படம்: www.nhm.in
இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு தான் சு.வேணுகோபால் படைப்புகளை இங்கு அணுகுகிறேன். அவருடைய படைப்புகளில் ஒரு சிறு பகுதி தான் இவை என்றாலும் அவருடைய கதையுலகத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.
‘நிலம் எனும் நல்லாள்’ நாவல் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவனுடைய கதை. நாவல் முழுக்க முழுக்க அவன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் நேர்ந்த அசந்தர்ப்பமான நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டேயிருக்கிறான். தம்பியின் மரணம், விவசாயத்தின் வீழ்ச்சி- இது எல்லாவற்றையும் விட, அணுக்கமில்லாத மனைவி. கவலைகளுக்கு குறைவில்லாத வாழ்வு. மனச்சோர்வில் விழுந்தவன் போல, ஒன்றை விட்டு மற்றொன்றைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறான். தன்னுடைய கடந்த கால வாழ்வையும் தற்கால வாழ்வையும் மாறி மாறி அசைபோடும் பழனிக்கு, அவன் தேடும் பிடிமானம் சிக்குவதில்லை. நமக்குமே கூட.
நாவல் முழுக்க முழுக்கவே பழனியின் கவலைகளோடும் புலம்பல்களோடுமே வளர்கிறது. நல்லவிதமாக நகரும் விஷயங்களும்கூட கடைசியில் துயரத்தையும் சண்டைகளையுமே சந்திக்கின்றன. முதன் முதலில் பழனியும் அவன் மனைவியும் சண்டை போடும் போதே, அவர்கள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகளைக் கொண்டே, அவர்களுக்கு இடையிலான உறவின் தன்மை நமக்குப் புரிந்துவிடுகிறது. ஆனால், அவர்கள் திரும்பத் திரும்ப சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கையில் இப்படிதான் இருக்கும் என்றாலும் வாழ்பவர்க்ளுக்குக் கிடைக்காத புரிதல்கள் வாசகர்களுக்கு சீக்கிரம் பிடிபட்டுவிடுகின்றன. எனவேதான், நாவலின் இறுதி வரை, ஒரு நோக்கமுமில்லாமல் தம்பதிகளுக்குள் சண்டை, பழனியின் கவலைகள் என்று மாறி மாறி சொல்லப்பட்டிருப்பது சலிப்பைத் தருகிறது.
இந்நாவலின் மிக நல்ல பகுதிகள் என்று சொல்லக்கூடியவை, விவசாய முறைகளைப் பற்றியும் மனிதர்களின் இடப்பெயர்வு பற்றியும் ஆசிரியர் எழுதியிருப்பவை. என்னுடைய தேவைக்காக, வேணுகோபால் விவரித்திருக்கும் மிளகாய் சாகுபடி நுட்பத்தைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். நமக்கு உதவினாலும், பல இடங்களில் இம்மாதிரியான விரிவான குறிப்புகள்/விவரணைகள் கதையோடு ஒட்டாமல் அதன் ஓட்டத்திற்கு தடைபோடுகின்றன. குறிப்பாக இப்படிப்பட்ட ஒரு இடம்- பழனி தெருவில் போய்க் கொண்டிருக்கும் போது ஒருவர் வீட்டில் மாடு இருக்குமே என்று யோசிக்கிறான், பிறகு அதற்கு அவன் வைத்தியம் பார்த்தது விரிவாகச் சொல்லப்படுகிறது. எதற்கு அவசியமேயில்லாமல் இது போன்ற விவரணைகள் என்று புரியவில்லை. தம்பதியர் மீண்டும் மீண்டும் சண்டை போட்டுக் கொள்வதிலாவது ஒரு யதார்த்தம் இருக்கிறது.
ஆழமான மனச்சோர்வு கொண்ட பழனி கதையின் கடைசியில் தனக்குக் கிடைக்கும் ஒரு சிறிய அங்கீகாரத்தைக் கொண்டு வாழ்வு முழுமைக்கும் நிம்மதி அடைவான் என்று நினைக்க முடியவில்லை. பொதுவாக, வேணுகோபாலின் கதைகள் சில இது போன்ற ஒரு புதிய புரிதல் அல்லது தெளிவு அல்லது உணர்த்தல் அல்லது தரிசனத்தில் வந்து முடிவதை நிறைய பேர் பாராட்டியிருக்கிறார்கள். இத்தனை காலமாய் துயரம் நிறைந்திருந்த வாழ்க்கையையே முழுசாக மாற்றிவிடும் என்ற நம்பிக்கை ஒளியை வாசகர் உள்ளத்தில் இது போன்ற முடிவுகள் பாய்ச்சுகின்றன. ஆனால் நிம்மதியாய் தூங்கி எழுந்ததும் தொற்றிக் கொள்ளும் கவலைகள் போல் புறவுலக அழுத்தங்கள் கதையின் முடிவுக்குப்பின் இன்னும் வீரியமாக தொடரத்தானே போகின்றன.
‘ஆட்டம்’ வேணுகோபாலின் மற்றொரு நாவல். கதை அமைப்பில் இவ்விரண்டு நாவல்களும் ஒரே மாதிரியே எழுதப்பட்டிருக்கின்றன. கருப்பொருள்தான் வேறு. ‘நிலம் எனும் நல்லாள்’ஐக் காட்டிலும் ஆட்டம் இன்னும் மேலான படைப்பு. நாயகர்களுக்கு திடீரென்று ஏற்படும் மனத் தெளிவு போன்ற சில ஒற்றுமைகள் இவ்விரு நாவல்களுக்கு இடையே உண்டு. ஒற்றுமை என்று சொல்லும்போது இன்னும் ஒரு விஷயம்- வேணுகோபாலின் நாவல்கள், கதாபாத்திரங்களின் எண்ணங்கள் மூலமே சொல்லப்படுகின்றன. கதாபாத்திரத்தின் குரல், ஆசிரியரின் குரல் என்று பிரித்தறிய முடிவதில்லை. அப்படி இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. ஆனால், இங்கே எழுத்தாளர் உருவாக்கும் ஒரு கதாபாத்திரத்தின் கருத்தை எழுத்தாளருடையது என்று நினைத்துவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
மனைவி தன்னை விட்டுப் போய்விட்ட ஒருவனுக்கு தன்னை மீண்டும் மதிக்கத் தகுந்தவனாக ஆக்கிக் கொள்ள ஏதாவது செய்தாக வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் வடிவேலுக்கு எப்படியாவது தன்னை நிரூபித்தாக வேண்டும். வடிவேல் அவன் முன்பு கொடிகட்டிப் பறந்த கபடியின் மூலம் இழந்த தன்மானத்தை மீட்டு விட முயற்சிக்கிறான். அதிலும் கூட கபடியின் மூலம் யாரையாவது தனக்குப் பெண் கொடுக்க வைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறான். அவனுடைய உடைந்த தன்மானத்திற்கு இன்னொரு பெண் வந்துவிட்டால் போதும் என்று தோன்றுகிறது. ஆனால், கதையின் போக்கில் அவனுடைய எண்ணங்கள் மாறுகின்றன.
கோமாரி திருவிழா பற்றியும் நரிக்குறவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் இந்நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். வேணுகோபால் மிகத் துல்லியமாக எழுதுபவர். அவருடைய கதையில் ஒரு விஷயம் நடந்தால் அது எங்கே நடக்கிறது என்பது வரை அவருடைய கவனம் போகிறது. ”கடக்கும் போதாவது ஓரக்கண்ணால் பார்ப்பாள் என்று நினைத்தான். ஆளற்ற தெருவில் நடந்து போவது போலக் கடந்து சென்றாள். பார்க்கவே இல்லை. நான்கு எட்டு வைத்ததும் ஞானசேகரன் அஸ்திவாரம் எழுப்பி மண்மெத்திப் போட்டிருந்த அடிச்சுவர் ஓரம் போய் காளை சுவர்தொட்டு நின்றான். அடுத்து கருவேல மரத்தடியில் பசுமாடு கட்டிக் கிடக்கிறது. இந்தப் பக்கம் பாண்டி ஆசாரியின் இடிந்து போன வீடு. குலுங்கிக் குலுங்கி அழுந்தான்”. வேணுகோபாலின் பலம் இந்த விவரணைகள் என்பதில் சந்தேகமேயில்லை.
நாவல்களை விட்டுவிட்டு சிறுகதைகளுக்கு வந்தோமென்றால், சு.வேணுகோபாலின் கதையுலகம் விரிகிறது. அங்கும் இங்கும் அலைபாயும் நாவல்களைவிட அவருடைய சிறுகதைகள் கச்சிதமாக ஒரு சட்டகத்திற்குள் வருகின்றன. ’களவு போகும் புரவிகள்’ தொகுப்பில் அவருடைய வீச்சு எவ்வளவு அதிகம் என்பதைப் பார்க்கமுடிகிறது. ’வெகுதூரம் விலகி…’ கதை ஒரு சிற்றூர் மருத்துவரைப் பற்றிய கதை. இதில் மலைவாழ் மக்களின் மருத்துவ முறைகளைப் பற்றி விவரணைகள் வருகின்றன. எதுவும் கதையை மீறி துருத்திக் கொண்டிருக்கவில்லை. அவ்வளவு அருமையான கதை.
நாவல்களின் நாயகர்கள் கவலையில் உழன்றால், அவருடைய சிறுகதைகள் பெரும்பாலும் வீழ்ச்சியைப் பேசுபவை. இயலாமையைப் பேசுபவை. அதுவே அவருடைய கதைகளைப் பலருக்கு பிடிக்க வைத்திருக்கின்றன என்று தோன்றுகிறது. பல தலைமுறைகளாக உருகி உருகிக் கதை கேட்டவர்கள் நாம். தோல்விகளில் துவளும் ஒரு இளம் விவசாயி (மண்ணைத் தின்றவன்), கணவனால் நீர்பந்திக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண் (வட்டத்திற்குள்), ஓர் பாலியல் தொழிலாளி (மீதமிருக்கும் கோதும் காற்று), முப்பத்தைந்து வயதில் கல்யாணம் செய்து கொண்டு தான் நினைத்த வண்ணம் உறவு கொள்ள முடியாத ஒருவன் (சங்கிலி) இவை இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் பிரதான பாத்திரங்கள். இந்தக் கதைகளை வாசிக்கும்போது இவர்கள் மீது நமக்குப் பரிதாபம் ஏற்படுகிறது. ஆனால், இந்தக் கதைகள் அத்தோடு நின்றுவிடுகின்றன. மண்ணைத் தின்றவன் கதையில், இசக்கியினுடைய தோல்விகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்து கடைசியில் அவனுடைய சாதி சுட்டிக் காட்டப்பட்டு மேலும் குறுகிப் போவதாக வருகிறது. இதைப் போலவே மற்ற கதைகளும். உண்மையில் இந்தக் கதைகள் நிறைய பேரின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. ஆனால், அதில் என்ன சவால் இருக்கிறது என்று தெரியவில்லை. அடுக்கடுக்கான துயரங்களை விவரித்து அதன் முடிவில் மேலும் ஒரு இடியை இறக்குவதையும் அல்லது ஒரு வெளிச்சக் கீற்றைக் காட்டுவதையும் தாண்டி எழுத்துக்கு இருக்கும் சாத்தியங்கள் நிறைய.
வேணுகோபாலின் நாவல்களாகட்டும் சிறுகதைகளாகட்டும், அவற்றில் திருமண பந்தத்திற்கு வெளியே நிகழும் ஆண்-பெண் உறவுகள் அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன. ‘ஆட்டம்’ நாவலே வடிவேலின் மனைவி கனகம் அவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொருவனுடன் போவதிலே தான் நிகழ்கிறது. அதே நாவலில் வடிவேலின் நண்பன் காளையனுக்கும் அவனுடைய சித்திக்குமான உறவு பேசப்படுகிறது. ’நிலம் எனும் நல்லாள்’ நாவலிலும் இப்படிப்பட்ட உறவு பேசப்படுகிறது. இதைக் குறையாகச் சொல்ல முடியாது என்றாலும் எனக்கு இதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று, ஒரு குறிப்பிட்ட சமூக பொருளாதார வட்டத்தில் இருக்கும் மக்களைப் பற்றி இப்படி எழுதும்போது அவர்களோடு தொடர்பிலே இல்லாத ஒரு வாசகன் அவர்களைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான்? நாம் செய்தித்தாள்களில் தினம் தினம் படிப்பது வேறு. அதே விஷயங்களை இலக்கியத்தில் படிப்பது வேறு. செய்திகள் பிறர் வாழ்வை நம்மிடம் கொண்டு வந்து கொடுத்தால், இலக்கியம் நம்மை அவர்களின் இடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அது போதுமான அளவில் நிகழ்கிறதா அல்லது வேறு யாருக்கோ நடக்கும் விஷயங்களை வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கிறோமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது, அதுதான் என் இரண்டாவது பிரச்சினை.
அங்கீகரிக்கப்பட்ட உறவுமுறைகளுக்கு அப்பால் ஏற்படும் தொடர்பு மாதிரியான விஷயங்களில் உள்ள என் குறுகுறுப்பு இன்னமும் எனக்குக் குறையவில்லை என்பதால், இந்தக் கதைகளில் இந்த உறவுகளின் நோக்கம் என்ன என்பது புரியவில்லை. வேணுகோபால் இத்தகைய உறவுகளை நிறைய எழுதியிருக்கிறார். ஆனாலும், இவ்வுறவுகளின் காரண காரியங்களை அவர் பேசவில்லை. இந்த உறவுகள் இருக்கின்றன, ஆனால் திருமண பந்தத்தை உடைத்துக் கொண்டு போகும் அளவிற்கு மனிதர்களை ஈர்ப்பது எது? காமம் மட்டும்தானா? எதிர்காலமே தலைகீழாகிவிடும் நிலையிலும் மனிதர்கள் ஏன் அதற்கு துணிகிறார்கள்? ‘ஆட்டம்’ நாவலின் ஒரு பெரும் புள்ளியே இதுதான் என்றாலும், அங்கும் இதன் தாக்கம் மட்டுமே பேசப்படுகிறது. ஏனோ, எழுத்தாளர் இந்த உறவுகளை விவாதிக்கவில்லை. அதனால் அவை ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்துவதோடு நின்றுவிடுகின்றன. ஒரு உயிர் இன்னொரு உயிரை அணைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயற்கைத் துடிப்புதான். ஆனால், நம் சமூக உறவுக் கட்டுமானங்கள் இவ்வளவு மெலிதாகவா இருக்கின்றன?
வெறும் புகழ்ச்சியில் அர்த்தமில்லை என்பதால்தான் விவாதத்துக்குரிய சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். நாம் ஒரு கலைஞனை மதிக்கும்போது நாம் முரண்படும் இடங்களைச் சொல்வது அவசியமாகிறது. சு.வேணுகோபாலுடைய மொழி அவருக்கே உரித்தானது. அவருடைய அனுபவங்கள் தனித்தன்மையானவை. சொல்ல வருவதை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவருடைய படைப்புகள் இன்னும் அதிகம் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படும்போதுதான் அவை இன்னும் அதிகம் அர்த்தமளிக்கும்.
2 comments