வேணுகோபாலின் வேரெழுத்துக்கள்

– சிவானந்தம் நீலகண்டன் – 

படம்: www.discoverybookpalace.com

ஐந்தாறு வருடங்களுக்குமுன் ஜெயமோகன் கூந்தப்பனை பற்றி எழுதிய கட்டுரைகளின் மூலமாகத்தான் சு.வேணுகோபால் என்ற பெயர் எனக்கு அறிமுகமாகியது. ஓர் உந்துதல் அப்போது எழுந்தும் பிறகு வாசித்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டது ஆகப்பெரிய தவறென்று சமீபத்தில் ஒரே மூச்சில் அவரது ஏழு குறுநாவல்களையும் பதினைந்து சிறுகதைகளையும் வாசித்தபோது புரிந்தது. அவரது குறுநாவல்களை முன்வைத்து இக்கட்டுரையை எழுதுகிறேன்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கண்மணி குணசேகரன், “தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்” என்ற குறளை விளக்கிப் பேசுகையில் வள்ளுவர் ஒரு விவசாயியாகத்தான் இருந்திருக்கக்கூடும் என்று ஊகித்தார். புழுதியடிப்பதைப் பற்றி அந்த அளவுக்கு நுட்பமான செய்தியைக் கொண்ட குறளது. ‘நிலம் எனும் நல்லாள்’ குறுநாவல் வாசிக்கையில் வேணுகோபாலைப் பற்றியும் அப்படியொரு சந்தேகம் எழுந்துகொண்டே வருவதை வாசகர் தவிர்க்கவியலாது. பருத்தியோ, துவரையோ, மிளகாயோ, சூரியகாந்தியோ, நிலக்கடலையோ, வயற்காடுகளையும் அவற்றின் பயிர்களையும் விதையிலிருந்து, விதைப்பதிலிருந்து, விளைச்சலைக் காசாக்குவதுவரை எவ்வளவு ஆழத்திற்குப் போய் எழுத்தில் சித்தரித்துவிடமுடியும் என்று குமரன் பாத்திரத்தின் வழியாகக் காட்டியிருக்கிறார். மண்ணின் மீது மூர்க்கமான காதல்கொண்ட – மண்ணைக் கொஞ்சம் சாப்பாட்டில் போட்டுச்சாப்பிடும் – இக்கதாபாத்திரத்தின் வாழ்வு மண்ணிலேயே அற்ப ஆயுளில் முடிந்துபோயினும் வாசகர் மனங்களைவிட்டு அவ்வளவு விரைவில் நீங்காது.

வயல்வெளிகளை எழுத்தாளர்கள் வாசகருக்குப் பலவிதமாகக் காட்டித்தரமுடியும்; தூரத்து மேடுகளில் நின்று சுட்டுவிரல்களை நீட்டிப் பசுமையை மட்டும் காட்டிச் செல்லலாம். கூட அழைத்துச்சென்று வரப்புகளில் நடந்து இலை, காய்களைத் தடவச்செய்யலாம். மாடுகளின் பின்னாலேயே கலப்பை பிடித்து முழங்கால் அளவு சேற்றில் நடக்கச் செய்யலாம். இன்னும் எத்தனையோ வழிகளிலும். ஆனால் வேணுகோபால் நமக்குக் காட்டித்தருவது வெளியே தெரியாத அப்பயிர்களின் வேர்களைத்தான். பயிர்கூட ஓரிடத்திலிருந்து பறித்து வேறெங்கோ நடப்படும்போதும் சூழ்நிலைக்குத்தக்க தன்னைத் தகவமைத்துக்கொண்டு தழைத்துவிடுகிறது. ஆனால் விவசாயக் குடும்பத்தில் பிறந்து மண்ணின் அருகாமையை அனுபவித்துவிட்டுப் பல்வேறு காரணங்களால் புலம்பெயர நேரிடும் ஒருவனுக்குக் கடைசிவரை – அதன் கஷ்ட நஷ்டங்களை முற்றிலும் உணர்ந்திருக்கும் போதிலும் – என்றோ ஒருநாள் சொந்தமண்ணுக்கு மீண்டும் திரும்புவோம் என்ற ஆசை அழிவதில்லை. பொதுவாக புலம்பெயர்தலை வெளிநாடுவாழ் தமிழர்களுக்கானதாகவே பார்த்திருக்கும் பொதுப்புத்தி, இந்நாவலில் மதுரையிலிருந்து சென்று கோயம்புத்தூரில் வேர்பிடிக்க மனமில்லாமல் திணறும் பழனிக்குமாரைப் பார்த்தால் திகைக்கக்கூடும். பேசும் மொழியின் நுண்ணிய வேறுபாடுகள்கூட விருப்பு வெறுப்புகளை மாற்றியமைக்க முடிவதையும் நாவல் பதிவுசெய்கிறது.

மாமியார்- மருமகள் பிரச்சனையை ஆசிரியர் அணுகும் விதம் அலாதியானது. ‘உங்க அம்மா ஒண்ணுக்குப் போயிட்டு ஏன் பத்தும் பத்தாததுமா தண்ணி ஊத்திட்டு வராங்க? தண்ணிக்கு என்ன பஞ்சமா? சுத்தம்னா என்னன்னு தெரியவேண்டாமா?’ என்று பொருமும் மனைவியின் புகாரைத் தன் புகாராக மாற்றி அன்னையிடம் சொல்லும் பழனிக்குமாருக்கு, ‘கங்காதேவிய அப்பிடி கண்டபடி செலவுபண்ணக் கூடாதுப்பா’ என்று அறிவுரை கிடைக்கிறது. ‘ஏன் பழைய புடவையை ஒட்டுப்போட்டுக் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்? அவமானம்’ என்ற புகாருக்கு, ‘எவ்வளவு நாள் நமக்கு உழைச்சது. அப்படி தூக்கிப்போட மனசு வல்லப்பா’ என்ற பதில் கிடைக்கிறது. அவரவருக்கு அவரவர் நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்ததாயிற்றே இந்த உலகம். யாரையும் தன் போக்கில் செல்ல அது விட்டுவிடுவதில்லை. நேற்றிருந்தான் இன்று இல்லை என்று பொருள்கொள்வதைவிட நேற்றிருந்ததைப் போல் அவன் இன்று இல்லை என்று பொருள்கொள்வது நிலையாமையை இன்னும் ஆழப்படுத்தவே செய்கிறது. ஏதோ ஒரு எதிர்பாராத நிகழ்ச்சியின் மூலம் நம்பிக்கை துளிர்க்கக்கூடும். அப்படி அவனுக்கும் நடக்கிறது. குடும்பத் தலைவனில்லாத ஓர் ஏழைக்குடும்பத்தின் எதிர்காலமாக நிற்கிறது ஒரு சினையாடு. வயிற்றிலேயே குட்டிகள் இறந்துவிட்டதால் கால்நடை மருத்துவரால் கைவிடப்பட்ட அந்த ஆட்டைப் பிழைக்கச்செய்வதன் மூலம் அக்குடும்பத்தைப் பிழைக்கச்செய்யும் அவனுக்கு நன்றிக்காகச் செலுத்தப்படும் ஒரு வாழைத்தார் வாசகர் கண்களில் நீரரும்பச் செய்வதோடு பழனிக்குமாருக்கும் வேற்றுமண்ணில் வேர்விட ஒரு புதிய துவக்கத்தைக் கொடுக்கிறது. ஆட்டைப் பிழைக்கச்செய்ய பழனிக்குமார் எடுக்கும் முயற்சியில் அவனும், ஆடும், அக்குடும்பமும் படும் பாடுகளை வாசிக்கையில் நமக்குக் கைகால்கள் வெலவெலத்துப் போகின்றன. காட்சிகள் அவ்வளவு தத்ரூபம்.

‘ஆட்டம்’ என்றொரு குறுநாவல். ஒருமுறை முழுதாக வாசித்தது போதாமல் ஆங்காங்கே தாவித்தாவி சில பகுதிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கவைத்தது ஆட்டம். குறிப்பாகக் கபடி ஆட்டம் நிகழும் ஓர் அத்தியாயம் ஆட்ட நுணுக்கங்களின் அரிய ஆவணம். எப்படியெல்லாம் விதவிதமாகப் பாடிச்செல்வார்கள் என்பதுமுதல் விழுந்துபுரண்டபின் காயங்களில் ஒட்டியிருக்கும் நுண்கற்களை குளிக்கும்போது கவனமில்லாமல் தேய்த்துவிட்டால் காந்தல் எடுத்துவிடும் என்பதுவரை வரிக்கு வரி தகவற்குவியல்கள். அவற்றைத் துருத்திக்கொண்டிருக்கும் ஒட்டுத்தகவல்களாக இல்லாமல் வடிவேல் கதாபாத்திரத்தின் மூலமாக இயல்பாகப் பதிவுசெய்து வாசகர் கண்முன்னே கபடி ஆட்டமும் சூடுகுறையாமல் நிகழச்செய்தது மலைக்கச்செய்த எழுத்து நேர்த்தி.

இன்னொரு வகையில் காமம் நம் அனைவரின் மீதும் கபடி ஆடிவிட்டுச் சென்றுவிடுவதையும் ‘ஆட்டம்’ சித்திரமாக வரைந்து காட்டுகிறது. உயிரே அவள்தான் என்று வடிவேலை நினைக்கச்செய்வதும் சரி, ஒரு கட்டத்தில் அவள் உயிரை எடுத்துவிட்டால் என்ன என்று வெம்பச்செய்வதும் சரி வெவ்வேறு இடங்களில் உயிர்கொள்ளும் காமத்தின் வேர்களே. உயிரின் செயல்பாடுகள் அனைத்துக்கும் உந்துவிசையாவது இந்த ஆதாரக் காமம். மற்ற உயிர்களைப் போலல்லாது சமூக விலங்குகளான மனிதர்கள் தங்களுக்காகத் தாங்களே உருவாக்கிக் கொண்டுள்ள அற, ஒழுக்க விதிகளுக்குட்பட்டு அந்த உயிரியல் விசையின் கொந்தளிப்புக்கு ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. ஒருபக்கம் மலைப்பாறைகளில் சுரந்து வெளியேறும் நீரூற்றுபோல் பிரவாகிக்கும் காமத்தின் அளப்பரிய ஆற்றல். மறுபக்கம் அதன் மனவிகாரங்களைத் தவறு, கெட்டது, பாவம், குற்றம், சுற்றம் என்று பல அணைகளைக் கட்டித் தேக்கும் மனிதனின் முயற்சி. பல சமயங்களில் முன்னது வெல்கிறது. சில நேரங்களில் பின்னது உதவுகிறது. வாழ்க்கை ஆடித்தீர்த்துவிட முடியாத ஆட்டம் என்பதையும் அந்த ஆட்டத்திலிருந்து விலகிக்கொள்ள நினைப்பது எவ்வளவு அபத்தம் என்பதையும் பல பாத்திரங்களின் வழியாக உக்கிரம் குறையாமல் எழுதிக்காட்டியிருக்கிறார்.

‘இரட்சணியம்’ குறுநாவலிலும் காமம் பேசப்படுகிறது, பதினெட்டு வயதுப் பையனின் மனம் வழியாக. கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த அவனுக்குள் இயல்பாகப் பொங்கும் காமம் கீழ்த்தரமான பாவம் என்று போதிக்கப்படுவதால் அவன் கடும் குற்ற உணர்ச்சிக்காளாகிறான். குளியலறையில் எட்டிப்பார்க்க முயன்று முடியாத நிலையில் பெண்ணின் உடலைத்தொட்டு வழிந்துவரும் தண்ணீரைப் பார்த்ததுமே அவனுக்கு உடல் கனன்று தகிக்கிறது. சினிமாவில் எப்படிக் காதலனும் காதலியும் அருகருகே அமர்ந்து சாதாரணமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொள்கிறார்கள்? தனக்கு மட்டும் ஏன் எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் காமம் பீரிட்டுக்கிளம்புகிறது? போன்ற கேள்விகள் அவனை வதைக்கின்றன. +2 தேர்வில் தோல்வியடைவது கூட ஒருவேளை இந்த பாவத்தின் சம்பளமாக இருக்குமோ என்று அவனுக்குத் தோன்றுகிறது.

இந்த நாவல் என்னைக் கவர்ந்தது வேறொரு தளத்தில். பதின்வயது காமக் கிளர்ச்சியை அதன் தெறிப்புகளுடன் பதிவு செய்திருக்கும் ஆசிரியர், கவனமாக வாசகர் அதில் தன்னை இழந்துவிடாமல் அதேநேரம் புறவயமாகக் காமத்தை உற்றுநோக்க வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். காமத்துக்குக் கட்டுப்பாடுகள் தேவைதான் என்று வாசகரே விழிப்புடன் ஒரு முடிவை நோக்கி மெல்லச் செல்லவைக்கும் வகையில் சம்பவங்களை அமைத்திருக்கிறார். பாவம் குறித்த போதனைகள் காமத்தைக் கட்டுப்படுத்த பயன்படாமல் போகும் அதே தருவாயில் விழிப்புடன் காமத்தைப் புரிந்துகொள்ள வாசகரையே சாட்சியாக்கியிருக்கிறார். கம்பிமேல் நடப்பதுபோன்ற கவனத்தைக் கோரும் இக்கதை கீழே விழுந்துவிடாமல் சாதுர்யமாக காப்பாற்றியிருக்கிறார்.

‘உருமால் கட்டு’ குறுநாவல் கிராமத்து மனிதர்களின் ஆசாபாசங்களை, ஒரு குறிப்பிட்ட சாதியின் திருமண முறைகளை, பேசுகிற சாக்கில் ஒரு முக்கியமான கேள்வியையும் கேட்கிறது. காலம் யார் யாரையோ மேலே தூக்கிச்செல்கிறது. அதில் ஏன் ஒரு விவசாயியைக்கூடக் கண்கொண்டு காணவில்லை? யார் பிழை அது? பழைய குடும்பப்பகையை மனதிற்கொண்டு எப்படிப்பொங்கி வெடிப்பாரோ என்று பலவித ஊகங்களுடன் தன் திருமண உருமால்கட்டுக்கு பத்திரிகை வைக்கப்போகும் குபேந்திரனைத் தாய்மாமா கதிரய்யா வீட்டுக்குள் அழைத்துச்சென்று, படித்து வேலையில்லாமல் இருக்கும் தன் பேரனை ‘மெட்ராஸ் பக்கம் ஏதும் தெரிஞ்ச கம்பெனியில சேர்த்துவிட’க் கோரிக்கை வைக்கும்போது அவன் மனதில் குடிகொண்டிருந்த அவரது கம்பீரம் நொறுங்குகிறது. அக்கணத்தில் அவனுக்குள் பிறக்கும் கேள்வியே அது. பெரிய சம்சாரிகளையும் கூலிவேலை செய்யவைத்துவிடுகிறதே காலம். விவசாயக் குடும்பத்துப் பையன்கள் படித்துத் தகுதியிருந்தும் அரசாங்க வேலையைக்கூட அடிமைத் தொழிலாக நினைத்த காலம் எப்படி இவ்வளவு விரைவில் – ஒரே தலைமுறையில் – தலைகீழாகிப் போனது?

‘நாளைக்கு ஒரு செழிப்பு வராமயா போகும்’ என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே இவர்கள் வாழ்வு நகர்ந்துகொண்டிருப்பதைக் கதையாக்கியுள்ளார். ஏழ்மை, முறுக்குள்ளவர்களைப் பணியச்செய்கிறது. பணம், அறிவாளிகளைக்கூட சுயநலவாதிகளாக்கி விடுகிறது. பணமிருந்தாலும் சொந்தபந்தங்களை விட்டுவிடாமல் நடக்கிறார் என்று அவன் நினைத்திருந்த அப்பாவும்கூட மனதார மற்ற சொந்தங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதை விரும்பவில்லை. தன் நல்ல நிலைமையை வெளிக்காட்டிக்கொள்ள அவருக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். அதைப் பகட்டாகச் செய்யாமல் பக்குவமாகச் செய்கிறார் அவ்வளவுதான்.

‘திசையெல்லாம் நெருஞ்சி’ நாவல் இருபத்தைந்து பக்கங்களுக்குள் இவ்வளவு சொல்லமுடியுமா என்ற வியப்பைத்தான் முதலில் தந்தது. வேணுகோபாலின் அனைத்து நாவல்களிலும் கிராமங்கள் உண்டு. கிராமங்களின் சில அம்சங்களை அவர் மறுப்பதோ மாற்றுவதோ இல்லை. சாதி அதில் ஒன்று. கதையின் மையத்திலோ ஓரத்திலோ சாதி அதன் வீச்சோடு காண்பிக்கப்பட்டுவிடுகிறது. கண்ட இடங்களில் மலஜலம் கழித்து வைத்திருப்பது மற்றொன்று. நான் வாசித்த ஏழு நாவல்களிலும் ஒருவரியேனும் இதைக்குறித்த வர்ணனை இல்லாமலில்லை. அதனால் நாம் கனவுகாணக்கூடிய உட்டோப்பிய கிராமங்களல்லாத நிஜ கிராமங்கள் கண்முன் விரிகின்றன. இவை எழுத்தின் நம்பகத்தன்மையையும் கூட்டுகின்றன.

கிராம நாவிதன் பழநி அந்த ஊருக்கு வந்து இருபது வருடமானாலும் அவன் – சாதியின் பொருட்டு – அவர்களில் ஒருவனல்ல என்பதைக் காட்டக் கிடைக்கும் சிறுவாய்ப்புகளையும் ஊர்க்காரர்கள் யாரும் நழுவ விடுவதில்லை. அவர்களில் சிலருக்குக் கடன் கொடுக்கும் நிலையில் தான் வளர்ந்திருப்பதைக் குறித்து உள்ளூர அவனுக்குப் பெருமிதமிருந்தாலும் பணத்தைத் திரும்பக் கேட்பதைக்கூடக் குறுகிமருகித்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஏச்சுக்களையும் வாங்க வேண்டியிருக்கிறது. கொடுத்த காசைக் கேட்டதற்கு மனைவியைக் குறித்த இழிசொற்களுடன் அறையப்படும்போது ஆத்திரத்தில் பழநி தன்னிலை இழந்து திருப்பியடித்துவிடுகிறான். உடனே இங்கு சாதி நுழைந்துவிடுகிறது. மற்ற நியாயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அம்பட்டையன் எப்படி நம்மில் ஒருவரை அடிக்கலாம் என்பதே பிரதான பிரச்சனையாகி ஊரைவிட்டுப் போய்விட அவனுக்குக் கெடு விதிக்கப்படுகிறது. அவன் நினைவுகள் வழியாக ஊரார்களுக்குக் கைவைத்தியம் செய்து வியாதிகள் தீர்த்தது முதல் கைகால் விழுந்துபோன இளைஞனுக்கு அந்தரங்கப் பகுதிகளில் சுத்தம் செய்துவந்தது வரை அனைத்தும் நமக்குச் சொல்லப்படுகிறது. இவ்வளவு செய்துகொண்டிருக்கும் ஒருவனைச் சாதி என்ற ஒன்றுக்காக – பலருக்கு விருப்பமில்லாவிட்டாலும் – ஏன் தூக்கியெறியத் தயாராக இருக்கிறார்கள் என்ற கேள்வியை வாசகர் தானாகவே வந்தடையட்டும் என்று விட்டிருக்கிறார்.

‘பால்கனிகள்’ குறுநாவல் ஆணாகப்பிறந்து பெண்ணாக மாற்றமடையும் ஒருவரின் கதையைப் பேசுகிறது. அதன் ஒவ்வொரு கட்டத்தையும் உடல், மன, குடும்ப, சமூகக் கோணங்களில் நுணுக்கமாக எழுதியிருக்கிறார். என்னதான் கற்பனை வளமிருந்தாலும் வெறும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் இவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதிவிட இயலுமா என்று மலைப்பு தட்டுகிறது. உண்மையில் அந்த மலைப்பு நான் வாசித்த ஆசிரியரின் எல்லா நாவல்களிலுமே உண்டானது; அதன் அளவில் மெல்லிய வேறுபாடுகள் அவ்வளவுதான். எதையும் எளிதாகத் தள்ளிவிட முடியவில்லை.

‘பால்கனிகள்’ கதையில் வரும் திவ்யா பால்குடி மறக்காத தன் பிள்ளையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் செல்லும் முதல் நாள் படும் அவஸ்தைகள் அணுஅணுவாக விவரிக்கப்படுகின்றன. இதற்குமேல் முடியாதென்று அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வீட்டை அடைகையில், மஞ்சுளாவாக மாறிக்கொண்டிருந்த தன் தம்பி கிட்ணன் குழந்தைக்கு முலையூட்டிக் கொண்டிருப்பதைக் காணும் இடத்திலேயே கதை உச்சமடைந்து விடுகிறது. தன்னுடைய பால் இதுவென்று உணரும் அவன், அதன் நியாயத்தைத் தனக்குள் சுரக்கும் தாய்மையிலிருந்து பெறுகிறான். வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டுப் பின்னாளில் திவ்யாவை எதிர்பாராமல் கண்டு பேசும்போது, ‘ஏமாத்துறதுதானக்கா மனுசனோட இயல்பு’ என்று அவளுக்கே சமாதானம் சொல்லும்போதும், ‘என்னோட வேதனையை சொன்னாலும் யாருக்கும் புரியாதுக்கா’ என்று குமையும்போதும், வாழ்க்கையை இப்படி வெறும் நரகமாக மட்டுமே அனுபவிக்க இவர்கள் செய்த குற்றமென்ன என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. இக்கதையை வாசிக்கும் ஒருவர் திருநங்கைகளைக் கேலிப்பொருட்களாகப் பார்க்கும் பொதுப்புத்தியின் பகுதியாக இருந்ததை எண்ணி வெட்கமடையக்கூடும். அதுவே மாற்றத்தின் விதை.

‘இழைகள்’ கீழ்ச்சாதியில் பிறந்து, எத்தனையோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் படித்து ஆசிரியராகி, ஓய்வு பெறப் போகும்போது நல்லாசிரியர் விருது பெற்றுவிடும் ஒருவரின் கதை. உளவியல் தளத்தில் சிந்தனைப் பாய்ச்சல்கள் நிகழ்ந்துள்ள கதை இது. விருதுபெற்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் ஓடிப்போய்ச் செய்தியை அச்சில் பார்த்துவிட ஆவல் துடிப்பினும், நெஞ்சு படபடக்க ஆனால் பொறுமையாகச் சென்று செய்தித்தாளை சத்தம் வராமல் புரட்டிப் பார்ப்பதிலிருந்து தொடங்குகிறது வேணுகோபாலின் உளவியல் அவதானிப்புகள். அடுத்தவர்களுக்குக் கிடைத்த போதெல்லாம் விருதை இழித்துரைத்த மனம் தற்போது பெருமிதத்தில் விம்முகிறது. தனக்குப் பெருமை கிடைத்தவுடன் அதைப் பகிர்ந்துகொள்ள ஆட்களை எண்ணத்தில் வரிசைப்படுத்தும் மனம், அடுத்த கணம் தான் அவர்களை உறிஞ்சி வளர்ந்ததைத் தவிர அவர்களுக்கு எதுவுமே செய்யவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி மேலிட்டுவிடுவதால் அவதியுறுகிறது. நல்லாசிரியர் என்றவுடன் தான் உண்மையில் நல்லவன்தானா என்ற கேள்வி எழுந்து வாலிபத்தில் சந்தர்ப்பவசத்தால் செய்த காரியங்களைக்கூட அசைபோட்டுப் பெருமூச்செறிய வைக்கிறது. அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம் அவள் ஆடுகளுடன் வரும் உருவம்தான் தெரிகிறது. அவள் உயிர்க்குயிரான அவ்வாடுகளை ஆசிரியப் பயிற்சிப் படிப்புக்கு அவசரத் தேவை என்று பொய்சொல்லி விற்கவைத்தது இப்போது குத்துகிறது. ‘நானும் வாங்கிட்டண்டா’ என்று சில சாதிப்பித்தர்களின் முன்னால் இறுமாப்புடன் நடக்கமுடியும் என்ற ஒன்றைத்தவிர உள்ளுக்குள் எல்லாம் நெருடலாகவே இருக்கிறது. ஆசிரியராக இருந்து ஜனாதிபதியான ராதாகிருஷ்ணனைப் பற்றி ஏதாவது கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். நல்லாசிரியர் விருது வாங்கியிருக்கீங்க ஆனா இது தெரியாம இருக்கீங்க என்று யாரும் கேட்டுவிடக்கூடும் என்ற பயமும் எழுகிறது.

நாவல்களில் பொதுவாக சில அவதானிப்புகளைச் செய்ய முடிந்தது.

பால்கனிகளைத் தவிர மற்ற குறுநாவல்கள் ஆண் கதாபாத்திரங்களின் வழியாகச் சொல்லப்படுபவை. இதன் காரணமாகவோ என்னவோ அக்கதைகளில் காமம் பேசப்படும் இடங்களெல்லாம் பெரும்பாலும் பெண்களே முதல் தூண்டிலாகவோ தூண்டுதலாகவோ இருக்கிறார்கள். ஒருவகையில் அப்படி தூண்டப்படும் ஆண்கள் தாம் பயன்படுத்தப்பட்டு விட்டோம் என்ற உணர்வை பின்னாளில் வந்தடைகிறார்கள். அதேசமயம் பால்கனிகள் பெண் கதாபாத்திரம் வழியாகச் சொல்லப்படுகையில் ஆண்கள் தூண்டுகிறார்கள்; திருநங்கை பயன்படுத்தப்பட்டதாக உணர்கிறார். இதைப் பொருந்தாக் காமத்தின் இயல்பைக் குறித்து ஆசிரியர் காட்டும் உட்குறிப்பாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது காமம் சார்ந்த பொதுவான சமூக ஒழுக்க விதிகளை மீறும்போது அதில் ஈடுபடும் அனைவருமே பால்பேதமின்றி குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். இன்பம் துய்த்தபின் வந்து கவிழ்ந்து கொள்ளும் இக்குற்றவுணர்ச்சியைப் போக்கிக்கொள்ள இயல்பாக இருவருமே அதை மற்றவர்தான் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கருதிக்கொள்வதால் சுய இரக்கத்தின் மூலம் ஆறுதல் கொள்ள முயல்கின்றனர்.

தமிழில் சாதி பேசப்படும் புனைவுகளில் உக்கிரம் நீர்த்துப் போய்விடக்கூடாது என்று கருதியோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பொதுவாக மேல்சாதியிலிருந்து ஒரு நல்ல உள்ளம்கூட இல்லாத நிலை இருப்பதுபோலவே கதைக்களங்களை அமைக்கிறார்கள். உண்மை நிலை அதுவல்ல என்பது அனைவருக்கும் தெரியும். வேணுகோபால் எழுத்துக்களில் தன் சாதிக்கு எதிராகத் துணிந்து பேசமுடியாத அதேநேரம் மனசாட்சிக்கு விரோதமாக நியாயத்துக்கு எதிராகச் செயல்படவும் முடியாத கையறு நிலையில் தள்ளப்படும் மேல்சாதிக்காரர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். நியாயத்தைப் பேச விரும்பும் படைப்பாளிகள் எல்லாத் தரப்பின் இண்டுஇடுக்குகளிலும் மறைந்துள்ள நிதர்சனத்தையும் தேடிப்பாரத்து பேசுவதுதான் நியாயம். அதுவே சாதி வேற்றுமைகளைக் குறித்து தார்மீகக்கோபம் கொள்வதற்கான அடிப்படைத் தகுதியும் கூட.

மற்றவற்றைவிட முக்கியமான ஒரு பொது அம்சம் – பலவிதமான சிக்கல்கள் பேசப்பட்டாலும் நம்பிக்கைக் கீற்றோடு நாவல்களை முடிப்பதுதான். திசையெல்லாம் நெருஞ்சியில் மட்டும் முடிதிருத்தும் பழநி கடைசியில் ஊர் தன்னை ஏற்றுக்கொண்டுவிடும் என்ற நம்பிக்கையை இழந்துவிடுகிறான். ஆயினும் அவன் மனைவி நம்பிக்கை இழக்காதவளாகவே இருக்கிறாள். குழந்தைகளுக்கு அம்மை போட்டுவிடுவதைக்கூட அந்நிலையில் ஊரைக் காலிசெய்யச் சொல்ல மாட்டார்கள் என்பதால் சாதகமான விஷயமாகப் பார்க்கிறாள். மானுடத்தின் சிக்கல்களுக்கு மகத்தான ஒரே பொதுத்தீர்வு இருக்கக்கூடுமென்றால் அது அச்சிக்கல்களைத் தீர்த்துவிடமுடியும் என்ற நம்பிக்கை மட்டும்தான் அல்லவா?

நாஞ்சில் நாடனின் ‘பாம்பு’ சிறுகதை புகழ்பெற்றது. ஒரு தமிழ்ப்பேராசிரியரின் வீட்டிற்குள் நுழைந்துவிடும் பாம்பு ஒன்று அவருடைய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்க நேர்ந்து, தொல்தமிழ்க்குடிக்குச் செய்யும் சேவையாக இருக்கட்டும் என்று முடிவெடுத்து, ‘வக்காளி வரட்டும்’ என்று காத்திருப்பதாக அந்தக் கதையை முடித்திருப்பார். தமிழ்ப் பேராசிரியர்களின் எழுத்துக்கள் அந்த அளவுக்குப் படைப்பாளிகளை பாதித்திருக்கின்றன. அவ்வகையில் பெருமாள்முருகன் விதிவிலக்கு என நான் நினைத்துக் கொள்வதுண்டு. சு.வேணுகோபாலும் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிவதை அறிந்து மகிழ்ந்தேன். தமிழ் இவர் வார்த்தைகளில் இன்னும் ஆழமாக வேர்பிடிக்கிறது. ஏன் வம்பு என்று தொடாமலோ அல்லது பட்டும்படாமலோ சொல்லிப்போகப்படும் விஷயங்களை ஆதியந்தமாக அணுகும் இவரின் வேரெழுத்துக்கள் ஊடுருவும் ஆழங்கள் சொற்களில் விவரிக்க முடியாததாக இருக்கிறது. தமிழ் வாசகப்பரப்பும் படைப்பாளிகளும் இவ்வெழுத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் தமிழும் புனைவும் மேலும் வளம்பெறும்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.