சு. வேணுகோபால் என்னும் இலக்கிய மேதைமை

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

srirangam v mohanarangan

மிழ் இலக்கியம், குறிப்பாக சிறுகதை, கவிதை, நாவல் போன்ற துறைகள்தாம் எத்துணை முன்னேற்றம் கண்டுள்ளன! எத்தகைய உயிர் விகாசங்கள் பொலிய தமிழ் மொழியின் செறிவில் வகைபாடுகள் கூடுபூரிக்கின்றன! இவ்வண்ணம் நான் வியக்கக் காரணமாய் இருந்தவர்கள் சிலர். அதுவும் சு வேணுகோபாலைப் படித்ததும் இந்த எண்ணம் உரத்து எழுகின்றது. இதுவரை வெகுசில இலக்கிய ஆளுமைகளே சாதித்திருக்கும் அளவிற்கு உணர்வின் துல்லிய துலாக்கோல் துடிப்பில் சன்னத்தமாகி எழும் எழுத்தின் கச்சிதம், இலக்கியத்திற்கும் வாழ்விற்குமான ஊடாட்டப் புணர்வு சு வேணுகோபாலில் சாத்தியப்படுகிறது.

யதார்த்தமான மானிடத்தின் இயல்பான எழுச்சியும், பிறழ்வும், நொடிப்பும் பாவனை இன்றி வெளிப்படும் எழுத்து திரு வேணுகோபாலின் எழுத்து. படிப்பவர்கள் அவர் எழுத்தின் புதினவெளியில் இருக்கின்றார்கள்தான், சக மனிதர்களாக மட்டுமே. அவர்கள், பார்வையாளர்களாகவோ, ரசிகர்களாகவோ, ஆமோதிப்போ, மறுதலிப்போ தரும் முகாந்தரங்களாகவோ அவருடைய எழுத்து ஏற்படுத்தும் உலகில் இடம் பெறுவதில்லை. அவரவர் கவலைகளில் விரைந்தவண்ணம் வாழ்வில் பங்கு கொள்ளும் யதார்த்தமான சக மனிதர்களாக மட்டுமே வாசகர்களை அவருடைய எழுத்து வகைப்படுத்திக் கொள்கிறது. அதுவும் அவர் கருதிச் செய்வது என்று இல்லாமல், அவர் தமக்கு இயல்பான இடத்தை இயற்கையில் தம் எழுத்தில் இணங்கி அமர்வதால், வாசகர்களும் அவர்களுக்கேயான இயல்பான இடங்களில் சுதந்திரமாக விடப்படுகிறார்கள். அவருடைய நோக்கிலும், கருத்திலும் எதிர்பார்ப்புகளின் மேடைகளோ, திரைகளோ இல்லாத காரணத்தால், பாவனையற்ற எழுத்தின் வெட்ட வெளியில் வாசகர்கள் இயல்பாக நடமாட முடிகிறது.

சு வேணுகோபாலின் ‘உற்பத்தி’ சிறுகதை பல முறை படித்தது என்றாலும் விட்டுப் போன ஒரு கோணம் தொட்டுக் கொண்டே இருக்கிறது. சிறுகதை என்ற இலக்கிய வடிவைக் கச்சிதமாகக் கடைந்து வனைவதில் ஓர் அநாயாசமான நிபுணன் வேணு. அழகாகத் தோன்றும் வாழ்க்கை எங்கோ ஓர் ஓரத்தில் விகாரம் அடைவதையும் வக்கிர விளம்பரத்தனம் இன்றி இயல்பின் வேர்ப்பற்று பிசகாமல் சொல்வதில் வேணுகோபாலுக்கு இணை கிடையாது. இரையைத் தேடும் மிருகத்தின் அசைவுகளில் தெரியும் அமைதியான தயவுதாட்சண்யமின்மை மொழிநடையில் துலங்க வரிகளை விதைத்துச் செல்கிறார் வேணு.

நிலத்தடி நீரும் நிலங்களை வளைத்துப் போட்டு அந்நிய முதலீடு கட்டிய தொழிற்சாலைக் கழிவுகளும் சொல்லின் மௌனக் கதையின் பாத்திரங்கள். இயற்கையும், மனிதரும், தொழிற்சாலை நோக்கும் ஒன்றொடு ஒன்று சேராத பிணக்கில் நிலத்தடி நீர் பலியாகிறது. அதன் இறப்பைத் தாவரங்களும், பறவைகளும், விலங்குகளும் தம்மில் நிகழக் காட்டுகின்றன. இயற்கை எங்கும் மயான அமைதி மெய்ப்பாடு கொள்ளும் என்பதைச் செம்பூத்துகளும் வெகுவாக முயன்று காட்டிவிட்டுச் சாகின்றன. தன் எழுத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மில் ஏதோ ஒன்று, இறப்பை வெற்றி கொள்ளப் படும் அவஸ்தையை உக்கிரமாக்கிக் கடைசியில்

‘இறகுகள் சிலிர்த்து தலை கொணங்கிய செம்பூத்தைக் கட்டுக்காப்பில் போட்டுவிட்டு வெந்த புல்வரப்பில் நடந்தோம். கையகல நிலத்திலே ஆதி ஜீவன்கள் அழியத் தொடங்கிவிட்ட காலம் தெரிந்தது. ஓடைக்கரையில் ஏறியபடி அதிகம் பேசாத நைனா “ஹிரோசிமாவில் அணுகுண்டை மேலிருந்து போட்டான்னா எல்லா எடத்திலயும் அப்பிடிதான் போடணுமெங்கிறதில்ல. சத்தமில்லாம கீழ இருந்தும் போடலாம். பூமாதேவி செத்துப் போச்சுன்னு தோணுது” என்றார். கருகிய காகித வார்த்தைகளாய் காற்றில் நொறுங்கிப் போனது நைனா சொன்னதும். பாதச்சுவட்டில் நெமுறும் குறுமணல் ஓசையோடு ஓடையில் நடக்கலானோம். கரையில் ஏறி நின்றதும் தொழிற்சாலையின் சங்கு ஆங்காரமாய் ஒலிக்கத் தொடங்கியது.”

என்று முடிக்கும் போது சங்கொலியின் மெய்ப்பாடு, அத்தனை வேதனை, விரசம், வாழ்வின் தோல்வி, நீரின் கேடு என்று வந்த வேலை முடிந்த எக்காளமாய் நம் சினத்தில் சூல் கொள்கிறது. (சிறுகதை குறிப்பு: ‘உற்பத்தி’, பூமிக்குள் ஓடுகிறது நதி – சு வேணுகோபால், தமிழினி, டிசம்பர் 2000)

’மறைந்த சுவடுகள்’ என்னும் சிறுகதை, சிறுகதையில் மட்டுமே சில பிரக்ஞைகளை எட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் ஒன்று. கவிதை என்னும் மொழியின் சுயமார்ந்த இயக்கத்தோடு போட்டி போடக்கூடிய தகுதி சிறுகதைக்கு மட்டுமே உண்டு என்பதையும் ’மறைந்த சுவடு’களில் வரும் ஞான வள்ளி என்னும் வரைவு சான்று பகர்கிறது.

காதலன் ஏமாற்றியதால் ஒரு வித வக்கிரமான பழிவாங்கும் முனைப்பாக தன் அழிப்பு என்பதையே தேர்ந்தெடுக்கும் மூர்க்கம் கையாலாகாத நிலையில் தள்ளப்படும் பெண்ணுக்குச் சில சமயம் ஏற்படலாம். அப்படி ஏற்படும் போது அது எத்தகைய உள் வேதனையில் வாடுகிறது என்பதைத் தொனிப் பொருளாகவே மட்டும் காட்டி மிகத் திறமையாக அமைகிறது ஆசிரியரின் மொழிதல் ஓட்டம். மனித வாழ்க்கையாகிய கிராமத்தில் சாத்தியப்படும் எத்தனை விதமான உள்ளம் என்னும் நிஜத்தின் முனைகளைத் தொட்டு காட்ட முடிகிறது திரு வேணுகோபாலால் என்பது என்னை மயக்கும் சிந்தனையாக இருக்கிறது.

குழந்தைமையிலிருந்து தன்னைத் தூக்கிக் கொஞ்சியவள் என்னும் போதும், அவள் எழில் கட்டுடன் இருக்கக் காண்கையில் தழுவத் துடிக்கும் ஆண் மனம், நோயில் படுத்து உருக்குலைந்து காண்பதற்கு ஆள் விட்டனுப்பி, சேர்ந்து வெளியில் சற்றுக் காற்றாடப் போய் வரவெண்டும் என்று வேட்குங்கால் ஊர்ப்பார்வைக்கு நாணி அவளைத் தவிர்க்க வேண்டி சினிமாவிற்குச் சென்று தப்பும் நேரத்தில், கெஞ்சிய அவளின் உயிர் பிரிகிறது என்று காட்டும் போது தயக்கம் இன்றி முகம் சுளிப்பு இன்றி மன மெய்ம்மையின் ரணங்களை அறுவைக் கத்தியால் நேர்த்தியாகக் கிழித்துக் காட்டும் உள இயல் மருத்துவராகத் தோற்றம் தருகிறார் வேணு.

‘ஏங்க சொல்லிட்டுப் போக வேணாமா?… என் கிருஷ்ணாவை இன்னும் காணலையேன்னு, பஸ்கள்ல அடிபட்டிட்டானோன்னு அழுக ஆரம்பிச்சுடுச்சு. சாகுறப்ப யாருமே இல்லிங்க,’

ஞான வள்ளி இறந்துவிட்டாள்.

சு வேணுகோபால் இப்படி இந்தச் சிறுகதையை முடிக்கிறார் –

“வாழ்ந்ததற்கான சுவடற்றுப் போகும் வாழ்க்கை. வரலாற்றில் கால் பதியாது ஓடும் தொன்ம நதியில் கலந்த கோடானுகோடி ஜீவன்களில் ஒருத்தி.”

பெரும் பெரும் சித்தாந்தங்களுக்கெல்லாம் பரிந்துகொண்டு திரு வேணுகோபாலின் எழுத்து எழுவதாகத் தெரியவில்லை. அவருக்கு என்று தனிப்பட்ட சித்தாந்தப் பிடிப்புகளும் இருக்கலாமாக இருக்கும். ஆனால் அவருடைய எழுத்து எங்கும் எதற்கும் அடமானமாகப் போகாத எழுத்து என்று அவரது ஒவ்வொரு கதையின் மூச்சிரைப்பிலும் சான்று படுகிறது. கதைகளாக முருடு தட்டிப் போகும், வாழ்க்கையில் விதியில் முரண்களாகவும் ரணங்களாகவும் வெடிக்கும் வேதனைகளையும், கீழ்மைகளையும் அவற்றின் கொதியோடு இலக்கியம் ஆக்குவது கருதிச் செயல் என்பதைவிடத் தன்னுள் நடக்கும் இயக்கமாக வெளிப்பாடு காண்கிறார் சு வேணுகோபால் என்றுதான் தோன்றுகிறது. இதை சித்தாந்தப்படுத்த முடியாது என்பதுதான் இந்த வெளிப்பாட்டின் வலிமை. வாழ்க்கை எதிலும் கூறுபடக் கூடுமெனில் இதுவும் கூடுமாகலாம். இப்படியும்  இருக்குமோ என்று ஐயம் எழுமானால் நிச்சயம் அவரது ‘வெண்ணிலை’ தொகுதி அதற்கான விளக்கமாக இருக்கும். ‘தொப்புள்கொடி’யில் மனநிலை பிறழ்ந்து திரியும் பெண்ணின் கருவாய்த்த குழந்தையைப் பேணுவதாக நினைத்து அது இறந்தபின்னும் தூக்கித் திரியும் தாய்மையின் தொப்புள் கொடியும், ’வெண்ணிலை’ யில் இறந்த தந்தையின் உடலை எடுத்துச் செல்ல உதவி நாடி நிற்கும் பெண்ணும் வெறும் கதையாக ஒரு நாளும் ஆகிவிட முடியாத உணர்வின் உறுத்தல்கள். அவற்றையும், அது போல் பலவற்றையும் தன் எழுத்தால் கைபொறுக்கும் சூடாக ஆக்காமல் எப்படி முழு மெய்மையுடன் திரு வேணுகோபாலால் தர முடிகிறது என்பது வியப்புதான்.

அவருடைய நூல்கள் ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’, ’வெண்ணிலை’, திசையெல்லாம் நெருஞ்சி, ஒரு துளி துயரம், பால்கனிகள், ‘ஆட்டம்’ (என்னிடம் இருப்பவை, சில விடுபட்டிருக்கலாம்) என்னும் எந்தத் தொகுப்பிலுமே, எந்தக் கதையிலும், குறுநாவலிலும் அவருடைய இலச்சினை மாற்றுக் குறைவு இல்லாமல் அவையவை தன்னிச்சையாய் இயல முடிந்தது என்பது அவருடைய இலக்கிய மேதைமை எப்படி வாழ்வின் ஊற்றுக்கண்ணில் வேர் விட்டு நிற்கிறது என்பதைத்தான் காட்டுகிறது போலும்.

இலக்கியம் என்பது மனித உள்ளத்தின் அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, மாசு, கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத கவனத்தில் கொண்டு வந்து உணர்வில் நிறுத்தி, அதனால், மனித உள்ளத்தைத் தூய்மையுறச் செய்யும் ஒரு மார்க்கம் என்னும் பொருள்பட ‘Catharsis’ என்று அரிஸ்டாடில் கூறும் இயக்கத்தை சு வேணுகோபாலில் முழுமையாகக் காணலாம்.

சு வேணுகோபாலைப் படிக்காமல் நம்காலத்துத் தமிழ் இலக்கியம் படித்திருப்பதாக ஒருவர் சொன்னால் அவருடைய நவீன தமிழிலக்கியப் படிப்பு முழுமை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் திரு வேணுகோபாலுடைய இலக்கியப் படைப்பு என்பது வாழ்வு என்னும் முடிவற்ற மூலக்கருவிலிருந்து முகச்சாயம் கூடப் பூசாமல் உருவெடுத்து வந்து நம்மைச் சந்திக்கும் சுய கௌரவம் மிக்க எழுத்துகள். ஏதோ வழிவழியாகச் சொல்லிச் சொல்லிப் பலரும் பலருக்குச் சொல்லச் சொல்லி வந்து சேர்ந்த புராணங்களில் உருவியெடுத்து, அவற்றுக்கு அரிதாரம் பூசி உலவ விடும் எழுத்துகள் மலிந்து போன வழிவழி இலக்கியச் சூழல்களில் உண்மையும், உணர்ச்சிகளின் வேதனையும் உள்ளத்தில் அருளும் வாழ்வில் விதியும் மனித அறிவின் எல்லைகளும் ஒன்றுற முயங்கும் கணத்தில் கூடு பொரித்த உயிரான எழுத்துகளாய் அவை நம்மை நோக்கி விழிக்கின்றன. அந்த யதார்த்தத்தின் பசுமை நம் நினைவிலும் படர்கிறது. அன்றாட வாழ்க்கையின் தன்மையைப் புதுப்பித்தது போன்ற ஒரு நிம்மதி படிப்பின் பிற்றை நிலையாய் நாம் உணரக் கிடைக்கிறது.

சிறு குழந்தைகள் நாய்க்குட்டிகளைக் கண்டால் அவற்றைக் கொஞ்சுவதும் வளர்க்க விழைவதும் இயல்பு. அவ்வாறு இய்லபான ஒரு கணத்தைத்தான் பூமிகா என்னும் பெண் குழந்தையின் மழலையில் நமக்குக் காட்டுகிறார் ‘புற்று’ என்னும் சிறுகதையில். ஆனால் பெண்ணியம் இதுவரை உணர்த்திவிட முடியாத கடுமையுடனும் மெய்மையுடனும் கணிசமான சமுதாயம் பெண் குழந்தையை எப்படி நோக்குகிறது என்பதை பூமிகாவிடமிருந்து நயமாக அந்தப் ‘பெண் நாய்க் குட்டியை’ பூமிகாவின் மாமா வாங்கி ஓடும் வண்டியிலிருந்து விட்டெறியும் கணத்தில், அப்பொழுது பூமிகா படும் வேதனையில், அதற்கு மாமா சொல்லும் அலட்சியமான தேற்றுதலில் சொல்லாமல் உணர்த்திவிட முடிகிறது வேணுவால் என்றால் இலக்கியம் எங்கு இருக்கிறது ! —

“தங்கம், பொட்ட குட்டிய யாராவது வளப்பாங்களாடா? வீட்டுக்கு வீரமா ஆண் குட்டிய வளக்குறதவிட்டு….”
…………

கிராமங்களில் பொட்டைக் குட்டிகளை புற்றில் விடுவதுண்டு. …
……………………

பின்கதவைத் திறந்தவுடன் காலால் சட்டென எத்திவிட்டான். குட்டி கரணமடித்து விழுந்து வீச்சென கத்தியது. சட்டென எழுந்து வண்டிக்குப் பின்னாக ஓடி வர முயன்றது, பூமிகாவுக்கு செத்துப்போய் விடலாமெனக் குமுறியது மனசு. வரவர பின் தங்கிப் போகும் குட்டியைப் பார்த்துப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதாள். “எங்கயாவது கோயில்ல விடு மாமா. பசிக்கு அது என்ன பண்ணும்? பாவம் மாமா. அதுக்கு யாருமில்ல. பயப்படும் மாமா” உதடுகள் கோணி தழுதழுத்தது.

……………….

பூமிகாவை அம்மாவால் சமாதானப்படுத்த முடியவில்லை…..

“அம்மா நான் ஒங்கூடயே இருக்கேம்மா. என்னைய தொலச்சிடாதம்மா”

:”பூமிகா எங் கண்ணுல்ல… நீ அம்மா செல்லந்தான்… என்னாச்சு உனக்கு… அழக்கூடாது” வாரியெடுத்தாள்.

“சொல்லுமா, என்னைய எங்கயாவது தள்ளிவிட்டுறமாட்டயே. சாகுந்தண்டியும் ஒங்கூடவே இருக்கேம்மா. ப்ளீஸ்மா”

வாழ்க்கையின் தயவுதாட்சண்யமற்ற ஆட்டத்தைக் கபடியாட்டத்தினால் குறியீடாக்கிக் காட்டும் குறுநாவல் சு வேணுகோபாலின் ’ஆட்டம்.’ திறமையின் வெளிப்பாட்டில் திளைக்கும் வடிவேல் காதல், மனைவாழ்க்கை, மனைவியின் துரோகம் என்ற வளைக்கும் சுழலில் மாட்டி, வீழ விரும்பாத வீரமாய்த் தன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் படும் அவஸ்தை. இயல்பான ஆட்டம் கூடிவர, காலத்தால் தான் விழுந்துவிட்ட பள்ளத்தினின்றும் செங்குத்து ஏற்றமாய், பழைய நினைவுகளின் சாகசமாய்ப் படுத்தும் வேதனை. விட்டவளை மீண்டும் பிடிக்க விளையாட்டைப் பயன் கொள்ள முயலுங்கால் அது வினையாட்டாய் மாறி நிற்கும் முரண். கனகம் மீண்டும் தன்னிடம் வரவேண்டும் என்பது தன் ஆண்மைக்கே சவால் என்னும் போது, ‘மீண்டும் அம்மா வந்துடுவாங்களாப்பா’ என்று கேட்கும் குழந்தைகளின் குரலும் தன் வேதனைப்படும் மனத்தின் இடைவெளிகளின் ஊடே நுழைந்து ஒலிக்கும் உள்ளத்தின் ஏக்கம்தான் என்பதை உணரும் கணம்; தாயைப் போல் தாரம் என்ற பழமொழியின் எதிர்நீச்சுபோல் தாரத்தைப் போலவே நிகழ்ந்த தாயின் வாழ்விலும் ஒரு மிச்சம், தன்னை ஆதுரம் காட்டும் அக்காவின் அன்பாய்த் தீச்சட்டி எடுக்கும் வாழ்வின் ஒரு புது கோணம்; உடலிலிருந்துதான் பழைய தன்னை மீட்டெடுக்க வேண்டும் என்பதை உணரும் கணத்திலேயே, உடல் தனக்கென்று கற்பனைச் சுகவழியாய்க் கனவு காணும் நாகமணியென்னும் காமப் புதைகுழியின் சாத்தியம்; தயவுதாட்சண்யமின்றிப் பிரிக்கப்படும் தாய்மைக்கும் சேய்க்கும் இடையே வலிகண்டு திரியும் நாயின் முனகோலம், வெகுஅலட்சியமாகத் தாய்மையால் பெண்ணைக் கழுவேற்றித் தூக்கிலிட்டுக் கவலையே இல்லாமல் தன்வழியே போகும் ஊர்வாய், – என்று வாழ்க்கையின் கருணையற்ற கபடியாட்டத்தை நெடுக சுழல் ஆட்டமாகக் காட்டும் திரு வேணுகோபாலின் திறன் வியப்பிற்குரியது. இதில் அவ்வப்பொழுது ஆசிரியரின் குரலாக, மனித விழுமியங்களைப் பற்றிய சொல்லாடல் கதை உலகத்திற்குச் சற்று அந்நியப்பட்டு ஒலிப்பது போல் தோன்றினாலும், அதையும் திருவிழாவில் ஒலிக்கும் கிராமபோன் ஒலியாக்கி நகர்கிறது சற்றும் குறையாத மூர்க்கத்துடன் கதை அணியின் மாறு ஆட்டம்.

திரு வேணுகோபால் அவர்களின் இலக்கிய மேதைமைக்கு ஓர் உதாரணம் அவருடைய ‘பால்கனிகள்’ என்னும் நூல். இரு குறுநாவல்கள் – பால்கனிகள், இழைகள், இரண்டும் சேர்ந்த நூல். இரண்டிலும் அவர் எடுத்துக்கொண்டு புதினமாக்கியிருக்கும் பொருள் மிகவும் உருக்கும் சமுதாய அவலங்கள். ட்ரான்ஸ்ஜெண்டர் எனப்படும் மாற்றுப் பாலியல் பிறவியர் குறித்த மிக நுட்பமான துயர வாழ்க்கையைப் பற்றிய கவனத்தை ‘பால்கனிகள்’ என்பதில் தருகிறார். கூடப் பிறந்த சூழல்களே, சமுதாயமே, வேலை வாய்ப்பு தருவோரே அவர்களுடைய வாழ்க்கையை எவ்வளவு மனிதத்தன்மை அற்ற விதத்தில், மரியாதையும் இரக்கமும் இன்றி நலிகிறார்கள் என்பதைத் தமக்கே உரிய இலக்கிய லாகவத்தோடு திரு வேணுகோபால் படிப்பவர்களின் உச்ச பட்ச அக்கறைக்கு இலக்காக ஆக்கிவிடுகிறார்.

மரபுகளாலும், வழிவழிச் சமுதாயத்தாலும் சாதி என்ற பெயரால் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த ஒரு பள்ளியாசிரியர் எப்படிப்பட்ட சூழல்களில் தம் வாழ்க்கையின் கதியோடு துவண்டு, நிமிர்ந்து, பொருது, நிதானித்து, தாங்கி நடத்திச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை மிக நெருக்கமான பார்வையாகக் காட்டி, படிப்பவர்களின் நியாய உணர்வைத் தூண்டி விடுகிறார்.

வளர்ந்து வரும் பருவத்து மாணவன், உடற்கூறில் விழித்தெழும் பாலியல் உணர்வுகள், கல்வியின் கடமை, யேசுவின் இரட்சண்யத்தில் விசுவாசித்த குடும்பம், பைபிளிலிருந்து உபதேசிக்கும் பாஸ்டராகத் தந்தை, ஒன்றுவிட்டு ஒன்று திறந்து கொண்டே இருக்கும் பாபத்தின் வாயில்கள், இவற்றின் ஊடாக இரட்சண்யத்தின் கரம் எதிர்வீட்டு ஜெபராணியின் குழந்தையின் கரமாக வருவதை அமைக்கும் விதம் ‘இரட்சண்யத்தின்’ அழகு. இதற்கும், முன்னால் மரித்த குழந்தையின் நினைவு மீண்டெழுகையாய், கண்ணீர் துடைக்கும் குழந்தையின் கரம் இரட்சண்யமாக ஆகிறது என்று காட்டும் நுட்பம் வேணுவிற்கே கைவந்த கலை.

மிக யதார்த்தமான கிராமத்தின் மாற்றக் கோடுகளை ‘உருமால்கட்டு’ தெளிவுறக் காட்டுகிறது. கிராமத்தின் இயற்கைவாய்ப்புகள் குறைய புதிய வாழ்வின் கதவுகளைக் கல்வி திறக்க, மூடும் என்று நினைத்த படல்கள் திறக்கின்றன. திறந்த வாயில்களும் மூடவும் கூடும் என்பதை குபேந்திரன் மாமன்மார்களை அழைப்பதில் வைத்துக் காட்டுகிறார். ‘இனி என்ன பிடிவாதம் வேண்டிக் கிடக்கு’ என்னும் மாமன்களும், ‘நொப்பமா இருக்கணும்டா… எது எக்கேடு கெட்டுப் போனா நமக்கென்ன?’ என்னும் அப்பாவும் கிராமத்தின் மாற்ற ஓட்டத்தின் இரு சுழிகளாய், படிப்பில் மெய்ப்பாடு கொள்ளவைக்கிறார் சு வேணுகோபால்.

சாதியின் ஈவு இரக்கமற்ற கொடிய முகத்தைத் தயவுதாட்சண்யமின்றி, பந்தம் கொளுத்திக் காட்டுபவர் வேணு. இதற்கு அருமையான உதாரணம் அவருடைய ‘திசையெல்லாம் நெருஞ்சி’. ‘எப்படி இவர்கள் இதில் மட்டும் ஒற்றுமையாக ஒரு பக்கம் நின்றுகொள்கிறார்கள் என்று விளங்கவில்லை’ என்று பழநி சொல்வது இந்திய சமுதாய அவலங்களின் வரலாற்றின் மீதே ஒட்டு மொத்த காயும் குரலாக ஒலிப்பது, படிப்பில் யதேச்சையாக நிகழும் உருவெளித்தோற்றமன்று, உள்ளபடியான ஒன்றின்பால் உறுத்து எழும் சீற்றத்தின் கோட்டுச் சித்திரம்தான். சமுதாய அவலங்களுக்கு உள்ளான கதாபாத்திரங்களை வரையும் பொழுதெல்லாம் தம் எழுத்தில் நடுநிலைப் பாவனையைச் செய்ய மறுக்கும் திரு வேணுகோபாலின் அறச்சீற்றம் அவருடைய உள்ளத்திற்குப் பொய்க்காத எழுத்தின் நாடி அதிர்வாய்த் துடிக்கிறது. சான்றாண்மை மிக்கோனின் குரலாகப் படிப்பவர்களின் உள்ளத்தில் பதிவாகிறது.

பொதுவாக வேணு அவர்களின் கதைகள் கவனத்தின் கூர்மையில் விரியும் கதைகளாய் இருக்கின்றன. கற்பனையின் புகை மூட்டங்களில் மறைந்து யூக பிம்பங்களாய் மயக்குவதை விட அவரது கதைகள் விடியலில் ஸ்வச்சமாகத் தெரியும் காய்ந்த நிலத்தில் பட்டுப் போக மறுத்து மூர்க்கமாக நின்று முறைக்கும் செடிகளின் பழுப்பு கலந்த பசுமையின் பல வேறு அனுமானங்களாய் நம் நெஞ்சில் பதிகின்ற காட்சிகள். அவை ஆகாயத்தை நிலத்தின், அதுவும் காய்ந்த வெடித்த நிலத்தின் அத்தனை முருடுகள், நெளிவுகள், முறிவுகள், அத்தனையோடும்தான் கலந்த ஒரு சாத்திய வெளியாய்ப் பார்க்கின்றன. நிலத்தையே மறந்த நெட்டுக் குத்துப் பார்வையில் ஒரே பாங்காய் கண்ணில் பூசும் வான வெளி அன்று அவருடைய கதைகள் காட்ட முனைவது. வேணுவின் கதைகளை நினைக்கும் போது, Classic Short Story என்னும் நூலில் Florence Goyet கூறும் கருத்துக்கு நேர் எதிர்மாறான சித்திரம்தான் தோன்றுகிறது.

The objective social distance which we have identified between the readers of short stories and their characters is galvanized in the feeling of that distance. In their ferocious and ludicrous struggle for a grotesque object, the characters establish their distance from the reader who would not for the world have it cluttering his room. (pp 123) (The Classic Short Story1870 -1925, Florence Goyet, Open Book Publishers)

வேணுவின் கதைகள் நம் அறைக்குள் வந்து அடைபட மறுக்கின்றன. அவற்றின் புற மெய்மையிலும் அவை நம் கண்ணுக்குப் பட்டும் படாமலும் போக்கு காட்டுகின்றன. ஆனால் அவருடைய புதினவெளியில் அவை கட்டாந்தரையை விட கனத்த மெய்மையுடன், நம் கவனத்தின் கூர்மையில் விரிய, பல்வேறு தொடர்ப்பாடுகளில் சங்கதிகளைச் சொல்லிய வண்ணம் நமக்காக என்றும் காத்திருக்கின்றன.

***

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.