம் துக்கத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. ஏதோ ஒரு தடை அவர்களைத் தடுக்கிறது. உள்ளுக்குள்ளேயே சுமந்து வருந்துகிறார்கள். பாரம் மென்மேலும் அதிகரிக்க வருத்தத்தில் மூழ்குகிறார்கள். தடை எதுவும் இல்லாத சிறுவன் தன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள ஒவ்வொருவரையும் நாடுகிறான். ஆயினும் அதை காதுகொடுத்துக் கேட்க யாரும் தயாராக இல்லை. அதனாலேயே அவன் மனபாரம் இன்னும் அதிகரிக்கிறது. இருவித உயிர்ச்சுனைகளை சிறுகதை அடையாளம் காட்டுகிறது. ஒன்று பூமியின் ஆழத்தில் உள்ள உயிர்ச்சுனை. இன்னொன்று மன ஆழத்தில் உள்ள பரிவென்னும் உயிர்ச்சுனை. ஒன்றைக் காட்டும் விதத்தில் இன்னொன்றையும் உணரவைக்கும் மாயம் இச்சிறுகதையில் நிகழ்கிறது.

இன்னொரு அழகான சிறுகதை ‘வாழும் கலை’. வேலையற்ற கணவனையும் வேலை செய்யும் மனைவியையும் கொண்ட ஒரு குடும்பம். ஒரு காலத்தில் வேலை செய்து சம்பாதித்தவன் அவன். இப்போது வேலை இல்லை. அது ஒன்றே, அவன் மனைவிக்கு அவனை வெறுக்கவும் கண்டபடி பேசவும் போதுமான காரணமாக இருக்கிறது. அவனுடைய பெட்டியைத் தூக்கி வெளியே வீசுகிற அளவுக்கு அந்த வெறுப்பு வளர்ந்துவிடுகிறது. பணமில்லாதவன் பிணம் என்று அவள் சொன்ன சொல் அவனைச் சுடுகிறது. மனம் வெறுத்த சூழலால், அமைதியான இடம் தேடி வெளியே செல்கிறான் அவன். வாழும் கலையைப்பற்றி ஆழமான கருத்துகளைக் கொண்ட உரையைக் கேட்டறியும் ஆவலோடு கருத்தரங்கக்கூடத்தை அவன் நெருங்கிய சமயத்தில் நுழைவுக்கட்டணம் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே அங்கே அனுமதி உண்டு என்கிற உண்மை உணர்த்தப்பட்டதும் அவமான உணர்ச்சியோடு அங்கிருந்தும் வெளியேறுகிறான். ஏற்கனவே மனைவியால் விளைந்த அவமான உணர்ச்சி. பிறகு அந்தக் கருத்தரங்க அமைப்பினரால் விளைந்த அவமான உணர்ச்சி. மனம் கொந்தளிக்க நடந்துசெல்பவனின் கவனத்தை தெருவோரம் நடைபெறும் கழைக்கூத்தாட்டம் கவர்கிறது. நெருங்கிச் சென்று வேடிக்கை பார்க்கிறான். அங்கே ஆடுகிறவர்களும் பசிக்கொடுமையில் மூழ்கியவர்கள். வாழ்வதற்கான வழியைத் தேடுகிறவர்கள். முடிந்ததைச் சம்பாதிக்க முயற்சி செய்பவர்கள். சம்பாதிப்பதை பங்கிட்டுக்கொள்கிறவர்கள். எக்கருத்தரங்கத்திலும் கேட்டறியாத ஞானத்துடன் இயற்கையான ஞானத்துடன் வாழ்கிறார்கள் அவர்கள். யாருடைய சுட்டுதலும் இல்லாமல், இயற்கையிலேயே அவன் அந்த ஞானத்துடன் கரைந்துவிடுகிறான். தன் கையிலிருக்கும் நாணயத்தை, அக்கூத்தாடிகள் விரித்திருந்த சாக்கில் போட்டுவிட்டு, ஏதோ குடோன் பக்கம் நகர்ந்து வேலை தேடும் முயற்சியைத் தொடங்குகிறான். கதையின் இறுதிப்பகுதியில் சற்றே முற்போக்குக்கதையின் சாயல் படிந்திருப்பதுபோல ஒரு தோற்றம் காணப்பட்டாலும், அது உறுத்தலாக இல்லாத அளவுக்கு உள்ளொடுங்கியே இருக்கிறது. வாழும் கலையை கோட்பாடாகச் சொல்லும் ஒரு கோட்டையும் அதை வாழ்ந்து காட்டும் வாழ்க்கையாக இன்னொரு கோட்டையும் இழுத்து வைத்திருப்பதுதான் கதையின் சிறப்பாகும்.

சு. வேணுகோபாலின் சிறுகதையுலகில் விசித்திர மனிதர்களுக்குப் பஞ்சமே இல்லை. பிறந்த குழந்தையை யாரையும் தொடவிடாமலும் குழந்தையின் பசியை அடக்கத் தெரியாமலும் சாகடித்துவிட்டு, குழந்தை இறந்துவிட்டது என்னும் உண்மையைக்கூட உணரமுடியாமல் இறந்த குழந்தையுடன் திரிந்தலையும் பேதைத்தாய் ஒரு விசித்திரம். தன் இயலாமையை மதுவின் வழியாக மறைத்துக்கொண்டு வேலையற்றவனாகவும் யாருக்கும் பிடிக்காதவனாகவும் திரியும் கணவனை நெருங்கமுடியாதவள் தன்மீது சுமத்தப்பட்ட மலட்டுப்பட்டம் தீர மாமனாரை நெருங்கி நிற்கும் இளம்மருமகள் பாத்திரம் இன்னொரு விசித்திரம். தங்கைகளை ஒவ்வொருவராக கரையேற்றும் கடமையை உயிரென நினைத்து, அதற்காகவே தன் வாழ்நாளையெல்லாம் கழித்துவிட்டு, தன் பாலுணர்வுக்கு வடிகாலாக சகோதரியைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணும் சகோதரன் மற்றொரு விசித்திரமான பாத்திரம். அண்ணன் என்று வாய்நிறைய அழைக்கிற பக்கத்துவிட்டு இளம்பெண்ணை, தன் காமப்பசிக்கு உணவாக அழைக்க நினைக்கும் கணவன் பாத்திரமும் விசித்திரம் நிறைந்தது. அவர்கள் விசித்திரமான பாத்திரங்கள் என்பதற்காக அவர்களைப்பற்றி வேணுகோபால் எழுதவில்லை. அத்தகு விசித்திரங்களோடு அவர்கள் வாழ்ந்தே தீரவேண்டியதொரு துரதிருஷ்டவசமான சூழல்நெருக்கடிகளில் எப்படியெல்லாம் சிக்கி அகப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளும்பொருட்டு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஏறத்தாழ இருபதாண்டுகளாக சு.வேணுகோபால் எழுதி வருகிறார். அவருடைய எழுத்துக்கு உரிய கவனம் கிடைக்காத நிலையிலும் அவர் வற்றாத ஆர்வத்துடன் தொடர்ந்து இயங்கிவருவது ஆறுதலாக உள்ளது. எந்தக் கட்டத்திலும் அவர் மனம் எங்கும் கசப்பையோ பெருமூச்சையோ வெளிப்படுத்தியதில்லை. எழுத்தை உயிராக நினைப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். எழுத்தையொட்டி அவர் மனம் உருவாக்கிவைத்திருக்கும் நம்பிக்கை பாராட்டுக்குரியது. மிக அரிய பண்பு இது. வெற்றியோ தோல்வியோ அந்த நம்பிக்கையை ஒருபோதும் அசைத்துவிடமுடியாது.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.